விவாகரத்து வாங்கிய பின்னர் இப்போதும் கூட, “ஏன் மீனாட்சி ஒரு அம்மாவா நீ யோசிக்க மாட்டியா? ஒம் புருஷனுக்குத் தான் வெவரம் பத்தலை. பொட்டப்புள்ளை தான் பொறுத்துக்கிட்டு போகணும்… கூடவே இருந்து வாழ்ந்து திருத்திருக்கணும். இவள் பாட்டுக்கு பொட்டப் புள்ளையோடு வாழா வெட்டியா வந்து நிக்குறாள். இப்போ கூட அவளோட மாமியார் வீட்ல இவளை ஏத்துக்க ரெடியா தான் இருக்காங்க” என்று ரொம்ப நாளாக மருமகளிடம் பாட்டு பாடிக்கொண்டும், பாடாய் படுத்திக்கொண்டும் தான் இருக்கிறார் சொர்ணவள்ளி.
“இவங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்போ கூட இப்படி எல்லாம் பேச முடியுது. இவங்க புருஷன் இந்த மாதிரி பொம்பளை பொறுக்கியா இருந்திருந்தால் வாழ்ந்திருப்பாங்களா? அப்படியே அவங்க வாழ்ந்திருந்தாலும் என் பொண்ணு வாழ்க்கைக்குள்ள அதை எப்படி அவங்க திணிக்கலாம். அந்த பொறுக்கியைத் திருத்த தான் நான் பெத்தேனா… பத்து மாசமா சுமந்து பெத்து பூ போல வளர்த்த பொண்ணை ஒரு பொறுக்கி கையில கொடுத்திடுத்துட்டோமே… இதுல எம் பொண்ணை ஏத்துக்க ரெடியாம் நாக்குல நரம்பு இல்லாமல் இவங்களால எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது” என்று ரூபாவிடம் எவ்வளவோ முறை அழுது கதறிவிட்டார்.
மாமியாரிடம் அவரால் எதிர்த்து பேச முடியாது. அப்படி ஒரு பழக்கம் மீனாட்சிக்கு இன்று வரை இல்லை. ஆனாலும் மகளின் வாழ்க்கை நிலைகுலைந்து நிற்கதியாய் நிற்கும் இந்தத் தருணத்திலும், மாமியார் பேசும் இந்த கொடிய வார்த்தைகள் அவரை உயிருடன் கொன்றது. ஒரு முறை மாமியாரிடம் தன் கோபத்தைக் காட்டியும் விட்டார். அதனின் பிரதிபலிப்பு கணவனால் அவரின் கன்னம் பழுத்தது.
அதைத் தட்டிக் கேட்ட ரூபாவையும் கத்தி விட்டார்.
“அம்மா என்ன வேணாலும் சொல்லட்டும்… வயசானவங்க இப்படித் தான்! அவங்களுக்கு சரினு படுறதை சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க. அதுக்காக அவங்களோட யாரும் மல்லுக்கு நிக்கக் கூடாது. என்னை மீறி யாரும் உமையாளின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. கண்டிப்பா இனி அந்த பொம்பளை பொறுக்கியோட என் மகளை அனுப்பமாட்டேன்” என்று தாய் இல்லாத போது மனைவி மற்றும் இளைய மகளிடம் சாடியபடி தீர்மானமாகக் கூறிவிட்டார். அதிலிருந்து மீனாட்சி ரூபாவிடம் தான் புலம்புகிறார். மகளின் வாழ்க்கைக்காக மௌனவிரதம், உண்ணாவிரதம், சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் இப்படி ஒன்று விடாமல் இருக்கிறார்.
