மண்டபத்தில் இருந்து வீடு திரும்பிய மணமக்களுக்கு மீண்டும் ஆரத்தி எடுக்க மீனலோஷினியும் உறவுக்கார பெண்மணி ஒருவரும் வர,
“ஒரு நிமிஷம்” என்று அவர்களை தடுத்த அவ்யுதகண்ணன், “அம்மா” என்று அழைத்தான்.
தோளில் உறங்கிக் கொண்டு இருந்த மகளின் உறக்கம் கலைந்து விடக் கூடாதே என்று அவன் மெதுவாக அழைத்து இருக்க, வீட்டினுள்ளே இருந்த தேவகிக்கு அவனது குரல் கேட்டிருந்த போதும், கேட்காதது போல் தான் இருந்தார்.
மீனலோஷினி, “என்ன அவ்யுத்?” என்று வினவ,
“அம்மாவை கூப்பிடுங்க ஆன்ட்டி” என்றான்.
“இப்ப என்ன! ஒரு நிமிஷம் தான்.. நாங்க ஆரத்தி எடுத்ததும் உள்ளே போய் பேசு”
அவரை ஆழ்ந்து நோக்கியவன், “ஸோ உங்க கிட்ட சொல்லி வச்சிருக்காங்க! ரைட்!” என்றான்.
அரை நொடி அதிர்ந்தாலும் சுதாரித்தவராக, “என்ன சொல்லி வச்சிருக்கா?” என்று கேட்டவர், “எதா இருந்தாலும் ஆரத்தி எடுத்த அப்புறம் போய் பேசு” என்று அவசரமாக கூற,
அவனோ நிதானமாக, “இதைத் தான் சொல்றேன்” என்றான்.
பின், “நாம பேசுறது கேட்காத மாதிரி கேட்டுட்டு இருக்க உங்க பிரெண்ட்டை வர சொல்லுங்க.. இல்ல அப்படியே உள்ளே போய்டுவேன்” என்று மிரட்டினான்.
மகனின் பேச்சில் தேவகி ஒரு நொடி திடுக்கிட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவும் இல்லை, வெளியே வரவும் இல்லை.
மீனலோஷினி, “ஓகே ஓப்பன்னாவே சொல்லிடுறேன்.. இது அம்மாவோட நம்பிக்கை.. இந்த விஷயத்தில் அவ போக்கிலேயே விடு.. ஏன் நான் உனக்கு ஆரத்தி எடுக்கக் கூடாதா?” என்று சமாளிப்பாக முடித்தார்.
“உங்க பிரெண்ட் தான் மூட நம்பிக்கையில் நடந்துகிட்டா, அதை திருத்தாம நீங்களும் ஒத்து ஊதிகிட்டு இருக்கிறீங்க!” என்று அடக்கிய கோபத்துடன் அவரையும் அவன் சாட,
அவரோ மனதினுள் தோழியை திட்டிக் கொண்டு இருந்தார். ஆம் கணவனை இழந்த தான் மகனிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் தேவகி விலகி நிற்கிறார். இதைப் பற்றி சொல்லும் போதே மீனலோஷினி அவரை திட்டினார் தான் ஆனால் அவர் கேட்காததோடு மீனலோஷினியை ஆரத்தி எடுக்க சம்மதிக்க வைத்து இருந்தார். அப்பொழுதும் மீனலோஷினி, ‘உன் பையன் விடுவான்னு நினைக்கிறியா!’ என்று கூறினார் தான். இப்பொழுது அவன் தன்னை திட்டவும் தோழியை தான் மனதினுள் வறுத்தெடுத்தார்.
காலையில் பால் காய்ச்ச வந்த போது, மணமக்களுக்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்த தேவகி வேலை இருப்பது போல் உள்ளேயே இருந்து தப்பித்து இருந்தார். ஆனால் இப்போது அது முடியாமல் போனது.
அப்பொழுது தானியில்(auto) வந்து இறங்கிய குருநாதன், “என்னாச்சு மாப்பிள்ளை?” என்றபடி அருகில் வந்தார்.
“ஒன்னுமில்லை மாமா.. வீட்டுக்குள்ள இருக்க உங்க தங்கச்சியை கூப்பிடுங்க” என்றான்.
“அம்மா உள்ளே என்ன செய்றா?”
