இரவு உறங்குவதற்கு வெகு தாமதமாகியதால் வாழி நல்ல உறக்கத்தில் இருந்தான்.
தூரத்தில் ஆஷ் குறைக்கும் சத்தம் மெல்லிய ஒலியாய் அவனின் செவி நுழைந்து வாழியின் ஆழ்ந்த துயிலை மெல்ல அசைத்தது.
கூடத்து நீள்விருக்கையிலேயே தான் உறங்கியிருந்தான்.
சில நொடிகளில் ஆஷின் சத்தம் அதிகரிக்க… பட்டென்று இமை திறந்து எழுந்தமர்ந்தான்.
வாயில் கதவு திறந்திருந்தது. அத்திசையை பார்த்தவாறே ஆஷ் கத்திக்கொண்டிருந்தது.
“தூங்குவதற்கு முன் கதவு லாக் ஆகியிருக்கா செக் செய்தனே! இப்போ எப்படி திறந்திருக்கு?” என்று யோசித்தவனாக தன்வியின் அறையை நோக்கினான்.
கதவு மூடிதானிருந்தது.
‘மூடியிருக்கே!’ வாழி எண்ணும்போதே… வெளியிலிருந்து உள்ளே ஒருவித பதட்டத்துடன் வந்தாள் தன்வி.
வாழி நின்றிருப்பதை கண்டதும், தன்னுடைய வலது கையை சட்டென்று பின்னால் மறைத்துக் கொண்டாள்.
“இந்நேரம் எங்கே?”
“தூக்கம் வரல வாழ். ஒரே டிஸ்டர்ப்டா இருந்துச்சு. சும்மா ஒரு வாக். நம்ம வீட்டு பின்னால், கடலோரமா” என்றவள், “சட்டுன்னு மழை. அதான் ஓடி வந்தேன்” என்று மேற்கொண்டு அவன் ஏதும் கேட்டுவிடுவானோ என வேகமாக மாடியேறி தனதறை சென்று மறைந்தாள்.
அவளையே பார்த்திருந்த வாழ் தோளை குலுக்கியவனாக, வாயிலில் நின்று வெளியில் எட்டி பார்த்திட… மெல்லிய தூறல் மட்டுமே தூறியது. காலைநேர ஓட்டத்திற்கு தயாராகினான்.
அவர்களது வீடு கடற்கரையோரம் இருந்திட, தோட்டத்துக்கு பின்னாலிருக்கும் சிறு இரும்பு கேட்டினை திறந்து கடல் மண்ணில் பாதம் புதைய நடந்தான்.
வாழியின் பின்னாலே ஆஷ் ஓடியது.
குறிப்பிட்ட தூரம் நடந்தவன், அப்படியே ஓரிடத்தில் அமர்ந்திட… அவனது பார்வை வெள்ளி வானில் ஊர்ந்தது.
வெள்ளி மறைய முனைய, கதிரவன் எட்டிபார்த்திட கரம் நீட்டிய வேளை.
ஆஷ் கரைவரும் அலையோடு ஓடியாடிக் கொண்டிருக்க… வாழின் விழிகள் அதனை ரசித்திருந்தன.
வாழி இயற்கையின் தீவிர காதலன். அதனால் தானோ என்னவோ? வித்தியாசமான கோணத்தில் தன்வி எடுத்திடும் புகைப்படங்களுக்கு விசிறியாகியிருந்தான்.
புதிதாய் முளைத்திருக்கும் காதல் வேறு இன்று அனைத்தையும் ரசிக்க வைத்தது.
அவன் பார்க்கும் காட்சிகள் யாவும் அவனது கண்களுக்கு விருந்தாய் மாறின.
‘இங்கு அனைத்தும் அழகு தான். ரசித்திட மனமிருந்தால்.’ மென்மையாய் சிரித்துக்கொண்டான்.
காதல் கொண்டவனுக்கு ஏனோ, அதனை வெளிக்காட்ட வேண்டுமென்று தோன்றவில்லை. மனதிற்குள் பொத்தி வைத்திடத்தான் தோன்றியது. அதற்கு தன்வியின் தற்போதைய நிலையும் காரணமாக இருக்கலாம்.
உன் அழுகையில் தான் என் காதல் முளைத்தது என்று சொல்ல முடியுமா?
அப்படி அவன் சொல்லும் தருணம் அனைத்தும் மறந்து, அவனின் மனதை புரிந்துகொள்ளும் நிலையில் அவளிருக்க வேண்டும். இதுவே வாழியின் குறைந்தபட்ச ஆசை.
