ராதா நன்றாக இருப்பதை பார்த்த பின்பும் என் மனம் அடங்க மறுத்தது. அவள் முகத்தில் தெரிந்த தெளிவு அவள் அந்த சம்பவத்தை கடந்துவிட்டாள் என்பதை எடுத்துக்காட்டியதில் மனம் நிம்மதி அடைந்தாலும், ஏனோ அவளிடம் ஒரு முறையாவது பேச வேண்டும் என்று தான் என் மனம் தவித்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு, அவள் எங்கு சென்றாலும் அப்பாவுடன் தான் சென்று வந்து கொண்டு இருந்தாள்.
ராதா மீதான அந்த உணர்வை என்னவென்று நான் ஆராயவில்லை. ஆனால் தூரத்தில் இருந்தபடியே அப்பப்ப அவளை பார்த்து மகிழ்வதை வழக்கமாக செய்து கொண்டு இருந்தேன்.
தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும், அதுவும் மறைவில் இருந்தபடி தான். பெண்ணை பெத்த எல்லா அப்பாக்களும் இப்படி தானானு எனக்கு தெரியலை, ஆனா இந்த மீசைக்கார் அநியாயத்துக்கு உஷாரான ஆள். ஒரு முறை மீசைகார் இல்லையேனு நம்ம்ம்பி கிட்டக்க போய், மீசைகார் ஜங்-னு ஐய்யனார் மாதிரி வந்து நிக்க, மயிரிழையில் நான் தப்பித்து வந்தது தனி கதை.
ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவளிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். இப்படியே சில மாதங்கள் கடந்தது.
என் நம்பிக்கை பொய்க்காமல் பலித்தது ஆனால் அந்த சந்திப்பு வலி, மகிழ்ச்சி என்று இரண்டையுமே எனக்கு பரிசளித்தது.
அன்று, என் பிறந்த நாளிற்காக என் அம்மாவுடன் எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருந்த முருகன் கோவிலுக்கு போய் இருந்தேன். கண் மூடி சாமி கும்பிட்டுட்டு கண்ணை திறந்த போது, இன்ப அதிர்ச்சியாக என் முன் கைகள் கூப்பி கண்களை மூடியபடி ராதா நின்றிருந்தாள்.
அந்த நொடி என் மனதில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எகிறி குதித்து சத்தமா கத்தனும் போல இருந்தது, ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து அமைதியாக இருந்து கொண்டேன். இருந்தாலும் புன்னகையில் என் முகம் பிரகாசிக்கத் தான் செய்தது.
‘என்ன யோசனை! தீபாராதனை எடுத்துக்கோ’ என்ற அம்மாவின் குரலில் சுயம் பெற்று தீபாராதனையை கும்பிட்டு விபூதி வாங்கிக் கொண்டேன்.
அய்யர் சன்னதி உள்ளே சென்ற பிறகே கண்ணை திறந்த ராதா விபூதிக்காக அய்யரை பார்த்தாள்.
நான் புன்னகையுடன், ‘ஹாய்’ என்றபடி விபூதி இருந்த என் கையை நீட்டினேன்.
‘உன் கிட்ட நான் கேட்டேனா?’ என்ற அறிமுகமற்ற பார்வையை அவள் பார்த்த போது நூல் அறுந்த பட்டமாக என் மனம் கீழே விழுந்தது. ஆனால் அடுத்த சில நொடிகளில் அவளது செயலில் மீண்டும் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது.
அப்போ என் அம்மா புன்னகையுடன் அவளைப் பார்த்து, ‘எடுத்துக்கோடா’ என்றதும் என் அம்மாவைப் பார்த்து மென்னகையுடன் தலை அசைத்துவிட்டு என் கையில் இருந்து விபூதியை எடுத்து அவளது நெற்றில் பூசிக் கொண்டவள் என்னிடம், ‘தேங்க்ஸ்’ என்றாள்.
மனதின் ஆர்ப்பரிப்பை மறைத்தபடி மென்னகையுடன், ‘இட்’ஸ் ஓகே’ என்றேன்.
அதன் பிறகு ஏதும் பேசிக்கலை என்றாலும் சின்ன மென்னகையுடன் லேசாக தலை அசைத்து பொதுவாக விடை பெற்று அடுத்த சன்னதிக்கு சென்றாள்.
அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை என்றதில் என் மனம் ரணமாக வலித்தாலும், இறைவன் சன்னதியில் அவள் என்னிடம் இருந்து விபூதியை பெற்றுக் கொண்டதில் என்னுள் ஒரு நம்பிக்கை. அவளுக்கு என்னை பிடிக்கும் என்ற வலுவான நம்பிக்கை என்னுள் பிறந்த நொடியில், ‘அவளுக்கு ஏன் என்னை பிடித்தே ஆக வேண்டும் என்று என் மனம் தவிக்கிறது?’ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த நொடி, என்னவள் மீதான எனது காதலை நான் உணர்ந்து புதிதாக பிறந்தது போல் உணர்ந்தேன்.
சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே அம்ரிதா கூறிய கடைக்கு வந்துவிட்ட அவ்யுதகண்ணன் கடையை நோட்டமிட்டபடி அமர்ந்திருந்தான். அங்கிருந்த 9 மேசைகளில் அவன் அமர்ந்து இருந்த மேசையை சேர்த்து நான்கு மேசைகளில் மட்டுமே ஆட்கள் இருந்தனர்.
காதலியை சாமாதானம் செய்து கொண்டிருந்த காதலன், உருகிய பனிப்பாகுவை போல் உருகி குழைந்த நிலையில் காதல் புரிந்தபடி ஒரு ஜோடி, மகிழ்ச்சி பொங்கிய நிலையில் இரு ஆண் குழந்தைகளுடன் பெற்றோர் என்று ஒவ்வொரு மேசையிலும் ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்கள் அமர்ந்து இருந்தனர்.
அனைவரையும் நோட்டமிட்டவன் ‘நாளைக்கு டாலியை கூட்டிட்டு வரணும்’ என்று நினைத்துக் கொண்டான்.
அவனை நோக்கி வந்த பணியாளரிடம், “பிரெண்ட் வரணும்” என்று கூறி அவரை அனுப்பவும் அவனது கைபேசி சிணுங்கியது.
அழைத்தது தேவகி. அழைப்பை எடுத்தவன், “உங்க கடமை உணர்ச்சி கண்டு புல்லரிக்குது” என்றான்.
“பக்கத்தில் ஆடு மாடு எதுவும் இல்லையே!”
“என் நேரம்” என்றவன், “ஐஸ் கிரீம் பார்லர் வந்துட்டேன்” என்றான்.
“பார்டா!”
“நக்கலு!”
“ச்ச.. பேரானந்தம்”
“ஓ!” என்றவன், “சட்டுபுட்டுன்னு அந்த பொண்ணை நோ சொல்ல வச்சுட்டு கிளம்பணும்ல அதான்” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற,
அவர், “அடேய்” என்று அலறினார்.
‘யாருகிட்ட!’ என்று மனதினுள் கூறியவனோ அவரிடம் அறியா பாலகனை போல், “வொய் மீ! என்னாச்சு?” என்று கேட்டான்.
‘ஓவர் விக்கலா இருக்கே! இருடா மகனே!’ என்று மனதினுள் நினைத்துக் கொண்ட தேவகி, “நீ அந்த பொண்ணை தெறிக்க விடுறதை நானும் கொஞ்சம் கேட்கிறேன்.. ஸோ நா(ன்) இப்படியே லைனில் இருக்கிறேன்.. யூ கண்டின்யூ” என்றார்.
“மீ!” என்று இப்போது அவன் அலற,
அவரோ, “என்னா தம்பி! என்னாச்சு?” என்றார் நகைச்சுவை நடிகர் வடிவேலுவைப் போல்.
‘சிக்கிடாத கண்ணா’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன், “டாலி என்ன செய்றா?” என்று பேச்சை மாற்ற,
அவரோ, “மாஷா அண்ட் பியர் பார்க்கிறா, ஸோ என்னோட எண்டர்டேன்மென்ட் நீ தான் மை சன்” என்றார்.
“இது உங்களுக்கே ஓவரா தெரியலை?”
“இல்லையே ராசா.. நீ காளை(call) கட் செய்தா, எசக்கிக்கு(அவனுக்கு கீழ் வேலை செய்பவர்) போன் போடுவேன்”
“அம்மா!”
“எஸ் மை சன்”
“நீங்க சீரியஸ்ஸா பேசிட்டு இருக்கிறீங்களா?”
