ராதாவின் கடிதத்துடன் நான் தினு பிரெண்ட் வீட்டுக்கு போன போது அவன் வெளி கேட் பக்கத்தில் நின்றபடி போனில் பேசிட்டு இருந்தான்.
‘என்னடா நினைச்சுட்டு இருக்கிறீங்க! ஒரு நாளுனு தானே சொன்னீங்க! ஆனா அவன் பாட்டுக்கு வரான் போறான்.. திரும்ப வரான்.. என்னடா இதெல்லாம்! என் அம்மா கிட்ட பதில் சொல்லி முடியலைடா’ என்று பொரிந்து கொண்டு இருந்தான்.
அவனது பேச்சில் இருந்தே அவன் என்னோட வரவை பற்றி தினு கிட்ட பேசிட்டு இல்ல திட்டிட்டு இருக்கிறான்னு புரிந்தது.
தினு என்ன பதில் சொன்னானோ, அதற்கு இவன், ‘எப்படியும் பொல்லாதவன் தனுஷ் மாதிரி சும்மா நின்னு பார்த்துட்டு மட்டும் தான் இருக்கப் போறான்! அதுக்கு நான் ஏன்டா எங்க அம்மா கிட்ட பேச்சு வாங்கணும்? சப்ப பிகர்டா அது! அதுக்கு போய்….’ என்று பேசிக் கொண்டு இருந்தவன் என்னை பார்த்ததும், ‘சரி அப்புறம் பேசுறேன்டா’ என்று கூறி போனை வைத்தான்.
என்னிடம் பல்லைக் காட்டி சிரித்தபடி எதுவும் நடக்காதது போல், ‘என்ன மச்சான்! உன் ஆளை பார்த்துட்டியா?’ என்று கேட்டான்.
அவனது தோளில் கையை போட்டபடி, ‘பொல்லாதவன் தனுஷ் மாதிரி இது ரெண்டு வருஷ லவ் இல்ல மச்சி.. மூணு வருஷ லவ்.. அதுவும் இன்னும் அவ காலேஜ் படிப்பை முடிக்கிற வரை என் காதலை சொல்ல மாட்டேன்’ என்றேன்.
‘சாரி மச்சான்.. நீ இதயம் முரளினு தெரியாம மாத்தி சொல்லிட்டேன்’ என்று அவன் கிண்டலாக கூற,
நான் தோளில் இருத்த பிடியை இறுக்கி, ‘ஆனா ஒரு விஷயத்தில் நான் பொல்லாதவன் தனுஷ் தான்’ என்று கூறி என்னோட வலது கை முஷ்டியை பார்த்துவிட்டு அவனைப் பார்த்து, ‘என் ஆளை என்னன்னு சொன்ன?’னு கேட்டேன்.
‘தெரியாம சொல்லிட்டேன் மச்சி.. உன் ஆளு உலக அழகி தான்’
‘அவ அழகை பத்தி நான் உன் கிட்ட கேட்கவே இல்லையே! என் ஆளு உனக்கு யாரு?’ என்றபடி பிடியை இன்னும் இறுக்கினேன்.
‘தங்..கச்சி.. ஆ.. தங்கச்சி மச்சி’ என்றதும் பிடியை தளர்த்தியபடி, ‘ஹ்ம்ம்.. இதையே மெயின்டென் செய்’ என்றேன்.
பிறகு, ‘இன்னும் மூன்றே வாரம் தான்.. எக்ஸாம் ஸ்டார்ட் ஆனதும் டுயுஷன் வர மாட்டா.. ஸோ நானும் வர மாட்டேன்.. அதுவரை உன் அம்மாவை சமாளி.. உனக்கு சொல்லி கொடுக்க வரேன்னு சொல்லு’ என்றேன்.
‘டேய்! நீ சி.எஸ்.இ, நான் மெக்’
‘நான் சி.எஸ்.இ-னு உன் அம்மாக்கு தெரியாதே!’
