வாயிலின் பெரிய இரும்பு கதவுகளை திறந்து உள் சென்றால், சில அடிகளில் முதலிலிருக்கும் வீடு கிருஷ்ணனுடையது.
வெளியவே வண்டியை நிறுத்திய வாழி, சுவலட்சுமிக்கு அழைத்து ராதா எங்கிருக்கிறார் என்று விசாரித்தான்.
“நம்ம வீட்டில் தான் இருக்கா(ள்) வாழி. தனு இன்னும் வீட்டுக்கு வரலன்னு கவலையா உட்கார்ந்திருந்தாள். நான்தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றவர், “வந்துட்டியாடா?” எனக் கேட்டார்.
முதல் கை பிடி. அவளறியாது இயல்பாய் விடுவித்துக்கொண்டான்.
“ஆச்சரியமா இருக்கே!” இருவரின் அருகில் வந்த சேகரன் வினவினார்.
“ஏன் நாங்கெல்லாம் இங்கு வரக்கூடாதா? இது எங்கப்பா ஷாப். ஓனரே நான் தான்” என்றான் வாழி.
தனுவை சாதரணமாக்கிட வாழி அவ்வாறு பேசினான்.
“நான் எப்போடா இல்லைன்னு சொன்னேன். எங்களோடது எல்லாம் உங்க ரெண்டு பேருக்குதானே” என்றவர், “நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கிறது தாண்டா ஆச்சரியமா இருக்குன்னு கேட்டேன்” என்றார்.
“ஏன் நாங்க வரக்கூடாதா?”
“எதுக்குடா விதண்டாவாதம் பேசுற? ரெண்டு பேரும் இப்படி தனியா எங்கேயும் போனதில்லையேன்னு கேட்டேன்” என்றவர், “நீயென்ன யூனிபார்மில் இருக்க?” என்று வினவினார்.
“எத்தனை கேள்விப்பா கேட்குறீங்க?” என்று அலுப்பாகக் கூறிய வாழிக்கு சட்டென்று பொய் சொல்லவும் வரவில்லை.
இடையில் ஒரு கை குற்றி நெற்றியை இன்னொரு கையால் தேய்த்தவனாக தனுவை ஏறிட, அவளோ குற்றவுணர்வால் சேகரனின் முகம் பார்த்திட முடியாது தலை கவிழ்ந்திருந்தாள்.
“நீயா தனுக்குட்டியை கூட்டி வந்தாய்?”
“அப்பா போதும். எல்லாம் வீட்டில் பேசலாம். நீங்க இங்க இந்நேரம் இருக்கமாட்டீங்கன்னு நினைச்சு வந்துட்டேன். தன்வியை வீட்டில் விட்டுட்டு ஸ்டேஷன் போகணும்” என்றவன் தந்தையின் யோசனையான பார்வையை கண்டு கொள்ளாதவனாக அவளை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.
தன் தந்தை முன்பு நிற்பதற்கே அத்தனை குறுகியவள், நிச்சயம் ராதா முன்பு முற்றிலும் உடைந்து விடுவாள் என்பதாலேயே தன் அன்னையிடம் அழைத்து ராதா எங்கிருக்கிறார் என்று கேட்டு அறிந்த பின்னர் தனுவை காம்பவுண்டிற்குள் அழைத்துச் சென்றான்.
வாழி நீட்டிய பையினை வங்காதவள்,
“அதை நீங்களே குப்பையில் போட்டுவிடுங்க” என்றவளாக திரும்பி உள் சென்றாள்.
தானாக வழியும் கண்ணீரை எப்படி கட்டுப்படுத்துவதென்றே அவளுக்கு தெரியவில்லை.
செல்லும் அவளையே பார்த்திருந்த வாழி,
“சீக்கிரம் உன்னை சரி பண்ணனும்” என்று சொல்லிக்கொண்டவனாக சற்று உள் சென்று தன்னுடைய வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தினான்.
அவனின் வண்டி சத்தத்தில் வெளிவந்த ராதாவும், லட்சுவும் தனு எங்கே என்று கேட்டிட, அவன் அவளின் வீட்டை காண்பித்தான்.
ராதா வேகமாக அங்கு செல்ல அடி வைத்திட…
“அத்தை” என்று விளித்து நிறுத்தினான் வாழியாதன்.
“தன்வி…” தன் புருவத்தை விரல் நகத்தால் கீறியவனாக, “எதுவும் கேட்காதீங்க. கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்காள்” என்றான்.
ராதாவிடம் சட்டென்று ஒரு பதட்டம்.
“என்னடா சொல்ற? மனசு சரியில்லையா?”
