நேற்றைய தாக்கம் கொஞ்சமும் இல்லாது, வருத்தத்தின் சுவடேயின்றி ஸ்டுடியோ வந்த தனுவை நண்பர்கள் ஆச்சரியமாக ஏறிட்டனர்.
“இன்னைக்கு ***** ஷூட் இருக்கே! நீங்களாம் ரெடியா?” கேட்டவள் கணினி முன் அமர்ந்து, இரு நாட்களுக்கு முன் எடுத்த மாடலிங் பெண்ணின் புகைப்படங்களை எடிட் செய்யும் வேலையில் இறங்கிவிட்டாள்.
இனி அவளாக தலை நிமிர்ந்தாள் தான்.
சாரு ரியாஸிடம் “நீ போய் பேசு” என்று தள்ளிவிட… “அவள் பார்வையாலேயே எட்ட நிறுத்திடுவாள்” என்றான்.
ஜோவிதா தான் ஒருவித தயக்கத்துடன் தனுவின் அருகில் சென்றாள்.
“என்ன ஜோ, எதாவது கேட்கணுமா?” கணினியிலிருந்து பார்வையை விலக்காது வினவிய தனு, “முடிஞ்சதை பத்தி எதுவும் பேசவேண்டாம் ஜோ. எனக்காக இல்லைன்னாலும், என் மேல அக்கறை இருக்கிறவங்களுக்காக நான் நானா இருந்தாகணும்” என்றாள்.
அந்நொடி வாழியின் தோற்றமே அவளுள். அவளை மீட்டுவிட என்னவெல்லாம் பேசினான். எப்போதுமில்லாது இரவு முழுக்க அவளுடன் இருந்தானே! உன்னை இதிலிருந்து வெளிக்கொணர்கிறேன் என்று சொல்லாமல், மறைவழியில் தன்னை மீட்க எப்படியெல்லாம் நடந்துகொண்டான். நினைக்கையில் அவள் மீதான வாழியின் அன்பு சற்று கர்வமாகவே இருந்தது.
“அப்போ அருண்…?”
சாரு முந்திக்கொண்டு வேகமாகக் கேட்டாள்.
“சாப்ட்டர் க்ளோஸ்ட்.” சாதாரணமாக தோள்களை குலுக்கிக்கொண்டாள்.
மொத்தமாக அவனின் கதை தன்னுடைய வாழ்வின் பக்கங்களில் முடிந்துவிட்டதாகக் கூறினாள்.
“அவன் மேல் உனக்கு கோபமில்லையா?” கேட்ட ரியாஸை நிமிர்ந்து பார்த்த தனு,
“இல்லாமல் இல்லை. பட், கோபம் கூட ஒரு உரிமை உணர்வு தான். அதை அவனுக்காகன்னு… வேண்டாமே” என்றாள்.
“வருத்தமில்லையா?”
“இல்லை.” தனு டக்கென்று மொழிந்திருந்தாள்.
நால்வரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.
“பண்ணது காதலே இல்லைங்கிறப்போ… எங்கிருந்து வருத்தமிருக்கும்? பொய்யான உறவால் ஏமாந்த கோபம் தானிருக்கு” என்றவள், “ப்ளீஸ் காய்ஸ்… நோ மோர் டாக் அபௌவுட் தட் ப்ளடி லவ்” என்றாள்.
தனுவே தெளிந்து நிமிர்ந்து நிற்கும்போது மீண்டும் மீண்டும் அதனையே பேசிட வேண்டாமென்று அவளது நண்பர்களும் வேலையில் கண் பதித்தனர்.
சுரேன் மட்டும் சில கணங்கள் அவளை அர்த்தமாக பார்த்தானே ஒழிய எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
அவனின் பார்வை உணர்ந்து ஏறிட்ட தனு,
‘இவன்கிட்ட எதையும் மறைக்க முடியாதே’ என்றவளாக, அவனை பார்த்து கண் சிமிட்டினாள்.
அவன் இருபக்கமும் தலையை ஆட்டியபடி நகர்ந்துவிட்டான்.