“மணி அஞ்சு ஆகுது… இதுக்கு மேல பொட்டப் புள்ளைங்களாம் சேர்ந்து எங்கயும் போக வேண்டாம்!” என்று சொர்ணவள்ளியின் குரல் அதிகாரமாக ஒலிக்க,
“நான் பொண்ணுக்கு பொண்ணு ஆம்பிளைக்கு ஆம்பிளை ஆச்சி” என்று கையில் வண்டி சாவியை குலுக்கியபடி உள்ளே வந்தாள் ரூபா.
“அப்பாக்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். காருல தானே போயிட்டு வரப்போறோம். அதனால பாதுகாப்பா தான் இருப்போம்” என்று சொர்ணவள்ளி அடுத்து கேள்வி கேட்கும் முன்னரே பதில் சொன்னவள், “ஏய் உமி… இந்த கறுப்பு சுடிதார் வெள்ளை சுடிதார் தவிர வேறு என்னனாலும் போடு” என்று கையோடு தமக்கையை இழுத்துக் கொண்டு நக்ஷத்ராவின் அறைக்குள் சென்றாள்.
சொர்ணவள்ளி பாட்டி எப்போதும் போல் புலம்பலை ஆரம்பிக்க, கிச்சனிற்குள் சென்ற மீனாட்சி கண்ணம்மாவிடம், “வேலையெல்லாம் முடிஞ்சுதா கண்ணம்மா?” என்று அவளின் பின்னே நின்றபடி கேட்க, அவளிடமோ பதிலில்லை.
“கண்ணம்மா, கண்ணம்மா” என்று அவளின் தோள்களை உலுக்க, “என்னது மா, கூப்பிட்டீங்களா?” என்று காதிலிருந்து பஞ்சை எடுத்தாள்.
“என்ன டி காதுல பஞ்சை வைச்சிருக்க!” என்று வாயைப் பிளந்தபடி கேட்டார் மீனாட்சி.
“ஆச்சி அது பாட்டுக்கு தினமும் கத்தி புலம்புது… அதைக் கேட்டு கேட்டு காதுல இரத்தம் மட்டும் தான் எனக்கு வரலைங்கம்மா… அதான் பஞ்சு” என்று அசுடு வழிந்தபடி கூறியவளைப் பார்த்து சிரித்தவர், “நீ இருக்கியே! சரி, சாலா உமையா கூட நீயும் போயிட்டு வா. நைட்டு சமையலை நான் பார்த்துக்குறேன்” என்று அவளின் கையில் இருந்த கரண்டியை வாங்கிக் கொண்டார்.
“அது ஆச்சி கத்துவாங்களேம்மா” என்று தயக்கத்துடன் கூறினாள் கண்ணம்மா.
“அவங்க எதுக்கு தான் கத்தலை… நீயும் துணைக்கு போயிருக்கனு தெரிஞ்சா ஐயா நிம்மதியா தான் இருப்பாரு. நீ போய் சீக்கிரம் ரெடி ஆகி கிளம்பு… அப்புறம் கண்ணம்மா பசங்க மூணும் ஜாக்கிரதை… நீயும் தான்” என்று எச்சரிக்க, “சரிங்கம்மா நான் பார்த்துக்குறேன்” என்று நம்பிக்கை அளித்து கிளம்பினாள் கண்ணம்மா.
“நீயும் மாறுவ மாறுவனு பார்த்தேன் ஆனால் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை போல… உன்னை நீ வேணும்னே பக்கி மாதிரி காட்டிக்குற உமி… எப்போ பார்த்தாலும் கறுப்பு சுடிதார் இல்லை வெள்ளை சுடிதார்… கழுத்துல ஒரு செயின் இல்லை, கையில வளையல் இல்லை. ஒரு கறுப்பு பொட்டு, ஒரு சின்ன தோடு… உன்னை விட ஆச்சியே நல்லா டிரெஸ் பண்றாங்க. இன்னிக்கு நீ நான் சொல்றது தான் போடணும்” என்று அதிகாரம் கலந்த அக்கறையுடன் கூறிய தங்கையிடம், “சாலா அது வந்து” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, அவளின் வாயை மூடிய ரூபா, “நீ எதுவும் பேசக் கூடாது… டாட்” என்று முடித்தாள் ரூபா.
