“அதான் எக்ஸாம் முடிஞ்சதே. மாமான்னே கூப்பிடு…” என அந்த மாமாவை அழுத்தி வேறு திருமொழி சொல்ல அதன் உட்பொருளில் நிதர்ஷனா இளங்கோவனை பார்த்துவிட்டு விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
“சரி என்னவோ முக்கியமான விஷயம் பேச வந்திருக்கா மருமக பொண்ணு. என்னன்னு கேளுப்பா. நான் கிளம்பறேன்…” என இளங்கோவன் எழுந்துகொண்டதும்,
“அச்சோ நீங்க இருங்க மாமா…” என நிதர்ஷனாவும்,
“சரி கிளம்புங்க ப்பா நீங்க…” என திருமொழியும் ஒரே நேரத்தில் சொல்ல,
“நான் யார் பேச்சப்பா கேட்க?…” என்றார் அவர் இருவரையும் பார்த்துவிட்டு.
“நீங்க கிளம்புங்க. நான் பேசிக்கறேன்…” என்று சொல்லிய திருமொழி இளங்கோவன் கிளம்பவும்,
“அவ்வளோ நல்ல பிள்ளையா நீ…” என்றான் நிதர்ஷனாவை சீண்டலாய் பார்த்தபடி.
“உட்கார்…” என தானும் தன் சுழல் நாற்காலியை விட்டு எழுந்து வந்து சோபாவில் தளர்வாய் அமர்ந்து அவளை அமரும்படி கண்ணசைத்தான்.
“இல்ல நான் கிளம்பனும்…” என நிதர்ஷனா தயங்கினாள்.
“முதல்ல உட்கார். அப்பறம் சொல்லு…” என சொல்லவும் அவனருகே அமர்ந்தாள் நிதர்ஷனா.
“என்ன சொல்லனும் தர்ஷி?…” என கேட்டவன் அவள் அமைதியில்,
“சரி கிளம்பனும்ன்னா கிளம்பு. வீட்டுல பார்ப்போம்…” என சொல்லி,
“அதை தான் சொல்லனும். ப்ரெண்ட்ஸ் எல்லாம் இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு வெளில கூப்பிடறாங்க…” என சொல்லிவிட,
“எங்க?…” என்றான் திருமொழி.
“தெரியலை. இன்னைக்கு லாஸ்ட் டே. எல்லாரும் இன்னைக்கு ஒருநாள் சேர்ந்து போய்ட்டு அப்படியே சும்மா ஒரு ஷாப்பிங் போய்ட்டு வரலாமேன்னு சொல்றாங்க. வெய்ட் பன்றாங்க கீழ…” என்று சொல்லிமுடிக்க,
“ஓஹ்…” என்றவன் சில நொடிகள் யோசித்தான்.
“ப்ளீஸ், இன்னைக்கு ஒரு நாள். எல்லாருமே ரொம்ப கம்பல் பன்றாங்க….”
“உனக்கு போகனும்ன்னு ஆசையா இல்லையா என்ன?…” என்றான் சிரிப்புடன் திருமொழி.
“ஆமா தான். அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போகலாமேன்னு வந்தேன்…” என எதிர்பார்ப்புடன் சொல்ல அவளின் கன்னம் கிள்ளி கொஞ்ச தான் தோன்றியது அவளின் பாவனையில்.
“காலையில நீங்க ஹால் டிக்கெட் காணும்ன்னு சொல்லி என்னை ஏமாத்தினீங்க தானே? அதுமாதிரி இப்பவும் மாத்திட்டா? அதான் ஆமாமா…” என கண்ணை மூடிக்கொண்டு வேகமாய் சொல்லியவள் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவளை முறைத்தான் திருமொழி.
“ஸாரி ஒரு ஃப்லோவ்ல…” என மெல்ல இதழசைக்க,
“கொழுப்புடி உனக்கு. கிளம்பு, அப்பறம் நிஜமாவே விடமாட்டேன்….” என அவளின் தலையில் தட்ட போனவன் மீண்டும் கைகளை இறக்கி பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்துக்கொண்டான்.
‘கொஞ்சம் நல்ல சேர்மன் தான்’ என உள்ளுக்குள் சொல்லியவள் அவனிடம் வாய் திறக்கவில்லை.
“நில்லு தர்ஷி, வெளில போனா பணம் வேண்டாமா?…” என்றவன் தனது பர்ஸை எடுக்க,
“இல்லையே. என்கிட்ட கார்ட் இருக்கு. அதுல அமௌண்ட்டும் இருக்கு. எல்லாம் என் பாக்கெட் மணி தான்…” என மறுத்தாள்.
