உடைந்து நொறுங்கி நிற்கும்போது உங்கள் உயரின் முன் ஒரு முகம் தோன்றி உங்களின் ஒட்டுமொத்த வலியையும் காயங்களையும் ரணத்தையும் மீட்டெடுக்குமாயின் அதுவே உங்களுக்கான காதல்.
அந்நிலையில் தான் நிற்க… தன் அகம் தேடும் ஒருவனின் முகம் அவளின் காதலை காட்டிக்கொடுக்கவில்லை.
சாய்ந்து அழ அவனின் தோள் தேவையை நாடும் அவளின் மனம், அவன் மீது காதலிருப்பதை அறிந்திடவில்லை.
அவனது கரம் கோர்க்கும் வெம்மையில் மனதின் தகிப்பை போக்கிட துடிப்பவளுக்கு அவன் மீது அந்நொடி காதலே இல்லை.
கண்ணீரை சுமந்து நிற்கும் அவளது விழிகள் கண்டுவிடத் துடிக்கும் அவனது முகத்தின் மீது பின்நாளில் தனக்கு காதல் வருமென்று அக்கணம் அவளுக்கே தெரியாது.
காதல் ஒருமுறை தான் வரவேண்டுமா என்ன?
காதல்…
பல வண்ணங்கள் நிறைந்த மாயம்.
வண்ணங்களும் பல, அதனின் ஜாலாமும் பல.
மனம் மட்டும் குரங்கல்ல… இங்கு காதலும் ஒரு குரங்கு தான். உனக்கான காதல் கிடைக்கும்வரை தாவிக்கொண்டே இருக்கும்.
ஒருமுறை ஒருத்தர் மேல் மட்டுமே காதல் கொள்வதும்… கொள்ளும் காதல் நேசமட்டுமின்றி பலவற்றை எதிர்பார்த்து ஏமாறும் நிலையில், வேறொன்றை தேடுவதும் இயல்பான காதல் தான். ஆகமொத்தத்தில் காதல் என்பதே உண்மை தான். எதிர்பார்க்கும் நேசம் கிடைக்காத நிலையில் கிடைக்கும் இடத்தை நாடுவதும் காதலே!
காதலுக்கு சொல்லும் விளக்கங்கள் யாவற்றையும் விளங்கிக்கொள்ள… தூய்மையான காதலில் மூழ்கி திளைத்திருக்க வேண்டும் நீ!
உயிரற்ற கூடாய் நின்றிருந்தவளின் இதயம் அக்கணம் சுமந்ததெல்லாம் வலி, ரணம் கூடிய வலி மட்டுமே!
கண்ணிலிருந்து வழியும் அவளது கண்ணீரை பிறர் கண்டுவிடக் கூடாதென வான் முகில் நினைத்ததோ… முகிலவளின் மீது மழையாய் பொழிந்தது.
சுட்டெரிக்கும் வெயில் மறைத்து பட்டென்று இருள் சூழ்ந்து அவ்விடத்தை மழை நிறைத்தது.
நண்பகல் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.
பதிவாளர் அலுவலகம் முன்பு அவ்வளாகத்தின் உள்ளிருக்கும் மரத்தின் கீழ் நின்றிருந்தவளின் தகிப்பை, கொட்டும் குளிர் மழையாலும் குளுமை படுத்த முடியவில்லை.
வானுக்கு நிகராய் தன்விதாவின் கண்களும் நீரை பொத்துக்கொண்டு ஊற்றியது.
எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ…
மழை தன் வேகம் குறைத்து மென் சாரலாய் தூறிக்கொண்டிருந்தது.
அப்போதும் அவளின் நிலையில் மாற்றமில்லை. சிலையென உறைந்து நின்றிருந்தாள். மரத்த நிலையில்.
நெஞ்சம் ஏமாற்றத்தின் வலியை ஏற்காது, தாங்காது சில்லு சில்லாய் நொறுங்கிக் கொண்டிருந்தது.
அணிந்திருந்த பட்டு புடவை மழையில் நனைந்ததால் அதிக கனம் கொடுக்க… மனதின் கூடிய சுமைக்கு முன்னால் உடல் தாங்கும் சுமை அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.
