“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொல்லியவள் அடுத்து என்ன என கேட்பானோ என்றிருந்தது.
“சரி, நீ ட்ரெஸ் இன்னும் மாத்தலையே. போய் மாத்திட்டு வெய்ட் பண்ணு. வரேன்…” என்றவன் தாயின் அறைக்கு சென்றான்.
சங்கவை இன்னும் உண்ணாமல் இங்கே தான் பார்த்தபடி இருந்தார். மகன் வரவும் என்ன என பார்க்க,
“சாப்பிடாம என்னம்மா பன்றீங்க?…” என கேட்டான் திருமொழி அத்தனை இலகுவாய்.
“என்ன இப்படி சொல்ற திரு? என்னாச்சு பாப்பாவுக்கு?…” அவனிடம் கேட்டுக்கொண்டே பின்னால் செல்ல,
“இங்க இருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்கம்மா?…” என தேடினான் அவர் கேட்டதை கவனிக்காததை போல.
“திரு நான் என்ன கேட்கறேன்?…” என்றவர் மேலும் பேசும்முன்,
“அந்த பொண்ணு சரி இல்லை. தர்ஷிகிட்ட தப்பா வேற பேசினதால தான் அடிச்சிருக்கா உங்க மருமக. வேற என்ன தெரிஞ்சுக்கனும்?…” என கேட்க, அதற்கு மேல் ‘அவனிடம் கேட்க முடியுமா?’ என மௌனமாய் பார்க்க,
“இந்த விஷயத்தை இப்படியே விடுங்க. இனிமே அவங்க சம்பந்தம்மா யார் பேசினாலும் நீங்க பதில் சொல்லவேண்டாம். பேச்சை வளர்க்காதீங்க…” என்றவன் அவரை அழைத்து வந்து,
“சாப்பிடுங்க…” என தானும் உடன் அமர்ந்துகொண்டான்.
“செல்வாக்கா எனக்கும் கொண்டுவாங்க…” என அவருடனே உண்டு முடித்து சங்கவையை மாத்திரை போட வைத்துவிட்டு இளங்கோவனுக்கு அழைத்தான்.
“அப்பா வர டைமெடுக்கும். சாப்பிட்டாங்கலாம். நீங்க போய் தூங்குங்க…” என தந்தையிடம் பேசிவிட்டு சங்கவையிடம் சொல்லி,
“சூடா இட்லியும், கார சட்னியும் மட்டும் நிதர்ஷனாவுக்கு கொண்டுவாங்க செல்வாக்கா…” என சொல்லி அவன் செல்ல,
“இப்படி தலையும் இல்லாம வாலுமில்லாம சொல்லிட்டு போறானே?…” என சங்கவை புரியாமல் அமர்ந்திருந்தார்.
அவருக்கு விளங்கிய ஒரே விஷயம், மிருதுளாவிடம் எதுவோ தவறாக உள்ளது என்பது மட்டும்.
திருமொழி சொல்லியதை போலவே உணவை எடுத்துக்கொண்டு செல்வா வர அதை பார்த்த சங்கவை,
“வெறும் இட்லியும், சட்னியும் போதுமா? பாப்பா எண்ணெய் பொடி சாப்பிடுவா. அது வைக்கலையா?…” என கேட்க,
“தம்பி இதை மட்டும் தான் கொண்டுவர சொன்னாங்க…” என்றார் செல்வா.
“இல்ல இல்ல. சின்ன கிண்ணத்துல பொடி போட்டு எண்ணெய் ஊத்தி கொண்டு போங்க. கீழே வந்தா அவ பாட்டுக்கு நிம்மதியா சாப்பிடுவா. இவன் வேற எதுவும் திட்டிட்டானோன்னு எனக்கு படபடன்னு இருக்கு…”
சங்கவை மருமகளை எண்ணி கவலையாகி புலம்ப செல்வாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு.
அவர் சொல்லியதை போலவே எல்லாம் எடுத்துக்கொண்டு செல்வா மாடிக்கு செல்லவும் திருமொழி வந்து வாங்கிக்கொண்டான்.
“சாப்பிட்டு இங்க வச்சிருங்க தம்பி. வந்து எடுத்துக்கறேன்…” என செல்வா சொல்லி செல்ல தலையசைத்து உள்ளே வர அங்கே கட்டிலில் மருந்து போடப்பட்ட தன் கையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நிதர்ஷனா.
“தர்ஷி இங்க வா…” என சோபாவில் அமர்ந்து அவளை அழைக்கவும் எழுந்து வந்தவள்,
“பசிக்கலையே…” என்றாள் அவனிடம்.
