“அப்ப ஏதோ இருக்கு …” கேலியாக கூறியவனை பார்த்து புன்னகைத்தான் ஏகலைவன்.
மறவோனின் சிரிப்பை இமைக்காது பார்த்தவன் “உண்மையாவே ஆரியை லவ் பண்றயா?…” எனக் கேட்டான்.
அன்று கோயிலில் இருவரின் மனதையும் ஓரளவிற்கு புரிந்து வைத்திருந்தான் காசி. இருந்தும் மனதின் ஓரத்தில் கலையின் காதலின் மேல் சந்தேகம் இருக்க தான் செய்தது. அதனை மனதில் வைத்துக் கொள்ளாமல் நேரடியாகவே கேட்டு வைத்தான்.
காசியை ஆழ்ந்து பார்த்தான் ஏகலைவன். அன்று காசிக் கூறிய வார்த்தைகள் ரீங்காரம் போல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்களை இறுக மூடித் திறந்தவன் “ஏன் டா, இந்த ஆணாதிக்காவாதியோட லவ் மேல சந்தேகமா இருக்கா?…” அடர்ந்தக் குரலில் கேட்டான்.
“டேய், இன்னுமா நான் சொன்னதை ஞாபகம் வைச்சிட்டிருக்க…” என அதிர்ச்சி மாறாதுக் கேட்டான் காசி.
அவனது விழி விரிப்பையும், அதிர்ச்சியையும் கண்ணெடுக்காமல் பார்த்தவன் “வார்த்தைக்கு பவர் அதிகம் டா…” என்றான் குரலில் வலி தெரிந்ததோ.
“இல்லை டா அன்னைக்கு ஏதோ கோபத்துல சொல்லிட்டேன். அது மட்டுமல்ல இன்னும் என்னால நீ பேசினதை…” ஏதோ சொல்ல வந்தவனை வேண்டாமென தலையாட்டியவன் “புரியுது விடு…” என்றதும் சங்கடமாக பார்த்தான் காசி.
அவரவர் நியாயங்கள் அவரவருக்கு இன்றுவரை தான் பேசியது சரியென்று காசி நினைக்கிறான் அதில் தவறேதும் இல்லையே… ஒவ்வொருவரின் பார்வையும், பார்க்கும் விதமும் மாறுபடும் அல்லவா. சில ஆண்களின் பேச்சும், செயலும் அக்கறையாக எடுத்துக் கொண்டால் அது அக்கறை. அதுவே ஆணாதிக்கமாக எடுத்துக் கொண்டால் அது ஆணாதிக்கம். இங்கு கலையும், தியாகுவும் நடந்து கொண்ட முறை சராசரி ஆண்களின் மனநிலை மட்டுமே அதில் ஆணாதிக்கம் இருந்ததா இல்லை அக்கறை இருந்ததா என்பதைக் கூற வாசகர்களாகிய உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன்.
நிமிடங்கள் மெளனமாக கரைய அந்த மெளனத்தை காசியின் அலைப்பேசி சத்தமிட்டுக் கலைத்தது.
“இந்த நேரத்துல எதுக்கு கூப்படறான்…” முனகிக் கொண்டே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன் எதிர்முனையில் கூறிய செய்தியில் நிமிடத்தில் முகம் மாறியது “சரி, நான் வந்து பார்க்குறேன். வேற எதுவும் பண்ண வேண்டாம்…” என்றான் கோபமாக.
அதற்கு எதிர் புறம் கூறிய செய்தியில் அவசரமாக “இல்லை,இல்லை வேண்டாம், மேடம் கிட்ட சொல்ல வேண்டாம். நான் வந்துடறேன் அதுக்கு அப்பறமா மேடத்துக்கு இன்ஃபோர்ம் பண்ணுவோம்…” என்றான். அவனது குரலில் அதீத எரிச்சலும் கோபமும் இருந்தது.
காசியின் முக மாற்றத்தை பார்த்தபடி “என்ன…” என்று கேட்டான்.
