ராதா எப்படி இருக்கிறாளோ? என்ற தவிப்பை அடக்க முடியாமல் அடுத்த நாள் அதே நேரத்திற்கு அதே இடத்திற்கு சென்று பார்த்தேன் ஆனால் அவள் வரவில்லை. அதற்கடுத்த நாள் அரை மணி நேரம் முன்னதாகவே சென்று காத்திருந்தேன் ஆனாலும் என் காத்திருப்பு வீண் தான்.
ஒருவேளை வழியை மாற்றி இருப்பாளோ என்று கூட நினைத்தேன். எந்த ஸ்கூல்? எந்த டுயுஷன்? என்ன படிக்கிறாள்? இப்படி எதையுமே கேட்காமல் விட்ட என் மீதே கோபம் வந்தது. கேட்டிருந்தாலும் அவள் சொல்லி இருப்பாளா என்று யோசித்த போது என் உதட்டோரம் மெல்லிய புன்னகை. அன்று தலையை தாழ்த்தியபடி அவள் இருந்த நிலை, தலையை தாழ்த்தியபடி சூரியனின் ஒளியில் மலர காத்திருக்கும் தாமரை மொட்டினை தான் எனக்கு நினைவுபடுத்தியது.
அவளை நினைத்ததும் என் முகத்தில் உதித்த புன்னகைக்கு சொற்ப ஆயுள் காலமே. அவளைப் பற்றி அறிய முடியாமல் என் தவிப்பு அதிகரிக்கவும், என் புன்னகை மறைந்தது.
விஷயத்தை அப்பா கிட்ட சொல்லி இருப்பாளா? சொல்றேன்னு தானே சொன்னா! ஆனா ஒருவேளை சொல்லலைனா! சொல்லாத பட்சத்தில், பயத்தில் அவளுக்கு பீவர் வந்து இருக்குமோ? இல்ல அந்த பன்னாடைக்கு பயந்து டுயுஷன் வராம இருக்கிறாளோ? இல்லை அந்த பரதேசியால் திரும்ப அவளுக்கு ஏதேனும் பிரச்சனை வந்து இருக்குமோ? என்றெல்லாம் யோசித்து யோசித்து என் மனம் பதைபதைத்தது.
அவள் வீடு தெரியும் என்றாலும், அவள் வீட்டில் என்ன சொல்லி இருப்பாள் என்று தெரியாமல், நான் என்னை யார் என்று சொல்வது! என்ற தயக்கமே என்னை அவள் வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்தது.
ஆனால் நான்கு நாட்களுக்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் வீட்டிற்கு செல்லும் முடிவை தான் எடுத்தேன். பைக் வாங்கிய பிறகு சில மாதங்களாக எடுக்காமல் விட்டிருந்த என் சைக்கிளை தூசி தட்டி குளிப்பாட்டினேன்.
‘என்னடா நடக்குது!’ என்பது போல் பார்த்த அம்மாவைப் பார்த்து சிறிது அசடு வழிந்தபடி, ‘ரொம்ப நாள் ஆச்சேனு சும்மா’ என்றுவிட்டு சைக்கிளில் சிட்டாக பறந்தேன்.
அவள் வீட்டின் எதிர் வீட்டு அருகே நின்று நன்றாக இருந்த சைக்கிள் செயினை எடுத்துவிட்டு சரி செய்வது போல் அவள் வீட்டை நோட்டம் விட்டேன். ஹ்ம்ஹும் அவளது தரிசனம் கிடைத்தபாடாக இல்லை.
என் நல்ல நேரத்திற்கு அந்த நேரத்தில் அந்த தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. ரெண்டு மூன்று பேர் என்னை கடந்து சென்ற போதும் என் மேல் சந்தேகம் வரலை.
அரை மணி நேர காத்திருப்பிற்கு இனிய விடையாக வெளியே வந்த ராதா செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பைப்பை கையில் எடுத்தாள். முகத்தில் தௌசண்டு வாட்ஸ் பல்ப்பின் ஜொலிப்புடன் நான் அவளை பார்த்த நேரத்தில்,
‘என்ன செய்துட்டு இருக்க?’ என்ற கறார் குரல் என் அருகில் கேட்டது.
முகத்தை பியூஸ் போன பல்ப்பாக மாற்றி நிமிர்ந்து பார்த்தேன். மீசையை முறுக்கியபடி ஐயனார் போல் நின்றிருந்தவரை பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் அதை வெளியே காட்டிக்கவே இல்லையே!
