அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களின் வீட்டிற்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. தீரஜ் அவ்வாறு கூறிய பின்னர் அனைவருமே புரளி பேசுவதை நிறுத்திவிட்டு அவரவரின் வேலையைப் பார்த்தனர்.
அன்று இரவு, வராண்டாவில் அமர்ந்துக்கொண்டு செல்லில் எப்போதும் பிடித்த அந்த காமெடி சீரியலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் அம்பிகாவதி.
“அம்மம்மா! தாங்க் யூ சோ மச். சொர்ணவள்ளி பாட்டியோட முடியலை” என்று அவரை அணைத்தபடி கூறினான் மனோஜ்.
“உன் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் அந்த அம்மா சொர்ணவள்ளி நம்ம வீட்டுக்குள்ளயே காலை வைக்கும். ரூபா உன் மனைவியான அப்புறம் நீ சமாளிச்சிக்கோடா மணவாடு… உன் அம்மம்மாக்கு பில்ட்டிங் ஸ்ட்ராங் மாதிரி தான் எல்லாருக்கும் தெரியும் ஆனால் பேஸ்மென்ட் ரொம்ப வீக்கு” என்று பெருமூச்சுவிட்டார் அம்பிகாவதி.
“அம்மம்மா! ஏன் இப்படி டம்மி மத்தாப்பா இருக்கீங்க… அந்த வெஷப்பாட்டி எவ்வளவு திமிரா இருக்கு. நீங்களும் தான் இருக்கீங்களே! முதல்ல இந்த காமெடி சீரியல் எல்லாத்தையும் பார்க்குறதை விட்டுட்டு… வில்லி பாட்டி சீரியல் ஏதாவது எடுத்து பாருங்க… அப்போ தான் அந்த வெஷப்பாட்டி முன்னாடி உங்களால நெஞ்சை நிமிர்த்திட்டு நிக்கமுடியும்” என்று உசுப்பேத்தி விட்டான்.
“ஏமிரா… நான் அந்த அம்மா முன்னாடி நெஞ்சை நிமிர்த்திட்டு மல்யுத்தமா நடத்தப்போறேன். நீ தான் மல்யுத்தம் கத்துக்கணும் நா மணவாடு! உனக்கு கல்யாணம் நடந்த அப்புறம் ரூபா வீட்டுக்கு அடிக்கடி போவ… அவங்களை அடிக்கடி பார்ப்ப!” என்று பாட்டி கூறும் போதே மனோஜிற்கு, “ஐய்யயோ கடவுளே… சக்தி கொடு… வெஷவள்ளிப் பாட்டியின் பேச்சைத் தாங்கும் சக்தி கொடு.என்னை எதையும் தாங்கும் இதயமா மாத்த சக்தி கொடு” என்று மானசீகமாக கடவுளிடம் வேண்டியவன் மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து வெளியில் முனங்கிவிட்டான்.
“உன் மைன்ட் வாய்ஸ்ல கூட அந்தம்மாக்கிட்ட தைரியமா பேசணும்னு நினைக்க மாட்டிங்குறியே மனோஜ்… நீயெல்லாம் தேற மாட்ட!” என்று தன் தலையில் அடித்தபடி உள்ளேச் சென்றுவிட்டார் பாட்டி.
‘அந்த பாட்டியோட குறுகுறு பார்வையைப் பார்த்தாலே நாக்கு சுனாமி உள்வாங்குறது போல உள்வாங்கி மடிஞ்சிக்குது’ என்று மனதிற்குள் புலம்பியபடி உள்ளேச் சென்றான் மனோஜ்.
அடுத்து அடுத்து வந்த நாட்கள் சடங்குகளில் ஆரம்பித்தது… வீட்டின் முன் இருந்தயிடத்தில் அழகாக மேடை அலங்காரத்தில் நிச்சயதார்த்தம் இனிதே ஆரம்பமாக, லக்னப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. பசுமையான சூழலுடன், குளுமையான காற்றுடன் அவ்வப்போது லேசான மழைச்சாரலுடன் மனோஜ் மற்றும் ரூபா சந்தோஷத்துடன் மோதிரத்தை மாத்தினார்கள்.
