தீபாராதனை காண்பித்து முடித்து தீர்த்தம் கொண்டு வந்ததும் கணேசன் தன் வீட்டினர் அனைவரும் வாங்கியாகிற்றா என எட்டி பார்க்க அங்கே பிரகாஷ் தங்கையின் நெற்றியில் வைத்திருந்த திருநீரை கைகொண்டு ஊதிவிட்டான்.
“டேய், பாப்பா…” மீண்டும் கணேசன் மகளை அழைக்க சங்கவை பக்கென்று சிரித்துவிட்டார்.
அவரின் அழைப்பிலும், சங்கவையின் சிரிப்பிலும் திரும்பி பார்த்த நிதர்ஷனா கூச்சத்துடன்,
“ம்மீ….” என தாயிடம் பல்லை கடித்தவள் கணேசனின் கையை பிடித்து அவரருகே போய் நின்றாள்.
“ப்பா வெளில என் பேர் சொல்லி கூப்பிடுங்கப்பா…” என அவரின் காதுக்குள் அவள் கிசுகிசுக்க,
“இந்த சத்தத்துல ஒன்னும் கேட்கமாட்டுதே பாப்பா…” என அதையும் சத்தமாய் சொல்ல எதிரிருந்த திருமொழிக்கு கூட சிரிப்பு வந்துவிட்டது.
இதழ்களை மடக்கி அடக்கப்பட்ட சிரிப்புடன் எதையும் முகத்தில் காண்பிக்காமல் அமைதியாய் அவன் நிற்க,
“தீர்த்தத்த வாங்காம அங்க என்ன அவனோட அரட்டை? எப்ப பாரு பேசிட்டே இருக்கறது…” என சொல்லி அவளின் கையை எடுத்து நீட்டியவர்,
“பரீட்சையில, பேங்க் எக்ஸாம்லன்னு ரெண்டுமே பாஸ் பண்ணனும்ன்னு வேண்டிக்கோ…” என்று சொல்லவும் நிதர்ஷனா கையில் தீர்த்தம் தரப்பட்டது.
அதனை கண்களில் ஒற்றி குடித்துவிட்டு தலையில் தடவிக்கொண்டவள் தலையை மட்டும் அசைத்தாள் தகப்பனுக்கு.
தான் ஏதாவது சொல்லி அதற்கும் ‘பாப்பா’ என அவர் சத்தமாய் பேசி வைத்து சங்கடமாக போகும் என வாயை மூடிக்கொண்டாள்.
“நல்லா படிக்கும் போதே இந்த பாடு. ஸ்யப்பா…” என சத்தமின்றி முணுமுணுத்தாள் நிதர்ஷனா.
“இந்த பொண்ணு தான்…” என நிதர்ஷனாவை காண்பிக்க அவளை பார்த்ததும் ஸ்வாதி தன் அண்ணனை உடனே பார்த்தாள்.
இளங்கோவனிடம் என்னவோ பேசிக்கொண்டிருந்தவன் தங்கையின் பார்வையில் அவள் புறம் திரும்பி புருவம் உயர்த்த,
“ஒண்ணுமில்லை ண்ணா…” என்று கப்சிப்.
“உனக்கு காமிச்சா பேசாம இருக்கமாட்டியா?…” என சங்கவை மகளை கடிந்துகொண்டார்.
இவர்களின் சம்பாஷனை புரிந்ததோ இல்லையோ, அந்த பார்வையின் குறுகுறுப்பில் நிதர்ஷனா தான் நெளிந்தாள்.
‘இவங்களுக்கு எல்லாம் ஒருவேளை உள்ளுக்குள்ள கோவமோ. நாம முதல்ல இடத்தை காலி பண்ணனும்.’ என எண்ணியவள்,
“ம்மீ போவோமா?…” என கேட்டாள் சரஸ்வதியின் முழங்கையை சுரண்டி.
