“பாதுகாப்பு கருதி பெண்களோட பெயரை என்னால் வெளியிட முடியாது ஆனா அந்த அயோக்கியன் யாருனு சொல்ல முடியும்” என்று நிறுத்திய அவ்யுதகண்ணன் சில நொடிகளில், “என்ன! அவன் யாருனு தெரியனுமா?” என்று கேட்டான்.
“எஸ் சார்”, “சொல்லுங்க சார்”, “அவன் யாரு சார்?” “அவனை சும்மா விடாதீங்க சார்”, “அவனை எங்க கையாலேயே அடி மொத்துறோம்”, “இந்த மாதிரி ஆட்களை எல்லாம் நடு ரோட்டில் சுட்டு தள்ளனும் சார்” என்று பல குரல்கள் வந்தது.
முதல்வர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு மட்டுமே உண்மை சொல்லப்பட்டு இருக்க, மற்ற ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தனர்.
அவ்யுதகண்ணன் உடற்பயிற்சி ஆசிரியரை பார்க்க, அவர் கார்த்திக்கின் பொடதியிலேயே ஓங்கி தட்டி, “எந்திரிடா” என்றார்.
சிறு குன்றலும் அதிக கோபமுமாக அவன் எழுந்து நிற்க, சக மாணவர்கள் காரி உமிழாத குறையுடன் பேசிய பேச்சில் அவமானமாக உணர்ந்தவன், “எல்லாம் உன்னால் தான்டி” என்றபடி மலர்விழி மேல் பாயப் போக, அதை தடுப்பது போல் அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.
கோபமும் வெறியுமாக திரும்பியவன், கண்ணீர் வழிந்த கண்களுடன் நின்றிருந்த அன்னையைக் கண்டு பெரிதும் அதிர்ந்தான்.
“அவர் சொன்னப்ப என் பையன் அப்படி கிடையாது.. நீங்க வேற யாரையோ நினைச்சு தப்பா சொல்றீங்கனு சொன்னேன்.. ஆனா நீ..” என்றவரின் பேச்சை இடையிட்டு,
“இல்லமா.. நான் எதுவும்..” என்று அவன் ஆரம்பிக்க,
“பேசாதடா.. நீ உள்ளே வந்ததில் இருந்து உன்னையே தான் நான் பார்த்துட்டு இருந்தேன்.. காலையில் அந்த பொண்ணு கிட்ட போனில் நீ பேசியதை எல்லாம் ரெக்காடிங்கில் கேட்டுட்டு தான்டா இங்கே வந்து இருக்கிறேன்.. அப்போ கூட உன் குரலில் வேற யாரும் பேசி இருப்பாங்களோனு சின்ன நப்பாசை இருந்தது..
ஆனா நீ, என்னை உயிரோட கொன்னுட்டடா.. உன்னை கருவிலேயே அழிச்சு இருக்கணும்” என்றவர் அதற்கு மேல் அவன் முகத்தை பார்க்க விரும்பாதவராக அருகில் இருந்த கணவரின் தோளில் முகத்தை புதைத்தபடி கதறினார்.
அதீத வெறுப்புடன், “உன்னை அடிக்க கூட நான் விரும்பலை.. ஏன்னா, உன்னை தொட்டு பாவத்தை சேர்த்துக்க நான் விரும்பலை.. வீட்டுப் பக்கம் வந்திடாத.. எங்க பையன் செத்துட்டதா நினைச்சுக்கிறோம்” என்ற அவன் தந்தை தனது அருகே நின்றிருந்த அவ்யுதகண்ணனைப் பார்த்து,
“கேஸ் போட்டு உள்ளே தள்ளுவீங்களோ! என்னவோ.. எது வேணாலும் செய்யுங்க.. ஆனா, இவன் செத்தா கூட எங்களுக்கு சொல்லி அனுப்பாதீங்க சார்” என்றுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
கூட்டத்தில் ஒரு சிலர் கார்த்திக்கின் செய்கையை வைத்து மலர்விழியைப் பார்த்து தங்களுக்குள் பேச ஆரம்பிக்க, அவள் வேகமாக அவ்யுதகண்ணன் கையில் இருந்த ஒலிவாங்கியை பிடுங்கி பேச ஆரம்பித்தாள்.