இத்தனை வருடங்களில் பல விதங்களில் தன்வியை பார்த்திருக்கிறான். ஆனால் அவளின் அழுது சிவந்த முகம் அவனை மொத்தமாக வீழ்த்திவிட்டது.ஏனோ அவனுள் அம்முகம் ரசிப்பதாய். நொடி வீணாகாது அந்த முகம் அவனை இம்சித்துக் கொண்டிருக்கிறது.
“ஒரு இரவில் இப்படி கட்டி இழுக்குறாளே! ஓ காட்” என்றவன், சடுதியில் எழுந்து நின்றவனாக பின்னந்தலையை அழுந்த கோதி உதடு குவித்து காற்றினை ஊதினான்.
வாழி எழுந்ததும் அலையோடு அலையாய் விளையாடிக் கொண்டிருந்த ஆஷ் அவனிடம் ஓடி வந்தது.
ஆஷ் தன்னை சுற்றி வந்ததில் நிலை கொண்டவன், “விளையாடியது போதுமா? வீட்டுக்கு போகலாமா?” எனக் கேட்க, ஆஷ் குரைத்து பதில் அளித்தது.
“என்னவோ தெரியலடா… இந்த வானம், மேகம், தூறல், ஆரஞ்சு வர்ணம், எல்லாம் இன்னைக்கு புதுசா தெரியுது” என்றவனின் மோனநிலை சத்தமிட்டு சிணுங்கிய அலைப்பேசி ஒலியில் களைந்தது.
“கொஞ்ச நேரம் பீல் பண்ண விடமாட்டாங்கடா. இப்போ எங்கு என்ன பிரச்சினையோ” என்று ஆஷிடம் கூறியவன், அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“சொல்லு சூர்யா?”
“சார் டிஜிபி ஆபிசில் மீட்டிங் அரேஞ் பண்ணியிருக்காங்க. உங்களை ரீச் பண்ண முடியல சொன்னாங்க. இன்னும் தர்ட்டி மினிட்ஸில் இருக்கணுமாம்” என்று சூர்யா படபடத்தான்.
“அதுக்கு ஏண்டா வார்த்தையில் இந்த ஓட்டம் ஓடுற. வறேன் வை” என்றான்.
மேலதிகாரி ஆழைப்பால் கொண்ட சூர்யாவின் பதட்டம் வாழியிடம் இல்லை.
அவசரம் காட்டாது மெல்ல வீட்டிற்கு வந்தவன்,
தன்வியை தேடினான்.
“இந்தாங்க பிளாக் டீ.” கிச்சனிற்குள்ளிருந்து கப்புடன் வந்தாள் தன்வி.
வலது கையில் சிறு நடுக்கத்துடன் நீட்பட்ட கோப்பையை பார்த்தவாறே…
“எனக்கு பூஸ்ட் வேணுமே” என்றவன், “நல்லா பெரிய கப்பில் போட்டு வை. வந்துடுறேன்” என நகர்ந்தான்.
“நீங்கென்ன மொக்கு பாப்பாவா? உங்களுக்கு பூஸ்ட் ரொம்ப பிடிக்கும் தெரியும். அதுக்குன்னு இந்த வயதிலுமா?” எனக் கேட்டவளிடம் நன்கு இதழ் மலர்ந்து சிரித்தவன்,
“பிளாக் டீ குடிச்சா ரொம்ப மெச்சூர்ட் ஆள் வளர்ந்துட்டதா அர்த்தமா?” என்று நின்று கேட்டு, “பிடிச்சதை செய்றதுக்கு மட்டுமல்ல… சாப்பிடுறதுக்கும் ஏஜ் தடையில்லை. அப்படியொன்னும் எனக்கு வயதாகிடல ” என்றான்.
“ஒரு பூஸ்ட்க்கு பின்னால் இப்படியொரு தத்துவம் இருக்குமுன்னு நினைக்கல” என்று சிரித்தாள் தன்வி.
‘காலை தான் எழும்போது கூட ஒருவித தவிப்பிலிருந்த தன்வி இவளில்லை’ என்று நினைத்தது, சம்மந்தமே இல்லாது வாழியின் மனது.
“நார்மலாகிட்ட மாதிரி தெரியுது?” வாழி கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.