அன்றைய நாளில் வேகமாக முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தவள், வாழி சொல்லியது போல்… நண்பர்களுடன் உணவு உண்ணும்போது மறக்காது புகைப்படம் எடுத்து அவனுக்கு அனுப்பினாள்.
“வாழிண்ணாவுக்கு உன்மேல நிறைய கன்சர்ன்’ல தனு.” சுரேன் கேட்டிட தனு ஆமென்றாள். அன்று தான் புதிதாய் வாழியின் அக்கறையை உணர்வது போல். அறிந்த அன்பு அக்கறையையெல்லாம் நேற்றிலிருந்து தானே அவனும் நேரடியாகக் காட்டிக்கொண்டிருக்கிறான்.
உணவு நேரம் முடிய ஆசுவாசமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், தனு சொல்லிய விழாவிற்கு புகைப்படம் எடுப்பதற்காக, ரியாஸ், சாரு, ஜோவிதா மூவரும் கிளம்பி சென்றனர்.
அதன் பின்னரே நிதானமாக இணையத்தின் வழியாக போட்டிக்கான தளத்திற்கு சென்று பார்வையிட்டாள்.
போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச்சுற்று பிரிவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள் வந்திருந்தன. அதில் இருநூற்று ஐம்பது நபர்கள் தேர்வு செய்யப்பட்டு… புகைப்படங்களோடு அவர்களின் பெயர்கள் தரவரிசையற்று குறிப்பிடப்பட்டு… பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
அதில் வாழி தன்னுடைய பெயரில் அனுப்பிவைக்கப்பட்ட புகைப்படம் எங்கிருக்கிறதென்று ஆராய்ந்தவள் கண்டுகொண்டவளாக அப்பக்கத்தை திறந்து, தானெடுத்த படத்தை தானே அத்தனை ரசித்தாள்.
தனுவிடம் தன்னைப்போல் ஒரு உற்சாகம்.
இதில் பங்குகொள்வதே அத்தனை பெரும் விடயமாயிற்றே. மகிழ்ச்சி இல்லாமல் இருக்குமா?
“என்ன டார்லிங் சட்டுன்னு முகத்துல ஒரு வெளிச்சம்?”
தன்னுடைய இருக்கையில் இருந்தபடி சுரேன் கேட்டிட… அவனை பக்கத்தில் அழைத்தவள், கணினி திரையை அவன் புறம் திருப்பினாள்.
சாராம்சத்தை தெரிந்து கொண்டவன்,
“வாவ் தனு… இட்ஸ் நைஸ். காங்கிராட்ஸ் டா” என்றான்.
தனுவிடம் நீண்ட இதழ் விரிப்பு.
“நேற்று விடயம் கேள்விப்பட்டதும் உடைஞ்சு உட்கார்ந்திடுவன்னு நினைச்சேன். ஆனால் நீ அப்படியில்லாமல் உனக்கு பிடிச்ச விடயத்தில் கவனம் செலுத்துவது சந்தோஷமா இருக்குடா” என்றான். ஒரு நண்பனாக தோழியின் செயலில் பெருமிதம் கொண்டான்.
ஆண்களோ பெண்களோ காதல் தோல்வியென்றால்… எப்படி அந்த வலியிலிருந்து மீண்டு வருவதென்று யோசிக்காது… இன்னுமின்னும் அதன் ரணத்தில் புதைந்துகொள்ளத்தான் முயல்கின்றனர்.
காதல் இல்லையென்றால் வாழ்வே இல்லையென்று பல தவறான முடிவுகள் எடுத்து சுற்றியிருப்போருக்கு பெரும் தண்டனையை அளிக்கின்றனர்.
தன்வி அதில் விலக்கல்லவா. இதற்கு முழு காரணம் வாழியென்றால் மிகையாகாது. அதனை சுரேனிடம் சொல்லவும் செய்தாள்.
“என்னைவிட என் லட்சியத்துக்கு அவங்க தான் மெனக்கெடுறாங்க சுரேன்” என்றவள், “நீ அருண் பற்றி ஒண்ணுமே கேட்கலையே?” என்றாள்.