“அச்சோ அத்தை” என்றவன், “லாஸ்ட் போட்டோ ஷூட் ரியாஸ் சொதப்பிட்டான் போல. அதில் அப்செட்டா இருக்காள்” என்று இல்லாததைக் கூறி அவரை சமாளித்து, வீட்டிற்குள் கூட செல்லாது காவல்நிலையம் செல்ல வேண்டுமென்று புறப்படுவிட்டான்.
ஆனால் வாழி நேராக சென்றது தனுவின் ஸ்டுடியோவிற்கு.
தனு புகைப்படத்துறையில் பட்டம் பெற்றிருக்கிறாள். சிறு வயதிலிருந்தே அவளுக்கு புகைப்படம் எடுப்பதில் அலாதி ஆர்வம். அதீத விருப்பமும்.
எந்நேரமும் தோட்டத்தில் ராதாவின் அலைப்பேசியுடன் தான் பார்க்கும் அனைத்தையும் ரசிப்புடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பாள்.
எல்லோரும் பார்க்கும் கோணத்திலிருந்து மாறுபட்டிருக்கும் அவளுடைய நிழலுருவம்.
அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதில் அவளது ஆர்வமும் வளர்ந்துகொண்டே வந்தது.
பள்ளி முடித்து புகைப்படத்துறையில் பட்டம் பெற விருப்பம் தெரிவித்திட…
“அதிலென்ன பியூச்சர் இருக்கிறது?” என்று கிருஷ்ணன் தன் மறுப்பை தெரிவித்தார்.
தனுவின் முதல் ரசிகன் வாழி தான்.
அவள் அலைப்பேசியில் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் சுவலட்சுமியிடம் காட்டி அவரின் கருத்தை கேட்பாள். அந்த வகையில் லட்சுமியின் கேலரியில் தனு எடுத்த புகைப்படங்கள் நிரம்பியிருக்கும். ஒவ்வொன்றும் அத்தனை அழகாய் இருப்பதை ஒருமுறை தற்செயலாக பார்வையிட்ட வாழிக்கு, தனுவிற்கு இதிலிருக்கும் ஆர்வமும், விருப்பமும் பிடிபட்டது.
‘சாதாரணமான விடயம். எல்லோரும் தான் புகைப்படம் எடுக்கின்றனர். இவள் எடுப்பது மட்டும் எப்படி வேறொரு கோணத்தில் இத்தனை அழகாக இருக்கிறது?’ அவ்வவ்வபோது நினைத்துக்கொள்வான்.
கிருஷ்ணன் மறுத்த போது, தனு ஆதரவிற்கு சென்று நின்றது வாழியிடம் தான்.
வாழி சொன்னால் எதையும் செய்திடுவார் கிருஷ்ணன். அவனிடம் மறுத்து பேசிட என்றுமே அவரால் முடிந்ததில்லை.
“எனக்கு போட்டோகிராஃபி படிக்கணும்.”
நண்பனுடன் அலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த வாழி, குரல் கேட்டு திரும்பிட தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் தனு.
“அப்புறம் பேசுறேன்டா” என்று காலினை கட் செய்தவன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, அவளை பார்த்து நிமிர்ந்து நின்றான்.
“எதுவாயிருந்தாலும் என் முகத்தை பார்த்து பேசணும் தன்வி…தா.”
“அதான் வரமாட்டேங்குது தெரியும்ல உங்களுக்கு” என்றவள், அவன் முகம் பார்த்து இமை தாழ்த்தியிருந்தாள்.
“இவ்ளோ நாள் வரலன்னா பரவாயில்லை. இப்போ பார்த்து சொல்லு.” அவனது பிடியில் அவன் நிலையாக நின்றான்.
வாழியின் முகம் பார்த்தவள்,
“அப்பா நீங்க சொன்னா கேட்பாங்க. எனக்கு போட்டோகிராஃபி படிக்கணும். முடியாது சொல்றாங்க.” முகம் சுருக்கி கூறினாள்.
“உனக்கு என்ன வேணுமோ அதை நீதான் கேட்கணும்.”
அவ்வாறு சொல்லிய வாழியை முறைத்தவள்…
“ரொம்பத்தான்… உங்களால அப்பாவை சம்மதிக்க வைக்க முடியுமா முடியாதா?”
“இப்போ மட்டும் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்குறியே!”
“ம்ப்ச்… ப்ளீஸ்’ப்பா…”
“அப்போ என்னை ஒரு ஃபோட்டோ எடு” என்றவன் தன்னுடைய மொபைலை அவளிடம் தூக்கிப்போட்டான்.
