“ஓ! சூப்பர்” என்ற மலர்விழி, “ஆதினி குட்டிக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?” என்று கேட்டாள்.
“ரெண்டும்”
“அண்ணி கேட்டீங்களா!” என்று மலர்விழி அம்ரிதாவின் தோளில் இடித்தபடி கூற, அவளோ வெகு சிரமத்துடன் சிரிப்பது போல் பாவனை செய்தாள்.
இந்த அன்யோன்ய பேச்சும், குழந்தை பற்றிய பேச்சும் அவளை வெகுவாக அலைக்கழித்தது. அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. முன் அளவு இல்லை என்றாலும் கடந்த கால சம்பவத்தின் தாக்கம் இருக்க தான் செய்கிறது. அதை வெளியே காட்ட முடியாமல் உதட்டில் புன்னகையை காட்ட பெரிதும் போராடினாள். அதன் விளைவாக அவளுள் சிறு பிரளையம் நடக்கத் தான் செய்தது.
அவ்யுதகண்ணன் அன்னையிடம் கண்காட்ட, அவர், “நேரமாகுது.. வாங்க.. நாலாநீர் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க” என்றபடி அவர்களை அழைத்துச் சென்றார்.
[நாலாம் சீர் என்பது தான் பேச்சு வழக்கில் நாலாநீர் என்று மறுவி உள்ளது.]மணமக்கள் மணமேடையில் அமர்த்தப் பட்டனர். பிறர் அறியாமல் அம்ரிதாவின் கையை பற்றி அவளுக்கு மீண்டும் ஆறுதல் அளித்து, அவளை சற்றே இயல்பாக்கினான்.
தேவகி ஒரு கையில் தேங்காயும் மறு கையில் சற்று தடியான அப்பத்தையும் வைத்தபடி அம்ரிதாவின் காதில் மெல்லிய குரலில் தனது உறவு முறையை கூறி, தனது பெயரை மூன்று முறை கூறினார். பின் அவளது தலையில் மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்கத்தால் செய்த மெல்லிய தகடை போன்ற சிறு மயில் பட்டம் ஒன்றை கட்டினார்.
அவரை தொடர்ந்து மாமியார் முறையில் இருக்கும் மூவரும், நாத்தனார் முறையில் இருக்கும் ஒரு பெண்ணும் வரிசையாக வந்து அவரை போலவே தங்கள் உறவு முறையை சொல்லி, பெயரை மூன்று முறை கூறி, மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட தங்கத்தால் செய்த மெல்லிய தகடை போன்ற சிறிய செவ்வக பட்டத்தை கட்டினார்கள்.
அடுத்து மணமக்கள் முன் சந்தனம், குங்குமத்துடன், சிறு சிறு கிண்ணங்களில் நல்லெண்ணெய், சீயக்காய் மற்றும் மஞ்சள் தூள் வைக்கப் பட்டு இருந்தது. முதலில் இருவரும் மற்றவர் புறங்கையின் மீது சந்தனம் மற்றும் குங்குமத்தை தடவினர். அவ்யுதகண்ணன் கூடுதலாக குங்குமத்தை அவளது உச்சி வகுட்டில் வைத்தான். அதன் பிறகு, சம்பிரதாயத்திற்காக மற்றவர் தலையில் சிறு துளி எண்ணெய் மற்றும் தூள்களை வைக்க, ஆதினி அதை போலவே இருவருக்கும் வைத்தாள்.
அவ்யுதகண்ணன் மகளின் கன்னத்தில் சந்தனத்தை தடவ, குழந்தை கிளுக்கி சிரித்தாள்.
பிறகு அம்ரிதாவிற்கு தம்பி முறையில் இருக்கும் ஒருவன் வந்து அவ்யுதகண்ணன் கையில் மோதிரம் அணிவித்து, இருவருக்குமான புத்தாடைகளை கொடுத்தான்.
தனது ஆடையை எடுத்துக் கொண்ட அவ்யுதகண்ணன் அம்ரிதாவிடம் அவளோடதை கொடுத்த போது மகளின் இளஞ்சிவப்பு வண்ண பட்டுப் பாவாடை சட்டையையும் சேர்த்து கொடுத்தான்.
மூவரும் ஆடையை மாற்றி வந்ததும் மணமக்கள் எதிர் எதிரே சற்று இடைவெளி விட்டு அமர்த்தப் பட்டனர். ஆதினி தந்தையின் அருகில் அமர, அவனோ மகளை மடியில் அமர்த்திக் கொண்டான்.
“இப்படி உட்கார வச்சா! எப்படி விளையாடி ஜெயிப்ப!” என்ற விமர்சனத்தை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
பிறகு மற்ற விளையாட்டுக்களை விளையாடினர்.