“நைட்டு வாழியாநந்தா சொல்லிய அட்வைசில் நவ் அம் ஓகே” என்றவள், “இப்போ தான் மைண்ட் ஃப்ரியா இருக்கு” என்றவளாய் அவனுக்காகக் கொண்டு வந்த டீயை ருசித்து பருகினாள் வலது கையால். கையில் சிறு நடுக்கம். அதனை லாவகமாக மறைத்தாள்.
தன்வி இடதுகை பழக்கம் உடையவள், சாதாரணமாக வலதுகையால் அவளால் எதையுமே எடுத்திட முடியாது. வலது கைக்கு முன் இடது கை அனைத்தும் செய்திடும். ஆனால் இன்று? அவளின் இடது கையை பார்த்தான். உள்ளங்கையில் நன்கு கீறியிருந்தது. அவள் அதனை மறைக்க முயற்சிக்கிறாள் என்பதால், அதைப்பற்றி அவன் ஏதும் கேட்கவில்லை.
‘சட்டென்று எப்படி இந்த மாற்றம்’ என நினைத்தாலும், தன்வி சரியாகிவிட்டால் போதும் என்று தன் வீட்டிற்கு சென்றான்.
நிதானமாக அவன் கிளம்பி வந்தபோது, தன்வி லட்சுவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் வந்தால் என் கல்யாண ஏற்பாட்டை கவனிக்கலாம்” என்று அந்தப்பக்கம் இருந்தவரை அதிர வைத்தான்.
“என்னடா இவ்வளவு ஸ்பீட்?”
“தெரியலையே… ரொம்ப பக்கத்துல வச்சிக்கணும் தோணுது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
அலைப்பேசி கிருஷ்ணனிடமிருந்து சேகரனுக்கு கை மாறியிருந்தது.
“கண்ணா வாழி…”
“அப்பா!”
“நான் நினைக்கிறது தானா?” என்று உடனிருக்கும் மற்றவர்களுக்கு கேட்காது தள்ளி வந்து வினவினார்.
“லவ் யூப்பா” என்று அவரின் கேள்விக்கு மறைமுகமாக பதில் வழங்கினான்.
“சந்தோஷம் கண்ணா. திடீர்னு எப்படின்னு கேட்கமாட்டேன். தனுக்குட்டி சம்மதிக்கணும்” என்று வைத்திருந்தார்.
“என்னங்க என்னவோ சொன்னான்?” கேட்ட மனைவியை அழுத்தமாக ஏறிட்ட சேகரன், “எல்லாம் சந்தோஷமான விடயம் தான். திருவிழா முடிஞ்சு வீட்டுக்கு போனதும் இதை பேசிக்கலாம்” என்று அப்பேச்சினை முடிக்க பார்க்க,
“உன்கிட்ட மட்டும் பொண்ணு யாருன்னு சொல்லிட்டானா?” எனக் கேட்டார் கிருஷ்ணன்.
“யாருண்ணா. நம்ம வாழி குணத்துக்கு நல்ல பொண்ணா அமையனும்” என்றார் ராதா.
“அங்கு வந்த அப்புறம் தான் சொல்லுவானாம்” என்ற சேகரனுக்கு, என்னதான் கலாம் கடந்த நட்பாக இருந்தாலும் கிருஷ்ணன் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்கிற தயக்கம் எழ செய்தது. அதனாலேயே சொல்லாது தற்போதைக்கு தள்ளி வைத்தார்.
“பேசி முடிச்சாச்சா?” என்று உணவு மேசை இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முன் தட்டு வைத்து நெய் மணம் வீசும் காரட் மற்றும் பொடி தூவிய தோசையை பரிமாறினாள்.
“தேன்க்ஸ் தன்வி” என்றவன் அனுபவித்து ருசித்தான்.
“இட்ஸ் மை ஃபேவரட்” என்றவன் “உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.
“ஏதோ கொஞ்சம் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் தெரியும்” என்றவள், “இப்பவும் பூஸ்ட் தான் பிடிக்கும் தெரியாது. மோஸ்ட்லி பசங்களுக்கு டீ வெரைட்டிஸ் பிடிக்கும் கேள்விப்பட்டிருக்கேன். அதான் டீ கொடுத்தேன்” என்றதோடு அவன் முன் பெரிய கண்ணாடி தம்ளர் நிறைய பூஸ்ட் கலந்த பால் வைத்தாள்.
தோசை போதுமென்றவன், ஒலித்த அலைப்பேசியை தள்ளி வைத்துவிட்டு தம்ளரை கையில் எடுத்து மிடறு மிடறாக இறுதி சொட்டு வரை ரசித்து பருகினான்.
