அறைக்குள் இருந்தவளின் முகம் வழக்கத்திற்கு மாறாக வியர்த்திருந்தது. அறை ஒன்றும் அத்தனை மோசமில்லை. மிக நேர்த்தியான அறை. அறை முழுவதும் சுகந்தமான வாசம் வீச அதை சுவாசித்து அனுபவிக்க கூட இயலவில்லை அவளால்.
“ஹாய் என்ன பண்ற?” கேட்டபடியே கதவை சாத்தினான் அவன். அவன் குரலில் திடுக்கிட்டவள் பட்டென்று எழுந்து நின்று கொண்டாள்.
“ஹேய் ! இது என்ன ஸ்கூல் பொண்ணாட்டம்?” என சிரித்தவன் ,”அஃப்கோர்ஸ் ஸ்கூல் கோயிங் கேர்ள் மாதிரி தான் இருக்க…!”என்று முணுமுணுக்க, அவளோ அதே நிலையில் நின்றாள்.
‘இவங்க என்ன இவ்வளவு சாதாரணமா பேசுறாங்க?’ என்று நினைத்துக் கொண்டவள், காலையில் நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு வந்தாள்.
திருமண மண்டபத்திற்கே உரிய பரபரப்புடன் இருந்தது அந்த மண்டபம். வந்து கொண்டிருந்த ஒவ்வொரு உறவினரையும் , நண்பர்களையும் , அக்கம் பக்கத்தினரையும் முகம் மலர வரவேற்றுக் கொண்டிருந்தனர் மணமக்கள் வீட்டார்.
“ஏய் கிங்கரா !,உன்னை அவங்களுக்கு டீ குடுக்க சொல்லி எவ்வளவு நேரம் ஆகிடுச்சு?, என்ன தான் பண்ற.? இப்போ அலங்காரம் ரொம்ப தேவையா உனக்கு” கனத்த உடம்பு கொண்ட அந்த பெண்மணி ஒரு இளம்பெண்ணை திட்ட அவளோ படபடவென்று ஓடி வந்தாள்.
“நான் அரை மணி நேரம் முன்னாடி தான் தந்தேன் பெரியம்மா.” என்றாள் தாவணி முந்தானையை நிமிண்டியபடி.
“ஏன் அரை மணி நேரம் முன்னாடி குடிச்சா மறுபடியும் கேட்க மாட்டாங்களா…?,போய் குடு போ” என்று அதட்ட ,”இதோ போறேன் பெரியம்மா “என்றவளின் குரல் சற்று சுணங்கி தான் இருந்தது.
“ஏன் பெரியம்மா அவளை சத்தம் போடுறீங்க?” மணப்பெண் மெல்லிய குரலில் கடிந்து கொள்ள
“இப்ப அவ மொகத்த அலங்காரம் பண்ணி என்ன செய்ய போறா…? பண்ணா மட்டும் அப்படியே ஜொலிச்சிடுவாளாக்கும். நீ சீக்கிரம் மேக்கப் பண்ணுடி , அங்க ஐயர் எல்லாம் ரெடி பண்ணிட்டாரு” என்றார் அந்த பெண்மணி.
அதன் பிறகு கிங்கரா, கிங்கரா என்ற அழைப்பு தான் அவள் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. அத்தனை அழைப்புகளிலும் ஏதேனும் ஒரு வேலை தொற்றிக் கொண்டு தானிருந்தது.
வியர்த்து விறுவிறுத்து வந்தவளை பார்க்கவே பாவமாக இருந்திருக்கும் சகமனிதர்களுக்கு. ஆனால் அந்த அறையில் இருந்த மணமகளைத் தவிர்த்து ஒருவருக்கும் அவளைப் பார்த்து பாவப்பட வேண்டும் என்று தோன்றவில்லை. மாறாக இன்னும் என்ன வேலை வைக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தனர்.
“கிங்கரா அந்த டேபிள் ல இருக்க நெயில்பாலிஷை எடுத்து குடு. ஷேட் அழிஞ்சிடுச்சு” என்று கேட்டாள் பத்து வயது சிறுமி.
“ஏய் !,உனக்கு அதை கை நீட்டி எடுக்க முடியாதா…!?, நானும் பார்த்துட்டே இருக்கேன் ஆளாளுக்கு அதட்டி உருட்டிட்டு இருக்கீங்க அவளை. ப்ரகா நீ போய் முகத்தை கழுவிட்டு வா. ரெடி ஆகு, இதுக்கு மேல யாராச்சும் அவளை கூப்பிட்டிங்க நடக்கறதே வேற” என்று சத்தமிட்டு விட்டாள் மணப்பெண்.
