மல்லிக்கு திருமணம் ஆகி வந்த புதிதில் ஸ்மார்ட் போன், முகநூல் என எதுவுமே தெரியாது. படித்தது வளர்ந்தது எல்லாம் கிராமப்புறம் என்பதால் இதெல்லாம் உண்டு என்பதே அவள் அறியாதது.
சென்னை வந்தும் திருமணம், உடனே குழந்தை என்று அவள் வாழ்க்கை எதையும் யோசிக்க நேரமில்லாமல் போனது. அதோடு அவளுக்கும் இதெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.
அவளுக்கு பிடித்ததும் தெரிந்ததும் நன்கு சமைப்பது, மகளை கவனிப்பது, சுந்தர் வீட்டில் இருக்கும் நேரம் ‘அத்தான்’ என்று அவன் பின்னால் சுற்றுவது என்று இவை மட்டுமே.
அதைத் தாண்டி யோசிக்கவோ கற்கவோ அவளுக்கு விருப்பமும் இல்லை. சுந்தர் கூட ஆரம்பத்தில் கல்யாணம் ஆன மோகத்தில் இருந்தவன் மகளும் வளர்ந்து பள்ளிக்கு போக ஆரம்பிக்கவும் அவளையும் பனிரண்டாம் வகுப்பை தனியாக படித்து முடிக்க சொன்னான் தான்.
ஆனால் மல்லி அதை கேட்கவே தயாராக இல்லை. இத்தனைக்கும் அவள் படித்த போது நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவி தான்.
வீட்டில் அவள் படித்துக் கொண்டிருக்கும் போது காமாட்சி வந்தால் “இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணப்போற புள்ளைக்கு வாய்க்கு ருசியா சமைக்கவும் வீட்டை சுத்தபத்தமாக வைக்கவும் தெரிஞ்சா பத்தாது? இப்ப இவ படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போய் கிழிக்கப் போறா?” என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
சீனிவாசன் தான் பெண்ணானாலும் நாலு எழுத்து படிக்க வேண்டும். கல்யாணம் கூட அவள் பட்டப்படிப்பு முடித்த பிறகு பண்ணிக் கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர்கள் முடிவெல்லாம் புறம் தள்ளி சின்னவர்கள் தான் தங்கள் வாழ்க்கையை முடிவு செய்து கொண்டனரே!
அப்படியும் சுந்தருக்கு அவ்வபோது அந்த உறுத்தல் உண்டு.
அவளை அமர வைத்து தோள் மேல் கை போட்டு “மல்லிமா! அத்தான் தான் அவசரப்பட்டு உன்னை பன்னண்டாம் கிளாஸ் கூட படிக்க விடாம கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திட்டேன். அப்ப என்னவோ மாமாவும் அம்மாவும் உன்னை ஏன் கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோ என்று பயம். இங்க வந்தும் நமக்கு உடனே பாப்பாவும் பொறந்துடுச்சு.
இப்ப தான் ப்ரியா குட்டி ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாளே? நீ ஏன்மா மேல படிக்கக் கூடாது?” என்று சொல்லிப் பார்த்தான் தான்.
மேலே கை போட்டது கூட அவள் அந்த பேச்சு எடுத்தாலே நிற்காமல் ஓடி விடுவாள் என்ற காரணத்தால் தான்.
இப்போதும் அதே தான் நடந்தது.
“அத்தான்! இனிமேட்டு படிச்சு நா என்ன கலெக்டராவா ஆயி கிழிக்கப் போறேன்? என்னை கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்க நீங்க இருக்கீங்க. எனக்கும் உங்களையும் பாப்பாவையும் பாத்துட்டு வீட்டுல இருக்கிறது தான் பிடிச்சிருக்கு அத்தான். உங்களுக்கு என்ன படிக்க வைக்கணுமோ அதை பாப்பாவை படிக்க வைங்க…அட அதை விடுங்க அத்தான்…இப்ப அதிசயமா வீட்டுல இருக்கீங்க. உங்களுக்கு என்ன செஞ்சு தரட்டும்? சுய்யம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே? அது செய்யவா? இல்ல சூடா பஜ்ஜி போடவா? முட்டை கூட இருக்கு. அதுல பஜ்ஜி போடவா….?”
இப்படி பேசுபவளை அவனும் என்ன செய்வான்?
அடுத்து தன்னோடு கடைக்கு வந்து உதவுமாறு கேட்டுப் பார்த்தான். அவனுக்கு உதவி என்பதை விட அவள் வீட்டிலேயே சமையல் அறையோடு நின்று விடக்கூடாது என்ற எண்ணம் தான் முக்கியமான காரணம்.
