தெரிந்தவர் வீட்டு விழாவிற்கு செல்ல இருப்பதால் குருநாதன் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி தனது வீட்டிற்கு சென்று இருந்தார்.
மாலை 5.20 மணிக்கு கைபேசியில் அம்ரிதாவை அழைத்த அவ்யுதகண்ணன் அவள் அழைப்பை எடுத்ததும், “மலர் எப்படி இருக்கா?” என்று தான் கேட்டான்.
“பத்து நிமிஷம் பார்த்துட்டு நானே உங்களுக்கு கூப்பிடனும்னு இருந்தேன்.. அவ இன்னும் வீட்டுக்கு வரலை.. அதான்”
“என்ன சொல்ற! மதியமே அவ காலேஜ்ஜில் இருந்து கிளம்பிட்டா” என்றபடி தனது இருக்கையில் இருந்து எழுந்தவனின் கைகள் இருசக்கர வண்டியின் சாவியை எடுத்து இருந்தது.
“என்ன சொல்றீங்க!” என்று அதிர்வுடன் கேட்டவளும் இருக்கையில் இருந்து எழுந்து இருந்தாள்.
உதவி துணை ஆய்வாளரிடம், “ஸ்டேஷன் பார்த்துக்கோங்க.. ஒரு எமர்ஜென்சி.. போயிட்டு அரை மணி நேரத்தில் வரேன்” என்றபடி செவிபேசியை காதில் மாட்டி, கைபேசியை கால் சட்டை பையினுள் வைத்தபடி வெளியே வந்தவன்,
“நான் மலருக்கு போன் போட்டேன்.. அது ஸ்விட்ச் ஆஃப்.. அதான் உனக்கு கூப்பிட்டேன்” என்றபடி வண்டியை இயக்கி வீட்டை நோக்கி புறப்பட்டான்.
“மலர் மதியமே கிளம்பிட்டானு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“விநாயகம் அண்ணாவோட பையன் அந்த பொறுக்கி கார்த்திக்கோட கிளாஸ் தான்.. அவன் கிட்ட விசாரிக்க சொல்லி இருந்தேனே! அவன் தான் சொன்னான்.. அந்த கார்த்திக் தான் ஏதோ இவளை மிரட்டிட்டு இருக்கிறான்.. இன்னைக்கு காலேஜ்ஜில் அந்த பொறுக்கியும் மலரும் பேசிட்டு இருந்ததை இவன் தள்ளி இருந்து பார்த்து இருக்கிறான்.. மலர் அழுதுட்டே ஏதோ கெஞ்சி பேசினது போல் தெரிந்ததாவும், அப்புறம் அழுதுட்டே கிளம்பியதாவும் சொன்னான்” என்றவன் நினைவு வந்தவனாக, “நீ மதியம் எப்போ நம்ம வீட்டுக்கு வந்த?” என்று கேட்டான்.
“1.30 இருக்கும்னு நினைக்கிறேன்.. ஏன்?”
“அம்மா கிட்ட மலர் வந்தாளானு கேளு?”
“அத்தமா” என்று அழைத்தபடி கூடத்திற்கு வந்தவள் அவர் பின் பக்க தோட்டத்தில் இருந்து குரல் கொடுக்கவும், வேகமாக அங்கே சென்று, “மலர் வீட்டுக்கு வந்துட்டாளா அத்தமா? நீங்க அவளை பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.
“ஒரு மணிக்கே வந்துட்டாளே! ஏன் கேட்கிற?”
அவருக்கு பதில் கூறாமல், “மலர் ஒரு மணிக்கெல்லாம் வந்துட்டாளாம்.. நான் மேல போய் பார்க்கிறேன்” என்றபபடி அவள் நகர போக,
“நான் வந்துட்டேன்” என்றபடி வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி இருந்தான். ஐந்து நிமிடத்தில் வர வேண்டிய தூரத்தை இரண்டரை நிமிடங்களிலேயே கடந்து வந்து இருந்தான்.