‘இருந்தாலும், நான் படிக்கிறேன்னு சொன்னா, என் ஆயா கூட நம்பாதுடா’
‘என் காதலுக்கு ஹெல்ப் செய்தா, பின்னாடி உனக்கு நான் ஹெல்ப் செய்வேன்’
‘எப்பா ராசா! எனக்கு இந்த காதலே வேணாம்.. நான்லாம் சைட் அடிச்சோமா, என்ஜாய் பண்ணோமா, அடுத்த பிகரை பார்த்தோமாங்கிற டைப்.. ஆனாலும் பிரெண்டுங்கிற பெயரில் உன் கிட்ட சிக்கிட்டேன்.. ஸோ செய்றேன்.. செஞ்சு தொலைக்கிறேன்!’ என்ற போது அவன் அம்மா அவனை கூப்பிடவும்,
‘முன்னாடிலாம் லவ் பண்றவனுங்க, பிரெண்ட்டை தானேடா டார்ச்சர் செய்வானுங்க! இப்போ என்னடா புது ட்ரெண்டா பிரெண்டோட பிரெண்டை டார்ச்சர் செய்றீங்க!’னு புலம்பிட்டே உள்ளே சென்றான்.
நான் சிரித்துக் கொண்டே பதில் கடிதம் எழுத மொட்டை மாடிக்கு சென்றேன்.
‘ஹாய்..
நீ உன்னோட கனவை நோக்கி முதல் அடி எடுத்து வைத்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்.. உன்னோட துறையில் நீ சிறப்பா வர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். நீ கண்டிப்பா சாதிப்ப, எனக்கு நம்பிக்கை இருக்குது.. கீப் கோயிங் அண்ட் கீப் ராகிங்!
நான் நேரில் வந்து இருக்கலாம் தான், ஆனா என்ன தான் என்னை பிரெண்ட்டா உன் பிரெண்ட்ஸ் கிட்ட நீ சொன்னாலும் யாரும் அதை நம்ப மாட்டாங்க.. கேலியும் கிண்டுலும் தான் செய்வாங்க.. உங்க ஏஜ் அப்படி.. அதனால் தான் நேரில் வரலை.. ஏன்னா இந்த ஒன் மன்த் உனக்கு ரொம்ப முக்கியமானது.. ஸோ இந்த நேரத்தில் உனக்கு எந்த விதமான சின்ன டிஸ்டர்பன்ஸ் கூட வரதை நான் விரும்பலை.. அதுவும் என்னால் கண்டிப்பா கிடையாது.
என் பெயரை மட்டுமில்லை என்னைப் பற்றி எல்லாமே உன்னை நேரில் பார்க்கும் போது சொல்றேன்.. இப்போ உன் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்கணும் ஸோ என்னைப் பத்தி ரொம்ப யோசிக்காத.
உன் பிரெண்ட்ஸ் கிட்ட தான் ரகசியம் காக்க விரும்புறேனே தவிர உன் அப்பா கிட்ட இல்லை.. ஸோ, நீ உன் அப்பா கிட்ட என்னைப் பற்றி சொல்லலாம்.. உனக்குள் என்னைப் பற்றி யோசிக்காம உன் அப்பா கிட்ட பேசு, அப்புறம் அங்கேயே என்னைப் பற்றிய நினைப்பை விட்டுட்டு போய் படி.. உன் இலக்கு உன் கனவை நோக்கி தான் இருக்கணும்.. ஆல் தி பெஸ்ட்!
இப்படிக்கு உன் நலம் விரும்பி.’ என்று எழுதி முடித்து டுயுஷன் வீட்டிற்கு போய், அதை அவளது கட்-ஷூவில் வைத்து சிறு கல்லை வைத்துவிட்டு சென்றேன்.
வீட்டிற்கு வந்த அவ்யுதகண்ணன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, எப்பொழுதும் போல் மகளை தூக்கி போட்டு தட்டாமாலை சுற்றிவிட்டு, “இன்னைக்கு நிலாச்சோறு சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
“ஹே! ஹே!” என்று குதித்தபடி கத்தி தனது மகிழ்ச்சியை குழந்தை வெளிபடுத்தியது.
