நள்ளிரவு 12.30 மணி போல் புலனத்தில் மூன்று படத்துடன் கூடிய இரவு வணக்க குறுஞ்செய்திகள் விநாயகத்தின் மகனிடம் இருந்து வந்ததும் வெற்றி புன்னகையை சிந்தியவன் தானும் பதிலாக இரவு வணக்க குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.
பிறகு மணியைப் பார்த்தவன் அன்னையின் அறை வாயிலில் நின்றபடி மெல்லிய குரலில், “மலர்” என்று அழைத்தான்.
அடுத்த நொடியே, “அண்ணா!” என்றபடி அவள் வந்து நிற்கவும்,
“தூங்கி இருக்க மாட்டனு தான் நினைத்தேன்” என்றவன் புன்னகையுடன், “எல்லா வேலையும் முடிந்தது.. இப்போ நீ ஸேஃப்” என்றான்.
இவனது சத்தத்தில் தேவகி மற்றும் அம்ரிதாவுமே எழுந்து வந்துவிட்டனர்.
“லாஸ்ட் சின்ன வேலை ஒன்னு மட்டும் இருக்குது.. அதை உன் கையால் செய்” என்றபடி கூடத்தில் இருந்த மெத்திருக்கையில் அமர்ந்தான்.
பெண்கள் மூவரும் அவனை கேள்வியாய் பார்த்தபடியே அமர்ந்தனர்.
“மலர் உன்னோட மொபைலை ஆன் செய்துட்டேன்.. பாஸ்வொர்ட் போட்டு தா” என்றபடி அவளது கைபேசியை அவள் புறம் அவன் நீட்ட, அவள் அதை வாங்கி கடவுச்சொல் போட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.
சில நொடிகள் கழித்து, “அவன் செய்ததை அவனுக்கே திருப்பி செய்யப் போற” என்றவன் மலர்விழியிடம் அவளது கைபேசியை நீட்டியபடி, “சென்டு பட்டனை கிளிக் செய்” என்றான்.
அவள் அதை வாங்காமல் அவனை புரியாமல் பார்க்க,
“அக்சுவளி நாளைக்கு தான் இதை செய்ய முடியும்னு நினைத்தேன்.. ஆனா அந்த பரதேசி பண்ணாடை இன்னைக்கே சிக்கிட்டான்” என்றவன் உதட்டோர மென்னகையுடன், “அவன் குளிக்கிற வீடியோவை அவனுக்கே நீ அனுப்பப் போற” என்றான்.
மலர்விழி அதிர்வுடன் பார்க்க, அம்ரிதா, “சூப்பர்ங்க” என்று கூற,
தேவகியோ, “இது சரியா? அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் வேணாமா!” என்றார்.
அவ்யுதகண்ணனோ, “இவனை மாதிரி பொறுக்கிக்கெல்லாம் இதான்மா சரி.. இப்படி பதில் பேசினா தான் புரியும்.. அவனவனுக்கு நடந்தா தான் வலியும், வேதனையும், அவமானமும், பயமும் புரியும்.. ஆனா இத்தோட அவனை விட மாட்டேன்.. நாளைக்கு இன்னும் கச்சேரி இருக்குது” என்றான்.
பிறகு மலர்விழி பக்கம் திரும்பி, “ஹ்ம்ம்.. கிளிக் செய்” என்றான்.
அம்ரிதா, “ஆனா மலர் வீடியோ இன்னும் அவன் கிட்ட தானே இருக்குது!” என்றாள்.
மலர்விழி பயத்துடன் அவனைப் பார்க்க,
“அதெல்லாம் டெலிட் செய்தாச்சு.. முகில்.. அதான் விநாயகம் அண்ணா பையன், இப்போ அவன் கூட தான் தங்கி இருக்கிறான்.. முகில் தான் மலர் வீடியோ டெலிட் செய்ததும், அவனை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பியதும்.. நான் வீட்டுக்கு வரும் போதே அவன் வீடியோ கிடைச்சிடுச்சு.. மலர் வீடியோவை டெலிட் செய்யத் தான் இவ்ளோ நேரம் ஆகிருச்சு..