“சைட் என்ஜினீயர் சூர்யா தான் கால் பண்ணான் டா ஏதோ பிராப்ளம்ன்னு சொல்றான். இப்பவே கிளம்பினா தான் சரியா இருக்கும். இந்த விஷயம் மேடம் காதுக்கு மட்டும் போச்சு முடிஞ்சேன்…” பதட்ட குரலில் கூறினான்.
ஆரியை பற்றி கூறியதுமே மெல்லிய புன்னகை கலையிடத்தில். அதே புன்னகையோடு “அந்த ஜீவாவோட இருப்பானே அவனா?…” எனக் கேட்க, ஆமென்பதை போல் தலையாட்டினான் காசி.
“என்னவாம் அவனுக்கு, என்ன பிராப்ளமாம்…” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.
“ஏன் மிக்ஸ் தப்பா போயிடுச்சா?…” எனக் கேட்கவும் நிமிர்ந்து முறைத்தான் காசி. அவனது முறைப்பை கண்டுகொள்ளாமல் “என்ன சொல்லு, ஒன்னு மிக்ஸ் தப்பா இருக்கும், இல்லைன்னா டிசைன் தப்பா இருக்கணும்…” என்றான் யோசனையாக.
“மிக்ஸ்ல தப்பா இருக்காது டா, ஃபுல் அண்ட் ஃபுல்லா ரெடிமிக்ஸ்டு கான்கிரீட் தான். டிசைன்ல மிஸ்டேக் இருக்கும் நினைக்கிறேன்…” என்றான் யோசனை நிறைந்த குரலில்.
“ஓ, நம்ம ஆபீஸ்ல இருந்தா டிசைன் குடுத்தீங்க, இல்லை எப்படி…” உள் கன்னத்தை கடித்தபடி கேட்டான்.
“வெளிய தான் பண்ணோம். டுவெண்டி தௌசெண்ட் ஸ்கொயர் பீட், சோ வெளிய தான் பண்ணோம்…” என்றான்.
அவனது குரலில் இருந்த சோர்வை பார்த்தபடி “எனக்கு இதை பத்தியெல்லாம் ஐடியா இல்லை டா… பெட்டர் ஒன்ஸ் கான்க்ரீட் ரீசெக் பண்ணி பாருங்க அண்ட் ஸ்ட்ரக்சர் டிசைன் ரீசெக் பண்ணி பாருங்க…” அவனுக்கு தெரிந்த வகையில் கூறினான்.
நிமிடங்கள் மெளனமாக கரைய காசியின் யோசனை நிறைந்த முகத்தை பார்த்தபடி “இங்க பாரு மாமே இதுக்கெல்லாம் பயபடவே கூடாது, நம்ம மேல தப்பு இல்லைங்கற போது நம்ம ஏன் பதட்டப்படனும், பயப்படனும், எதுவும் நினைக்காம போ பார்த்துக்கலாம்…” என்றான்.
கலையின் வார்த்தைகள் சற்றே தெம்பைக் கொடுத்தது காசிக்கு. இதுவே என் இடத்தில் அவனிருந்தால் இப்படியான வார்த்தைகள் தன்னிடமிருந்து வந்திருக்குமா என்பது சந்தேகம் தான் என நினைத்தவனுக்கு தன்னாலேயே பெருமூச்சு வந்தது.
“சரி டா,எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பறேன்…” என அறையை நோக்கி நடந்தவன் பின் என்ன நினைத்தானோ திரும்பி வந்து கலையை அணைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் காசி. கலையோ இரண்டு நாட்கள் கோபியில் இருந்துவிட்டு எப்போதும் போல காலையில் தான் கிளம்பினான்.
இந்த இரண்டு நாட்களும் அவன், ஆரியிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ஒன்றுமில்லை இவனது அழைப்பை ஏற்கவில்லையாம் அதனால் அவள் மீது கோபமாம்.