எல்லாருமே கல்யாண வேலையில் பம்பரமாக சுத்திக் கொண்டிருந்ததால், சொர்ணவள்ளி பாட்டியின் புலம்பலைக் காது கொடுத்து கேட்க கூட யாருமில்லை. முக்கியமாக அவர் தாக்க நினைத்த தீரஜோ மிகவும் பிஸியாக இருந்தான். அவ்வப்போது கண்ணம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆதிராவுடன் பேசுவான். ஆதிரா, நக்ஷத்ராவைத் தவிர யாருடன் இருந்தாலும் தீரஜ் குழந்தையிடம் இன்முகத்துடன் அவ்வப்போது பேசிவிட்டு வருவதாய் இருந்தான். அதை நக்ஷத்ராவும் கவனித்திருந்தாள். ஏனெனில் அவளுடைய கண்கள் எப்போதும் ஆதிராவின் மீது தான் இருக்கும்.
ஃபோட்டோ மற்றும் வீடியோ கவரேஜ் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வினோத் தீரஜூடனே அலைந்து திரிந்தாலும் அவ்வப்போது பிரியாவின் மேல் தான் பார்வை ஆர்வமாய் படிந்தது. அதை விரைவில் பிரியாவும் கண்டுக் கொண்டாள்.
கல்யாண சடங்குகள் ரெட்டிகளின் முறைப்படி ஒவ்வொன்றாய் அரங்கேற, பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து செய்யும் சடங்குகள் எல்லாமே வீட்டின் முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையினில் பிரம்மாண்டமாக அரங்கேறிக்கொண்டிருந்தது.
இதற்கிடையில் சொர்ணவள்ளி பாட்டியும் தீரஜின் மீதுள்ள கடுப்பில் சடங்குகளில் அவ்வப்போது ஏதாவது குற்றம், குறைகள் சொல்லிக் கொண்டே இருந்தார். தன் மகள் வாழ்க்கையைப் பற்றிய அக்கறை, தன் கெஞ்சல் கதறலுக்கு எல்லாம் அன்னையிடம் மதிப்பில்லை என்கிற கசப்பான உண்மையை உணர்ந்து மனதில் உடைந்தேவிட்டார் அருணாச்சலம்.
“ஒம் மவள் லவ்வு பலமா இருந்துச்சுனா எம்பேச்சையெல்லாம் ஓஞ்சம்மந்தி எதுக்கு எடுத்து பிரச்சனையாக்கணும்னுங்குறேன்!” என்று மகனை மடக்கிவிட்டிருந்தார் சொர்ணவள்ளி.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல்! என்பதற்கேற்ப, சம்மந்தி இருவரிடமும் இவரும் மீனாட்சியும் சேர்ந்து பாட்டியின் பேச்சிற்காக மன்னிப்பு கேட்டு தயவுசெய்து அதை பெரிதாக எடுக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டனர். மகனின் திருமணத்திற்காக தீரஜின் வீட்டில் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டனர். ஆனாலும் அவர்களுடைய சொந்தங்களுக்கு பொண்ணு வீட்டாரின் மேல் பிடித்தமே இல்லை.
இப்படியே நாட்கள் திருமண நாளில் வந்து விடிய, தீரஜைப் பார்த்து மன்னிப்பு கேட்கத் தயங்கிய நக்ஷத்ரா கடைசி வரை மன்னிப்பே கேட்கவில்லை.
இன்னும் சில மணி நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் அந்தி மாலை வேளையில் அனைவருமே வீட்டின் முன்னே கல்யாண கலகலப்புடன் கூடியிருக்க, சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டு முறைப்படி கல்யாண உடையில் இருந்த மனோஜ் மற்றும் ரூபா, அழகான ஜோடியாக அனைவருக்கும் காட்சியளித்தனர்.
கண்ணம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆதிராவை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்த நக்ஷத்ரா, எப்போதும் போல் கண்ணம்மா புறம் பார்க்க, இப்போது அங்கே கண்ணம்மாவும் இல்லை ஆதிராவும் இல்லை.
‘இங்கே தானே இருந்தாங்க’ என்று நக்ஷத்ரா மனதில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாப்பிள்ளை வீட்டு பக்கத்தில் கண்ணம்மா மட்டுமே இருப்பதைக் கண்ட நக்ஷத்ரா, வேகமாக கண்ணம்மா புறம் சென்று, “ஆதிரா எங்கே கண்ணம்மாக்கா?” என்று படபடப்புடன் கேட்டாள்.