அதற்குள் பலமுறை அலறியிருந்தது அவனது அலைப்பேசி.
“இம்பார்ட்டெண்ட் காலா இருக்கப்போகுது” என்று திரையை பார்த்த தன்வி, “கமிஷனர் காலிங்” என்றாள்.
“எவனோ பெரிய தலைக்கு பிரச்சினை போல… அதான் காலையிலிருந்து என்னை வலைவீசி தேடிட்டு இருக்காங்க. டிப்பார்ட்மெண்டில் எனக்கு டிமாண்ட் அதிகம்” என்று கண்ணடித்தவன், “சாமானியனுக்கு ஒண்ணுன்னா என்ன வழக்குன்னு கேட்கவே ரெண்டு நாள் எடுத்துப்பாங்க. ஆனால் இப்போ… கொஞ்சம் வெயிட் பண்ணட்டுமே! என்ன இப்போ?” என்ற வாழி, “வீட்டில் தனியா பீல் பண்ணிட்டு இருக்காதே! முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். உன் வேலையில் கவனம் வை. காம்படிஷன் டீடெயில் செக் பண்ணு. ஸ்டுடியோ போயிட்டு வீடியோ கால் பண்ணு” என்றவனாக அவளுக்கு பை சொல்லிவிட்டு, ஆஷின் முதுகில் வருடியவனாக வெளியேறினான்.
செல்லும் வாழியை அதிசயத்து பார்த்து நின்றிருந்தாள் தன்வி.
இன்று போல் என்றுமே ஒருத்தருக்கொருத்தர் இவ்வளவு அதிகமாக பேசிக்கொண்டதே இல்லை. தேவை இருக்கவே ஓரிரு வார்த்தைகளில் பேச்சிருக்கும். ஆனால் இப்போது ஒரு நாளில் எப்படி இத்தனை நெருக்கமென்று அவளுக்கு மட்டுமல்ல அவனுக்குமே புரியவில்லை.
இது மனதில் கொண்டிருக்கும் தன்னுடைய உறவு என்கிற எண்ணத்தின் ஆழம் கொடுத்த உரிமையென்று தெரியவில்லை.
ஆனால் வாழி தன்னை முடிந்துபோன விடயத்திலிருந்து மீட்டெடுக்க நினைக்கிறான் என்று அவளால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
இடைவெளியுடன் வளர்ந்திருந்தாலும் தன்விக்கு வாழியென்றால் பிடித்தமே. அந்த பிடித்தம் இருவருக்குள்ளும் இருப்பதாலேயே… எளிதாக பேச்சில் நெருக்கம் கொள்ள முடிந்தது.
சிறுது நேரம் அமைதியாக அமர்ந்தவள்,
‘வாழ் சொல்லியதைப்போல் வீட்டிற்குள்ளே அடைந்து கண்டதை நினைத்து மனதை வருத்திக்கொள்வதற்கு, ஸ்டுடியோவிற்கு செல்லலாம்’ என்று நினைத்தவளாக வீட்டிலிருந்து புறப்பட்டாள்.
அவளிருக்கும் வருத்த மனநிலையில் பத்திரமாக ஸ்டுடியோ சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்திடவே வீடியோ கால் செய்திடக் கூறினான்.
அதனை புரிந்தவளும், ஸ்டுடியோவிற்குள் நுழைந்ததும் ரியாஸ் மற்றும் ஜோவிதாவிற்கு புன்னகையுடன் தலையசைத்து இருக்கையில் அமர்ந்து வாழிக்கு அழைப்பு விடுத்தாள்.
வாழி முக்கியமான மீட்டிங்கில் டிஜிபி அலுவலகத்தில் அவனது உயர் அதிகாரிகளின் முன்பு அமர்ந்திருந்தான்.
“நைட்டிலிருந்து காணோம். உன்னால் முடியும்ன்னு நம்புறோம். வழக்கமான உன் நிதானத்தை விடுத்து, கொஞ்சம் ஃபாஸ்ட்டா மூவ் பண்ணுங்க வாழியாதன்” என்று டிஜிபி பெருமாள் அவனிடம் சொல்லிக்கொண்டிருக்க…
அதை கேட்டபடியே வைப்ரேட் மோடில் அதிர்ந்த தன்னுடைய அலைப்பேசியை எடுத்து திரை தொட்டு அழைப்பை ஏற்றிருந்தான்.