ஆனால் உண்மையான காரணம் அதல்லவே! எப்படியும் சைட் பிரச்சனையில் கோபத்தில் இருப்பாள், அந்நேரம் மங்கையை அழைத்து வான்டடாக வாங்கி கட்டிக் கொள்ள கலை தயாராக இல்லை. அதனாலேயே ஆரிக்கு அழைக்கவில்லை.
**********
பைக்கிலிருந்த லேப்டாப் பேக்கை ஒருபக்கம் மாட்டியப்படி அலுவலகத்தில் நுழைந்தவன் கண்கள் தன்னாலேயே ஆரியின் அறையை பார்த்தது.
அவள் வந்துவிட்டாள் என்பதற்கான அறிகுறியாய் ஃபேன் ஓடுவது கண்ணாடி தடுப்பின் வழியே அலையலையாய் தெரிந்தது.
அதனுடனே கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தான். ஹெட்மெட் அணிந்து இருந்ததாலோ என்னவோ கேசம் நன்றாகவே கலைந்திருந்தது. அதனை அழுத்தி கோதிக் கொண்டவன் இதழ்களில் மெல்லிய புன்னகை.
மனம் இப்பொழுதே ப்பாவையை சென்று பார்ப் பாரென கத்திக் கொண்டே இருந்தது.இரண்டு நாட்களுக்கு முன்பு மனதிலுள்ளதை மங்கையிடம் கூறிவிட்டதிலிருந்து இப்படி தான் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறது ஆடவன் மனம்.
மனதின் ஆர்ப்பாட்டத்தை அடக்க முடியாமல் ஆரியின் அறையை நோக்கி நடந்தான். காசியின் அறைக்குள் நுழைந்து தான் எம்.டி அறைக்கு செல்ல வேண்டும் என்பதால் அவனது அறைக்குள் நுழைந்தான்.
காசி, கலைக்கு முன்பே வந்திருந்தான். சுழலும் நாற்காலியில் அமர்ந்தபடி நெற்றியை பெருவிரலால் நீவிக் கொண்டே லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு? ஏன் இப்படி உட்கார்ந்துட்டு இருக்க? இன்னும் அந்த பிரச்சனை சால்வ் ஆகலையா?…” எனக் கேள்வியாக கேட்டான்.
கலையின் குரலில் கணினியிலிருந்து கண்களை அகற்றி எதிரில் நின்றவனை பார்த்தவன் ” கொஞ்சம் தலைவலி, அந்த பிராப்ளமெல்லாம் எப்பவோ சால்வ் ஆயிடுச்சு…” என்றான்.
“வாவ் சூப்பர் டா, யார் மேல மிஸ்டேக்? அண்ட் சொலுயூசன் என்ன பண்ணீங்க?…” எனக் கேட்க
“டிசைனிங் தான் டா தப்பு, அண்ட் அவங்களே ரெட்ரோ பிட்டிங் இல்லை எப்.ஆர்.பி பண்ண சொல்லிட்டாங்க…” என்றவனுக்கு இப்போதும் ஆரி திட்டிய திட்டு நினைவில் வந்தது.
‘நீங்க எதுக்கு சீனியர் புராஜக்ட் மேனேஜருன்னு இருக்கீங்க? ஒன்ஸ் நீங்க செக் பண்ணி பார்க்க வேண்டியது தானே,இல்லைன்னா உங்களோட வேலையையும் நானே பார்க்கவா? எல்லாத்தையும் நானே பார்க்கணும்ன்னா நீங்க எதுக்கு இருக்கீங்க? இன்னும் டூ டேஸ்ல நூத்தி நாலு காலத்தைக்கும் ஸ்ட்ரேந்தினிங் பார்த்து இருக்கணும்…’ என ஆரி கத்தியது இப்போதும் நினைவில் வந்து தொலைத்தது தலையை பலமாக உலுக்கி கொண்டான்.