“வேண்டான்னு போனவனைப்பற்றி பேசி நம்ம டைம் ஏன் வேஸ்ட் பண்ணனும் தனு. நீ நார்மலாகிட்ட மாதிரி காட்டிக்கிறியே. அதுவே போதும்” என்றிட, சுரேன் நின்றிருக்க அவன் இடையில் கைவிட்டு தன்னோடு நெருக்கியவள் “நண்பேன்டா” என்றாள்.
“இதை மத்த மூணு பேரும் பார்த்திருக்கணும். இந்நேரம் எனக்கு அடிகள் பல விழுந்திருக்கும்” என்றான். அளவான சிரிப்புடன்.
“நீ அவங்களைவிட எனக்கு ஸ்பெஷல்ன்னு தெரியும்டா” என்றவளை சில கணங்கள் ஆழ்ந்து பார்த்தான்.
“நைட் வாழ் பேசியதிலேயே நான் உண்மையா நார்மலாகிட்டேன் டா. நீ இப்படி உத்து உத்து பார்த்து என் மனசை கண்டுபிடிக்காதே” என்றவள், “எப்போ சாருக்கிட்ட சொல்லப்போற?” எனக் கேட்டாள்.
“சொல்லுவோம். எனக்குன்னு சில கமிட்மெண்ட் இருக்கே தனு. முடிக்கணும். அதுக்கு நடுவில் லவ்வெல்லாம் இப்போ வேண்டாம். என் பக்கத்திலே தானே இருக்கிறாள். எங்கு போயிடப்போகிறாள்?” என்றவன்,
“இந்த சொல்லாத காதல் கூட நல்லாத்தான் இருக்கு” என்றான்.
“உண்மையாவே சாருவை கல்யாணம் பண்ணிக்க முடியுமென்றால் மட்டும் உன் லவ்வை சொல்லு சுரேன். சேர முடியாத கஷ்டம்… கொஞ்சம் அதிகமாகத்தான் வலிக்குது” என்றாள்.
தன்னுடைய தோழி தன்னை சந்தேகப்பட்டு சொல்லவில்லை… நிதர்சனத்தை அறிவுறுத்துகிறாள் என்பது சுரேனுக்கு புரிந்தது. அதோடு அவளின் இறுதி வரியும் புரிந்தது.
“அவனோட சேர முடியலன்னு பீல் பண்றீயா டார்லிங்?”
“கண்டிப்பா கிடையாது” என்றவள், “சேர்ந்திருந்தால் இன்னும் வலியாகியிருக்கும் என்பது புரியுது சுரேன்” என்றாள்.
சில நிமிடங்களில் இருவரின் பேச்சும் போட்டியின் பாதையில் சென்றது.
“ஆஷ் நல்லாவே போஸ் கொடுத்திருக்கான்.”
சுரேன் சொல்லிட…
“காமிரா தூக்கினால் போதும், முன்னாடியே சுத்திட்டு இருப்பான்” என்றாள் தனு.
“இந்த பேக்கிரவுண்டில் வாழ் அண்ணாவை வைத்து ஒரு பிக் எடுத்திருக்கல?”
“எஸ்… இதே சீனரி தான், பைக் மேல் வாழ் படுத்திருப்பாங்க. அன்னைக்கு ஆஷ் மட்டும் வச்சு போட்டோ எடுத்தேன்னு எவ்வளவு கோபம். அப்புறம் அவரே வண்டிக்கு மேல் ஒரு கால் நீட்டி, ஒரு கால் மடக்கின்னு படுத்து போஸ் கொடுத்து போட்டோ எடுக்க வச்சிட்டாங்க. இதுல ஆஷ் வேற சண்டைக்கு வறான். என்னை மட்டும் எடுன்னு. மழை பலமா வந்ததும் தப்பிச்சேன்” என்று போட்டிக்காக அனுப்பி வைத்த புகைப்படத்தை பார்த்தவாறு அன்றைய தின நிகழ்வை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டிருந்தாள் தனு. சுரேனும் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஆட் ஷூட் கஸ்டமர் ஒருவர் புக்கிங்கிற்கு வர, சுரேன் அவர்களை கவனிக்க நகர்ந்திட… தனு போட்டியின் முறைகளை படிக்க ஆரம்பித்தாள்.
