சஞ்சீவின் கதறலில் திகைத்த எழில் குழந்தை பயந்து விடுமோ என்று அதை மேலும் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள அதற்குள் அதன் அழுகை பன்மடங்கு பெருகியதில் ஆங்காங்கு இருந்த ஊழியர்கள் ஒன்று கூடிவிட்டனர்.
சஞ்சீவின்தோள்களை பற்றி உலுக்கிய எழில், “உங்க வைஃப்க்கு என்ன ஆச்சு..??” என்று கேட்டபோது சஞ்சய் மேலும் வெடித்து கதற, “சஞ்சீவ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ப் எதுக்கு இப்படி கத்தறீங்க..??? குழந்தை பயப்படுது பாருங்க” என்றிட
அதற்குள் எழிலை நெருங்கிய செவிலியர் அவனிடம் இருந்து குழந்தையை பெற்று சமாதனபடுத்தவும் “சிஸ்டர் என்ன ஆச்சு எதனால சஞ்சீவ்இப்படி ..?” என்று அவன் நிலை குறித்து எழில் கேட்க..,
பல மாதங்களாக இங்கு வந்து செல்வதால் எழில் மற்றும் சஞ்சீவிடம் நன்கு பரிச்சயமாகி இருந்தவர், “சார் உங்களுக்கே தெரியும் அவங்களுக்கும் இது முதல் பிரவசவம்னு.., நாங்களும் எங்களால முடிஞ்சளவு முயற்சி பண்ணிட்டோம் அதுக்கும் மேல ஆண்டவனை தான் நாங்களும் நம்புறோம், தலைஎழுத்துன்னு ஒன்னு இருக்கிறதை யார் மாத்த முடியும்..?? ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்று பேசிக்கொண்டு போக அவரை தடுத்த எழில்,
“சிஸ்டர் நீங்க சொல்றது ஒன்னும் புரியலை… என்ன நடந்தது..??”
“ஏன் உங்களுக்கு தெரியாதா சார்..???”
“ஏங்க தெரியாமதானே கேட்கிறேன், சொல்லுங்க” என்றவன் அவர் கரங்களில் இருந்த குழந்தை இன்னும் அழுகையை நிறுத்தாமல் இருப்பதை கண்டு, “சிஸ்டர் முதல்ல குழந்தையை அதோட அம்மாகிட்ட கொடுங்க பசிக்கு அழுது போல..!!” என்று கூற,
“சார் அவரோட வைஃப்… என்று தொடங்கியவர் பின் தயங்கி சஞ்சீவைபார்த்துகொண்டே, “ஆல்ரெடி அவங்களுக்கு BP இஷு இருந்தது டெலிவரி அப்போ எதிர்பாரா விதமா வழக்கத்தை விடசடன் இன்க்ரீஸாகி ரொம்ப காம்ப்ளிகேட்ஆகிடுச்சு, சீப்டாக்டர் வந்து அட்டென்ட் பண்ணி ரொம்ப நேரம் அவங்களை காப்பாத்த போராடினாங்க ஆனா முடியலை, மடேர்னல் டெத்…ஷி இஸ் நோ மோர்” என்று கூற ஒரு நொடி தலைசுற்றி போனது எழிலுக்கு.
‘என்ன சொல்றீங்க சிஸ்டர்‘ என்று அதிர்ச்சியுடன் கேட்ட எழிலின் பார்வை அவனையும் அறியாமல் சஞ்சீவ் மேல் படிந்தது. மருத்துவமனையில் பரிட்சயமாகி சிலமாதங்களே ஆனாலும் இத்தனை சந்திப்புகளில் இருவருக்குள்ளும் மெல்லிய நட்பு இழையோடிக்கொண்டிருந்தது.