“இந்த புடவையில் நீ தேவதை மாதிரி இருப்பாய் டியர். இந்த கலர் தான் உனக்கு ஆப்ட்டா இருக்கும்.” கட்டியிருக்கும் புடவை தேர்வின் போது அவன் சொல்லிய வார்த்தைகள். புடவையை உருவி எறிந்திட மனமும் கைகளும் பரபரத்தன. இருக்கும் சூழல் அதற்கு தடையாய்.
மனம் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்க… வெளியில் நிர்மலாய் காட்சி தந்தாள்.
தரையோடு வேரோடிப்போயிருந்த கால்களை மெல்ல நகர்த்தி அங்கு போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்தவள், வான் நோக்கி நிமிர்ந்து பார்த்தாள்.
சாரலாய் தூறிக்கொண்டிருந்த மழை துளிகள் அவளை வாரி அணைப்பதைப்போல் கற்பனை கொண்டவள், தன் கையில் இறுக்கிப்பிடித்திருந்த வாலட்டின் உள்ளிருந்த அலைப்பேசியை எடுத்தாள்.
திரை விலக்கி நடுங்கும் விரல்களால்,
‘வாழியாதன்’ என்ற பெயருக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
“எங்கேயிருக்க தன்வி? அத்தை நீ காணோமுன்னு எனக்கு கால் பன்றாங்க! உனக்கு எத்தனை தடவை கால் பன்றது? நாட் ரீச்சபிள் வருது. உன்கிட்ட ஒரு விடயம் சொல்ல நானும் காலையிலிருந்து வெயிட் பன்றேன்” என்று படபடவென பொரிந்த பின்னரே அவளை பேச அனுமதித்தான்.
“நான்…!” சொல்ல முடியாது தடுமாறினாள்.
அவளின் ஒற்றை வார்த்தை போதும் அவனுக்கு. அவளின் மனநிலையை கணிப்பதற்கு. அவளது தொண்டை அடைப்பு அவனுக்கு கலக்கத்தை கொடுத்தது.
“எங்கடா இருக்க? எதாவது ப்ரோப்ளமா? நான் வரட்டுமா?”
“ம்” என்று ஒற்றை சொல்லில் வைத்துவிட்டவள், தான் இருக்கும் இடத்தினை அவனுக்கு பகிர்ந்திருந்தாள்.
தன்விதா அனுப்பிய லொக்கேஷனை மேப்பில் பார்த்தவன்,
“இவள் எதுக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் போயிருக்காள்?” என்ற யோசனையுடனே தான் பணிபுரியும் காவல்நிலையம் விட்டு வெளியில் வந்தவன், தன்னுடைய இருசக்கர வாகனத்தை உயிர்பித்து கொட்டும் தூறலை கிழித்துக்கொண்டு பறந்தான்.
வாழியாதன். உதவி ஆணையர். தேர்வெழுதி ஆய்வாளராக இரண்டு வருடங்களுக்கு முன்பு பணியில் அமர்ந்தவன், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவி உயர்வு பெற்றிருந்தான்.
காவலர் பணி அவனது கனவெல்லாம் கிடையாது.
தன்விதாவின் தந்தை ராமகிருஷ்ணன் நகரத்தின் ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர். சிறு வயதிலிருந்தே அவரை பார்த்து வளர்ந்ததால், அவனுக்கு அந்த காக்கி உடையின் மீது அலாதி பிடித்தம்.
ராமகிருஷ்ணனும், வாழியின் தந்தை சுந்தரசேகரனும் ஒரே ஊர். சிறுவயது முதலே நெருக்கமான நண்பர்கள். ராமகிருஷ்ணன் வேலை விடயமாக நகரத்திற்கு வர, நண்பனை பிரிந்திருக்க முடியாதென சுந்தரசேகரனும் தன் ஜாகயை நகரத்தில் மாற்றிக்கொண்டார்.