“அதான் எனக்கும் தெரியலை.. என்னால் சத்தமா கூப்பிட முடியலை.. டாலி முழிச்சிடுவா.. அப்புறம் அரை தூக்கத்தில் அனத்த ஆரம்பிச்சிடுவா”
இவ்வளவு நேரம் நடந்த உரையாடல்களைப் பற்றி அறியாமல் அவரும் உள்ளே சென்று தேவகியிடம், “இங்கே என்னமா செய்துட்டு இருக்க? மாப்பிள்ளை கூப்பிடுறார்மா” என்றார்.
“நான் வேணும்னு தான் வெளியே வரலை அண்ணா”
யோசனையுடன் அவரைப் பார்த்த குருநாதன் இரண்டே நொடியில் அவரது எண்ணத்தை புரிந்தவராக அழுத்தமான குரலில், “பெத்தவளை விட யாரும் மனசார வாழ்த்திட முடியாது” என்றார்.
“அண்ணா!” என்று சிறு தவிப்புடன் தேவகி அழைக்க,
“பரந்த மனப்பான்மை உடைய உனக்குள் இப்படி ஒரு மூட நம்பிக்கையா!” என்ற குருநாதனோ, “முதல்ல வெளிய வா.. நீ தான் ஆரத்தி எடுக்கிற” என்று அன்பு கட்டளையுடன் அவரை வெளியே அழைத்து வந்தார்.
அவ்யுதகண்ணன் அன்னையை முறைக்க, அவர் அவனை பாவமாக பார்த்தார்.
“இந்த அப்பாவி லுக்கை எல்லாம் உங்க மருமக கிட்ட வச்சுக்கோங்க.. அவ தான் நம்புவா” என்றான் கோபத்துடனே.
உடனே முக பாவனையை மிடுக்காக மாத்தியவர், “என் மருமகளுக்கு தான் இளகிய மனசு.. உன்னை மாதிரி இல்ல” என்றார்.
“ஆமா நான் இப்படி தான்.. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுனே நான் இருந்துட்டு போறேன்.. இப்போ ஆரத்தி எடுங்க”
‘எந்த பாலை(ball) போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறானே!’ என்று மனதினுள் புலம்பியவர் அதற்கு மேல் மறுக்க முடியாமல் உதட்டை சுளித்து அழகு காட்டியபடி தோழியிடம் இருந்து ஆரத்தியை வாங்கினார்.
மீனலோஷினி நமட்டு சிரிப்புடன் தேவகியைப் பார்க்க, அவரை தேவகி முறைத்தார்.
அவ்யுதகண்ணன் தேவகியுடன் ஆரத்தி எடுக்க தயாராக இருந்த உறவுக்கார பெண்மணியிடம், “காலையில் நீங்க தானே எடுத்தீங்க அத்தை.. இப்போ உங்களுக்கு பதில் இவங்க எடுத்தா உங்களுக்கு ஓகேவா?” என்று மீனலோஷினியைக் காட்டி பேசினான்.
அந்த பெண்மணி பதில் கூறும் முன் மீனலோஷினி, “ஏய்! நான் உன்னை சமாளிக்க தான் சும்மா அப்படி கேட்டேன்” என்றார்.
“அது எனக்கும் தெரியும்.. சும்மாவோ நிஜமாவோ! கேட்டுட்டீங்க தானே!” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காமல் அந்த பெண்மணியைப் பார்க்க,
அவர், “எனக்கு வருத்தம்லாம் இல்லப்பா.. உன்னோட அம்மாவை இப்படி தாங்குற இவங்களுக்கு என்னை விட உன் வாழ்க்கையின் மீது அக்கறை அதிகமா தான் இருக்கும்.. அவங்களே எடுக்கட்டும்” என்று பெருந்தன்மையுடன் கூறினார். இதற்கும் அவரை ஆரத்தி எடுக்க என்பதற்காகவே தேவகி தங்களுடன் தங்குமாறு கேட்டு அழைத்து வந்து இருந்தார்.
அவன் விரிந்த புன்னகையுடன், “சரியா புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அத்தை” என்று மனதார நன்றி கூறினான்.
அவரும் மென்னகையுடன், “இருக்கட்டும் ப்பா” என்றபடி சற்று விலகி நிற்க, மீனலோஷினி தோழியுடன் சேர்ந்து ஆர்த்தி தட்டை பிடித்தார்.
