மல்லிக்கு அன்று இரவு உறக்கமில்லா இரவாகி போனது. ஆனால் குற்றவுணர்வு இருக்க வேண்டிய சுந்தர் நிம்மதியாக உறங்கினான்.
மல்லிக்கு சுந்தரின் நம்பிக்கை துரோகம் தாங்க முடியாத வலியைக் கொடுத்தாலும் அதையே நினைத்து உழன்று கொண்டிருக்க முடியாமல் அவள் எதிர்கால வாழ்க்கை அவளை இன்னும் பயமுறுத்தியது.
பெண் பார்க்கும் வரைக்கும் போனவன் கல்யாணம் செய்யாமல் இருப்பானா? அப்படி சுஷ்மிதாவோ இல்லை யாரையுமோ திருமணம் செய்து கொண்டால் அவள் மற்றும் அவளின் மகளின் நிலை என்ன?
பிரியாவுக்கு இப்போது ஒன்பது வயது என்பதால் நன்றாகவே விவரம் தெரியும். தன்னை மறைத்ததோடு இல்லாமல் குழந்தையும் இல்லை என்று சொன்னவனை எப்படி மகளின் பொறுப்பை ஏற்பான் என்று நம்ப முடியும்?
இந்த வயதில் தன் தந்தை மறுமணம் செய்து கொண்டால் அது மகளின் மனநிலையை எவ்வளவு தூரம் பாதிக்கும்? இதையெல்லாம் யோசிக்காமல் சுயநலமாக தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்த சுந்தரை அவளுமே அந்த கணம் வெறுத்தாள்.
வெறுத்தாலும் அவளுக்கு வேறு போக்கிடம் ஏது? பெற்றவரின் பேச்சை கேட்காமல் அவன் பின்னால் வந்த முட்டாள்தனத்தை அந்த நொடி தான் உணர்ந்தாள்.
ஆயிரம் இருந்தாலும் இதே அவளைப் பெற்றவர்கள் இருந்து அவளுக்கு கல்யாணம் செய்து கொடுத்திருந்தால் இப்போது அவள் நிலை இப்படி அநாதரவாக இருந்திருக்குமா?
அவள் அப்பாவும் தம்பியும் அவன் சட்டையை பிடித்து இருப்பார்களே? அவளையும் அவள் மகளையும் தங்கள் நிழலில் பொத்தி வைத்து பார்த்துக் கொள்வார்களே!
தான் தான் அறியாத வயதில் அத்தான் பின்னால் வந்தாலும் இந்த முடிச்சு அவர்கள் போட்டது தானே?
அவர்கள் சொல்லி சொல்லித் தானே அவள் மனம் சுந்தர் பக்கம் சாய்ந்தது. அண்ணனும் தங்கையும் சம்பந்தம் பேசிக் கொண்டு கல்யாணம் செய்ய முடிவெடுத்து விட்டு பிறகு அவர்களே கருத்து வேறுபாட்டில் அதை வெட்டி விட இப்போது எல்லோரும் அவளை மட்டும் அதற்கு பொறுப்பாக்கி தனியாக விட்ட வெறுமை.
பிறந்ததில் இருந்து பெற்றோரை சார்ந்து இருந்து விட்டு பிறகு சுந்தரை திருமணம் செய்து வந்த பிறகு எல்லாம் அவனே என்று வாழ்ந்து விட்டவளுக்கு திடீரென இருவரும் கைவிட்டதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.
வெகு நேரம் விழித்திருந்து சுயபச்சாதாபத்திலும் பயத்திலும் உழன்றவளுக்கு காலையில் எழுந்த போது தலைவலி மண்டையைப் பிளந்தது.
நேரம் அப்போதே ஏழாகி இருக்க மகளுக்கு பள்ளிக்கு நேரம் ஆகி விட்டதே என்று முகம் கழுவி சமையல் அறைக்கு போனவள் அடுப்பில் பாலும் குக்கரும் வைத்து விட்டு பிறகு நேராகப் போய் இன்னும் தூங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பினாள்.