விதிமுறைகள், வழிமுறைகள் என அனைத்தும் படித்து முடித்தவள்…
‘இம்முறை எப்படியும் வென்றிட வேண்டும்’ என உறுதியான எண்ணம் கொண்டாள்.
ஆனால் அவளது இலக்கு அத்தனை எளிதில் அவளை வந்தடையப்போவதில்லை.
காதல் தோல்வியென்ற சோதனையிலிருந்து மீண்டு வந்தவள், இனி தான் பல சோதனைகளுக்கு ஆளாகப்போகிறாள்.
அவளது வாழ்வின் பாதையையே மாற்றியமைக்கவிருக்கிறான் வாழியாதன்.
********
ஷீலாவிடம் விசாரணை முடித்த வாழி ஹோட்டலின் டெக்னிக்கல் பகுதிக்கு சென்றான்.
“எல்லா இடத்திலும் காமிராஸ் இருக்கா?”
சூர்யா கேட்டிட அந்த பிரிவின் தலைமை நபர்,
“இருக்கு சார்” என்றான்.
“அருண் ரூம் இருக்க ப்ளோர் புட்டேஜ் பார்க்கணும். மிட் நைட்டிலிருந்து” என்ற சூர்யா, வாழிக்கு இருக்கையை காண்பித்தான்.
“நீங்களும் உட்காருங்க சூர்யா” என்ற வாழி,
அந்நபர் திரையில் காண்பிக்க முயல, அவரை தடுத்திருந்தான்.
“நீங்க காமிரா நெம்பர் சொல்லுங்க. வீ கென் செக்” என்று கூறிய வாழி அந்நபரை பார்த்திட…
“சார்…” என்று இழுத்திட, “உங்க ஜேகே சரின்னு தான் சொல்லுவார். நெம்பர் சொல்லுங்க சார்” என்று கடி குரலில் கேட்டான் சூர்யா.
அவர் எண்ணை சொல்லியதும்,
“அந்த காமிரா ஹார்ட் டிஸ்க் எடுத்துக்கோங்க சூர்யா” என்ற வாழி எழுந்துகொண்டான்.
அடுத்து ஜேகேவுக்கு அழைத்த வாழி,
“இதுவரை எதாவது போன்கால்ஸ் வந்ததா? எனி டிமாண்ட்?” என்று வினவினான்.
ஜேகே இல்லையென்று சொல்லிட,
“அப்போ கண்டிப்பா உங்க எதிரிங்க கடத்தியிருக்க சான்ஸ் இல்லை” என்ற வாழி சில நொடி மௌனத்திற்கு பின், “இது கடத்தல் அப்படின்னு எப்படி சொல்றீங்க?” எனக் கேட்டான்.
ஜேகேவும் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை.
தொழில் போட்டிக்காக தன்னுடைய எதிரிகள் கடத்தியிருக்கக்கூடுமென்று தான் கடத்தலென புகார் அளித்தார். ஆனால் அப்படி தன் எதிராளிகளில் ஒருவன் கடத்தியிருந்தால், கோரிக்கை என்னவென்று சொல்லிடவாவது இந்நேரத்திற்கு கால் செய்திருக்க வேண்டுமே! அப்படியொன்றும் இதுவரை வரவில்லை.
அருண் காணாமல் சென்று கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இன்னமும் ஒரு தகவலும் இல்லை.
இப்போது வாழி சொல்லியதற்கு பின்னர் வேறு ஏதுமிருக்குமோ என்று எண்ண வைத்தது.
“நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர்.வாழியாதன்?”
“பிடிக்காத கல்யாணம். கார்னர் பண்ணியிருக்கீங்க. சோ, அவராகவே எங்காவது போயிருக்கவும் சான்ஸ் இருக்கு” என்ற வாழி, சூர்யா கொடுத்த ஹார்ட் டிஸ்க்கை கணினி உதவியோடு பார்வையிட்டவாறே
“ரூமிலிருந்து அவராவே தான் பார்க்கிங் வந்து கார் எடுத்துட்டு வெளியில் போயிருக்கிறார்” என்றான்.
“அப்போ கடத்தல் இல்லைன்னு சொல்றீங்களா?”