இருவரின் நட்பையும் அவர்களது குடும்பம் புரிந்து கொண்டது என்பதால், ஒரே இடத்தில் ஒன்றாக இருப்பதில் எப்போதும் சிக்கல் இருந்ததில்லை.
பக்கத்து பக்கத்து வீடு. மதில் சுவர் ஒன்றே. இனி இதுதான் தங்களது வாசமென்றதுமே இருவரும் இணைந்து அவ்விடத்தை வாங்கி, ஒரே சுற்றுச்சுவருக்குள் தத்தம் பிடித்தத்திற்கு ஏற்ப வீடு கட்டிக்கொண்டனர்.
கிருஷ்ணனுக்கு சேகரனும், சேகரனுக்கு கிருஷ்ணனும் தான் திருமணத்திற்கு பெண் பார்த்தனர்.
பெண்கள் இருவருமே கணவரின் நட்புக்களை புரிந்து கொண்டவர்களாக தாங்களும் நட்பு பாராட்ட… இன்றளவிலும் அவர்களின் தோழமையில் எவ்வித தடையும் வரவில்லை.
சேகரனுக்கும் சுவலட்சுமிக்கும் திருமணமான அடுத்த வருடமே வாழி பிறந்துவிட, அவர்களுக்கு முன் திருமணமான கிருஷ்ணன் மற்றும் ராதாவுக்கு ஆறு வருடங்கள் சென்ற பின்னரே தன்விதா பிறந்தாள்.
வாழி பிறந்தது முதல், மணமாகி இரண்டு வருடங்கள் கடந்தும் பிள்ளை இல்லையே என வருந்திய கிருஷ்ணன் ராதாவுக்கு வாழி தான் உலகமாகிப்போனான். அவன் அவனது பெற்றோருடன் இருந்த நேரத்தைவிட கிருஷ்ணன் வீட்டில் அவரது மார்பில் இருந்ததுதான் அதிகம். ராதாவுக்கும் வாழியென்றால் அத்தனை பிடித்தம். அவனுக்கு பெயர் வைத்ததுகூட கிருஷ்ணன் தான்.
தன்வி பிறக்கும் வரை தங்கள் மகனென்று சேகரன் மற்றும் லட்சுமி எவ்வித உரிமையையும் அதிகம் காட்டியதில்லை.
அதுவே கிருஷ்ணனுக்கு சேகரனின் மீது அளவுகடந்த அன்பை வளர்த்தது.
நான்கு வருடங்களுக்கு பின்னர் தன்வி பிறந்தும் அவ்வீட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தான் வாழியாதன்.
சிறிது விவரம் தெரிந்த பின்னர் தானகவே கிருஷ்ணன் மற்றும் ராதாவிடமிருந்து, தன்விக்கு முன்னுரிமை அளித்து சற்று விலகி நின்றான். அதில் தன்விக்குமே வாழியின் மீது அதிக பிடித்தம் உண்டாயிற்று.
ஒற்றையாக வளர்ந்த ஆண் பிள்ளை என்பதால் வாழிக்கு சட்டென்று தனுவிடம் நெருக்கம் காட்டத் தெரியவில்லை.
ஆனால் அவள் பிறந்தது முதல் தன்னுடைய கிருஷ்ணன் மாமா மகளென்ற பாசம் அவனையும் அறியாது அவள்மீது அளவு கடந்து உண்டாயிற்று.
பள்ளி கல்லூரிகளில் அவளுக்கு அவன் தான் காவலன். அவனிருக்கும் தைரியத்தில் தனு சற்று கர்வமாகவே வலம் வருவாள். தனக்கு ஒன்றென்றால் வாழியிருக்கிறான் என்ற எண்ணத்தை அவனறியாதே அவளுக்குள் விதைத்திருந்தான்.
இருவரும் அதிகம் பேசிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இருவரின் தேவை, பிடித்தம் என அனைத்தும் தெரிந்து வைத்திருந்தனர். அனைத்தும் இயல்பாக அறிந்துகொண்டது.
தேவைக்கு மட்டுமே இருவரின் பேச்சிருக்கும்.