முதலில் இருவரிடமும் ஆளுக்கு ஒரு மல்லி பூப்பந்து கொடுக்கப்பட்டது. இருவரையும் ஒரே நேரத்தில் மற்றவரிடம் உருட்டி பிடித்து விளையாட கூறினர்.
அம்ரிதா ‘அவ்ளோ தானா!’ என்பது போல் ஆச்சரியத்துடன் பார்க்க, அவ்யுதகண்ணன் அதை வாய்விட்டே கேட்டான்.
ஒரு பெண்மணி, “அதான் நீ விளையாடி இருப்பியே! நீயும் புதுசா கேட்கிறியே!” என்று கூற,
அவன் பதில் கூறும் முன் முதலில் பேசிய பெண்மணியோ, “என்ன சீதா! முதல் கல்யாணம் யாருக்கும் சொல்லாம தானே செய்துக்கிட்டான்!” என்று கூறிய பிறகே தனது பேச்சை உணர்ந்தவராக அவனை திரும்பி பார்க்க,
அவனோ ‘என்ன!’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.
அவர் சிறு பயத்துடன் கையால் தனது வாயை மூடிக் கொண்டார்.
‘அது!’ என்பது போல் அவரைப் பார்த்தவன் பின் அம்ரிதாவைப் பார்த்து, “ஆரம்பிக்கலாமா?” என்று தலை சரித்து நடிகர் கமல்ஹாசன் போல் கேட்டான்.
அம்ரிதா மென்னகையுடன் ‘சரி’ என்று தலை அசைக்கவும், மகளின் கையை பூப்பந்தின் மீது வைத்து, அதன் மேல் தனது கையை வைத்து உருட்டினான். அதே நேரத்தில் அம்ரிதாவும் பூப்பந்தை உருட்டி இருந்தாள்.
இருவரும் தங்களிடம் வந்த பூப்பந்தை பிடித்தனர்.
ஒரு பெண்மணி, “அட! வேகமா உருட்டுங்கப்பா.. யாரு பிடிக்காம விடுறீங்களோ! அவங்க அவுட்” என்றார்.
வேகமாக பூப்பந்தை உருட்ட ஆரம்பித்தனர். இரண்டு நிமிடங்கள் தொடர்ந்த விளையாட்டு அம்ரிதா பிடிக்க தவறியதும் முற்று பெற்றது.
“ஹே! நாங்க தான் வின்” என்று ஆதினி கத்த,
முதலில் பேசிய பெண்மணி, “அதான! போலீஸ் பிடிக்காம விடுவானா!” என்றார்.
இவன் கையை துப்பாக்கி போல் மேல் நோக்கி வைத்தபடி வாயின் அருகே கொண்டு சென்று லேசாக ஊத, அவர் அதன் பின் வாயே திறக்கவில்லை.
அடுத்து இதே போல் வெண்கல தேங்காய் கொண்டு உருட்டி விளையாட, இம்முறை மனைவிக்கு விட்டுகொடுத்தான்.
ஆதினி சோகமாக, “என்ன டாடி விட்டுட்டீங்க!” என்று கூற,
மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன் புன்னகையுடன், “அம்மா வின் பண்ணாலும் டாலி வின் தான்” என்றான்.
உடனே குழந்தையின் முகம் பிரகாசித்தது.
அடுத்து அந்த வெங்கல தேங்காயை இரு கரங்களால் அம்ரிதா பற்றிக் கொள்ள, அவளிடம் இருந்து அவனை பிடுங்க கூறினார்கள்.
“கம் ஆன் அவ்யுத்” என்று சிலர் அவ்யுதகண்ணனுக்கு ஆதரவாக கத்தி உற்சாகப்படுத்த,
ஒரு சிலர், “விட்டுடாத அம்ரிதா” என்று அம்ரிதாவிற்கு ஆதரவளித்து கத்தினர்.
அவ்யுதகண்ணன் நொடி பொழுதில் அவள் கையில் இருந்து தேங்காயை பிடுங்கி விட, அவளால் நிமிடங்கள் கடந்தும் அவனிடம் இருந்து பிடுங்க முடியவில்லை. இதற்கும் விளையாட்டின் விதிப்படி அவன் ஒற்றை கையினால் மட்டுமே தேங்காயை பிடித்து இருக்க, அவளோ இரண்டு கரங்கள் கொண்டு பிடுங்க முயற்சித்தாள்.