எப்போதும் எழுந்திருக்க சிணுங்கும் மகளை கெஞ்சி கொஞ்சி எழுப்பும் மல்லி அன்று இல்லை.
“ப்ரியா! மணி எழாகுது. எட்டு மணிக்கு வேன் வந்திடும். இப்ப ஒழுங்கா எழுந்திரு…” என்று கண்டிப்பான குரலில் சொல்ல எப்போதும் சண்டி செய்யும் பிரியா அம்மாவின் இந்த புது அவதாரத்தில் சிணுங்கினாலும் முரண்டு பிடிக்காமல் பாத்ரூம் பக்கம் போனாள்.
“பல் தேச்சு அப்படியே குளிச்சிட்டு இங்கயே உக்காந்திருக்காம இன்னும் பத்து நிமிஷத்துல அம்மாவைத் தேடி வரணும்….” என்று சொன்னபடி இயந்திரகதியில் படுக்கையை ஒழுங்கு செய்தவள் மறுபடி சமையல் அறைக்கு போனாள்.
கூடத்தில் சோபாவில் அமர்ந்து இருந்த காமாட்சி அவள் தன்னைக் கண்டுகொள்ளாமல் போவதில் முகம் கடுகடுக்க “காப்பி இன்னும் வரல “ என்று சொன்னதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
மகளுக்கு வேண்டியதை மட்டும் செய்தாள். காலைக்கு அவளுக்கு மட்டும் இரண்டு தோசைகளை சுட்டு இட்லி பொடி போதும் என்று முடித்து விட்டாள். மதியத்துக்கு அவளுக்கு பிடித்த தக்காளி சாதமும் முட்டை மசாலாவும் செய்து வைத்தாள்.
ப்ரியாவும் குளித்து சீருடையோடு அம்மாவிடம் வந்தவள் “அம்மா தலை பின்னி விடு…” என்று பொறுப்பாக சீப்பும் கொண்டு வந்தாள்.
அப்போது தான் அம்மாவின் முகத்தை கவனித்தாள் பிரியா.
“ஏம்மா! முகம் வீங்கி இருக்கு? உடம்பு சரியில்லையா மா?” என்று கேட்க அந்த பரிவான கேள்வி அந்த நேரத்தில் மல்லிக்கு அத்தனை ஆறுதல் கொடுத்தது.
என்னவோ இரவில் இருந்து தனக்கு யாருமே இல்லை என்று நினைத்து மறுகிக் கொண்டிருந்தவளுக்கு மகளின் இந்த அக்கறையான கேள்வி நான் இருக்கிறேன் என்று மலை போன்ற தெம்பைத் தர அதன் கனம் தாங்காமல் அவளுக்கு அழுகை வந்து விட்டது.
அம்மா அழவும் ப்ரியா இன்னும் அவளை நெருங்கி அவள் இடுப்பை கட்டிக்கொண்டு “என்னமா செய்யுது? வயிறு வலிக்குதா? நேத்து பிரியாணி நிறைய சாப்பிட்டியா?” என்று அவளுக்கு தெரிந்ததை கேட்டாள்.
ப்ரியா மல்லி சொல்வதை கேட்காமல் கண்டதையும் சாப்பிட்டு அவளுக்கு அடிக்கடி வயிறு வலிதான் வரும். அப்போது அழுவாள். அது போல நினைத்துக் கொண்டு அம்மாவை விசாரிக்க மல்லிக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது.
“அதெல்லாம் இல்ல பாப்பா! தலைவலி. அதான்…” என்றபடி மகளுக்கு தலையை வாரி பின்னலிட “அப்பா எப்பமா வந்தாங்க?” என்று மகள் கேட்க சில நொடிகள் மல்லியின் முகம் இருண்டு போனது.
ஆனாலும் மகளிடம் நடந்ததை சொல்லி பயமுறுத்தக் கூடாது என்று “அப்பா லேட்டா வந்தாங்க…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சமையல் அறை வாசலில் வந்து நின்றார் காமாட்சி.