சஞ்சீவ் மைதிலி இருவருமே காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் புரிந்து வெற்றிகரமாக வாழ்ந்து வரும் தம்பதிகள். மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு அளித்து திருமணமான மூன்று வருடத்திற்கு பின் குழந்தைக்கு தயாராகி பிரசவத்திற்காக நேற்று அவர்களுக்கு முன்பாகவே மருத்துவமனையில் மனைவியை அனுமதித்து இருந்தான்.
காவல் துறையில் இருப்பதால் காதல் மனைவியின் பேறுகாலத்தில் பெரும்பாலும் உடன் இருக்க முடியாமல் போனாலும்கிடைக்கும் நேரத்தில்கைபேசி வாயிலாக அவள் நலனை அறிந்து கொள்பவன். அலரை சந்திக்கும் போது எல்லாம் மைதிலியின் பேச்சு முழுக்க முழுக்க குழந்தையை சுற்றியே இருக்கும் ஒரு குழந்தை என்று முடிவு செய்திருந்தவர்கள் அதன் திருமணம் வரை கற்பனை செய்து வைத்திருந்தனர்.
சந்திப்பின் போதெல்லாம்கம்பீரமே உருவான காவல்துறை ஆய்வாளனாகவே அவனை பார்த்திருந்த எழிலுக்கு வாழ்கையே தொலைந்த நிலையில் விரக்தியின் விளிம்பில் இருந்த சஞ்சீவின் நிலை பெரிதும் அச்சுறுத்தியது.
இருக்காதா பின்னே..!! அவர்களுக்கும் இது முதல் குழந்தை அதிலும் இத்தனை நேரமாக பிரசவ அறையில் தன்னவள் துடித்த துடிப்பே இன்னும் அவன் கண்களை விட்டு அகலாத நிலையில் இங்கு ஆருயிர் மனைவியின் பிரிவை தாள முடியாமல் கதறிக்கொண்டிருந்தவனால் எழிலின் மனநிலை மேலும் சிக்கலாகி போனது..
அவர்களை போலவே குழந்தை குறித்த எத்தனை கனவுகளுடன் இருந்தவர்கள் இப்போது அனைத்தும் கானல் நீராகிட, மனைவியின் பிரிவில் உயிர்ப்பற்று போயிருந்த சஞ்சீவ் அனைத்து சம்பிரதாயங்களுக்கு பிறகு வெள்ளை துணியில் மூடப்பட்டு இருந்த மனைவியின் உடலை பெற்று கொண்டு வாயிலுக்கு வர அவன் கரத்தில் குழந்தை அளிக்கப்பட்டது. அதை ஏந்தி கொண்டு மனைவியின் உடலை பார்த்தவாறு எதிர்காலத்தை தொலைத்தவனாய் வாகனத்தில் அமர்ந்த சஞ்சீவின் முகம் எழிலின் மனதில் ஆழ பதிந்துபோனது.
ஆம்புலன்ஸ் கிளம்பிய பலநிமிடங்களுக்கு பித்து பிடித்தாற்போல நின்றிருந்த எழிலை சாவின் விளிம்பை தொட்டு மீண்டிருக்கும் தன் மனைவியின் முகமே ஆக்கிரமிக்க அவசரமாக அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்று கைகூப்பி கண்மூடி மனமுருகி நின்றிருந்தவன் அடுத்தநொடியே அலரை தேடி அறைக்கு சென்றான். அங்கே அலர்விழியின் நஞ்சுகொடியை நீக்கி தையல் போட்டிருந்தவர்கள் இன்னும் சாதாரண அறைக்கு அனுப்பாமல் அப்ஸர்வேஷனில் வைத்திருந்தனர்.
மயக்கத்தில் இருந்த அலர்விழியை நெருங்கிய எழில் வாடிய கொடியாக கிடந்தவளின் நெற்றியில் நடுக்கத்துடன் முத்தமிட்டு தலைசாய்த்து கண்ணீர் உகுத்தவன் பதட்டத்துடன் அவளை முழுதாக உணர தொடங்க அதில் விலகிய அவள் போர்வையும் அதை தொடர்ந்து அவன் கண்ட காட்சியும் அவனை மிரட்சியுற செய்தது.