காசியின் அமைதியில் புருவம் உயர்த்தி ” ரொம்ப வாங்கிட்டியோ…” என்றவன் அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காது ஆரியின் அறையை எட்டிப் பார்த்தான்.
“ஃபேன் ஓடுது, ஏசியும் ஆன்ல இருக்கு, உங்க மேடம் உள்ளதான் இருக்காங்களா?…” என்று கேட்டான். சில சமயம் ஆரி இல்லையென்றாலும் மின் விசிறியும், குளிரூட்டியும் இயங்கிக் கொண்டே இருக்கும் அதை வைத்து தான் அப்படி கேட்டான்.
மறவோனின் குரலிலிருந்த ஆர்வத்தைப் பார்த்துத் தலையிலடித்து கொண்டவன் “இங்க தான் இருக்காங்க, ஆனா செம டென்சன்ல இருக்காங்க, உள்ள மட்டும் போயிடாதா…” என்றதும் ஏன் என்னாச்சு என்பதை போல் பார்த்தான்.
“தெரியல…” என்பதை போல் தோள் குலுக்கியவன் மீண்டும் கணினியில் தலையைப் புகுத்திக் கொண்டான்.
“அவங்க கடுப்பா இருக்கிறதுக்கும், நான் சீனியர் புராஜக்ட் மேனேஜரா இருக்கிறதுக்கும் என்னடா சம்மந்தம்…” பல்லைக் கடித்துக்கொண்டு நிமிர்ந்தவனுக்கு மின் விளக்கை பரிசளித்திருந்தான் ஏகலைவன். எங்கே சென்றிப்பான் என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய நிமிடங்கள் தேவைப்படவில்லை காசிக்கு.
“ஆரம்பிச்சுட்டானா, எப்படியோ இரண்டு பேருக்கும் ஒத்து போனா சரி…” என்று மெல்லிய புன்னகையோடு தன் வேலையை தொடர்ந்தான்.
*****
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தவளை பார்த்தவன் ஆர்ப்பாட்டமான குரலில் “ஹீலோ மேடம்…” என்றழைத்து அவள் முன்னிருந்த மேசையின் மீது ஏறி அமர்ந்தான்.
மேசையின் அதிர்வில் தன் நினைவிலிருந்து மீண்டவள் தன் முன் பந்தமாக அமர்ந்திருந்தவனை முறைத்தாள்.
அவளது முறைப்பை எப்பொழுதும் போல கண்டுக்கொள்ளாதவன்”என்னவாம், ஏன் முகமெல்லாம் சோர்வா இருக்கு…” எனக் கேட்டுக் கொண்டே எக்கி அவளது நெற்றியில் கை வைத்தான்.
அது அத்தனை சூடாக இருந்தது பட்டென மேசையிலிருந்து குதித்தவன் “ஹேய், என்னடி இப்படி சுடுது…” எனக் கேட்டான்.
அதற்கு அவளிடம் பதிலில்லை, அவளின் பதிலை இவன் எதிர்ப் பார்க்கவுமில்லை “இப்படி உடம்பு சுடுது, இந்த லட்சணத்தில ஆபீஸ் வேற வந்து இருக்க… நீ ஒரு நாள் வரலைன்னா ஆஃபீஸ்ல எதுவும் குடி முழுங்கிட போகுதா? வீட்டுலயே இருக்க வேண்டியது தானே. சரி, எழு முதல்ல ஹாஸ்பிடல் போலாம்…” என்றவனது குரலில் இருந்தது நிச்சியமாக அக்கறை இல்லை கோபம் மட்டுமே.
அவனது கோபத்தை கண்ணெடுக்காமல் பார்த்தாள். ‘உடம்பு இப்படி சூடா இருக்கு உன்னை யாருடி வேலைக்கு போக சொன்னது. இவ ஒருத்தி போயி தான் இவளோட அப்பன் கம்பனியை எடுத்து நிறுத்த போறா?தம்பி வண்டியை எடுங்க, பாப்பாக்கு உடம்பு முடியல…’ தன்னை திட்டிக் கொண்டே மருத்துவமனை அழைத்த சென்ற தாயின் முகம் நினைவு வந்தது.