“ஸ்டுடியோ வந்துட்டேன் வாழ். பார்த்துக்கோ” என்று தனக்கு பின்னால் சுவற்றில் பதிந்திருக்கும் லிவ் வித் மெமரிஸ் என்ற லோகோவை காண்பித்தாள்.
அவனின் செயலில் டிஜிபி மற்றும் அங்கிருந்த அனைவரும் அதிருப்தியாய் ஏறிட, அதனை அவன் கண்டுகொள்ளவே இல்லை. சடுதியில் அத்தனை அமைதியாய் மாறிய ஹாலில் தன்வியின் குரல் மட்டும் எதிரொலித்தது.
“நம்புறேன்” என்ற வாழி, “நெக்ஸ்ட் லெவல் ஆஃப் காம்படீஷன் என்ன பண்ணனும் செக் பண்ணு. நைட் டிஸ்கஸ் பண்ணுவோம். டேக் கேர்” என்று வைத்தவன், “நீங்க சொல்லுங்க சார்” என்றான்.
“என்ன சொல்லணும் வாழியாதன். எவ்வளவு இம்பார்ட்டெண்ட் மேட்டர் பேசிட்டு இருக்கோம். நீங்க இவ்வளவு இர்ரெஸ்பான்ஸ்பிளா பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று டிஜிபிக்கு முன்னர் கமிஷனர் வாழியை கடிந்துகொண்டார்.
“வேலைக்காக பெர்சனல் விட்டுக்கொடுக்க முடியாது சார். எனக்குன்னு சிலது இருக்கு. அதுக்கு அப்புறம் தான் எல்லாம்” என்றான். திமிராக.
“ஓவர் ஆட்டிட்யூட் கூடாது வாழியாதன். பெர்சனல் தான் முக்கியமென்றால் வேலையை விட்டு போங்க” என்றார்.
கமிஷ்னர் சொல்லியதை கருத்தில் கொள்ளாத வாழி டிஜிபி பெருமாள் புறம் பார்த்து…
“பிஸ்னெஸ் மேன் ஜேகே மகனை காணவில்லை. கண்டுபிடிக்கணும். அவ்வளவு தான சார்?” எனக் கேட்டான்.
பெருமாள் ஆமென்று தலையசைக்க, மேசையில் வைத்திருந்த தன்னுடைய தொப்பியை எடுத்து அணிந்தவனாக விறைப்பாக நிமிர்ந்து சல்யூட் ஒன்றை வைத்து அவ்வறையை விட்டு வெளியில் வந்தவன் உடலின் இறுக்கம் தளர்த்தினான்.
“போலீசுன்னா விறைப்பா இருக்கணும் எவண்டா சொன்னது. ஒவ்வொரு முறையும் நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் வைக்கிறதுக்குள்ள மூச்சு முட்டுது” என்றவன், தனக்கு பின்னால் வந்து நின்ற சூர்யாவின் தோள் மீது கை போட்டவனாக… “எங்கடா போகணும்?” எனக் கேட்டு முன்னோக்கி அடி வைத்தான்.
“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் சார்.” கமிஷ்னர் பெருமாளிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“நீங்க அவன்கிட்ட ஏன் சார் போட்டி போடுறீங்க? என்ன பண்ணாலும் அவன் வேலையில் நேர்மையா சரியா இருக்கான்ல. அதை பாருங்க” என்று வாழிக்கு பரிந்து பேசினார் பெருமாள்.
“உங்களுக்கு அவனை பிடிக்குங்கிறதுக்காக அதிகமா சப்போர்ட் பண்ணாதீங்க சார்” என்ற கமிஷ்னர், “இவன் அவரை கண்டுபிடிப்பான் தோணல” என்றார்.
“பெரிய பதவிக்கு வந்துட்டா… களமிறங்கி வேலை செய்யக்கூடாதுன்னு எதுவுமில்லையே!” என்ற பெருமாள், “நான் வாழிக்கு கால் பண்ணிடுறேன். நீங்க உங்க டீம் வச்சு பையனை கண்டுபிடிங்க” என்றார்.
தனக்கு கீழ் வேலை செய்தாலும், வழக்குகளை கையாளும் விதம். முடித்துவைக்கும் தீவிரம். நிதானமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து குற்றவாளியை தப்பவிடாது பிடிக்கும் பாங்கு. தன்னுடைய கட்டுப்பாட்டில் தவறு நடந்துவிடக்கூடாது என்பதில் காட்டும் முனைப்பு என அணிந்திருக்கும் காக்கிக்கு உண்மையாக இருப்பதால், வாழி காவல் துறையில் மிக பிரபலம். அத்தோடு உயர் அதிகாரிகளுக்கு விருப்பமானவனும் கூட. முடிக்க முடியாத பல சிக்கலான வழக்குகளை கையிலெடுத்தால் முடித்துவிடுவானென்று அவர்களின் தேர்வு எப்போதும் வாழியாகத்தான் இருக்கும்.
