நான் ராதா கிட்ட என்னோட மெயில் ஐடி கொடுத்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. ஆனால் அவளிடம் இருந்து எனக்கு எந்த மெயிலும் வரவில்லை. மனம் சிறு வலியுடன் சோர்ந்தாலும் முற்றிலுமாக தளரவில்லை. ஆம்! ஒரு நம்பிக்கை துளி என்னுள் இருக்கத் தான் செய்தது. ராதா என்னை நிச்சயம் தொடர்பு கொள்வாள் என்று நம்பினேன்.
வெள்ளி அன்று நான் மெயில் ஐடி கொடுத்து இருக்க, அடுத்து வந்த சனி மற்றும் ஞாயிறு அவளுக்கு கெமிஸ்ட்ரி டுயுஷன் கிடையாது. அதனால் திங்கள் அன்று தான் அவளை நான் தொடர்புகொள்ள முடியும் என்பதால் காத்திருந்தேன். அந்த இரண்டு நாட்களும் கொடுமையாக கடக்க, அவள் அறியாமல் அவளை தர்சித்தது தான் எனக்கு கிடைத்த சிறு ஆறுதல்.
திங்கள் அன்று சிறு ஆவலும் அதிக படபடப்புமாக தினு நண்பன் வீட்டிற்கு சென்றேன்.
ஆனால், அன்று டுயுஷன் வந்த போது அவளது கண்கள் என்னை தேடாததில் நான் உடைந்து போனேன். நான் மெயில் ஐடி கொடுத்து தொடர்பு கொள்ள சொன்னதில் என்னை அவள் தவறாக நினைத்துக் கொண்டாளோனு தவித்தேன். என்னை ரோட்-சைட் ரோமியோ ரேஞ்சில் சித்தரித்து விலகிட்டாளோனு துடித்தேன்.
ஆனாலும் என்னுள் ஒரு குரல் ‘எதுக்கும் அங்கே போய் பார்’னு உந்தவும், என் கால்கள் என்னை அங்கே இழுத்துச் சென்றது. அந்த மரத்துக் கிட்ட நின்று உள்ளே எட்டிப் பார்த்தேன். அவளோட கட்-ஷூ உள்ளே நான் வைத்தது போலவே ஒரு வெள்ளை காகிதம் சிறு கல்லின் அடியில் இருந்தது.
சட்டுன்னு நான் அடைந்த நிம்மதியில் என்னோட முகம் புன்னகையில் விரிந்தாலும், ஒருவேளை நான் எழுதிய காகிதம் கூட தன்னிடம் இருக்க வேண்டாம்னு நினைத்து அதை திருப்பி தந்திருப்பாளோ! என்ற எண்ணம் எழவும் என் அகமும் முகமும் பியூஸ் போன பல்ப்பாக மாறியது.
மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளே போய் அந்த காகிதத்தை எடுத்து வந்து மரத்துக்கிட்ட நின்று சற்றே நடுங்கிய கைகளால் பிரித்துப் பார்த்தேன். அதில் அவளின் கையெழுத்தை பார்த்ததும் அப்படி ஒரு ஆசுவாசம் என்னுள்.
என் நம்பிக்கையை பொய்க்காமல் அவள் என்னை தொடர்பு கொண்டதில் என் நெஞ்சம் முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் தான். ஆனால் அவ்வளவு நேரம் அனுபவித்த தவிப்பை தாள முடியாமல் அந்த காகிதத்தை அப்படியே என் நெஞ்சோடு அணைத்து கண்களை மூடியபடி மரத்தின் மீது சாய்ந்து நின்னுட்டேன்.
அந்த கடிதத்தை எடுத்து, அதில் அவளது கையெழுத்தை பார்ப்பதற்குள், கிட்டத்திட்ட நான் செத்து பிழைத்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள எனக்கு பல நொடிகள் தேவைப்பட்டது. கண்களை திறந்து மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அதை படிக்க ஆரம்பித்தேன்.
‘ஹாய்..
எங்க வீட்டில் சிஸ்டெம் இல்லை.. ப்ரௌஸிங் சென்டர் போய் மெயில் அனுப்புறதில் எனக்கு விருப்பம் இல்லை.. இதுவரை நான் ப்ரௌஸிங் சென்டர் போனதும் இல்லை. அதான் நீங்க என்னை காண்டக்ட் செய்த முறையிலேயே நானும் செய்றேன்.
முதல்ல உங்களுக்கு ஒரு பிக் பிக்க்க்க்க்க்க்க் தேங்க்ஸ்.. இப்போ எனக்கு எந்த குழப்பமும் இல்லை.. நான் என் கனவை நோக்கி பயணிக்க தயார் ஆகிட்டேன்.. எஸ்.. நான் பி.எஸ்.சி மேக்ஸ் தான் படிக்கப் போறேன்! இப்போ நான் ரொம்ப ஹாப்பி!
