“சேட்டையை பார்த்தீங்களா இவளுக்கு?…” என அண்ணனும் தம்பியும் தங்கையின் பேச்சில் சிரித்துக்கொண்டனர்.
மாலை திருமொழி வரும்முன்னரே நிதர்ஷனாவின் வீட்டிலிருந்து வந்திருந்தனர் சரஸ்வதியும், கணேசனும்.
பிள்ளைகள் யாரும் உடன் இல்லாததாலோ என்னவோ இப்போதெல்லாம் கணேசன் பெரும்பாலும் மனைவியுடன் மல்லுக்கு நிற்பதில்லை.
மகளை காணவும் அவளுக்கு தாலி பெருக்கி போடும் வைபவம் பற்றி பேசவும் வந்திருந்தனர்.
திருமொழி வரும் முன்னரே பெரியவர்களிடம் சம்பிரதாயத்தை பற்றி பேசி முடித்து நாளும் குறித்தாகிற்று.
மருமகன் வந்ததும் அவனின் நலம் விசாரித்துவிட்டு மேலும் சிறிதுநேரம் இருந்தவர்கள் புறப்பட்டு செல்ல நிதர்ஷனா மாடிக்கு சென்றாள்.
அவள் செல்லும்நேரம் போனில் யாருடனோ காரசாரமான விவாதத்தில் இருந்தான் திருமொழி.
வார்த்தைகள் அத்தனை கூர்மையுடன் கோபத்தில் வந்து விழ இதை பற்றி பேச நினைத்தவள் அவனின் பார்வையை கண்டு கப்சிப்.
தன் வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு படுக்கைக்கு வந்தவன் கால், கைகளை சுருக்கிக்கொண்டு சுருண்டு படுத்திருந்தவளை சில நொடிகள் அப்படியே நின்று பார்த்தவன் தன்னிடம் என்ன பேச வருகிறாள் என யோசித்தான்.
அன்று மாலை தான் வந்ததில் இருந்து நொடிக்கொருதரம் தன் மீதான ஆச்சர்ய பார்வையை செலுத்திய மனைவியின் மீது ரசனை பிரவாகம் அவனுள்.
‘எதுக்காம் இப்படி பார்த்து வைக்கிறா இவ?’ என யோசித்தவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
என்னவென மறுநாள் கேட்டுக்கொள்வோம் என தானும் வந்து படுத்துவிட காலை அவள் கேட்காமலே திருமொழியே ஆரம்பித்தான்.
“எதுவும் கேட்கனுமா தர்ஷி? நேத்தும் வெய்ட் பண்ணின. என்னன்னு சொல்லு…” என அவனாகவே காலையில் எழுந்ததுமே கேட்க,
“நான் நானும் உங்க கூட காலேஜ் வரட்டுமா?…”என கேட்டேவிட்டாள் நிதர்ஷனா.
“வாட்?…” என அவளை விழி உயர்த்தி பார்த்தவன்,
“உன் எக்ஸாம் நாளைக்கு தானே? ஏன்?…” என்றான்.
உண்மையை சொன்னால் கத்திவிடுவானோ என பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவள்,
“இல்ல இங்க இருந்தா தூக்கம் வருது. அதான்…” என சமாளிக்க அவள் விழிகள் பொய்யென்று மெய்யை காண்பித்துக்கொடுத்தது.
“சரி கிளம்பு…” என சொல்லிவிட்டான் என்னதான் செய்கிறாள் என்று பார்க்க.
திருமொழி குளிக்க சென்றதும் தானும் வேகமாய் தயாராகி பேக்குடன் நிற்க இப்போது இன்னும் திகைத்தான்.
“எதுக்கு இவ்வளோ பெரிய பேக்?…”
“புக்ஸ், எல்லாமே புக்ஸ்…” என சொல்லியவளுக்கு அப்போதே படபடவென வந்தது.
என்ன செய்துகொண்டிருக்கிறோம் தான் என தன்னைக்குறித்தே ஒருபக்கம் கோபம்.
அந்த மிருதுளா அப்படி பேசிவிட்டால் மட்டும் அதற்காக தான் இத்தனை மெனக்கெடுவதா? என்ன சின்னப்பிள்ளை போல? என யோசித்தாலும் கணவன் என்று வருகையில் அவளால் வெறுமனே இருக்க முடியவில்லை.
வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வர நிதர்ஷனாவின் பார்வை வாசலை தாண்டும் பொழுது எதிரில் தள்ளி இருந்த அந்த வீட்டை தான் பார்த்தது.
அங்கே தான் மிருதுளா நின்றிருந்தாள் தயாராக. ஆனால் நைட்டியில் நின்றிருக்க நிதர்ஷனாவிற்கு புரிந்து போனது.
பல்லை கடித்தபடி பார்த்தவளுக்கு இதை எப்படி சமாளிக்க என்று படபடப்பும் இருக்க, கூடவே இதை இப்படியே விடக்கூடாது என்றும் தோன்றியது.
உரிமையுணர்வு. ஆம், அவனிடத்தில் எந்த நொடி துளிர்விட்டதோ இப்போது அதிகத்திற்கும் அதிகமாகவே கூடிக்கொண்டே சென்றது.
