எப்போதும் போல் காலையில் நேரத்திற்கு விழித்த சுரேகாவின் மனமோ நேற்று நள்ளிரவு மகன் கூறியதிலேயே உழன்றது.
சிறிய வயதிலிருந்தே தீரஜ் ரோஷக்காரன். தன் தன்மானம் மற்றும் சுயமரியாதையையும் யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை. அப்படிப் பட்டவன் நக்ஷத்ராவின் மானத்திற்காக, மரியாதைக்காக இன்னும் எத்தனை அவப்பெயரும் சுமக்க தயாரெனக் கூறியது அவருக்கு பேரதிர்ச்சி தான்.
தீரஜ் நக்ஷத்ராவை முதலில் எங்கு பார்த்தான்? எப்போது பார்த்தான்? என்றெல்லாம் சுரேகாவிற்கு தெரியாது. ஆனால் அவளின் மீது தன் மகன் உயிரையே வைத்திருக்கிறான் என்று மட்டும் தெரிந்தது.
ரூபாவின் மீது கோபம் கொண்டு தீரஜின் மெத்தையில் படுத்த நக்ஷத்ராவிற்கு ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை. மனமெங்கும் உலையாகக் கொதித்தது. ‘ஒருத்தருக்கு கூடவா என் வாழ்க்கை என் உணர்வுகள் மேல அக்கறை இல்லை?’ என்று நினைக்க நினைக்க, அவளின் கண்ணீரால் தலையணை நனைந்துக் கொண்டே இருந்தது.
அழுதழுது கரைந்தவள் எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. ஆனால் அவள் விழிக்கும் போது காலை பத்து மணி. பக்கத்தில் ஆதிராவும் இல்லை.
பதறி அடித்துக்கொண்டு அவள் வெளியே வர, டைனிங் டேபிளில் அமர்ந்த படி ஆதிரா டீவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார் அம்பிகாவதி.
அதைப் பார்த்த நக்ஷத்ராவின் மனமோ, ‘எப்படி இவங்க கூடவெல்லாம் ஆதிரா ஒட்டுறாள்? தெரியாதவங்க சாப்பாடு ஊட்டி விட்டால் அவள் சாப்பாடுற ஆள் இல்லையே!’ என்று அவள் குழப்பத்துடன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “நக்ஷத்ரா, முழிச்சிட்டியாமா… நீ காஃபி குடிப்பியா இல்லை டீயா?” என்று சுரேகா அக்கறையுடன் கேட்க, ‘ஒன்னும் வேண்டாம்… என்னை என் வீட்டுக்கு அனுப்புங்க’ என்று கத்த வேண்டும் என்றுத் தான் தோன்றியது. ரூபாவின் மீது நக்ஷத்ராவிற்கு ஏமாற்றம், கோபம் கலந்த அதிருப்தி. தங்கை ஒரு சுயநலவாதிவாகி விட்டாள் என்று கூட நினைக்கத் தோன்றியது. ஆனாலும் தங்கையின் மேலுள்ள அந்த ஆழமான பாசம், நேசமெல்லாம் அப்படியே தான் இருந்தது. தங்கையின் வாழ்க்கை, கணவன் அவளின் புகுந்த வீட்டில் தன்னால் பிரச்சனை வரக்கூடாது என்று நேற்றெடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள் நக்ஷத்ரா.
“நான் பாத்ரூம் யூஸ் பண்ணனும்… எங்கே?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“உன் ரூம்லயே இருக்கேமா. ஒரு நிமிஷம் இரு” என்று வேகமாக தன் அறைக்குள் சென்றவர், சில நொடிகளில் கையில் ஒரு புது பிரஷ், சோப்பு, ஷாம்பூ, டவல் இப்படி இன்னும் சில உபகாரங்களை மருமகளின் கையில் அன்பாக கொடுத்தார் என்பதை விட திணித்தே விட்டார் தான்.
பிடிக்காத அவனுடைய அறை, கட்டிலை உபயோகித்தவள் இப்போது அதே மனநிலையுடன் பாத்ரூமையும் பயன்படுத்திவிட்டு, குளித்து முடித்து விட்டு தலையில் ஈரத்துண்டுடன் வெளியில் வரும் போதே, அவளின் பெற்றோர்கள் சத்தம் கேட்க வேக நடையுடன் ஹாலிற்கு மூச்சு வாங்க வந்தாள் நக்ஷத்ரா.
