என் காதலை நான் உணர்ந்த நொடி, என் வாழ்வே வானவில்லைப் போல் வண்ணமயமாக அழகாக மாறியது. என்னுள் பிரவேசித்த பரவசத்தை வார்த்தைகளில் சொல்லிட முடியாது, அப்படி ஒரு பேரானந்தம்.
என் காதலை அணுஅணுவாக ரசித்து மகிழ்ந்த நான், அன்று முழுவதும் கண்களில் மத்தாப்பு மின்ன, இதழில் உறைந்த புன்னகையுடன் ஒரு மாய உலகில் தான் மிதந்து கொண்டு இருந்தேன்.
இத்தனை வருடங்களில் அந்த பிறந்த நாள் தான் என் வாழ்வில் மகத்தான பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டேன்.
அவள் கடவுள் எனக்காகவே படைத்த எனது தேவதைப் பெண் என்று தான் எனக்கு தோன்றியது. ஆம்! ராதா- இந்த கண்ணனின் ராதா அவள்!
அவளைப் போய் பார்த்து பேச வேண்டும் என்ற பேராவல் என்னை ஆட்டிப் படைத்தது. ஆனால் அடுத்த நாள் சற்று நிதானமாக யோசித்த போது, அவள் பத்தாவது படிக்கும் பள்ளிச் சிறுமி என்ற நிதர்சனம் என் மூளையில் உரைத்தது. என் மனதை அடக்கி நிதானத்திற்கு கொண்டு வர முயற்சித்து வெற்றியும் பெற்றேன்.
சிறிது நேரம் பலதையும் நிதானமாக யோசித்து ஆராய்ந்தேன். இறுதியில், இப்போது இருவருக்கும் படிப்பு தான் முக்கியம், அதுவும் அவளுக்கு இது ரொம்ப முக்கியமான தருணம் என்ற தெளிவு பிறக்கவும், அவளது மனதை கலைப்பது சரியே இல்லை என்ற முடிவிற்கு வந்தேன்.
அதன் பிறகு, குறைந்தது மூன்று வருடத்திற்காவது என் காதலை அவளிடம் சொல்லாமல், தள்ளி இருந்தே காதலிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடை பிடிக்கவும் செய்தேன்.
ஆனால் தினமும் அவள் பள்ளி செல்லும் போதோ டியுஷன் சென்று வரும் போதோ, அவள் அறியாமல் அவளை பார்த்து விடுவேன். மீசைக்கார் அருகில் இல்லை என்றால் பக்கத்தில் சென்று இல்லை தூரத்தில் இருந்து என்று அவளை பார்க்காமல் எனது நாட்கள் அஸ்தமித்தது இல்லை.
அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று என் மனதில் பதித்துக் கொண்டேன். தள்ளி இருந்தே அவளை உயிராய் நேசிக்க ஆரம்பித்தேன். ஆம்! நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக என் காதல் என் மனதினுள் மிக ஆழமாக வேர்விட்டு விருட்சமாக வளர்ந்து நின்றது.
இப்படியே நாட்கள் நகர, அவள் காதலியாக அல்லாமல் மனைவியாக என் மனதில் பதிந்து போனாள். ஆம்! அவள் இல்லாமல் நான் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தேன். ‘ஒருவேளை அவள் என்னை விரும்பவில்லை என்றால்!’ என்ற நிலையை யோசித்துக் கூட என்னால் பார்க்க முடியவில்லை.
அப்படியே வாரங்கள் மாதங்களாகி இரண்டரை வருடங்கள் கடந்து இருந்தது. அவள் அவளது பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயிலும், நான் மூன்றாம் வருட இன்ஜினியரிங் படிப்பை முடிக்கும் தருவாயிலும் இருந்தோம்.
இந்த இரண்டரை வருடத்தில் கிடைத்த பக்குவத்தில் ஒன்றில் நான் தெளிவாக இருந்தேன். என்ன தான் எனக்கு மனைவி என்றால் அது என் ராது மட்டும் தான் என்றதில் நான் உறுதியாக இருந்தாலும், அவள் என்னை விரும்பவில்லை என்றால் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அது தான் என் காதலுக்கு அழகு என்று நினைத்தேன். உண்மையான காதல் நாம் நேசிப்பவரின் நலனையும் மகிழ்ச்சியையும் மட்டும் தானே விரும்பும்!!
வீட்டிற்கு வந்த அவ்யுதகண்ணன் ஆதினியிடம் அவளுக்கு மிகவும் பிடித்த பனிப்பாகுவை கொடுக்க, குழந்தை உற்சாகத்துடன், “தேன்க்யூ டாடி” என்றபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு உண்ண ஆரம்பித்தாள்.
ஒரு வாய் அருந்தியதும் அடுத்த வாய் தந்தைக்கு ஊட்ட, ஒரு தேக்கரண்டி அளவு பனிப்பாகுவை எடுத்து நீட்டினாள்.
