ப்ரகா கேட்ட கேள்வியில் ஒரு நொடி மட்டுமே திகைத்தவன் பின்னர் ,”ஓகே லீவ் இட். அவங்க அப்படி தான் கூப்பிடுவாங்க இல்ல” என்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க துணுக்குற்று நோக்கினாள் அவனை.
“தட்ஸ் ஓகே ப்ருஹா. கூப்பிடட்டும் பட் கூப்பிட்ட அடுத்த நிமிஷம் அவங்க இருக்க மாட்டாங்க. “என்றான் எந்த வித பதற்றமும் காட்டாமல்.
“என்ன சொல்றீங்க ?!” அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டாள் ப்ரகா .
“ரிலாக்ஸ் ப்ருஹா!. உண்மையைச் சொன்னேன். கண்டிப்பா இருக்க மாட்டாங்க. டிட் யூ கெட் தட்?. அவங்க வீட்டுப் பொண்ணை எப்படியும் கூப்பிட அவங்களுக்கு உரிமை இருக்கு. பட் என் மனைவி ப்ரகல்யவதனியை இப்படி தான் கூப்பிடணும் னு ஒரு வரைமுறை இருக்கு. ஸோ அதை கீப் அப் பண்ணா ஓகே… இல்லாட்டி… “என்று நிறுத்தியவன்,
” கூல் கேர்ள்!” என சிரித்தபடி கண் சிமிட்டி சென்றான்.
‘என்ன சொல்றாரு இவரு?. இது ஒரு சின்ன விஷயம்!’ என்று இவள் யோசிக்க
அங்கே அவனுக்கோ கோபம் மட்டுப்படவே இல்லை.
‘இது சிறு விஷயமா…? ஒரு பொண்ணோட உணர்வுகளை காயப்படுத்தி காயப்படுத்தி மரத்துப் போகற அளவுக்கு வச்சிருக்காங்க. அதை ஈசியா எடுத்துக்கிறாளே..?!, எவ்வளவு தைரியம் அவங்களுக்கு. இனி ஒரு முறை அப்படி கூப்பிடட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு ‘என தன்னை சமன் செய்து கொண்டிருந்தான்.
‘அமைதி அமைதியா இரு மகிழா… நீ கோவப்பட்டு அவளை பயமுறுத்தாத. இப்போதைக்கு ரொம்ப முக்கியம் பொறுமை. அவ இன்னும் உன் கிட்ட நெருங்கவே இல்லை, வந்த ரெண்டாம் நாளே பயமுறுத்தலாமா…?? ‘தன்னைத் தானே சரிப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவன் நின்றிருந்த இடத்திற்கு பலத்த யோசனையூடே வந்து நின்றாள் ப்ரகா.
தலை குனிந்திருக்க ,அவன் பார்த்ததை உணரவில்லை அவள்.
“முந்தானை பிஞ்சிடப் போகுது ஏன் இந்த பிரட்டு பிரட்டுற ?”என்றான் திரும்பாமல்.
‘இவர் என்ன நம்மளைப் பார்க்காமலேயே சொல்றாரு ?,கண்ணாடி எதுவும் இருக்கோ??’ என்று அவனெதிரில் பார்க்க, அங்கே நிலவு தான் பளிச்சென்று மின்னியது இவள் முகம் பார்த்து.
“ப்ருஹா நின்னுட்டே தூங்குறியா…?”
“ஹான் என்னது…!?”
“என்ன என்னது…? வந்த விஷயத்தை சொல்லாம நீ பாட்டுக்கு நின்னா என்ன அர்த்தம்…?”அவன் சாதாரணமாகத் தான் கேட்டான். ஆனால் பாவம் அவளுக்குத் தான் அது மிரட்டும் தொனியில் இருந்தது போலும்.
“இல்ல இல்ல.. நீங்க அவங்களை எதுவும் செய்யக் கூடாது” என்றாள் படபடப்பாக.
அவளையே கூர்ந்து பார்த்தவன், “யாரை ப்ருஹா?” என்று குறும்புடன் கேட்க
“அது அது என் பெரியம்மா அப்புறம்..” என்றவளை தடுத்து,” ஸோ நீ என்ன சொல்ல வர்ற?” என்றான் கண்களை சுருக்கி. அவனின் குறும்புத்தனம் தொலைந்திருந்தது அங்கே.
