“எஸ்.. இதை தான் சொல்ல வந்தேன்.. அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம்.. நான் முதலில் சொல்ல வந்தது..” என்று ஒரு நொடி நிறுத்தியவள் அவன் முகத்தை பார்க்காமல், “என்னால் மனைவியா உங்களை ஸடிஸ்ஃபை பண்ண முடியாது.. ஸோ அதையும் சேர்த்து யோசிங்க” என்றாள்.
“நண்பர்களா வாழ்க்கையை ஷேர் செய்யலாம்னு சொன்னதா தான் எனக்கு ஞாபகம்”
“இப்போ எதுனாலும் சொல்லலாம்.. ஆனா அப்படியே கடைசி வரை இருக்க முடியும்னு சொல்ல முடியாதே!”
“அதாவது எனக்கு உன் உடல் மேல் ஆசை வரலாம்னு சொல்ற!” என்று அமைதியான குரலில் கூறினாலும் அதில் தெறித்த சீற்றத்தை அவளால் உணர முடிந்தது. அமைதியான குரலிலும் இத்தகைய கோபத்தை காட்ட முடியும் என்பதை அன்று தான் உணர்ந்து கொண்டாள்.
அவனது சீற்றத்தில் அதிர்ச்சியுடன் ஒரு நொடி மௌனித்து இருந்தவள் பின் சுதாரித்து அவசரமாக, “அப்படி சொல்லலை.. நான் உங்களை தப்பா சொல்லலை.. நான் மீன் செய்தது மனசை.. ஐ மீன்..” என்று சற்றே திணறியவள், “நாளடைவில் உங்களுக்கு என் மேல் காதல் வரலாம்.. அப்போ..” என்றவளின் பேச்சை மீண்டும் இடையிட்டவன்,
“ஏன் அந்த காதல் உனக்கு என் மேல் வராதா?” என்று கேட்டான்.
அவள் பெரும் அதிர்வுடன் அவனை நோக்க,
அவள் கண்களை தீர்க்கமாக பார்த்தவன், “சொல்லு.. எனக்கு உன் மேல் காதல் வர வாய்ப்பு இருக்குதுனா, அதே காதல் உனக்கு என் மேல் வரவும் வாய்ப்பு இருக்குது தானே!” என்றான்.
இப்படி சற்றும் யோசித்திறாதவள் பேச்சற்று நிற்க,
“இனி எப்போதுமே பழசை பத்தி நினைக்காத.. பாஸ்ட்(past) இஸ் பாஸ்ட்.. ஜஸ்ட் இக்னோர் இட்..
குறை சொல்றவங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க.. அதை பார்த்தா நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாது.. எப்பவோ என்னைக்கோ பார்க்கிறவங்க பேசுற பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணும்னு அவசியமும் இல்லை.. ஒவ்வொருத்தருக்கும் விளக்கம் கொடுத்துட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை விளக்கம் கொடுக்கிறதிலேயே போய்டும்.. அண்ட் நம்மளை புரிஞ்சுக்காதவங்க கிட்ட எந்த விளக்கமும் கொடுக்க தேவையும் இல்லை.. கொடுத்தாலும் அவங்களுக்கு புரியப் போறது இல்லை.. இட்ஸ் ஜஸ்ட் வேஸ்ட் ஆஃப் டைம்..
ரெண்டாவது விஷயம்.. நண்பர்களா இருக்கலாம்னு தான் சொன்னேன்.. அப்படியே பை எனி சான்ஸ் எனக்கு உன் மேல் காதல் வந்தாலும் உன்னை கணவனா நாட மாட்டேன்.. உண்மையான காதல் தன் இணையை காயப்படுத்த நினைக்காது, மகிழ்ச்சியா வச்சுக்க தான் நினைக்கும்..
ஸோ உன்னை நீயே ஸ்ட்ரெஸ் ஆகிக்காம என் கூடயும், நம்ம பொண்ணு கூடயும், அத்தை என்ற உறவில் கிடைக்கும் அம்மாவுடனும் வாழப் போகும் அழகான அன்பான வாழ்க்கையைப் பற்றி மட்டும் யோசி” என்று அழுத்தமான குரலில் பேசி முடித்தான்.
சிறு பிரம்மிப்பு கலந்த ஆச்சரியத்துடன் அவனை நோக்கியவள் அப்பொழுதும் பேச்சற்ற நிலையில் அவனை பார்த்தபடி நின்று இருந்தாள்.
அவன் அவளது முகத்திற்கு முன் சொடக்கிடவும், சுயம் பெற்றவள், “தேங்க்ஸ்” என்றாள்.
“பிரெண்ட்ஸ் குள்ள தேங்க்ஸ் சொல்ல மாட்டாங்க”
“அது பிரெண்ட்ஸ் ஆன பிறகு தானே!” எனு அவன் கூறியது போல் கூற,
அவளை லேசாக தலை சரித்து பார்த்தவனோ, “இன்னும் நாம பிரெண்ட்ஸ் ஆகலைனு சொல்றியா?” என்று சவாலிடும் குரலில் கேட்டான்.
அவள், “பிரெண்ட்ஸ் தான்” என்று உதட்டோர சிறு மென்னகையுடன் கூற,
அவன் புன்னகையுடன், “நல்லாவே சிரிக்கலாம்” என்றான்.
“ஈ” என்றபடி அனைத்து பற்களையும் காட்டி சிரித்தவள், “போதுமா?” என்றாள்.
“அய்யோ! சந்திரமுகி போய் காஞ்சனா!” என்று அவன் போலியாக அலற, முறைக்க முயற்சித்து அவளும் சிரித்துவிட்டாள்.