‘நானும் ரௌடி தான்’ என்ற கெத்துடன் அவரைப் பார்த்து, ‘செயின் கழண்டுருச்சு அங்கிள்.. அதான்’ என்றேன்.
‘தள்ளு நான் பார்க்கிறேன்’
‘அய்யோ எதுக்கு அங்கிள்! நானே பார்த்துக்கிறேன்’
‘நீ பார்த்த அழகை பார்த்து தான் சொல்றேன்’
‘ஹி..ஹி’ என்று அசடுவழிய சிரித்தபடி, ‘அது.. யாரும் வந்தா ஹெல்ப் கேட்கலாமேனு’ என்று இழுத்து நிறுத்தினேன்.
‘அதான் நான் உதவுறேன்னு சொல்றேன்’
‘பரவா இல்லை அங்கிள்.. நான்..’
‘தள்ளுனு சொன்னேன்’ என்றவரின் குரலில் தெரிந்த மிரட்டலில் அமைதியாக நகர்ந்து கொண்டேன்.
ரெண்டே நொடியில் செயினை சரி செய்தவர், ‘இன்னொரு முறை உன்னை இங்கே பார்த்தேன்! உன்னை உன் பேரென்ட்ஸ் ஹாஸ்பிடலில் தான் பார்ப்பாங்க.. என்ன புரிந்ததா?’ என்று மிரட்டியதும் நான் நாலா பக்கமும் தலையை ஆட்டிவிட்டு கிளம்பினேன்.
சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்த போது அவர் ராதாவின் வீட்டிற்குள் சென்றதை பார்த்ததும், ‘ஆத்தி! இந்த மீசைகார் ராதா அப்பாவா!’ என்று நினைத்துக் கொண்டேன்.
ஆதினிக்கு கதை சொல்லி தூங்க வைத்த ஐந்து நிமிடத்தில் அறையின் கதவு லேசாக தட்டப்பட்டது.
‘இவங்களை’ என்ற கடுப்புடன் கதவை திறந்த அவ்யுதகண்ணன் அன்னையை முறைத்தான்.
அவரோ அதை கண்டு கொள்ளாமல் கூடத்திற்கு சென்று மெத்திருக்கையில் அமர்ந்தார்.
மிக சிறு இடைவெளியை விட்டபடி அறையின் கதவை மூடிவிட்டு கூடத்திற்கு சென்று அவருக்கு எதிரே இருந்த மெத்திருக்கையில் அவரை முறைத்தபடி அமர்ந்தான்.
“வாட்ஸ்அப்-ல உனக்கு ஒரு பொண்ணு.. இல்ல என் மருமக போட்டோவை அனுப்பி இருக்கிறேன்” என்று தேவகி கூற,
அவரை நிதானமாக பார்த்தவன், “புது ட்ரெண்டு உருவாக்க போறீங்களா! வாழ்த்துக்கள் ம்மா.. புதுசா ஒரு மருமகளை தத்தெடுத்து இருக்கிறீங்க! தத்தெடுத்தது, மருமகளை மட்டுமா இல்லை அண்ணன் அண்ணியையுமா?” என்று நக்கலாக கேட்டான்.
‘இவன் கோபமா இருந்தா கூட எப்படியாவது குழப்பி லாக் செய்யலாம்.. ஆனா இப்படி நிதானமா இருக்கிறானே! இதுல ஓவர் நக்கல் வேற! ஹ்ம்ம்.. சமாளிப்போம்’ என்று மனதினுள் நினைத்த தேவகி அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “உனக்கு ஒரு மனைவி தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனா ஆதினிக்கு நிச்சயம் ஒரு அம்மா வேணும்” என்றார்.
அதை கேட்டு அவன் சத்தமாக சிரிக்க,
அவர் எரிச்சலுடன், “என்னடா?” என்று வினவினார்.
“யூஷுவல் டயலாக்.. குழந்தை இருந்து, ரெண்டாவது கல்யாணத்தில் விருப்பம் இல்லாதவங்களை சம்மதிக்க வைக்க பயன்படுத்தும் ஆயுதம்.. பட் என்னிடம் அது பலிக்காது” என்றபடி அவன் எழ,
“அது இரண்டாவது கல்யாணத்துக்கு மகனே!” என்றவரின் பார்வை அவனை சுட்டெரித்தது.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.