“அவங்களை ப்ளீஸ் எதுவும் செஞ்சிடாதீங்க” என்றாள் கெஞ்சலாக.
அவளுக்கு நேரே நிமிர்ந்து நின்று இரு கைகளையும் கட்டி நின்றவன்,”ஸோ நீ இப்போ என்ன சொல்ல வர்ற…? அவங்க அவங்களை மாத்திக்க மாட்டாங்க. எப்போதும் போல தான் என்னை கூப்பிடுவாங்க. நீங்க தான் மாறிக்கணும். இல்ல அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போங்கனு சொல்ற இல்லையா!!” என்றான்.
“அச்சோ ! இல்லைங்க” என்று பதறியவளின் தோளில் கை போட்டு அணைத்தவன்,
” அது நடக்கும் போது பார்த்துக்கலாம். இப்போ நீ வா” என்று அறைக்குள் அழைத்து சென்று விட்டான்.
***********
இங்கே தருணிக்கு கோபம் குறையவே இல்லை. ப்ரகல்யா அவளை மதிக்காதது போன்றதொரு தோற்றத்தையே உருவகித்துக் கொண்டிருந்தாள். மகேந்திரனும் , அவனது தந்தையும் வேறு, மகிழன் விஷயத்தில் எச்சரிக்கை விடுத்திருக்க, அவளுக்கு அது சுத்தமாகவே பிடிக்கவில்லை.
மகேந்திரன் அறைக்குள் நுழைந்தவன், அவளை இயல்பாக அணைத்திருக்க பட்டென்று விலக்கி விட்டாள்.
“தருணி!” என கண்டிப்புடன் அழைத்தவனுக்கு அத்தனை அதிருப்தி.
“ப்ப்ச் எனக்குத் தூக்கம் வருது” என்று படுத்துக் கொண்டவளை மீண்டும் அணைத்தவன்,” தூக்கம் தானே!, கொஞ்ச நேரத்தில் தூங்கலாம் “என்று தன் அணைப்பை இறுக்க திமிறி விலகிப் படுத்தாள்.
“இனஃப்… வார்த்தைகளை கவனமா பேச பழகிக்கோ. என் கிட்ட இவ்வளவு ரூடா பிகேவ் பண்ணாத, அவ்வளவு தான்” என்று எச்சரித்து விட்டு விலகி படுத்து விட்டான்.
“ஆமாம் இவர் பெரிய ராஜ பரம்பரை இவர் கிட்ட கவனமா பேசுறோம்” என்று முணுமுணுத்தபடி அவளும் கண்ணை மூட
“ஹேய் எழுந்திரு ! என்ன சொன்ன ?”என்று அதட்டியவன், வேகமாக அவளை எழுப்பி அமர வைத்தான்.
அவளோ ,’எனக்கென்ன பயமா ?’என்பது போல திமிராகவே பார்த்திருந்தாள்.
“உன்னைத் தான் கேட்டேன். என்ன சொன்ன?” என்று அதட்டி கேட்க
“என்ன என்ன சொன்னேன்?. ராஜ பரம்பரையான்னு கேட்டேன். ஆளாளுக்கு என் கிட்ட உத்தரவு போட்டுட்டே இருக்கீங்க, இதை பண்ணாத, அதை பண்ணாத அவங்க கிட்ட அப்படி பேசு , இப்படி பேசுன்னு. இதென்ன ஜெயிலா? இவ்வளவு கட்டுப்பாடு போடுறீங்க ?”என்று பொரிந்து தள்ளி விட்டாள்.
“பிடிச்சிருந்தா இரு இல்லாட்டி வேலைய பாத்துட்டு போயிட்டே இரு, என்கிட்ட குரலை உயர்த்தி பேசினே அடிச்சு பல்லை கழட்டி விடுவேன்” என்று எச்சரித்துவிட்டு கொண்டான் மகேந்திரன் .
தருணி அவமானத்தில் முகம் கன்றி போனாள்.