காலையிலேயே மனோஜின் குடும்பத்தினர் நால்வரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றிருந்தனர்.
“மன்னிச்சுருங்க சம்மந்தி. அன்னிக்கு அம்மா அப்படி பேசினது ரொம்ப பெரிய தப்பு” என்று அருணாச்சலம் காஃபி குடித்தபடி தயக்கத்துடன் ஆரம்பிக்க, “ஆமா சம்மந்தி” என்று மீனாட்சியும் கூறிக்கொண்டிருக்கும் போது, வேகத்துடன் வந்து நின்ற நக்ஷத்ராவின் மனதோ, ‘அப்போ இவங்க என்னைக் கூட்டிட்டு போக வரலையா?’ என்று பெண்ணவளின் மனம் கொதித்தது.
“உங்கப் பக்கம் தவறில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டாம் மாமா. அந்தப் பிரச்சனை ஆரம்பிக்க காரணமா இருந்ததே என் மாமா, அவர் சார்புல இன்னும் எங்க வீட்டு பெரியங்க யாரும் மன்னிப்பு கேட்கலை தானே! எனக்கு சொந்தமானவங்க தப்பே இல்லாமல் தலைகுனியறது எனக்குப் பிடிக்காது” என்று கம்பீரமாக ஒலித்த தீரஜின் கண்கள் இறுதியாக நக்ஷத்ராவின் முகத்தில் தான் நிலைத்து நின்றது.
‘இவன் வீட்டுல தான் இருக்கானா!’ என்று சலிப்பாக நினைத்தவளின் கண்கள், தீரஜின் மடியில் அமர்ந்திருந்த ஆதிராவின் மீது தான் கோபமாய் நின்றது.
சுரேகாவிற்குத் தான் சற்று தலைகுனிவாக இருந்தது. ஏனெனில் நாகைய்யா தானே நக்ஷத்ராவை அவ்வளவு அசிங்கமாக பேசி பிரச்சனையை பெரிதாக்கினார்.
“சரி விடுங்க… ரெண்டு கல்யாணம் நடந்திருக்கு இல்லையா. அதுக்கு கழிஞ்ச திருஷ்டி மாதிரி எடுத்துக்கலாம்” என்று அம்பிகாவதி சூழ்நிலையை இலகுப்படுத்த முயற்சிக்க, “நீங்க ஏன்மா சோகமா இருக்கீங்க? அவர் அப்படி பேசுறதுக்கு நீங்க தலைகுனியணும்னு அவசியம் இல்லை” என்று முடித்தான். இதைக் கண்ட அருணாச்சலம் மற்றும் மீனாட்சி மருமகனின் சாதுர்யமான பேச்சைக் கண்டு வியந்தனர்.
“உமையாம்மா” என்று தயங்கியபடி தந்தை அழைக்க, அவரின் அழைப்பிற்காக காத்திருந்த மகள் ஓடிச்சென்று தந்தையின் பக்கத்தில் அமர்ந்து தோள் சாய்ந்து அழுது குமுறினாள். இதனை எதிர்ப்பார்த்த தீரஜ் ஆதிராவிடம், “அம்மாயி, அம்மாவை அழ வேண்டாம்னு சொல்லுங்க… நீங்க தாத்தா, ஆச்சிகூட பேசிட்டு இருங்க… அப்பா வந்திடுறேன்” என்று மகளை மெல்ல இறக்கிவிட்டு நகர முற்பட, அவனின் கையை பற்றிய மகளோ, “என்னை வண்டியில கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க ப்பா” என்று முகத்தை உரிமையாக சுளித்தாள்.
“தாத்தா, ஆச்சி கூட பேசிட்டே இருங்க… அப்பா வந்திடுறேன்! அப்புறம் நம்ம ஜாலியா போயிட்டு வரலாம் குட்டிமா” என்று மகளின் தலையை வருடியபடி எழ, அவனின் கண்பார்வையிலேயே விஷயத்தைப் புரிந்த அம்பிகாவதி மற்றும் சுரேகா நக்ஷத்ரா குடும்பத்திற்கு தனிமை கொடுக்க விலகினர்.