தன் வேலையில் நேர்மையாக இருப்பதாலோ என்னவோ, வாழி யாருக்கும் அத்தனை எளிதில் பணிந்து சென்றிடமாட்டான்.
இவையெல்லாம் தான் கிருபாகரனுக்கு வாழியின் மீது பிடித்தமின்மையை உருவாக்கியிருந்தது. தான் பார்க்க பணியில் அமர்ந்தவன், தனக்கு கீழான பணியில் இருந்தாலும், தனக்கு உயர்வாக மற்றவர்கள் பார்ப்பதாக அவருள்ளிருக்கும் எண்ணமே காரணம்.
“இந்த வயதில் நானெப்படி சார்?” டிஜிபி சொல்லியதற்கு கமிஷ்னர் தழைந்து பேச…
“அப்போ வேலையைவிட்டு போங்க சார்” என்று பட்டென்று கூறியிருந்தார் பெருமாள்.
‘இது வாழியாதனை தான் பேசியதற்கான பதிலடி’ என்று புரிந்த கிருபாகரன், அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்.
அங்கு நடந்தவை அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஜேகே…
“உங்க போலீஸ் வட்டாரத்தில் இந்த ஏசியை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லுங்க. என்னுடைய தொழில் எதிரியாகத்தான் இருக்க முடியும். என்னால் முடியாமல் இல்லை. என் ஆளுங்க ஒருபக்கம் தேடிட்டு தான் இருக்கானுங்க. கொஞ்சம் லீகலா மூவ் பண்ணால் பின்னாடி எதாவதுன்னா ஈஸியா வெளிவரலாமே. அதுக்குதான் உங்க உதவியை எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.
ஆளும் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜேகேவை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது…
“ஓகே சார்” என்று அனுப்பி வைத்த பெருமாள் வாழிக்கு அழைத்தார்.
“ஏண்டா…” என்றவர் ஆரம்பிக்கும் முன்,
“நிறுத்துங்க… ஃபிரியா இருக்கும்போது கால் பன்றேன். அப்போ கொஞ்சுங்க. இப்போ நான் என்னோட டிஜிபி எனக்கு கொடுத்திருக்கும் வேலையை பார்க்க அவசரமா போயிட்டிருக்கேன்” என்றான் வாழி.
“டேய்… என்கிட்டவே உன் விளையாட்டை காட்டாதே” என்ற பெருமாள், “கொஞ்சம் சீரியஸா இருடா. அந்த கிருபாகரனுக்கு உன்மேல என்ன வஞ்சம்ன்னே தெரியல. உன்னை எதிலாவது மாட்டிவிட்டு, பிளாக் லிஸ்ட் பண்ண காத்திருக்கான். டிஜிபியா கூட என்னால் ஒண்ணும் பண்ண முடியாது” என்றார்.
“டிஜிபியா வேண்டாம். கிருஷ்ணா ஃபிரண்டா ஏதும் பண்ணுங்களேன்” என்று அப்பவும் வாழி அவர் சொல்லும் சீரியஸ்னெஸ் இன்றி விளையாட்டாய் பேச, “சேகரன்கிட்ட உன்னை போட்டுக்கொடுக்கிறேன் இரு” என்றார்.
அதில் சத்தமாக சிரித்தவன்,
“அச்சோ பயந்துட்டேன் அங்கிள்” என்றவனாக தன்னுடைய விளையாட்டை கைவிட்டவன், “உண்மையாவே காணாமல் போனது ஜேகே பையன் தானா?” என்று வினவினான்.
“உனக்கென்னடா இப்படியொரு சந்தேகம்?”
“பையன் தொலைஞ்சுப்போன சோகம் கொஞ்சம் கூட அந்தாளு முகத்துல தெரியலையேன்னு கேட்டேன்” என்ற வாழி, “எப்போல இருந்து… ஐ மீன் எக்சாக்ட் டைம் தெரியுமா?” எனக் கேட்டான்.
அக்கேள்விக்கு அவர் சொல்லிய பதில் வாழியை சற்று அதிர வைத்தது.