அதையும் மல்லி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
“அய்ய…! என்ன அத்தான் நீங்க? எனக்கு என்ன அதைப்பற்றி தெரியும்? அதோட நானும் உங்க கூட வந்தா நீங்க அலுத்து களைச்சு வீட்டுக்கு வரும்போது இப்ப நான் சுடச்சுட செஞ்சு போடற மாதிரி இருக்குமா அத்தான்? எனக்கு இதுவே போதும் அத்தான்…”
என்று சொன்னவள் மேலே அவன் பேச அங்கே நின்றால் தானே? அவள் “அரிசி பருப்பு ஊற வெச்சிருக்கேன் அத்தான். அதை இப்ப ஆட்டி வெச்சா தான் கலையில நீங்க நேரமா கிளம்ப உதவும்…” என்று ஓடி விட்டாள்.
அப்போதும் விடாமல் சுந்தர் அவளுக்கு விடாப்பிடியாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து மொபைல் வாங்கிக் கொடுத்து அவளைப் பிடித்து உட்கார வைத்து சொன்னான்.
“இங்க பாரு மல்லிமா! இதுல இணைய வசதி இருக்கு. படிக்கலைனா கூட பரவால்ல. ஆனா உலகத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருக்கக் கூடாது. உனக்கு கதை படிக்கறதுன்னா ரொம்ப இஷ்டம் இல்ல? இதுல கதையெல்லாம் வரும்…இது பாத்தியா? பேஸ் புக் னு சொல்வாங்க. இதுல உலகத்தில எந்த மூலையில இருக்கவங்க கூட கூட நீ டச்ல இருக்கலாம்…”
சொன்னதோடு நிறுத்தாமல் முகநூலில் அவள் பெயரில் மல்லி சுந்தர் என்று ஒரு கணக்கையும் துவக்கி அதில் தாங்கள் எடுத்த புகைப்படத்தை போட்டுக் கொடுத்தான்.
மல்லிக்கும் அது பிடித்திருக்க தானே கற்றுக் கொண்டதோடு தெரியாததை சுந்தரிடம் கேட்டும் தெரிந்து கொண்டாள்.
மகளும் வளர்ந்து அவள் படிப்பை அவளே பார்த்துக் கொள்ள அத்தை மாமா வருவதற்கு முன் அவளுக்கு நிறையவே நேரம் இருந்தது என்று சொல்லலாம். அதோடு ப்ரியாவின் ஆங்கில மீடியம் படிப்பு அவளுக்கு சொல்லிக் கொடுக்க கடினமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்.
அதனால் ப்ரியாவை ட்யுஷனில் சேர்த்து விட்டு அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டாள்.
வீட்டைப் பார்ப்பதிலும் மகளை கவனிப்பதிலும் ஓய்வுநேரம் முகநூலிலும் கதை படிப்பதிலும் என நன்றாகவே போனது. சுந்தரும் இப்போது நிதி நிலையில் மேலே வந்து விட அவர்கள் வாழ்க்கைப் படகு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.
ஆனால் இப்போது சமீபமாக தான் மாற்றங்கள். அதுவும் முக்கியமாக சுந்தரிடம் தான். முன்பு போல அவளிடம் நின்று பேசுவதில்லை. பேசுவதே வெகு சில வார்த்தைகள் தான். அதுவும் அவள் முகத்தைப்பார்த்து இல்லை.
இதையெல்லாம் உணர்ந்து கொள்ளவே மல்லிக்கு சில நாட்கள் பிடித்தன. எப்போதும் எதோ சிந்தனையில் இருப்பவனை நெருங்கி அவளாகவே ஏதாவது கேட்டாலும் “உனக்கு சம்பந்தம் இல்லாதது. போ! போய் உன் வேலையைப் பார். சமையலைப் பார்” என்று அனுப்பி விடுவான்.
ஆரம்பத்தில் எதோ தொழிலில் தான் பிரச்சனை என்று நினைத்தவளுக்கு பிரச்சனை வீட்டில் தான் என்று புரியவே காலம் எடுத்தது.
வீட்டில் இருக்கும் போது தொழில் சம்பந்தமாக அழைப்புகள் வரும் போதெல்லாம் அவன் சிரித்து சிரித்து பேசுவதை கவனித்தாள் மல்லி. அந்த நேரத்தில் இத்தனை வருடங்களாக எட்டிக் கூட பார்க்காதிருந்த அம்மா அப்பாவையும் முகம் திருப்பாமல் அவன் கவனித்துக் கொண்டதையும் கூட கவனித்தாள்.
