திருமணம் முடிந்ததும் இருவரும் மூன்று முறை மாலை மாற்றி அக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து மெட்டி அணிவித்து, மேலே அண்ணாந்து பார்த்தபடி தெரியாத அருந்ததி நட்சத்திரத்தை தெரிவதாக கூறினர்.
அதன் பின் மணமக்கள் வந்தவர்களிடம் ஆசிர்வாதமும் பரிசுகளும் வாங்கிவிட்டு, பதினொரு மணி அளவில் ஆதினியை அழைத்துக் கொண்டு தேவகி, குருநாதன் மற்றும் மிக நெருகிய உறவினர்கள் சிலருடன் அவ்யுதகண்ணனின் வீட்டிற்கு சென்றனர்.
நல்ல நேரத்தில் அம்ரிதாவை நிறை குடத்துடன் வீட்டிற்குள் வர வைத்து, பால் காய்ச்ச செய்து, பால் பொங்கியதும் அதில் வெல்லம் சேர்த்து, அங்கே வந்தவர்களுக்கு அவள் கையாலேயே கொடுக்க வைத்தனர். பின் மண்டபத்திற்கு திரும்பினர்.
மதிய உணவின் போது ‘சட்டரசம் பரிமாறுதல்’ என்ற சடங்கு நடைபெற்றது. முறைப்படி இந்த சடங்கில் மணமகள் மணமகனிற்கு வெள்ளி தட்டில் உணவை பரிமாற வேண்டும். இன்றைய தலைமுறையில் அது சற்றே மாறுபட்டு இருக்கிறது. அவ்யுதகண்ணனுக்கு இரட்டை இலை போடப்பட்டு அதன் மீது வெள்ளி தட்டை வைத்து இருக்க, அம்ரிதா கையில் பாயாசம் நிறைந்த சிறு வெள்ளி பாத்திரம் கொடுக்கப் பட்டது. வெள்ளி கரண்டியைக் கொண்டு அவனுக்கும், அவனது வலது புறம் அமர்ந்து இருந்த மகளிற்கும் பரிமாறிவிட்டு, அவனது இடது புறம் அவளுக்காக போடப்பட்டு இருந்த இரட்டை இலையிலும் பரிமாறிவிட்டு வந்து அமர்ந்துக் கொண்டாள்.
பின், புகைப்படம் பிடிப்பவரின் உபயத்தில் மூவரும் ஒருவருக்கொருவர் ஒரு வாய் ஊட்டிக் கொண்டனர்.
மதிய உணவிற்கு பிறகு நடைபெற்ற ‘நாலாம் சீர்’ என்ற சடங்கில் இடம் பெற்ற சிறு சிறு விளையாட்டுக்களிலும் அவ்யுதகண்ணன் மகளையும் சேர்த்துக் கொண்டான்.
இந்த விளையாட்டுக்களின் முக்கிய காரணமே மணமக்கள் இடையே சிறு நெருக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது தான்.
‘அம்மானை கலச்சி’ என்ற விளையாட்டில் ஒரு பெரிய ஜோடி சட்டியில் மஞ்சள் நீரை நிரப்பி, அதன் உள்ளே வெண்கலத்தால் உருவான சிறு தவழும் கிருஷ்ணர் பொம்மையுடன் சில வெண்கல கலச்சி உருண்டைகள் மற்றும் தங்க மோதிரத்தை போடுவர். பின், ஒரே நேரத்தில் மணமக்களை கையை உள்ளே விட்டு பொருட்களை தேடி எடுக்க சொல்வர். மூன்று முறை தேடி எடுக்க வேண்டும். மோதிரத்தை அதிக முறை எடுப்பவரே வெற்றி பெற்றவர் ஆவர்.
அந்த விளையாட்டின் விதிமுறைகளை தேவகியிடம் கேட்டுக் கொண்ட ஆதினி, “நானு.. நானும் எடுப்பேன்” என்று குதித்தாள்.
உறவினர்களில் ஒரு பெண்மணி, “இது சின்னப் பிள்ளைங்க விளையாட்டு இல்லை.. அப்பாவும் புது அம்மாவும் தான் எடுக்கணும்” என்றார்.
‘புது அம்மா’ என்று அவர் வேண்டுமென்று கூறவில்லை ஆனாலும் அவரை ஓரப்பார்வையால் முறைத்த அவ்யுதகண்ணன், “அம்மா அப்பா கூட டாலியும் விளையாடுவா” என்றான்.
அந்த பெண்மணி, ‘ஆத்தி! நாம எதார்த்தமா சொன்னதை குதர்க்கமா எடுத்து, என்னை சுட்டாலும் சுட்டு புடுவான் போல! அதுவும் கண்ணுலேயே கன்(gun) வச்சு இருக்கான்!’ என்று மனதினுள் அலறியவராக அருகில் இருந்தவரின் பின் மறைந்து நின்றுக் கொண்டார்.