“இன்னும் சாமி பாதத்துல இருந்து பிரசாதமும், நம்ம பூஜை கூடையும் வரலை. இரு. நல்லவேளை இந்ததடவை சாமியை பூரண அலங்காரத்தோட கூட்ட நெரிசல் இல்லாம பார்த்தாச்சு. மனசுக்கு திருப்தியா இருந்தது…” என பக்தி மயமாகி போனார்.
மீண்டும் நிதர்ஷனா மெல்ல எதிரிருந்தவர்கள் பக்கம் விழி உயர்த்த ஸ்வாதி தான் அவளை இப்போது பார்த்தது.
“என்ன?…” என ஸ்வாதி தலையசைத்து கேட்டு விட அதை கவனியாததை போல சட்டென பார்வையை திருப்பிக்கொண்டவள்,
“அண்ணா டேய்…” என பிரகாஷின் பக்கம் வந்து நின்றுகொண்டாள் நிதர்ஷனா.
அவளின் செய்கையில் சங்கவை, ஸ்வாதி இருவருக்குமே புன்னகை. ஆனால் பெரிதாய் காண்பித்துக்கொள்ளவில்லை.
“என்ன நடக்குது இங்க? யார் அந்த பொண்ணு?…” என மனைவியை கவனித்து பாலாஜி கேட்க சட்டென சுதாரித்தாள் ஸ்வாதி.
“அவங்க இந்த ஊர் பேங்க் மேனேஜர் குடும்பம். அதை தான் அம்மா சொல்லிட்டிருக்காங்க. புதுசா தெரிஞ்சாங்களா. யார்ன்னு நான் கேட்டுட்டு இருந்தேன். அந்த பொண்ணு ட்ரெஸ் நல்லா இருக்கேன்னு பார்த்தா பின்னாடி போயிருச்சு…” என சமாளித்தாள்.
“ஹ்ம்ம், சரி சரி. கிளம்புவோமா? ஊர்கோலம் ஆரம்பிச்சிட்டா கிளம்ப முடியாது. கோவிலுக்கு வெளில இன்னும் கூட்டம் அதிகமாகிடும் ஸ்வாதி…” என்றான் பாலாஜி.
“கிளம்பவேண்டியது தான். மத்ததை எல்லாம் அண்ணனும், அப்பாவும் பார்த்துப்பாங்க…” என்றவள் சங்கவையிடம் சொல்ல அவரும் தலையசைத்தார்.
அதற்குள் கணேசனும் குடும்பத்துடன் பூஜை கூடையையும், சாமி பாதத்தில் இருந்த மாலையையும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
நிதர்ஷனாவிற்கு யாரோ தன்னை பார்ப்பதை போலவே இருப்பதை உணர்ந்தாலும் திரும்பினாள் இல்லை.
“கண்டிப்பா அந்தம்மாவும், பொண்ணும் தான் பார்க்காங்க போல. அவங்க பொண்ணுக்கிட்ட சொல்லியிருப்பாங்களோ? ம்ஹூம், திரும்பி பார்க்கவே கூடாது…” என்றபடி அவள் வேகமாய் முன்னே நடக்க,
“யார்க்கிட்ட தனியா பேசிட்டு போற நிது? எல்லாரோட சேர்ந்து வா….” என்று அவளின் கையை பிடித்து நிறுத்தினான் ஸ்ரீதர்.
கிளம்பி செல்லும் அந்த குடும்பத்தையும் நிதர்ஷனாவையும் பார்த்தபடி இருந்த திருமொழிக்கு ஆச்சர்யம்.
இதற்கு முன்பும் கணேசன் குடும்பத்தினர் வருடாவருடம் திருவிழாவிற்கு கோவிலுக்கு வருபவர்கள் தான்.
ஆனால் ஒருமுறை கூட கணேசனை தாண்டி எவரையும் கவனித்ததில்லை திருமொழி.