***
“புட்டினா இன்ட்லோ (பிறந்த வீட்ல) கூட அழ வைக்குறீங்களே!” என்று வேண்டும் என்றே சத்தம் போட்டு அழத் தொடங்கின திவ்யாவைப் பார்த்து, “இப்புடு என்டி (இப்போ என்ன) நடந்ததுனு அழுதுட்டிருக்க திவ்யா?” என்று சுரேகா அதட்டிக் கொண்டிருக்கும் போதே, தங்கையின் அழுகைக் குரல் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான் தீரஜ்.
“என்ன ஆச்சு திவ்யா? எதுக்கு அழுகுற?”
“ஒன்னும் இல்லை சிம்மா… நீ தூங்கு” என்று அன்னை சொல்ல,
“நா மனவராலிக்கி (என் பேத்திக்கு) கண்ணு வேர்க்குது சிம்மா! நீ போய் தூங்கு பாபு” என்று அக்கறையுடன் கூறிய அம்மம்மாவை, ‘அம்மம்மாக்கு லொள்ளைப் பாரு’ என்பது போல் பார்த்தாள் திவ்யா.
‘எனக்கு தூக்கமா!’ என்று மனதில் அவன் வெறுமையாக நினைத்துக் கொண்டிருக்க, “வருண், ஃபன் பிளேஸ் போகணும்னு சொன்னான்… மனோஜ் வெளியே போயிருக்கான்… அதான் உங்களை கூப்பிடலாம்னு அண்ணையா… வருண் தான் ஆசைப்பட்டான்” என்று அவள் நடித்துக் கொண்டிருக்கும் போதே, “நான் குளிச்சிட்டு வரேன்.. ரெடியா இருங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்றான்.
மகளை முறைத்துக் கொண்டிருந்த சுரேகாவை கண்டுக்கொள்ளாது மகனுடன் உற்சாகமாக கிளம்பினாள் திவ்யா.
“தீரஜ்” என்று அழைத்தபடி அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான் வினோத். “வாப்பா வினோத்” என்று பாட்டி உள்ளே அழைக்க, எப்போதும் போல் வந்து சோஃபாவில் அமர்ந்தான்.
வினோத், தீரஜ் வீட்டில் இருக்கும் முக்கால்வாசி நேரம் இங்கே தான் இருப்பான். சில சமயம் சுரேகா எதாவது ஸ்பெஷலாக சமைத்தால் தீரஜ் வீட்டில் இல்லை என்றாலும் அழைத்து சாப்பாடு போடுவார்.
“வா பாபு… டீ குடி” என்று கப்பை நீட்ட, வினோத்திற்கோ வயிறு கலக்கியது. ‘ஆத்தாடி, ஒரு கப்பு டீ கொடுத்திட்டு ஓராயிரம் டீ குடிச்சு எனர்ஜி ஏத்துற அளவுக்கு கேள்வி கேட்பாங்களே!’ என்று மனதில் நொந்தவன், ‘உள்ளே பதறுறேன் வெளியே சிரிக்குறேன்’ என்று மைன்ட் வாய்ஸ்லில் பாடியபடி அவன் குடிக்க, இம்முறை சுரேகா வினோத்திடம் எதுவும் கேட்கவில்லை. அதான் மகனிடம் கேட்டறிந்து அவரின் மனதில் கவலை சூழ்ந்திருக்கிறதே. இனி வினோத்திடம் கேட்க ஒன்னும் இல்லை என்று அவனை துருவவில்லை.
“சிம்மா கல்யாணம் பத்தி ஏதாவது சொன்னானா மணவாடு (பேரா)” என்று ஏக்கமாக கேட்டார் அம்பிகாவதி.