வயதில் பெரியவன் என்பதால் எப்போதும் அவனை அவள் பெயர் சொல்லி அழைத்ததில்லை. இன்று சந்தோஷத்தில் தன்னைப்போல் சொல்லியிருந்தாள்.
அந்த அழைப்பு அவனுக்கு பிடித்தும் இருந்தது.
வாழியை இதுவரை யாரும் வாழ் என்று புள்ளி வைத்து விளித்தது இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.
“வாழ்.” ஒருமுறை சாதாரணமாக சொல்லிக்கொண்டான்.
வாழி கிருஷ்ணனிடம் “தன்விக்கு பிடித்ததை படிக்கட்டும். அவளுக்கு விருப்பம் இருந்தால் தான் நீங்க சொல்வதை படித்தாலும், அதில் ஷைன் ஆகமுடியும். விருப்பமில்லாமல் ஒன்றோடு ஒன்ற முடியாது மாமா” என்றான்.
“அவள் விருப்பப்பட்டது படிக்கட்டும் சொல்ல வேண்டியதுதாண்டா! அதுக்கெதுக்குடா மூச்சு பிடிச்சுக்கிட்டு டயலாக் பேசுற?”
“பொம்பளை பிள்ளைடா… ஒரு போலீஸா நாட்டுல நடக்கிறதை எவ்வளவு பார்க்கிறேன். காமிராவை மாட்டிக்கிட்டு சுத்துறது நல்லாவா இருக்கும்? அவளுக்கு இப்படி சுத்துறதுலாம் ஒத்துவருமா?” என்று தன் ஆதங்கத்தைக் கூறினார்.
“ஆசைக்கு கனவுக்கெல்லாம் ஜென்டர் வேறுபாடு கிடையாது கிருஷ்ணன்” என்ற வாழி, “அவள் படிச்சு முடிச்சதும் ஸ்டுடியோ ஸ்டார்ட் பண்ணனும் சொல்லும் போதாவது இப்போ மறுத்த மாதிரி எதுவும் பேசாது… சட்டுன்னு ஓகே சொல்லிடுங்க” என்று இப்போதே அவளின் ஆசைக்காக பேசினான்.
எப்படியும் தனக்காக வாழி தந்தையிடம் பேசுவானென்று தெரிந்த தனு, அவர்களுக்குள் என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அக்கணம் வாழியின் மீது பிடித்தம் தாண்டி அளவுக்கு அதிகமான மரியாதை உண்டானது.
அவள் சொல்லாமலே அவளின் வருங்காலத்தில் கனவை நிறைவேற்றிட அடித்தளம் அமைக்கின்றானே! அவளின் மனதில் உயர்வாய் இடம் பிடித்திருந்தான்.
“அவள் உன்கிட்ட சொன்னாளா? ஸ்டுடியோ ஸ்டார்ட் பண்ணனும் அப்படின்னு…”
“படிச்சிட்டு சும்மா இருப்பாங்களா?” என்றவன், “நீங்க நோ சொன்னால், நான் வச்சிக்கொடுப்பேன்” என்றதோடு, “அவள் இதில் எவ்வளவு பெரிய ஆளா மட்டும் வரா(ள்)ன்னு பாருங்க” என்றான். அவளின் திறமையின் மீது அவளுக்கும் அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தான் வாழி.
பிடித்தமான துறையில் படிப்பு என்றதும் உற்சாகமாக அதீத நாட்டத்தோடு பயின்றாள்.
அதன் பின்னர் வாழியிடம் அவள் பேசிடவில்லை. அவனும் பேசவில்லை. பார்க்கும் சமயங்களில் சிறு புன்னகை அவளிடம். அவனிடம் அதுவுமிருக்காது. ஆனால் அவளின் பாதுகாப்பில் நிழல் போல் இருந்தான்.
கிருஷ்ணனை சம்மதிக்க வைத்ததற்காக வாழிக்கு நன்றி சொல்ல நினைத்தவள் அதனை வாய் வார்த்தையாக சொல்லாது,
ஒருநாள் தோட்டத்தில் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கடல் வான் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து பருத்த மரம் ஒன்றின் தண்டில் ஒரு கால் பின்னோக்கி ஊன்றி மற்றொரு கால் தரையில் பதிந்திருக்க சாய்ந்திருந்தவனின் கையில் அலைப்பேசி இடம் பெற்றிருந்தது. அதனை இரு கைகளிலும் ஏந்தி… அலைப்பேசியின் திரையில் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
இரு தினங்களுக்கு முன்பு தான் வாழி லேட்டஸ்ட் மாடல் காமிரா ஒன்றை தன்விக்கு வாங்கிக் கொடுத்திருந்தான்.
