திருமணத்தை உறுதி செய்த மறுநாள் தேவகி, ஆதினி, அம்ரிதா மற்றும் குருநாதன் கடைகளுக்கு சென்று முகூர்த்த புடவை, தாலி மற்றும் பரிச நகையை வாங்கினர். விடுமுறை இல்லாததால் அவ்யுதகண்ணன் வரவில்லை.
அதற்கு அடுத்த நாளே குருநாதனிற்கு இதய சிகிச்சை நடைபெற்று மூன்றாம் நாள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
முதல் நாள் மட்டும் அவ்யுதகண்ணன் விடுப்பு எடுத்து, அவரை வீட்டில் இருந்து அழைத்து சென்றதில் இருந்து முழு நேரமும் மருத்துவமனையில் அம்ரிதா கூடவே இருந்தான். அது மட்டுமில்லாமல் இரவு அம்ரிதாவிற்கு துணையாக வரவேற்பில் தங்கி கொண்டான். அவளது மறுப்பை அவன் பொருட் படுத்தவே இல்லை.
ஆதினியை பள்ளிக்கு அனுப்பி விட்டு மருத்துவமனைக்கு செல்லும் தேவகியோ ஆதினி வீடு திரும்பும் நேரம் வரை மருத்துவமனையில் தான் இருந்தார். அதுவும் மூன்று வேளை உணவையும் வீட்டில் சமைத்து அவ்யுதகண்ணனிடம் கொடுத்து விட்டார்.
அடுத்த இரண்டு நாட்கள் காலையில் எழுந்து அம்ரிதாவிற்கு குளம்பி(coffee) வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு செல்பவன், குளித்து கிளம்பி மீண்டும் மருத்துவமனைக்கு சென்று காலை மற்றும் மதிய உணவை கொடுத்துவிட்டே காவல் நிலையத்திற்கு சென்றான். மாலையில் வீட்டிற்கு சென்று தன்னை சுத்தம் செய்துவிட்டு இரவு உணவுடன் மருத்துவமனைக்கு சென்று விடுவான்.
இவர்களின் ஆதரவே அம்ரிதாவை திடமாக இருக்க செய்தது எனலாம். அம்ரிதாவிற்கு மட்டுமில்லை குருநாதனிற்கும் இவர்களின் இருப்பே பலம் தந்தது. இக்கட்டான சூழ்நிலையில் தான் உண்மையான அன்பை உணரலாம் என்பதை தாயும் மகனும் நிரூபித்தனர். குருநாதனிற்கு அவ்வளவு மன நிறைவு. இந்த சம்பந்தம் பற்றி சொன்னதிற்காக தெய்வநாயகத்திடம் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.
தெய்வநாயகமும் வந்தார் தான் ஆனால் அவர் செய்ய எதுவும் இல்லாமல், அனைத்தையுமே அவ்யுதகண்ணனே பார்த்துக் கொண்டான்.
குருநாதனின் இந்த மருத்துவமனை வாசத்தால், திருமணத்திற்கு முன்பே இவர்கள் ஐவருக்கும் இடையே அன்பும், பிணைப்பும் ஏற்பட்டது.
குருநாதனை வீட்டிற்கு அழைத்துச் சென்றதும், அவரின் விருப்பபடி அவ்யுதகண்ணன் ஆதினியை அழைத்துச் சென்றான்.
“உங்களுக்கு என்ன ஆச்சு?”
“எப்படி இந்த ப்ராப்ளமை கண்டு பிடிச்சீங்க?”
“அப்போ உங்களுக்கு ஹார்ட் வலிச்சுதா? கொஞ்சமாவா நிறையவா?”
“டாக்டர் எப்படி ப்ளாக் கண்டு பிடிச்சாங்க?”
“ப்ளாக் சரி பண்ண டாக்டர் உங்களுக்கு என்ன செஞ்சாங்க?”
“எதனால இப்படி ஆச்சு?”
“இந்த ப்ளாக் திரும்ப வருமா?”
“இப்போ வலிக்குதா?”
“கொஞ்சமானா, எவ்ளோ கொஞ்சமா வலிக்குது? ரட்(rat) சைஸ்ஸா இல்ல ராபிட்(rabbit) சைஸ்ஸா?”
“அப்போ ஆபிரேஷன் செய்தப்ப ரொம்ப வலிச்சுதா?” என்ற ஆதினியின் பல கேள்விகளுக்கு குருநாதன் மென்னகையுடன் பொறுமையாகவே பதில் சொன்னார்.