“அதில் என்ன சந்தேகம்!”
“விளையாடாதீங்க ம்மா”
“நீ விளையாடிட கூடாதுனு தான் இந்த முடிவு.. அதுவும் இப்போ எடுத்த முடிவு தான்”
“அம்மா நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்”
“ஆனா நான் விளையாட்டுக்கு சொல்லலை”
“ப்ச்.. என்னமா இது? ஒரு ப்ரைவசி வேணாமா?”
“அட போடா! ஏதாவது சொல்லிடப் போறேன்”
“அம்மா!”
“பின்ன என்னடா! நீ ப்ரைவசியா பேசிட்டாலும்” என்ற போது அவனுக்கு வேறு ஒரு அழைப்பு வந்தது. காதில் இருந்து கைபேசியை எடுத்துப் பார்த்தவன், “அம்மா அம்ரிதா தான் கூப்பிடுறாங்க.. நீங்க வைங்க” என்றான்.
“வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பே இல்லை”
“அம்மா! நிஜமாவே செகண்ட் காள் வருது.. அம்ரிதா தான் கூப்பிடுறாங்க” என்று அவன் கோபத்துடன் கூற,
“என்னை ஹோல்டில் போட்டுட்டு பேசு.. பேசிட்டு என்னை அன்-ஹோல்ட் செய்.. நான் மியூட்டில் போட்டுக்கிறேன்”
“நீங்க இருக்கிறீங்களே!” என்று பல்லை கடித்தபடி கூறியவன் அவரது அழைப்பை இருப்பில் வைத்துவிட்டு அம்ரிதாவின் அழைப்பை எடுத்து பேசினான்.
“சொல்லுங்க அம்ரிதா”
“நான் அமுல் ஐஸ்-கிரீம் பார்லர் வெளியே தான் இருக்கிறேன்”
“உள்ள வாங்க.. நான் உள்ளே தான் இருக்கிறேன்”
“நீங்க எந்த கலர் ஷர்ட் போட்டு இருக்கிறீங்க?”
“வைட்” என்றவன் அவள் உள்ளே வரவும் கையை உயர்த்தி காட்டினான்.
“ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்து கைபேசியை கைபையில் வைத்தபடி அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவன் அன்னையின் அழைப்பை இருப்பிலேயே வைத்தபடி கைபேசியை சட்டைப் பையில் வைத்தான்.
பணியாளரை கண்ணசைவில் அழைத்தவன் அம்ரிதாவைப் பார்த்து, “என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டான்.
“ஒரு பிஸ்தா மில்க்சேக்” என்று அவள் கூறியதும், “ஒரு சாக்லெட் மில்க்சேக்” என்று கூறி அவரை அனுப்பினான்.
பின் அம்ரிதாவைப் பார்த்து, “ஸோ.. இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லாம தான் என்னைப் பார்க்க வந்து இருக்கிறீங்க?” என்றான்.
அவள் புருவம் சுருக்கி பார்க்கவும்,
“என் போட்டோவை கூட பார்த்ததா தெரியலையே! அதை வைத்து கேட்டேன்” என்றான் சிறு தோள் குலுக்கலுடன்.
“நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வரேன்.. உங்க கெஸ் சரி தான்.. எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை.. ஸோ நீங்க என்னை பிடிக்கலைனு சொல்லிடுங்க”
“நான் ஏன் பொய் சொல்லணும்?” என்றபோது அவனது கைபேசியில் அழைப்பு வந்தது. மகனை அறிந்தவராக தேவகி தான் அழைப்பைத் துண்டித்து, மீண்டும் அழைத்தது இருந்தார்.
‘நிஜமாவே இந்த அம்ரிதா விருப்பம் இல்லாம நோ சொன்னாலும் அம்மா நம்மளை தான் காரணம் சொல்லுவாங்க’ என்று நினைத்தாலும் அழைப்பை ஏற்காமல் கைபேசியை அணைத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.
அவனது பதிலில் தன்னுள் மூண்ட எரிச்சலை மறைத்த அம்ரிதா, “ப்ளீஸ்.. என்னால் நோ சொல்ல முடியாது.. அப்பா ஹெல்த் கண்டிஷன் அப்படி” என்றாள்.