“என்ன அண்ணியாரே இவ்வளவு சத்தம்?” என கேட்டபடி வந்தான் மணமகனின் தம்பி.
“ஒண்ணுமில்லப்பா ப்ரகாவை கிளம்ப சொல்லிட்டு இருந்தேன். வாங்க உட்காருங்க” இயல்பாய் எழுந்து நாற்காலியை நகர்த்திப் போட்டாள் மணப்பெண் தருணி.
ப்ரகாவோ வேகமாக குளியலறைக்குள் நுழைந்து கொள்ள ,மற்ற பெண்களோ அங்கேயே அமர்ந்து வந்தவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“வேலை நிறைய இருக்கு அண்ணியாரே…!அதுக்குள்ள உங்களுக்கு கிஃப்ட் தந்திடலாம் னு ஓடி வந்தேன்” என்றபடி ஒரு பரிசுப் பொதியை நீட்டினான்.
“பிரிச்சுப் பார்க்காமலேயே நன்றி சொல்றீங்க” என்றவன்,” அப்புறமா பிரிங்க பாய் “என்று போய் விட்டான்.
“அக்கா உன் கொழுந்தன் செம ஸ்மார்ட். ஆமா எங்களுக்கு இன்ட்ரோலாம் தர மாட்டியா?” என்று கேட்க
“எதுக்கு நல்லப் பையன் உங்களைப் பார்த்து கெட்டுப் போகவா?”என்று கிண்டல் செய்தாள் தருணி.
அதற்குள் ப்ரகா வந்து விடவே, அழகுநிலையப் பெண்ணிடம் கூறி அவளுக்கு அலங்காரம் செய்து விடும்படி கூற மறுக்காமல் அமர்ந்து கொண்டாள்.
“இப்ப என்னத்துக்கு இவளுக்கு மேக்கப்பு?” என்று நொடித்தபடி வந்தார் அந்தப் பெண்மணி மீண்டும்.
“ஏன் எல்லாரும் தான் போட்ருக்காங்க. அவளும் போடட்டும்” என்றாள் தருணி.
“அவங்க எல்லாம் நல்லா செவப்பா அழவா இருக்காங்க, இதுக்கு என்ன இருக்கு போடுது” என பட்டென்று சொல்லி விட ப்ரகாவிற்கு முகமே வாடிப் போனது.
சட்டென்று எழுந்து நின்று விட்டாள்.
“பெரியம்மா!!” என்று கண்டனக் குரலில் தருணி அழைக்க, அதைக் கண்டு கொள்ளாதவராய் ,”போய் தாம்பூலப்பை போடு கிங்கரா, கல்யாணம் முடியவும் வந்தவங்களுக்கு தரணும்” என்று அனுப்பி வைத்து விட்டார்.
“சரி பெரியம்மா” என்ற தலையாட்டல் தான் அதற்கும் அவளிடத்தில். உடன்பாட்டு வாக்கியத்திற்கு உதாரணமாக இருப்பாள் போலும்.
வேலைகள் வரிசை கட்டி நின்றாலும், சிறு சுணக்கமில்லை அவளிடத்தில்.
சற்று நேரத்தில் திருமண மண்டபம் களை கட்டி விட்டது.
மணமக்கள் மணமேடையில் வீற்றிருக்க, புரோகிதர் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார்.
மணமேடையை பார்க்கும் அளவிற்கு ப்ரகாவிற்கு அங்கே ஓரிடம் கிடைத்து விட புன் சிரிப்புடன் நின்று கொண்டாள்.
தன் கழுத்தையும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். இது மாதிரி நமக்கு வாய்ப்பு இல்லை.
தருணி மணப்பெண்ணுக்கே உரிய நாணத்துடன் வந்தமர , மணமகன் மகேந்திரன் சிறு புன்னகையை பரிசளித்து அமர்ந்திருந்தான்.
“கெட்டி மேளம் கெட்டி மேளம்!!” என புரோகிதர் குரல் கொடுக்கவும் மங்கலவாத்தியங்கள் ஒலிக்க , மகேந்திரன் தருணி கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்.
“கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது . கோவிலுக்கும் தகவல் சொல்லிடுங்க அங்கேயும் முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்தை நடத்தணும்” என்றார் மகேந்திரனின் தந்தை.