அடுத்து அப்பளம் நொறுக்குதல் விளையாட்டு. இருவரையும் சற்று பக்கத்தில் அமர வைத்துவிட்டு, இருவருக்கும் ஆறு அப்பளங்கள் கொடுக்கப்பட்டது. இரு கரங்களிலும் ஒரு அப்பளம் எடுத்து, கைகளை தட்டி அப்பளத்தை நொறுக்க வேண்டும். இதில் முக்கியமான விதி, நொறுக்கப்படும் அப்பளம் மற்றவர் தலையில் விழவேண்டும், அதிலும் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழும்பாமல் செய்ய வேண்டும். மற்றவர் நொறுக்கப்படும் அப்பளத்தில் இருந்து தலையை காக்க வேண்டும். இப்படி மூன்று முறை விளையாட வேண்டும்.
“‘பாப்பு.. கையெல்லாம் எண்ணெய் ஆகிடும்.. ஸோ இது நீ விளையாட வேணாம்.. வேணும்னா ஒருமுறை மட்டும் அப்பளத்தை எடுத்துக் கொடு” என்று மகளை சமாதானம் செய்து, மகள் கொடுத்த இரு அப்பளங்களை வாங்கிக் கொண்டான்.
முதலில் அவ்யுதகண்ணன் தான் ஆரம்பித்தான். கடைசி வினாடியில் நகர்ந்து தப்பித்து விட்ட அம்ரிதா தனது முறையின் போது லேசாக முழங்கால் இட்டு அவனது தலையில் அப்பளத்தை நொறுக்கி விட்டாள். அவளது ஆதரவாளர்கள் கை தட்டியபடி உற்சாகத்துடன் கத்தினர். அவள் முழங்காலிட்டு லேசாக எம்பி முன்னால் வருவாள் என்பதை எதிர்பார்த்திராத அவ்யுதகண்ணன் கடைசி வினாடியில் பின்னால் நகர்ந்தும் நொறுக்கப்பட்ட அப்பளம் அவனது முன் தலையில் விழுந்து இருந்தது.
“ஹே! இது சீட்டிங்” என்று அவன் கூற,
தேவகியோ, “அதெல்லாம் இல்ல.. பொண்ணுங்களுக்கு மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ்சேஷன் உண்டு” என்றார்.
“இது என்னடா அநியாயமா இருக்குது!” என்று பேசியபடியே அவளது உச்சந்தலையிலே மொத்த அப்பளத்தையும் நொறுக்கி இருந்தான்.
“யாரு கிட்ட!” என்று அவன் புன்னகையுடன் கூற,
“பேசிட்டு இருக்கும் போதே பண்ணிட்டீங்க! இது மட்டும் சரியா?” என்று அம்ரிதாவும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அப்பளத்தை நொறுக்கினாலும், சுதாரிப்புடன் இருந்தவன் தப்பித்து இருந்தான்.
அம்ரிதா, ‘ச்ச!’ என்று அதிருப்தியுடன் உச்சு கொட்டினாள்.
“ஒரு முறை விட்டுட்டா! எல்லா முறையும் ஜெய்ச்சிடுவீங்களா!” என்று கேட்டபடியே மீண்டும் அவள் தலையில் அப்பளத்தை நொறுக்கி இருந்தான்.
“ஹே!” என்று லேசாக கத்திய அம்ரிதா அடுத்த நொடியே அவன் மீது அப்பளத்தை நொறுக்க, இம்முறையும் அவன் தப்பித்து, இந்த விளையாட்டினின் வெற்றிவாகை சூடிக் கொண்டான்.
இருவரும் அப்பளத் துண்டுகளை தட்டிவிட்டு அடுத்த விளையாட்டிற்கு தயாராகினர்.
அடுத்து இறுதி விளையாட்டாக பல்லாங்குழி விளையாட கூறினர்.
“எனக்கு விளையாட தெரியாதே!” என்று அம்ரிதா கூற,
தேவகி அவள் அருகில் அமர்ந்தபடி, “வா.. நாமளா அந்த அப்பா மகளானு ஒரு கை பார்த்திடுவோம்” என்று கூற, அங்கே மகிழ்ச்சியின் ஆரவாரம் கூடியது.
அவ்யுதகண்ணன் நன்றாக தான் விளையாடினான் ஆனால் அவனது அன்னை முன் அவனது திறமை இதில் எடுபடவில்லை. தேவகி கூற கூற விளையாடிய அம்ரிதாவே வெற்றி பெற, தேவகி இல்லாத காலரை தூக்கி காட்டியபடி மகனைப் பார்க்க,
அவனோ, “ஓவராலா நாங்க தான் வின்” என்று கூறி உதட்டை சுளித்து அழகு காட்டினான்.
“எஸ்! எஸ்.. நாங்க தான் வின்” என்று கத்தியபடி மகிழ்ச்சியுடன் ஆதினி தந்தையுடன் கையை தட்டிக் கொண்டாள்.
அதன் பிறகு மாலை வரவேற்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.