அடுத்த நாள் காலை நேரத்திற்கு விழித்த நக்ஷத்ராவின் மனது படபடத்தது. அவனிடம் ஒரு வேகத்தில் அவ்வாறு பேசிவிட்டாள் ஆனால் இன்று காலையெழுந்து யோசிக்கும் போது தான் அதனின் வீரியமுணர்ந்து நடுங்கினாள். அவளின் செல் மெசேஜ் வந்ததிற்கான அறிகுறியோடு அடித்துக் கொண்டிருக்க, “இது வேற” என்று சலிப்புடன் பார்க்க, பிரியா தான் வரிசையாக மெசேஜ் அனுப்பியிருந்தாள். அன்று நக்ஷத்ராவின் குடும்பத்தினருடன் கிளம்பிய பிரியா, நக்ஷத்ராவிற்கு எண்ணற்ற மெசேஜ்கள் அனுப்பியிருந்தாள். இவளுக்கு தான் அதையெல்லாம் பார்க்கும் மனநிலை இல்லையே.
அவளுக்கிருந்த மனப்புழுக்கத்தில் பிரியாவிடம் நேரில் பார்த்து பேசினால் ஏதாவது வழி சொல்வாள் என்று தோன்றியது. இதுவரை தனியாகவும், நேசமணியின்றியும் வெளியில் போகாதவள், அவருக்கு கால் செய்து “தாத்தா, நான் உங்க வாட்ஸ் அப் நம்பருக்கு கரென்ட் லொகேஷன் அனுப்புறேன்… ஒரு பதினொரு மணி போல வாங்க” என்று கூறிவிட்டு வைக்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அருணாச்சலத்திடமிருந்து கால் வந்தது.
“இனி எங்கே வெளியே போகணும்னாலும் உன் புருஷனோட போயிக்கோ உமையா! இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னால உனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க முடியாது… இனி சொர்ணவள்ளி விலாஸ்க்கு நீ கெஸ்ட் மட்டும் தான். நேசமணி இனி எனக்கு மட்டும் தான் டிரைவர்” என்று முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டு வைத்த தந்தை,
“எனக்கு வேற வழி தெரியலை உமையாம்மா… உன்கிட்ட இப்படி நடந்துக்கிட்டால் தான் நீ அந்த வாழ்க்கையோட ஒன்றுவ… இந்த அப்பாவை மன்னிச்சிடு டா” என்று அழுதார்.
தந்தையின் பேச்சைக் கேட்டு கண்களில் கண்ணீர் தேங்கியபடி பிரியாவிற்கு தன் வீட்டு கரென்ட் லொகேஷனை மெசேஜ் செய்து வருமாறு கூறிவிட்டு எழுந்தவளுக்கு மனமெல்லாம் ரணம். இந்நேரம் தனக்கு மகள் இல்லாமல் இருந்தால் அவள் இறந்த இடம் புல்லே முளைத்திருக்கும். இனி தற்கொலை செய்வதெல்லாம் சாத்தியமே இல்லை. இனிமேல் தன் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை யோசித்து யோசித்தே அவளின் தலை கனத்தது. பக்கத்தில் மகள் துயிலிலிருப்பதைக் கண்டவள், தரையில் சொட்டிய இரத்தம் மற்றும் உடைந்த கண்ணாடி துகள்களெல்லாம் சுத்தப்படுத்தப் பட்டுருந்ததைக் கண்டாள்.
“அவனுக்கு நேத்து ரொம்பவே இரத்தம் சிந்துச்சே! எப்படி இருப்பான் இப்போ? இந்நேரம் குடும்பம் முழுக்க நான் நேத்து பேசிய விஷயம் பரவியிருக்கும். வீட்ல ரௌண்ட் கட்டி என்னை வைச்சுச் செய்யப் போறாங்க” என்று குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவள் திக் திக் மனதுடன் ஹாலிற்குள் வர,
அங்கே மொத்த குடும்பமும் குழுமியிருந்தது வினோத், மனோஜ், ரூபா உட்பட. கையில் கட்டுடன் சோஃபாவில் அமர்ந்திருந்த தீரஜ் அடிபடாத இடது கையால் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, “இப்படி தான் சில மாசம் முன்னாடி கார்க் கண்ணாடியில கைப்பட்டு கிழிச்சிக்கிட்டான். இப்போ ரெண்டாவது தடவையா இப்படி நடந்திருக்கு. இதை நினைச்சாலே கவலையா இருக்கு” என்று பொதுப்படையாக புலம்பியபடியே சுரேகா உள்ளேச் செல்ல, ரோகிணியும் அம்பிகாவதியும் அவரை ஆறுதல்படுத்தியபடி உடன் சென்றார்கள்.