“அது பாப்பா, மாப்பிள்ளை வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டாள்ம்மா! அந்தப் பாட்டிம்மா கல்யாணம் முடியுற வரைக்கும் உள்ளே போகக் கூடாதுன்னு சொன்னாங்க இல்லையா!” என்று தடுமாறினாள் கண்ணம்மா.
“ஏன் கா தடுத்து நிறுத்தியிருக்கலாம்ல” என்று நக்ஷத்ரா பதறும் போதே, மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு பெண்மணி நடந்து வர, “ஏங்க என் பொண்ணு… குட்டிப் பொண்ணு உள்ளே இருக்காளாம்” என்று தயக்கத்துடன் அம்மாவாக பதறினாள் நக்ஷத்ரா. ஆதிராவை கைக்குள் பொத்தியல்லவா வளர்க்கிறாள்.
“உள்ளே தான் மா இருக்கு… இடது பக்கத்துல இருக்குற கடைசி பெரிய ரூம்” என்று அப்பெண்மணி சொல்ல,
“நாங்க உள்ளே வரக் கூடாதுனு பாட்டி” என்று பரிதவிப்புடன் நக்ஷத்ரா கூறிக்கொண்டிருக்கும் போதே, “அதெல்லாம் ஒன்னும் இல்லைமா நீ உள்ளே போ!” என்று கூறிவிட்டு அவர் வேகமாக அனைவரும் கூடியிருந்த இடத்திற்குச் சென்றுவிட்டார்.
“நான் போயிட்டு வரேன் கா” என்று வேகமாக உள்ளேச் சென்றாள் நக்ஷத்ரா. அந்த பெரிய வீட்டில் ஆள் இருக்கும் அரவமே இல்லை. மொத்த கூட்டமும் தான் வெளியில் இருக்கிறதே.
“ஆதிரா” என்று சத்தமாக அழைத்தபடியே அவள் வேகமாக உள்ளே செல்ல, ஆதிராவிடம் மறுகுரல் வரவே இல்லை.
அந்த பெண்மணி கூறிய அறைக்குள் வேகமாகச் சென்ற நக்ஷத்ராவோ, அத்தனை பெரிய அறையின் உள்ளேச் சென்று ஆதிராவைத் தேடினாள். அந்த அறைக்குள்ளேயே ஒரு அறை இருக்க, அதற்குள் இருக்கிறாளா என்று நக்ஷத்ரா வேகமாகச் செல்வதற்கும், பாத்ரூம் கதவைத் திறந்துக்கொண்டு குளித்து முடித்து இடுப்பில் வெறும் துண்டுடன் தீரஜ் வருவதற்கும் சரியாக இருந்தது.
அவனைக் கண்ட நக்ஷத்ராவின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, ‘இவள் எங்கே இங்கே?’ என்று மனதளவில் அவனுக்கு அதிர்வு தான் ஆனாலும் அதை அவன் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
உறைந்து நின்றவளின் மனமோ அடுத்த நொடியே, “ஆதிரா” என்ற பரிதவிப்புடன் கத்த, மார்புக்கு குறுக்கே தன் கைகளைக் கட்டியபடி நக்ஷத்ராவை புரியாமல் பார்த்த தீரஜ், “இங்கே அம்மாயி வரலையே?” என்று அவளின் கண்களைப் பார்த்து பதில் கூறினான்.
“இங்கே தான் வந்தாள்னு ஒரு அக்கா சொன்னாங்க” என்று அவனை குழப்பத்துடன் பார்த்தவள், வெளியே தேட வேக ஓட்டம் போட அறைக் கதவோ மூடியல்லவா இருந்தது.
கதவு சாதாரணமாக மூடியிருக்கிறது என்று நினைத்த நக்ஷத்ரா, அந்த தேக்குமரக்கதவின் உள்பிடியைப் பிடித்து வேகமாக இழுக்க, அதுவோ திறக்கப்படவில்லை.
“ஐய்யோ கதவைத் திறக்க முடியலையே” என்று அவள் பதற, உள்ளறையில் தன் சட்டையை எடுத்து உடுத்த எத்தனித்தவனின் மனதிலும் நக்ஷத்ராவின் பதற்றம் கலந்த பரிதவிப்பு தான் நெருடிக் கொண்டு இருந்தது.