“மாமா! பெரியவங்க விஷயம் பெரியங்கவங்களைத் தாண்டி போக வேண்டாம்” என்று கூறியவனின் கண்கள் ஆதிராவைப் பார்த்துவிட்டு, வேகமாக நகர்ந்தது. நக்ஷத்ரா செல்லும் அவனையே முறைத்தபடி, “அப்பா, யாரு இவன் அவ்வளவு உரிமையா” என்று கொந்தளிக்க ஆரம்பித்தவளின் கையைப்பற்றி எழுந்த அருணாச்சலம், “வாம்மா ரூமுக்குள்ள போகலாம்” என்று அழைத்துச் செல்ல, மீனாட்சியோ கண்களில் கண்ணீருடன் பேத்தியை அள்ளி முத்தமிட்டார். பிறந்ததிலிருந்தே தங்களின் அரவணைப்பிற்குள் வளர்ந்த பேத்தியின் திடீர் பிரிவு பெரியவர்களை வாட்டத் தானே செய்யும்.
மகளோடு அறைக்குள் வந்தவர் கதவைத் தாழ்ப்பாளிட, “அப்பா, அவன் யாரு என்ன உங்களுக்கு எதுவுமே தெரியாதுப்பா! அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறீங்க. எனக்குச் சுத்தமா புரியலைப்பா, எவனோ ஒருத்தன் என் கழுத்துல தாலி கட்டியிருக்கான். அவனைத் தண்டிச்சு என்னைக் கூட்டிட்டு போகாமல், என்னை அந்த ஊர்ல தனியா விட்டுட்டு நீங்க கிளம்பிட்டீங்களேப்பா… சரி, அதெல்லாம் விடுங்க” என்று அழுத விழிகளை அழுந்த துடைத்தவள், “என்னையும் என் பொண்ணையும் இங்கேயிருந்து இப்போ கூட்டிட்டு போயிடுங்கப்பா… இந்த வீட்டுல அவன் ரூம்ல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பு மேல நிக்குற மாதிரி இருக்குபா” என்று தந்தையின் கையைப் பிடித்தவளின் கையை ஆதரவாக வருடியவர், “உனக்கு இன்னொரு கல்யாணம் நடக்கணும்னு நானும் உன் அம்மாவும் ரொம்பவே ஆசைப்பட்டோம் என்பதைத் தாண்டி அது எங்களுடைய தீராத கவலையாகவே ஆயிடுச்சு உமையா. நம்ம காலத்துக்கு அப்புறம் பொண்ணும் பேத்தியும் என்ன பண்ணுவாங்கனு ரொம்ப நாளா எனக்கு சரியான தூக்கம் கூட இல்லைமா” என்று அவர் கவலையுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே,
“அதனால இவனை மாதிரி ஒரு குப்பைத்தொட்டியில என்னை குப்பை மாதிரி தூக்கிப்போட்டீங்க அப்படி தானேப்பா” என்று ஆதங்கத்துடன் கேட்ட மகளின் இந்த கோப அவதாரம் அருணாச்சலத்திற்கே பேரதிர்ச்சி தான்.
“உமையாம்மா! நீயா இந்த மாதிரியெல்லாம் பேசுற…” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே, “பேசுற பொண்ணு இல்லை தான்ப்பா ஆனால் என் மனசுல அந்த ஆளைப் பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு கோபம் வருது.. இதுல அவன் என்னை ல…” என்று கூற வந்தவள், மறந்தும் கூட தீரஜ் அவளைக் காதலிக்கிறேன் என்று கூறிய வார்த்தைகளை யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் இப்போதே அவனுக்கு தான் ஆதரவு பலமாக இருக்கிறது. அதில் அவனின் அந்த சோ கால்ட் காதல் விஷயம் இவர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவு நான்… அவன் உனக்கானவன் அதான் விதிப்படி இப்படி நடந்துவிட்டது என இட்டுக்கதைகள் கட்டுவார்கள் எனவுணர்ந்த நக்ஷத்ரா அவனின் காதலைப் பற்றி மறைக்க முடிவெடுத்தாள்.
