“நம்ம டீம்ல எனக்கு ஒரு நேம் இருக்கு” என்று ரூபா கூறி முடிக்க,
“ஆமா… ஆட்டிடியூட் ரூபா… அதானே! எல்லாம் தெரிஞ்சு தான் லவ் பண்றேன்… இந்த மனோஜ் முன் வைத்த காதலை பின் வாங்க மாட்டான்” என்று கூறிவிட்டு அவன் நாற்காலியில் சாய்ந்த விதம் பெண்ணவளின் இறுக்கத்திற்கு சற்று தளர்வாக இருந்தது. ‘உன் லவ் எவ்வளவு உறுதினு இப்போ டெஸ்ட் பண்றேன் ராசா’ என்று மனதில் நினைத்தவள் தன் வேலையை ஆரம்பித்தாள்.
“உன் வயசு என்ன மனோஜ்?” என்று சிரிப்பை அடக்கியபடி கேட்டாள் ரூபா.
“இருபத்தி ஏழு” என்று புன்னகை மின்ன கூறியவனைப் பார்த்து, “அச்சச்சோ! எனக்கு இருபத்தி ஒன்பது” என்று அதிர்ச்சியுடன் கூறுவது போல் நடித்தாள்.
“எதே! இருபத்தி ஒன்பதா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் தான்.
“ஆமா… சோ நமக்குள்ள செட் ஆகாது” என்று அவள் கூறி எழ, “இருபத்தி ஒன்பதுக்கு என்ன… நல்ல வயசு தான். கண்டிப்பா செட் ஆகும்… உட்காரு ரூபா… கையோட கல்யாணம் பத்தி பேசிட்டே கிளம்புவோம்” என்று உறுதியாகக் கூறினான்.
“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு இன்னும் சொல்லவே இல்லை… ஏன் என் வயசு கேட்டு அதிர்ச்சியான வயசு அதிகம்னு உனக்கு இடிக்குது தானே?” என்று அவனை மடக்கினாள் ரூபா.
“உன்னைப் பார்த்து இருபத்தி ஒன்பது வயசுன்னா நான் மட்டும் இல்லை எல்லாருமே ஷாக் தான் ஆவாங்க. சரி, இதான் உனக்கு பிரச்சனைனா கவலைப்படாதே நம்ம ஜாலியா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று புன்னகைத்துக் கொண்டே கூறினான்.
‘நீ ஜாலி டைப் தான் டா ஆனால் எங்க வீடு தான் போர்க்களம்’ என்று மனதில் நினைத்து வெறுமையாக சிரித்தவள்,
“ஹே வெயிட் வெயிட்… எனக்கு நிறைய கோபம் வரும். கோபம் வந்துச்சுனா கன்னாபின்னானு கத்துவேன். எனக்கு தப்புனு பட்டுச்சுனா பட்டுனு கேட்டிடுவேன்” என்று அவள் தீவிரமாக கூறிக்கொண்டிருக்கையில்,
“வெரி குட் ரூபா… அப்படி தான் இருக்கணும்” என்று உண்மையாகவே மனதார பாராட்டினான்.
‘எப்படி போட்டாலும் பால் அடிக்குறானே!’ என்று மனதில் செல்லமாகத் திட்டியவள், ஒரு நீண்ட பெருமூச்சுவிட்ட படி, “என் பெயர் ரூபான்றதை தவிர உனக்கு வேற எதுவும் தெரியாது மனோஜ். நம்ம டீம்ல யாருக்குமே என் பெர்ஸ்னல் லைஃப் பத்தி தெரியாது. என் அக்கா ஒரு டிவர்சி… நாலு வயசு பொண்ணோட எங்களோட தான் இருக்காள். அவளுக்கு இருபது வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க… அவள் முன்னாள் பு… இல்லை அவன் பொறுக்கி… அவன் ஒரு பொம்பளை பொறுக்கி… அயோக்கியன்” என்று அவள் ஆதங்கத்துடன் பேசிக்கொண்டிருக்க, அவள் முன்னே தண்ணீர் கிளாஸை வைத்தவன், “கூல்… முதல்ல தண்ணீ குடி. இப்போ அக்கா டிவோர்ஸ் வாங்கி தனியா வந்துட்டாங்க தானே… நம்ம பார்த்துக்கலாம்… உன் அக்கா பொண்ணை நான் படிக்க வைக்குறேன். நம்ம எல்லா விதமான சப்போர்ட்டும் பண்ணலாம்” என்று அவன் தன்னை ஒரு ஹீரோ போல் நினைத்துக்கொண்டு பேச, அவன் காட்டும் அக்கறையை ரசித்தவளோ, “உனக்கு நக்ஷத்ரா வெட்டிங் கார்ட்ஸ் அண்ட் ரூபா சேஃப் லாக்கர்ஸ் தெரியுமா?” என்று நிதானமாகக் கேட்டாள் ரூபா.