“கதவு ஸ்ட்ரக் ஆயிடுச்சு போல! தி…றக்க முடியலை” என்று மூச்சு வாங்க ஓடி வந்து கூறியவளின் குரல் கேட்டு திரும்பியவன், அவளைத் தாண்டி வேகமாகச் சென்று கதவைத் திறக்க செல்ல,
கல்யாண சடங்குகள் நடக்கும் இடத்தில் “நரசிம்மா ஏன் இன்னும் வரலை?” என்று மாப்பிள்ளை வீட்டில் சலசலக்க, “உமையா எங்கே?” என்று அவளின் வீட்டிலும் புரியாமல் விழித்தனர்.
கிட்டத்தட்ட இருபது நபர்கள் மட்டுமே பங்கேற்கும் திருமணமாக இருப்பின், உதவிக்கென்று மலைவாழ் மக்கள் சிலர் இருக்க, “இது என்ன அநியாயமா இருக்கு மாப்பிள்ளையோட அண்ணன் ரூமுக்குள்ள பொண்ணோட அக்கா இருக்கு… கதவு சாத்தி என்ன பண்ணிட்டு இருக்காங்க” என்று ஒரு பெண்ணின் சத்தம் வர, அங்கிருந்த முக்கால்வாசி பேர் அதிர்ச்சியில் திகைத்தனர்.
“என்ன சொல்றீங்க?” என்று அருணாச்சலம் மற்றும் மீனாட்சி அதிர, சொர்ணவள்ளி பாட்டிக்கோ அதிர்ச்சியில் உறைந்து பேச்சே வரவில்லை.
“கண்மூடித்தனமா பேச வேண்டாம்” என்று பொதுப்படையாக சொன்ன சீனிவாசலு, வீட்டை நோக்கி வேகமாக நடக்க, அவரைப் பின் தொடர்ந்து அனைவரும் சென்றனர் பெண் மாப்பிள்ளை உட்பட.
சீனிவாசலு சரியாக தீரஜின் அறைப்புறம் நோக்கி திரும்பவும், தீரஜின் அறைக்கதவு திறக்கவும் சரியாக இருக்க, தீரஜ் மற்றும் நக்ஷத்ராவின் கோலத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது கூட தன் மகளைத் தேடிய நக்ஷத்ராவின் கண்களில், பாலை வார்த்தது போல் மீனாட்சி தோள்களில் சாய்ந்தபடி இருந்த மகளைக் கண்டபின் தான் அவளுக்கு உயிரே வந்தது.
தன் மகள் எங்கே என்று தெரியாமல் தவித்த தாயுள்ளம், தெரியாத ஒரு ஆடவனுடன் ஒரு அறையில் மாட்டிக்கொண்ட பயத்தினாலும் படபடப்பினாலும் அவளின் முகம் வெளிறிப் போய் இருக்க, அந்த குளிர்ப் பிரதேசத்திலும் அவளின் உடலில் வியர்த்துக் கொட்டி அவளின் பட்டுச்சேலை சற்று நனைந்திருந்தது. அவளிருந்த நிலையில், தீரஜ் மேற்சட்டையின்றி வெறும் துண்டுடன் இருந்ததையெல்லாம் அவள் கவனிக்கவில்லை. ஆனால் குழுமியிருந்த அனைவருக்கும் அது கண்ணில் பட்டதுமின்றி தவறாகவே பட்டது. இரு குடும்பத்தினரும் இவர்கள் மீது தப்பில்லை என்று ஆணித்தரமாக நம்பினாலும் சபையில் செல்லும் மானத்தை எப்படி சமாளிப்பது என்று யாருக்குமே பிடிபடவில்லை.
தீரஜ் சட்டை அணிய முற்பட்ட போது தானே, நக்ஷத்ரா பதற்றத்துடன் வந்து பேசினாள்.
அனைவரையும் புருவத்தை சுருக்கியபடி பார்த்த தீரஜ், “அவங்க குழந்தையைத் தேடி வந்தாங்க, கதவு வெ… ஸ்டர்க் ஆயிடுச்சு. எதுக்கு இப்படி பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்கீங்க. சித்தப்பா கல்யாண வேலையைப் பாருங்க. நான் ரெடி ஆயிட்டு வந்திடுறேன்” என்று அனைவருக்கும் கேட்கும் பொருட்டு சத்தமாகவே கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாற்றினான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.