காமாட்சி மல்லியின் மனநிலை புரியாமல் மாமியார் அதிகாரத்தை காட்ட மல்லி பதில் சொல்லுமுன் ப்ரியா பதில் சொன்னாள்.
“பாட்டி! அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவங்க செய்ய மாட்டாங்க. உங்களுக்கு வேணும்னா நீங்களே போட்டுக்கோங்க…”
மல்லி பேசினால் மல்லுக்கு நிற்கும் காமாட்சி பேத்தி அதட்டவும் அதற்கும் மல்லியை தான் குறை கூறினார்;
“பொண்ணுக்கு பெரியவங்கள மதிச்சு நடக்கணும். அவங்களுக்கு வேண்டியது செஞ்சு பாத்துக்கணும் என்று சொல்லிக்கொடுக்கணும். இங்க எங்க? எதித்து பேச தான் சொல்லிக் குடுத்திருக்கா பொண்ணுக்கு!” என்று நொடித்துக் கொண்டாலும் காமாட்சி அப்போதைக்கு எதுவும் பெசவில்லை.
அதற்காக அமைதியாகி விட்டார் என்று அர்த்தம் இல்லை.
‘சுந்தர் எழுந்திருக்கட்டும்…அப்புறம் இருக்கு கச்சேரி…!; என்று நினைத்து தான் பேசாமல் சென்று விட்டார்.
ப்ரியா மதியத்திற்கு அம்மா தக்காளி சாதம் வைத்து இருப்பதை பார்த்து சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள் கூட முட்டை மசாலாவை பார்த்து விட்டு முகத்தை சுருக்கினாள்.
“ஏம்மா தொட்டுக்க உருளைக்கிழங்கு வெக்கல…?” என்று அப்போதும் தன் ஏமாற்றத்தை சொல்லாமல் இல்லை.
மல்லிக்கு அவளிருந்த மனநிலையிலும் மகளின் ஆரோக்கியம் முக்கியமாக இருக்க அவளுக்குப் பிடித்ததை விட எது நல்லது என்று பார்த்து சமைத்திருந்தாள்.
“நேத்து பிரியாணி சாப்பிட்டதுக்கு இப்ப இது தான் உனக்கு நல்லது..!” என்று மல்லி கண்டிக்க முனகிக் கொண்டே ப்ரியா வேனுக்கு கிளம்பினாள்.
தெருமுனையில் தான் வேன் வரும் என்பதால் மல்லி வாசலில் நின்று பார்த்துக் கொண்டிப்பாள். ப்ரியாவே போய் ஏறிக்கொள்வாள்.
இன்றும் அது போல பிரியா ஏறும் வரை காத்திருந்தவள் அதன் பிறகு நேராக தங்கள் அறைக்கு சென்று. படுத்துக் கொண்டாள்.
யாருக்கும் எதுவும் செய்யும் மனநிலையில் அவள் இல்லை. மனம் கனத்து போனதால் பசியும் இல்லை.
காமாட்சி அவள் ப்ரியாவை அனுப்பி விட்டு வந்ததும் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்க மல்லி அறைக்குள் சென்று படுக்கவும் பொசுக்கென்று போனது.
அது எப்படி அவள் தங்களை கவனிக்காமல் படுக்கலாம் என்று அப்போதும் காமாட்சிக்கு கடும் கோபம்.நேராக போய் சுந்தர் படுத்திருந்த அறைக் கதவை படபடவென தட்டினார்.
“சுந்தர்! டேய் சுந்தர்…!” என்று பெரிய குரலில் அழைக்க அந்த சத்தத்தில் உறக்கம் கலைந்த சுந்தர் எழுந்து வந்து கதவைத் திறந்தான்.