“அவ்யுத் வந்துட்டானா? அவன் வண்டி சத்தம் மாதிரி இருக்கே! நீ ஏன் மலர் பத்தி கேட்கிற? டென்ஷனா வேற இருக்க! என்ன பிரச்சனை?” என்று தேவகி கேள்விகளை அடுக்கினார்.
அதே நேரத்தில் மலர்விழி கூடத்தில் இருந்த மின்விசிறியில் அன்னையின் புடவையை தூக்கு கையிற்றை போல் போட்டு முடிச்சிட்டு சற்றே உயரமான முக்காலியின் மீது ஏறி நின்று இருந்தாள்.
“எதுக்கும் அம்மாவை மோட்டர் ரூமில் இருந்து கடப்பாறையை எடுத்துட்டு வரச் சொல்லு” என்றபடி மாடி படிகளில் மூன்று மூன்று படிகளாக தாவி ஏறினான்.
“எல்லாம் சொல்றேன்.. இப்போ உடனே கடப்பாரை எடுத்துட்டு மாடிக்கு வாங்க” என்றுவிட்டு இவளும் வேகமாக மாடி வீட்டிற்கு செல்லும் படி இருக்கும் இடத்திற்கு விரைந்தாள்.
இவன் மலர்விழி வீட்டின் முன் நிற்கவும், அந்த முக்காலி கீழே விழும் சத்தம் அவனுக்கு கேட்டது.
“மலர்!” என்று கத்தியபடி வீட்டின் மரக்கதவை வேக வேகமாக பலம் கொண்டு மோத ஆரம்பித்தான்.
மலர்விழி மேல் தாழ்ப்பாளை போடாமல் கிடைநிலையில்(horizontal) இருந்த தாழ்ப்பாளை மட்டும் போட்டு இருக்க, இவனது மூன்றாவது மோதலிலேயே கிடைநிலை தாழ்ப்பாள் நீக்கப்பட்டு கதவு திறந்து கொள்ள, விழுவது போல் உள்ளே சென்றவன் கண்டது கழுத்து இறுக்கப்பட்டு, கை கால்கள் துடித்து உதற, மூச்சுக்கு திணறியபடி புடவையில் தொங்கிக் கொண்டு இருந்த மலர்விழியைத் தான்.
நொடி கூட தாமதிக்காமல் விரைந்து சென்று அவளது கால்களை பற்றி அவளை உயர்த்தி தூக்கியவன், “ராது சீக்கிரம் வா” என்று கத்தி இருந்தான்.
“அய்யோ மலர்!” என்று அதிர்வுடன் உள்ளே வந்த அம்ரிதா இருந்த அதிர்ச்சியில் அவனது அழைப்பை கவனிக்க தவறி இருந்தாள்.
“ஸ்டூலை நிமிர்த்தி போடு” என்றான்.
அம்ரிதா அவ்வாறே செய்ய, மலர்விழியின் கால்களை அதில் வைத்து அவளை நிற்க செய்தவன், அருகில் இருந்த இருக்கையை இழுத்து போட்டு மேலே ஏறி நின்று புடவையை அவள் கழுத்தில் இருந்து அகற்றி அவளை கீழே இறக்கி தானும் இறங்கினான்.
மலர்விழி அழுதபடி பேச முடியாமல் லேசாக இருமிக் கொண்டே, “ஏ..ன் ணா…” என்று ஆரம்பிக்க,
அவளை பேச விடாமல் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து இருந்தான்.
அதில் தடுமாறி கீழே விழப் போனவளை, அங்கு வந்த தேவகி தாங்கி பிடித்தபடி கோபத்துடன், “என்னடா செய்ற!” என்று கத்தி இருந்தார்.
ருத்ரமூர்த்தியாக நின்று இருந்தவனை அம்ரிதா அதிர்வுடன் பார்க்க, மலர்விழியோ அதிர்வும் பயமுமாக பார்த்தாள்.
அம்ரிதாவிடம், “தண்ணி எடுத்துட்டு வா” என்றவனின் பார்வை முழுவதும் மலர்விழி மீது தான். மலர்விழியின் முடிவை ஏற்றுகொள்ள முடியாதவனுக்கு கடும் கோபம் வந்தது.