“அப்பா, எனக்கு ரெண்டாவது கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்லை அது உங்களுக்கே தெரியும்” என்று கோபத்தை அடக்கியபடி கூற,
“கடவுளுக்கே உன் மனசு தெரிஞ்சு தான் இப்படி ஒரு கட்டாயக் கல்யாணம் பண்ணிவைச்சிருக்காரு போல” என்று அருணாச்சலம் உடல்மொழியில் தளர்வுடன் சொல்ல,
“அப்பா! நீங்களா இப்படி பேசுறீங்க?” என்று அதிர்ச்சியுடன் விழித்தாள் நக்ஷத்ரா.
“உன் கோபம் எனக்கு புதுசாயிருக்கு அதே போல என் தளர்வு உனக்கு புதுசா தெரியுது… ஆனால் நான் மனசளவுல உன் வாழ்க்கையை நினைச்சு தளர்ந்து ரொம்ப நாளாயிடுச்சு இப்போ என் உடல்லயும் காட்ட ஆரம்பிச்சிடுச்சு. உன்கிட்ட என்னால இதுக்கு மேல போராட முடியலை” என்று கட்டிலில் சோர்வாக அமர்ந்தவரின் தளர்ந்த சோர்வான பேச்சு, நடையெல்லாம் மகளை அச்சுறுத்தியது.
அவர் கால்மாட்டில் அமர்ந்த நக்ஷத்ரா, “அப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… தண்ணீ குடிக்கிறீங்களா? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா ப்பா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“தெரியலைமா… ஆனால் இப்போ உனக்கு கிடைச்சிருக்க வாழ்க்கையை விட்டு நீ தனியா வீட்டுக்கு வந்தால், அப்பாவுடைய பொணத்தைத் தான் பார்க்க முடியும். அப்புறம் உன் இஷ்டம்” என்று அதே சோர்வுடன் எழுந்தவர், “வீட்டுக்கு வந்தால் நீயும் மாப்பிள்ளையும் கணவன் மனைவியா வாங்க… அப்படி நீ மட்டும் என் மகளா வந்தால் என் பொணம் வீட்டுல கிடக்கப்போறது சத்தியம்” என்று அவர் கூறிவிட, அதிர்ச்சியில் உறைந்திருந்தவளுக்கு அடுத்து என்ன தான் பேச முடியும்? பேச முடிந்தும் ஊமையாகி விட்டாள்! அவளின் கை கால்கள் கட்டப்படவில்லை ஆனால் இதயமோ தந்தை கூறிய தற்கொலை மிரட்டலால் சிறையிடப்பட்டது…
தந்தையிடம் கேட்க, ஆதங்கப்பட நிறைய கேள்விகள் இருந்தது. கேட்டும் பயனில்லை பிரோயஜனமில்லை என்பது அவரின் ஸ்திரமான தளர்ந்த பேச்சும், தற்கொலை மிரட்டலுமே உணர்த்திவிட்டது.
தாய் மற்றும் தந்தை விடைப்பெற்ற பின் அம்பிகாவதியிடம் மகளைக் கொடுத்தவள், சாப்பிட்டுவிட்டு தலைவலி என்று படுத்தேவிட்டாள்.
முந்தைய நாள் தூக்கமின்மையால், அவள் எழும் போது நேரம் இரவைக் கிட்டியிருந்தது. அவளின் பக்கத்தில் முக்கால்வாசி தூக்கத்திலிருந்த ஆதிராவிற்குக் கதைச்சொல்லி துங்கவைத்துக் கொண்டிருந்தான் தீரஜ். இவ்வளவு நேரம் மனதிலிருந்த சோர்வு அவனைக் கண்ட பின் கோபக் குழம்பாய் மாறி அவள் வேகமாக எழவும், உறங்கிய மகளின் மேல் எப்போதும் போல் போர்வையை அணைப்பாய், பாதுகாப்பாய் போர்த்தியபடி அவன் எழவும் சரியாக இருந்தது.