விழிகள் தெறிக்க எழில் அதிர்ந்து நின்றது சில நொடிகளே..!!
கண்டது காட்சிபிழையோ என்று தோன்ற அதை தெளிவுபடுத்த வேண்டி நெஞ்சம் தடதடக்க மெல்ல போர்வையை விலக்கி பார்க்க அங்கே பயிற்சி மருத்துவரின் அஜாக்கிரதையால் அலருக்கு போடபட்டிருந்த தையல் பிரிந்து வெளியேறிய குருதிஅவளுக்கு அணிவித்திருந்த மருத்தவமனை உடை தொடங்கி படுக்கை போர்வை வரை நிறைத்திருந்தது.
அவள் உடை, படுக்கை, போர்வை என்று எங்கு காணினும் செங்குருதியாய் காட்சியளிக்க கண்களை இருட்டி கொண்டு வந்தது எழிலுக்கு. அதிர்ந்து நின்றவனின் மனதில் ஆயிரம் கனவுடன் மருத்துவமனைக்கு வந்த சஞ்சீவ் மனைவியை எவ்வாறு கொண்டு சென்றான் என்பது நிழலாட இப்போது அவனுக்கு பதில் எழிலும் கையில் அவன் குழந்தையுமாக காட்சி மாறுவதை கண்டு அதிர்ந்து போனவன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு பதட்டமான குரலில், ‘அமுலு‘ என்று அவள் கன்னம் தட்டி பார்க்க அசைவில்லை அலரிடம்.
பட்ட காலிலே படும் என்பதற்கிணங்க இங்கே மனைவியின் பிரசவ வேதனை ஆறடி ஆண்மகனை வேரோடு வீழ்த்தி இருந்ததென்றால் அடுத்து மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் நின்றிருந்த நண்பனின் கோலம் அவன் மனதில் ஆறா வடுவாகிட அதை மேலும் மெருகூட்டுவது போல தன்னவளின் செங்குருதி என்று அடுத்தடுத்து அடிகள் பலமாக அவன் மனதில் விழுந்து அதை கிழித்து ரணமாக்க உயிர்ப்பற்று போனான்.
அலர்விழியின் நிலையை கண்டு ‘டாக்டர்‘ என்ற எழிலின் கர்ஜனையில் பக்கத்து அறைக்கு சென்றிருந்த செவிலியர் ஓடி வந்து உடனே அலருக்கு முதலுதவி செய்தவர் அலரின் நிலையை தலைமை மருத்துவருக்கு தெரிவிக்கவும் தவறவில்லை.
இந்தியாவில் நடைபெறும் பிரசவநேர இறப்புகளில் மூன்றில் இரண்டிற்கு காரணம் பிரசவத்தின் போது ஏற்படும் அதீத உதிர போக்கு என்றுஆய்வுகள் தெரிவிக்கையில் சுசீலா எப்போதுமே அதில் பெரும் கவனம் எடுத்து அதீத சிரத்தையுடன் தாயின் நிலையை கண்காணிப்பர். அப்படிபட்டவர் அறையினுள் நுழைந்ததும் அலரின் நிலையை கண்டு திகைத்து நின்றது நொடிக்கும் குறைவான நேரமே மறுநொடி அவர் பார்வை அலரின் அருகே இறுக்கமாக அவள் கரங்களை பிடித்து கொண்டு நின்றிருந்த எழிலின் மீதுதான் பதிய சகமனுஷியாக அல்லாமல் மருத்துவராக அவன் நிலையை உணர்ந்தவருக்கேஅவனது கோலம் நெஞ்சை உலுக்கிவிட்டது.