மலர்விழி(மாடி வீட்டு பெண்), “இந்த சட்டி ஆதினி குட்டிக்கு முக்கா ஹையிட் இருக்குது அண்ணா!” என்றாள்.
ஆதினி, ‘அப்போ என்னால் விளையாட முடியாதா!’ என்பது போல் தந்தையை உதட்டை குவித்து கண்களை சுருக்கி பார்க்கவும்,
அவன் அன்னையிடம், “பாத்திரத்தை மாத்துங்கமா.. டாலிக்கு செட் ஆறது போல கொண்டு வரச் சொல்லுங்க” என்றான்.
“ஹே!” என்று மகிழ்ச்சியுடன் குழந்தை குதித்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் கூறியது போல் மூவரும் விளையாட தயார் செய்துவிட, மலர்விழி, “த்ரீ.. டூ.. ஒன்.. கோ” என்றதும் மூவரும் கையை ஒன்றாக உள்ளே விட்டு தேடினர்.
அவ்யுதகண்ணன் கையில் மோதிரம் கிடைக்க, அவன் அதை மகளின் கையில் திணித்தான்.
ஆதினி, “டாடி..” என்று ஆரம்பிக்க, இவன் புன்னகையுடன் கண்சிமிட்டவும் குழந்தையும் விரிந்த புன்னகையுடன் கண்சிமிட்டிவிட்டு கையை வெளியே எடுத்து மோதிரத்தை தூக்கி காட்டி குதித்தபடி, “ஹே! நான் தான் வின்” என்றாள்.
மலர்விழி தந்தையையும் மகளையும் சந்தேகப் பார்வை பார்த்தபடி, “குட்டிமா! உண்மையிலேயே நீ தான் எடுத்தியா?” என்று கேட்க,
குழந்தை உண்மையை கூறும் முன் அவ்யுதகண்ணன், “டாலி தான் வின்” என்றிருந்தான்.
தந்தையுடன் கை தட்டிக் கொண்ட குழந்தை மலர்விழியைப் பார்த்து அழகு காட்டினாள்.
“மாடிக்கு விளையாட வரும் போது உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று மலர்விழி கூற,
குழந்தையோ, “நான் அம்மா கூட விளையாடிப்பேனே!” என்றாள்.
கூட்டத்தில் ஒரு பெண்மணி, “மாப்பிள்ளை பொண்ணு என்ன எடுத்து இருக்கிறீங்க? அதை காட்டுங்கப்பா” என்றார்.
அவ்யுதகண்ணன் கிருஷ்ணர் பொம்மையை எடுத்து இருக்க, அம்ரிதா சில கலச்சி உருண்டைகளை எடுத்து இருந்தாள்.
“கண்ணனண்ணாக்கு கண்ணனே வந்துட்டான்” என்று இளவயது உறவு பெண் ஒருத்தி கூற,
முதலில் பேசிய பெண்மணி, “மாப்பிள்ளைக்கு பொன் வேணாமாம், குழந்தை தான் வேணுமாம்.. புது பொண்ணே! பத்து மாசத்தில் ஒரு பையனை பெத்து கொடுத்திடு” என்றார்.
சட்டென்று அம்ரிதாவினிடம் இறுக்கம் புகுந்துக்கொள்ள,
அதை புரிந்தார் போல் சற்றே அவள் பக்கம் சாய்ந்த அவ்யுதகண்ணன் அவளது காதில் மெல்லிய குரலில், “ஜஸ்ட் ரிலாக்ஸ் அம்ரி.. சும்மா ஒரு பேச்சுக்கு, அதுவும் ஜஸ்ட் ஃபார் ஃபன் தான் சொல்றாங்க.. இதை எல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்காத..” என்றான்.
சட்டென்று சுதாரித்து சிறு தலை அசைப்புடன் மென்னகைத்தாள்.
அதற்குள் கூட்டத்தில்,
“அந்த காலத்தில் நாங்கலாம் மொகம்(முகம்) பார்த்து பேசிக்கவே ஒரு வாரம் மேல ஆச்சு! இப்பலாம் குஸ்குஸ்னு ரகசியம் பேசிக்கிறாங்க!”
“அதுவும் நம்ம முன்னாடியே!”
“விட்டா இப்பவே மாப்பிள்ளை பொண்ண கூட்டிட்டு உள்ள போய்டுவார் போல!”
“தேவகி அத்தை இன்னும் எண்ணி பத்து மாசத்தில் உங்க வீட்டில் தொட்டில் கட்டிடுவீங்க” என்ற கிண்டல் குரல்கள் எழுந்தன.
மீண்டும் இயல்பை தொலைத்த அம்ரிதா தனது முகமாற்றத்தை வெளி காட்டாமல் இயல்பாக இருப்பது போல் வைத்துக் கொள்ள போராடினாள்.