“உன்கிட்ட நான் பேசணும்?” என்று வேகமாக கூறி அவன் முன்னே தள்ளி நின்றிருந்தவளை, “சொல்லு” என்று கூறியவனோ மார்பின் குறுக்கே தன் கைகளை கட்டியபடி நின்றிருந்தான். அவனின் முன்னே ஒரு துரும்பைப் போல் தோற்றமளிப்பதை உணர்ந்த நக்ஷத்ராவோ ஆக்ரோஷமாக, “என் பொண்ணை எதுக்கு சீண்டிட்டே இருக்க? அவளை நீ இனி தொடக்கூடாது, பேசக்கூடாது முக்கியமா தனியா எங்கேயும் அழைச்சிட்டுப் போகக் கூடாது… நீ என்ன எழவு ரீசன்க்காக தாலி கட்டுனனு எனக்கு தெரியாது. அதுக்காக என் பொண்ணு கிட்ட உன் பொறுக்கி தனத்தை காட்டுன உன்னைக் கொன்னுடுவேன்” என்று விரல் காட்டி மிரட்டியவளின் வார்த்தைகளின் அர்த்தம் தனக்குத் தான் தவறாக புரிந்துவிட்டதோ என்று அதிர்ச்சியில், “கம் அகைன்” என்று கைகளில் நரம்பு புடைப்பதை கட்டுப்படுத்தியபடி கேட்டான் தீரஜ்.
“டோன்ட் டிரை டு அசால்ட் மை சைல்ட் செக்ஸ்ஸூவலி! இஃப் யூ கன்ட்டிநியூ, ஐ வில் கில் யூ… காட் இட்” என்று அவள் கூறி முடித்த அந்நொடி அவனின் செவிமடல் சூடாகி, நரம்பெல்லாம் கோபத்தில் புடைத்து, அவனின் மூளை இரத்தமெல்லாம் கோபமேறி சூடேறி அவனின் வலிய கரங்கள் அவளின் கன்னத்தில் ஆக்ரோஷத்துடன் கைஓங்க, அவனின் மகளுக்கு கொடுத்த வாக்குறுதி மனதிற்குள் வந்து ஓங்கிய கையை வேகமாக இறக்கியவன், அதே வேகத்துடன் பக்கத்திலிருந்த கண்ணாடி மேஜையில் தன் மொத்த கோபத்தையும் காட்டும் விதமாய் ஓங்கி குத்தி கிழித்தவனின் கைகள் இரத்த வெள்ளத்தில் ஓடியது. அவனின் இந்த செய்கையைக் கண்டவளுக்கு இவ்வளவு நேரம் கடைப்பிடித்திருந்த தைரியம் வடிந்து பயம் குடிக்கொண்டது.
“என்ன சொன்ன! என்ன வார்த்தை சொல்லிருக்க?” என்று பற்களைக் கடித்தபடி கர்ஜித்தவன், மகள் தூங்குவதை உணர்ந்து, “உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடியே அவளை என் பொண்ணா நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… குழந்தைக் கிட்ட செக்ஸுவல் அசால்ட்டா! பொறுக்கியை விட மோசமான மனித மிருகமா என்ன நீ நினைச்சிட்டியா… உன்னை” என்று அவள் பக்கம் கோபத்தில் நெருங்கியவன், மகள் கூறியதை எண்ணி மீண்டும் பின்னாடி வந்தவனின் கைகளில் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.
“அவள் என் பொண்ணு டி… என் உதிரத்தால அவள் உருவாகலை ஆனால் என்னுடைய உடம்புல ஓடுற அத்தனை உதிரத்துலயும் என் மகளா கலந்திருக்காள்! என் உயிரோடு கலந்துட்டாள். உன்னால எப்படி இப்படி ஒரு கேள்வியை என்னைப் பார்த்து கேட்க முடிஞ்சுது நக்ஷத்ரா… இதுக்கு பேசாமல் நீ என்னை கொன்னுருக்கலாம்” என்று சத்தமின்றி கர்ஜித்தவனின் கண்கள் சிவந்திருக்கு, அவன் கண்ணோரம் தேங்கிய அந்த கண்ணீர்த்துளியைக் கண்ட நக்ஷத்ராவிற்கே ஒரு மாதிரி ஆனது.