“டாடி சாப்டுட்டேன்டா தங்கம்.. பிரெண்ட்டை ஐஸ்-கிரீம் பார்லரில் மீட் செய்தப்ப சாப்பிட்டேன்.. அங்க இருந்து கிளம்பும் போது உனக்கு வாங்கிட்டு வந்தேன்”
“நீங்க சாக்லேட் தானே சாப்ட்டு(சாப்பிட்டு) இருப்பீங்க! இதை டேஸ்ட் பாருங்க”
நெகிழ்ச்சியுடன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “இவ்ளோ வேணாம்.. கொஞ்சமா கொடு” என்று கூறி அளவை மிகவும் குறைத்து ஒரு வாய் வாங்கிக் கொண்டான்.
கண்ணில் ஆர்வத்துடன், “எப்படி இருக்குது?” என்று கேட்டாள்.
தனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லை என்றாலும் கண்களை உருட்டி சப்பு கொட்டியபடி, “செம டேஸ்ட் டா” என்றான்.
விரிந்த புன்னகையுடன் உண்பதை தொடர்ந்த குழந்தை, “ஆச்சி உங்களுக்கு?” என்று கேட்டாள்.
தேவகி, “வேணாம் ராஜாத்தி.. ஆச்சிக்கு கொஞ்சம் கோல்ட் இருக்குது.. நீ சாப்பிடு” என்றதும்,
சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.
மகள் ரசித்து உண்ணும் அழகை மென்னகையுடன் ரசித்தவன், அவள் உண்டு முடித்ததும் தொலைகாட்சியை இயக்கி அவள் பார்க்கும் கேலிச்சித்திரம் வரும் அலைவரிசையை வைத்தான்.
ஆதினியோ, “டாலி அல்ரெடி டூ ஹவர்ஸ் டிவி பார்த்துட்டா டாடி.. ஸ்கூல் விட்டு வந்து ஒன் ஹவர், அப்புறம் தூங்கி எந்திச்சி ஒன் ஹவர்.. இன்னைக்கு கோட்டா ஓவர்” என்றாள் நல்ல குழந்தையாக.
“சமத்து” என்றபடி புன்னகையுடன் மகள் கன்னத்தில் முத்தமிட்டவன், “இன்னைக்கு ஒரு நாள் எக்ஸ்ட்ரா டுவென்டி டு தர்ட்டி மினிட்ஸ் எக்ஸ்ட்ராவா பாரு.. டாடி ஆச்சி கூட பேசிட்டு வந்ததும் ஹோம்-வொர்க் செய்யலாம்” என்றான்.
ஒற்றை கண்ணை சுருக்கியபடி, “டுவென்டியா? தர்ட்டியா?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்” என்று இழுத்தபடி மென்னகையுடன் லேசாக தலை சரித்து யோசிப்பது போல் புருவத்தை சுருக்கியவன், “தர்ட்டி” என்றான்.
மகிழ்ச்சியுடன், “ஹே!” என்று கத்தியபடி குதித்த குழந்தை, “தேன்க்யூ டாடி” என்றாள்.
பின், “ஆச்சி கூட பிக் பீபிள் டாக் பேசப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“எஸ் பாப்பு”
“ஓகே டாடி.. ஆனா இன்னைக்கு ஒரே ஒரு ஹோம்-வொர்க் தான்.. அது டாலி ஸ்கூல்லேயே பினிஷ் செய்துட்டா”
“சூப்பர் டாலி! ஆனா டெய்லி கொஞ்ச நேரமாவது கண்டிப்பா படிக்கணும்.. ஸோ நாம வேற படிக்கலாம்”
“ஓகே டாடி” என்று புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி காட்டியபடி கூற,
தானும் புன்னகையுடன் கட்டை விரலை காட்டியவன், மகள் தொலைகாட்சியை பார்க்க ஆரம்பித்ததும், அவளது உச்சந்தலையில் கை வைத்து லேசாக தலை மூடியை கலைத்துவிட்டு அன்னையின் அறைக்குச் சென்றான்.
அவனை தொடர்ந்து தேவகியும் அறையினுள் சென்று கதவை தாழ்பாள் போடாமல் மூடிவிட்டு மெத்தையில் மகன் அருகே அமர்ந்தார்.
அவ்யுகண்ணன் அம்ரிதாவுடன் நிகழ்ந்த உரையாடலை தேவகியிடம் கூறி முடித்ததும், அவர் நம்பாத பார்வையுடன் அவனை மேலும் கீழும் பார்க்க, அவன் அவரை செல்லமாக முறைத்தான்.
அவரோ அலட்டிக் கொள்ளாமல், “நீ பேசிய பேச்சு அப்படி” என்றார்.
“அப்போ உங்க கிட்ட ஓகே சொல்லிட்டு அம்ரிதா கிட்ட அவளே நோ சொல்ற மாதிரி சொல்லச் சொல்வேன்னு நினைச்சீங்களா?”
உதட்டை லேசாக பிதுக்கியபடி, “லைட்டா” என்றார்.
இப்பொழுது அவன் உண்மையாகவே முறைக்க,
அவரோ, “இருந்தாலும் உன்னை நம்ப கொஞ்சம் கஷ்டமா தான் இருக்குது” என்றார்.
அவரை முறைத்தபடி கைபேசியை எடுத்தவன் தெய்வநாயகத்தை அழைத்து குருநாதனின் கைபேசி எண்ணை வாங்கி அவரை அழைத்தான். அழைப்பு சென்றதும் ஒலி பெருக்கியை இயக்கிவிட்டு அன்னையைப் பார்க்க, அவரோ அமைதியாக அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.