“சென்னையில இந்த ரெண்டுமே பார்த்திருக்கேன்… பேமஸ்னு நினைக்குறேன், சிட்டிக்குள்ளயே நிறைய பிரான்ஞ்சஸ் பார்த்திருக்கேன்… ஆனால் பார்த்தியா அதுல உன் பெயர் இருக்கு! சோ கண்டிப்பா சேஃப்டி லாக்கரா தான் இருக்கும்” என்று வசீகரமாக சிரித்தவனைப் பார்த்து, “இந்த ரெண்டுக்கும் ஓனரான அருணாச்சலமுடைய ரெண்டாவது பொண்ணு நான்… ரூபவிசாலாட்சி” என்று அவள் நிதானமாக கூறி முடித்தாள்.
இப்போது தான் அதிர்ச்சி அடைந்தான் மனோஜ். ‘என்னது ஓனரோட பொண்ணா!’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன், “அதுக்காக எல்லாம் உன் மேல இருக்குற காதலை விட முடியாது ரூபா… உன் குடும்ப பிண்ணனி தெரிஞ்சு நான் உன்னை காதலிக்கலை… நீ இப்போ சொல்றதைப் பார்த்தால் வசதியான வீட்டு பொண்ணுனு என்னால கெஸ் பண்ண முடியுது. உன்னை வைச்சு காப்பாத்துற அளவுக்கு என் கிட்ட மனசுலயும் உடம்புலயும் திடம் இருக்கு.”
“மாசம் ஒரு லட்சம் சம்பளம், அம்மா அப்பா… சென்னையில் ஒரு சொந்த பிளாட் இது தான் நான்… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கானு யோசிச்சு சொல்லு” என்று இன்முகத்துடன் கூறியவனை அதற்கு மேல் காத்திருக்க வைக்காமல், “ரொம்ப நாள் முன்னாடியே பிடிச்சு போச்சு மனோஜ்… ரொம்பவே. உனக்கு ஒரு விஷயம் சொல்லவா… என் வயசு இருபத்தி ஒன்பது எல்லாம் இல்லை உன் காதல் எவ்வளவு ஸ்ட்ராங்னு பரிசோதிக்க தான் அப்படி பண்ணினேன். ஆனால் அதைத் தவிர நான் சொன்ன எல்லாமே உண்மை தான். ஆண்களை நம்ப ரொம்பவே பயப்படுறேன் ஆனால் உன்னை நம்ப தோணுது” என்று அவனைப் பார்த்து நம்பிக்கையுடன் கூறினாள் ரூபா.
“ரூபா… உன் அக்காவுக்கு எப்போவுமே நம்ம மாரல் சப்போர்ட்டா இருக்கலாம். அப்புறம் என்னைய நீ தாராளமா நம்பலாம்… கூகிள்ல சர்ச் பண்ணினால் கூட என்னை மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான் தெரியுமா!” என்று சிரித்துக் கொண்டே கூறினான் மனோஜ்.
“ம்ம்… பார்க்க தானே போறேன்” என்று யோசிக்கும் விதமாய் கூறினாலும், அவன் மேல் மலையளவு நம்பிக்கை இருந்தது ரூபாவிற்கு.
இவ்வளவு நாட்கள் இந்த காதலை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பி, அதை கிடப்பில் போட்டவள்… இப்போது உறுதியாக முடிவெடுத்து விட்டாள்.
***
அன்று இரவு வீட்டு தோட்டத்தில் எப்போதும் போல் கண்ணம்மாவுடனும் ஆதிராவுடனும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள் ரூபா.