அடுத்து மகள் கேள்வி கேட்கும் முன், “டாலி டாடி எக்ஸ்ப்ளைன் செய்றேன்.. தாத்தா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றவன் வருங்கால மாமனாரிடம், “விட்டா டாலி கேட்டுட்டே தான் இருப்பா.. நீங்க அதிகம் பேசாம ரெஸ்ட் எடுங்க மாமா” என்றான்.
அவரோ, “ரெஸ்ட் என்ன மாப்பிள்ளை ரெஸ்ட்! என் மருந்தே என் பேத்தியோட பேச்சு தான்” என்றார்.
“மாப்பிள்ளை வேணாம்.. அவ்யுத்னே கூப்பிட சொன்னேனே மாமா!”
“அது” என்று அவர் தயங்க,
“மகன்னு நினைத்தால் கூப்பிட முடியும்” என்றான்.
“கொஞ்சம் டைம் கொடுங்க.. வந்திடும்”
“ஹ்ம்ம்” என்று மென்னகையுடன் கட்டைவிரலை உயர்த்தி காட்டினான்.
“குட்டிமாவ சொல்லிட்டு நீ பேசிட்டே இருக்காத” என்று தேவகி சிறு அதட்டலுடன் கூற,
அவன் கையால் வாயை மூடி கண்ணை உருட்டியபடி தலையை பூம்பூம் மாடு போல் ஆட்டினான்.
தந்தையின் செய்கையில் ஆதினி கிளுக்கி சிரிக்க, அவனது சேட்டையில் குருநாதன் மற்றும் அம்ரிதாவுமே மனதார சிரித்தனர்.
“இப்போ தான்டா உனக்கு கல்யாணத்துக்கான முழு தகுதி வந்திருக்குது” என்று மகனை கிண்டல் செய்த தேவகி மகனின் செல்ல முறைப்பை எப்பொழுதும் போல் கண்டு கொள்ளாமல் மிதப்பாக பார்த்து, “என்ன?” என்றார்.
தேவகியின் பதிலில் அம்ரிதா சத்தமாக சிரிக்க, அவன் இப்பொழுது அவளைப் பார்த்து முறைத்தான். உடனே அவனை தொடர்ந்து அவனது பெண்ணரசியும் முறைப்பை தேவகியிடம் இருந்து அம்ரிதாவிடம் திருப்பினாள்.
அடுத்த நொடியே அம்ரிதா கண்ணை சுருக்கியபடி மகளிடம் மன்னிப்பு வேண்ட, அவளும் பெரிய மனதுடன் அன்னையை மன்னித்து சிரித்தாள்.
குருநாதன், “தங்கச்சிமா கடைசி வரை நீ கூட்டணி இல்லாம சுயேட்சையா தான் நிற்கணும் போல!” என்றார்.
“ஏன் அண்ணா! நீங்க என் கூட கூட்டணி வச்சுக்க மாட்டீங்களா?” என்றதும் குருநாதன் திருதிருவென்று விழிக்க,
சத்தமாக சிரித்த அவ்யுதகண்ணன், “இதான் மாமா நுணலும் தன் வாயால் கெடும்” என்றான்.
அப்பொழுதும் தேவகி சிரிப்பை அடக்கியபடி அவரை விடாமல், “என்ன ண்ணா?” என்று கேட்டார்.
குருநாதன் தேவகி நிஜமாகவே கேட்பதாக நினைத்து பதில் சொல்வதறியாது சிறிது தவிக்க,
“இன்னும் உங்களுக்கு பயிற்சிகள் தேவை மன்னா!” என்ற அவ்யுதகண்ணன், “அம்மா சும்மா விளையாடிட்டு இருக்காங்க மாமா.. ப்ரீயா விடுங்க” என்றதும் தான் அவர் இயல்பானார்.
“சரி.. சரி.. நாம ஹாலுக்கு போகலாம்.. அண்ணா படுக்கட்டும்” என்று தேவகி கூற,
கண்ணை சுருக்கியபடி தேவகியை அரை பார்வை பார்த்த ஆதினி, “தாத்தா கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கணும்” என்றாள்.
குருநாதன் விரிந்த புன்னகையுடன், “எவ்ளோ வேணாலும் கேளுடா தங்கம்” என்றதும்,
“நீங்க பாய்(boy) தானே?”
“இல்ல நான் ஓல்ட் மேன்”
“ப்ச்.. அது இல்லை தாத்தா.. நான் ஜெ..ஜென்டர் கேட்டேன்”
“ஓ! அப்போ நான் பாய் தான்”
“அப்போ உங்களுக்கு ஏன் மீசை இல்லை? டாடி சொன்னாங்க.. பாய்ஸ்கு தான் மீசை இருக்கும், கேர்ள்ஸ்கு இருக்காதுனு”
இந்த கேள்வியை சற்றும் எதிர்ப்பார்த்திடாத குருநாதன் நொடி பொழுதில் சுதாரித்து மென்னகையுடன், “எனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சு இருக்குது” என்றார்.