“உமி, எழுந்திட்டியா! நேத்து ரெண்டு மூணு தடவை வந்து பார்த்தேன். நீ தூங்கிட்டிருந்த… உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” என்று கேட்டபடி அக்காவின் கையைப் பிடித்த ரூபா பேசிக்கொண்டிருக்க, “ஒன்னும் இல்லை சாலா” என்று முடித்தவளோ, இங்கு இருக்கும் ஒரே பிடிப்பான தங்கையின் மேல் கோபம் இருந்தாலும் அவளிடம் பேசாமல் தன்னை தனிமைப்படுத்த விரும்பவில்லை.
“இரு, நான் உனக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று ரூபா நகரவும், ஆதிரா எழுந்து வரவும் சரியாக இருக்க, “ஆதுக்குட்டி” என்று தன் அக்கா மகளை அள்ளிக்கொண்டு கிச்சனிற்குள் சென்றுவிட்டாள் ரூபா.
அனைவரின் இலகுவான நடவடிக்கையைக் கண்டு, ‘அப்போ இவன் யாருக்கிட்டயும் சொல்லலையா!’ என்று மனதில் பெருமூச்சுவிட்டாள் நக்ஷத்ரா.
அறையில் யாருமில்லை என்றுணர்ந்த மனோஜ் மற்றும் வினோத், தீரஜின் அறைக்குள் செல்ல, இப்போது ஹாலில் தனித்திருந்தது தீரஜ் மற்றும் நக்ஷத்ரா தான்.
‘இப்போ நம்ம எங்க போறது?’ என்று அவள் பரிதவிப்புடன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“நேத்து மதியானம் அப்புறம் நீ சாப்பிடலையே நக்ஷத்ரா” என்று நிதானமாக கேட்டபடி அவளைப் பார்த்தான் தீரஜ்.
‘என்ன இவன் நான் நேத்து சொன்ன குற்றச்சாட்டுக்கு அதிரடியா சண்டை போட்டிருக்கணும் இல்லைனா குறைந்தபட்சம் என்கிட்ட முகத்தை காட்டியிருக்கணும் அட்லீஸ்ட் என்னை மதிக்காமல் இருந்திருக்கணும். ஆனால் நான் சாப்பிட்டேனானு கேட்குறான்! அவனை நான் இவ்வளவு இழிவுப்படுத்தியும் கூட என் பசியைப் பத்தி இவ்வளவு அக்கறையா?’ என்று விழி அகலாமல் அவனை அதிர்ச்சி கலந்த வியப்புடன் பதில் பேச முடியாமல் ஸ்தம்பித்திருந்திருந்தவள், அவன் கேட்டதை மனதோரம் வைத்தாள்.
அவளின் பதிலுக்காக சில நொடிகள் அவளின் கண்களை நோக்கியிருந்தவன், அவளிடம் பதிலில்லை என்பதைவுணர்ந்து மறுபடியும் லேப்டாப்பில் கண்களை படரவிட்டான்.
“இரத்தம்… தரையில இல்லை” என்று திணறியபடி அதே நினைவுகளில் உழன்றபடி நக்ஷத்ரா ஆரம்பிக்க, “நான் க்ளீன் பண்ணிட்டேன்” என்று லேப்டாப்பில் கண்களை பதித்திருந்தபடியே முடித்தான்.
ஏனோ அவளின் மனம் ஈட்டியால் குத்தியது போல் பாதித்தது. அவனின் காதல் உண்மை, பொய் என்பதைத் தாண்டி! அவன் நல்லவன், கெட்டவன் என்பதைத் தாண்டி! அவன் தன்னிடம் மிகவும் கேவலமான வார்த்தைகள் கேட்டும், முகம் கோணாமல் தன்னைப் பற்றி கேட்டது அவளை ஒரு சக மனுஷியாக நிலைகுலையச் செய்தது.