அவளை கண்டுகொள்ளாத உறங்கிப் போனவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு படுத்துக்கொண்டாள்.
***********
மறுநாள் பெரிய வீட்டில் மிகப்பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊரார் அனைவரும் ஒவ்வொருவராக வந்து உணவருந்தி விட்டுச் செல்ல, மகேந்திரன் குடும்பம் அங்கிருந்தாலும் சற்று தள்ளியே நின்று கொண்டனர், வந்தவர்களை வரவேற்பது மட்டுமே தங்கள் வேலை என்பது போல இருந்தனர். அதனை மகிழனும் கண்டு கொள்ளவில்லை.
‘ அழைப்பது என் கடமை அழைத்து விட்டேன். அதன் பிறகு உங்கள் விருப்பம்’ என்று விட்டு விட்டான்.
ப்ரகல்யா தருணியிடம் வழிய சென்று பேசினாலும் அவள் சரியாக பதிலளிக்காததில் சற்று வருத்தமே, இருப்பினும் அவர்களுடன் தான் பிரகல்யா இருந்தாள்.
ப்ரகல்யாவை பார்த்த ஊராரோ அவர்களுக்குள் முணுமுணுத்தபடி செல்ல, தருணி சற்று மிதப்பாய் பார்த்தாள்.
“என்ன பொண்ணு கருப்பா இருக்கு. மகேந்திரன் பொண்டாட்டி மாதிரி கூட இல்லையே…?, இந்த பொண்ணை எப்படி கட்டினார்?, ஆனாலும் செண்பகராமனுக்கு இவ்வளவு ஓரவஞ்சனை இருக்கக் கூடாது. தான் பெத்த பையனுக்கு மட்டும் நல்ல கலரா பார்த்துட்டு…” எனும் போதே மகிழன் அங்கே சென்றிருந்தான்.
“சாப்டிங்களா?” என்று கேட்க அந்த கேள்வியே,’ வந்தா வந்த வேலையை மட்டும் பாருங்கடா வெண்ணைகளா !’என்பது போல இருந்தது.
அங்கே வதந்தி பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு வாய்க் குழறியது.
“ஹ்ஹா ஹான் ஹான் சாப்டாச்சு தம்பி.” என்றவர்கள் அதற்கு மேலும் நிற்காமல் கிளம்பி விட்டனர்.
மகேந்திரனின் அன்னை ப்ரகாவை அரவணைத்துக் கொள்ள, சற்று தெளிவாக இருந்தாள்.
சற்று நேரத்தில் தருணியின் குடும்பமும் வந்து சேர்ந்து விட,
‘ எங்கே கிங்கரா என்ற அழைத்து விடுவார்களோ ?’என பயந்து பயந்து அவர்களிடம் பேச, மகிழன் புன்னகை முகமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ப்ரகல்யா பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்ட…? எங்க கிட்ட எல்லாம் இனி பேசுவியா…?? உன் புருஷன் வேற ஏதோ எங்களை வேத்து கெரக வாசி மாதிரியே பாக்குறாரு “என்று சற்று சத்தமாக சொல்லி விட்டார் அவளின் பெரியம்மா .
‘சுத்தம் இந்த பெரிம்மா வேற வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டாங்க ‘என்று முனகியபடி மகிழனைப் பார்க்க ,
அவனோ புன்னகையை இன்னும் மாற்றாமல் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.
‘போச்சு போச்சு வர்றாரே என்ன செய்ய போறேன் நானு?’ என்று பயந்தவள்,” பெரியம்மா வாங்க நாம சாப்பிட போகலாம் “என்று அழைக்க, அதற்குள் மகிழன் அவர்களை நெருங்கியே விட்டான்.
“ஹேய் ப்ருஹா ! உங்க வீட்டில் உள்ளவங்க எல்லாம் ஏலியன்ஸா சொல்லவே இல்ல நீ .”என்று சிரிக்காமல் கேட்டு வைக்க,” தம்பி !” என்று இரைந்தார் அவர்.
அவன் பார்த்த பார்வையில் அடுத்த வார்த்தை அவருக்கு வருமா என்ன… ?