“அப்போ உங்களுக்கும் மீசை வருமா?”
“ஓ! வருமே.. டாடி தாடியை ஷேவ் செய்ற மாதிரி நான் தாடியோட சேர்த்து மீசையையும் ஷேவ் செஞ்சிடுவேன்”
“ஓ!” என்று ராகம் இழுத்த குழந்தை, “ஓகே.. நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க.. நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்கிறேன்” என்று முடித்தபோது தந்தையைப் பார்க்க, அவன் மென்னகையுடன் ‘சரி’ என்பது போல் தலையை அசைத்தான்.
அதன் பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர்.
இரு வீட்டு கல்யாண வேலைகளையும் அவ்யுதகண்ணனே பார்த்ததால், கல்யாண நாள் விடியல் வரையுமே நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டே தான் இருந்தான்.
கல்யாண நாள் அழகாக விடிந்தது.
கல்யாணத்திற்கு வந்த உறவினர்களில் அனேகபேர் இருவரின் ஜோடி பொருத்தத்தை பாராட்டி மனதார வாழ்த்தினாலும், உறவுகள் என்ற பெயரில் இருக்கும் சில விஷ கிருமிகள் விஷத்தை கக்கினர் தான்.
அப்படி பட்ட ஒரு விஷகிருமி அம்ரிதா மற்றும் குருநாதனின் காதுபட மேடை ரகசியமாக தேவகியிடம், “ஏன் தேவகி உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” என்று நீட்டி முழக்கினார்.
அந்த பெண்மணியின் குணத்தை அறிந்திருந்த தேவகியோ, “அவ்யுத் கூப்பிட்டான்.. இதோ வரேன்” என்று நகர பார்க்க,
அந்த விஷகிருமியோ தேவகியின் கையை இழுத்து பிடித்தபடி, “அட இரு.. நான் சொல்றதை கேட்டா, உனக்கு எந்த வேலையும் இருக்காது.. இந்த பொண்ணே வேணாம்னு பையனையும் பேத்தியையும் கூட்டிட்டு வீட்டுக்கு நடையை கட்டுவ” என்றார்.
தேவகி கோப விழிகளுடன், “எனக்கு என்னவோ இப்போ நீங்க உங்க வீட்டுக்கு நடையை கட்டுறது பெட்டர்னு தோணுது” என்றார்.
“ஏய்! என்ன பேசுற!” என்று குரலை சற்று உயர்த்தியவர் சற்று தள்ளி நின்ற அவரது நாத்தனாரை அழைத்து, “இங்க பாரு அம்பிகா! உன்னோட ஓர்ப்படி(ஓர்ப்படியாள் – கணவரின் உடன்பிறந்தானின் மனைவி) நீ மூடிட்டு கிளம்புனு என்னை தொரத்தி விடுறா! உன்னக்காக வந்ததுக்கு நல்ல மரியாதை கிடைச்சுது” என்று எகிறினார்.
அம்பிகா உடனே கண்டன குரலில், “என்ன தேவகி இது! பார்த்து பேசு” என்றார்.
தேவகியோ, “இவங்க உங்களுக்கு தான் வரிசையார்(அண்ணி).. எனக்கு இல்லை.. இவங்கனு இல்ல, என்னோட வரிசையாரோ, நீங்களோ அதை பேசி இருந்தாலும் இதே பதில் தான் சொல்லி இருப்பேன்” என்றார்.
“தேவகி!”
“இப்படிப் பட்டவங்களோட வரவு தேவையே இல்லை.. என் மகனையும் மருமகளையும் மனசார ஒருத்தர் வாழ்த்தினா கூட எனக்கு போதும்” என்று தேவகி தீர்க்கமாக கூற,
அம்பிகா கணவரைப் பார்த்து முறைத்தார். அதன் விளைவாக அவரின் கணவர், “என்னமா! உங்களோட நல்லதுக்கு தானே சொல்றாங்க.. கொஞ்சம் பார்த்து பேசக் கூடாதா?” என்றார்.
“இந்த அக்கறை சக்கரை பொங்கல்லாம் அப்பா இறந்த நேரத்தில் எங்க போச்சு?” என்ற கேள்வியுடன் அவ்யுதகண்ணன் அவர் அருகே வர, அவர் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தார்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.