இங்கே அனைவரும் அதிர்ச்சியில் பேசதறியாது ஸ்தம்பித்து நிற்க அங்கிருந்த ஒருத்தர் பேச வாயெடுக்கும் போதே, முந்திக்கொண்டார் நாகைய்யா. “மாப்பிள்ளை அண்ணன் ரூமுக்குள்ள இந்தப் பொண்ணுக்கு என்ன வேலை? எதுக்குமா அவர் ரூமுக்குள்ள போன? சித்தி (அம்பிகாவதி) தான் கல்யாணம் முடியுறவரைக்கும் மாப்பிள்ளை வீட்டுக்குள்ள பொண்ணு வீட்டுக்காரங்க வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களே… இது தான் உங்க வீட்டுல சொல்லிக் கொடுத்த பண்பா?” என்று வன்மத்தை கக்கினார் நாகைய்யா. அவரின் மகள் வந்தனாவும் அங்கிருக்க, இதை சாக்கிட்டு எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி தன் மகளை மனோஜிற்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்றும் இன்னொரு புறம் தங்களை மட்டமாக பேசும் சொர்ணவள்ளியின் முகத்தில் கரியை பூசுவதற்காகவும் தீரஜ் அங்கில்லாத சமயத்தை உபயோகப்படுத்தி தைரியத்தில் அவ்வாறு பேசினார்.
“சம்பந்தி என்ன அவர் இப்படி நாக்குல நரம்பு இல்லாமல் பேசுறாரு” என்று அருணாச்சலம் கொந்தளிக்க, “மன்னிடுங்க சம்மந்தி நான் பேசுறேன்” என்று பபடத்தபடி சங்கடமாய் உணர்ந்த சீனிவாசலு, அனைவரின் முன்னே நாகைய்யாவை சரமாரியாகத் திட்டினார்.
இவ்வளவு நேரம் தன் மேல் விழுந்த அவச்சொற்களை கேட்டு உறைந்திருந்த நக்ஷத்ரா, “இல்லை, இல்லை என் பொண்ணு ஆதிராவைத் தேடி தான் நான் வந்தேன்” என்று கண்களில் கண்ணீருடன் கதறினாள்.
“என்னம்மா உம் பொண்ணு சடங்கு நடக்குற இடத்துல தானே இருந்துச்சு இப்படி பொய் சொல்ற?” என்று கூட்டத்தில் ஒரு குரல் கேட்கவும், தீரஜ் உடையணிந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
“இல்லைங்க சத்தியமா… ஒரு அக்கா தான் என் பொண்ணு இங்க இருக்கானு சொன்னாங்க அதான் வந்தேன்” என்று கதறியபடி தன் கண்களை எல்லாப்பக்கமும் துழாவினாள் பெண். தன் தாயின் கதறலைக் கண்ட ஆதிராவோ, வேகமாக இறங்கி தன் அன்னையிடம் சென்று தாவிக்கொண்டாள்.
“யார் அந்த அக்கா? சொல்லும்மா” என்று மீண்டும் அதே குரல் ஒலிக்க, “அவங்க… களை இங்கே காணும்” என்று திணறியபடி தன் மகளை அணைத்துக் கொண்டு அழுதாள் நக்ஷத்ரா. அவளுக்கு ஆதரவாய் பக்கத்தில் நின்ற பிரியா தோழியின் தோளைப் பற்றி ஆதிராவை வாங்கிக் கொள்ள, இங்கே மீனாட்சிக்கோ அழுகை நிலை தான்.
ரூபா மற்றும் மனோஜிடம் எந்தவொரு அசைவுமில்லாமல் உறைந்திருந்தனர்.
“இங்கே என்ன நடந்துட்டு இருக்கு… நான் கல்யாண வேலையைப் பாருங்கனு சொல்லியும் வேலையைப் பார்க்காமல் என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்?” என்று கர்ஜித்த தீரஜின் பார்வை நக்ஷத்ராவின் கதறலில் தான் நிலைத்து நின்றது. தீரஜின் காதில் நடந்தவை எல்லாவற்றையும் வினோத் கூறிக்கொண்டிருக்கும் போதே,
இவ்வளவு நேரம் எதிர்பாராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றிருந்த சொர்ணவள்ளி பாட்டியோ இப்போது தீரஜைப் பார்த்தப்பின் வெறியேறி கொந்தளித்து விட்டார்.