அக்காமிராவில் தன் கண்களில் விரிந்த காட்சியை கிளிக் செய்தவள்… உடனடியாக அவனுக்கு அனுப்பியும் வைத்தாள்.
தனு காமிராவோடு தன் பக்கவாட்டில் நிற்கும் போதே வாழி கவனித்துவிட்டான். தன்னை ஃபோட்டோ எடுக்கிறாள் என்று அறிந்ததும் அவளுக்கு உதவும் வகையில் அசையாது நின்றான்.
அவள் அனுப்பிய புகைப்படத்தை பார்த்தவன்… அந்த நிழலுருவில் தன் கண்களை அகல விரித்திருந்தான்.
பளிச்சென வாழி, சுற்றுப்புறம் பச்சை பசுமையாய், மேலே அவன் தோற்றத்திற்கு ஏற்றவாறு போட்டிபோடும் ஆகாயமும் வெள்ளை மேகங்களும். பார்க்கவே அத்தனை அழகாய் அக்காட்சி இருந்திட… அவனுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாய் அதனை பயன்படுத்திக் கொண்டாள்.
இன்று வரை அவனது அனைத்து ப்ரொஃபைலிலும் அந்த புகைப்படத்தைத்தான் வைத்திருக்கிறான்.
அத்தருணத்தில், அவனின் ரசிப்பான முக பாவனையை பதிவு செய்தவள்… அவனருகில் சென்று தன் காமிராவை நீட்டி…
“தேன்க்ஸ்” என்றாள்.
காமிராவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து படங்களையும் திரை நகர்த்தி பார்த்தவன்…
“அதான் நிறைவேற்ற நீங்க இருக்கீங்களே!” என்றவள், “அன்னைக்கு நீங்க அப்பாகிட்ட பேசியதை ஒட்டுக்கேட்டுட்டேன்” என்று கண் சிமிட்டினாள்.
“இனி அப்படி எதுவும் கேட்காதே! நாங்க ரெண்டு பேரும் எப்பவும் அவ்ளோ டீசண்ட்டாலாம் பேசமாட்டோம்” என்று சிரித்தான்.
“தெரியுமே… அவர் எவ்ளோ பெரிய போலீஸா இருந்தாலும், உங்ககிட்ட அப்பா காட்டுற முகமே வேற” என்றவள், “உங்களோட பாண்ட்(bond) பிடிச்சிருக்கு” என்றாள்.
அதிக நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கிடையேயான நீண்ட பேச்சு அது.
அதன் பின்னர் அவளின் ஓட்டம் படிப்பிலும், அவனது ஓட்டம் படிப்பு முடித்து காவலர் பணியில் சேர்வதிலும் இருந்திட… அளவான பேச்சும் இல்லாமல் தான் இருந்தது.
மீண்டும் இருவரும் பேசிக்கொண்டது தனு ஸ்டுடியோ தொடங்கிய நாளன்று தான்.
ஏற்கனவே வாழி சொல்லியிருந்ததால் இம்முறை கிருஷ்ணன் தடையாக எதுவும் சொல்லவில்லை.
மகள் கேட்ட தொகையை எவ்வித மறுப்புமின்றி கொடுத்தார்.
அவரின் அமைதியான சம்மதத்திற்கு பின்னால் வாழி இருக்கிறான் என்பதை அறிந்தவள்… தேன்க்ஸ் என்று புலனம் வழி தகவல் அனுப்பினாள்.
அவனிடம் பதிலாக ஒரு சிரிக்கும் எமோஜி.
தனக்கேற்றபடி ஸ்டுடியோவை தன்னுடன் பயின்ற சுரேன், ரியாஸ், சாரு மற்றும் ஜோவிதாவை உடன் வைத்துக்கொண்டு துவங்கியவள், ஸ்டுடியோவிற்கு ‘லிவ் வித் மெமரிஸ்’ என்று பெயரிட்டாள்.
சாதாரணமாக அதன் பொருள் நினைவுகளுடன் வாழ் என்று தான் அர்த்தப்படும். ஆனால் அதனின் மறை உண்மை அவள் மட்டுமே அறிந்தது.
லிவ் என்றால் வாழ்… அவளுக்கு வாழ் என்பது வாழியாதன்.
அவள் தன் கனவை நோக்கி அடி வைத்து செல்ல அவன் தானே காரணம். தன்னுடைய அனைத்திலும் அவன் இருக்க வேண்டுமென நினைத்தாள்.