‘இந்த பாட்டிம்மா இவ்வளவு நாளா ஆன்ட்டி சொல்றதைப் பார்த்துட்டு அமைதியா தானே இருந்தாங்க… இன்னிக்கு என்ன ஃபெர்ஃபாம் பண்றாங்க!’ என்று அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“வினோத் அண்ணையா உங்கக் கிட்ட தான் பேசணும்னு நினைச்சிட்டே இருந்தேன்… சிம்மா அண்ணையா கூட இருக்கும் போது பேச முடியலை” என்று அவனின் அறையைப் பார்த்தபடி, “அண்ணையா ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்குறாரு… என் பாவாவோட(கணவன்) தங்கச்சியை அண்ணையாவுக்கு பேசலாம்னு இருக்கோம்” என்று அவ்வப்போது தீரஜ் வருகிறானா என்று பயத்துடன் பார்த்துக்கொண்டே கேட்டாள் திவ்யா.
“என்னதிது டைம் டேபிள் போட்டு இந்த வீட்டுல மாத்தி மாத்தி கேட்டுட்டு இருக்கீங்க… டேய் வருண் நீ மட்டும் தான் டா மிச்சம்… உன் மாமாவுக்கு எப்போ கல்யாணம்னு கேட்டுடு தம்பி” என்று மழுப்பிக்கொண்டே போனான்.
“அண்ணையா காமெடி பண்ணாமல் சொல்லுங்க” என்று திவ்யா விடாமல் கேட்கும் போது தான் கிச்சனில் இருந்து வந்தார் சுரேகா.
‘ஐய்யோ கடவுளே! குடும்பமா சேர்ந்து ரௌண்ட் கட்டி கேள்வி கேட்குறாங்களே! சம்பந்தப்பட்டவன் கிட்ட கேட்க தைரியம் இல்லாமல் சிவனேனு இருக்குற என் கிட்ட கேட்டால் நான் என்ன பண்ணுவேன்?’ என்று அவன் அல்லாடிக் கொண்டிருக்கும் போதே,
“இப்போ எல்லாருக்கும் என்ன தெரியணும்? அம்மா, நான் உங்கக் கிட்ட சொன்னேன் தானே! அப்போ ஏன் இந்த பேச்சு மறுபடியும் மறுபடியும் வருது?” என்று கேள்வியாகக் கேட்டான் தீரஜ்.
“நீ ஈஸியா சொல்லிட்ட சிம்மா… ஒரு பொண்ணைக் காதலிச்சு விபத்தால இழந்துட்ட… என் மனசுல அவள் தான் இருக்காள் இனி வாழ்க்கையில வேறு யாரும் இல்லைனு சொல்லிட்ட ஆனால் எங்க நிலைமையை யோசிச்சு பார்த்தியா? பெத்த மகனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு தான் எல்லா அம்மாவும் நினைப்பாங்க” என்று அழத் தொடங்கினார் அன்னை.
“எல்லாருக்கும் பொதுவா சொல்றேன். இனி என் வாழ்க்கையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு இடமில்லை… சீரியல் சினிமாவுல வர மாதிரி உடம்பு முடியலை அப்படினு என்னை எமோஷனலா பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ண வைக்க பிளான் பண்ணீங்கனா… நிரந்தரமா அமெரிக்கா போயிடுவேன்” என்று முடித்தவன், “திவ்யா வருணைக் கூட்டிக்கிட்டு வா… கிளம்பு வினோத்” என்று கூறிவிட்டு அவன் கார்க் கீயை எடுத்துவிட்டு வேகமாக வெளியேற, “நீங்கள் கவலைப்படாதீங்கமா அவனை விட்டுப் பிடிப்போம்” என்று சமாதானப்படுத்திவிட்டு வெளியேச் சென்றான் வினோத்.
“அம்மா… அண்ணையா என்ன இப்படி பேசுறாரு!” என்று முகத்தை சுருக்கிய திவ்யாவோ, “சரி நான் கிளம்புறேன்” என்று மகனை அழைத்துக் கொண்டுச் சென்று விட்டாள்.
“அழாத பங்காரம்… பெருமாள் நமக்கு நல்ல வழி காட்டுவாரு” என்று மகளை தேற்றினார் அம்பிகாவதி.
தீரஜ் காரை எடுத்துக் கொண்டிருக்கும் போது தான், மனோஜ் தன் வண்டியுடன் பார்க்கிங் இடத்தில் நுழைந்தான்.
தன் மகனுடன் கீழே வந்த திவ்யா, மனோஜ்ஜைக் கண்ட நொடி, “மனோஜ் நீயும் வா” என்று அவனை இழுத்துக் கொண்டு வர அவனால் மறுக்க முடியவில்லை.
தீரஜ் அருகில் வினோத் அமர்ந்திருக்க, பின்னே திவ்யா, வருண் மற்றும் மனோஜ் அமர்ந்திருக்க அவனின் கார் சீறிப் பாய்ந்தது.
“எங்கே போகணும் திவ்யா?” என்று தீரஜ் கண்ணாடி வழியாக தங்கையைப் பார்த்து கேட்க,
“ஏதாவது ஃபன் பிளேஸ் இருக்குற மால் அண்ணையா” என்று அவள் பதிலளிக்க, அவனின் கார் மெரினா மால் நோக்கிச் சென்றது.
***
“சாலா பாப்பா எங்கே போகணும்?” என்று நேசமணி கேட்டார் நேசமணி. அன்று சாலையில் நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லக் கூடாதென்று நக்ஷத்ரா தீர்மானமாக கூறியபின் நேசமணி அமைதியாகி விட்டார். ஆனாலும் அந்த நெடியவன்(தீரஜ்) அன்று அடித்ததில் அதிர்ந்தவர் இன்னுமே கவனமாய் நக்ஷத்ரா மற்றும் ஆதிராவை பார்த்துக் கொள்கிறார்.
“மெரினா மால் தாத்தா” என்று பதிலளித்த ரூபாவை வேகமாக பார்த்த நக்ஷத்ரா, “சாலா, அது போக வர மட்டுமே ஒரு மணி நேரம் ஆகுமே! ரொம்ப லேட் ஆயிடப் போகுது” என்று பயத்துடன் கூறினாள்.
“உனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்… அங்கே தான் சரியா இருக்கும். அதான் நான் இருக்கேன் நம்ம ஆல் இன் ஆல் கண்ணம்மா இருக்காங்க அப்போ ஏன் பயப்படுற… ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்… அப்படித் தானே ஆது குட்டி” என்று மடியில் வைத்திருந்த அக்காவின் மகளை கொஞ்சியபடி கேட்டாள் ரூபா.
“ஆமா சித்தி” என்று ரூபாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆதிரா.
மனது முழுக்க மனோஜ்ஜூடன் பேசிய விஷயங்களும் கோபித்துக் கொண்டதும் ரணமாய் கனக்க, வெளியே எதையும் காட்டிக்கொள்ளாது சந்தோஷமாய் இருப்பது போல் நடித்தாள் ரூபா.
“அம்மாடியோவ்! சிவப்பு கலர் சுடிதார்ல கழுத்துல மெலிசான செயின், காதுல சிவப்பு நிற ஜிமிக்கி, ஸ்டோன் பொட்டு போட்டு கலக்குறீங்க உமையாம்மா” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் கண்ணம்மா.
அதற்கு நக்ஷத்ராவிடம் ஒரு உணர்வும் இல்லை. “அவளை இப்படிக் கிளப்ப நான் எவ்வளவு பாடுபட்டேன்னு எனக்குத் தான் தெரியும்… ஷப்பா அதை நினைச்சால் இப்போ கூட கண்ணைக் கட்டுது” என்று மலைப்பாகக் கூறினாள் ரூபா.