இன்னும் முகத்தில் தெளிவில்லை. அதையும் தாண்டிய ஒரு ஒவ்வாத உணர்வு வேறு மனைவியின் முகத்தில்.
கசப்பை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும் உணர்வுகள் அப்பட்டமாய் தெரிந்தது.
தன்னிடம் எதையும் சொல்லவேண்டாம் என அவள் முயற்சிப்பதை புரிந்துகொண்டவனுக்குள் ஏகத்திற்கும் கொந்தளிப்பு.
சொல்ல முடியாதளவிற்கு என்ன வார்த்தைகளாக இருக்கும் என இங்குமங்குமாய் ஒரு யூகிப்பு வந்து சேர ஆகாததை கண்டுவிட்டதை போல திருமொழியின் முகம் அருவருத்தது.
“நான் போய் தூங்கட்டுமா?…” என மீண்டும் நிதர்ஷனா கேட்க,
“சாப்பிட்டு தூங்கு…” என்றான்.
திருமொழியின் பிடிவாதம் அவளறிந்தது தானே? விடமாட்டான், மறுத்தால் கோபம் வேறு வரும் என பார்த்தவள்,
“ஸ்பூன் எதுவும் இல்லையே. இந்த கையால சாப்பிட முடியாது…” என மருந்து பூசிய உள்ளங்கையை காண்பிக்க அவளை முறைத்தான்.
“அது எனக்கு தெரியாதா? வாயை திற. சில விஷயங்கள்ல இன்னும் நீ பாப்பா தான்…” என்றவன் தானே அவளுக்கு ஊட்ட அதில் இன்னும் கண்களை கரித்தது நிதர்ஷனாவுக்கு.
‘நீ நிஜத்துல வாழ்ற வாழ்க்கையை நான் கனவுல, கற்பனையில வாழ்ந்திட்டிருக்கேன். உனக்கு திரு புருஷன் தான். ஆனா எனக்கும் எனக்குள்ளன்றதை நீ தெரிஞ்சுக்கனுமே. இப்ப நல்லா தெரிஞ்சுக்கோ. ஒவ்வொரு நிமிஷமும் நானும் திருவும் என் மனசுக்குள்ள என் கண்ணுக்குள்ள கற்பனையில புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துட்டு தான் இருக்கோம்’ என்றிருந்தாள் மிருதுளா.
எத்தனை துணிச்சல் இருக்கவேண்டும் அவளுக்கு? சாதாரணமாக என்னவோ பேச வருகிறாள் என நினைத்து மிருதுளா அழைக்கவும் வீட்டிற்குள் நுழையவிருந்தவள் நின்று கேக்க அதில் ஆரம்பித்தது.
“எக்ஸாம் எல்லாம் முடிஞ்சது போல?…” என்று வந்து நின்றவளை என்னவென பார்த்தாலும் நிதர்ஷனா பேசவில்லை.
“எனிவே, இனி ஹவுஸ் வொய்ப் நீ…” என்று இளக்காரமாய் சொல்ல,
“அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?…” என்றாள் நிதர்ஷனா சூடாக.
“இப்ப தான் நிம்மதியா இருக்கு. கஷ்டம் இல்லை. ஆமா, நேத்து நைட் என்னை கண்டுபிடிச்சிட்ட போல?…” என்றதும் நிதர்ஷனாவின் முகம் வியர்த்து போனது.
“கிஸ் பண்ணினார் போல திரு?…” வெட்கமின்றி அவள் கேட்க நிதர்ஷனாவின் உடலெல்லாம் கூசி போனது.
“அசிங்கமா இல்லையா உங்களுக்கு? நீங்க எல்லாம்…” என்றவள் முடிக்கும் முன்,
“அப்படித்தான் பார்ப்பேன். அப்படித்தான் பார்த்துக்கிட்டே இருப்பேன். என்ன செய்வ நீ? திருக்கிட்ட சொல்லுவியா? சொல்லிக்கோ. இன்னைக்கு காலேஜ்ல திரு என்னை ஒருநிமிஷம் சும்மா பார்த்ததுக்கே எப்படி இருந்துச்சு தெரியுமா?…” என்ற மிருதுளா நிதர்ஷனாவின் அதிர்ந்த முகம் பார்த்து,
“என்ன ஷாக்கா இருக்கா? எனக்கு சந்தோஷமா இருக்கு. இப்படி அதிர்ச்சியாகியே சாவு. உன் புருஷனோட நினைப்புல நான் வாழறேன்ற எண்ணமே உன்னை நிம்மதியா இருக்கவிடாது. எனக்கு அதுதான் வேணும். இப்பவும் திருவை கல்யாணம் பண்ணிக்க எனக்கொரு சான்ஸ் இருக்குன்னு நினைக்கறேன். அதை உருவாக்க நான் என்ன வேணா செய்வேன்….”
