“மனுஷனாடா நீயெல்லாம்! அந்தப் பொண்ணு பொண்டாட்டியாயிருக்கும்போது மிருகமாதிரி நடத்தின.
விவாகரத்துன்னு அந்தப் பொண்ணு கையில குழந்தையோட போய் நின்ன போதுகூட நீ திமிரா தானேயிருந்த!எனக்கு இத்தனை நாளிருந்த குற்றஉணர்ச்சி அந்தப்பொண்ணுக்கு வேற வாழ்க்கை கிடைச்சிருக்குனு தெரிஞ்ச அப்புறம் தான் மனசு நிம்மதியேயாகியிருக்கு…நான் பண்ண பெரிய தப்பு அதை உன் அம்மாக்கிட்ட சொன்னது தான்” என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தினார் காசிவிஸ்வநாதன்.
“ஏங்க!நம்ம பையனை ஒருத்தன் கொலை பண்ற அளவுக்கு அடிச்சிட்டு போயிருக்கான் அவனை போலீஸ்ல பிடிச்சுக்கொடுக்காமல் இப்படி உடம்பு முழுக்க கட்டுடன் செத்து பிழைச்சு வந்த பையனை திட்டிட்டுயிருக்கீங்க” என்று ஆதங்கத்துடன் அழுதார் சிவகாமி.
“இவன் நல்லவன் வேஷம் போட்டு நம்மளை ஏமாத்துனதை விட இவன் கேடுகெட்டவன்னு தெரிஞ்ச அப்புறமும் கூட நீ அவனைத் திருத்தமுடியாமல் சப்போர்ட் பண்ணிட்டிருக்க பார்த்தியா… உன்னை” என்று மனைவியை கையோங்கியவர், வெறுப்புடன் கையையிறக்கி, “அந்தப்பொண்ணு நக்ஷத்ராவுடைய புருஷன் வெளியே நம்ம வீட்டுக்கு எதிருல உம்மகன் எப்போ வெளியவருவான் அடிக்கலாம்னு வெறியா நின்னுக்கிட்டிருக்கான். முத்தையா என்னைக் கூப்பிட்டு அவனை அடையாளம் காட்டி விஷயத்தை சொன்னான்.இன்னொருத்தன் பொண்டாட்டியை குடும்பம் நடத்த கூப்பிட்ட உம்மகனைத் தான் போலீஸ்ல பிடிச்சுக்குடுக்கணும்.பணபலத்தால அவங்களை எதையாவது செய்ய நினைச்ச,நானே உன்னை விஷம்வெச்சு கொன்னுடுவேன் ஜாக்கிரதை” என்று கட்டிலில் கட்டுடன் பேசமுடியாமல் படுத்துக்கொண்டிருந்த கார்த்திக்கேயனை மிரட்டிவிட்டுச் சென்றார்.
இப்போதைக்கு ஒரு பத்து நாட்கள் ஆபீஸிற்கு விடுப்பெடுத்திருந்த தீரஜ்,காலையிலிருந்து இரவுவரை அசையாது கார்த்திக்கேயன் வெளியேவருகிறானாவென்று கண்காணித்துக் கொண்டிருந்தான்.
இங்கே கார்த்திக்கேயன் விஷயத்தை அருணாச்சலத்திடமே சொல்லாமல் மறைத்தனர் அம்மாவும் பிள்ளைகளும்! ஏனோ தந்தைக் காதிற்கு எடுத்துச்சென்று அவரைமேலும் உருக்குலையவைக்க நக்ஷத்ரா விரும்பவில்லை. தாயிடமும் சொல்லக்கூடாதென தீர்மானமாக சொல்லி அவரின் பயத்தை போக்க எங்கும் செல்லாமல் வீட்டிலேயேயிருக்கிறாள். பிரியா அவ்வப்போது கால் செய்து தோழியின் நலனை விசாரித்துக்கொண்டாள்.