கடினப்பட்டு கோபத்தை அடக்கினாலும், “உன்னை பெத்தவங்களை பத்தி கொஞ்சமாச்சும் நினைத்து பார்த்தியா?” என்று சீறவே செய்தான்.
அவளோ தலையில் அடித்துக் கொண்டு, “அ..வங்..களை நி.னை..த்து தா.னே இப்.படி” என்றபடி அழுதாள்.
தேவகி அவளை அணைத்து அரவணைக்க, அவரை கட்டிக் கொண்டு கதறினாள்.
ஆனால் அவ்யுதகண்ணனோ இன்னமும் கோபத்துடன், “உன்னோட துணிவை அவனை எதிர்த்து போராடி வெல்வதில் காட்டி இருந்தா சீராட்டி, பாராட்டி இருப்பேன்! இப்படி உயிரை விட்டு அந்த பொறுக்கியை ஜெயிக்க வைக்கிறதோடு இன்னும் பல பொண்ணுங்க வாழக்கையை சீரழிக்கும் வாய்ப்பை அவனுக்கு கொடுக்க நினைத்து இருக்கிறியே!” என்றான்.
தண்ணீருடன் வந்த அம்ரிதாவும் அவளுக்கு ஆதரவாக மறுபக்கம் அமர்ந்து முதுகை வருட,
“நல்ல மடியில் போட்டு தாலாட்டு பாடு” என்று அம்ரிதாவிடம் எகிறியவன், அம்ரிதாவின் முறைப்பில், “என்ன முறைப்பு!” என்று மிரட்டினான்.
அம்ரிதாவோ முறைப்புடன், “அவளே உடைந்து போய் இருக்கா! அதுவும் கிட்டதிட்ட எமலோக வாசல் வரை போயிட்டு வந்து இருக்கா! கனிவா பேசலைனாலும் இப்படி கோபமா பேசாம இருங்க” என்றாள்.
“அதான் தொட்டில் கட்ட நீங்க ரெண்டு பேரும் இருக்கிறீங்களே!” என்றவன், “மலர்” என்று அழைத்தான்.
அவள் பயத்துடன் அவனை பார்க்கவும்,
கோபத்தை நன்றாக கட்டுக்குள் கொண்டு வந்தவன், “நான் உன்னை என் தங்கையா தான் நினைக்கிறேன் ஆனா நீ என்னை வெறும் வாய் வார்த்தைக்கு தான் அண்ணானு கூப்பிட்டியா?” என்று கேட்டான்.
அவள் மறுப்பாக தலை அசைக்க,
“காலையில் கேட்டேன் தானே!” என்றான்.
அவள் மெல்லிய குரலில், “உங்க கிட்ட.. சொல்ல.. கூடாதுனு.. மிரட்டினான்” என்றாள்.
“மார்ஃபிங் வீடியோ இல்ல போட்டோஸ் வச்சு மிரட்டுறானா?”
அவள் தரையை பார்த்தபடி அழுகையுடன் மறுப்பாக தலையை ஆட்டினாள்.
அவளை தவறாக நினைக்க முடியாமல், “உனக்கே தெரியாம உன்னை தப்பா வீடியோ இல்ல போட்டோ எடுத்து இருக்கானா?” என்று கேட்டதும் அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டியபடி மீண்டும் கதறினாள்.
“மலர்” என்று இம்முறை சிறு அதட்டலுடன் அழைத்தான்.
அவள் சிறிது பதறியபடி அவனை நோக்கவும், அம்ரிதா அவனை கண்டனப் பார்வை பார்க்க, அவனோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
தேவகி மகனை தடுக்கவும் இல்லை அதே நேரத்தில் தனது அரவணைப்பை நிறுத்தவும் இல்லை. என்ன தான் அவளை தாயாய் அரவணைத்தாலும், அவளது தவறை சுட்டிக் காட்டும் கண்டிப்பும் இருந்தால் மட்டுமே மீண்டும் இப்படி யோசிக்க மாட்டாள் என்று நினைத்தவர் மகனை தடுக்கவில்லை.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.