இந்தமுறை தன் கவனத்தில் பதிந்ததோடு அவள் தன் தாயை கண்டதும் பதறி நின்றதும், கணேசனின் அழைப்பில் கூச்சத்துடன் நெளிந்ததும் என பார்த்தவன் ஆழ்ந்த மூச்செடுப்புடன் தலையை உலுக்கிக்கொண்டான்.
“திரு அம்மாவையும், தங்கச்சியையும் வீட்டுல விட்டுடுவோம் ப்பா…” என்று சொல்லவும்,
“பண்ணிடலாம் ப்பா…” திருமொழியும் அவர்கள் புறம் திரும்பினான்.
“மாமா நான் கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன்…” என கிளம்பினான் பாலாஜி.
“நீங்க இருங்க. நான் போய்ட்டு வரேன் மாப்பிள்ளை….” திருமொழி சொல்ல,
“இல்லை மச்சான், நீங்க இங்க இருங்க. கொஞ்சநேரத்துல சாமி வீதி உலா கிளம்பும். நீங்க இருக்கனும் இல்லையா? நான் விட்டுட்டு வரேன்….” என்று சொல்லிவிட்டு அவர்களை பாதுகாப்பாய் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் பாலாஜி.
கோவிலை விட்டு கார் நகர்ந்ததும் செல்லும் வழியில் ஸ்வாதி தான் சொல்லிக்கொண்டே வந்தாள்.
“மதியம் வரை இருந்துட்டு இப்ப இல்லாம கிளம்பிட்டாங்களே? நீங்களாவது சொல்லியிருக்க வேண்டாமா அத்தைக்கிட்ட?…” என கேட்டுக்கொண்டே வர,
“சொல்லியாச்சு ஸ்வாதி. கிளம்பனும்ன்னு நிக்கறாங்க. அங்க வேலை இருக்குன்னு. என்ன செய்ய?…” என்றான் பாலாஜி சலிப்புடன்.
அன்று காலை தான் தேரோட்டத்தின் பொழுது வந்திருந்தார்கள் பாலாஜியின் தாயும், தந்தையும்.
வந்தவர்கள் காலை கோவிலுக்கு வந்துவிட்டு மதியம் வரை மட்டுமே இருந்துவிட்டு மதிய விருந்து முடிந்ததும் கிளம்பி சென்றனர்.
சுசீலாவிற்கு ஆதங்கம். மகன் தன்னை பேசிவிட்டானே என்று. அதனை சம்பந்தி வீட்டிடமும், மருமகளிடமும் காண்பிக்க முடியவில்லை.
தன் சித்தி மகள் என்றாலும் சாவித்திரி அவரின் உடன் பிறப்பு போல தான். மிருதுளா தனக்கு ஒரு மகளை போல தான்.
அந்த ஒரு பாசத்தில் தான் சாவித்திரி மிருதுளாவிற்கு திருமொழியை பேசலாம் என்றதும் அத்தனை சந்தோஷித்து போனார்.
மிருதுளாவை மறுக்க சம்பந்தி வீட்டில் காரணங்கள் எதுவும் இல்லை என்பதாலும், தான் பெண்ணை எடுத்தவர்கள், தங்களின் பேச்சிற்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதாலும் அத்தனை நம்பிக்கை கொடுத்துவிட்டார்.
மகனிடமும் இதனை வாய்வார்த்தையாக பேச்சுவாக்கில் சொல்லிவைக்க அன்றே அத்தனை கடிந்துவிட்டான் மகன்.
இதில் திருமொழி இளங்கோவனுடன் முறையாக வந்து திருவிழாவிற்கு அழைத்து சென்றிருக்க அன்று சாவித்திரியும் அங்கே தான் இருந்தார்.
இளங்கோவன் மரியாதைக்கு அவரையும் சேர்த்து திருவிழாவிற்கு அழைக்க திருமொழி பாலாஜியையும் அவனின் பெற்றோரையும் மட்டும் அழைத்தான்.