ஒருவாரம் கடந்திருந்தநிலையில், அன்று மதியம், “நான் என் புருஷன் வீட்டுக்கு கிளம்புறேன்மா” என்று கண்ணம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த தாயைப் பார்த்து கூறினாள் நக்ஷத்ரா.
“என்னம்மா உன் பொண்ணுடைய ஈகோவெல்லாம் இப்போ மறைஞ்சுப்போச்சா என்ன!” என்று வேண்டுமென்றே தமக்கையின் எண்ணவோட்டதைத் தெரிந்துக்கொள்ள சீண்டினாள் ரூபா.
“என்கிட்ட நேரடியாவே பேசலாமே சாலா!நானும் உன்கிட்ட எவ்வளவோ தடவை பேச முயற்சிபண்றேன்!நீ என்கிட்ட பேசாமல் இருக்குறதைப் பார்த்தால் நான் ஏன் வீட்டைவிட்டு வந்தேனு தெரிஞ்சு தான் கோவமா வந்திருக்க போல.நீ உன் அத்தான் மேல வெச்ச நம்பிக்கையை நான் என் புருஷன் மேல வெக்கலை! என் மேல மட்டும் தான் தப்பிருக்கு டி அந்த தப்பையும் நான் இப்போ உணர்ந்துட்டேன்”
“என்ன சொன்ன நீ…ஈகோவா!ஈகோயிருக்குற அளவுக்கு எனக்கு எந்த விதத்துலயும் தகுதியில்லை.உங்க யாருக்குமே நான் அவரை என்னலாம் சொல்லி புண்படுத்திருக்கேனு தெரியாது. வீட்டவிட்டு வரும்போது யோசிக்காமல்,ஆராயாமல்,என் புருஷனை நம்பாமல் உடனே முடிவெடுத்து முட்டாள் மாதிரி வந்தேன் ஆனால் இப்போ மறுபடியும் என் புருஷன் வீட்டுக்கு உடனே போகமுடியலை…குற்றஉணர்ச்சியாயிருக்கு” என்று தன் நெஞ்சில் வலியுடன் சுட்டிக்காட்டியவள்,
“நான் இப்போ என் வீட்டுக்கு அதான் என் புருஷன் வீட்டுக்கு திரும்பி போனால்… அவர் என்னை அடிச்சால் கூட நான் சந்தோஷமா வாங்கிப்பேன்.ஆனால் அவர் அப்படி பண்ணமாட்டாரு…எதுவும் நடக்காத மாதிரி எப்போவும் போல என் மேல பாசமா,அன்பா,அக்கறையா தான் இருப்பாரு.வீட்ல அங்க தீரஜூடைய பாட்டி,என் மாமியார்,சின்ன மாமியார் மாமனார்… ஏன் என் நாத்தனார் திவ்யாக்கு கூட இந்நேரம் விஷயம் தெரிஞ்சிருக்கும். அவங்க எல்லாரையும் நான் எப்படி ஃபேஸ் பண்ணப்போறேன்னு கூச்சமாயிருக்கு,தயக்கமாயிருக்கு. அவர் தங்கச்சி என்னை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தும் போது அவளை அடிச்சு எனக்காகவும் ஆதிராக்காகவும் பேசி நின்ன மனுஷனை நான் எந்த நிலைல வெச்சிட்டு வந்திருக்கேனு என் மனசெல்லாம் ஒரு வாரமா குத்திட்டேயிருக்கு! ஆனாலும் நான் என் வீட்டுக்கு இப்போ ஏன் கிளம்புறேன் தெரியுமா? எனக்கு என் புருஷன் இல்லாமல்…என் புகுந்த வீட்டில் இல்லாமல்… இந்த வீட்டிலிருக்க பிடிக்கலை… எனக்கு சுத்தமா தூக்கமில்லை,பசியில்லை,நிம்மதியில்லை. நான் நானாவே இல்லை.ஆதிராக்கு எப்படி அப்பா இல்லாமல் இருக்கமுடியலையோ அதே மாதிரி எனக்கும் என் புருஷன் இல்லாமல் இருக்கமுடியலை.இன்னிக்கு சாயந்தரம் அப்பா வந்த அப்புறம் சொல்லிட்டு கிளம்புறேன்” என்று அவள் பெண்கள் மூவரின் முன் தீர்மானமாக,தெளிவாக அழுத்தத்துடன் கூறிமுடிக்க, பெண்கள் மூவருக்குமே இன்பமான அதிர்ச்சியில் பேச்சேயெழவில்லை.