அன்னையின் மன சுணக்கத்தை அறிந்தவனாக, “அம்மா” என்று அழைத்தவன் அவர் தன்னை நோக்கியதும், “எல்லாமே நாம எடுத்துக்கிற விதத்தில் தான் இருக்குதுனு நீங்க தானே எனக்கு சொல்லுவீங்க! எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்களுக்கும் அப்பாக்கும் சுமங்கலி தானே ஆர்த்தி எடுத்தாங்க?” என்று கேட்டான்.
அவர் பதில் சொல்ல முடியாமல் அமைதி காக்க,
அவன் புன்னகையுடன், “நான் நல்லா இருக்கணும்னு உங்களை விட வேற யாரு நினைச்சிட முடியும் சொல்லுங்க! ஸோ நீங்க சிரிச்சிட்டே ஆர்த்தி எடுத்தா நாங்களும் சந்தோஷமா வாழ்வோம்” என்று கூறி கண்சிமிட்ட, தேவகி மனச்சுணக்கம் நீங்கியவராக இயல்பாக புன்னகைத்தார்.
புன்னகையுடன் தேவகியும் மீனலோஷினியும் ஆரத்தி எடுத்ததும் அனைவரும் உள்ளே சென்றனர். குருநாதன் அவனது தோளில் பாராட்டாக தட்டிக் கொடுத்தபடி உள்ளே வந்தார்.
உள்ளே வந்ததும் முதல் வேலையாக அவன் மகளை தனது அறையில் படுக்க வைக்க செல்ல,
முதலில் ஆரத்தி எடுக்க நின்ற பெண்மணி மெல்லிய குரலில் தேவகியிடம், “என்ன தேவகி! ஆதினிய உன்னோட ரூமில் படுக்க வைக்கச் சொல்லு” என்றார்.
அவரோ மகனை அறிந்தவராக மென்னகையுடன், “ரெண்டு பேருமே பக்குவத்துடன் முதிர்ச்சியடைந்தவங்க தான்.. அவங்க வாழ்க்கையை எப்போ எப்படி ஆரம்பிக்கணும்னு அவங்களுக்கு தெரியும் மச்சினி” என்றார்.
அப்பொழுதும் அந்த பெண்மணி, “இருந்தாலும் யோசிச்சுக்கோ! உன் மருமக என்ன நினைக்கிறானு தெரியாதே! அவங்களுக்குள் புரிதல் குறையவோ, ஆதினி குட்டி மேல் பாசம் குறையவோ காரணமா இது அமைந்திட கூடாது பாரு” என்று நல்ல எண்ணத்தில் தான் கூறினார்.
என்ன தான் அவர் மெதுவாக பேசி இருந்தாலும் அருகில் நின்றிருந்த அம்ரிதாவிற்கும் அவர் பேசியது கேட்டுவிட, அவள், “இந்த கல்யாணமே டாலிக்காக தான்.. டாலி எங்க கூட படுக்கிறதை தான் நானும் விரும்புறேன்” என்று முடித்துவிட்டாள்.
அவர் சிறிது சங்கடமாக பார்த்தபடி, “நான் தப்பான அர்த்தத்தில் பேசலைமா” என்று இழுத்து நிறுத்த,
அவள் சிறு மென்னகையுடன், “அது புரிந்ததால் தான் நான் பொறுமையா பேசிட்டு இருக்கிறேன்” என்றாள்.
“அடி ஆத்தி!” என்றபடி முகவாயில் கை வைத்தவர் தேவகியிடம், “உன் பையனுக்கு ஏற்ற ஆளை தான் கட்டி வச்சு இருக்க.. ரெண்டு பேரும் நல்லா இருக்கட்டும்” என்று மனதார வாழ்த்தினார்.
தேவகியும் அம்ரிதாவும் புன்னகையை பதிலாக தர, அப்பொழுது அங்கே வந்த அவ்யுதகண்ணன் ‘என்ன?’ என்பது போல் இருவரையும் பார்த்தான்.
இருவரும் ஒன்று போல் தோளை லேசாக அசைத்து ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைக்க, அவன் இருவரையும் செல்லமாக முறைத்தான்.
அவனது முறைப்பில் அம்ரிதா புன்னகையை உதிர்க்க, தேவகியோ மிடுக்காக பார்த்தார்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.