“யோவ் அண்ணா! இன்னும் கல்யாணம் ஆகலைன்ற விரக்தியில் லூசாயிட்டியா என்ன… என் ஆளு தான் கடைசி பொண்ணு!” என்று வினோத்திடம் கூறியபடி, ரூபாவை கண்களாலேயே ரசித்தான் மனோஜ்.
‘அப்போ நம்ம பார்த்தது யாரு? ஒருவேளை பேயா என்ன? ஆத்தாடி, நல்லா அழகா மேக்கப்போட களுக் களுக்குனு சிரிச்சிதே’ என்று தலையைச் சொறிந்தபடி குழம்பிக் கொண்டிருந்தான் வினோத்.
“என் பெரிய பொண்ணுக்கு பண்ணின அதே சீர்சனம் என் சின்ன பொண்ணுக்கும் பண்ணிடுவேன்” என்று மகளின் தந்தையாய் பொறுப்புடன் பேசினார் அருணாச்சலம்.
“எங்களுடையது ரொம்ப ஏழ்மையான குடும்பம் தான். எங்களுடைய பசங்க ரெண்டு பேரும் தான் படிச்சு முன்னுக்கு வந்து குடும்பத்தையே தூக்கி நிறுத்திருக்காங்க. எங்களுக்கு சொத்துனு ஊர்ல சில விவசாய நிலமும், ஒரு பூர்வீக வீடும் இருக்கு… அது போக சென்னையில பசங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சு பேங்க்ல லோன் போட்டு வாங்கின பிளாட்… கடன் முடியவே கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆகும்” என்று கூறிய சீனிவாசலு கண்ணம்மாவைப் பார்த்தபடி, “எங்க வீட்டுல வேலைக்கு ஆளெல்லாம் இல்லை சார் எல்லா வேலைகளும் நாங்க தான் பார்த்துப்போம்… என் பையன் கிட்ட பைக் தான் இருக்கு… உங்களவு வசதி கண்டிப்பா எங்கக்கிட்ட இல்லை ஆனால் உங்க வீட்டு பொண்ணை கண் கலங்காமல் பார்த்துப்போம்… எங்களுக்கு வரதட்சணைனு எதுவும் வேண்டாம்ங்க” என்று பொறுமையாக தெளிவாக பேசினார் சீனிவாசலு.
‘ஓ ஒன்னும் இல்லாத கூட்டமா… அதுக்கே இவளுங்க இந்த ஆட்டமா? இந்த சாலா வாய் துடுக்குக்கு திமிருக்கு இதெல்லாம் தேவை தான்… நான் பார்த்த கார்த்திகேயன் கோடியில புரள்பவன், இதுங்க தெரு கோடி’ என்று மனதிற்குள் ஒரு நீலாம்பரி போல் சிரித்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு கெத்தாக அமர்ந்தார் சொர்ணவள்ளி.
சீனிவாசலுவின் மேல் பூச்சு இல்லாத உண்மையான பேச்சு அருணாச்சலத்தை ரொம்பவே கவர்ந்தது.
“எங்க பொண்ணு அங்கே சந்தோஷமா இருப்பாள்ன்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு… நீங்கள் வரதட்சணை எதுவும் வேண்டாம்னு சொன்னாலும், நான் ஒரு அப்பாவா என் பொண்ணுக்கு செய்ய வேண்டியதை செஞ்சிடுவேன்” என்று இன்முகத்துடனே முடித்தார் அருணாச்சலம்.
“ஏங்க கேளுங்க” என்று ரோகிணி கணவனிடம் கிசுகிசுக்க, “அது வந்து கல்யாணம் எங்க பூர்வீக இடத்துல தான் பண்ணனும்னு நாங்க நினைச்சிருந்தோம்” என்று மனதில் தயங்கினாலும் வெளியே நிதானமாக சொன்னார் சீனிவாசலு.