“ஒருவார்த்தை திரு சாவித்திரியை வர சொல்லியிருந்தா சாவித்திரிக்கு எவ்வளோ மதிப்பா இருந்திருக்கும், ரொம்ப சங்கடப்பட்டு போனா…” என்று ஆரம்பித்துவிட்டவர்,
“மெனெக்கெட்டு மிருதுவை பார்க்க போயிருந்த சாவி நம்ம ஸ்வாதியையும் சேர்த்து போய் பார்த்திட்டு வந்திருக்கா. நமக்காக தான பாலா?…” என்றார் மகனிடம். சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன்,
“இப்ப மிருதுவை பொண்ணு எடுத்தா தான் என்ன? நல்லா படிச்சிருக்கா. அழகான பொண்ணு. நம்மளை மாதிரி வசதி. ஏன் எடுக்கறதுல என்ன தப்பு?…” என்று கேட்க,
“இதென்ன உங்க மகன் கல்யாணமா நீங்க முடிவெடுக்க? எல்லாம் இருந்துட்டா சரியாகிடுமா? முதல்ல கட்டிக்க போறவங்களுக்கு பிடிக்கனும். மிருதுவுக்கு பிடிச்சா போதுமா? திருவுக்கும் பிடிக்கனும். அவர்கிட்ட அவங்க பேமிலி பேசிப்பாங்க. இனி இதை பேசக்கூடாது நீங்க…” என்று முடிவாய் சொல்லிவிட்டான் அவன்.
அதில் சுசீலாவிற்கு அத்தனை மனவருத்தம். தன் மகனின் திருமணத்தின் போதே சாவித்திரியை தான் உடன் வைத்துக்கொண்டு எல்லாம் செய்தது.
சங்கவைக்கும் நன்றாகவே தெரியும் சுசீலா, சாவித்திரி இருவரின் பிணைப்பு. அப்படி இருக்க தன் சம்பந்தி தன் தங்கையை அழைக்காமல் செல்வதா என்று சுசீலா முகத்தில் பெரிதாய் சந்தோஷமே இல்லை.
ஆனாலும் சென்ற இடத்தில் சங்கவை சாவித்திரியை பற்றியும் விசாரிக்க அகமகிழ்ந்து போனார் சுசீலா.
சங்கவையும் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் மாமியாரின் முகத்தை வைத்து ஸ்வாதி என்னவோ என கண்டுகொண்டாள்.
தனியாக கணவனிடம் கேட்கவும் நேரம் அமையவில்லை. பாலாஜியும் எதுவும் ஸ்வாதியிடம் இப்போது சொல்லி வருத்தப்படுத்தவேண்டாம் என விட்டுவிட்டான்.
வீட்டில் வந்து விட்டு சென்றவன் மீண்டும் திருமொழி, இளங்கோவனுடன் வீடு திரும்ப நள்ளிரவானது.
மறுநாளும் கல்லூரி விடுமுறை நாள் தான் என்பதால் திருவிழாவை சிறப்பாக முடித்துவிட்ட களைப்புடன் வந்தமர அதிகாலையில் ஸ்வாதிக்கு பிரசவ வலி எடுத்துவிட்டது.
அழகாய் ஆண்குழந்தை பிறக்க யாருக்கு எப்படியோ மிருதுளாவிற்கு அத்தனை சந்தோஷமும், ஆர்ப்பரிப்பும் தான்.
இனி என்ன, அடுத்து பிள்ளையை அனுப்பிவிட்டு திருமொழிக்கு திருமண வேலை தான் என பூரித்து போனாள் மிருதுளா.
சுகபிரசவம் என்பதால் மறுநாளே ஸ்வாதியை வீட்டிற்கு அனுப்பிவிட தன் தாயுடன் பரிசுப்பொருளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள் மிருதுளா.
சுசீலாவிற்கு பெருமை தாங்கவில்லை. ‘பார்த்தீர்களா என் தங்கையை, தங்கை மகளை’ என்று மகிழ்ந்து போனார்.