“வயசானவங்க உடம்பு சரியில்லாதவங்க வீட்டுல இருக்கோம்..நேரத்துக்கு அவங்க மருந்து சாப்பிடணுமே…சாப்பாடு கொடுத்து கவனிக்கணும்னு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம புருஷனும் பொண்டாட்டியும் ஆளுக்கு ஒரு ரூமில் படுத்து தூங்கறீங்க? இப்படி இருந்தா இந்த குடும்பம் எங்கயாவது உருப்ப்படுமாடா?”
என்று காமாட்சி எடுத்ததுமே அவனையும் சேர்த்து குற்றம் சாட்ட சுந்தர் தலையைப்பிடித்து கொண்டான்.
“ஏம்மா கத்தறீங்க? இப்ப உங்களுக்கு என்ன வேணும்? எதுவா இருந்தாலும் மெதுவா பேசுங்க. எனக்கு ஏற்கனவே தலைவலி மண்டையைப் பிளக்குது…”
என்று முகம் சுளிக்க அவ்வளவுதான் காமாட்சி பொங்கி விட்டார்.
“ஆமாடா! இப்ப அம்மாவைப் பாத்தா அப்படி தான் இருக்கும். கல்யாணம் ஆகி கழுத வயசாச்சு. இப்ப தான் புருசனும் பொண்டாட்டியும் கல்யாண நாளை விடிய விடிய கொண்டாடிட்டு காலையில எங்களுக்கு செய்யணும் என்னும்போது ரெண்டு பேருக்கும் உடம்புக்கு முடியாம போகும்…
சின்ன வயசுல இருந்து உன்ன இந்த அளவுக்கு வளத்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்…? இப்ப எனக்கு வயசாகும் போது உக்கார வெச்சு பாத்துக்க உங்களுக்கு கசக்குது…! என்ன இருந்தாலும் நானும் அப்பாவும் உனக்கு இப்ப பாரமா போய்ட்டோம்…! ” என்று மூக்கை சிந்தி ஓவென்று அழ ஆரம்பித்து விட்டார்.
ஏற்கனவே மூட் அவுட்டில் இருந்த சுந்தருக்கு அம்மாவின் புலம்பலில் இன்னும் எரிச்சல் கூட “என்னை ஏம்மா இதெல்லாம் கேக்கற? மல்லி எங்க? காபி சாப்பாடு வேணும்னா அவளை கேக்க வேண்டியது தானே? “ என்று எரிந்து விழுந்தான்.
“உன் பொண்டாட்டி தானே? அவ பொண்ணுக்கு மட்டும் எல்லாம் செஞ்சு ஸ்கூலுக்கு அனுப்பிட்டு போய் மகராணி படுத்துட்டா! ஒரு குடும்ப பொம்பளை இப்படி இருந்தா குடும்பம் உருப்ப்படுமாடா? எல்லாம் நீ குடுக்கற இடம்.
அவளை வெக்கிற இடத்துல வெச்சிருந்தா அவ ஒழுங்கா இருந்திருப்பா. நீ இளிச்சவாயன்..அதான் அவ உன்னையும் மதிக்கிறதில்ல. என்னையும் மதிக்கல. பாரேன்..! நீ இப்ப வேலைக்குப் போகணும்…உனக்கு வேண்டியது என்ன எது அது கூட பாக்காம போய் படுத்துகிட்டா என்ன அர்த்தம்?
காமாட்சிக்கு இருந்த வேகம் சுந்தர் போய் மல்லியை எழுப்பி பளாரென ஒரு அறை வைத்து சமையல் அறைக்கு தள்ளி “போய் ஒழுங்கா சமைடி…” என்றால் தான் அடங்கும் போல இருந்தது.
பத்து வருடங்களாக எதுவுமே இல்லாமல் போன மகனும் மருமகளும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்திருக்க அவர்கள் இந்த அளவு வசதியாக இருப்பதே அவருக்கு பொறுக்கவில்லை.
சுந்தருக்கு ஒரு தம்பி உண்டு. அவனும் படிப்பில் சுமாராக இருக்க அப்பாவின் மளிகைக் கடையில் உட்கார்ந்தவன் அதை மெல்ல கைப்பற்றிக் கொண்டான்.