“எல்லாத்துக்கும் காரணம் நீ தான்! உன்னைய பார்க்கும் போதே முரட்டு பையன் கணக்கா திமிரா கூட கூட பேசுன… அதுல என் கொள்ளுப் பேத்தியை வேற உரிமையாய் தூக்கி கொஞ்சுன… எனக்கு உம் மேல தான் சந்தேகமா இருக்கு. நீ தான் எம் பேத்தி உமையாவை வலுக்கட்டாயமாக அடைச்சு வைச்சு தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிருப்ப!” என்று சொர்ணவள்ளி பாட்டி அது பாட்டுக்கு கத்த, பின் விளைவுகளையெல்லாம் யோசிக்காமல் தீரஜைக் காயப்படுத்துறோம் என்கிற பெயரில் பிரச்சனையை பூதகரமாகவே ஆக்கிவிட்டார். பாட்டி தன்னைப் பற்றி இப்படி பேசியதை தீரஜ் தன் மூளைக்கு ஏத்திக்கொள்ளவேயில்லை ஏனெனில் அவன் மனதில் இப்போது முழுக்க நாகைய்யா நக்ஷத்ராவை அசிங்கமாக பேசியதைக் கேட்டு தான் அவனின் நாடி, நரம்பெல்லாம் கோபத்தில் துடித்துக்கொண்டிருந்தது.
“மாமா! நீங்களும் ஒரு பொண்ணை வைச்சுட்டு இன்னொரு பொண்ணை இப்படி அசிங்கமாகப் பேசுறீங்க… உங்களை” என்று கர்ஜித்தவன், கையை முறுக்கி, “என்னை விட வயசுல பெரியவரா போயிட்டீங்கனு இத்தோட விடுறேன். இல்லைனா என் கை தான் பேசியிருக்கும். அவங்க கிட்ட மன்னிப்பு கேளுங்க” என்று நாகாய்யாவைப் பார்த்து கத்தினான் தீரஜ்.
“எம்மகனை நீங்க எப்படி இவ்வளவு அசிங்கமா பேசலாம்” என்று சொர்ணவள்ளியை சுரேகா கத்த ஆரம்பிக்க,”ஆமா, ரூமுக்கு ஆசைப்பட்டு வந்தது உங்க பெரிய பொண்ணு ஆனால் எங்க நரசிம்மா மேல திருப்புறீங்க” என்று தீரஜின் சொந்தங்கள் சலசலத்தனர்.
“இவ்வளவு பிரச்சனை நடந்த அப்புறம் இந்த கல்யாணம் தேவைதானா மனோஜ்?” என்று பொறுமையிழந்து கேட்டுவிட்டார் ரோகிணி. இப்போது சீனிவாசலுவிற்கே பொறுமை பறந்துவிட்டது.
“எங்க வீட்டுப் பையனை நீங்க எப்படி இப்படி பேசலாம்?” என்று சொர்ணவள்ளி பாட்டியிடம் அனைவரும் முறையிட,
“குழந்தை வெளியே தான் இருந்திருக்கு… இந்தப் பொண்ணு சும்மாவே நரசிம்மா ரூமுக்கு போயிருக்கு. கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆன பொண்ணு நல்ல வாட்ட சாட்டமா ஆள் கிடைச்ச உடனே வேலையைக் காட்டியிருக்கு சுரேகா. அதுக்கு இந்த பாட்டியம்மா நம்ம பையன் மேல பழியை சுமத்துது. இப்படி ஒரு குடும்பம் தேவை தானா? பேசாமல் வந்தனாவை மனோஜூக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடு ரோகிணி… இந்தக் கேவலமான குடும்பத்தை வெளியே துரத்தி விடு” என்று நாகைய்யா கூறி முடிக்கும் போதே, அவரின் சட்டையைப் பற்றி இழுத்த தீரஜ் அடித்தே விட்டான்.
தீரஜ் வீட்டினர் அவனை மேலும் அடிக்க விடாமல் தடுக்க, அம்பிகாவதி பாட்டி “விடுங்க” என்று அலறியதை எல்லாம் யாரும் கேட்கவில்லை.
எல்லாரும் அவர்கள் தரப்பைப் பேசி கத்திக்கொண்டிருக்க, அதிலும் கூட நக்ஷத்ராவின் கதறலும் அவளின் குடும்பத்தாரின் கதறலும் மேலோங்கி கேட்க, உள்ளே வந்த புரோகிதர், “முகூர்த்த நேரம் முடியப் போகுது” என்று சத்தத்துடன் சொல்ல, “இந்தக் கல்யாணம் நடக்காது” என்று ரோகிணி சொல்ல, “கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்று உறுதியான சத்தத்துடன் கூறிய தீரஜ், வேக நடையுடன் நக்ஷத்ரா புறம் வந்து அவளின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டுச் சென்றான்.
“ஏய் எதுக்கு என் பேத்தியின் கையைப் பிடிக்குற!” என்று கத்தியபடி சொர்ணவள்ளி பாட்டி அதிர்ச்சியில் உறைய, அனைவருமே ஸ்தம்பித்தபடி புரியாமல் பின்னாடிச் சென்றனர்.