நீங்க சொன்ன அன்னைகே அப்பா கிட்ட பேசிட்டேன்.. நீங்க சொன்னதை தான் அப்பாவும் சொன்னாங்க.. ‘உன்னோட கனவை அழிச்சுட்டு எனக்காக தான் நீ இன்ஜினியரிங் படிச்சனு பின்னாடி என்னைக்காவது தெரிய வந்தா அப்பா எப்படிடா அதை தாங்குவேன்!’னு ரொம்ப பீல் செய்து சொன்னாங்க.. தேங்க்ஸ் அகேன்..
ஆமா உங்க நேம் என்ன? லெட்டரில் கூட எழுதலையே! அண்ட் ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறீங்க? முதலில் எழுதிய லெட்டராவது ஓகே.. முன்ன பின்ன தெரியாத பையன் கிட்ட பேசவோ, அறிவுரை கேட்கவோ விரும்பாம நீங்க சொல்ல வந்ததை கூட கேட்காம கிளம்பி போய் இருப்பேன் தான்.. ஸோ பஸ்ட் டைம் அது ஓகே.. ஆனா ஃப்ரைடே நீங்க நேரிலேயே வந்து பேசி இருக்கலாமே?
உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லவும் என்னோட ஹப்பிநெஸ் ஷேர் செய்யவும் தான் அன்னைக்கு உங்களை தேடினேன். நீங்க வரலைனு நினைச்சேன், ஆனா வந்து இருக்கிறீங்க.. வந்தும், நான் உங்களை தேடியதை பார்த்தும், நீங்க நேரில் வரலை!
எதனால் உங்களை வெளிப்படுத்த மாட்டிக்கிறீங்க? உங்களோட கண்ணியமான பேச்சில் இருந்தே உங்களோட நோக்கம் தவறானதா இருக்காதுனு எனக்கு தெரியும் ஆனாலும் எனக்கு ரீசன் தெரிஞ்சுக்கணும்.
இப்படிக்கு உங்கள் தோழி.’
அதை படித்ததும் சிரித்துக் கொண்டேன். என் ராதை புத்திசாலி என்றதில் பெருமிதமும் கூட. அவளது வார்த்தைகளில் தான் எவ்வளவு சூட்சமம்! கண்ணியம்! நோக்கம் தவறில்லை! தோழி! இதெல்லாம் வைத்து கண்ணுக்கு தெரியாத ஒரு எல்லையை எவ்வளவு அழகா வகுத்துட்டா!
குருநாதன் வீட்டு மொட்டை மாடியில் கைகளை கட்டியபடி நான்கடி சுற்று சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த அவ்யுதகண்ணன் தனதருகே நின்றிருந்த அம்ரிதாவை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
அம்ரிதாவின் பார்வையோ தென்றலுக்கு அசைந்தாடிக் கொண்டிருந்த தென்னை ஓலைகளில் பதிந்து இருந்தது. அவளது வெளி தோற்றம் அமைதியாக தெரிந்தாலும், அவள் மனமோ கடந்த கால நினைவுகளில் கடல் அலைகளைப் போல் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.
சில நொடிகள் அவளது மோன நிலையை கலையாதவன் பின், “யோசனை பலமா இருக்கே!” என்றான்.
“ஹான்! என்ன!”
“என் மிரிச்சி மிளகாவா இது!” என்று வரவழைத்த ஆச்சரிய குரலில் கூற, அவளது கண்கள் சிறு அதிர்ச்சியுடன் விரிந்து பின் சின்ன கோபத்தை வெளிப்படுத்தியது.
“ஷாக்கை குறைமா!” என்றவன் அவளது அதிகரித்த முறைப்பில், “மிர்ச்சி இஸ் பேக்(back)” என்றான்.
“முதல் சந்திப்பில் காரமா பேசலை! அது கூட பரவா இல்லை, போனில் எப்படி பொரிந்து தள்ளின! அதான் மிர்ச்சி மிளகா!” என்று கூறி புன்னகையுடன் கண் சிமிட்டினான்.
விகல்ப்பம் இல்லாத அவனது புன்னகையுடன் கூடிய கண்சிமிட்டல் அவளுக்கு குறும்பு செய்யும் மாய கண்ணனை நினைவு படுத்தியது.
லேசாக சிரித்தபடி, “உங்களுக்கு கண்ணன்னு சரியா தான் பெயர் வச்சு இருக்கிறாங்க” என்றவள், “அண்ட் யூ ஹவ் சம் மஜிக்!” என்றாள்.
அவளது முதல் கூற்றில் அழகாக சிரித்தவன் அடுத்த கூற்றில் லேசாக கண்களை விரித்து, “மஜிக்!” என்றான்.
“ஹ்ம்ம்.. உங்க கிட்ட பேசும் போது மனசு லேசா பீல் ஆகுது.. சட்டென்று மாறுது வானிலை! னு சொன்னீங்களே! அப்படி சட்டுன்னு என் மனநிலையை மாத்துறீங்க.. அண்ட் அப்பாக்கு அடுத்து நான் உங்க கிட்ட தான் கம்ஃபர்டபிள்ளா பீல் செய்றேன்.. ஆனாலும்..” என்று இழுத்து நிறுத்த,
அவன் மாறாத மென்னகையுடன், “என்னோட வேலை உன்னை தடுக்குது.. ரைட்!” என்றான்.