தீ 3

 

      நிச்சய ஏற்பாடுகளை பற்றி பேச்செடுத்த பெற்றோரிடம் பள்ளி முதல்வர் சொன்னதை சந்தானம் சொல்லி தன் முடிவையும் சொன்னார்.

சொன்னபடி இப்போது கைத்தாம்பூலமும் சாரமதியின் பரிட்சை முடிந்து அதாவது எட்டு மாதம் கழித்து கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றதும் இருவரிடமும் பலத்த எதிர்ப்பு.

     “எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் புள்ள படிக்கப் போறதில்லன்றப்ப எதுக்கு அவங்க பேச்செல்லாம் கேக்கணும் தம்பி?

பேசாம இப்பவே படிப்ப விட்டு நிறுத்திரு. பொட்டப்புள்ள காலா காலத்துல கல்யாணம் பண்ணி புள்ள குட்டியோட செட்டில் ஆகுதான்னு பாரு. அதான் நமக்கு நிம்மதி.

     புள்ளைய பட்டு வாங்க காஞ்சிபுரம் போவமா இல்ல சென்னை போவோமா ன்னு அதைக் கேளு. புடவை என்ன கலர்ல வேணும்? புதுசா நகை செட்டு ஏதும் வேணுமா? இதெல்லாம் கேளு. அதை விட்டு இதைப் பத்தி எல்லாம் பேசி புள்ளைய குழப்பாதே.

     சாரு விவரம் புரியாம பேசுது. நாம தான் எடுத்து சொல்லணும். நாம கட்டி வெச்சா அப்புறம் எல்லாம் சரியாகிடும். படிப்பெல்லாம் மறந்துரும்….”

என்று லக்ஷ்மி அம்மாள் அடித்து  பேச வழக்கம் போல அவர்களின் மகனாக தலையாட்டாமல் முதல் முறையாக சாரமதியின் அப்பாவாக பேசினார் சந்தானம்.

     அதற்கு காரணம் ஒரு வாரமாக மகள் சோர்ந்து போய் வளைய வருவது அவர் மனதை அறுத்தது.

     மகளிடம் விருப்பத்தை கேட்டிருக்க வேண்டுமோ என்று காலங்கடந்து தோன்றியது.

     அந்த உறுத்தலை பள்ளி முதல்வரின் கேள்விகள் கூட்டி இருக்க சந்தானம் அழுத்தமாகவே தன் முடிவை சொன்னார்.

     “அம்மா! இப்ப காலம் மாறிடுச்சு. என் பொண்ணு ப்ளஸ் டூவாச்சும் படிச்சிருக்கணும். அப்புறமும் மாதவன் கிட்ட சொல்லி அவளை தபால்லயாவது ஒரு டிகிரி படிப்புக்கு சேக்கப் போறேன்.

அக்கா சொன்ன மாதிரி இப்ப கைத் தாம்பூலம். அதுக்கு அப்புறம் கல்யாணம் சாரு பரிட்சை முடிச்சு மே மாசம் பாத்துக்கலாம்….நீங்களே அக்கா கிட்ட பேசிடுங்க…

அப்புறம் இந்த கைத்தாம்பூலம் ரொம்ப நெருங்கின சொந்தம் மட்டுமே அழைச்சா போதும். சாருவுக்கு இன்னும் பதினெட்டு முடியல.

நா கவர்மென்ட் வேலைல இருந்து கிட்டு மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பேசறது வெளிய தெரிஞ்சா எனக்கு தான் அசிங்கம். கல்யாணத்தப்ப நல்லா செய்துக்கலாம்…”

     என்று சொல்லி விட்டு அவர்களின் பதிலுக்கு எதிர்பார்க்காமல் எழுந்து போக பெற்றவர்களின் முகத்தில் அதிருப்தி. ஆனாலும் மறுத்துப் பேசவில்லை.

      ஆனால் அவருக்கு எதிர்ப்பு அவர் மனைவியிடம் இருந்து வந்தது.

     “ஏங்க! அத்தை சொல்றது சரி தானே? படிப்ப பத்தி பேசிப்பேசி அந்த பொண்ண எல்லாரும் குழப்பறீங்க? இதோட படிக்கப் போறதில்லன்ற பட்சத்தில  எதுக்கு வளத்தணும்?