பழைய குறைகள் எதையும் சொல்லிக் காட்டாமல் அப்பாவை சென்னையிலேயே பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் செய்ததோடு வீட்டுக்கு அழைத்து வந்தும் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தான்.
மகளிடமும் பழையபடி பிரியமாக தான் இருக்கிறான். அப்போது அவள் மட்டும் தான் காரணமா?
அன்று காலை அவர்களின் திருமண நாள் என்று மல்லி விடிகாலையிலேயே எழுந்து தலைக்கும் குளித்து விட்டு சாமிக்கு விளக்கேற்றி கணவனின் மனதில் என்ன கஷ்டம் என்றாலும் அதை தீர்த்து வை தாயே என்று வேண்டிக்கொண்டு தான் சமையல் அறைக்கே போனாள்.
என்னவோ அன்று அவளுக்கு அவள் அம்மா அப்பாவின் ஞாபகம் வேறு. அவர்களைப் பார்க்க வேண்டும் போல.
‘உனக்கு ஒன்றும் இல்லை! பயப்படாதே..!’ என்று சொன்னால் தைரியமாக இருக்கும் போல இருந்தது.
இத்தனை வருடங்களில் அவள் அம்மா அப்பாவை அதிகம் நினைத்ததில்லை. நினைக்கும் படி சுந்தர் அவளை வைத்ததில்லை. எல்லாம் அவனாக இருந்ததால் அவர்களை நினைத்து அவள் ஏங்கும் நிலை அமையவே இல்லை.
நேற்று இரவு ப்ரியா உறங்கிய பிறகு அவளே துணிவாக சுந்தர் படுத்திருந்த அறைக்கு போனாள். முன்பிருந்த அத்தான் என்றால் அவள் இவ்வளவு யோசித்து இருக்க மாட்டாள். ஆனால் இவன் புதிது அல்லவா?
அவள் அத்தான் எப்போதுமே அவளிடம் பிரியமாக இருந்தவன். கடிந்து ஒரு வார்த்தை கூட சொன்னவன் இல்லை. இவன் அப்படியா?
இவனும் கடிந்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை தான். ஆனால் ஒரு வார்த்தையும் கூட சொல்லவில்லையே? விவரம் புரிந்த மகளை வைத்துக் கொண்டு அவனிடம் ஏன் நீங்க இங்க படுக்கலியா என்று கேட்கக் கூட அவளுக்கு கூச்சமாக இருந்தது.அவன் பாராமுகம் அவளை நெருங்கவே பயமுறுத்தியது.
அதோடு நாள் முழுதும் வேலை செய்யும் களைப்பில் அதுவும் அத்தை மாமா இருவரும் வந்த பிறகு அவளுக்கு நாள் முழுக்க வேலை இருக்க அவளுமே மகளோடு படுத்ததும் உறங்கி விடுகிறாள்.
ஆனால் என்னவோ சரியில்லை என்று ஒரு வழியாக விளங்க மகள் தூங்கியும் கஷ்டப்பட்டு விழித்திருந்தவள் மெதுவாக அவன் படுத்திருந்த அடுத்த அறைக்குள் போனாள்.
அவள் பார்வை அவன் மேலேயே இருக்க சுந்தரோ கட்டிலில் படுத்தபடி விட்டத்தை வெறித்திருந்தான். அவள் நினைத்தது போல சுந்தர் தொழில் சம்பந்தமாக எந்த வேலையும் செய்யவில்லை. பிறகு ஏன் தனியாக இங்கே இருக்கிறான்? தினமுமே இப்படித்தான் இருக்கிறானா?
உள்ளே சிந்தனை ஓட சில நொடிகள் நின்று பார்த்து விட்டு அவனாக அழைக்கப் போவதில்லை என்று புரிய துணிவை வரவழைத்துக் கொண்டு “அத்தான்..!” என்று மெதுவாக அழைத்தாள்.
மல்லி அழைத்தும் உடனே எல்லாம் சுந்தர் திரும்பி அவளைப் பார்த்து விடவில்லை. சில நொடிகள் கழித்து அவளைப் பார்த்த போதும் அவன் புருவங்கள் சுழித்தே இருந்தன.
ஐந்து அடி தள்ளி புடவைத்தலைப்பை பதட்டத்தை மறைக்க கட்டை விரலில் சுற்றியபடி அவனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்ததும் என்ன நினைத்தானோ?
முகத்தில் கொஞ்சம் கடுமை குறைந்தது. ஆனாலும் குரல் இன்னும் அந்நியமாகவே “என்ன?” என்றது.
“வந்து…வந்து… நாளைக்கு நமக்கு கல்யாண நாள் அத்தான்…!”