திருமொழியின் அழுத்தமான பார்வையில் ‘இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? என் லைப் மைன்ட் வாய்ஸ்லையே போய்டும் போல?’ என மீண்டும் அவன் முன் பிடிபட்டுவிட்டதை போல நிற்க,
“ஸோ வாட்? பிடி…”என்று பணத்தை அவளிடம் திணித்தவன்,
“ஈவ்னிங் சீக்கிரம் வரனும். மொபைல்ல சார்ஜ் இருக்கான்னு செக் பண்ணிக்கோ. அப்பப்ப எங்க இருக்கன்னு எனக்கு மெசேஜ் பண்ணனும். சரியா?…” என சொல்லவும் தலையசைத்தாள்.
“கிளம்பு…” என தலையசைக்க முகம்கொள்ளா புன்னகையுடன் அங்கிருந்து கீழே வந்துவிட்டாள் நிதர்ஷனா.
அவள் சென்றதுமே சிசிடிவி கேமராவில் மனைவியுடன் யார் யார் செல்கிறார்கள் என ஒரு கவனமும் வைத்துக்கொண்டான் திருமொழி.
அவனிடம் சொல்லியது போல எங்கே சென்றாலும் அவ்விடத்தை கணவனுக்கு சரியாய் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தோழிகளுடன் நேரத்தை செலவழித்தாள் நிதர்ஷனா.
சரியாக வீடு திரும்பிய நேரம் வீட்டின் முன்பும் நின்று தான் வீட்டிற்கு வந்துவிட்டதாய் ஒரு புகைப்படமும், வீட்டின் லொக்கேஷனும் அனுப்பிவிட அதனை பார்த்த திருமொழி முகத்தில் அப்பட்டமான அழகு புன்னகை.
“சேட்டை…” என போனில் லேசாய் குட்டு வைத்துவிட்டு வேலையை பார்த்தான் திருமொழி.
அன்று ஒரு முக்கியமான நபரை சந்திக்க வேறு திருமொழி கிளம்பி சென்றிருக்க சங்கவையிடமிருந்து அத்தனை அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது.
அத்தனையும் நிதர்ஷனா தனக்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்திக்கு பத்துநிமிடத்தில் இருந்து.
வந்த வேலை முடிந்ததும் தான் சைலண்டில் போட்டிருந்த போனை எடுத்து பார்த்தான் திருமொழி.
எப்போதும் இத்தனை முறை அவர் அழைத்ததே இல்லை. இதில் இளங்கோவன் வேறு இரண்டு முறை அழைத்திருந்திப்பார் போலும்.
யாருக்கும் என்னவோ என போனை காரில் தொடர்பு படுத்தி சங்கவைக்கு அழைத்துக்கொண்டே காரை வீடு நோக்கி செலுத்தினான்.
“திரு, எங்க இருக்கப்பா?..” என சங்கவை பதட்டத்துடன் கேட்க,
“எதுவுமில்லை அத்தைன்னு அழுதுட்டே ரூம்க்கு போய்ட்டா. இந்த மிருதுளா என்னன்னா இந்த பொண்ணை சும்மா விடமாட்டேன்னு அவளும் எதுவும் சொல்லாம போய்ட்டா. எல்லாம் நம்ம வீட்டு கேட்கிட்ட நடந்துச்சு…” என்றார் அவர்.
பேசியபடியே திருமொழியும் வந்து சேர்ந்துவிட்டான் வீட்டிற்கு. சங்கவை முகம் இன்னும் தெளியாமல் இருந்தது. இளங்கோவன் இன்னும் வந்திருக்கவில்லை.
“என்ன நடந்துச்சுன்னு தெரியலை திரு. நீ அதட்டிடாத. பக்குவமா கேளு. நிது அடிக்கிறான்னா அந்த பொண்ணு மிருதுளா என்னவோ பேசியிருக்கனும். நிது முகமே சரியில்லை…” என்றார் அவர் வருத்தமாய்.
“சரி நான் பார்த்துக்கறேன். நீங்க டென்ஷன் ஆகாதீங்க…”
“இல்லப்பா, அந்த மிருதுளா அப்பா கொஞ்சம் அடிதடின்னு போற ஆள். தேவையில்லாம பிரச்சனை பண்ணிவிட்டுட்டா?…” என கவலையாய் அவர் கேட்க,
“என்ன பண்ணிடுவார்? பார்த்துக்கலாம். நீங்க இதை எல்லாம் யோசிக்காதீங்க. அப்படியே பிரச்சனை பண்ணினா உங்க மருமக பொண்ணை வச்சு இன்னும் நாலு அறை விட சொல்லுவோம்….” என அவரை சமாதானம் செய்துவிட்டு மாடிக்கு வந்தான்.
அறையில் விளக்குகள் எரியாமல் இருக்க வெளிச்சத்தை பரப்பினான் உள்ளே வந்ததும்.
திருமொழி சிலநொடிகள் அவள் முன் நின்று பார்த்தவன் எதுவும் கேளாமல் நேராக குளியலறை சென்றுவிட நிதர்ஷனாவிற்கு உதடு பிதுங்கியது அழுகையில்.