“நீங்க இதுவரை யாரிடமும் இப்படி கெஞ்சியது இல்லைனு புரியுது பட் என்னால் பொய் சொல்ல முடியாது.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா நீங்க தான் நோ சொல்லணும்”
அதற்கு மேல் பொறுமை இல்லாதவளாக எரிச்சலும் முறைப்புமாக, “லுக் மிஸ்டர்.. உங்களுக்கு பிடிச்சு இருக்கிற இந்த புற அழகால் உங்களுக்கு எந்த யூஸும் இல்லை” என்றாள்.
“ரொம்ப தான் கான்பிடன்ஸ்!”
“எஸ்.. கான்பிடன்ஸ் தான்.. உங்களை கவருற அழகால் உங்களுக்கு எந்த யூஸும் இருக்காது”
“நான் இதை சொல்லலை”
“அப்போ!”
“அழகுனு சொன்னீங்களே! அதை சொன்னேன்”
அவள் அவனை முறைக்க,
அலட்டிக் கொள்ளாமல், “என்னை பொறுத்தவரை உண்மையான அழகு நல்ல மனசும் நல்ல குணமும் தான்” என்றவன், “இதை விடுங்க.. முதல்ல நான் எப்போ உங்களை பிடிச்சு இருக்குதுனு சொன்னேன்?” என்று கேட்டான்.
“வாட்?” என்று அவள் அதிர்ந்து தான் போனாள்.
அவனது முதல் கூற்றில் அவள் மனதினுள் அவன் மீது மிக லேசாக நல் எண்ணம் தோன்றியது, ஆனால் அவன் அடுத்து கூறிய முரணான கூற்றில் அவனை புரியாமல் சிறு அதிர்வுடன் பார்த்தாள்.
“என்ன?” என்று அவன் சிறு அலட்சியத்துடன் புருவத்தை உயர்த்தி வினவினான்.
சட்டென்று சுதாரித்தவள், “அப்போ என்னை பிடிக்கலைனு சொல்றதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.
“அதான் பொய் சொல்ல முடியாதுனு சொல்லிட்டேனே!”
“ஹே! என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்குதா?”
“இல்லையே!”
‘திமிர்!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் எரிச்சல் கலந்த கோபத்துடன் அவனை பார்த்தாள்.
“எனக்கு உங்களை பிடிக்கலைனு பொய் சொல்ல முடியாதுனு சொன்னா உங்களை பிடிச்சு இருக்குதுனு அர்த்தம் இல்லை.. எனக்கு உங்களை பிடிச்சு இருக்குனும் இல்லை பிடிக்கலைனும் இல்லை.. ஸோ என்னால் நோ சொல்ல முடியாது”
‘என்ன கொடுமை சரவணா!’ என்று மனதினுள் நினைத்தவள் ‘உஃப்’ என்றபடி தலையை இருபுறமும் ஆட்டி, மூச்சை ஒரு முறை இழுத்துவிட்டுக் கொண்டாள்.
அவனோ உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே எதையும் காட்டாத உணர்ச்சியற்ற முக பாவத்துடன் அமர்ந்து இருந்தான்.
அப்பொழுது பணியாளர் வந்து இருவருக்கும் அவர்கள் கேட்டதை வைக்க, அவள், “பில்.. தனி தனியே கொண்டு வாங்க” என்றாள்.
பணியாளர் அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு இவனை பார்க்க, இவன் தலை அசைத்து அதை ஆமோதிப்பதாக கூறினான். அந்த பணியாளரும் கட்டண இரசீதை எடுத்து வர சென்றார். இதை எல்லாம் அவள் கண்டு கொள்ளவே இல்லை.
“லுக் மிஸ்டர்..” என்று அவள் ஆரம்பிக்க,
“அவ்யுதகண்ணன்” என்று இடை புகுந்தான்.
“வாட்எவர்.. என் அப்பாக்கு ஹார்ட்டில் ப்ளாக்கேஜ் இருக்குது.. ஸ்டன்ட் வைக்கணும், அதுவும் சீக்கிரமே. அண்ட் அப்பா இதை வைத்து கார்னர் செய்து என்னை கல்யாணம் செய்துக்க சொல்றாங்க.. பட் என்னால் அது முடியாது.. ஸோ, ப்ளீஸ் கொஞ்சம் உதவி செய்யுங்க”
“குடிங்க” என்றபடி தனது பால்கலவையை(milkshake) அருந்த ஆரம்பித்தான்.