மல்லி தயங்கித் தயங்கி சொல்ல சுந்தர் மெளனமாக அவளையே பார்த்தான்.
அவன் எதுவும் சொல்லப்போவதில்லை என்று புரிய “நாளைக்கி உங்களுக்கு என்ன செய்யட்டும் அத்தான்?” என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் அவன் இதழ்களில் கிண்டலாக ஒரு சிரிப்பு மலர மல்லி அவன் சகஜமாகி விட்டான் என்று நினைத்துக் கொண்டு தானே முன்னேறி அவன் காலருகே அமர்ந்து கொண்டாள்.
“உங்களுக்கு பிடிச்ச மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்யட்டுமா? இல்ல நெத்திலி மீன் குழம்பு செய்யவா? ஸ்வீட் உங்களுக்கு பிடிச்ச பால் பாயசம் செய்யவா? பால் ஒரு பாக்கெட் தான் இருக்கு. அது பத்தாது. பரவால்ல காலையில வாங்கிக்கலாம்.
என்றவள் அவனிடம் எந்த பதிலும் இதுவரை இல்லை என்பதை உணராமலே அவன் கையை உரிமையாக கையில் எடுத்துக் கொண்டு “வழக்கமா நம்ம கல்யாண நாளுக்கு எனக்கு எதாச்சும் கிப்ட் வாங்கித் தருவீங்க…இந்த வாட்டி எதுவுமே வாங்கித் தரல…போங்க அத்தான்…நான் உங்க மேல கோவமா இருக்கேன்….” என்று சிணுங்கியவளை பார்த்த சுந்தர் முகத்தில் லேசாக கடுப்பு எட்டிப் பார்த்ததோ?
அப்படியும் சுந்தர் அதை வெளியே காட்டாமல் “சரி ..! நேரமாச்சு..! போய் படு…! அப்ப தான் காலையில நீ போட்ட லிஸ்ட் படி எல்லாம் செய்ய சரியா இருக்கும்…எனக்கும் தூக்கம் வருது…” என்று எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொல்ல அவன் சில வார்த்தைகள் பேசியதே மல்லிக்கு அவ்வளவு ஆறுதல் தந்தது.
“சரிங்க அத்தான்..! நீங்க படுங்க…! என்றவள் எழுந்து அவனுக்கு போர்வை போர்த்தி விட்டு விளக்கையும் அணைத்து விட்டு செல்ல சுந்தர் அடிக்குரலில் சொன்ன “தத்தி…” என்ற வார்த்தை அவளுக்கு கேட்கவே இல்லை.
காலையில் அவள் சமையல் அறையில் காபி போட்டு ஏற்கனவே விழித்திருந்த அத்தை மாமாவுக்கு கொடுத்து ப்ரியாவை பள்ளிக்கு கிளப்பி விட்டு அதில் மும்முரமாக இருந்ததால் அவனைப் பார்க்கவே இல்லை. மேலும் இரவில் தாமதமாக தானே உறங்கினான்? அதனால் அவன் தூங்கட்டும் என்ற காரணமும் சேர ஏழரை மணிக்கு தான் கையில் காபியோடு சுந்தர் படுத்திருந்த அறைக்கு சென்றாள்.
படுக்கை காலியாக இருக்க குழப்பத்தோடு வெளியே வந்தவளை காமாட்சி நக்கலாக பார்த்து சிரித்தார்.
“சுந்தரையா தேடுற? அவன் நீ குளிக்கும்போதே வெளிய கிளம்பிப் போயிட்டானே? உன் கிட்ட சொல்லலியா? படுக்கை தான் தனித்தனியா என்று பார்த்தா இப்ப தான் தெரியுது என் பிள்ளையோட நிலைமை! அவன் வீட்டுல தான் இருக்கானா னு கூட தெரியாம அவன் உழைப்புல வர காசுல உக்காந்து சாப்பிட்டு நல்லா உடம்ப வளத்துகிட்டு இருக்கே ….?”
காமாட்சி வார்த்தைகளை விஷத்தில் தோய்த்து வீச அது சரியாக மல்லியின் மனதைப் பதம் பார்த்தது.
அவர் சொன்ன விதம் எப்படியிருந்தாலும் அத்தான் கிளம்பியது கூட தெரியாமல் என்ன செய்கிறேன் நான் இங்கே?
மல்லிக்கே குற்றவுணர்வு உறுத்த தங்கள் அறைக்கு சென்று செல்லில் சுந்தருக்கு அழைக்க சில நொடிகள் கடந்த பிறகே சுந்தர் அழைப்பை எடுத்தான்.