“ஹெலோ பிரெண்ட்ஸ்.. உங்க சந்தேகத்தை நானே தீர்க்கிறேன்.. எஸ், அந்த நாலாவது பொண்ணு நான் தான்.. இவனை போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்தது நான் தான்..
இதை நான் தனியா செய்யலை.. என் உடன் பிறவா சகோதரர்கள் எஸ்.ஐ அவ்யுதகண்ணன் அண்ட் பைனல் இ.சி.இ முகில் உதவியுடன் தான் செய்தேன்..
முதல்ல நானும் உடைந்து போய் அழுதேன் தான்.. இவன் காலில் கூட விழுந்து கதறினேன் தான்.. ஏன் ஒரு கட்டத்தில் உயிரை கூட விட நினைத்தேன் தான்.. ஆனா அவ்யுத் அண்ணாவும் அவர் குடும்பமும் தான் எனக்கு பக்க பலமா இருந்து என்னை மீட்டு எடுத்தது..
அதுவும் அவ்யுத் அண்ணாவோட மாரல் சப்போர்ட் அண்ட் அட்வைஸ் தான், என்னை திடப்படுத்தி உங்க முன்னாடி இப்படி பகிரங்கமா என் பெயரை வெளியே சொல்ற அளவுக்கு தைரியத்தையும் துணிவையும் கொடுத்து இருக்குது..
இதுக்கு அப்புறம் என்னை நீங்க பார்க்கும் பார்வையில் நான் கொஞ்சம் கீழா தெரிந்தா, அதற்கு நான் காரணம் இல்லை. ஏன்னா தப்பு என்னிடம் இல்லை, பார்க்கிற உங்க பார்வை தான் தவறு..
இவனை காதலனா நம்பினதைத் தவிர வேற என்ன தப்பு நான் செய்தேன்? அழுக்கும் கசடும் இவனிடம் தான் இருக்குது.. காதலித்த காலத்தில் கூட இவனது நுனி விரல் கூட என் மேல் படாம பழகிய நான் ஏன் கூனி குறுகனும்? இப்படிப்பட்ட இழிவு செயலை செய்ததுக்கு இவன் தான் வெட்கப்படனும், கூனி குறுகனும்.. இவன் தான் சாக்கடை.. நான் இல்லை” என்று நீளமாக பேசி முடிக்க, யார் ஆரம்பித்தது என்பது தெரியாமல் அந்த அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.
முதல்வர், “வெல் செட்(said) அண்ட் வெல் டன் மலர்விழி.. இந்த காலத்து பெண்கள் உன்னைப் போல் தான் துணிவுடன் இருக்க வேண்டும்” என்று பாராட்டினார்.
முதலில் அவமானம் மற்றும் அதிர்ச்சியில் நின்று இருந்த கார்த்திக், மலர்விழி பேசப் பேச ஆத்திரமும், வன்மமும், பழி தீர்க்கும் எண்ணமும் கொண்டான்.
அனைவரின் கவனமும் மலர்விழியிடம் இருக்க, நெகிழி(plastic) இருக்கையின் காலை உடைத்து எடுத்த கார்த்திக் வெறியுடன் அவளை குத்த வர, அவனிடம் கவனத்தை வைத்து இருந்த அவ்யுதகண்ணன் சட்டென்று அவளை தன் பக்கம் இழுத்து தள்ளி காப்பாற்றிய வேளையில் அந்த நெகிழியின் கூர் முனை அவனது வலது தோளில் சற்று ஆழமாக கீறி இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
எதிர்பாராத இந்த தாக்குதலில் ஒரு நொடி அதிர்ந்த கார்த்திக் பின் தெரிந்தே வெறி கலந்த ஆத்திரத்துடன் அவ்யுதகண்ணனை தாக்க வர, அவ்யுதகண்ணன் தனது இடது கையால் அவனது கையில் வெட்டுவது போல் வேகமாக அடிக்க, கார்த்திக் வலியில் கத்தியபடி அந்த நெகிழி துண்டை கீழே போட்டான்.