சகமனுஷியாக அவன் நிலைக்கு வருத்தப்பட்டு கொண்டு நின்றால் தீர்வு கிட்டாது என்பதால் தூரிதமாக செயல்பட்டவர் அடுத்த சிலநிமிடங்களில் அலரின் ரத்த போக்கை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். பிரிந்திருந்த தையல்களை கத்தரித்து மீண்டும் புதிதாக தையலிட தன்னவளின் பெண்மையின் ரணத்தை கண்ட எழிலின் விழிகள் நிலைகுத்தி போயி அவனை உருக்குலைத்து விட்டது.
சுசீலா தையலிட்டு முடிக்கும்வரைஅங்கு மயான அமைதி நிலவ பயிற்சி மருத்துவர் மற்றும்செவிலியர் தவிர அனைவர் முகத்திலும் உணர்ச்சி அற்று போயிருந்தது, பின்னே அவர்கள் மருத்துவமனையில் எதிர்பாராவிதமாக ஏற்பட்டிருக்கும் மைதிலியின் முதல் இறப்பு அத்துடன் சேர்ந்துபயிற்சி மருத்துவரின் அலட்சியபோக்கால் ஆபத்தான நிலையில் இருக்கும் அலர்.
சரியான நேரத்தில் கவனிக்கபடாமல் போயிருந்தால் மற்றொரு உயிரையும் குடித்திருக்கும் அல்லவா…!!!
தையலிட்டு முடித்த மருத்துவருக்கும் என்ன சொல்லி எழிலை தேற்றுவது என்று புரியாமல் போக, மிஸ்டர் எழிலன் என்னோட ஸ்டாஃப் பண்ணின தவறுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றுபலமுறை மன்னிப்பு வேண்டிய சுசீலா மைதிலியின் இறப்பின் பொருட்டு அசாதாரண சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் இல்லையெனில் தான் ஒருமுறை வந்து அலரைமுழுமையாக பரிசோதனை செய்திருக்க கூடும் என்று கூற,
இறுகிய முகத்துடன் நின்றிருந்த எழிலின் பார்வை உன்னை நம்பிதானே விட்டு சென்றேன் இதுதான் உன் தொழில் தர்மமா..?? என்பதாக அமைய
அதுவரை அங்கு அறையின் மூலையில் குற்ற உணர்வுடன் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த செவிலியர் எழிலின் முன் வந்து கைகூப்பி, “சார் ப்ளீஸ் மன்னிச்சிடுங்க சார்.., நிச்சயமா நானும் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை பக்கத்து ரூம்ல பிறந்திருந்த ரெட்டை குழந்தைகளுக்கு திடீர்னு மூச்சு பிரச்சனை என்னை உதவிக்கு கூப்டாங்க அப்பவும் நான் மேடமை செக் பண்ணிட்டு பேட் மாத்திட்டுதான் போனேன்… பத்து நிமிஷம்கூட ஆகியிருக்காது அதுக்குள்ள இப்படி” என்று அச்சத்துடன் விளக்கமளிக்க முற்ப்பட,
எழிலோ எதையும் உணர முடியா நிலையில் நின்றிருந்தவன் அவர்களை உணர்வற்ற பார்வை பார்த்தானே அன்றி வேறேதும் கேட்கவில்லை. சுசீலா தான் மீண்டும் மீண்டும் அவனிடம் மன்னிப்பு கேட்டவர் வெளியில் இருந்த நாதன் உள்ளிட்டோரிடம் சூழ்நிலையை விளக்கி அவர்களிடமும் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டிருந்தார்..,
அதன்பின்அறைக்கு வந்தவர் அலர்விழி கண்விழிக்கும் வரை காத்திருந்து மீண்டுமொருமுறை அவளை பரிசோதித்தபின் நார்மல் அறைக்கு மாற்றி இருந்தார்..
அலர்கண்விழித்த போது அவளவன் அவளின் அகனெழிலன் மனதளவில் முழுதாக மரணித்திருந்தான். எழிலின் கண்களில் திரண்டிருந்த கண்ணீரின் ஒற்றை துளி அலரின் பார்வையில்உருண்டோடி அலர் மீது விழுந்தது.