“அப்பா நாமளும் போகணுமில்ல ?”மகேந்திரன் கேட்க
“இல்லப்பா, இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு தான் நீங்க பார்க்க முடியும்” என்று கூற அரைமனதுடன் அமர்ந்திருந்தான் மகேந்திரன்.
மணமக்களையும் இன்னும் சில சொந்தங்களையும் இங்கே இருத்தி விட்டு கோவிலுக்குச் சென்றனர் மகேந்திரனின் பெற்றோர்.
கோவிலில் ஆங்காங்கே சில சொந்தங்கள் நிற்க ,திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டதா என்று விசாரித்தனர்.
அனைவரிடமும் சிரித்த முகத்துடன் ஆமென்று தலையசைத்தபடி உள்ளே சென்றனர் அவர்கள்.
அதே நேரத்தில் திருமண மண்டபத்தில் ,அதே பெரியம்மா இங்கே கோவிலுக்கு வருவதற்கு ப்ரகாவிடம் அனர்த்திக் கொண்டிருந்தார்.
ப்ரகாவும் அவரை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு வர , அங்கே இருந்த சலசலப்பில் முன்னேற மறுத்து அங்கேயே நின்றனர்.
“முதல்லயே சொன்னேன் இந்த சம்பந்தம் வேண்டாமின்னு யார் கேட்டா…?, இப்போ பாருங்க எவ்வளவு தூரம் அசிங்கப்படுத்திட்டாங்க “என்று ஆளாளுக்கு பேச, மணமகனாக்கப்பட்டவனோ அமைதியாக இன்னும் மணமேடையிலேயே அமர்ந்திருந்தான்.
மணமேடையை விட்டு எழும்பாதே என்ற கட்டளை அவனுக்கு இடப்பட்டிருக்க, வேறு வழியின்றி அமர்ந்திருந்தான். வெளியே அவன் அமைதியாக இருப்பது போலத் தெரிந்தாலும், உள்ளே ஓர் ஆழிப்பேரலை அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது தான் நிதர்சனமான உண்மை.
“என்ன ஆச்சு ஏன் எல்லாரும் எழுந்து போறாங்க ?”என்று ப்ரகாவின் பெரியம்மா கேட்க
“என்னத்த சொல்ல… இந்த தம்பிக்கு இப்படி ஒரு நிலைமை வரக் கூடாது… ஏற்கனவே ஜாதகத்துல தோஷமிருக்கு தம்பிக்கு கல்யாணம் நடந்த பிறகு தான் இவருக்கு அமையும் னு சொல்லி இருந்தாங்க, அதே மாதிரி இவருக்கு ஏற்கனவே நடந்த கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நின்னுடுச்சு… ஒரு தடவை நிச்சயம் முடிஞ்சே கல்யாணம் நின்னுப் போயிருச்சு. அதனால தான் மகேந்திரன் தம்பிக்கு ஒரு மணி நேரம் முன்னாடியும் இவருக்கு ஒரு மணி நேரம் பிந்தியும் வைக்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சு கல்யாணம் வரைக்கும் வந்துட்டாங்க. இப்போ தாலி கட்டுற நேரத்தில் வந்து பையனுக்கு வயசு கம்மியா சொல்லி ஏமாத்திட்டீங்க, அப்படி இப்படி னு சொல்லி பொண்ண கூட்டிட்டுப் போயிட்டாங்க” என்றார் மணமகனை பரிதாபத்துடன் பார்த்தபடி.
மணமகனோ கைக்கடிகாரத்தைக் காட்டி ஏதோக் கூறிக் கொண்டிருக்க , ப்ரகாவின் பெரியம்மா வேகமாக மணமகனின் பெற்றோரிடம் சென்று நின்றார்.
ஏதேதோ பேசியவர் வேகமாக ப்ரகாவை அழைத்து மணமேடையில் அமரும்படி பணிக்க, அவளோ திருதிருவென்று விழித்துக் கொண்டே ,”என்ன பெரியம்மா எதுக்கு நான் உட்காரணும்…? நான் மாட்டேன். “என்றாள் படபடவென்று.