தந்தையர் இருவரும் நட்புடன் பழகினாலும், அவர்களது பிள்ளைகளுக்குள் நட்பில்லை. ஆனால் பாசமிருந்தது. மனதளவில் அதிகப்படியான அன்பு கொண்டிருந்தனர்.
தனு தன்னுடைய முடியாத நேரங்களில் தன்னைப்போல் வாழியை தான் நாடுவாள். அதேபோல் அதீத மகிழ்வின் போதும், அவள் மனம் அவனைத்தான் தேடும். சிறுவயது முதலே ஒன்றாக இருப்பதால் இருவரிடமும் தன் உறவென்ற அன்பும் புரிதலும் அதிகப்படியாகவே இருந்தது.
நண்பர்களைப் போல பேசிக்கொள்ளமாட்டார்களே தவிர, அவளைப்பற்றி அவனும், அவனைப்பற்றி அவளும் எல்லாம் தெரிந்து வைத்திருந்தனர்.
அவளுக்கு ஒன்றென்றால் அவனது முடிவும் அங்கு வேண்டுமாக இருந்தது.
ஆனாலும் தன்வி வாழியிடம் மறைத்த ஒரே விடயம். அவளது காதல்.
அவள் தான் மறைத்தாள். அவன் அறிந்து வைத்திருந்தான். ஒருபோதும் தனக்கு தெரியுமென்று அவன் காட்டிக்கொண்டதில்லை.
எப்படியும் அவளின் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்கிட தன்னைத்தான் அவள் நாடுவாள் என்பதில் அத்தனை நம்பிக்கை அவனுக்கு. ஆனால் இப்போது அவள் செய்திருக்கும் காரியம் அவனது மொத்த நம்பிக்கையையும் உடைத்தெறியும் என்பதை அவள் உணராது போனாள்.
காதல் கை சேர்ந்திட வேண்டுமென்கிற எதிர்பார்ப்பில் தவறாக முடிவெடுத்து விட்டாள்.
காலை எழுந்து… இன்று தான் செய்யவிருக்கும் செயலை நினைத்து… குடும்பத்தை, தன்மீது உயிரே வைத்திருக்கும் ஐந்து ஜீவன்களை வதைக்கப்போகிறோம் என்று மருகி யோசனையோடு பால்கனியில் நின்றிருந்தவள், காலை ஓட்டமாக இரு வீட்டிற்கும் பொதுவாக நடுவிலிருக்கும் தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த வாழியை கண்டு குற்றவுணர்வுக்கு ஆட்பட்டாள்.
“இவங்ககிட்ட சொல்லலாமா?” ஒரு நொடி தான் அந்த யோசனை.
உடனடியாக வேண்டாமென்று தலையை உளுக்கிக்கொண்டு அறைக்குள் சென்றவள் முகத்தை கையில் தாங்கியவளாக மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்.
“அவங்களுக்கு இப்போ சொல்ல வேண்டாம். அடுத்த செக் அப்பாகிட்ட சொல்லிட்டுதான் வேற வேலை பார்ப்பாங்க. எல்லாம் முடிச்சிட்டு வந்து சொல்லிக்கலாம். ஏமாற்றமா இருக்கும். வருந்துவாங்க. எப்படியும் பெரியவங்க நாலு பேரையும் அவங்க(வாழி) சமாளிச்சிடுவாங்க” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், ஆண்கள் மூவரும் வெளியில் செல்வதற்காகக் காத்திருந்தாள்.
முதலில் வாழியின் இருசக்கர வாகனம் செல்லும் சத்தம் கேட்க… அடுத்து சேகரன் தன்னுடைய ஜவுளிக்கடைக்கு புறப்பட… வீட்டில் சும்மா இருப்பது வெறுப்பாக இருக்கிறதென்பதால் இன்று கிருஷ்ணனும் நண்பருடன் அவரது கடைக்கு சென்றார்.
“நான் மத்த கிளைகளுக்கெல்லாம் போகணும் கிருஷ்ணா. என்னோடு உனக்கும் அலைச்சல். உடம்புக்கு சேராது” என்று சேகரன் சொல்லி பார்த்தும் கிருஷ்ணன் கேட்காது நண்பருடன் சென்றுவிட்டார்.