“பெரியவங்க பேசி கல்யாணம் நடக்கும்ன்னு நான் திருவை அப்ரோச் பண்ணாம விட்டுட்டேன். அதுதான் நான் செஞ்ச முதல் தப்பு. இனி அந்த தப்பை பண்ணவே மாட்டேன். உன்னை இங்க இருந்து எப்படி விரட்டனும்ன்னு நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லியவள் மேலும் வரம்பில்லாமல் பேச சட்டென காதடைத்து தீயாய் எரிந்தது மிருதுளாவிற்கு.
“நீயெல்லாம் என்ன ஜென்மம்?…” என கேட்ட நிதர்ஷனா ஆவேசம் கொண்டு இன்னும் நான்கு அறை விட அவள் அடித்ததில் மிருதுளா தடுக்க மறந்து திகைத்து நின்றுவிட்டாள்.
“போடி என் வீட்டு வாசல்ல கூட நிக்காத. போ…” என மிருதுளாவை பிடித்து நிதர்ஷனா தள்ளிவிட,
“பாப்பா என்ன பன்ற?…” என பதறிக்கொண்டு வந்த சங்கவையின் வருகையில் தான் மிருதுளா தெளிய நிதர்ஷனா உடல் நடுங்க கண்ணில் நீர் கோர்க்க பார்த்தாள் அவரை.
“என்னம்மா?…” என நிதர்ஷனாவை கேட்க,
“என்னையே அடிச்சிட்டா இல்ல. இவளை நான் சும்மா விடமாட்டேன்…” என்றாள் மிருதுளா ஆவேசத்துடன் சொல்லிவிட்டு சென்றதும் நிதர்ஷனாவும் உள்ளே வந்துவிட்டாள்.
எப்படியான வார்த்தைகள்? அதுவும் இன்னொருத்தியின் கணவன் என தெரிந்தும் அவள் பேசியது எல்லாம் உடலெல்லாம் எரிமலை குழம்பு பூசியது போல் தகித்தது.
“ப்ச், என்ன யோசனை. கண்டதையும் நினைச்சிட்டு? வாயை திற…” என அடுத்த வாய் உணவை திருமொழி அவளுக்கு திணிக்க ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.
“வீட்டுக்குள்ள வந்த கெட்ட விஷயங்களை எல்லாம் செருப்பு மாதிரி கழட்டி போட்டுட்டு வரனும். நம்ம ரூம்க்குள்ள வந்தா நமக்கான நினைவுகளை, விஷயங்களை மட்டுமே எடுத்துக்கிட்டு வரனும். இப்படி யாரையோ நினைச்சிட்டு இருக்க கூடாது….”
உணவுடன் அவன் கண்டிப்பையும் சேர்த்து அவளிடம் தள்ளிக்கொண்டிருந்தான் திருமொழி.
“உன்கிட்ட தான் சொல்றேன் நிதர்ஷனா…” என மீண்டும் அழுத்தி சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றாள் தலையசைத்து.
“என்ன ஹ்ம்ம்? வாயை திறந்து சொல்லமாட்டியா? புருஷனை மட்டும் நினைக்கறேன்னு…” என அவளின் மனநிலையை மாற்ற சொல்ல அதில் மெல்லிய புன்னகை நிதர்ஷனா முகத்தில்.
“என்ன சொன்னீங்க?…” என்றாள் ஆர்வமாய்.
“என்னை மட்டும் நினைக்கனும்ன்னு சொன்னேன்…”
“ம்ஹூம், அப்ப சொன்ன மாதிரி…”
“புருஷனை மட்டும் நினைன்னு சொன்னேன். என்னவாம்?…” என்றான் அவளின் கன்னத்தில் லேசாய் இடித்து.
“ஒன்னுமில்லையே…” என்று கூறினாலும் அவன் சொல்லியதில் முகம் மலர்ந்தது நிதர்ஷனாவிற்கு.
“ஓகே, கொஞ்ச நேரம் நடந்துட்டு படு. எனக்கு வேலை இருக்கு. முடிச்சிட்டு வரேன்…” என்றான் திருமொழி.