அவ ஏற்கனவே டாக்டர் ஆவணும்னு பைத்தியக்காரி மாதிரி சொல்லிட்டு திரியறா? நீங்க அத இப்ப இன்னும் வளத்து விடறீங்க…? இது சரி வராதுங்க…”

     அவருக்கு தாயாக மகள் புகுந்த வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று கவலையே தவிர அவள் ஆசைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

     சாந்தாவுக்கு அகிலாவைப் பற்றி நன்றாகவே தெரியும். கல்யாணத்துக்குப் பிறகு படிக்கிறேன் என்று சொன்னால் அகிலாவின் ஆட்டம் எந்த அளவுக்குப் போகும் என்று அவருக்கு  மிகுந்த கவலை.

ஏற்கனவே அகிலா வீட்டுக்கு தன் மகள் மருமகளாகப் போகப் போவதை நினைத்து உள்ளுர கவலை தான். இதில் அவர் செய்யப் போகும் பிரச்சனை போதாது என்று இந்த பெண் தானே வாழ்கையை சிக்கலாக்கிக்கணுமா என்று யோசித்தார்.

     ‘இதெல்லாம் வயதில் பேசுவது தான். பிறகு கால ஓட்டத்தில் குடும்பத்துல ஈடுபாடு வந்தா எல்லாம் மறந்து போகும்; அப்படித் தானே எல்லா பொம்பளைகளும் இருக்காங்க. இவளுக்கு மட்டும் என்ன?’ என்று நினைத்தார்.

     சந்தானம் பெற்றவர்களுக்கே பிடி கொடுக்காத போது மனைவி சொன்னால் மட்டும் தலையை அசைத்து விடுவாரா என்ன?

     “போடி! போய் நிச்சயத்துக்கு வேண்டிய வேலையைப் பாரு. எதை எப்ப செய்யணும் என்று எனக்கு தெரியும்…! அப்புறம் புள்ள படிக்கிறான்னா அவளை வேலை குடுத்து தொல்லை பண்ணாதே! வேணும்னா மேல் வேலைக்கு ஆள் வெச்சிக்க…! புரியுதா?” என்று கட்டளை இட்டு விட்டு வேலைக்கு கிளம்பி விட்டார்.

     அகிலா தான் இதைக் கேட்டு ஆடித் தீர்த்து விட்டார்.

     “என்ன அவன் மவ படிச்சுட்டு பெரிய கலெக்டர் வேலைக்கா போகப் போறா? அடுப்ப நோண்டப் போறவளுக்கு இந்த படிப்பு பத்தாதாக்கும். ? ரொம்பத்தான்! நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. நா சொன்ன தேதில கல்யாணம் நடந்தே ஆகணும்….”

     அகிலா சொல்ல வேண்டிய இடத்தில் தன் பிடியை இறுக்க பெற்றவர்கள் இரண்டு பக்கமும் பேச முடியாமல் தவித்தனர்.

     சாரமதியோ அப்பா கொடுத்த தைரியத்தில் படிப்பில் பழையபடி மும்முரமாக முழுகிப் போனாள்.

     முன் போலவே நல்ல மதிப்பெண்களை வாங்க ஆரம்பிக்க முதல்வர் கூப்பிட்டு பாராட்டியதோடு  பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வர வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினார்.

     இந்த ஒரு மாதத்தில் அகிலாவும் புது வீட்டில் செட்டில் ஆவதில் கவனம் செலுத்தியதால் இங்கே அதிகம் வரவில்லை. அதோடு எல்லா விதத்திலும் தம்பியின் உதவி தேவை என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

தம்பியின் சிபாரிசில் முரளியை கண்ணன் தயா படித்த பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்த்து விட்டனர். எல்லோரும் ஒத்துப் போகும் போதே கடையை கைப்பற்றி விட வேண்டும் என்று அகிலாவுக்கு அவசரம்.

தம்பியிடம் சொல்லி ஆள் வர வைத்து சென்னையில் இருந்து வீட்டை காலி செய்து இங்கே எல்லாம் அடுக்க வேண்டி இருந்தது. அதற்கும் சாந்தாவை வர வைத்து வேலை வாங்கிக் கொண்டார்.

சீனிவாசன் இதையெல்லாம் மேற்பார்வை பார்க்க மாதவனோ புதுக்கடையில் தன்னைப் பொருத்திக் கொள்ளவும் தாத்தாவிடம் இருந்து பொறுப்பை எடுத்துக்கொள்ளவும் பழகிக் கொண்டான்.