‘ஏன் டா காதல் தோல்வி தானே உனக்கு! என்னை எதுக்கு கல்யாணம் பண்ணி என்னையும் படுத்தி நீயும் பட்டுட்டு இருக்க? உனக்கு இதெல்லம் தேவையா? உன் குணம் யாருக்கும் அடங்கி போகுற மாதிரியும் இல்லை. உன் சொல் கேட்டு தான் எல்லாரும் நடக்குறாங்க… அப்போ ஏன் என்கிட்ட இப்படி இருக்க?’ என்று அவனின் கைக்கட்டை நோக்கியவளின் மனம் குமுறியது.
‘என் கோபம், கர்வம், ஆணவம், சுயமரியாதை, கௌரவம் ஏன் என் நியாயம் கூட உன்மேல வைச்சிருக்க காதல் முன்னாடி ஒன்னுமே இல்லை நக்ஷத்ரா’ என்று லேப்டாப்பில் ஒளிர்ந்த அவளின் படத்தோடு மனதில் பேசிக்கொண்டிருந்தான் தீரஜ். அவள் நேற்று கூறிய அனைத்தும் அவன் நெஞ்சோடு வடுவாய் ஒட்டி கலந்துவிட்டது ஆனாலும் அவள் பக்க நியாயத்தை முன்னிறுத்தி தன் நியாயத்தை துறந்து காயத்தை ஏற்றுக்கொண்டான் அவளுக்கான அவனின் அளவில்லாத காதலுக்காக!
“டேய் மச்சான்! இந்த கம்பி கட்டுற கதை தானே வேணான்றது” என்று வினோத் முறைத்தபடி வர, மனோஜின் முகமும் யோசனையில் சுருங்கியது.
“என்ன டா?” என்று புருவத்தைச் சுருக்கினான் தீரஜ்.
“நீ சிலிப் ஆகி விழுந்து கையைக் கிழிச்சிக்கிட்டேனு உருட்டுறியே அதான்” என்று வினோத் சொல்ல, நக்ஷத்ராவிற்கு பயம் ஆரம்பித்தது.
“உளறாத டா” என்று மறுத்தான் தீரஜ். அப்போது கையில் சாப்பாடுடன் வந்த ரூபா தமக்கையிடம் கொடுத்து, “நீ நேத்து மதியானத்துக்கு அப்புறம் சாப்பிடவே இல்லையாம். அத்தான் காலையிலேயே அத்தைக்கிட்ட சொல்லிட்டாங்க போல. அதனால அவங்க உனக்காக அவரசமா செஞ்சி கொடுத்தாங்க… நானே என் உமிக்கு ஊட்டிவிடுவேனாம் நீ சாப்பிடுவியாம் ப்ளிஸ் டி என்மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் நாலென்ன நாப்பது அடிகூட அடிச்சிடு ஆனால் ஒதுக்கிடாத டி என்னால தாங்கமுடியாது” என்று கண்கள் கலங்க மெதுவாக கூறிய தங்கையைப் பார்க்க நக்ஷத்ராவின் உள்ளமே பூரித்துவிட்டது.
“இப்போ எதுக்கு அழுகுற சாலா… உன் ஃபேஸ்க்கு அழுறதெல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகலை” என்று கூறியவளின் மனதிலோ, ‘என் சூழ்நிலை என் விதி அதை நான் ஃபேஸ் பண்ணுறேன்… சாலாவும் தான் என்ன பண்ண முடியும். பெத்த அப்பா, அம்மாவே என்னை கைவிட்டுட்டுட்டாங்க’ என்று விரக்தியுடன் நினைத்தவள், “ஆதிரா எங்கே?” என்று யோசனையுடன் கேட்டாள்.
“ஆதிராவுக்கு அவளுடைய ஆச்சிகள் எல்லாம் மாத்தி மாத்தி சாப்பாடு ஊட்டியபடி அவங்களுக்கு பழக்குறாங்களாம். தீரஜ் அத்தான் கிட்ட நேத்து முழுக்க சாப்பாடு சாப்பிட்டு, குளிச்சு பழகிட்டாள். அத்தான் கிட்ட சட்டுனு ஆதிரா ஒட்டிக்கிட்டாள் உமி. அத்தான் கையில கட்டு இருக்குறதுனால இன்னிக்கு ஆச்சி கன்ட்ரோலை எடுத்துக்கிட்டாங்க” என்று ரூபா கூறி முடிக்கும் போதே,
“நீ என்ன பண்ணிட்டு இருந்த!” என்று நக்ஷத்ரா கோபத்துடன் கேட்டாள்.