வீட்டில் யார் விருப்பமும் கேட்காமல் அவனுக்கு பிடித்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வந்தவள் வீட்டை கைப்பற்றிக் கொண்டாள்.
அதனால் சொந்த வீட்டிலேயே அவர்களின் நிலை மோசமாக அந்த நேரத்தில் தான் சுந்தரின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
தற்செயலாக சுந்தர் சென்னையில் சொந்த தொழில் தொடங்கி வளமாக இருப்பது தெரிய வர அவனுக்கு போன் செய்து அழுது அப்படி வந்தவர்கள் தான் இருவரும். அந்த மருமகள் போல இல்லாமல் மல்லி அடங்கிப்போக அவருக்கு வசதியாக போனது.
பத்து வருடங்களாக பெற்றவர்களை கவனிக்கவில்லை என்று சொல்லி சொல்லி சுந்தரின் குற்றவுணர்வைத் தூண்டி தூண்டி தங்களுக்கு வேண்டியதை பார்த்துக்கொண்டார்.
இப்போது அதற்கும் ஆபத்து என்றால் பதட்டம் வரும் தானே? அதோடு மல்லி மேல் அவருக்கு இன்னொரு கோபமும் உண்டு.
அண்ணாவின் வீட்டில் இருந்து சீர் வரிசைகளோடு மல்லிக்காடும் கொண்டு வர வேண்டியவள் பத்து பைசா இல்லாமல் மகனை மயக்கி கல்யாணம் செய்து கொண்டதை அவரால் ஏற்க முடியவில்லை.
மகன் தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பெண்ணின் மனதை கலைத்து அவள் வீட்டில் இருந்து பிரித்துக் கூட்டிக்கொண்டு போனான் என்பது அவர் வசதியாக மறந்து போன விஷயம்.
அப்படி வந்தவள் எப்படி இருக்க வேண்டும்? சுந்தர் அவளை தட்டி வைக்காமல் அவளை தாங்குவது காமாட்சிக்கு இன்னும் பொருமலை கூட்டியது. மல்லியை அடக்கி வைக்க வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டே இருந்தார்.
சின்ன சின்ன விஷயங்களில் கூட தன் அதிகாரத்தை காட்டினார். இன்று நடந்தது அவருக்கு வசதியாக இருக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.
நேற்று நடந்தது என்ன என்று அவருக்கு தெரியாதே! அதனால் சுந்தர் மல்லியிடம் இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு குழந்தை பிறந்த பிறகும் மயங்கி இருக்கிறான் என்று நினைத்தார். அப்படி இருந்தால் தங்கள் நிலை ஊரில் இருப்பது போல ஆகிவிடும் என்ற பயம் வேறு.
அம்மாவின் சத்தம் தாங்காமல் சுந்தர் கோபம் மல்லியின் பக்கம் திரும்பியது.
“ஏய் மல்லி! எங்கடி இருக்கே?” என்று அவன் சத்தம் போட்டபடி மல்லி இருந்த அறை வாசலுக்கு போக மல்லி இருவரின் சத்தத்தில் படுத்திருந்தவள் ஏற்கனவே எழுந்து உட்கார்ந்திருந்தாள்.
சுந்தர் கதவருகே நிற்கவும் எதுவும் பேசாமல் அவனையே தீர்க்கமாக பார்க்க சுந்தர் அதில் ஒரு நொடி தயங்கி நின்றான்.
அழுது அழுது வீங்கியிருந்த அவள் முகம், கலைந்த தலை, கசங்கிய புடவை எல்லாம் அவனுக்கு முந்தைய இரவை நினைவூட்டியது.
எப்போதுமே மல்லி காலையிலேயே குளித்து பளிச்சென்று புடவை அணிந்து சாமி கும்பிட்டு தான் சமையல் அறைக்கே போவாள்.