இவை அனைத்தும் சொற்ப நொடிகளில் நடந்தேறி இருந்தது.
அங்கே ஒருவித பதற்ற நிலை சூழ, மலர்விழி, “அய்யோ அண்ணா!” என்று அதிர்ச்சியும் பதற்றமுமாக கத்தினாள்.
உடற்பயிற்சி ஆசிரியர் கார்த்திக்கை பிடித்துக்கொள்ள, முகில் மேடை ஓரத்தில் கிடந்த கையிற்றை எடுத்து வந்து கார்த்திக்கின் கை கால்களை கட்டிப்போட்டுவிட்டு தந்தையை கைபேசியில் அழைத்து விவரத்தை கூறினான்.
சரியாக அப்பொழுது அவ்யுதகண்ணனின் கைபேசியில் அம்ரிதா அழைக்க,
அழைப்பை எடுத்த மலர்விழி பதற்றத்துடன், “அண்ணி.. அண்ணா..” என்று பேச முடியாமல் திணறினாள்.
அம்ரிதா படபடத்த இதயத்துடன், “அண்ணாக்கு என்னாச்சு மலர்?” என்று கேட்டாள்.
அவ்யுதகண்ணன், “மலர்! ஒன்னுமில்லை.. அவளை டென்ஷன் படுத்தாத” என்று கூற,
மலர்விழி செய்வதறியாது விழித்தபடி நிற்க,
அதற்குள் அம்ரிதா, “ஹெலோ! மலர்! அண்ணாக்கு என்னாச்சு? இப்போ எங்க இருக்கீங்க?” என்று பல முறை கேட்டுவிட்டாள்.
அதுமட்டுமின்றி, “அத்தமா!” என்று கத்தியபடி கூடத்திற்கு வந்தவள், “அவர்.. அவருக்கு என்னவோ ஆகிருச்சு அத்தமா” என்று துடித்தபடி கண்ணீர் சிந்தினாள்.
தேவகியின் நெஞ்சம் பதறினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ஒன்னும் இருக்காது.. இரு நான் பேசுறேன்” என்றபடி கைபேசியை வாங்கி, “ஹெலோ” என்றார்.
சரியாக அப்பொழுது கைபேசியை பற்றி இருந்த அவ்யுதகண்ணன், “ஒன்னுமில்லைமா.. சின்ன காயம் தான்.. கார்த்திக் மலரை குத்த வந்தப்ப அவளை காப்பாற்றியப்போது சின்னதா தோள்பட்டையில் கீறிடுச்சு.. ரத்தத்தைப் பார்த்து மலர் பயந்துட்டா.. வேற ஒன்னும் இல்லை.. ராது கிட்ட சொல்லி புரிய வைங்க” என்றான்.
இவை அனைத்தையும் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டு இருந்த அம்ரிதா, “எனக்காக சொல்றீங்களா?” என்று தான் கேட்டாள்.
“இல்லைடா.. நிஜமாவே சின்ன காயம் தான்.. இங்கே காலேஜ்ஜில் பஸ்ட் எய்டு(aid) செய்துட்டு வீட்டுக்கு வரேன்.. கவலைப்படாம இரு”
“சீக்கிரம் வாங்க”
“சரி” என்று அவன் அழைப்பைத் துண்டித்த பிறகுமே அவளது பதற்றமும் தவிப்பும் நீங்கவில்லை.
அவளது நெஞ்சம் முழுவதும் அவளவனின் நலனை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருக்க, தன்னவனின் அழைப்பை இப்பொழுதும் கவனிக்க தவறினாள்.
அவனது அழைப்பு அவளது காதில் விழுந்து இருந்தாலும், அதை அவள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த நொடியில் தான், அவன் இல்லாமல் தான் இல்லை என்பதை முழுவதுமாக உணர்ந்துக் கொண்டாள்.
இதை தான் ‘கெட்டதில் நல்லது!’ என்று சொல்ல வேண்டுமோ!!