“ப்ருஹா பேசிட்டு வா” என அழுத்தமாக சொல்லி விட்டு நகர, நிம்மதி பெருமூச்சு விட்டாள் ப்ரகல்யா.
“அவளைப் போக சொல்லுங்க பெரியம்மா, ரொம்ப தான் திமிர் அவ புருஷனுக்கு.” என தருணி சொல்ல ,சரியாக அவளின் மாமியார் சுமித்ரா வந்து நின்று விட்டார் .
“ப்ரகா நீ தம்பி கூட போய் இரும்மா “என்றவர் ,”தருணியைப் பார்த்தவர்,” நீயும் போய் மகேந்திரன் கூட இரு” என்றார் அழுத்தமாக.
தருணி ஏதோ சொல்ல வரும் முன்பாகவே, அவளின் அம்மா அவளை அனுப்பி வைத்து விட்டு சம்மந்தியிடம் மன்னிப்பு கேட்டார்.
சுமித்ராவோ ,”இதோப் பாருங்க சம்மந்திம்மா, ப்ரகா மகிழன் மனைவினு தெரிஞ்சதிலிருந்து உங்கப் பொண்ணு நடவடிக்கை எதுவும் சரியில்லை பார்த்துக்கோங்க” என்றார் கோபத்துடன்.
“இல்ல அவ கிங்… ப்ரகாவை தனக்கு கீழயே பார்த்துப் பழகிட்டு, இப்படி திடீர் னு ஓரகத்தியா அதுவும் அக்கா முறையில் பார்க்கவும் கொஞ்சம் தடுமாறிட்டா. தருணிக்கு நான் பேசி புரிய வைக்கிறேன் “என்றார் படபடவென்று.
“உங்கப் பொண்ணு, ப்ரகாவிற்கு பத்து மாசம் இளையவ தான். ஆனாலும் ப்ரகா அவளை அக்கானு கூப்பிடுறா. உங்க அக்கா இருக்காங்களே ப்ரகா கிட்ட தருணி வாழாவெட்டியா வந்திடுவாள் னு சொன்ன மறுநொடி எதையும் யோசிக்காம மணமேடையில் வந்து உட்கார்ந்தா. அவளை நீங்க தூக்கி வச்சு கொண்டாட வேண்டாம் , அட்லீஸ்ட் அவளை இப்படி கண்ட பேரிலும் கூப்பிடாம இருங்க அது போதும். நீங்க பாட்டுக்கு வாய் தவறி ஏதோ பேர் சொன்னீங்களே அப்படி கூப்பிட்டா கூட மகிழன் சும்மா விட மாட்டான். புரியும் னு நினைக்கிறேன்” என்று எச்சரித்த சுமித்ரா,” மகிழனைப் பத்தி பேசறதோ அல்லது ப்ரகாவை தர குறைவா பேசுறதோ வேண்டாம்” என்று கண்டிப்புடன் கூறி விட்டு நகர்ந்தார்.
“அத்தை உங்க கூட இருக்க சொல்லி அனுப்பினாங்க “என்றாள்.
“அப்போ நீயா வரலை. சரி நீ போய் வேலையைப் பாரு. “என்றவனின் முகம் சற்று முன் இருந்தது போல இல்லை. நொடிப் பொழுதில் புன்னகை முகம் இறுகி இருந்தது.
காரணம் புரியாதவள்,” இல்லை எனக்கு இங்க எந்த வேலையும் இல்ல “என்று அவனோடு நிற்க ,
அவனோ, “வேலை இல்லைன்றதுக்காகவோ, பேச ஆள் கிடைக்கலைன்னோ ப்ருஹா மகிழனைத் தேடக் கூடாது. புரியுதா ப்ருஹா!!. அவள் எனக்காக என்னைத் தேடணும் “என்றவன் அங்கே நிற்கவில்லை சட்டென்று சென்று விட்டான்.
அவன் எதிர்பார்ப்பு ,’அவள் தானாக தன்னைத் தேடி வர வேண்டும் என்பதுவே… அடுத்தவர்கள் சொல்லி வரக் கூடாது’ என்று எண்ணினான்.