நடுவில் ஒரு முறை மட்டுமே தாத்தா ஆயாவைப் பார்த்து ஆசி வாங்க மாமன் வீட்டுக்கு வந்தான். அவன் கண்கள் சாரமதிக்காக வீட்டை துழாவ தாத்தா சிரித்தபடி பதில் தந்தார்.

“சாரு ஸ்கூலுக்கு போயிருக்கு மாது. சாயங்காலம் தான் வீட்டுக்கு வரும்.”

தன்னை தாத்தா கண்டு கொண்டு விட்டார் என்று புரிந்ததும் மாதவன் கூச்சத்தில் தலையைக் குனிந்து கொண்டான்.

பக்கத்தில் வந்து அவன் முகத்தை நிமிர்த்தி “ஆம்பளப் புள்ள டா நீ! இப்படி வெக்கப்பட்டுட்டு தலையக் குனியலாமா?” என்று அவன் மீசையை முறுக்கி விட்டார் பரந்தாமன்.

“மாது! கடையிலயும் கொஞ்சம் கெத்தாவே இருந்தா தான் ஏய்க்க மாட்டாங்க. இனி நீயும் குடும்பஸ்தன் ஆகப் போறே! கொஞ்சம் பேசு தம்பி! இல்ல? சாரு போடற போட்டுல நீ அம்புட்டுதேன்!” என்று சொல்லி விட்டு சிரிக்க கூடவே லக்ஷ்மியும் சேர்ந்து சிரித்தார்.

மாதவன் எப்போதுமே அமைதி தான். சின்ன வயதில் கூட வயதில் ரொம்ப பெரியவன் என்று சாரமதி அவனோடு அதிகம் பேச மாட்டாள்.

முரளி அவள் வயதை ஒத்தவன் என்பதால் அவர்கள் நால்வர் தான் விளையாடுவது.

அப்போதும் சாரமதி தான் பெரியவள் என்பதால் அதிகாரம் எல்லாம் இவர்களிடம் தான் தூள் பறக்கும்.

பதினைந்து வயது வரை வந்தவன் அதன் பிறகு அம்மா ஊருக்கு போகும் போது மாமன் வீட்டுக்கு வராமல் ஊரிலேயே நின்று கொண்டான்.

கடைசியாக தாத்தா பாட்டியின் மணிவிழாவுக்கு வந்த போது பார்த்தது.

அதனால் சாரமதியை அவன் பார்த்தே நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

அங்கே பெரிதாக பிரேம் போட்டு சாரமதியின் மஞ்சள் நீர் போட்டோ மாட்டி இருந்தது. அதை பார்த்தவனுக்கு அந்த நாள் நினைவுகள் ரீவைண்ட் ஆனது.

சாரமதி வயதுக்கு வந்த போது மாமன் என்ற முறையில் சாந்தாவுக்கு சகோதர்கள் யாரும் இல்லாததால் குடிசை கட்ட இவனை தான் அழைத்தனர்.

மரப்பாச்சி பொம்மைக்கு புடவை கட்டி விட்டார் போல் இருந்தவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்ததே தவிர வேறு எதுவும் தோன்றவில்லை..

சாரமதியோ அப்போது அரையாண்டு தேர்வு எழுத முடியாமல் வீட்டில் இருக்க வேண்டி இருந்த கடுப்பில் எதையும் கண்டு கொள்ளவே இல்லை. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு தான் எல்லா போட்டோவிலும் இருந்தாள்.

அவளுக்கு இந்த மஞ்சள் நீர், அலங்காரம், பல்லக்கு போல் ஜோடித்து அவளை உட்கார வைத்ததெல்லாம் பிடிக்கவே இல்லை.

ஆனால் ஊர் பெருமைக்கு தன் ஒரே பேத்திக்கு வைத்தே ஆக வேண்டும் என்று லக்ஷ்மி அம்மாள் பிடிவாதத்தில் பெரிய அளவில் நடந்தது.

      அதனால் அவள் இப்போது பார்க்க எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆர்வம். அதை வாய் விட்டு கேட்க கூச்சப்பட்டு கண்ணால் தேடிப் பார்த்து மாட்டிக்கொண்டான்.

     சாந்தா மாப்பிள்ளை ஆகப் போகிறவன் என்பதில் கூடுதல் உபசாரம் செய்து கவனிக்க மதிய விருந்தை சாப்பிட்டவன் அதற்கு மேல் அங்கே இருக்க காரணம் இல்லாமல் போக எல்லோரும் இருக்க சொல்லியும் கிளம்பி விட்டான்.