முகில் இ.சி.இ டிப்பார்ட்மென்ட் என்றாலும் அவன் ஒரு நல்ல ஹக்கர்.. மெரிட்டில் இ.சி.இ தான் கிடைச்சுதுனு அதில் சேர்ந்துட்டான்..
அந்த பொறுக்கி தூங்கினதுக்கு அப்புறம், முகில் அவனோட மொபைல் லேப்டாப் எல்லாத்துலையும் இருந்து மலர் வீடியோவை டெலீட் செய்துட்டான்” என்றவன் மலர்விழியைப் பார்த்தான்.
அவள் அப்பொழுதும் தயங்க,
அவ்யுதகண்ணன், “அவன் செய்த துரோகத்தையும், உன்னை மிரட்டியதையும் நினைத்துப் பார்” என்றான்.
அடுத்த சில நொடிகளில் அவளது கைகள் அவன் சொன்னதை செய்து இருக்க, அவளது தோளை தட்டியபடி புன்னகையுடன், “குட்” என்றவன் அவளது கைபேசியை தானே வைத்து கொண்டான்.
பிறகு, “இனி அவனால் உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. அவன் வீடியோ பார்த்துட்டு போன் செய்தா, நீயே பேசு.. நானோ, அம்ரியோ, அம்மாவோ உன் கூடவே இருப்போம்.. தைரியமா பேசு.. என்ன திட்ட தோணுதோ அதை எல்லாம் ஆசை தீர திட்டு” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று அவள் கலங்கிய விழிகளுடன் நெகிழ்ச்சியுடன் கூற,
“உன் அண்ணாக்கு தேங்க்ஸ் சொல்லுவியா! இது என் கடமையும் கூட.. போய் நிம்மதியா தூங்கு” என்றான்.
தேவகி அவளை அழைத்துச் செல்ல, அவனும் அம்ரிதாவும் தங்கள் அறைக்கு சென்றனர்.
அறைக்குள் சென்றதும் அம்ரிதா, “முகில் எப்படி அங்கே தங்கினான்? அவன் எதுவும் கேட்கலையா?” என்று கேட்டாள்.
“அந்த பொறுக்கி கிளாஸ் டாப்பர்.. ஸோ அவன் கிட்ட கேட்டு படிக்க பசங்க அவன் வீட்டுக்கு சில நேரம் போவாங்கலாம்.. முகில் கூட முன்னாடி ஒரு முறை போய் இருப்பான் போல.. அதே மாதிரியே இன்னைக்கு போன முகில் அப்பா அம்மா திடீர்னு ஊருக்கு கிளம்பி போனதா சொல்லி அங்கேயே தங்கிட்டான்.. அக்சுவளி பிளான் ஏ, பிளான் பி னு ரெண்டு பிளான் போட்டு இருந்தோம்..
பிளான் ஏ வேற.. முகில் அங்கே போயிட்டு படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போன் வர மாதிரியும் அவன் உடனே கிளம்புற மாதிரியும் பிளான்.. கிளம்புறதுக்கு முன்னாடி பாத்ரூமில் எக்ஸ்ட்ரா மெமரி போட்ட ஒரு மொபைலை வீடியோ மோடில் வச்சிட்டு போயிட்டு நாளைக்கு காலையில் காலேஜ் போறதுக்கு முன்னாடி ஏதாவது காரணம் சொல்லி அவன் வீட்டுக்கு போய் மொபைல் எடுத்துட்டு வந்திரணும்.. தென் நாளைக்கு ஈவ்னிங் திரும்ப படிக்க போற மாதிரி போய் தங்கி மலர் வீடியோ டெலீட் செய்றது தான் பிளான் ஏ.. காலையில் அவன் வீட்டுக்கு போக முடியலை என்றாலும் ஈவ்னிங் போறப்ப மொபைலை பாத்ரூமில் இருந்து எடுத்துக்கிற பிளான்..