“ஏன் சாலாம்மா… இன்னிக்கு நைட் சாப்பிடும் போது தான் நான் கவனிச்சேன் நம்ம உமையாம்மாவோட கன்னம் நல்லா சிவந்திருக்கு. வீட்ல கூட அந்த அவர் (கார்த்திகேயன்) பத்தி எதுவும் பேசலையே!” என்று அக்கறை கலந்த கவலையுடன் கூறினாள் கண்ணம்மா.
“அப்பா, அம்மா கண்ணுல அவள் முகம் படலையா என்ன?” என்று புருவத்தை சுருக்கி கேள்வி கேட்டாள் ரூபா.
“இல்லை சாலாம்மா… இன்னிக்கு வீட்டுக்கு வந்தவுடனே தலைவலினு படுத்துட்டாங்க. எப்போவுமே உமையாம்மா அப்பா அம்மாவோடு தான் உட்கார்ந்து சாப்பிடும். இன்னிக்கு அம்மா, அப்பா, ஆச்சியெல்லாம் சாப்பிட்டு அவங்க ரூம் போன அப்புறம் தான் வெளியவே வந்தாங்க” என்று தீவிரமாக கூறினாள் கண்ணம்மா.
கண்ணம்மா, ரூபாவின் நல்ல உளவாளி. ஆம், வீட்டில் என்ன நடக்கிறது என்று கண்ணம்மாவிடம் தான் கேட்டு அறிந்துக் கொள்வாள் ரூபா. ரூபாவின் நியாய தர்மம் எல்லாம் கண்ணம்மாவிற்கு பிடிக்கும். முக்கியமாக நக்ஷத்ராவைப் பற்றி வீட்டினர் ஏதாவது முடிவு செய்தால் ரூபாவிடம் தெரிவிப்பாள்.
தன் பொம்மையுடன் சிமெண்ட் பென்ச்சில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஆதிராவைத் தூக்கிய ரூபா, “ஆது பாப்பா! அம்மாவுக்கு காய்ச்சலா டா?” என்று விஷயம் கண்டறிய கேட்டாள்.
“இல்லை சித்தி” என்று மறுப்பாக தலையசைத்த ஆதிராவைக் கொஞ்சிய ரூபா, “சரி, அம்மாவைப் போய் பார்க்கலாம் வா… கண்ணம்மா வா உள்ளே போலாம்” என்று கூறினாள்.
தன் அறைக்குள் படுத்துக்கொண்டிருந்த நக்ஷத்ரோவோ, ‘ஆதிராவை தூங்க கூப்பிடணும். ஆனால் நான் போனால் ரூபா கண்டுபிடிச்சிடுவாளே! ஏற்கனவே கண்ணம்மா அக்கா வித்தியாசமா பார்த்தாங்க’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, “உமி” என்று சத்தமிட்டபடி ஆதிராவைத் தூக்கிக் கொண்டு ரூபா வர, கண்ணம்மாவும்
பின் தொடர்ந்தாள். இங்கு கண்ணம்மா வீட்டில் ஒருத்தி தான். வேலை செய்யும் நேரத்தைத் தவிர, இந்த வீட்டு ஆள் போல் தான் அவளை நடத்துவார்கள்.
தான் அணிந்திருந்த கறுப்பு சுடிதாரின் துப்பட்டாவை முக்காடு போல் போட்டு நக்ஷத்ரா வேகமாக மறைக்கவும், ரூபா லைட்டைப் போடவும் சரியாக இருந்தது.
“உமி… என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா? ஏன் டி முக்காடு போட்டிருக்க… குளிருதா?” என்று கேள்விகளை அடுக்கியபடியே தன் அக்காவின் பக்கத்தில் அமர்ந்தாள் ரூபா.
“இல்லை சாலா… கொஞ்சம் குளிருது அதான்” என்று மழுப்பினாள் நக்ஷத்ரா.