எடுத்தும் எதுவும் பேசாமல் காதில் வைக்க “அத்தான்! “ என்றவள் தயங்கி அவன் எதுவும் சொல்லாமலே லைனில் இருக்க “அர்ஜென்ட் வேலையா அத்தான்?” என்று பேச்சைத் தொடர்ந்தாள்.
அவன் விளக்கம் எதுவும் சொல்லாமல் “ம்…” மட்டுமே சொல்ல மல்லி தான் மேலே பேச வேண்டி இருந்தது.
“வேலை இருந்தா எங்கயும் போக வேண்டாம் அத்தான்..! நைட் சீக்கிரம் வரீங்களா? உங்களுக்கு பிடிச்சது எல்லாம் செய்து வெக்கிறேன்….”
மல்லி குரல் தழைந்து ஒலிக்க சுந்தரிடம் இருந்து சலிப்பான “மச்…சரி….” என்ற பதிலோடு லைன் துண்டிக்கப்பட்டிருந்தது.
மல்லிக்கு மறுபடி என்னவோ சரியில்லை என்று மட்டுமே உறுத்த முதல் முறையாக சரியாக யோசிக்க ஆரம்பித்தாள்.
“அத்தானுக்கு என்னை பிடிக்கலியோ…?”
அந்த கேள்வியே மனதில் பகிர் என்ற பயத்தை கொடுக்க அதை மேலே யோசிக்கக் கூட பிடிக்கவில்லை.
“அத்தான்…அப்படி எல்லாம் இருக்க மாட்டாங்க…என்னவோ வேலைல டென்ஷனாக இருக்கும். அதான் பேச முடியல…..” என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு வீட்டில் இருந்த வேலைகளைப் பார்த்தாள்.
மாலையிலும் அதையே உருப்போட்டபடி அவளுக்குத் தெரிந்தவரை தன்னை அலங்கரித்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.
“இன்று இரவு அத்தானை தனியா அந்த அறையில் படுக்க விடக்கூடாது…எப்படியும் எல்லாம் சரி செஞ்சிடனும்….”
என்று நினைத்துக் கொண்டாலும் அந்த எல்லாம் என்ன என்று அவளுக்கே தெரியவில்லை.
இரவும் சுந்தர் வர நேரமான போது தனக்கு ஏதாவது பரிசு வாங்க போயிருப்பார் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாளே தவிர மாற்றி யோசிக்கவே இல்லை. வேறே நினைக்க பிடிக்கவும் இல்லை.
பூனை மண்ணில் தலையை புதைத்துக் கொண்டால் பூலோகமே அஸ்தமனம் ஆகி விடுமா என்ன?
அவனுக்காக காத்திருந்த நேரத்தில் மனதில் இருந்த கிலியை மறக்க முகநூலில் பொழுது போகாமல் சுற்றி வர அப்போது வந்தது தான் அந்த குறுஞ்செய்தி.
அனுப்பியது யார் என்று பார்க்க ஒரு பெண். பெயர் சுஷ்மிதா என்று இருந்தது.
“ஹலோ மேம்! மிஸ்டர் சுந்தர் உங்க கணவரா?”
அப்போதும் மல்லிக்கு சந்தேகம் வரவில்லை.
மரியாதையான முறையில் குறுஞ்செய்தி இருக்க பேச்சைத் தொடர்ந்தாள். இதெல்லாம் கூட முன்பு சுந்தர் சொல்லிக் கொடுத்தது தான். முகநூலில் பொய் முகம் காட்டுபவரிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? நட்பழைப்பு ஏற்குமுன் என்னென்ன பார்க்க வேண்டும் இப்படி எல்லாம்…
“ஆமாங்க..நீங்க?”
“நான் சுஷ்மிதா. உங்க கணவர் ஒரு மேட்ரிமோனி சைட் ல லைப் பார்ட்னர் தேவை என்று கேட்டிருந்தார்.
போட்டோவோட தன் பயோடேட்டா போட்டு இருந்தார். அதுக்கு நான் அப்ளை பண்ணி இருந்தேன். அதுல பார்த்தா சிங்கள் என்று இருந்தது. இப்ப சும்மா அவர் பேர் போட்டு பேஸ்புக்ல சேர்ச் பண்ணேன். உங்க ப்ரோபைல் வந்தது. அதுல உங்க கூட அவர் நின்னுட்டு இருக்கார். எனக்கு ஒரே ஷாக்…. உங்களுக்கு இது தெரியுமா?”
மின்னாமல் முழங்காமல் மல்லி தலையில் இடி விழுந்தது. அந்த வருடம் சுந்தர் அவளுக்கு கொடுத்த திருமணநாள் பரிசு இது தானோ?