தீரஜின் மீது காதல் என்பதை நக்ஷத்ரா வார்த்தையால் சொல்லவில்லை ஆனால் அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் காதலால்,நேசத்தால் நேர்த்தியாய், கோர்வையாய் கோர்த்ததேயாகும்.
“இங்க என்ன மாநாடு நடந்துட்டிருக்கு?” என்று விஷயமறியாமல் கேட்டபடி ஹாலிற்குள் நுழைந்த சொர்ணவள்ளி பாட்டிக்கோ அத்தனை குஷி… இனி நக்ஷத்ராவின் வாழ்க்கை என்னும் அத்தியாயத்தில் அந்த தாடிக்காரன் இல்லையென. ஆனால் நக்ஷத்ராவின் வாழ்க்கையே அந்த தாடிக்காரன் தானென்று அறியும் நொடியில் அவர் என்ன செய்வாரோ!
கார்த்திக்கேயன் வீட்டின் முன் நின்றபடி அவ்வீட்டையே பார்த்துக்கொண்டிருந்த தீரஜின் ஃபோன் ஒலிக்க, ‘ஆபீஸ்ல இருந்து ஏன் கால் பண்றாங்க?’ என்று யோசனையுடன் எடுத்தான்.
“ஹலோ தீரஜ்!உங்க பெர்சனல் லீவ்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு மை அப்போலஜீஸ். பட் ஒரு மண்டேட் விஷயத்துக்காகத் தான் கால் பண்ணினேன். இன்னிக்கு ஈவினிங் ஸ்ரீபெரும்புதூர் Fairfield Marriot hotelல நம்ம ப்ராஜக்ட் சக்ஸஸ்க்கு பார்ட்டி அண்ட் நம்மக்கூட நியூ ப்ராஜக்ட் டை அப் பத்தியும் பேசப்போறாங்க.நீங்க பெர்சனல் லீவுல இருக்கீங்கனு நாங்க கிளையண்ட்கிட்ட நேத்தே சொல்லிட்டோம்.ஆனால் அவங்க நீங்க தான் வரணும்னு கண்டிப்பா சொல்லிருக்காங்க. பிகாஸ் தே வான்ட்டூ டூ தி ஹானர்ஸ் அண்ட் அ டோக்கன் ஆஃப் அப்பிரிஷியேஷன் ஃபார் யூ” என்று தீரஜின் மேலிடத்தில் இருக்கும் நாற்பது வயதுத்தக்க கிருஷ்ணன் பேசிமுடிக்க,
“பட் கிரிஷ்… ஐ காண்ட்” என்று தீரஜ் எவ்வளவு நேரம் கிருஷ்ணனை கன்வின்ஸ் செய்ய முயன்றாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் கிளையண்ட்டிடம் தன் திறமையால் இந்த ப்ராஜக்ட்டை வாங்கியதே தீரஜ் தான்! அதே சூட்டிகையுடன் ப்ராஜக்ட்டை லைவ்விற்கு வெற்றிகரமாக கொண்டும் சென்றான். அவன் கண்டிப்பாக சென்றாக வேண்டிய கட்டாயம்!
வேறு வழியின்றி ஒப்புக்கொண்டவன் அந்த கால்லை பேசி முடித்து வேறொரு கால் செய்தான்.
கார்த்திக்கேயன் வீட்டை பார்த்தபடியே அடுத்து பிரியாவிற்கு கால் செய்து விஷயத்தை சொல்லி நக்ஷத்ராவை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு உஷ்ணபெருமூச்சுடன் காரையெடுத்தான்.