கணவனை அதன் தாக்கத்தில் இருந்து மீட்டு உயிர்த்தெழ செய்வது அலருக்கு பெரும் சவாலாக அமைந்துபோனது.
*******************************************
பதினோராவது நாள் குழந்தைக்கும் அலருக்கும் தலைக்கு ஊற்றியதுமே நாதன் அம்மாதத்திலேயே பேரனுக்கு பெயர் வைப்பதற்காக பஞ்சாங்கம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
“இப்பவே என்ன நாதா அவசரம் மெதுவா வச்சிக்கலாமே”
“என்னக்கா பேசுற எல்லாம் காலாகாலத்துல நடக்க வேண்டாமா..?? அதான் அமுலுக்கும் குழந்தைக்கும் தலைக்கு ஊத்திட்டோமே என்றவர் அருகே இருந்த நந்தனிடமும்அடுத்த வாரத்தில் நல்லநாள் இருப்பதாகவும் அன்றே பெயர் சூட்டு விழாவை சென்னையில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூற அவரும் சரி என்றிருந்தார்.
அப்போதுதான் அலருக்கு காலை உணவை ஊட்டி முடித்து மாத்திரை மருந்துகளைஅளித்து ஓய்வு எடுக்குமாறு கூறிய அகனெழிலன் குழந்தையுடன் வெளியில் வர நாதனின் பேச்சு அவனுக்கு எரிச்சலூட்டி இருந்தது.
பின்னே நாதன் அடுத்த வாரம் புதன்காலை ஒன்பது முதல் பத்தரை வரை நேரம் நன்றாக இருப்பதாக கூறி அன்றே பெயர் சூட்டு விழாவை வைத்துகொள்ளலாம் என்று கூறவும் இங்கேயே தங்கள் வீட்டில் வைத்து கொள்ளலாமே என்று கூறவந்தநந்தன் ஏனோ அமைதியாகிட,
“பிறந்த பிள்ளையை தூக்கிட்டு அவ்ளோதூரம் போகனுமா..?? இங்கேயே வச்சிக்கலாமே என்று நந்தனின் மனதை படித்தவராக நீலா கேட்க,
நாதன் பதிலளிக்கும்முன், “இப்போ எந்த ஏற்பாடும் பண்ணவேண்டாம்நீலாம்மாஇன்னும் ரெண்டு மாசம் போகட்டும்அப்புறம் வச்சிக்கலாம்” என்று எழில் கூறவும்,
“ஏன் ஏன்..? ஏன்க்கா அது அது காலாகாலத்துல நடந்தாதானே மரியாதை” என்றார் நாதன்.
“நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா..?? காலாகாலத்துல காலாகாலத்துலன்னுசொல்லி சொல்லியே அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கீங்க…,போங்க போய் வேற வேலை இருந்தா போய் பாருங்க என் குழந்தைக்கு எப்போ எதை பண்ணனும்னு எனக்கு தெரியும்” என்று குழந்தையுடன் நாதன் எதிரே அமர்ந்தவன் என்றுமில்லாத கடுமையுடன் உறுமினான்.
அதைகேட்ட நாதனின் முகத்தில் ஈயாடவில்லை, என்றுமே தன் கருத்துக்கு எதிராகவே பேசுபவன் என்று எண்ணி இருந்தவருக்கு முகத்தில் அடித்தார் போன்ற எழிலின் பதில் பேரதிர்ச்சியே..!!