“முகம் பார்க்கவே ஒரு வாரம் ஆச்சுனு சொல்றீங்க! ஆனா பெரிய மாமா பத்தாவது மாசத்தில் பொறந்துட்டாங்களே!” என்ற அவ்யுதகண்ணன் விஷம புன்னகையுடன், “பேசிக்க தான் ஒரு வாரம் ஆனா.. ஹான்.. ஹன்..” என்று ராகம் இழுத்து கண்சிமிட்ட,
அவரோ வெட்கத்துடன், “போடா போக்கிரி” என்றார்.
“அச்சோ! உங்க வெட்கம் அள்ளுது! அதான் தாத்தா இந்த வயசிலும் உங்களையே சுத்தி வராரா!” என்று மேலும் அவன் கிண்டல் செய்ய,
“சீ போடா!” என்று அவர் இன்னும் அதிகமாக வெட்கம் கொண்டார்.
“பரசு தாத்தோய்!” என்று அவன் சத்தமாக குரல் கொடுக்க,
“அட வெவஸ்த்த கெட்ட பயலே!” என்றபடி அவர் அவ்விடம் விட்டு நகரவும்,
“என்னடா பேராண்டி!” என்றபடி ஒரு பெரியவர் வந்தார்.
“பாரு ஆச்சி தான் உங்களை தேடினாங்க”
“அவளா! இருக்காதே!”
“நெசமா தான் சொல்றேன் தாத்தா! உங்க பாரு தான் ‘என்னை பாரு’னு சொல்லிட்டு உங்களை தேடிட்டு இருக்காங்க”
அதை உண்மை என்று நம்பி, இருக்கும் இருபது பல்லையும் காட்டியபடி, “எந்தப் பக்கம் போனா பேராண்டி?” என்று கேட்டார்.
அவனும் சிரிப்பை அடக்கியபடி பார்வதி என்ற பாரு சென்ற திசையைக் காட்டினான். அடுத்த நொடியே அந்த தாத்தா அந்த திசையில் செல்ல, அங்கே சிரிப்பலை எழுந்தது.
மலர்விழி, “நீங்க சான்சே இல்லணா” என்றபடி சிரித்தாள்.
அவ்யுதகண்ணனின் இந்த பரிமாணத்தில் சிறு ஆச்சரியம் கொண்ட அம்ரிதாவின் முகத்திலும் இயல்பான புன்னகை அரும்பி இருந்தது.
ஆதினி, “ஏன் டாடி எல்லோரும் சிரிக்கிறீங்க?” என்று கேட்க,
“அந்த பெரிய ஆச்சியும் தாத்தாவும் ஹைட் அண்ட் ஸீக் விளையாடுறதைப் பார்த்து தான் சிரிக்கிறோம்” என்றான்.
“ஓ!” என்ற குழந்தை, “இன்னும் டூ டைம்ஸ் விளையாடனுமே!” என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
“ஷுர்” என்றான்.
மூவரும் கையில் இருந்ததை தண்ணீருக்குள் போட்டவிட்டு மீண்டும் கையை உள்ளே விட்டு தேடினர்.
இந்த முறை மோதிரம் அம்ரிதா கையில் கிடைக்க, அவளும் மகளின் கையில் கொடுத்து கண்சிமிட்ட, குழந்தையும் கண்சிமிட்டிவிட்டு கையை வெளியே எடுத்து மோதிரத்தை காட்டி, “இப்பவும் நான் தான் வின்” என்று குதூகலித்தாள்.
இம்முறையும் அவ்யுதகண்ணன் கையில் கிருஷ்ணர் பொம்மை வந்து இருக்க, “மாப்பிள்ளை விடுறதா இல்லை” என்று ஒருவர் கிண்டல் செய்தார்.
அவனும் விடாமல் மென்னகையுடன், “உங்க ஆத்துகாரர் உங்களை விட்டுடுவாரா என்ன!” என்று பதிலடி கொடுத்தான்.
தேவகி, “சரி.. சரி.. அடுத்த முறை எடுங்க” என்றபடி மூவரின் கையில் இருந்த பொருட்களை வாங்கி உள்ளே போட்டார்.
மூவரும் மீண்டும் தேடலை தொடங்க, இந்த முறையும் மோதிரம் அவ்யுதகண்ணனின் கையில் தான் சிக்கியது. ஆனால் இம்முறை அதை மகளிடம் கொடுக்காமல் தனது சரிபாதியின் கையில் கொடுத்தான்.
அவள் திருதிருவென்று விழிக்க, அவனோ மென்னகையுடன் உதடு அசைவது வெளியே தெரியாதபடி, “டாலி கூட இப்படி முழிக்கலை” என்றான்.
அம்ரிதா அவனை செல்லமாக முறைக்க, அவனோ வசீகர புன்னகையுடன் கண்ணடித்தான்.
மலர்விழி, “அண்ணா.. பப்ளிக்! பப்ளிக்!” என்று கூற,
அவனோ, “ஸோ வாட்! ஆல் ரைட்ஸ் ஐ ஹவ்” என்றான்.
அப்பொழுது ஆதினி, “ஹே! எனக்கு லிட்டில் கிருஷ்ணா கிடைச்சு இருக்குது” என்று கத்தினாள்.