“அரக்கு பள்ளத்தாக்கு (Araku Valley)” ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதி. காப்பித் தோட்டங்களுக்கு பெயர் பெற்ற இந்த ஊர் தான் தீரஜ் மற்றும் மனோஜ் குடும்பத்தின் பூர்வீக வீடுள்ள இடம்.
இவர்கள் குடும்பத்து முன்னோர்கள் வாழ்ந்த இவ்விடத்தை விட்டு பிழப்பைப் பார்க்க ஹைதராபாத் குடிபுகுந்தார்கள். அவர்கள் வாழ்ந்த அந்தக் காலத்ததிலிருந்த பணச் செழிப்பில் இந்த பெரிய வீட்டை வாங்கிப் போட்டனர். அதன் பின் சில பல காரணங்களால் அவர்கள் ஏழ்மையில் சூழ்ந்துக்கொள்ள, இந்த வீட்டை மட்டும் விற்காமல் பேணி காத்தனர்.
“நரசிம்ம விலாஸ்” என்ற பெயர் பலகை பொறிக்கப்பட்டிருந்த அந்த பதிமூன்று சென்ட் வீடு தான் இவர்களின் பூர்வீக வீடு. நரசிம்ம ரெட்டி, தீரஜ் மற்றும் மனோஜின் கொள்ளு தாத்தா. வழி வழியாக அந்தப் பெயரும் பேரன்களுக்கு வைக்கப்படுகிறது. அந்தக் காலத்திலேயே இவர்கள் வீட்டு முன்னோர்கள் வாங்கிப் போட்டது. அது மட்டுமே அவர்கள் அசையாத சொத்தாக இருந்தது.
இவ்வீட்டின் பொறுப்பு அங்கே இருக்கும் ஒரு மலைவாழ் குடியினர் குடும்பத்திடம் தான் பல வருடங்களாக இருக்கிறது. அவர்களின் குடும்பத்தில் வழி வழியாக வீட்டைப் பராமரித்துக்கொண்டு இருக்கின்றனர். இப்போது அக்குடும்பத்தின் தலைவனான ராஜூ கடபா தான் இவர்களின் வீட்டை பார்த்துக் கொள்கிறார். இதற்காக அவர்களுக்கு சம்பளமும் தரப்படுகிறது.
தீரஜ் மற்றும் மனோஜ் வீட்டில் முன்னாடியெல்லாம் எவ்வளவு ஏழ்மை இருந்தாலும் அவர்களின் இந்த பூர்வீக வீட்டிற்காக செலவழிப்பதில் குறை வைக்காது இருந்தனர். இப்போது தீரஜ் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்ததால், அவனின் கட்டுப்பாட்டில் தான் இவ்வீடு முழுதாக இருக்கிறது.
சுற்றி எங்கும் காப்பித் தோட்டங்களும், அடர்ந்த மரங்களும், மலைகளின் ஆளுமையும், குளுமையும், சில்லென்ற காற்றும் அரக்கு பள்ளத்தாக்கை மிகவும் புத்துணர்ச்சியாகவும் அழகாகவும் வைத்திருக்கும்.
மொத்தம் பத்து அறைகளைக் கொண்ட அந்த வீடு சிவப்பு நிற மாளிகைத் தோற்றத்தில் இருந்தது. வீட்டின் அருகே கிட்டத்தட்ட பத்து பெரிய கார்கள் நிறுத்தும் அளவிற்கு இடம் இருக்கும்.
இந்த இடத்தில் தான் அலங்கரிப்பட்ட மேடையுடன் மனோஜ் மற்றும் ரூபாவின் கல்யாணம் நடக்கவிருக்கிறது.
ஒரு மாதம் அவ்வளவு வேகமாக ஓடியிருந்தது. அருணாச்சலத்திடம் கை நிறைய பணம் இருந்ததால் அவருக்கு உடனே கல்யாணம் என்று சொல்லும் போது பெரிதாக சிரமம் இல்லாமல் இருந்தது. இந்த ஒரு மாதமாக ரூபா எப்போதும் போல் கலகலப்பாக பேசவில்லை. ஆம், அன்று அவர்கள் பூ வைத்துச் சென்ற பின்னர் அவளிடம் ஒரு அமைதி. வீட்டினரிடம் ரொம்பவே நேரம் செலவழித்தாள். சொர்ணவள்ளிக்கு கூட பதில் பேச்சு எதுவும் பேசவில்லை. வீட்டில் கல்யாண பயம் என்று நினைத்து விட்டனர்.