பிளான் பி இன்னைக்கே எல்லாத்தையும் எக்ஸ்ஸிகியூட் செய்றது.. முகில் ஒரு முயற்சியா டேபிள் டென்னிஸ் விளையாடி அவனுக்கு வேர்க்க வச்சு, இன்னைக்கே அவனை குளிக்க வச்சு வீடியோ எடுத்துட்டான்.. அப்புறம் அந்த பண்ணாடை தூங்கினதுக்கு அப்புறம் மலர் வீடியோவை டெலீட் செய்துட்டான்.. வேலையை முடிச்சிட்டு கோட் வொர்ட் மாதிரி எனக்கு மூணு குட் நைட் பார்வர்ட் மெசேஜ் வாட்ஸ்-அப்பில் அனுப்பினான்”
“முகில் மாட்டிக்க மாட்டானா?”
“முகில் தான் செய்ததுனு தெரிந்தா மட்டும் அவனால் என்ன செய்திட முடியும்? முகில் போலீஸ் பையன் அண்ட் நானும் இதுக்கு பின்னாடி இருக்கிறது தெரிஞ்சா அவன் அடக்கி தான் வாசிப்பான்.. திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான்”
“ஹ்ம்ம்.. நாளைக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?”
“அதை செய்துட்டு வந்து சொல்றேன்.. இப்போ தூங்கு”
அவனை பெருமையும், ரசனையும், காதலுமாக பார்த்தவள், “நீங்க கொஞ்சமே கொஞ்சம் பெரிய அப்பா டக்கார் தானோ!” என்றாள்.
அவன் மாய கண்ணனாக சிரிக்க, அதை ரசித்தபடி, “என்ன!” என்றாள்.
“சொன்னா அடிக்கக் கூடாது”
“நீங்க ரொம்ப பயந்தவர் தான்!”
“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும்”
இதை சற்றும் எதிர்பார்த்திராதவள் சிறு அதிர்வுடன் அவனைப் பார்க்க, அவன் அதே புன்னகையுடன் புருவம் உயர்த்தினான்.
அவள் முறைக்க, அவனோ, “மருத்துவ முத்தம் மாதிரி பூஸ்டிங் எனெர்ஜி முத்தம் இல்ல என்கரேஜ்ஜிங் முத்தம் தரலாமே!” என்று கூறி கண் சிமிட்டினான்.
“முத்தத்திலே பலவகை உண்டு..
அதை சொல்லித்தரேன் உனக்கு” என்றுவேறு பாடினான்.
அவள் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் விழித்தாள். முன்பு போல் ஆண்கள் என்றாலே வரும் வெறுப்பு இவனிடத்தில் வரவில்லை, கோபமும் இல்லை, அதனால் திட்டவும் தோன்றவில்லை, அவனது அடாவடியை உள்ளுக்குள் ரசித்தாலும் அவன் கேட்ட முத்தத்தை கொடுக்கவும் முடியவில்லை.
அவளது பாவனையை ரசித்தபடி, “ரொம்ப திணறாத” என்றவன் சட்டென்று மகளை தாண்டி அவள் அருகே சாய்ந்து அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “இது ரசனை முத்தம்” என்றான்.
அவள் கிட்டதிட்ட உறைந்த நிலையில் கண்சிமிட்டாமல் அவனையே பார்க்க,
அவன், “இப்படியே இருந்த, அடுத்து ஈர்ப்பு முத்தம், காதல் முத்தம்னு தொடர்ந்து வரும்” என்றதும்,
சுயம் பெற்றவள் அதிவேகத்துடன் திரும்பி படுத்து, படபடத்த இதயத்தின் மீது கையை வைத்துக் கொண்டாள்.
உல்லாசமாக சிரித்தவன், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றபடி கண்களை மூடிக் கொண்டான்.