சுந்தரசேகரன் ‘சுவலட்சுமி சில்க்ஸ் அண்ட் ஜவுளி’ என்று தன்னுடைய மனைவியின் பெயரில் நகரத்தின் பல இடங்களில் கடை வைத்துள்ளார்.
தன்னால் தான் வாழியாதன் அவனது தந்தையின் தொழிலை ஏற்று நடத்தாது காவல் பணியில் சேர்ந்து, இந்த வயதிலும் தன் நண்பன் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறான் என்று வருந்தும் கிருஷ்ணன், சேகரனுக்கு உதவியாக இருக்குமென்று இப்படி அவ்வப்போது அவருடன் கிளம்பிவிடுவார்.
அப்படி செல்லும் தருணங்களில் கிருஷ்ணனிடம் எதாவது காரணம் சொல்லி தலைமை இருக்கையில் அமர வைத்துவிட்டு, சேகரன் மட்டும் மற்ற கிளைகளுக்கு சென்று பார்வையிட்டு வருவார்.
நண்பர்களுக்கு மற்றவர் உடல் நலனில் அதீத அக்கறை இருந்தது.
தனு நேரத்தை பார்த்துக்கொண்டு அவஸ்தையாய் அமர்ந்திருந்தாள்.
‘அவங்ககிட்டவாவது சொல்லியிருக்கலாம்!’
கதவினை தட்டிவிட்டு ராதா அறைக்குள் வர முகத்தை சீராக வைத்துக்கொண்டாள்.
அவளின் நல்ல நேரம் பெண்கள் இருவரும் கோவிலில் பூஜையென்று சென்றது, வீட்டை விட்டு அலங்காரத்தோடு வெளியில் எப்படி செல்வதென்று யோசனையோடு இருந்த தனுவுக்கு எளிதாகியது.
கோவிலுக்கு செல்லப்போவதை சொல்லவே ராதா வந்தார்.
இருவரும் கிளம்பிய அடுத்த நொடி மளமளவென புடவையை சுற்றிக்கொண்டு மிதமான ஒப்பணையில், தலைக்கு குழல் நீண்ட மல்லிகை சரம் வைத்து தயாராகி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுவிட்டாள்.
புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் அவள் எப்போதும் ஜீன்ஸ், டாப், ஸ்கர்ட், என்று நவநாகரிக உடையில் செல்வதையே பார்த்திருந்த வீட்டின் காவலாளிக்கு இன்றைய அவளின் தோற்றம் ஆச்சரியத்தை கொடுத்தது.
அவரின் முகபாவனையில் ஒரு சிந்தனை படிந்திருப்பதை கண்டவள்,
“ஸ்டுடியோவில் இன்னைக்கு ஒரு பன்க்ஷன் அங்கிள். ட்ரெடிஷ்னல் வியர் ட்ரெஸ் கோட். நால்லாயிருக்கா?” என்று இயல்பாக பேசுவதைப்போல் அவரை சமாளித்து வெளியேறியவளுக்கு அப்போது தான் சீராக சுவாசிக்கும் ஆசுவாசம்.
என்ன தான் கிருஷ்ணன் மகள் மீது உயிரையே வைத்திருந்தாலும், சுதந்திரமாக வளர்த்தாலும் கண்டிப்பிலும் கவனமாக இருந்தார். காவல்துறையில் பெரும் பதவியில் இருந்தவர் அல்லவா? பெண்களுக்கு எதிரான ஒன்றை தினம் பார்ப்பதால், மகளை அதீத பாசத்தோடு பல கட்டுப்பாடுகளுடனும் வளர்த்தார்.
மகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர், அதிலிருக்கும் சாதக பாதகங்களை எடுத்து சொல்லவும் தவறியதில்லை.
ஆதலால் கிருஷ்ணன் எத்தனை அன்பாக, தோழமையாக பழகினாலும்… அவர் மீது தனுவுக்கு பயம் இருக்கத்தான் செய்தது.