மனோஜின் குடும்பம் பத்து நாட்கள் முன்னமே வந்துவிட்டனர். முகூர்த்தப் பட்டு மற்றும் ரெட்டி முறைப்படி தாலி செய்து வாங்கியிருந்தனர். கல்யாணத்திற்கு தேவையான பர்சேஸ் எல்லாமே இந்த ஒரு மாதத்திற்குள் வேகமாக முடித்தனர். இதில் எதற்குமே தீரஜ், திவ்யா மற்றும் வினோத் வரவில்லை. ஒவ்வொன்றிருக்கும் ஹைதராபாத்திலிருந்து வரமுடியாதென திவ்யா மறுத்துவிட்டாள். தீரஜ், தன்னால் எந்த பிரச்சனையும் தம்பிக்கு வந்துவிடக்கூடாதென சாக்குகள் சொல்லி வராமல் இருந்துவிட்டான். தீரஜ் இல்லாமல் ஒரு தடவை மேல் மாப்பிள்ளை வீட்டு சார்பில் போக வினோத்திற்கும் உடன்பாடில்லை. அதனால் அவனும் எதற்கும் செல்லவில்லை.
அன்று மாப்பிள்ளை வீட்டினர் வந்து சென்ற பின்னர், தன் அன்னைக்கு பயந்தே அருணாச்சலம் மனோஜீன் அண்ணன் பேச்சையெல்லாம் எடுக்கவில்லை. அதனால் முகூர்த்த பட்டு எடுக்கும் சமயத்தில், “மாப்பிள்ளை அண்ணன் வரலையா” என்று அருணாச்சலம் சினிவாசலுவிடம் கேட்கும் போதெல்லாம் அது வினோத்தைத் தான் குறிப்பிடுகிறார்கள் என்றே நினைத்திருந்தாள் நக்ஷத்ரா.
அரக்கு பள்ளத்தாக்கில் ருந்து விசாகப்பட்டினத்திற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டும். அதனால் இருபது நாட்களுக்கு வாடகை காரை எடுத்து கல்யாணத்திற்கு தேவையான மேக்கப் புக்கிங், மேடை அலங்காரம், சாப்பாடு, தேவையான பொருட்கள் எல்லாமே அரேன்ஜ் பண்ணிக் கொண்டிருந்தனர். அது போக தீரஜின் காருமே இருந்தது. இருவருமே அங்கேயிருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் தான் வேலைப் பார்க்கின்றனர்.
அண்ணனின் சொல்படி தம்பி எல்லாவற்றையும் இறங்கி செய்ய, வினோத்தும் இவர்களுடனே பயணித்திருந்தான். தீரஜ், மிகவும் சுறுசுறுப்பானவன். காலையில் நேரத்திற்கு விழிப்பதில் இருந்து, உடற்பயிற்சி செய்வதில், தன்னை அவன் பராமரிக்கும் விதம், அவனுடைய சுத்தம் இப்படி எல்லாத்திலும் அவன் டாப் தான். தந்தையை இழந்த பின் ஒரு பொறுப்புணர்ச்சியுடன் அமைதியானவனின் மறைந்த இயல்பான துறுதுறுப்பேச்சு எப்போது தான் வெளியே வருமோ?
மனோஜ் ஒரு வகையான சோம்பேறி தான். காலையில் பத்து வரை தூங்குவது. உடற்பயிற்சியாவது ஒண்ணாவது போங்கடா நமக்கு சோறு முக்கியம் பிகிலு என்கிற ரகம். கிட்டத்தட்ட வினோத்தைப் போல!