     கைத்தாம்பூலம் எதேச்சையாகவே ஞாயிறு அன்று அமைந்து விட இருவருக்கும் பொதுவான நெருங்கிய சொந்தங்கள் எல்லோரும் சந்தானம் வீட்டுக்கே வந்து விட்டனர்.

      முதலிலேயே அகிலா தன்னால் எதையும் எடுத்து செய்ய முடியாது என்று சொல்லி விட எல்லா பொறுப்பும் பெண் வீட்டுக்கே. வந்தது.

     அதில் சாந்தாவுக்கும் சந்தானத்திற்கும் வேலை நெட்டி முறித்தது.

     சாப்பாடு ஆள் வைத்து சமைக்க முடிவு செய்ததால் சாமான்கள் வாங்குவது, பந்தக்கால் போடுவது சொந்தங்களை நேரில் அழைப்பது என்று நிறைய வேலைகள்.

     ஆனாலும் சந்தானம் மகளை எந்த வேலையும் சொல்லக் கூடாது என்று கண்டித்து சொல்லி இருந்ததால் அவளை விட்டு விட்டனர்.

     இதற்கு நடுவில் ஞாயிறு நிகழ்ச்சிக்கு வியாழன் முதலே லீவு போடச் சொல்லி அகிலா சாந்தாவிடம் தான் சொன்னார். அதற்குக் காரணம் தம்பியிடம் சொல்லி மூக்கு உடைபடுமோ என்று பயம்.

     சாந்தாவிடம் சொல்லும் போது கூட  “இதோ பாரு சாந்தா! நம்ம சொந்தம் எல்லாம் ரெண்டு மூணு நாள் முன்ன கூட்டியே வருவாங்க. அப்ப போய் சாரு ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தா நல்லா இருக்காது. சந்தானத்துக்கு இதெல்லாம் புரியாது.

     பொம்பளைங்க நாம தான் அப்புறம் பேச்சு வாங்குவோம். அதனால நீ கண்டிச்சு தம்பி கிட்ட சொல்லி அவளை நிறுத்தி வெச்சிடு….” என்று கெத்தாக கட்டளை இட்டார்.

     சாந்தா சந்தானத்திடம் சொன்னால் தேவையில்லாத சண்டை தான் வரும் என்பதால் நேராக மகளைப் பிடித்தார்.

     “இதோ பாரு! வியாழன்ல இருந்து பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடறே! அப்பா கேட்டா வயித்துவலி தலைவலின்னு பொய் காரணம் சொல்றே! புரியுதா?

உங்க அப்பா கிட்ட போய் அம்மா தான் போக வேணாம்னு சொன்னாங்கன்னு சொன்னே? உன் வாய கிழிச்சுப் புடுவேன். பாத்துக்கோ!” என்று சற்று கடினமாகவே சொல்ல சாரமதி வாயே திறக்கவில்லை.

     வியாழன் அன்று கொஞ்சம் நிச்சய வேலைகளை கவனித்து விட்டு வந்து குளித்து அலுவலகம் போக வீட்டுக்கு வந்த சந்தானம் சாரமதி வீட்டில் இருப்பதைப் பார்த்து யோசித்தார்.

     மகளை அழைத்து “சாரமதி! என்னமா இன்னிக்கி ஸ்கூலுக்குப் போலியா? ஏன்?” என்று கேட்கும்போதே பார்வை சாந்தாவின் மேல் சந்தேகத்தோடு பதிய சாரமதி பதட்டமானாள்.

     ஏற்கனவே தன்னால் தான் அம்மா அப்பாவுக்கு நடுவே கொஞ்ச நாட்களாக சண்டை என்று வருத்தத்தில் இருந்தவளுக்கு இப்போது தான் உண்மையை சொன்னால் பிரச்சனை தான் வளரும் என்று அம்மா சொல்லிக் கொடுத்த பொய்யையே சொன்னாள்.

     “காலையில் இருந்து வயித்தை வலிக்குது பா. அதான் போகல. லீவு போட்டுட்டேன் பா…!”