சங்கவையும், ஸ்வாதியும் எப்போதும் போல வரவேற்க திருவும் வீட்டில் தான் இருந்தான் அந்த சமயம்.
“எங்க ஸ்வாதி உன் அண்ணனை காணும்?…” என சுசீலா கேட்க,
“அண்ணா அவங்க ரூம்ல இருக்காங்க அத்தை. வேலையா இருப்பாங்க போல. இல்லைன்னா இங்க தானே இருப்பாங்க…” என அடுத்து அவர் என்ன சொல்வார் என்று அதற்கும் சேர்த்தே பதில் சொல்லிவிட்டாள்.
“சாப்பிடும் போது வருவான். நீங்க காபி எடுத்துக்கோங்க…” என்றார் சங்கவை வந்தவர்களிடம் உபசரிப்பாக.
ஸ்வாதிக்கு தான் சற்று நேரத்திற்கெல்லாம் எரிச்சல் மண்டியது. மிருதுளாவின் பார்வை நொடிக்கொருதரம் மாடிப்படிக்கு செல்வதும் குழந்தையை பார்ப்பதுமாக இருந்தது.
‘இவ என்ன என் பிள்ளையை பார்க்க வந்தாளா? என் அண்ணனையா?’ என கடுப்பாகி போனாள்.
ஆனாலும் வீட்டிற்கு வந்தவர்களுக்கு முகம் காண்பிக்க முடியாதே? அது பண்பல்ல என்று பொறுமையை இழுத்து பிடித்தாள் ஸ்வாதி.
வெகுநேரம் வரை இருந்துவிட்டு தான் புறப்பட்டார்கள் மிருதுளாவும், சாவித்திரியும்.
“அவசரமா என்ன உதவி வேணும்னாலும், ஸ்வாதிக்கு பொழுது போகலைன்னாலும் எப்பவேணாலும் மிருதுவை கூப்பிடுங்க. எதிர்த்தாப்ல தானே இருக்கா அவளும்…” என சாவித்திரி சொல்ல,
“சந்தோஷம்ங்க. ஆனாலும் வேலைக்கு போற பொண்ணை தொந்தரவு செய்ய முடியுமா? இங்க எல்லாத்துக்கும் ஆளுங்க இருக்காங்க. அதனால பிரச்சனை இல்லை…” என சாதாரணமாக தான் சங்கவை கூறினார்.
அதுவே சாவித்திரி, மிருதுளாவிற்கு என்னவோ போலானது. வேறு ஒன்றும் பேசமுடியாமல் கிளம்பி சென்றனர்.
காலமும் நேரமும் இழுத்த இழுப்பிற்கு அவர்களை கொண்டு செல்ல இதோ ஸ்வாதியை மீண்டும் புகுந்த வீட்டிற்கு திருப்பூருக்கு அழைத்து சென்றாகிற்று.
அடுத்த கல்வியாண்டும் ஆரம்பித்துவிட திருமொழியின் சொல்லுக்கிணங்க இன்னும் சங்கவை மகனிடம் திருமண பேச்சை கொண்டுசெல்லவில்லை.
ஒருசில ஜாதகங்கள் கோமகள் மூலமாக வந்திருந்தாலும் தனக்கே திருப்தி இல்லாததை எப்படி மகனிடம் காண்பிக்க என அடுத்து அடுத்து பார்த்துக்கொண்டிருந்தார்.
மிருதுளாவை பற்றி மகனிடம் கேட்போம் என்றால் மகள் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றாள்.
அன்று திருப்பூருக்கு பேரனையும், மகளையும் பார்ப்பதற்கு வந்திருந்தார் சங்கவை.
இப்போது கால்கள் சரியாகி எதன் உதவியின்றும் இயல்பாக நடக்க ஆரம்பித்துவிட்டார் அவர்.
அதனால் அதிகமாகவே வெளி பயணங்களை தொடர இதோ மகனுடன் திருப்பூர் விஜயம்.