“சிம்மா! நீ எப்போதும் போல இறங்கி வேலைப் பார்த்தால் ஒன் தம்முடு (தம்பி) ஜாலியா சுத்திட்டு இருப்பான். அவனையே இறங்கி வேலை செய்ய விடு, குடும்பஸ்தன் ஆகப் போறான் அந்த பொறுப்பு வரணும்ல” என்று சீனிவாசலு கூறியதால் மட்டுமே மனோஜை வேலை வாங்குகிறான்.
வினோத்திற்கும் வீட்டிலிருந்தே லேப்டாப்புடன் வேலை. இப்படி இவர்கள் பிஸியாக இருக்க, வீட்டு பெரியவர்கள் வீட்டை அலங்கரிப்பதிலும் வந்த உறவினர்களை கவனிப்பதிலும் பிஸியாக இருந்தனர்.
அவர்களின் இந்த பெரிய வீட்டின் பக்கத்திலேயே ஐந்து செண்ட்டில் ஒரு அழகான வீட்டை பொண்ணு வீட்டிற்காக வாடகைக்கு எடுத்திருந்தனர். அதை நன்கு சுத்தப்படுத்தி, வருபவர்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்தனர். சமையல், வீட்டு வேலை எல்லாத்திற்கும் ஆள் வைத்திருந்தனர்.
உறவினர்களுக்காக அங்கே ரூம் போட்டிருந்தனர். இந்தச் செலவை எல்லாம் மனோஜின் வீட்டில் தான் செய்தனர். கல்யாணச் செலவு மட்டுமே பெண் வீட்டாரின் முறை.
அன்று ரூபாவின் வீட்டிலிருந்து அரக்கு பள்ளத்தாக்குக்கு வரவிருந்தனர். சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வரை விமானம் மூலமாக பயணித்து அதன் பின் மனோஜ் அவர்களை காரில் அழைத்துக் கொண்டு வருவதாய் இருந்தது. பிரியாவும் கூடவே பயணித்தாள். அருணாச்சலம் தன் மூத்த பெண்ணின் மன நலனிற்காக ரொம்பவே மெனக்கிட்டார்.
முதலில் கல்யாணம் வெளியூரில் என்று தெரிந்த பின், பிரியா வர முடியாத சுழ்நிலையில் தான் இருந்தாள்.
எப்போதுமே நக்ஷத்ராவை சந்தோஷமாகவும் உற்சாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அவளுடன் இருக்கும் நேரமெல்லாம் பிரியா போராடுவாள். அதிலும் இப்போது தங்கைக்கு கல்யாணமென்று இருக்கும் போது, நக்ஷத்ரா மிகவும் சந்தோஷமாக தான் இருப்பாள். ஆனாலும் இந்த சடங்குகளை எல்லாம் பார்த்து பெரிய மகளுக்கு அவளின் பழைய வாழ்க்கையின் கசப்பு ஞாபகம் வந்திடக்கூடாது என்று நினைத்தார் அருணாச்சலம்.
தன் மனதில் முடிவெடுத்து காரணத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நக்ஷத்ராவுடன் பிரியா வீடு சென்று, பிரியாவிடமும் அவள் அம்மா மற்றும் அண்ணனிடம் பேசி அவளை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று அவளின் அம்மாவிற்கு உறுதியளித்து சம்மதம் வாங்கி அழைத்து வந்தார் நக்ஷத்ராவின் தந்தை. பிரியாவிற்கு அப்பா இல்லை.
பயணிக்கவே நான்கு மணி நேரம் ஆகும் என்பதால் மனோஜ் காலையிலேயே குளித்துவிட்டு ரெடி ஆகிக் கொண்டிருக்க, திடீரென்று ஒரு முக்கியமான கிளைண்ட் மீட்டிங் அட்டென்ட் செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. வீட்டைத் தாண்டி ரோட்டில் பயணிக்கும் போதெல்லாம் நெட் சரியாக வேலை செய்யாது. இதில் மனோஜிற்கு கார் ஓட்டவும் தெரியாது. டிரைவரை வைத்து தான் வாடகைக் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
“அண்ணையா பிஸியா இருக்கீங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டான் மனோஜ்.
“இல்லை மனோஜ்… ஃபிரீ தான். என்ன வேணும்? நீ இன்னும் ரூபா வீட்டை ரிசீவ் பண்ண ஏர்போர்ட் கிளம்பலையா?” என்று தன் லேப்டாப்பில் அவனுடைய டீமிற்கு மெயிலை தட்டிக்கொண்டே கேட்டான்.
“அது தான் அண்ணையா கிளம்பிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு மீட்டிங்” என்று தன் சூழ்நிலையை விவரித்தான்.
“சரி, நீ மீட்டிங் பாரு… நான் போய் கூட்டிட்டு வரேன். நீ ரூபாவுடைய அப்பா நம்பரை எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடு” என்று கடிகாரத்தைப் பார்த்து வேகமாக கிளம்பிய தீரஜ், வாடகைக்கு எடுத்திருந்த அந்த ஸ்ஸைலோ (Zylo) காரின் சாவியை எடுத்து டிரைவர் துணையின்றி வீட்டினரிடம் கூறிவிட்டு கிளம்பினான்.
இங்கே மனோஜ், ரூபாவிற்கு தீரஜின் நம்பரை வாட்ஸ் அப் செய்து விஷயத்தை கூறயிருந்தான்.
விசாகப்பட்டினத்தில் வந்து இறங்கிய அருணாச்சலம் குடும்பம், செக் அவுட் செய்து வெளியே வந்த நொடி அருணாச்சலத்தின் ஃபோன் ஒலித்தது.
“என்ன புது நம்பரா இருக்கு?” என்று முணுமுணுத்தபடி கால்லை எடுத்தார்.
“ஹலோ! நான் மனோஜூடைய அண்ணா தீரஜ் பேசுறேன். நான் ஏர்போர்ட்ல எக்ஸிட் கேட் பக்கம் ஒயிட் ஸ்ஸைலோல வந்திருக்கேன்” என்று அவன் கூற,
“நாங்க எக்ஸ்ஸிட் வந்துட்டோம் தம்பி. வெளியே தான் நிற்குறோம்” என்று அவர் கூறும் போதே, அவனின் கண்களில் விழுந்தாள் அந்த குட்டி அம்மாயி.
“சார், நான் உங்களைப் பார்த்துட்டேன்… இருங்க வரேன்” என்று தொடர்பை துண்டித்தவன் அவர்களை நோக்கிச் செல்லும் போதே,
அப்போது தான் மனோஜ் அனுப்பிய மெசேஜை பார்த்த ரூபா எதேர்ச்சையாக நிமிர, “அப்பா அதான் மனோஜூடைய அண்ணா தீரஜ்” என்று தந்தையிடம் கூறும் போதே, அவன் இவர்களை நெருங்கியிருந்தான்.
கறுப்பு நிறத்தில் பிரான்டட் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தவனை இளவயது பெண்கள் பார்த்தால் மேன்லியாக இருக்கிறான் என்று கண்டிப்பாக சொல்லுவார்கள். அவனின் அடர்ந்த மீசையுடன் படிந்திருந்த தாடி பார்த்தவுடன் ஈர்க்கவில்லை என்றாலும் பார்க்க பார்க்க ரொம்பவே ஈர்க்கும்.
தீரஜ் முக்கால்வாசி இப்படி தான் இருப்பான். கிளைண்ட் மீட்டிங் என்று வரும் போது தான் ஷேவ் செய்வான். ஆனாலும் தினமும் டிரிம் செய்து விடுவான். மொத்தத்தில் ஒரு ஆண்மைத்தனமான தோற்றம் அவனுக்கு. ரக்கட் பாய் என்று இக்காலத்து பெண்கள் ரசித்து வரையறுப்பதில் இவனின் தோற்றம் ஒத்து வரும்.
“இவன் என்னடி இப்படி புதர் மண்டிப் போய் இருக்கான். உழுவானா மாட்டானா? அமேசான் காடுகாரன் போல இருக்கான்… ஆளும் அவனும் மீசையும் தாடியும் வைச்சு ரௌடி கணக்கா!” என்று சொர்ணவள்ளி பாட்டி முணுமுணுக்க, அது பக்கத்தில் இருந்த பிரியாவிற்கு மட்டும் கேட்டது.
“ஆனாலும் உன் ஆச்சிக்கு லொள்ளு தான் டி… ஆளு பார்க்க எவ்வளவு டீசன்டா ஸ்மார்ட்டா மேன்லியா இருக்காரு… அவரைப் போய் இப்படிச் சொல்றாங்க” என்று நக்ஷத்ராவிடம் கிசுகிசுக்கும் வரை தன் மகளின் உடையை சரி செய்துக்கொண்டிருந்த நக்ஷத்ரா தோழியின் பேச்சைக் கேட்டபடியே, “அவர்க்கு எங்க டி தாடி இருக்கு?” என்று வினோத்தை மனதில் வைத்தபடி தோழியிடம் கேட்க,
“அடிப்பாவி” என்று கூறிய பிரியா நக்ஷத்ராவின் முகத்தை தீரஜ் வருவதை நோக்கி திருப்ப, அங்கே கம்பீரமாக வந்துக்கொண்டிருந்தவனைக் கண்டவளின் இதயமோ வேகமாக தடதடத்து, கண்களோ இமைக்க மறந்து உறைந்து நின்றது.
‘இ…இவனா மனோஜூடைய அண்ணா’ என்று கைகள் நடுங்க மனதில் திக்கி திணறினாள் நக்ஷத்ரா. பயத்தில் பெண்ணவளுக்கு வியர்வை துளிகள் எட்டிப்பார்த்தது. அன்று மாலில் பார்த்த பின், இவன் மனோஜின் சொந்தமாகயிருக்காதென்று அவளாக நினைத்திருக்க இன்று மனோஜின் அண்ணனாக தங்களை நோக்கி வருபவன் அவள் அடித்தவனே என்று நினைக்கும் போது பெண்ணவளுக்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது.
ரூபா தந்தையிடம் மனோஜின் அண்ணன் தீரஜ் என்று சொல்லும் போதே, ‘ஐய்யயோ! நம்ம பேசாமல் குனிஞ்ச தலை நிமிராமல் முகத்தை காட்டாமல் இருந்துக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள் நக்ஷத்ரா.
“ஹாய் அத்தான்… இதான் அப்பா, அம்மா” என்று ஒவ்வொருத்தரையும் அவனுக்கு அறிமுகப்படுத்த தொடங்கினாள் ரூபா.
அடுத்து பிரியாவை அறிமுகப்படுத்தும் போதே, நைசாக மகளோடு சேர்ந்து கண்ணம்மா, பாட்டியைத் தாண்டி கடைசியாக சென்று நின்றாள் என்பதை விட ஒளிந்துக்கொண்டாள் நக்ஷத்ரா.
“இது ஆச்சி” என்று அவள் அறிமுகப்படுத்த, அதே குறுகுறுப்பு பார்வையை தீரஜை நோக்கி வீசினார் சொர்ணவள்ளி. பதிலுக்கு இவனும் கம்பீரமாக நின்றபடி ஒரு குறுகுறுப்பு பார்வையை அசால்ட்டாக வீசினான்.
இதுவரை சொர்ணவள்ளி பாட்டியின் குறுகுறுப்பார்வையை யாருமே இவ்வளவு தைரியமாக சந்தித்ததில்லை. அப்படி இருக்கும் போது இவன் அசராமல் மறுபார்வை வீச, ‘ஆத்தாடி! நமக்கே போட்டி கொடுக்குறான்! சண்டியர் மாதிரி நெஞ்சை நிமிர்த்திட்டு பார்க்குறான் ரௌடிப் பையன்’ என்று மனதில் புலம்பியவரோ, “வணக்கம் தம்பி” என்று பாசாங்காக புன்னகைத்தார்.
“வணக்கம் பாட்டி” என்று மரியாதையுடன் கை கூப்பினாலும் அவனின் பார்வையோ, உங்கள் ஆட்டம், நக்கல், மட்டம் தட்டுறது எல்லாம் என்கிட்ட எடுபடாது என்பது போலவே இருந்தது.