சட்டென்று கண்களை நீர் சூழ்ந்து கொண்டது அதனுடனே “ஆமா குடி தான் முழ்கிடும்…” என்றாள் அழுத்தமாக.
அவளை விட அழுத்தமாக பார்த்தவன் அவளின் கண்களில் இருந்த நீரை கண்டுக் கொண்டான்.அதற்கு மேல் கோபமாவது மண்ணாவது அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு “ப்ச், என்னடி…” என்று ஆரியின் தலையில் கைவைத்து அழுத்தம் கொடுத்து தடவினான்.
அந்த அழுத்தம் அவளின் தந்தையை நினைவு படுத்த கண்களை சூழ்ந்த நீர் அவளது கன்னத்தில் பட்டு தெறித்தது. ‘ எப்ப இருந்து இப்படி கோழையான, ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை, பீ ஸ்ட்ராங், நிமிர்ந்து உட்காரு நையன்டி டிகிரில உட்காரு…’ எப்போதும் போலவே அவளது மனம் அவளுக்கு ஊக்கத்தை கொடுத்தது.
மனதின் ஆறுதலை விட வேறு ஒருவரின் ஆறுதல் வேண்டுமா என்ன? நொடிக்குள் தன்னை மீட்டுக் கொண்டவள் நிமிர்ந்து “ஒன்னுமில்லை கலைவாணன்…” என்றாள்.
பத்து விரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து, அதில் இன்னும் இறுக்கத்தை கூட்டிக் கொண்டே தன்னை நோக்கிய பெண்ணை இழுத்தணைத்து ஆறுதல் கூற தோன்றியது கலைக்கு.
அக்கணம் எதைப் பற்றியும் யோசிக்காது மாயோளின் தலையை தன் வயிற்றோடு அணைத்து பிடித்தவன் அடுத்த நொடி அவளை விட்டு பிரிந்தும் நின்றான். நொடி நேர அணைப்பு பாவையின் மனதை மெல்ல வருடிக் கொடுக்க, கலையை இமைக்காதுப் பார்த்தாள்.
விழிகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி பின் இணைந்த கணம் பாவையின் முகத்தை கைகளில் ஏந்தியவன் பெருவிரலால் அவளது கண்ணீரை அழுத்தித் துடைத்தான். பின் “போலாம்…” என்று முன்னால் நடக்க அவனை பின் தொடர்ந்தாள்.
ஆரியின் அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் ஆர்க்கிடெக் டீமுடன் மீட்டிங்கில் இருந்த காசியின் கண்கள் அகலதிற்கும் விரிந்தது. அவனது விழிகள் மட்டுமல்ல ஆர்க்கி டீமிலிருந்த அனைவரின் கண்களும் விரிந்தது முக்கியமாக ஜீவாவின் கண்கள்.
அனைவரும் எழுந்து நின்றதில்,தன் நினைவிலிருந்து மீண்ட ஆரியோ “ஏகலைவன்…” என்று பல்லைக் கடித்தாள்.
“ஷு,பேசாம வாங்க…” என்றவன்
ஆவென வாயை பிளந்தப்படி நின்ற காசியிடம் “பார்த்துக்க டா…” என்பதை போல் தலையாட்டிவிட்டு செல்ல, மற்றவர்களின் பார்வை இவர்களை பின் தொடர்ந்தது. அதில் கலைக்கு சங்கடமாக இருந்ததோ இல்லையோ ஆரிக்கு தான் சங்கடமாக இருந்தது.
**
ரொம்ப சாரி மக்களே வீட்டுல கொஞ்சம் சூழ்நிலை சரியில்ல.. அத்தோட வொர்க் ஸ்ட்ரெஸ் அதிகம் அதனால் தான் இத்தனை லேட்… மன்னிக்க வேண்டுகிறேன்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.