“குட்.. இதே சிரிப்புடன் இரு” என்றவன் அடுத்த நொடியே கிண்டல் பார்வையுடன், “ஆனா இப்படியே வெளிய சுத்தாத.. லூசுனு சொல்லிடப் போறாங்க!” என்றான்.
அவனை செல்லமாக முறைத்தவள், “அதானே! என்னடா இன்னும் மான்ஸ்டர் வரலையேனு நினைச்சேன்” என்றாள்.
“மிமி”
“உங்களை கொல்லப் போறேன்”
“அம் வெயிட்ங்”
சிறு மென்னகையுடன் தலையை இரு புறமும் அசைத்தபடி, “நீங்க இருக்கிறீங்களே!” என்றாள்.
பின், “ஆதினிக்கு இந்த மேரேஜ் பத்தி தெரியுமா?” என்று கேட்டாள்.
“இப்போ தானே மனசார ஓகே சொல்லி இருக்கிற! இன்னைக்கு பேசிடுவேன்”
“என்னை ஏத்துக்குவாளா?” என்று கேட்ட போது அவளையும் மீறி அவளது குரல் சற்றே கரகரத்தது.
“கண்டிப்பா ஏத்துப்பா”
சிறு தவிப்புடன் அவனைப் பார்த்தவள், “ஏத்துக்கலைனா?” என்று கேட்டாள்.
“ஆல்வேஸ் பி பாசிடிவ்”
“இல்ல.. அது.. எனக்கு.. எனக்கு குழந்தைனா ரொம்ப பிடிக்கும்.. ஆனா..” என்று அவள் அடுத்து பேச முடியாமல் தவிக்க,
சுற்று சுவரின் திண்டு மேல் இருந்த அவளது கை மீது தனது கையை ஆதரவாக அவன் வைக்க, நொடியும் தாமதிக்காமல் அனிச்சை செயலாக தீ சுட்டார் போல் தனது கையை உருவி கொண்டாள்.
ஆனால் அடுத்த நொடியே தனது செயலை உணர்ந்து, “சாரி” என்றாள்.
“ரிலாக்ஸ்.. ஐ..” என்றவனின் பேச்சை இடையிட்டு,
“இல்ல.. உங்க இன்டென்ஷனில் தப்பான எண்ணம் இல்லைனு எனக்கும் புரியுது பட்..” என்றவளின் பேச்சை இப்பொழுது அவன் இடையிட்டு,
“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. நான் எதுவும் தப்பாவும் எடுத்துக்கலை, ஹர்ட்டும்(hurt) ஆகலை.. ஸோ லீவ் இட்” என்றவன்,
“ஆதினி விஷயத்துக்கு வரேன்.. அம்மாக்கு ஏங்கிட்டு இருக்கிற குழந்தை.. அம்மானு முதல் முதல்ல நீ தான் அறிமுகம் ஆக போற.. ஸோ உன்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. கவலையை விடு” என்றான்.
அவள் சிறு அதிர்வுடன், “ராதா” என்று இழுத்து நிறுத்த,
“டாலிக்கு அவ அம்மா பெயர் ராதானு மட்டும் தான் தெரியும்.. போட்டோ கூட பார்த்தது இல்லை” என்றான்.
அதிர்வுடன் அவனை பார்த்தவள் மனதினுள் ஆதினியை நினைத்து பெரிதும் வருந்தினாள். குழந்தை எந்தளவிற்கு அம்மா பாசத்திற்கும், அன்பிற்கும், அணைப்பிற்கும் ஏங்கி இருக்குமோ! என்ற எண்ணம் தோன்றிய நொடி ‘இனி குழந்தையை எப்போதுமே ஏங்க விட கூடாது’ என்ற எண்ணம் அவளுள் ஆழமாக பதிந்தது. தன்னை அறியாமலேயே ஆதினியின் அன்னையாக மாற ஆரம்பித்து இருந்தாள்.
“ஏன்?” என்று கேட்டாள்.
“டாலி பிறக்குறதுக்கு முன்னாடியே நாங்க பிரிஞ்சுட்டோம்.. பிரேக்-அப் செய்தது ராதா தான்.. அதுக்கு நான் போட்ட கண்டிஷன் டாலியை என் கிட்ட கொடுத்திறணும் என்றது தான்” என்றவன், “டாலி பிறந்த ஐந்து மணி நேரத்தில் என் கைக்கு வந்திட்டா” என்றான்.
“எப்படி! எப்படி குழந்தையை தூக்கி கொடுத்தாங்க! அதுவும் பிறந்த ஐந்து மணி நேரத்தில்?” என்று பெரும் அதிர்வுடன் கேட்டவளின் மனம் ஆறவே இல்லை. ராதா மேல் கோபமும் அதிருப்தியும் ஒருங்கே பிறந்தது.
“ப்ளீஸ் அதை பத்தி நாம எப்பவுமே பேச வேண்டாமே! இப்போ அவ வேற ஒருத்தரோட மனைவி” என்றவன், “டாலி நம்ம குழந்தை.. நீ தான் அவ அம்மா.. இதை மட்டும் உன் மனசில் பதிய வச்சுக்கோ” என்றான்.
“டாலி போட்டோ இருக்கா?”
சட்டென்று இறுக்கம் தளர்ந்தவன் மென்னகையுடன் கைபேசியில் இருக்கும் மகளின் புகைப்படத்தைக் காட்டினான்.
கைபேசியை வாங்கி ஆசையாக குழந்தையின் முகத்தை ஒற்றை விரலால் வருடியவள், “அழகா இருக்கா.. அதுவும் இந்த சிரிப்பில் செம கியூட்” என்றாள்.
அந்த நொடியில், அம்ரிதாவின் மனதினுள் ஆதினி மகளாக சிம்மாசனமிட்டாள்.