“ஐய்யா!ஐய்யா” என்று உற்சாகமாக ஹாலிற்கு வந்த முத்தையா, “அந்த ஆள் கிளம்பிட்டாரு” என்று தீரஜ் நகர்ந்தவுடன் காசிவிஸ்வநாதனிடம் தெரிவிக்க, “நம்ம தூங்கி எழும்போதே வீட்டுக்கு எதிர்ல நிக்குற அந்தப் பையன் நம்ம தூங்குனதுக்கு அப்புறம் தான் இடத்தை விட்டே நகருறான் போல! அவன் இருக்குறதுனால என்னால நிம்மதியா வெளியக்கூட தலைக்காட்டமுடியலை. எல்லாம் உன் மகனால” என்று பொறிந்தபடி எழுந்தவர், “நாளைக்கு பெங்களூர் கிளம்புறோம். அடுத்த வாரம் அவன் லண்டன் கிளம்பியாகணும்.உன் உத்தமபுத்திர மகன்கிட்ட சொல்லிடு அவன் வரலைன்னா என் சொத்து எல்லாத்தையும் அநாதை ஆசிரமத்துக்கு கண்டிப்பா எழுதி கொடுத்திடுவேன்” என்று கோபம் கலந்த வெறுப்புடன் கூறிவிட்டு காரையெடுத்தவர்,தன் மனபாரத்தை குறைக்க கோவிலுக்குச் சென்றுவிட்டார்.
கார்த்திகேயனின் காயம் ஓரளவு ஆறியிருந்தது!அவனால் இப்போது பேச முடிந்தது.
“கார்த்தி… அப்பா” என்று ஆரம்பித்த சிவகாமி விஷயத்தை சொல்லி முடித்து, “அந்த நக்ஷத்ராவை விட்டுடு” என்று கூறி முடிக்க,இத்தனை நேரம் பேசாதிருந்தவன், “எனக்கு சொத்து ஒரு பைசா வேண்டாம்ம்மா எனக்கு என் நக்ஷத்ராவும்,என் பொண்ணும் மட்டும் போதும். என் வாழ்க்கையில அவள் இல்லேன்னா செத்துடுவேன்மா!இப்போ அவனும் வெளியயில்லை அப்பாவும் வீட்லயில்லை!எனக்காக நீங்க அவள்கிட்ட பேசுங்கமா. இல்லைனா நான் செத்துடுவேன்” என்று கூறியவனின் கண்களில் கண்ணீரைக் கண்ட தாய்க்கு மகனின் கண்ணீர் அதிர்ச்சி கலந்த புதிதாகயிருந்தது.
நக்ஷத்ரா கிளம்பிய பின்னரே மனோஜிடம் கூறலாம் என்று அமைதி காத்த ரூபா,தன் கணவன் வீட்டிற்குச் செல்ல உற்சாகத்துடன் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்த தமக்கையை மனதில் சந்தோஷம் பொங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.சொர்ணவள்ளி பாட்டியோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
“ஆது, இன்னிக்கு சாயந்தரம் மேல நீயும் நானும் நம்ம வீட்டுக்கு போறோம்.உன்னோட தீரஜ் அப்பாவைப் பார்க்கும்போது அவருடைய அம்மாயி சோர்வாயிருந்தால் அப்பாவும் டல்லாயுடுவாங்க குட்டிமா. அதனால தூங்குங்க” என்று தன்னிடம் ஏற்கனவேயிருந்த புத்தகத்தைப் படித்து மகளுக்கு கதை சொல்ல,