அப்படியே அவளைப் பார்த்து பழகி இருந்தவன் இப்போது அவள் இருந்த கோலத்தை பார்த்து தடுமாறி தான் போனான். இன்னும் அவன் அவளுக்கு தான் செய்த துரோகம் தெரியும் என்பதை அறியவில்லை. நேற்று சொன்னபடி ஒன்பது மணிக்கு வராமல் தாமதமாக வந்ததற்காக அழுதிருக்கிறாள் என்று நினைத்தான்.
அவள் இன்னும் முதல் நாள் கட்டிய புடவையிலேயே இருக்க அவளுக்கு இந்த வருஷம் எதுவும் வாங்கித் தரலை என்ற குறையா இருக்கும். அதுக்கு தான் இந்த தத்தி அழுதிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். (https://nuttyscientists.com/)
தெரியாததால் தான் செய்த குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?
மகன் வேகமாக வந்து மல்லியை பார்த்ததும் தயங்கி நிற்க தான் மந்தரித்து அனுப்பியதெல்லாம் பிசுபிசுத்துப் போனதில் காமாட்சி இன்னும் பேசினார்.
“பசங்க எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான் அம்மா முந்தானைய பிடிச்சிட்டு சுத்துவானுங்க. ஒருத்தி வந்திட்டாலோ அப்புறம் அவ முந்தானைய பிடிச்சிட்டு அம்மாவாவது ஒஒண்ணாவது..? எல்லாம் போச்சு…”
தாய் வரம்பு மீறி பேசுவதை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் அமைதியா நின்றிருந்த சுந்தர் மல்லிக்கு இன்னும் அந்நியமாகிப் போனான்.
உண்மையில் காலையில் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டதில் இருந்து அவள் யோசிக்க ஆரம்பித்திருந்தாள். சுந்தர் தனக்கு செய்தது பச்சை துரோகம். ஆனால் அதை தட்டிக் கேட்கப்போய் அவன் “ஆமாம் நான் அப்படித்தான் நீயும் உன் பொண்ணும் வெளிய போங்கடி…” என்று விட்டால் அவர்கள் கதி?
அதே நேரம் அவளால் அதை சகித்துக்கொண்டு இருக்கவும் முடியவில்லை. மனதுக்குள்ளே மருகிக்கொண்டிருந்தவளுக்கு இவர்கள் சண்டை ஒரு பொருட்டாகவே இல்லை.
அவர்களே பேசி முடிவுக்கு வரட்டும் என்று தான் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
இப்போதும் மல்லி சுந்தர் வந்து அதட்டவும் தப்பு செய்த அவனே தைரியமாக அவளை அதிகாரம் செய்யும்போது அவளுக்கு என்ன என்று துணிவாக இருந்தாள்.
சுந்தர் அவளிடம் இருந்து பதில் வரப்போவதில்லை என்று புரிந்ததும் அவனே பேச்சைத் தொடர்ந்தான்.
“ உனக்கு உடம்பு சரியில்லையா மல்லி….?” என்று தணிவாகவே கேட்டான். ஒரு அறை விட்டு வேலை சொல்லாமல் மகன் கெஞ்சிக் கொண்டிருக்க காமாட்சி பல்லைக் கடித்தார்.
மல்லி அதற்கும் உடனே பதில் சொல்லவில்லை. அவளின் இந்த நிலைக்கு காரணமானவனே தெரியாதது போல கேட்டால் என்ன பதில் சொல்ல?
அவனுக்கு பதில் பேசக்கூட அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் தலையை மட்டும் ஆட்ட சுந்தருக்கு என்ன தோன்றியதோ?
“சரி படுத்துக்க..! நான் பாத்துக்கறேன்…”
என்று சொல்லி வெளியேறி விட்டான்.
அப்போதும் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்காமல் தனக்கு வேண்டியதை பார்த்துக் கொள்வதாக சொன்னவனை நினைத்து கசப்பான முறுவல் வந்தது மல்லிக்கு. அழத்தான் கண்ணீர் வற்றிவிட்டதே?