தான் செய்த செயலில் இன்னுமே நடுக்கம் குறையாமல் தான் இருந்தாள் நிதர்ஷனா.
மிருதுளா ஸ்வாதியின் நெருங்கிய உறவு வேறு. திருமொழியும், சங்கவையும் என்ன சொல்வார்களோ என அவ்வளவு அச்சமாக இருந்தது.
ஆனாலும் மிருதுளா பேசியதற்கு அவளை இன்னும் நான்கு அடி வைத்திருக்கலாம் என்னும் ஆத்திரம் மட்டுப்படவே இல்லை.
மீண்டும் கணேசனின் நினைப்பு தான். கோமகள் தங்கள் வீடு வந்தபோது தான் பேசியதை கேட்டு சென்றதற்கே அத்தனை ஆட்டம் ஆடி தன்னை அடிக்க வந்தார் கணேசன்.
இப்போது தான் செய்திருக்கும் செயலை இங்கே இந்த வீட்டினர் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றிருந்தது நிதர்ஷனாவுக்கு.
யோசித்தபடி லேசாய் அவள் கண்ணையர்ந்து போனாள். திருமொழி வரும் வரை கூட அவனை எதிர்பார்த்திருந்தவள் இப்போது வந்ததும் கண்ணை மூட சோர்வில் உறக்கம் தழுவியது.
திருமொழி குளித்துவிட்டு உடைமாற்ற வந்து அங்கேயே தனது போனில் வீட்டு கேட்டின் அருகில் என்ன நடந்தது என கவனித்துவிட்டான்.
மிருதுளாவாக தான் வந்து நிதர்ஷனாவை அழைத்து என்னவோ பேசியிருப்பது தெரிந்தது.
அதை பார்த்து பல்லை கடித்தபடி வந்தவன் இன்னும் நிதர்ஷனா சோபாவில் இருப்பதை பார்த்து அங்கே சென்றான்.
நிதர்ஷனாவின் சீரான மூச்சுக்காற்றும், தளர்ந்த கைகளும் அவளின் உறக்கத்தை தெரிவிக்க அவனின் விழிகள் நிதர்ஷனாவின் வலது உள்ளங்கையில் குவிந்தது.
“ஹேய்…” என அவளருகே சென்று கையை எடுத்து பார்க்கவும் நிதர்ஷனாவும் விழித்துவிட்டாள்.
சட்டென எழுந்தமர தானும் அவளருகே அமர்ந்தவன் அந்த உள்ளங்கையை பார்த்தான்.
நிதர்ஷனாவுமே அதை அப்போது தான் கவனித்தாள். மிருதுளாவை காதோடு சேர்த்து அடித்த வேகத்தில் அவளின் தோட்டின் கூர்மை உள்ளங்கையின் இரு விரல்கள் கிழிந்திருந்தது லேசாய்.
“ப்ச்…” என்று திருமொழி அவளின் கையை இன்னும் நன்றாக விரித்து பார்த்து,
“இப்படியா உன் கை காயப்படற அளவுக்கு அடிப்ப? அடிச்சா ஒரே அறைல அவ பல்லு பூரா உதிர்ந்திருக்கனும். அப்படி அடிக்க வேண்டாமா?…” என்றான் இலகுவாய்.
அதுவரை அழுத்தியிருந்த அச்சமெல்லாம் விலகி ஓட கண்ணீர் பொங்க திருமொழியின் கழுத்தை கட்டிக்கொண்டவள் அவன் மேல் சாய்ந்து அப்படி ஒரு அழுகை.
“ப்ச், ஒன்னுமில்லடா. நான் இருக்கேன்ல…” என மனைவியின் தலையை ஆதுரமாய் வருடியபடி கலங்கி போயிருந்தான் அவள் அழுகையில்.
வெடித்த அழுகை கொஞ்சமாய் தேம்பலாய் குறைந்ததும் தான் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
“சரி போய் முகம் கழுவிட்டு வா. கையையும் தண்ணில கழுவிட்டு வா. மருந்து போடுவோம்…” என்று சொல்ல தலையசைத்து எழுந்து சென்றாள் நிதர்ஷனா.
அவள் உள்ளே சென்றதும் தனது போனை எடுத்தவன் மிருதுளாவின் தந்தைக்கு அழைத்துவிட்டான்.
“நான் திருமொழிவர்ணன்….” என தன்னை அறிமுகப்படுத்திவிட்டு,
“நாளைக்கு ஒரு முக்கியமான விஷயமா உங்களை மீட் பண்ணனுமே? வெளில வேண்டாம். காலேஜ்க்கு வந்திருங்க….” என்று சொல்லி வைக்க நிதர்ஷனாவும் முகத்தை துடைத்துவிட்டு வந்துவிட்டாள்.
“இங்க வாடாம்மா…” என ஒற்றை கையை நீட்டி இருவிரல்களால் அவளை தன்னருகில் அழைத்துகொண்டவன் இதழ்கள் அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தது.