“ஐய்யா!ஜாலி ஜாலி… நான் என் அப்பாவைப் பார்க்க போறேனே. அம்மா இனி எப்போவும் அப்பா என்னைவிட்டு ஊருக்கு போகக்கூடாதுனு சொல்லுங்க” என்று ஏக்கமாகக் கூறிய மகளை அள்ளிமுத்தமிட்டு அணைத்த அன்னை, “நீ,நான்,அப்பா… இனி நம்மளைப் பிரிக்க யாராலயும் முடியாது” என்று கண்களில் சந்தோஷக் கண்ணீருடன் மகளை தூங்கவைத்துவிட்டு தன் கைப்பையில் வைக்கவேண்டிய பொருட்களை வைக்கும்போது அவளின் மென்கரத்தில் பதினேழு முத்துக்களால் கோர்த்த மாலை மென்சாரலாய்த் தழுவியது… அப்போது வாசலில் தந்தையின் குரல் கேட்க அதைக் கேட்டு கைப்பையை கீழே வைத்துவிட்டு வேகமாக ஓடியவள், “அப்பா என்ன இப்போ வந்துருக்கீங்க! சரி அதுவும் நல்லது தான். என்னையும் ஆதுவையும் என் வீட்ல விட்டுடுங்கப்பா” என்று உற்சாகத்துடன் மகள் கூறியதைக் கேட்டு உறைந்தவர் ஒருவேளை தன் காதில் தவறாக விழுந்ததோவென நினைத்து, “என்னம்மா சொன்ன?” என்று கேட்க, “என் புருஷன் வீட்ல விட சொன்னேன்பா. நீங்க முதல்ல சாப்பிடுங்கப்பா நான் ரெடி ஆதுவையும் அப்படியே தூக்கிட்டு வந்திடுவேன்” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போது தான் பிரியாவும் வீட்டினுள்ளே வந்தாள்.
“நீ என்ன டி இங்க.கடையை எதுக்கு இப்போ மூடுன? சரி நீ வந்ததும் நல்லது தான்.நான் என் புருஷன் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று நக்ஷத்ரா கூறிமுடிக்க, “உண்மையாவா டி!” என்று கண்களை விரித்து தன் இன்ப அதிர்ச்சியை வெளிக்காட்டினாள் பிரியா.
அடுத்த அரைமணி நேரத்தில் நக்ஷத்ரா பெட்டிகளை எடுத்து கிளம்ப முற்பட, “நான் பாப்பாவை தூக்கிட்டு வரேன்மா” என்று கண்ணம்மா செல்ல,அம்மாவை அணைத்து சந்தோசத்துடன் விடைபெற்றவள்,தங்கை புறம் வந்து, “நீ எப்போ என்கிட்ட பேசுவனு நான் காத்திட்டிருக்கேன் சாலா” என்று பேசாத தங்கையிடம் ஏக்ககாகக் கூறியவள், பிரியாபுறம் திரும்பும் போதே,பின்னாடியிருந்து வேகமாக தமக்கையை அணைத்த ரூபா, “உன் மனசுல இருக்குற பாரமிறங்கி நிம்மதியாகி கிளம்புற. அப்படியே இவ்வளவு நாள் என் மனசுல தேங்கிருந்த,மறைச்சுவெச்ச பாரத்தையும் கேட்டுட்டு கிளம்பு டி. நாலு மாசமா எனக்கு நிம்மதியில்லாத தூக்கம், இன்னிக்காவது கிடைக்கும்” என்று கதறியழும் தங்கையை புரியாமல் பார்த்த நக்ஷத்ரா, “என்ன ஆச்சு சாலா,ஏன் இப்படி அழுகுற?” என்று பதற,
“நீ பார்த்த அந்த பிளான் நோட்டோட மொத்தமுமே நானும் மனோஜும் போட்ட பிளான் தான். அதுல வினோத் அண்ணா எங்களுக்கு உதவி மட்டும் தான் பண்ணிணாரு” என்று நக்ஷத்ராவின் முன்னால் வந்து குற்றஉணர்வுடன் நின்ற ரூபா கூறிய விஷயத்தைக் கேட்டு, நக்ஷத்ரா அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.தீரஜ் அவ்விஷயத்தை செய்யவில்லையென ஏற்கனவே உணர்ந்துவிட்டவளுக்கு தங்கையா இதெல்லாம் செய்ததென பேரதிர்ச்சி தான்!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.