“ஓகே நான் மேல போய் இடத்தை கொஞ்சம் கிளீன் செய்துட்டு வரேன்”
“நானும்.. நானும்” என்ற மகளிடம்,
“டாலி ஆச்சிக்கு ஹெல்ப் செய்வீங்கலாம், டாடி போய் மேல கிளீன் செய்துட்டு வரேன்” என்றான்.
“நோ.. டாலி டாடி கூட”
“இலைலாம் கிடக்கும் பாப்பு.. பூச்சி இருந்தா பேபிக்கு தெரியாது.. கடிச்சிட கூடாது.. அதான் டாடி சொல்றேன்”
தந்தையை இறுக்கமாக கட்டிக் கொண்டவள், “அப்போ நிலாச்சோறு வேணாம்.. பூச்சி டாடி கடிக்கும்” என்றாள்.
“செல்லம்மா” என்றபடி மகளை உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டவன், “டாடி ஸேஃப்ஆ தான் செய்வேன்டா.. முதல்ல ஒரு பெரிய கம்பு வச்சு இலையெல்லாம் கிளறிட்டு, பூச்சி இல்லன்னா தான் அதை அள்ளி தூரப் போடுவேன்” என்றான்.
“ஹ்ம்ம்.. பி ஸேஃப் ஓகே!”
“ஷுர்” என்று கூறிவிட்டு பெரிய அரிசி சாக்குப் பையுடன் வெளியேறினான்.
முதலில் தோட்டத்திற்கு சென்று நீளமான கம்பை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.
அங்கே அவன் சென்று போது கைபேசியில் பேசிக் கொண்டு இருந்த முதல் மாடி வீட்டு யுவதியின் முகத்தில் நொடி பொழுதில் ஒரு பதற்றம் வந்து மறைந்தது.
“ஓகே பைடி.. நாளைக்கு பார்க்கலாம்” என்று கூறியபடி அழைப்பைத் துண்டித்து இவனைப் பார்த்து சிரித்தபடி, “கங்ராட்ஸ் அண்ணா.. மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கிறதா ஆன்ட்டி சொன்னாங்க!” என்றாள்.
மென்னகையுடன், “தேங்க்ஸ் மா” என்றாலும் மனதினுள், ‘மீ!!! இப்போ தானே வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னேன்! அர்ஜுன் ஸ்பீடையே மிஞ்சிட்டீங்க!’ என்று நினைத்துக் கொண்டான்.
“படிப்பெல்லாம் எப்படி போகுது?”
“அது பாட்டுக்கு ஒரு பக்கமா போகுதுணா..”
“நீ இன்னொரு பக்கமா போறியா?”
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”
“அது சரி” என்றவன், “யாரு அந்த பையன்?” என்று கேட்டான்.
“யாருணா?”
“மலர்!”
“என்.னணா?” என்று சிறிது திணறலாக கேட்டாள்.
“நான் வரும் போது யார் கிட்ட பேசிட்டு இருந்த?”
“என் பிரெண்ட் அமலா கிட்ட பேசிட்டு இருந்தேன்.. ஏன்ணா?”
“ஃபைன்.. உன்னோட போனை கொடு”
“எதுக்குணா?”
“ஜஸ்ட் ஒரு போன் பேசிட்டு தரேன்”
“அதுல பலென்ஸ் இல்லணா”
“இப்போ தானே பேசின! ஓ! பேலென்ஸ் தீருகிற அளவுக்கு பேசி இருக்க!”
“இல்ல.. அது.. அவ தான் எனக்கு போன் செய்தா”
“ஒரு பொய்யை மறைக்க, இன்னும் எத்தனை பொய்கள் சொல்லப் போற மலர்விழி?” என்று அவனது குரல் சற்றே அதட்டலாக வர,
“அண்ணா!” என்று அவள் சிறு பயம் கலந்த அதிர்வுடன் விழித்தாள்.