“டேய் என்ன பேச்சு இது” என்று நந்தன் எழிலை கண்டிக்க முற்ப்பட,
‘இருங்க மச்சான்‘ என்று நந்தனை தடுத்தவர், எழிலிடம் நேரிடையாகவே, “ஏன் என் பொண்ணுக்கு என்ன..??, அப்படி என்ன நிலையில நான் நிறுத்திட்டேன்” என்று நாதன் அழுத்தத்துடன் கேட்க,
நீருபூத்த நெருப்பாக அவன் மனதில் இருந்தவை இன்று அவன் கட்டுபாடுகளை தகர்த்துக்கொண்டு வெளிப்பட்டது, “என்ன பண்ணலை..??? இதுவரைக்கும் நீங்க செய்யாததுன்னு ஏதாவது இருக்கா..?? அதுதான் ட்ரைனிங் போனபோது அவளை இங்க விட்டுட்டு போனதுக்கு உங்களால என்ன பண்ண முடியுமோ அதை ரொம்ப சிறப்பா பண்ணிடீங்களே அதுவே போதாதா…??? என்றவனின் ஆற்றாமை அதிகரிக்க இப்போது எழுந்து சென்று நாதனின் முன் நின்றவன்
“அவளுக்கு வயசு என்ன..??? அதுக்குள்ளவே இப்ப குழந்தைக்கு என்ன அவசரம்… ” என்று உரத்த குரலில் எழில் தொடங்கவும் அவனை பிடித்திழுத்து நந்தன் இருக்கையில் அமர்த்த,
“அதுதானே வழக்கம் கல்யாணம் ஆனதும் காலாகாலத்துல குழந்தை பெத்துக்குறதுல என்ன தப்பு இருக்கு” என்று நாதனும் பதிலுக்கு எகிற,
நீலாவோ எங்கே இருவரின் வாதம் பெரும் பிரச்சனையில் சென்று முடியுமோ என்று இடையிட்டவர் , “நாதா கொஞ்சம் அமைதியா இரு நான் பேசிக்கிறேன்” என்று அமைதிபடுத்தியவர் எழிலிடம், “ஏன்யா என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுற” என்று கேட்க,
அவர் அவ்வாறு கேட்டது தான் தாமதம் பிரசவத்தின் போது மட்டுமல்லாது அதன் பின்பான இத்தனை நாட்களும் தன்னவள் பட்டு கொண்டிருக்கும் அவஸ்தைகள் அனைத்தும் எழிலின் கண்முன் விரிந்ததில் அவன் முகம் வேதனையில் கசங்கிடஅவனையும் மீறி விழிகளில் நீர் திரண்டுவிட்டது.
நெஞ்சை அழுத்தும் நினைவுகளின் தாக்கத்தை தாங்க இயலாமல்முகத்தை அழுந்த துடைத்தவன்பிரசவத்திற்கு பின்பும் தன்னவள் படும் கஷ்டங்களைஅவரிடம் எவ்வாறு கூறுவான்.
பின்னே! அலரை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தது முதலே வளர்மதியும் நீலாவும் அலரின் உணவு முதலிய புறதேவைகளையும் குழந்தையையும் கவனித்து கொள்ள அலரின் கோரிக்கை நிராகரிக்க முடியாமல் அன்று முதல் எழில் மனைவிக்கு மற்றொரு தாயாகி சேவகம் செய்து கொண்டிருக்கிறான் என்றால் மிகையல்ல…!!
மனைவியின் பிரசவத்தின் போது உடனிருக்கும் ஆண்களில்எத்தனை பேர் அதன் பின்பான நாட்களில் உடன் இருந்து மனைவியின் உடல்நிலையை தேற்றி இருப்பர் என்று தெரியாது ஆனால் இங்கு அலர் நாதனின் வீட்டிற்கு வந்ததில் இருந்தே அவளைவிட்டு இம்மியும் நகராமல் அவளருகேயே இருந்து அவளின் தேவைகளை கவனிப்பவன்அவளுக்கு மற்றொரு தாயாகி அனைத்து நிலைகளிலும் அவளை தாங்கி இருந்தான்.