“என் கையை விடுங்க” என்று தீரஜிடம் கத்திய நக்ஷத்ராவை பொருட்படுத்தாமல், மணமேடையில் ஓரத்தில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த அம்மன் கழுத்திலிருந்த தாலி கயிற்றை எடுத்தவனின் இரும்பு பிடியிலிருந்து இம்மி அளவு நகரமுடியாது நக்ஷத்ரா திணறிக்கொண்டு இருக்கும் போதே அவள் கண்ணிமைக்கும் பொழுதில், அவளின் கழுத்தில் அவளின் கண்களை நேர்மையாய் எதிர்நோக்கி மூன்று முடிச்சுகளிட்டு நக்ஷத்ராவை தன் மனைவியாக்கினான் தீரஜ் நரசிம்ம ரெட்டி.
‘என்ன செய்கிறான் இவன்?’ என்று நக்ஷத்ரா திகைத்துக் கொண்டிருக்கும் போதே மூன்று முடிச்சுகளைப் போட்டுவிட்டு அவளை தீர்க்கமாக பார்க்கும் தீரஜை அடுத்த நொடியே அழுகையுடன் கதறியபடி அவனை அடிக்க கையோங்கிய நக்ஷத்ராவின் மென்பஞ்சு கரம் தீரஜின் இரும்புப் பிடிக்குள்.
வீட்டிலிருந்து வெளி புறம் வந்த அனைவரும் அதிர்ச்சியில் அங்கேயே அசைவற்று உறைந்து நிற்க,
சொர்ணவள்ளி பாட்டியோ, “ஐய்யயோ!” என்று கத்தியபடி மயங்கி விழ, அவரைத் தாங்கிய கூட்டம் பாதி கலைந்து அவரைத் தூக்கியபடி உள்ளேச் சென்றது. அதில் அருணாச்சலத்தின் குடும்பமும் அடங்கும்.
“அந்தப் பொண்ணு மேல தப்பு இல்லை போல அது உண்மையா குழந்தையைத் தேடி தான் போயிருக்கும் போல! அந்தப் பொண்ணு பாருங்க எப்படி கதறது! அழுகுது! நாகைய்யா அண்ணன் பேசும்போது அவரைத் தடுத்து நம்ம அந்தப் பொண்ணுக்காக பேசியிருக்கணும், நரசிம்மா தான் முரட்டுத்தனமா இழுத்துட்டு வந்து விருப்பமில்லாமல் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டான். பாவம் அந்தப் பொண்ணு! எப்படி கதறுது பாருங்க!” என்று தீரஜின் சொந்தங்கள், அங்கு நடந்திருக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டே சுரேகா மற்றும் ரோகிணி முன்னிலையில் அவர்களுக்குள் கிசுகிசுத்தனர். இப்படி இவர்களின் மூளை செயல்படவேண்டும் என்று மனதில் வைத்து தானே, தீரஜ் நக்ஷத்ராவை விருப்பமின்றி அதிரடியாக திருமணம் செய்து முழு அவப்பெயரையும் அவன் வாங்கிக் கொண்டிருக்கிறான்.
“நான் என் வாழ்க்கையில முதல் தடவை அடி வாங்கினது அன்னிக்கு ரோட்ல உன்கிட்ட தான். அது தான் கடைசி தடவையும் நக்ஷத்ரா” என்று உறுதியுடன் கூறியவன், அவளின் கரத்தை விடுவித்தான். அவனைப் பார்த்து அழுகையுடன் கதறியபடி தீயென முறைத்தவள், “நீயெல்லாம் என்ன மனுஷன்… ஒருத்தங்க மேல காதல் வந்துடுச்சுனா அது அவங்க உயிருள்ள வரை அவங்களை மட்டும் தான் நேசிக்கும்… அவங்களை மட்டும் தான் வாழ்க்கை துணையா மனசுல ஏத்துக்கும்… இப்படி என்கிட்ட சொல்ல சொல்லி வசனம் எல்லாம் பேசுன” என்று அவனின் சட்டையைப் பற்றி கோபத்தில் கத்தியபடி உலுக்கினாள் நக்ஷத்ரா.
அவளின் கைகளில் தன் கரம் கொண்டு கோர்த்து தன் சட்டையிலிருந்து பிரித்தவன், அவளின் கரத்தில் ஒரு உரிமையான அழுத்தத்தைக் கொடுத்து, “நான் என் உயிரை விட அதிகமா காதலிச்ச உன்னைத் தான் இப்போ கல்யாணம் பண்ணிருக்கேன்… உன் இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தால், ஏன் அவள் தேவலோகத்து அழகியாவே இருந்திருந்தாலும் கூட அவளைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன்” என்று அவன் அவளின் விழிகளை நோக்கி வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்ச் சொல்ல, இங்கு பெண்ணவளோ அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் மயங்கியே விட்டாள், அவளை கீழே விடாமல் பாதுகாத்த அவளின் கணவன் அவளைத் தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வேகமாக உள்ளே விரைந்தான்.