“இரு இரு… நான் நேத்தே அத்தான் கிட்ட சொன்னேன் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுறது, குளிக்க வைக்குறதெல்லாம் நானே பண்றேன்னு அவர் தான் சொன்னாரு இப்போ ஆதிரா என் பொண்ணு நானே இதெல்லாம் பார்த்துக்குறேன்னு… இப்போ கூட அத்தைங்க கிட்டயும் அதே டயலாக் தான் சொன்னேன். அவங்க எங்க பேத்தி நாங்க பார்த்துப்போம்னு சொல்லிட்டாங்க… நான் என்ன பண்ண முடியும்?” என்று முகத்தை பாவம் போல் வைத்து ரூபா கேட்க,
“சரி விடு” என்று முடித்த நக்ஷத்ராவின் மனதில், ‘குளிக்கவும் வைக்குறானா? ஒருவேளை உண்மையாவே ஆதிராவுக்கு அப்பாவா தன்னை நினைச்சிக்கிட்டானா?’ என்று குழம்ப ஆரம்பித்தாள்.
“என்னுடைய மேத்ஸ் மூளையை வைச்சு யோசிச்சு பார்த்தால் ரேடியஸ் இன்டூ சர்கம்ஃபெர்ரனஸ் இன்டூ கிலோமீட்டர் இன்டூ மில்லிமீட்டர் அந்த டேபிள்ல நீயா போய் வேகத்துல கை கிழிச்ச மாதிரி தான் இருக்கு” என்று வினோத் யோசிக்கும் பாவனையுடன் சொல்ல,
“நீ பண்ற கேவலமான கால்குலேஷன்க்கு… ஒரு கண்டுபிடிப்பு வேற” என்று எழுந்த தீரஜ் அதற்கு மேல் வினோத்தை யோசிக்கவிடாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். தீரஜின் ஓபன் புக் வினோத் தான். இந்த விஷயத்தை யாரறிந்தாலும் நக்ஷத்ராவின் மேல் கோபம் கொண்டு திட்டுவார்கள். தன் பொம்மாயியைப் பற்றி யாராவது தப்பாக நினைக்க தீரஜ் விட்டுவிடுவானா என்ன! அதான் மறைத்தேவிட்டான்.
இப்படித் தான் பிரியா அனைத்து விஷயத்தையும் நக்ஷத்ரா சொல்லக் கேட்டு வெட்டவெளி என்றும் பாராமல் அவளை அறைந்தேவிட்டாள். அங்கு அமைந்துள்ள கம்யூனிட்டி பார்க்கில் இருவரும் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
“லூசா டி நீ! எனக்கு அப்படியே பத்திக்கிட்டு கோபம் வருது. என்ன பண்ணி வைச்சிருக்க உமை” என்று மெல்லிய சத்தத்தில் தோழியை உலுக்கினாள் பிரியா.
“ஒரு பொம்பளை பொறுக்கி, உன்னையே செக்ஷூவல் டார்ச்சர் பண்ணின கார்த்திகேயன் கூட மண்ணுமூட்டை மாதிரி மூணு மாசம் வாழ்ந்திருக்க. ஆனால் இப்படி குடும்பத்து மேல பாசமா, உன் பொண்ணு மேல பாசம் காட்டுறவரை இதை விட மோசமா காயப்படுத்தி அசிங்கப்படுத்த முடியாது டி… இதுல அவர் உன்னை லவ் பண்றார்னு வேற சொல்ற… உன் கழுத்துல விருப்பமில்லாமல் அவர் தாலி கட்டினது எனக்கும் அதிர்ச்சி தான். ஆனால் உன்னால எப்படி டி இப்படி ஒரு கேடுகெட்ட குற்றச்சாட்டை அவர் மேல வைக்க முடிஞ்சிது? அப்படி என்ன அவசரம் உனக்கு… ச்ச” என்று எகிறினாள் பிரியா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.