ஏற்கனவே தீரஜ் ஆதிராவிடம் நடந்துக் கொள்ளும் முறையை கவனித்திருந்தவளுக்கு அவன் மேல் எந்தவொரு தப்பும் கண்டுபிடிக்க முடியவில்லை தான். ஆனாலும் ஒரு தாயாக, பெண் பிள்ளைகளுக்கு இச்சமுதாயத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவளுக்கு தீரஜின் உண்மையான தந்தையன்பு தெரியவாய்ப்பில்லை தான். அவளைப் பொறுத்தவரை ஒரு பெண் குழந்தையுடன் இருப்பவளை விருப்பமின்றி தாலி கட்டியவன் இவன் அவ்வளவே! அவனை ஊர் உலகம் நம்பச் சொன்னாலும் அவள் நம்பத் தயாரில்லை. ஏனெனில் அவள் கடந்து வந்த முள் பாதைகள் அப்படி!
தீரஜின் தூய்மையான உண்மையான பாசத்தை, நேசத்தை நக்ஷத்ரா உணரவேண்டுமெனில் அவனின் மனதிற்குள் புகுந்து தான் அவனின் தூய்மையை கண்டறியமுடியும்!
நிசர்சன உலகத்தில் ஒருவரின் மனதிற்குள் நுழைந்து எண்ணங்களை கண்டறியும் வாய்ப்பு இல்லை!
ஆனால் ஒருவரின் மனதை அவரின் கண் பார்வையால், நடத்தையால் அறிந்திருக்கலாமே! புரிந்திருக்கலாமே! அவசரப்பட்டு புரியாது நடந்த நக்ஷத்ராவின் முட்டாள்தனம் தான் இது.
வாளின் விளிம்பில் விஷத்தை ஊத்தி, அதை தீரஜின் மார்பில் வெறியுடன் குத்தினால் எத்தகைய வலியை அவனுக்கு கொடுத்து துடித்துடிக்க சாகவைக்குமோ… அத்தகைய மரண வலியைத் தான் இப்போது நக்ஷத்ரா வார்த்தை என்னும் கூரிய விஷத்தால் தீரஜிற்குக் கொடுத்தாள்.
ஒரு பக்கம் அறையெங்கும் தீரஜின் குருதி சொட்டுகளுடன் கொட்டிக் கிடக்க, இன்னொரு பக்கம் தீரஜின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டியது.
அவனின் இந்த ஆக்ரோஷம் கலந்த கண்ணீரைக் கண்ட நக்ஷத்ராவோ, ‘நான் அவசரப்பட்டுட்டேனோ’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, “உன்னால ரெண்டாவது முறை மீண்டும் இறந்துட்டேன் நக்ஷத்ரா” என்று கரகரத்த குரலில் கூறிமுடித்தவன், அந்த இரவில் வேகமாக வெளியேறிவிட்டான்.
மகளுக்கு சாப்பாடு கொடுத்து அவளை தூங்கவைத்துவிட்டு வினோத்தின் வீட்டிற்குச் செல்ல நினைத்தவன் இப்போது நடை பிணமாய் செல்கிறான். அன்று தன்னவள் இன்னொருவனின் மனைவியென்று அறிந்த அந்நொடி முதல் முறை உயிர் இறந்தான். இப்போது இரண்டாவது முறை… கூடவே அவனுக்கு வராத கண்ணீருடன்!
நக்ஷத்ரா கூறிய இவ்வார்த்தைகள் வேறு ஒருவரின் வாயிலிருந்து வந்திருந்தால் இந்நேரம் அவர்கள் பொணமாகி தான் இருப்பார்கள். இப்போது கூட அவனால் நக்ஷத்ராவை வெறுக்க முடியவில்லை ஏனெனில் அவளிடத்தில் தங்களின் மகளின் பாதுகாப்பிற்கான பயம் சரியே என்றுத் தோன்றியது. ஆனாலும் தன்னை இவ்வளவு கேவலமான பிறவியைப் போல் நினைத்து விட்டாள் என்பது ஒரு பக்கம் கொதிக்க, இன்னொரு பக்கம் என்னைப் போய் என் மகளிடம் அப்படி என்று அவளால் எப்படி எண்ண முடியும் என்று நாடி நரம்பெல்லாம் கொதித்திக்கொண்டே தான் இருந்தது.
ஏசி ஆனில் இருப்பதால் அம்பிகாவதியும், சுரேகாவும் கதவை முக்கால்வாசி சாற்றியபடி உறங்குவதால் அவர்களுக்கு இந்தக் கலவரம் தெரியவில்லை. ஆதிராவும் அசந்து தூங்கிவிட்டால் எழ மாட்டாள்.