ரூபாவிற்கு அக்காவின் கூற்று நம்பும் படியாக இல்லை. அதற்கு ஏற்றாற் போல் ஃபேன் காற்றில் அவள் முக்காடு போட்டிருந்த துப்பட்டா தலையிலிருந்து நழுவி விழ, தன் அக்காவின் முகம் சிவந்திருந்ததைக் கண்ட ரூபாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
“உமி… உன் கன்னம் ஏன் இப்படி சிவந்திருக்கு? நீ உண்மையை சொல்லலைனா நான் அம்மா, அப்பா கிட்ட தான் கேட்கணும்” என்று மிரட்டினாள் ரூபா. ஒருவேளை நக்ஷத்ராவின் முதல் கணவனால் ஏதாவது பிரச்சனை வந்திருக்குமோ என்று பயந்தாள் ரூபா.
“சாலா ப்ளிஸ்… அப்பா,அம்மாக்கு எதுவும் தெரியக் கூடாது. நான் நடந்ததை சொல்றேன்” என்று அனைத்தையும் கூறி முடிக்க, கண்ணம்மாவோ வாய் மேல் கைவைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அவன் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா உமி?” என்று பயத்துடன் கேட்டாள் தங்கை.
“இல்லை… நான் தான் அவசரப்பட்டுட்டேன் அவன் என்னைக் காப்பாத்த தான் செஞ்சான்” என்று உணர்வின்றி தங்கையைப் பார்த்தாள்.
“சரி விடு… இனி அவனை எங்கேயாவது பார்த்தால் சாரி சொல்லிடு டி… கண்ணம்மா ஐஸ் எடுத்துட்டு வா” என்று ரூபா சொல்ல,
“நான் ஏன் இனி அவனைப் பார்க்கப்போறேன்? ஆம்பளைங்க இல்லாத உலகம் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுது சாலா” என்று வெறுமையுடன் கூறினாள் நக்ஷத்ரா.
“கோழை மாதிரி பேசாத உமி… அந்த கார்த்திகேயனை வைச்சு நீ எல்லாரையும் எடை போடாத, இந்த ஆச்சி வேற மறுபடியும் அந்த பொறுக்கி கூடவே உன்னை கோர்த்துவிட துடிக்குறாங்க. அப்பா கண்டிப்பா ஆச்சி பேச்சை இந்த விஷயத்துல கேட்க மாட்டாங்க தான். யார் என்ன சொன்னாலும் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்” என்று கூறியவளோ கண்ணம்மா கொண்டு வந்த ஜஸை அக்காவின் கன்னத்தில் வைத்தாள்.
‘இதுல யார் அக்கா யார் தங்கச்சினு தெரியலையே!’ என்று இருவரையும் பார்த்தபடி நெகிழ்ச்சியாக நினைத்த கண்ணம்மா.
“உங்கள் ரெண்டு பேருக்கும் சுத்தி தான் போடணும்… இருங்க வரேன்” என்று கல் உப்பையும் மிளகாயையும் எடுக்க விரைந்துச் சென்றாள்.
“உமி, நீ எதுக்கும் இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இரு… அதே மாதிரி இனி யாரையும் இந்த மாதிரி கை ஓங்கிடாத டி” என்று தமக்கையிடம் அக்கறையாகப் பேசும் போதே, தன் அக்காவிற்காக ரூபாவின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
‘இப்படி யாரோ ஒருவனை அடிச்சிருக்காள்… காப்பாத்தினவன் தான் ஆனால் நல்லவனா கெட்டவனா ஒன்னுமே புரியலையே! உமிக்கு எப்போ தான் விடிவு காலம் கிடைக்குமோ’ என்று தன் அக்காவின் வருங்காலத்தைப் பத்தி கவலைப்பட்டாள் ரூபா.
“நீ என்னை நினைச்சு கவலைப்படாத சாலா” என்று தங்கையின் தோள்களில் சாய்ந்தாள் நக்ஷத்ரா.
“ரெண்டு பேரும் வாங்க… எல்லாக் கண்ணும் உங்க ரெண்டு பேர் மேல தான் இருக்கும்” என்று இருவரையும் நிற்க வைத்து சுத்திப் போட்ட கண்ணம்மா, “அச்சச்சோ ஆதிரா தங்கம் தூங்கிடுச்சே” என்று வருத்தத்துடன் கூறினாள்.
“அவளுக்கு அம்மா தினமும் சுத்தி போடுறாங்க” என்று கூறிய ரூபா, “நீ எதைப்பத்தியும் நினைக்காமல் நிம்மதியா தூங்கு உமி” என்று அக்காவைப் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.