“சான்ஸ் இருக்கு ஜேகே.”
வாழி சற்று யோசித்தவனாக…
“அருணுக்கு பெர்சனெல் பிளேஸ் எதாவது இருக்கா?” எனக் கேட்டான்.
“அடிக்கடி மால்டீவ்ஸ் போவான். அங்கு பிரைவேட் தீவு அவன் பெயரில் இருக்கு. ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினான்” என்றார்.
“ஓகே” என்ற வாழி, “அருண் காணவில்லைன்னு மீடியாவுக்கு தெரியப்படுத்துங்க” என்றான்.
“நோ… நோ மிஸ்டர்.வாழியாதன்” என்று வேகமாக படப்படத்தவர், “கற்பனையா கதைகட்ட ஆரம்பிச்சிடுவாங்க. நேத்து தான் மேரேஜ் ஆகியிருக்கு” என்றார்.
“உங்க சிட்டுவேஷன் புரியுது ஜேகே. பட்” என்று மௌனித்த வாழி,
“உங்க சர்க்கிளில் நீங்க தான் நெம்பர் ஒன். உங்க மேல் உங்களுடைய அப்போசர்ஸ்க்கு ஒரு பயம் இருக்கு இல்லையா. சோ, நீங்க என்னுடைய எதிரிகளை சந்தேகிப்பதாக ஸ்டேட்மெண்ட் ஸ்பிரட்ஃ பண்ணால்… உங்களை பகைச்சிக்க விரும்பாத ஆட்கள், தானா தேடிவந்து நான் பண்ணலன்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ரெஸ்ட் ஆப் த பெர்சன்ஸ் லிஸ்ட் அவுட் பண்ணி விசாரிக்க ஈஸியா இருக்கும்” என்றான்.
வாழிக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதனை நம்பும் திடம் அவனிடமில்லை. அந்த சந்தேகத்தைக் கொண்டு விசாரிக்கவும் மனமில்லை.
உறவோ, காதலோ… ஏதோவொன்று அவனை தடுக்கிறது.
தன் சந்தேகத்தை பொய் என்று அறிந்துகொள்ள… அருண் என்னவானான் என்பதை உடனடியாக கண்டுபிடிக்கும் நிலையில் வாழியாதன். ஜேகே’வை விட, வாழிக்கு அருண் தற்போது அதி முக்கியம்.
“ஓகே மிஸ்டர்.வாழியாதன். என்னுடைய சேனலிலேயே நியூஸ் அனௌன்ஸ் பன்றேன்” என்றவர்,
“என்னுடைய சாம்ராஜ்ஜியத்துக்கு ஒரே வாரிசு வாழியாதன். கண்டிபிடிச்சிடுங்க. நேரமாக ஆக பயம்ன்னா என்னன்னு பீல் பன்றேன்” என்றார்.
“இந்த பயம் அவருடைய விருப்பத்தை மதிப்பதில் இருந்திருக்கணும் ஜேகே!” வாழியாதன் அர்த்தமாகக் கூறினான்.
“கல்யாணம் பிடிக்கலன்னு கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாரும் சொல்ற மாதிரி சொல்றான்னு நினைச்சேன் வாழியாதன்” என்றவர் குரல் தழுதழுத்ததோ.
“இயர்லி மார்னிங்கிலிருந்து இப்போ இந்த செக் வரை மால்டீவ்ஸ் சென்ற பிளைட் பேசஞ்சர்ஸ் லிஸ்ட் செக் பண்ணு சூர்யா” என்ற வாழி காத்திருப்போருக்கான இருக்கையில் சென்று அமர்ந்தான்.
தளர்ந்து கண்கள் மூடியிருந்தவனுள் ஒருவித நடுக்கம் ஓடிக்கொண்டே இருந்தது. உண்மை அறியும் வரை இந்த நடுக்கம் அவனை விட்டு நீங்காது.
நேற்றைய முதலான நிகழ்வுகளை ஓட்டி பார்த்தான்.
சட்டென்று கண்கள் திறந்தவன்,
கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து “அருணின் கால் டீடெயில்ஸ் என்னவானது” என்று வினவினான்.