அந்த பயமே இன்று அவளை இப்படியொரு வேலையை செய்ய வைத்திருக்கிறது.
எப்படியும் வாழியாதன் சொன்னால், கிருஷ்ணன் கேட்டுக்கொள்வார். தான் என்ன செய்தாலும் வாழி தன்னை அப்படியே விட்டுவிடமாட்டான் என்கிற நம்பிக்கை. அவளை எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் யோசிக்க விடாது இப்படியொரு முடிவை எடுக்க வைத்தது.
வாழி பதிவாளர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, லட்சுமி மகனுக்கு அழைப்பு விடுத்தார்.
ப்ளூடூத் இணைப்பில் இருந்ததால் ஆன் செய்து பேசியவனின் வேகம் மட்டும் குறையவில்லை.
‘அழுதிருப்பாளோ?’ என்று எண்ணும் நிலையிலிருந்த தனுவின் குரல் அவனுக்கு சிறு பதட்டத்தை கொடுத்திருக்க… அவளை கண்டுவிட அத்தனை வேகம் அவனிடம். அதனை எங்கும் அவன் குறைக்கவில்லை.
“ம்மா… தன்வி என்கூடதான் இருக்காள். நான் வரும்போது கூட்டி வந்திடுறேன். நீங்க அத்தையை கவலைப்படாமல் இருக்க சொல்லுங்க.” அவர் எதற்காக அழைத்திருப்பாரென்று அதற்கான பதிலை சொல்லி துண்டித்திருந்தான்.
கோவிலுக்கு சென்று இரண்டு மணி நேரத்தில் வந்தவர்கள், வீட்டில் தனு இல்லாததும் காவலாளியிடம் விசாரித்தனர்.
அவர் ஸ்டுடியோ சென்றிருப்பதாகக் கூற,
“இன்னைக்கு கமிட்மெண்ட் எதுவுமில்லை லீவ் சொன்னாளே லட்சு!” என்றவராக ராதா தனுவுக்கு அழைக்க… அவள் வீட்டை விட்டு வெளியேறியதுமே அலைப்பேசியை அணைத்திருந்ததால் அழைப்பு செல்லவில்லை.
நண்பகல் கடந்து சில மணிநேரங்கள் கடந்திருக்க ராதாவுக்கு பயம் பீடித்தது.
முன்பே வாழிக்கு அழைத்து சொல்லியிருந்தவர், இன்னும் வரவில்லை என்று மீண்டும் சொல்லிட…
தனுவின் நண்பர்களுக்கெல்லாம் வாழி அழைத்து விசாரிக்க… அனைவரும் ஒன்றுபோல் தெரியாது என்ற பதிலையே வழங்கிட… அடுத்து என்னவென்று அவன் யோசித்த நேரம் தான் தனுவே அவனை அழைத்திருந்தாள்.
சிறு வயதிலிருந்து அவளை பார்க்கிறான். அவளின் நிழலின் அசைவுக்குக்கூட அவனால் அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியும். அவளின் குரல் ஒலித்த கணம் எண்ணவோயென்று பதறியவன், அடுத்த அரை மணி நேரத்தில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்தான்.
வளாகத்தின் நுழைவு வாயிலுக்கு இடது புறம் தனு அமர்ந்திருந்த மரமிருக்க, மழை தூறிக்கொண்டிருப்பதால் அவள் உள்ளிருப்பாளென்று நினைத்து உள்ளே விரைந்தான்.
வாழி காக்கி உடையிலேயே வந்திருக்க… அனைவரும் என்னவோ ஏதோவென்று பார்க்க… அவர்களையெல்லாம் கருத்தில் கொள்ளாது தனு இருக்கின்றாளா? என்று பார்வையால் அலசியவன், அவள் இல்லையென்றதும் வெளியில் வர, அவனுக்கு நேரெதிர் சூன்யத்தை வெறித்தவளாக அமர்ந்திருந்தாள் தன்விதா.
தனுவின் தோற்றமே, அவள்… பெரும் மழை கொட்டியது முதல் நனைந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனுக்கு காட்டிக்கொடுத்தது.