பொய் என்பதால் அப்பாவை நிமிர்ந்து பார்க்கவும் துணிவு இல்லாமல் போக சின்ன குரலில் சொல்ல சந்தனத்தால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் மேலும் கேட்டால் இந்த நேரத்தில் பிரச்சனை தான் வளரும் என்று

“சரிமா! படுத்து ரெஸ்ட் எடு. சாந்தா புள்ளைக்கு கொஞ்சம் ரசம் வெச்சுக் குடு.. மதியம் வந்து பாக்கறேன். அப்பவும் சரியாகலைனா டாக்டர் கிட்ட போய் ஒரு ஊசி போட்டா சரியாகிடும்….”

என்று சொல்லி விட்டு அவளை ஓரக்கண்ணால் பார்க்க சாரமதி திருட்டு முழி முழித்தாள்.

சந்தானம் ஒரு புன்னகையோடு கிளம்பி விட சாந்தாவும் நிம்மதிப் பெருமூச்சோடு வேலையைத் தொடர்ந்தார்.

    அகிலா பள்ளிக்கு போகவில்லை என்பதை விசாரித்து தெரிந்து கொண்ட பிறகே அகிலா விட்டார்.

     முன்பு தம்பி மகள் தான் இப்போது தன் மருமகள் என்பதால் கூடுதல் அதிகாரம் உண்டு அல்லவா?

     சந்தானத்துக்கு பள்ளியில் இருந்து சாரமதி ஏன் வரவில்லை என்று கேட்டு போன் வர சந்தானம் சமாதானம் சொல்லி சமாளிக்க வேண்டி இருந்தது.

அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல கடுப்பான பள்ளி முதல்வர் வரும்போது டாக்டர் சர்டிபிகேட் கொண்டு வரும்படி சொல்லி போனை வைத்தார்.

     இந்த மாதிரி பொய்களை எத்தனை முறை கேட்டிருப்பார்? அதனால் அவருக்கு எல்லாம் தெரிந்தது. ஆனால் ஒரு அளவுக்கு மேல் என்ன செய்ய முடியும்?

     வெள்ளி அன்று பாட்டி லக்ஷ்மி அம்மாள் பேத்திக்கு மணையில் அமர்த்தி தலையில் எண்ணெய் வைத்து நெற்றியில் குங்குமம் வைத்து தலைக்கு குளிக்க வைத்து அவளை கல்யாணப்பெண் ஆக்கினார்.

     இனி சொந்தங்கள் வருவர் என்பதால் சாந்தா அவளை புடவையே கட்ட சொல்லி அவரே கட்டி விட்டார்.

பழக்கம் இல்லாததால் புடவை அவிழ்ந்து விடும் பயத்திலேயே அன்று முழுக்க சாரமதி இருந்தாள்.

வீட்டில் உறவினர் கூட்டம் அன்றே வரத்துவங்க பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தான் கொண்டாட்டம். சாந்தாவுக்கு திண்டாட்டம். ஆனாலும் இது தன் மகளின் திருமணம் என்பதால் சந்தோஷமாகவே வேலை பளுவை சமாளித்தார்.

அகிலா வீட்டுக்கும் இங்கிருந்தே சாப்பாடு வேளா வேளைக்கு போனது.

அங்கும் லக்ஷ்மி அம்மாளே பேரனுக்கும் எண்ணெய் வைத்து அவன் குளித்து வந்ததும் நெற்றியில் திருநீறு வைத்து மணமகனாக ஆக்கினார்.

பொதுவாக அவர்கள் வீட்டில் பெண்ணை நிச்சயத்துக்கு அழைத்து போகும் பழக்கமில்லை. ஆனால் இப்போது நிச்சயமே பெண் வீட்டில் என்பதால் இருவருக்கும் நலங்கு வைத்து பத்திரிக்கை வாசித்து தாம்பூலம் மாற்றிக்கொள்வது என்று முடிவு செய்திருந்தனர்.

மகளின் பிடிவாதத்தில் முஹூர்த்த தேதி இது தான் இருவரின் நட்சத்திரத்துக்கும் பொருந்தி வருகிறது என்று அவர்கள் குறித்த முஹூர்த்த நாள் சாரமதியின் கடைசி பரிச்சைக்கு விடப்பட்ட பத்து நாள் லீவில் அமைந்தது.

ஒரு பரிட்சை தானே பரவாயில்லை என்று பரந்தாமன் அடித்து பேச அதற்கு மேல் சந்தானத்தால் தள்ளிப்போட முடியவில்லை.

அகிலா நல்ல நேரத்தில் தன் குடும்பத்தோடு காலையிலேயே வந்து இறங்கினார். காலை பத்து மணிக்கு நிச்சயம் துவங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *