‘இவன் அவன் தானே? எப்படி இங்க?’ என்று யோசித்தவளுக்கோ இவ்வளவு நேரம் தன் வாழ்க்கையைப் பற்றி இவர்களின் முன்னால் பேசியதைப் பற்றி நினைத்து ஒரு விதமான சங்கடம் கலந்த அவமானமாக இருந்தது.
‘ச்ச இங்க மூணு ஆம்பிளைங்க இருக்குறதை நம்ம யோசிக்கவே இல்லையே’ என்று தன்னை நினைத்தே கோபப்பட்டவள், இப்போதும் கூட அந்த நெடியவனிடம் மன்னிப்பு கேட்பதை பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை.
தீரஜின் கண்களோ அந்த குட்டி அம்மாயின் மேல் தான் மொத்தமாக பாசத்துடன் நிலைத்திருந்தது.
நக்ஷத்ரா காதலைப் பற்றி பேசிய புரிதல் இல்லாத வார்த்தைகளை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“கண்ணம்மா அக்கா நான் கிளம்புறேன்” என்று மகளோடு நகர்ந்த நக்ஷத்ரா வேகமாகச் சென்றாள்.
“சாலாம்மா, நான் உங்க வீட்டு வேலைக்காரி தான்… ஆனாலும் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்கம்மா, இதெல்லாம் வெளியே இந்த மாதிரி பொதுமக்கள் பார்க்க பேசுற விஷயம் இல்லை. வீட்ல வந்து பேசச் சொல்லுங்கமா” என்று கூற,
“ரூபா, கிளம்புங்க… மனோஜ் வந்து உங்க வீட்டுல பேசுவான். அண்ட் உங்க அக்கா கிட்ட சொல்லுங்க… ஒருத்தங்க மேல காதல் வந்துடுச்சுனா அது அவங்க உயிருள்ள வரை அவங்களை மட்டும் தான் நேசிக்கும்… அவங்களை மட்டும் தான் வாழ்க்கை துணையா மனசுல ஏத்துக்கும்னு” என்று கூறியவனின் வார்த்தைகள் நிதானமாக ஆனால் அழுத்தமாக இருந்தது. அவனின் தோளில் ஆதரவாக கைவைத்த வினோத், “விடு மச்சான்” என்று குரலில் ஸ்ருதியிறங்கி கூறினான்.
மனோஜ்ஜோ, ‘அண்ணையா என்ன காதல் பத்தியெல்லாம் பேசுறாரு’ என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போது தான், ‘என் வாழ்க்கையில் கல்யாணம்ன்ற டாப்பிக் கிடையாதுனு ரூபா பேசிட்டு இருக்கும் போது சொன்னாரே… ஒரு வேளை காதல் தோல்வியா? என்னது சிம்மா அண்ணையா காதலிச்சாரா? அவரைக் காதலிச்சு ஒரு பொண்ணு விட்டுட்டு போகுமா? இல்லை வேற ஏதாவது நடந்திருக்குமா?’ என்று பல விதமாய் தன் மண்டையில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தவன், ரூபாவின் பக்கம் வந்து, “நான் சொல்ல சொல்ல கேட்காமல் அவசரப்பட்டு வந்து பேசினது நீ… உன் அப்பா கிட்ட பேசுறேன்னு உன்கிட்ட இன்னிக்கு சாயந்தரம் சொன்னேன் தானே! இப்போ பாரு உங்க வீட்டு அக்கா நாங்க என்னமோ பொது இடத்துல இந்த டாபிக் பேசுன மாதிரி சொல்லிட்டாங்க… என்னை மேலும் பேச வைக்காமல் கிளம்பு டி” என்று சோர்வுடன் கூறினான் மனோஜ். அதற்கு மேல் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள் ரூபா.
***
காரில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. கண்ணம்மாவிற்குமே நடந்தது எல்லாம் கனவு போல் அதிர்ச்சியாக இருந்தது.
“உமி, என் மேல கோபமா இருக்கியா?” என்று தயங்கியபடி கேட்டாள் ரூபா.
‘என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு! எனக்கு ஆம்பிளைகளை பிடிக்கலைன்றதுக்காக மத்தவங்க கிட்ட அதை திணிக்க கூடாது. ஏற்கனவே சாலா என்னை நினைச்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கா.அவள் கண்டிப்பா சந்தோஷமா இருக்கணும்’ என்று நினைத்தவள்,
“இது உன் வாழ்க்கை உன் முடிவு… நான் ஒரு அக்காவா என் கடமையைச் செஞ்சேன்… எனக்கே புத்திமதி சொல்ற நீ, ஒருத்தரை தேர்ந்தெடுக்குறனா அவர் நல்லவரா தான் இருப்பார்னு நம்புறேன்” என்று தங்கைக்காக கூறினாள் நக்ஷத்ரா.
“அதை கொஞ்சம் சிரிச்சிட்டே சொல்லு… அப்போ தான் சாலா ஹாப்பி ஆவாள்” என்று பிடிவாதமாக கூறினாள் ரூபா.
“ஈஈஈஈஈஈ போதுமா?” என்று சிரித்தாள் தங்கைக்காக.
கண்ணம்மாவும் அதற்கு பின்னர் தான் இலகுவடைந்தாள். ‘கடவுளே! சாலாம்மா மனம் போல் மாங்கல்யம் அமையணும்’ என்று மானசீகமாக கடவுளை வேண்டிக் கொண்டாள்.
“மனோஜூடைய அண்ணாவுக்கு காதல் தோல்வி போல… மனோஜ் கிட்ட கேட்டால் தெரியும்” என்று ரூபா பொதுப்படையாகக் கூறிக்கொண்டிருக்க, நக்ஷத்ராவின் மனதிலோ, ‘இன்னொருத்தர் இருந்தாரே அவர் தான் அண்ணன் போல’ என்று வினோத்தை அண்ணாவென்று நினைத்து விட்டாள்.
***
அன்று இரவு தீரஜின் வீட்டில் எல்லாரின் முன் கை கட்டியபடி, “பொண்ணு பெயர்… ரூபவிசாலாட்சி… தமிழ்ப்பொண்ணு, ஊரு காரைக்குடி… அவளுடைய அப்பா நக்ஷத்ரா வெட்டிங் கார்ட்ஸ், ரூபா சேஃப் லாக்கர்ஸூடைய ஓனர்… அவளுக்கு ஒரு அக்கா… அவங்க பெயர் நக்ஷத்ரஉமையாள் அவங்க பொண்ணு பெயர் ஆதிரா… அவங்க விவாகரத்து வாங்கி இப்போ அப்பாவோட இருக்காங்க” என்று முடித்தான் மனோஜ்.
அங்கே நிலவிய அசாத்திய அமைதியை உடைத்தது திவ்யா தான். “என்னடா தமிழ்ப் பொண்ணுனு சொல்ற! தெலுங்கு பொண்ணுனா கூட பரவாயில்லை. இதுல அக்கா வேற டிவோர்ஸ் கேஸ்னு சொல்ற… நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் செட் ஆகாது” என்று மட்டமாக பேசினாள்.
“வாயை மூடு திவ்யா! வாய் இருக்குன்றதுக்காக உன் இஷ்டத்துக்கு பேசுவியா? நீயும் ஒரு பொண்ணு தானே! இப்படி இன்னொரு பெண்ணை இறக்கி பேசுறது அசிங்கம்னு உனக்குத் தெரியலை! இப்படி தான் உன்னை அம்மா வளர்த்தாங்களா? அவன் பெர்ஸ்னல்ல நீ தலையிடாத. நீ உள்ளே போய் வருணை தூங்க வை… இனி இப்படி பேசுறதை நிறுத்திக்கோ” என்று தங்கையை கண்டித்தான் தீரஜ்.
“சாரி அண்ணையா” என்று ஸ்ருதி இறங்கி கூறியவள், தன் மகனை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.
“இங்க காதலுக்கு யாரும் எதிரி இல்லை மனோஜ். அது தெலுங்கு பொண்ணு இல்லைன்றது ஒரு ஏமாற்றம் தான். இது மொழிக்காக சொல்லலை… நம்ம பழக்கம் வழக்கம் நடைமுறையெல்லாம் வேற! சரி மத்ததெல்லாம் விடு… அந்தப் பொண்ணுடைய அக்கா விவாகரத்து வாங்கி ஒரு பொண்ணோட வீட்ல இருக்குனு சொல்ற… அதான் யோசனையா இருக்கு” என்று ரோகிணி கூறி முடிக்கும் போதே,
“ஆவுணு (ஆமா) ரோகிணி” என்று ஆரம்பித்த சுரேகாவிடம், “அம்மா இதுலோ மிரு ஜோக்யம் செசுகோகன்டி (நீங்க இதுல தலையிடாதீங்க). சித்தி சித்தப்பாவை இன்னும் குழப்பி விட்டுடாதீங்க. ஒரு பெண்ணுடைய கடந்த காலத்தை வைச்சு நீங்க விமர்சிக்குறது பெரிய தப்பு” என்று அழுத்தமாகக் கூறினான் தீரஜ்.
“அப்படி சொல்லு சிம்மா… நீங்கள் ரெண்டு பேரும் பொண்ணுதான்றதை மறந்து பேசுறீங்களா? ஏமிரா என்ன இது… பிரச்சனை இருக்கப்போய் தான் அந்தப் பொண்ணு புருஷனை விவாகரத்து பண்ணிருக்கு ரோகிணி. மனோஜ் மனசைப் புரிஞ்சிக்கோ… மனசார சம்மதம் சொல்லு” என்று தெளிவாகக் கூறினார் அம்பிகாவதி.
“தாங்க்யூ அம்மம்மா… ஆமா அண்ணையா சொல்றது ரொம்பவே சரி… ரூபாவுடைய அக்கா வாழ்க்கையை யாரும் இங்கே விமர்சிக்கக் கூடாது. அவங்க ரொம்ப பாவம்… அவங்க புருஷன் ஒரு பொம்பளை பொறுக்கி. நம்ம வீட்டுல யாராவது ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு பொறுக்கி கணவனா வந்தால் என்ன பண்ணுவீங்க?” என்று கேள்வி எழுப்பினான் மனோஜ்.
அவன் கூறியதைக் கேட்டு நக்ஷத்ராவின் நிலையறிந்த அனைவருக்குமே சற்று பரிதாபமாக இருந்தது என்றால் தீரஜிற்கு அதிர்ச்சி. அன்று அவள் தன் மீது கை ஓங்கியதற்கான தெளிவான காரணம் இப்போது அவனுக்குப் புரிந்தது. அவனை அவள் எவ்வளவு கேவலமாக நினைத்திருக்கிறாள் என்று தீரஜிற்கு இப்போது தான் ஒரு தெளிவு கிடைத்தது.
‘ஒருத்தனை வைச்சு எல்லாரையும் தப்பா எடை போடுறாளே அந்த அம்மாயியுடைய அம்மா… ஆம், நக்ஷத்ராவின் மகளின் பெயர் கூட அவனுக்குத் தெரியாது… ஆனால் ஏனோ அந்த சின்ன அம்மாயியைப் பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு இவனுடைய பொம்மாயியின் நினைப்பு தான் எப்போதும் வருகிறது. அப்பாயின்றி தவிக்கும் ஒரு குழந்தை! இருபதில் அப்பாவை இழந்த தனக்கே இன்னும் வலிக்கிறதே… அப்பாவின் வாசனையே இல்லாமல் அந்த குட்டி அம்மாயி எவ்வாறெல்லாம் தவிக்கும்’ என்று ஆதிராவிற்காக மனதளவில் ரொம்பவே பாசம்கொண்டு வருந்தினான் தீரஜ்.
“மனோஜ்க்கு அந்தப் பொண்ணை தான் பிடிச்சிருக்குனு தீர்மானமா சொல்லும் போது நம்ம பாபுவுக்காக அந்தப் பொண்ணை பேசி முடிக்குறது தான் சரி” என்று கூறினார் தந்தை சீனிவாசலு.
சற்று நேரம் மறுபடியும் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. தீரஜ், தன் கல்யாண விஷயத்தை வைத்து மனோஜ் கல்யாண விஷயத்தை தடை செய்யக் கூடாது என்று தீர்மானமாக கூறிவிட்டதால் அனைவரும் அதைப் பற்றி பேசவில்லை.
“இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க?” என்று பொறுமையை இழந்து கேட்டான் மனோஜ்.
“எங்களுக்கு முழு சம்மதம்” என்று சீனிவாசலு கூற, முகத்தில் புன்னகை மின்ன தன் அன்னையைப் பார்த்தான் மனோஜ்.
“கல்யாணம் பண்ணி வைக்குறதே நீ சந்தோஷமா இருக்கணும்னுறதுக்காகத் தான் மனோஜ். உன் சந்தோஷம் அந்தப் பொண்ணு கிட்ட இருக்கும் போது, நாங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குறோம்” என்று மகனுக்காக ஒத்துக்கொண்டார் ரோகிணி.
***
எப்போதும் போல் தோட்டத்தில் கண்ணம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் ரூபா.
“கண்ணம்மா, அம்மாக் கிட்ட எதுவும் உளறி வைச்சிடாத! மனோஜ் வந்து என்னைப் பொண்ணு கேட்கும் போது தான் அவங்களுக்குத் தெரிய வரணும்” என்று மனதில் மலர்ச்சியுடன் அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, ரூபாவின் ஃபோன் ஒலித்தது.
“சொல்லு மனோஜ்” என்று ஆர்வத்துடன் பேசியவளிடம், “நான் உன்கிட்ட பேசணும்… நேர்ல… திங்கள், செவ்வாய் நான் கிளைன்ட் பிளேஸ் போறேன் அது தெரியும் தானே உனக்கு. புதன்கிழமை ஆபிஸ் முடிஞ்ச அப்புறம் மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்ட உடனே தொடர்பை துண்டித்து விட்டான்.
‘நான் அவன் அண்ணன் கிட்ட பேசுனதுக்கு இவ்வளவு கோபமா! நான் பேசினதுனால தான் இப்போ எனக்கு நிம்மதியா இருக்கு’ என்று ரூபா நினைத்தாலும், இன்று தீரஜ் அவளுக்கு கொடுத்த நம்பிக்கையில் சந்தோஷமாக இருந்தாள்.
‘உன் அண்ணன் பேச்சை தட்டாத தம்பியா இருக்கியே டா… சரியான அண்ணா தம்பி’ என்று மனதில் தன்னவனை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடந்திருந்தது. வெளியே இருந்து பார்க்க எல்லாமே அமைதியாய் சென்றுக் கொண்டிருந்த மாதிரி தான் தெரிந்தது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயம், கஷ்டம், கவலை இப்படி எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கலாம்.
மனதில் குழப்பத்துடன் தன்னுடைய கடையில் அமர்ந்திருந்த அருணாச்சலம், தன் மொபைலை எடுத்து தேவக்கோட்டை குமரப்பனிற்கு கால் செய்தார்.
“ஹலோ வணக்கம்… நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா? வீட்டுல ஆச்சி, தங்கச்சி, பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று இனிமையாக பேசினார் குமரப்பன்.
சற்று நேரம் பரஸ்பரம் நலனைப் பரிமாறிக்கொண்ட பின்னர் நேராக விஷயத்திற்கு வந்தார் அருணாச்சலம்.
“உங்கள் மகன் சபேசனுக்கு பொண்ணு பார்க்குறீங்களா!” என்று தயங்கியபடி ஆரம்பித்தார்.
பொதுவாகவே பெண்ணைக் கேட்டு தான் மாப்பிள்ளை வீட்டில் அழைப்பார்கள். நக்ஷத்ராவிற்கும் அப்படி தானே அமைந்தது. ஆனால் முதல் மகள் விவாகரத்து வாங்கி வீட்டில் இருக்கும் நிலையில், இரண்டாவது மகளுக்கு வரன் கேட்டு யாரும் வருவதில்லை. இந்தக் கவலை எல்லாம் என்றோ இவருக்கு வந்துவிட்டது. ஆனால் யாரிடமும் அவர் இதைப்பற்றி பகிர்ந்துக் கொள்ளவில்லை.
“பொண்ணு முடிவு பண்ணிட்டோமேப்பா” என்று அவர் இலகுவாகச் சொல்ல, “ஓ அப்படியா… வாழ்த்துக்கள்” என்று மனதில் சோர்வுடன் வெளியே இலகுவாக இருப்பது போல் வாழ்த்தினார் அருணாச்சலம்.
“அருணாச்சலம்… இங்கே பாருப்பா! நானும் ஒரு பொண்ணை வைச்சிருக்கேன். அதனால உன் நிலைமை எனக்குப் புரியுது. உமையாள் கையில பிள்ளையோட வீட்ல இருக்கும் போது விசாலாட்சியை பெண் எடுக்க யோசிக்குறாங்கப்பா.நமக்கு தெரியும் நம்ம பொண்ணு மேல தப்பில்லை அந்தப் பையன் குணம் தான் சரியில்லைனு. ஆனால் ஊர் அப்படி யோசிக்காதுப்பா… கண், காது, மூக்கை வைச்சு இல்லாத பொல்லாததையும் பேசும்… இதுல அந்த கார்த்திகேயன் வேற இன்னொரு கல்யாணம் பண்ணலை. அதனால ஒரு சிலர் உமையாளைத் தான் சகிச்சிக்கிட்டு வாழ சொல்றாங்க. இன்னும் சிலர் அந்தப் பையன் கூட வாழ்ந்து திருத்த சொல்றாங்க. ஊரு ஆயிரம் விதமாய் பேசத் தான் செய்யும் அருணாச்சலம். இதெல்லாம் உங்கிட்ட ஏன் சொல்றேன்னா! நமக்கு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையும் முக்கியம்… என்னைக் கேட்டால் நீ உமையாளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணுப்பா. இது நான் உமையாளுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். அவளுக்கு ஒரு வாழ்க்கை துணை இல்லாமல் எப்படி நம்ம பெரியவங்க காலத்துக்கு அப்புறம் இருக்க முடியும். நல்லா யோசிச்சிப்பாரு… இதோ வீட்ல சொந்தக்காரங்க வந்திருக்காங்க நான் அப்புறம் பேசுறேன்” என்று தொடர்பை துண்டித்து விட்டார் குமரப்பன்.
அன்று இரவு கண்களில் சோர்வுடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ரூபாவின் செவியில் அவளின் அன்னையின் அழுகுரல் கேட்டது.
‘அம்மா எதுக்கு இந்நேரம் அழாறாங்க… ஒருவேளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா!’ என்று பதறியவள், அம்மா அப்பாவின் அறைப்பக்கம் செல்ல,
“உமையாள் பாவம்ங்க! அவளுக்கு ஏன் இப்படி நடக்கணும்?” என்று அம்மாவின் கதறல் குரல் கேட்டது.
இதைக் கேட்டவுடன் உள்ளேச் செல்லாமல் முழுதாகச் சாற்றப்படாத கதவின் பின் நின்றபடி அம்மா, அப்பா என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்டாள் ரூபா.
“நீ அழுதுடுற நான் அழலை அவ்வளவு தான் வித்தியாசம் மீனாட்சி… இப்போலாம் படுத்தால் தூக்கமே வர மாட்டிங்குது. உமையாளுக்கு இப்படி ஆனதுனால சாலாவை பொண்ணு கேட்டு வர தயங்குறாங்க” என்று சோர்வுடன் கூறினார் அருணாச்சலம். ஏனோ தந்தையின் இந்த சோர்வான குரலைக் கேட்ட பெண்ணின் கண்கள் அவளை மீறி கலங்கியது.
“அதுக்காக மறுபடியும் அந்த கார்த்திகேயன் கிட்டயே எம் பொண்ணை அனுப்ப சொல்றீங்களா?” என்று ஆதங்கத்துடன் கதறினார் மீனாட்சி.
“இந்தப்பாரு மீனாட்சி நான் தீர்மானமா முடிவு பண்ணிட்டேன்னா அதை மாத்த மாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும். கல்யாணம் ஆகி மூணு மாசத்துல நமக்கு ஃபோன் போட்டு கதறி அழுதப் பொண்ணை உடனே யோசிக்காமல் கூட்டிட்டு வந்துட்டேன்… ஒரு புருஷன் ஒழுக்கம் இல்லாமல் இருந்தால் அந்தப் பொண்ணால எப்படி வாழமுடியும்… அப்பா எனக்கு அவர் வேண்டாம் ப்ளிஸ் பா நான் இங்கேயே இனி இருந்துடுறேன்னு என் காலைப் பிடிச்சு நாலு வருஷத்துக்கு முன்னாடி உமையாள் அழுதது இப்போ கூட என் கண்ணுல நிக்குது.”
“உமையாளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்குறேன்… போன வாரம் நம்ம கடைக்கு” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரூபாவின் கையிலிருந்த ஃபோன் வைப்ரேட் ஆனது. திரையில் மனோஜின் பெயரைக் கண்டவுடன் பெற்றோரின் உரையாடலை விட்டுவிட்டு வேகமாக மாடிக்குச் சென்றுவிட்டாள்.
***
அடுத்த நாள் காலை உமையாளின் அறைக்குள் சென்ற தந்தை மற்றும் தாயைப் பின்தொடர்ந்து ரூபாவும் சென்றாள்.
அன்று ஆதிராவிற்கு விடுமுறை என்பதால் பிள்ளை இன்னும் உறக்கத்தில் தான் இருந்தது.
நக்ஷத்ராவோ, ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி தன் கடையில் வைக்கத் தேவையான அணிகலன்களை மேஜையில் வைத்து செய்துக் கொண்டு இருந்தாள்.
“உமையாம்மா” என்றபடி தாய் வர கூட தந்தையும் இருந்தார். பின்னாடியே யோசனையுடன் வந்தாள் ரூபா.
“சொல்லுங்கமா” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவள், “சொல்லுங்கப்பா” என்று தந்தையைப் பார்த்தாள்.
“உன் வாழ்க்கை இப்படியே கடைசி வரைக்கும் இருக்குறது உனக்கும் ஆதிராவுக்கும் பாதுகாப்பு இல்லைமா” என்று தந்தை ஆரம்பிக்க, புருவத்தைச் சுருக்கினாள் ரூபா.
“நீங்களும் அம்மாவும் இருக்கீங்க… சாலா இருக்காள் அப்போ எனக்கென்னப்பா? நல்லா தான் இருக்கேன்” என்று வராத புன்னகை ஒன்றை கஷ்டப்பட்டு வரவழைத்து பதிலளித்தாள் நக்ஷத்ரா.
“எங்கள் காலத்துக்கு அப்புறம் உன்னைப் பார்த்துக்க யார் இருக்காம்மா?” என்று பொறுமை கலந்த நிதானத்துடன் கேட்டார் தந்தை.
“ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க? நீங்களும் அம்மாவும் இன்னும் ரொம்ப வருஷம் ஆரோக்கியத்துடன் நிம்மதியுடன் இருப்பீங்க” என்று முடித்தாள் நக்ஷத்ரா.
“நிம்மதியெல்லாம் தொலைஞ்சு நாலு வருஷத்துக்கு மேல ஆகுதும்மா… தொலைஞ்ச நிம்மதியை மீட்க நீ தான் மனசு வைக்கணும்” என்று தந்தை கூற, பேச வாயெடுத்த ரூபா என்ன நினைத்தாளோ அமைதியாகி விட்டாள்.
“என்ன சொல்றீங்கப்பா?” என்று தந்தையிடம் புரியாமல் கேட்டாள் நக்ஷத்ரா.
“நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் மா” என்று தந்தை கூறி முடிக்க, “நானும் என் பொண்ணும் இந்த வீட்டுல உங்களுக்கு பாரமா இருக்கோமாப்பா?” என்று கேட்கும் போதே நக்ஷத்ராவின் கண்களில் வலி தேங்கி நின்றது.
“என்ன டி பேசுற நீ?” என்று அழ ஆரம்பித்தார் அன்னை.
“வேற என்னம்மா பேச சொல்றீங்க என்னை! எனக்கு கல்யாணம், வாழ்க்கை, புருஷன் இது மேல எல்லாம் நம்பிக்கை இல்லை… ஆம்பிளைங்கனாலே வெறுப்பும் கோபமும் தான் வருது” என்று உறுதியாக முடித்தாள்.
முதல் தடவை தன் அக்கா சுயமாக சிந்தித்து உறுதியாக பேசியதை நினைத்து சந்தோஷப்படவா இல்லை அவளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படவா என்று தனக்குள்ளேயே மறுகினாள் ரூபா.
அன்று இரவு கணவனிடம், “ஏங்க உமையா சம்மதிக்க மாட்டிங்குறாளே! இப்போ என்ன பண்றது… இதனால சாலாவுடைய திருமணம் தடைபடுதுனு சொல்லி பார்ப்போமா?” என்று தயங்கியபடி கேட்டார் மீனாட்சி.
“இல்லை மீனாட்சி… அப்படி சொல்றது நம்ம பொண்ணை வலுக்கட்டாயப்படுத்துறதுக்கு சமம். யோசிப்போம்” என்று முடித்தார்.
தன் மகளை தூங்கவைத்த உமையாளின் கண்கள் தலையணையை நனைத்தது. கண்களை மூடியவளின் எண்ணவோட்டத்தில் பழைய ரணங்கள் தான் ஆறாத சுவடாய் வந்துப் போனது…