“இந்தா பாரு நான் சொல்றதை நல்லாக் கேளு… உனக்கு யாரும் இங்க மண்டபம் பார்த்து, மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப் போறதில்லை. ஏதோ வீட்டு வேலை எல்லாம் செய்றியேனு ஒரு இதுக்காக வச்சிருக்காங்க., இல்ல அநாதைக் கழுதையை அவங்க ஏன் தூக்கி சொமக்கப் போறாங்க. இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் வேற யாருக்கும் கிடைக்காது அதனால மரியாதையா போய் மணமேடையில உட்காரு. நல்லா மகாராணி மாதிரி வாழப் போற “என்றார் மெதுவான குரலில்.
ப்ரகாவோ தன் மறுப்பை தெரிவிக்க, அவளின் பெரியம்மாவோ விடாமல்,” இந்த கல்யாணத்தை நீ செய்துக்கலை உன் தருணி அக்காவும் வாழா வெட்டியாக வீட்டுக்கே வந்திடுவா. அது தான் உனக்கு வேணுமா ?”என்றதும் ப்ரகாவின் தன்னிச்சையாக மூடிக் கொள்ள திடீர் மணமகளாக்கப்பட்டாள் ப்ரகல்யா.
அதற்குள் தருணியின் பெற்றோரும் வந்து விட, மணமகனின் பெற்றோர் அவர்களிடம் பேசி அடுத்த அரை மணி நேரத்தில் திருமணமே நடந்து முடிந்து விட்டிருந்தது.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செய்வது போல ஒரு திருமணமே நடந்து விட்டிருந்தது.
‘இது என்ன மாப்பிள்ளை பேர், ஊர் எதுவுமே தெரியாமல் நமக்கு , ஆனா கல்யாணமே முடிஞ்சிடுச்சு. என்னைப் பத்தி யாருமே என் கிட்ட கேட்கலை…” என்று குழம்பிக் கொண்டிருந்தாள் ப்ரகல்யா.
மணமகன் எழுந்து விட, கூடவே ப்ரகல்யாவும் எழுந்தாக வேண்டிய கட்டாயம்.
அவனோ நேரே மகேந்திரனின் பெற்றோரிடம் சென்றவன்,” ஓகே நாங்க கிளம்புறோம்” என்று கூற அவர்களோ சிறிதும் கலக்கமின்றி அவனை செல்லும்படி கூறி விட்டனர்.
“வா ப்ருஹா போகலாம் “என்று கையோடு அழைத்துச் செல்ல அவளோ மலங்க மலங்க பார்த்தபடி ,”பெரியம்மா சித்தப்பா” என்று கை காட்டினாள்.
“ஓஓஓ !!”என்றவன் ,”போயிட்டு வரேன் னு சொல்லிட்டு வா “ என்று அங்கேயே நின்று கொண்டான்.
ப்ரகல்யா தருணியின் அம்மாவிடம் செல்ல ,அவரோ,” நல்லபடியா இரு போயிட்டு வா “என்று முடித்துக் கொண்டார்.
‘என்னதிது…?’என்று பார்த்தபடி காலில் விழுந்து ஆசி வாங்க முற்பட ,”நல்லா இருப்ப போயிட்டு கால்ல விழக் கூடாது அந்த தம்பிக்கு பிடிக்காது” என்றதும் ப்ரகல்யா திணறிப் போனாள் நடப்பதெதுவும் புரியாமல் .
மிக பழமையான வீடு அது ஆனால் அரண்மனை போல காட்சியளித்தது அவ்விடம். இங்கே பக்கத்துல ஏதாவது வீட்டுக்கு கூட்டிட்டுப் போவாங்க என நினைத்தபடி அவனோடு மகிழுந்தில் செல்ல வண்டி மிகச் சரியாக அந்த அரண்மனையின் வாசலிலேயே நின்றது.
“கீழே இறங்கு” என்று கூறியவன் ,”என் பின்னாலேயே வரணும்” என்றபடி வேக எட்டில் நடந்தான்.
அவன் பின்னாலேயே ஓடியவளுக்கு, ஓர் அறைக் காட்டப்பட, அங்கே அமர்ந்து கொண்டாள். மதிய உணவு வந்தது. அதை உண்ட பின் உறக்கம் என்று முடிந்து இதோ அவனறையில் வந்து அமர்ந்தாகி விட்டது. ஏதோ புதிர்ப் போட்டிக்குள் நுழைந்தது போன்றதொரு பிரம்மை. விடை தர வேண்டியவன் இன்னும் குளியலறைக்குள் இருக்கிறான். அவன் தரப் போவது விடையையா இல்லை அடுத்த விடுகதையையா…???