அலர்விழி காலை கடன்களை முடிப்பதில் உதவுவது தொடங்கி சரியான நேரத்திற்கு உணவு ஊட்டிமருந்து மாத்திரைகளை அளிப்பதுவரை அனைத்தையும் சிரத்தை எடுத்து செய்பவன் அதன்பின் குழந்தையை அவள் மடியில் வசதியாக படுக்க வைப்பது அவள் பாலூட்டி முடித்ததும் தோளிலிட்டு தூங்கவைப்பது என நாள் முழுக்க அலரின் அருகே இருந்து கண்ணும் கருத்துமாக அவளை பார்த்து கொண்டிருப்பவனுக்கு அல்லவா தெரியும் இருமுறை தையலிட்டதில் அவளின் பெண்மை எத்தனை ஆழமாக புரையோடி இருக்கிறது என்பது..!!
இயற்கை உபாதைகளின் போது உயிர்வலி கொள்பவளை காண்பவனின் நெஞ்சம் கனத்துபோகஅவளுக்கு ஏற்படும் கடும் வலியும் அதை தொடர்ந்து தன்னவளின் வேதனை சுமந்த முகமும் அவன் மனக்கண்ணை விட்டு அகலாது போகும்.
முதல் இருநாட்கள் அவளுக்கு ஏன் இந்த வலியும் அவஸ்தையும் என்று புரியாமல் நின்றவன் அன்றே மருத்துவரிடம் அழைத்து செல்ல அதன்பின்பே தையலிட்ட இடத்தில் புரையோடி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எழிலிடம் அவளை மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து கொள்ளுமாறு கூறி களிம்பையும் அளித்திருந்தார்.
நாள்தோறும் அவள் காயத்திற்குமருந்திடுபவன் நெஞ்சம் அவள் ரணத்தை கண்டு துடிதுடித்து ஊமையாய் கண்ணீர் வடிக்க அலரோ அவளுக்கு மருந்திடுகையில் எல்லாம், “ரொம்ப வலிக்குது மாமா..!! காயம் ஆறிடுச்சா..எப்போ சரியாகும்..??” என்று கலங்கிய விழிகளுடன் கேட்கும் போதெல்லாம்எழில் ஒவ்வொருமுறையும் செத்து பிழைத்தான் என்றுதான் கூறவேண்டும்.
நீலா மற்றும் வளர்மதிக்கு சாதாரண பிரசவத்தின் போது போடப்படும் தையல் குறித்த புரிதல் இருந்ததால் அழைத்து வந்த முதல்நாளே அலருக்கு அறிவுரை அளித்திருந்தனர்.
அதையும் மீறி புரையோடி போனதை அறிந்தவர்கள் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறி அவ்வப்போது விசாரித்து கொண்டிருந்தனரே தவிர யாரையும் அவள் ரணத்திற்கு மருந்திட அலர் அனுமதிக்கவில்லை.
அதை மனதில் வைத்து தான் நீலாவும் நாதனிடம் விசேஷத்தை தள்ளி போடுமாறு கூறி இருந்தார்.
பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு தன்னவளின் நிலை இவ்வாறு இருக்க அவளால் நிச்சயம்இந்நிலையில் மூன்று மணி நேரம் பயணம் செய்ய இயலாது அதுபோலவேஇங்கே தங்கள் பூர்வீக வீட்டில் செய்ய நாதன் நிச்சயம் ஒத்துகொள்ள மாட்டார் என்பதும் தெரியும். அதனாலேயேஇருமாதங்களுக்கு பின்பு விசேஷத்தை வைத்து கொள்ளுமாறு கூறியது.
ஆனால்அதை கொஞ்சமும் ஏற்காமல் நீலா எடுத்து கூறியும் புரிந்து கொள்ளாமல் என்றும் போல ‘காலாகாலத்துல‘ என்று அதே பல்லவியை பாடிக்கொண்டிருந்த நாதனின் மீதான எழிலின் கோபம் கரையை கடந்திருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
“சொல்லு எழிலு என்ன ஆச்சு” என்று மீண்டும் நீலா கேட்க,
அதீத அழுத்தத்துடன் நாதனையே வெறித்து கொண்டு அமர்ந்திருந்தவன், “பின்ன என்ன நீலாம்மா..!! எல்லாத்துலையும் அவசரபடறது, கல்யாணம் ஆனதும் உடனே குழந்தை பெத்துக்கனும்னு சட்டமா என்ன..?? என்று சீறியவன் சட்டமே பெண்ணுக்கான திருமண வயது இருபத்தி ஒண்ணுன்னு சொல்லுது ஆனா எங்களுக்கு சந்தர்ப்ப வசத்தால அதுக்கு முன்னமே கல்யாணம் ஆகிடுச்சி இல்லைன்னு சொல்லலை, அதுக்காக உடனே குழந்தையும் இருக்கணும்னு என்ன கட்டாயம்…!!”