அங்கு வருவதற்குள் கடந்த காலம் அனைத்தையும் மனதிற்குள் ஓட்டி பார்த்துவிட்டான் வாழியாதன்.
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவன், அக்கட்டிடத்தின் உள்ளே சென்றிட ரியாஸ் வரவேற்று அமர வைத்தான்.
ஜோவிதா கணினியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் தான் இருக்கீங்களா?” என்ற வாழி, ரியாஸ் அளித்த கூல்ட்ரிங்க்ஸை வாங்கி பருகினான்.
“ஒரு பர்த்டே பார்ட்டி ஷூட். சாரு அண்ட் சுரேன் அங்க போயிருக்காங்க” என்ற ரியாஸ், “நீங்க என்னண்ணா இங்க? தனுவை பார்க்க வந்தீங்களா?” எனக் கேட்டான்.
“தனு நேத்தே இன்னைக்கு ஸ்டுடியோ வரமாட்டேன்னு சொல்லிட்டாள்” என்றாள் ஜோவிதா.
“ஹம்” என்ற வாழி, “ஆர் யூ ஓகே நவ்?” எனக் கேட்டான்.
அவன் எதைக்குறித்து வினவுகிறான் என்பதை புரிந்தவள்,
“காதலுக்காக நாம யாரையும் தேடிப்போகக்கூடாது… வேண்டான்னு விட்டு போறவங்களை இழுத்து பிடிக்க நினைக்கவும் கூடாதுன்னு தன்வி எனக்கு புரிய வச்சிட்டா(ள்)ண்ணா. ஆனால் நான் சொல்லி புரிய வைக்கத்தான்…” என்று நிறுத்தியவள் “ம்ப்ச்… இப்போ இந்தப்பேச்சு எதுக்கு” என்ற ஜோவிதாவின் முகத்தில் தெரிந்த தெளிவு மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்ணா இவளென்று வாழியை எண்ண வைத்தது.
“அட்வைஸ் எல்லாம் பலமா நடந்திருக்கும் போல?” வாழி தனுவை நினைத்து கேலியாய் வினவினான்.
“அவள் இந்த விடயத்திலெல்லாம் ரொம்ப தெளிவுண்ணா. அதான் ஐந்து வருடமா காதல்ன்னு அவள் பின்னாடி சுத்திய பசங்க யாரையும் கண்டுக்காமல் சிங்கிளா சூப்பரா இருக்கிறாள்” என்ற ஜோவிதாவின் பதிலில் வாழிக்கு உள்ளுக்குள் அதிர்வு.
‘இவங்களுக்கே தெரியாதா?’
இன்று தனு செய்யவிருந்த செயலின் விளைவால், ஏன்? எதற்கு? அவசரமென்று தெரிந்துகொள்ளலாம் என்று வந்தவனுக்கு, இப்போது இவர்களிடம் கேட்பதும் வீணென்றானது.
பகல் முழுவதும் உடனிருப்பவர்களுக்கே தனுவின் மற்றைய பக்கம் தெரிந்திருக்கவில்லை.
‘யாருக்கும் சொல்லாது எப்படி இப்படியொரு முடிவை எடுத்தாள்?’ யோசித்துக் கொண்டிருக்கும் வாழிக்கு, ஜோவிதா சொல்வது பொய்யென்று தெரியவில்லை.
எப்படியும் வாழி அங்கு வருவானென்று அவர்களுக்குத் தெரியும்.
வாழி அப்பேச்சினை பேசிடவே கூடாதென்று தானே, தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை காட்டிட ஜோவிதா அவ்வாறு கூறினாள்.
தோழியின் காதலை வெளிப்படையாக அறிந்த ஜோவிதா மற்றும் ரியாஸ் அவளின் இன்றைய செயல் தோல்வியில் முடிந்ததை தெரியாது, தனுவுக்கு சாதகமாக வாழியிடம் பேசினர்.
“பக்கத்துல ஒரு கேஸ்… அப்படியே பார்த்திட்டு போகலான்னு வந்தேன்” என்ற வாழி எழுந்துகொள்ள, இருவரும் கண்களால் பேசிக்கொண்டனர்.
சரியாக வாழியின் விழிகளில் மாட்டிக்கொண்டது. அவர்களின் ஆசுவாச பாவனை.
அத்தோடு அன்றைய நைட் பீச் ஷூட்டின் போது, தனு ஒருவனின் காரில் ஏற முயன்றது நினைவு வந்தது. அவன் தான் அருணாக இருக்கக்கூடுமென்ற சிறு கணிப்பு ஓடியது.
‘ஆக இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மறைக்க முயல்கின்றனர்.’ கண்டுகொண்டான்.