அவளை அருகில் நெருங்கிய பின்னபே அவள் அணிந்திருக்கும் புடவை அவனது கண்ணில் விழுந்து கருத்தில் பதிந்தது.
வீட்டு விசேட நாட்களில் கூட, ராதா மற்றும் லட்சு சொல்லியும் ஒரு நாளும் புடவை அணிந்தது கிடையாது.
ஆனால் இன்று?
வாழியின் மனம் தடதடக்க ஆரம்பித்தது.
அவனது போலீஸ் மூளை அவளிருக்கும் இடம் தோற்றமென வைத்து எதையோ கண்டுகொண்டது.
கணித்த விடயம் அத்தனை உவப்பானதாக இல்லை.
‘எப்படி இப்படியொரு முடிவை இவளால் எடுக்க முடிந்தது?’
மனம் கனத்து அவள் முன் சென்று நின்றான்.
அரவம் உணர்ந்து இமை தட்டி நீர்படலம் சரிசெய்து அவனை பார்த்தவளின் கண்கள் இரண்டும்… இதுவரை அவளிடம் அவன் பார்த்தே இராத சோகத்தை மிதமிஞ்சி வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
“வீட்டுக்கு போகலாமா?” மரத்த குரலில் வினவினான்.
தலையை மட்டும் ஆட்டினாள்.
வாழி சென்று தன்னுடைய இருசக்கர வாகனத்தை அவளிருக்கும் இடத்திற்கு எடுத்துவர, எதையும் உணராது அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
இருவருக்குமான பயணம்.
அவனது இருசக்கர வாகனத்தில் அவள் ஏறுவது எப்போதாவது மட்டுமே நடக்கும்.
அதிகம் இரவு நேரங்களில் ஷூட்டிற்கு சென்றவள் வர தாமதமானால், சென்று அழைத்து வருவான்.
மத்தபடி பல சந்தர்ப்பங்களில் கிருஷ்ணனே அழைத்து செல் என்று கூறினாலும் தவிர்த்திடுவான்.
வெளிப்பார்வைக்கு தங்களின் பழக்கம் தவறான கண்ணோட்டத்தில் அமைந்துவிடக் கூடாதென்பதில் அத்தனை கவனமாக இருந்தான்.
இதுவே தனு ஆணாக இருந்திருந்தால் தனக்குள் இத்தனை கட்டுப்பாடுகள் விதித்து எட்ட நின்றிருக்கமாட்டான். தந்தையரை போல் தாங்களுமென்று சுற்று திரிந்திருப்பான்.
தனு பெண் பிள்ளை என்பதே அவன் தன்னை தள்ளி நிறுத்திக் கொண்டதற்க்கு காரணம்.
‘குடும்பம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு என்பதால் பிள்ளைகளை ஒண்ணா பழகவிட்டுட்டாங்க போலிருக்கு’ என்ற பேச்சை தவிர்ப்பதற்காகவே தனுவிடம் அவளின் நலன் மீது அக்கறை கொண்டவனாக மட்டும் தள்ளியே இருந்தான்.
இன்று தான் அவளை தன் வண்டியில் தனக்கு பின்னால் பகலில் அமர அனுமதியளித்திருக்கிறான்.
இதுவே அவன் சரியான மனநிலையில் இல்லை என்பதை பறைசாற்றியது.
நிலையாக இருந்திருந்தால், அவள் வண்டி கொண்டு வந்தாளா? எனக் கேட்டு, இல்லையெனும் பட்சத்தில் ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்து, துணையாக பின் சென்றிருப்பான்.
ஆனால்… இப்போது, எதையும் சரியாக செய்திட அவன் மனம் தெளிவாக இல்லை.
தனு செய்யவிருந்த காரியத்தை யூகித்தே… மனம் துவண்டிருந்தான்.
‘மாமாவுக்கும் அத்தைக்கும் தெரிந்தால்?’ அவளின் பெற்றோரை நினைத்து அவன் கவலை கொண்டான்.
அவனாக கணித்ததே அத்தனை வருத்தத்தை கொடுத்தது. இதையே அவளாக சொல்லும்போது?