மாப்பிள்ளை வீடு என்கிற கெத்தை காட்ட இவர்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனாலும் தங்களால் மகனின் திருமணத்தில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார் சீனிவாசலு. அதனால் தான் ரோகிணியும் கணவனின் கட்டளைப்படி அடக்கியே வாசித்தார். சுரேகா ஏற்கனவே தீரஜிடம் நன்றாக அர்ச்சனை வாங்கியிருந்ததால், அவரும் அமைதியாகவே இருந்தார்.
சீனிவாசலுவின் தயக்கத்தின் காரணமும் அதுவே, பொதுவாக பொண்ணு வீட்டில் அவர்களின் முறைப்படி தானே திருமணத்தை நடத்துவார்கள். இங்கு மனோஜின் வீட்டில் அவர்களின் முறையை விட்டுத்தர மனமில்லை.
“நீங்கள் நினைக்குற மாதிரியே பண்ணிடலாம்ங்க ஏற்பாடு எல்லாம் நீங்க பண்ணுங்க செலவு நாங்க பார்த்துக்குறோம்” என்று உடனே ஒப்புக்கொண்டார் அருணாச்சலம்.
ஏற்கனவே சொந்தம் பந்தங்களுடன் விலகியிருப்பவர்க்கு, அவர்களை அழைத்து ஏச்சுகள் விமர்சனங்கள் வாங்கி மகளின் கல்யாணத்தை நடத்த விருப்பமில்லை. அதனால் மாப்பிள்ளை ஊரில் பண்ணுவதே பரம திருப்தி என்று முடிவெடுத்தார்.
‘இவன் யாருடா… எனக்கு மவனா பொறந்துட்டு இப்படி இருக்கான்… அந்த அன்னக்காவடி குடும்பம் எள்ளுனு சொன்னால் எண்ணெய்யா போய் நிக்குறான்! புத்தி கெட்ட கிறுக்கன்… கூறுகெட்டவன்’ என்று மகனை மனதிற்குள் சரமாரியாக திட்டித் தீர்த்தார் சொர்ணவள்ளி.
“அப்போ நாங்க இன்னிக்கு பூ வைச்சிட்டு கிளம்புறோம். கல்யாணம் என்னிக்கு எப்போ வசதினு கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டீங்கனா, அங்க ஊருல ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும்” என்று கூறினார் சீனிவாசலு.
“ஒரு ஆறு மாசம்” என்று அருணாச்சலம் கூறிக்கொண்டிருக்கும் போதே,
“என்னது ஆறு மாசமா!” என்று அதிர்ந்தான் மனோஜ்.
“டேய் அவசரப்பட்டு ஓவர் ரியாக்ஷன் கொடுக்குற டா தம்பி… சமாளி” என்று காதைக்கடித்தான் வினோத்.
“ஏன் பாபு? ஆறு மாசம் தானே?” என்று சீனிவாசலு கேட்க, அனைவருமே புரியாமல் பார்த்தனர்.
“அது வந்து இன்னும் மூணு மாசத்துல, நான் ப்ராஜெக்ட் விஷயமா நெதர்லாந்து போறேன். திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்” என்று பொய்களை அள்ளித் தெளித்தான் மனோஜ்.
‘நம்மகிட்ட இவன் சொல்லவே இல்லையே’ என்று மனோஜின் வீட்டினர் நினைக்க, “அதனால அடுத்த மாசமே வைச்சிக்கலாமே” என்று அசடு வழிந்தான் மனோஜ்.
“எப்படி டா அடுத்த மாசம் முடியும்?” என்று மகனைப் பார்த்தபடி சங்கமாகக் கேட்டார் சீனிவாசலு.
‘இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்கானே! பொண்ணு வீட்ல என்ன நினைப்பாங்க… அப்படி என்ன அவசரம் இவனுக்கு? மானம் போகுது’ என்று மனதில் மகனைப் பொறுமினார் ரோகிணி.
“அடுத்த மாசமேனாலும் எங்களுக்கு சரி தான்” என்று முடித்தார் அருணாச்சலம்.
‘என்னது இவரு எல்லாத்துக்கும் தாமதிக்காமல் உடனே சரி சொல்றாரு’ என்று மீனாட்சியே வியந்தார்.
அருணாச்சலத்தின் கண்ணோட்டத்தில், நாள் தள்ளிப்போய் கல்யாணத்தில் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்றே நினைத்தார். அதிலும் இன்னார்க்கு இன்னார் என்று இவர்கள் முடிவு செய்த பின்னர் எதற்கு தள்ளிப்போட வேண்டும் என்றுடனே சம்மதித்தார்.
அப்போது ஆதிரா பிஸ்கட் கேட்க, மகளை அழைத்துக்கொண்டு கிச்சனிற்குள் சென்றிருந்த நக்ஷத்ராவால் இவர்களின் உரையாடலை கேட்க முடியவில்லை.
“சரிங்க, ரொம்ப சந்தோஷம். நாங்க எங்க பெரிய மகன் கிட்ட பேசிட்டு நல்ல நாள் பார்த்துட்டு என்ன எப்போனு முடிவு பண்ணிட்டு சொல்றோம்… அது அவனுக்கு ஒரு வேலை அதான் வர முடியலை” என்று சமாளித்தார் சீனிவாசலு.
“பரவாயில்லைங்க… அவருக்கு பொண்ணு எடுத்தது உங்க ஊர் தானா?” என்று எதார்த்தமாக கேட்டார் அருணாச்சலம்.
“இல்லைங்க அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை” என்று தயங்கியபடி கூறினார் மனோஜின் தந்தை.
‘பெரியவர் கல்யாணம் பண்ணாமல் இருக்கும் போது சின்னவர்’ என்று பேசத்துடித்த நாவினை கட்டுப்படுத்தினார் அருணாச்சலம்.
‘இதே கேள்வி நம்ம பக்கம் திரும்புச்சுனா என்ன சொல்லுவ அருணாச்சலம்? உமையா மாதிரி அவருக்கு என்ன கஷ்டமோ’ என்று விட்டுவிட்டார் அருணாச்சலம்.
வினோத்தோ எதேர்ச்சையாக மறுபடியும் அந்த ஜன்னல் புறம் பார்க்க, வெளியே நடப்பதை எட்டிப்பார்த்தபடி ஜன்னல் புறம் நின்றுக் கொண்டிருந்தாள் பிரியா.
‘யார் இந்தப் பொண்ணு? பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி முகத்தை மட்டும் காட்டிட்டு இருக்கு… சரி, அதான் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயிட்டோமே! என் லோலாயியை அப்புறம் டீல் பண்ணிக்குறேன்’ என்று அவளை தன் கண்களில் நிரப்பிக் கொண்டான் வினோத்.
மன நிறைவுடன் ரூபாவிற்கு பூ வைத்து விட்டு மனோஜின் குடும்பம் சந்தோஷத்துடன் அனைவரிடமும் விடைப்பெற்றனர்.
***
அன்று இரவு, “ஐ அம் இன் லவ்” என்று தீரஜின் வீட்டு பிரைவேட் டெரெஸில் கத்தினான் வினோத்.
“கிழிஞ்சுது” என்று மனோஜ் முணுமுணுக்க,
“உன் வீட்ல பார்க்குற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அம்மாக்கு சத்தியம் பண்ணிருக்கேனு சொன்னியே” என்று புரியாமல் கேட்டான் தீரஜ்.
“சத்தியம் போடுறதே அதை பிரேக் பண்ண தான்… போற போக்கைப் பார்த்தால் இதோ உன் தம்பிக்கே கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திடும் போல… இன்னிக்கு இவன் மாமனார் வீட்ல உட்கார்ந்திருக்கும் போது தான் அவள் சிரிப்பு சத்தம் என் காதுல விழுந்துச்சு… பார்த்த உடனே பட்டுனு தாக்கிட்டாள் மச்சான். அது லவ்வா லவ்வானு யோசிச்சிட்டு இருக்கும் போது தான்… அந்த சொர்… வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணிருச்சு” என்று சலித்துக் கொண்டான்.
“அது யார் சொர்?” என்று தன் கைகளைக் கட்டியபடி சுவாரசியத்துடன் கேட்டான் தீரஜ்.
“அதான் டா ரூபாவுடைய பாட்டி… அதுக்கு பேசாமல் நீலாம்பரினு பெயர் வைச்சிருக்கலாம்… பாட்டியா அது வெஷ பாட்டில். அதுக்கு நான் வைச்ச செல்லப் பெயர் தான் சொர்…” என்று சந்திரமுகி சரவணன் பாணியில் அழைத்தபடி சிரித்த வினோத், “நான் இப்போ முடிவே பண்ணிட்டேன்… நானும் காதலிக்குறேன் அந்தப் பொண்ணையே கல்யாணமும் பண்றேன்… இந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு ஏத்த லோலாயி என் வேலாயி தான்” என்று வெட்கப்பட்டான் வினோத்.
“நீ கல்யாணம் பண்ணினா ரொம்ப சந்தோஷம் தான் டா” என்று முடித்த தீரஜ், “மனோஜ், நீ இன்னும் மூணு மாசத்துல நெதர்லான்ட் போறேன்னு சித்தப்பா சொன்னாங்க” என்று கேள்வியாகக் கேட்டான் தீரஜ்.
“அது வந்து… அண்ணையா” என்று மனோஜ் திணற,
“எல்லாம் உருட்டு தான்… ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணுறாங்க… நாங்க ஒரே ஒரு பொய் இப்போதைக்கு சொல்லி முடிவான கல்யாணத்தை சீக்கிரம் முடிக்க பிளான் பண்ணோம்” என்று முடித்தான் வினோத்.
“அவனுக்கு நீ வாயா இருக்கியா? மனோஜ், நான் உன்கிட்ட கேட்டேன்?? எதுக்கு இந்த விஷயத்துல இப்படி ஒரு பொய் சொல்லிருக்க!” என்று தம்பியை அதிகாரத்துடன் கேட்டான் தீரஜ்.
“அது அண்ணையா… நாள் தள்ளி போய் எதுவும் பிரச்சனை வந்துடக் கூடாதுனு தான்” என்று தயங்கியபடி கூறினான் மனோஜ்.
“பின்னாடி இந்த விஷயம் தெரிஞ்சால் என்ன நினைப்பாங்க உன்னைப் பத்தி?” என்று தம்பியிடம் கேள்வியாகக் கேட்டான் அண்ணன்.
“அது விசா கேன்சல் ஆயிடுச்சு,ப்ராஜெக்ட் கிளோஸ் ஆயிடுச்சு இப்படி ஏதாவது சொல்லுவான்… அப்படி தானே மனோஜ்” என்று அவனுக்கு கண் காட்டியபடி பாயிண்ட்ஸை எடுத்துக் கொடுத்தான் வினோத்.
“நீ அவனை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்காதடா” என்று வினோத்தைப் பார்த்து கடுப்புடன் கூறினான் தீரஜ்.
“ஆமா ஆமா… உன் தம்பி அப்படியே பச்சை மண்ணு. கையைப் பிடிச்சால் வாயைப் பிளக்குற பால்வாடி பாப்பா பாரு! நாங்க வந்து அவரைக் கெடுக்குறோமா! அவன் எல்லாம் மாஸ்டர் பிளான் போட்டு காயை நகர்த்துறான் டா” என்று கூறினான் வினோத்.
“என்ன மாஸ்டர் பிளான்?” என்று புருவத்தைச் சுருக்கினான் தீரஜ்.
“டேய் நீ பேசாமலே இரு டா மச்சான். உன் கேள்விகளுக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியலை… அந்த சொர்க்கு ஏத்த ஆள் நீ தான் டா” என்று மூச்சு வாங்கக் கூறினான் வினோத்.