காரியம் ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவள் எரிச்சலையும் கோபத்தையும் அடக்கியபடி தனது பால்கலவையை எடுத்து அருந்த ஆரம்பித்தாள்.
நிதானமாக குடித்து முடித்தவன் பணியாளரைப் பார்த்து செய்கையில் ‘பில்’ என்றான்.
பின் அவளைப் பார்த்தவன், “ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்றீங்க?” என்று கேட்டான்.
பாதி அருந்திய பால்கலவையை மேசை மீது வைத்தவள் அடக்கப்பட்ட சீற்றத்துடன், “எந்த ஆண் மகனையும் நம்பி, அவன் கையில் என் வாழ்க்கையை தூக்கி கொடுக்க நான் தயாரா இல்லை” என்றாள்.
“நீங்க ஏன் தூக்கி கொடுக்கணும்? ஷேர் செய்துக்கலாமே!”
“என்ன!”
அப்பொழுது பணியாளர் வந்து இரு கட்டண இரசீதுகளை வைத்துவிட்டுச் சென்றார். அவளது இரசீதை அவளிடம் கொடுத்தவன் தனக்கான கட்டணத் தொகையை எடுத்து வைத்தான். அவளும் தனக்கானதை எடுத்து வைத்ததும் பணியாளரை அழைத்து கொடுத்தான்.
பின் அவளைப் பார்த்தவன், “நம்ம ரெண்டு பேருக்குமே முதல் இன்னிங்க்ஸ் சரி இல்லை.. அதில் பாதிக்கப்பட்டது நாம மட்டுமில்லை, நம்மை சார்ந்தவங்களும் தான்.. என் நிலையைப் பார்த்து என் அம்மாவும், உங்க நிலையைப் பார்த்து உங்க அப்பாவும் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. அண்ட் என் பொண்ணும் அம்மா இல்லாத ஏக்கத்தோட கஷ்டப்படுறா.. ஸோ அவங்களுக்காக, கிடைத்து இருக்கும் இந்த செகண்ட் இன்னிங்க்ஸ்ஸை ஷேர் செய்து வாழலாமே! இதோ இப்போ இந்த பில்லை ஷேர் செய்றோமே! இதே மாதிரி நம் வாழ்க்கையை கணவன் மனைவியா இல்லாம பிரெண்ட்லியா ஷேர் செய்யலாமே!” என்றான்.
ஒரு நொடி, ‘செய்யலாமோ!’ என்று யோசித்தவள் அடுத்த நொடியே மறுப்பாக தலையை அசைத்தபடி, “எனக்கு இஷ்டம் இல்லை” என்றபடி எழ,
“அப்போ உங்க அப்பா மேல் அவ்ளோ தான் பாசமா?” என்று கேட்டான்.
அவனை முறைத்தவள், “அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை?” என்றாள்.
சிறு தோள் குலுக்கலுடன், “சக மனிதனின் உயிரை பற்றிய கவலை தான்” என்றான்.
“தேவை இல்லாத கவலை” என்றுவிட்டு நகர ஆரம்பித்தவள்,
“அப்போ நீங்களே நோ சொல்லிடுவீங்க தானே!” என்றதும் சட்டென்று நின்றுவிட்டாள்.
அவனிடம் மீண்டும் ஒருமுறை கெஞ்சலாமா என்ற எண்ணத்துடன் திரும்பி பார்த்தவள், கைகளை கட்டியபடி மென்னகையுடன் தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவனை கண்டு முடிவை மாற்றியவளாக முறைப்புடன், “நானே ஹன்டில் செய்துக்கிறேன்” என்றாள்.
அவன் விரிந்த புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்று கூற, அவனை கடுமையாக முறைத்துவிட்டு சென்றாள்.
அவனோ ஆதினிக்கு ‘ஸ்ட்ராபெரி’ பனிப்பாகு வாங்கிக் கொண்டு மென்கையுடன் வீட்டிற்கு கிளம்பினான்.
குறிப்பு: இந்த எப்பி குட்டிலாம் இல்ல, முதல் இரண்டு எப்பி பெருசா வந்துருச்சு.. அவ்ளோ தான்.. ஸோ யாராவது இந்த எப்பி சின்னதுனு சொன்னீங்க! நைட் தூங்கும் போது சாமி உங்க கண்ணை குத்திங்ங்ங்ங்ங்……….