திருமொழி என்னவோ அவளுக்கு சொல்லிக்கொண்டே வந்தான். எதுவும் அவள் காதில் விழவில்லை.
யோசனைகள் எல்லாம் மிருதுளாவை எந்தவகையில் அணுகுவது என்று மட்டுமே.
கல்லூரிக்கும் வந்தாகிற்று. இன்னும் பிரம்மையில் இருப்பதை போல அவள் ஒரு உலகத்தில் இருக்க திருமொழியின் அறைக்கு வரும்வரை அப்படித்தான் இருந்தாள்.
“சாப்பிட, குடிக்க எதுவும் வேணும்னா சொல்லு. வாங்கிட்டு வர சொல்றேன். அப்பறம் லஞ்ச்க்கு நான் வீட்டுக்கு வரமாட்டேன், தெரியும் தானே? உனக்கு போரடிச்சா கிளம்பிடு. முடிஞ்சளவு இந்த முன்னாடி ரூம்லயே உக்கார்ந்து படி…” என சொல்லியவன் தன்னிருக்கைக்கு சென்றமர்ந்தான்.
இவை எல்லாம் கேட்டாலும் நிதர்ஷனா அந்த முன்னறையின் ஜன்னலில் இருந்து கல்லூரி பேருந்து வந்து நிற்குமிடத்தையே பார்த்தாள்.
“ஹாய் என்னாச்சு உனக்கு? படிக்கறேன்னு வந்துட்டு ஷர்ட் பத்தி பேசற? போய் உட்கார். தலைவலியா இருந்தா காபி சொல்றேன்…” என சொல்லி,
“டீ தானே?…” என்று கேட்டான்.
“அதெல்லாம் வேண்டாம்….”
“சரி வேற?…” திருமொழி தன் இடுப்பில் கை வைத்தபடி கேட்க,
“இந்த ஷர்ட்டை மாத்துங்களேன்…” என்றாள் நிதர்ஷனா.
“உனக்கு இது பிடிக்கலைன்னா வீட்டுலையே சொல்லியிருக்கலாமே? இப்ப ஷர்ட் மாத்துங்கன்னா? ப்ச், போய் உட்கார்….” என்று அவன் இருக்கைக்கு திரும்ப போக,
“நான் கொண்டு வந்திருக்கேன். மாத்துங்க ப்ளீஸ்…” என்றவள் சத்தத்தில் விழிகள் இடுங்க திரும்பி பார்த்தான் திருமொழி.
தனது பேக்கில் இருந்து மூன்று நிறத்திலான திருமொழியின் உடைகளை எடுத்து காண்பிக்க அவளின் பார்வையும் எதையோ உணர்த்த சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டான்.
எதையோ சொல்ல முடியாமல் அவள் தவிப்பது மட்டும் தெரிந்தது. இப்போது தான் தானாக அவனுடன் சகஜமாய் வருகிறாள்.
தான் மேலும் கேட்டு மீண்டும் அவள் பின்னடைந்துவிட அவன் விரும்பவில்லை. ஒரு பெருமூச்சுடன்,
“சரி நீயே எடு…” என மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு பார்க்க அவனின் மண்டைக்குள் சிலபல சிந்தனைகள்.
திருமொழி கேட்டதும் முகமெல்லாம் புன்னகையுடன் நிதர்ஷனாவே ஒரு சட்டையை எடுத்து தர வாங்கிக்கொண்டவன்,
“நீ போய் வெய்ட் பண்ணு. வரேன்…” என சொல்லி உடை மாற்ற சென்றான் திருமொழி.
அவன் மாற்றி வரும்பொழுது நிதர்ஷனா விழிகள் அலுவலக அறையின் ஜன்னல் வழியாக மீண்டும் பேருந்து வந்து நிற்குமிடத்தையே பார்வையிட்டது.
மிருதுளாவின் வரவை பார்த்தவளுக்குள் இப்போது அப்படி ஒரு கோபம். தாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது திருமொழி உடுத்தியிருந்த சட்டையின் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள் மிருதுளா.
முகமெல்லாம் சட்டென ஜிவுஜிவுக்க அதையே வெறித்து பார்த்தவள் பார்வை சென்ற தூரத்தில் அவளின் பின் சத்தமில்லாமல் வந்து நின்றவனும் அதை பார்த்தான்.
பார்த்தவன் உள்ளம் திடுக்கிட மனைவியின் எண்ணமும், அவளின் கண் பாஷையும் எதையோ உணர்த்தியது.
அதன் கணக்கிடலில் திருமொழி இன்னும் ஜாக்கிரதையாய் பார்த்தான் மிருதுளாவை.
நிச்சயம் நிதர்ஷனா தானாய் அப்படி எதையும் யோசிப்பவளில்லை. எங்கேயோ இதன் தீப்பொறி இருக்க இங்கே புகைவது புரிந்தது.
“நிதர்ஷனா…” என்றவனின் அழைப்பில் திடுக்கிட்டு திரும்பியவள் அவனை பார்த்ததும் புன்னகைக்க,
“ஹேப்பி?…” என்றான் கேள்வியாக.
“ஹ்ம்ம், ரொம்ப…” என சொல்லியவள் படிக்க அமர,
“நீ உள்ள வந்து அந்த சோபால உட்கார்…” என்றான் மனது கேளாமல்.