“உங்களுக்கு இப்போ தான் மெசேஜ் சென்ட் பண்ணேன் சார்.” வேகமாக காலினை கட் செய்து வாட்ஸப் திறந்து பார்த்தான்.
அவனின் இதயமே ஒரு நொடி நின்று துடித்தது.
“இருக்காது… இருக்காது…” மனதில் அளறினான்.
அவன் எதிர்பார்த்த நபருக்கு அருணின் எண்ணிலிருந்து முன்தின நள்ளிரவு முதல் பல அழைப்புகள் சென்றிருக்கிறது. எல்லாம் தவறவிட்டவை. ஆனால் அதிகாலை ஒரே ஒரு அழைப்பு மட்டும் ஏற்கப்பட்டு, பதினேழு செக்கெண்ட் பேசப்பட்டிருக்கு.
வாழியால் அடுத்து என்னவென்று யோசிக்க முடியவில்லை.
தலையை உலுக்கி தன்னை சமன்படுத்த முயன்றான்.
“சார்… வாட் ஹாப்பண்ட்?” அப்போது அவனருகில் வந்த சூர்யா, வாழியின் செயலில் பதறியவனாக வினவினான்.
“நத்திங்… நத்திங் சூர்யா. லைட்டா ஹெட் ஏக்” என்ற வாழி, “லிஸ்ட் என்னாச்சு?” எனக் கேட்டான்.
“அருண் நேம் எதுலையும் இல்லை சார்” என்றான் சூர்யா.
“அருண் மொபைல் ட்ராப் பண்ண சொல்லியிருக்கேன். பார்ப்போம்!” என்ற வாழி ஏதோ நினைவு வந்தவனாக வீடுவரை சென்று வருவதாகக் கூறிச்சென்றான்.
சூர்யா ஸ்டேஷன் சென்றிட…
“பல தொழில்களை தன் கைவசம் வைத்திருக்கும் தொழில் சக்கரவர்த்தி ஜேகேவின் மகன் அருண் இன்று அதிகாலை முதல் காணவில்லை. அவரது தொழில் எதிரிகளால் கடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது” என்று ஊடகங்களில் செய்தி பரவியது.
செய்தி வெளியாகிய சில நிமிடங்களில் விடயம் காட்டுத்தீபோல் நகரமெங்கும் பரவியது.
நான், நீயென்று தாங்கள் இல்லையென ஜேகேவின் அலைப்பேசிக்கு அழைப்பு வந்த வண்ணம் இருக்க… அவரது காரியதரிசி ராமன் அழைப்பு விடுத்து விசாரித்த அனைவரின் பெயரையும் குறித்து வைத்தார்.
“எல்லாருமே கால் பண்ணிட்டாங்க” என்று தளர்ந்து அமர்ந்த ஜேகே, “அந்த ஏசி சொல்ற மாதிரி இவனா எங்கையாவது போயிட்டானா?” என்று நெற்றியை தேய்த்துகொண்டார்.
“தம்பி மொபைல் ட்ராப் பண்ண சொல்லியிருக்காங்க சார். நல்ல தகவல் கிடைக்கும்” என்ற ராமனிடம், “அந்த நம்பிக்கை எனக்கில்லை. உள்ளுக்குள்ள ஏதோ கெட்டது நடக்கும் அப்படிங்கிற இன்ட்யூஷன்” என்றார் ஜேகே.
அவர் உள்ளுணர்வு பொய்த்துப்போகவில்லை.
அருண் இருக்கும் இடத்தை வாழி கண்டுபிடித்து அங்கு சென்று பார்த்திட… உயிரற்ற உடலாக ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
வாழியை விட்டு நீங்கிய குழப்பங்கள் யாவும் மீண்டும் அவனை ஒட்டிக்கொண்டது.
இம்முறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தான் சந்தேகிக்கும் நபரிடம் நேரடியாகத் தன் விசாரணையை முன் வைக்க முயன்ற நொடி… அவனின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திட… அளவில்லா ஆசுவாசம் அவனிடம்.
அருண் இறப்பிற்கு காரணம் என்னவாக இருக்கும்? கொலையாளி யாராக இருக்கும்?