“இது எங்களோட பர்சனல் சாய்ஸ் எப்போ பெத்துகனும்னு நாங்க முடிவு பண்ணிக்குறோம் என்று நாதனை வெறுப்புடன் பார்த்தவன் இன்னும் அவ படிப்புகூட முடியலை நீலாம்மா என்னைக்குமே இவர் மத்தவங்க சூழலை புரிஞ்சிக்கிறது கிடையாது..!! அடுத்தவங்களோட விருப்பு வெறுப்பு பத்தின கவலை இல்லை எப்பவும் தன்னோட முடிவை அடுத்தவங்க மேல திணிக்கிறதுன்னு இவர் பண்ணாதது ஏதாவது இருக்கா..??” என்று நாதனை முறைத்தவன்,
“இப்போகூட நீங்க சொல்றீங்க.., நான் சொல்றேன் யாரோட வார்த்தையும் அவர் மதிக்க தயாரா இல்லை.அவ ஹாஸ்பிட்டல் இருந்து வந்து முழுசா ரெண்டு வாரம்கூட ஆகலை நீலாம்மா அதுக்குள்ளே அவளை கூட்டிட்டு மூணு மணிநேரம் சென்னைக்கு போய் குழந்தைக்கு பெயர் வைக்கணும்னு என்ன அவசியம்..??”
“அவளால முடியுமான்னு கூட யோசிக்கலை…, அப்படி என்ன சுயநலம், யாருக்காக, இல்லை எதை நிருபிக்கிறதுக்காகபொண்ணோட கஷ்டத்தைகூட புரிஞ்சிக்காம இப்படி பண்ணிட்டு இருக்காரு” என்றவனுக்கு தன்னவள் படும் கஷ்டங்களை எண்ணி என்ன முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் விழிகளில் இருந்து நீர் உருண்டோட அதை புறங்கையால் துடைத்தவன்,
“ஒரு ரெண்டு மாசம் காத்திருந்தா குறைஞ்சா போயிடுவாரு, என் பொண்டாட்டி என்னமனுஷியா இல்லை மெஷினா இவர் கேட்டதும் பிள்ளை பெத்து கொடுக்கணும்.., இவர் சொன்னதும் சென்னைக்கு ஓடி வரணும்.., இவர் ஆட்டி வைக்கிறபடி எல்லாம் ஆடணும்னு என்ன இருக்கு..!!”
“இவரோட அதிகாரத்தை எல்லாம் அவர் பொண்டாட்டியோட நிறுத்திக்க சொல்லுங்க என் பொண்டாட்டிவரை வேண்டாம்”என்று தன் உள்ள கொதிப்பை கொட்டி தீர்த்தவனின் வார்த்தைகளிலும் ஆக்ரோஷத்திலும் ஸ்தம்பித்து போனார் நாதன்.
மனைவியின் பிரசவத்தின் போதும் அதன் பின்பும் அவள் அனுபவித்ததற்கு மேலாக உயிர் வலி கொண்டு அதில் அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும்ஆடவனின் ஆதங்கத்தின் வெளிப்பாடான வார்த்தைகள் ஒவ்வொன்றும்மகளை மட்டுமே உயிராக கொண்டிருக்கும் நாதனிடம் தவறான கோணத்தில் சரியாகசென்று சேர அன்றுமுதல் எழில் அவருக்கு வேப்பங்காயாக கசந்து போனான்.