அருணாச்சலம் இருக்கைக்கு வரும் போதே ஆர்டர் செய்த உணவெல்லாம் வந்திருக்க, எல்லார் முகத்திலும் கலவரம் ஆச்சியைத் தவிர.
“இட்லியா இது… கல்லு மாதிரி இருக்கு” என்று பொய்யை அள்ளி வீசியபடி, அந்த மெதுவான இட்லியை ருசித்தபடி தள்ளினார் சொர்ணவள்ளி.
“அவர் இதை பெருசாக்க மாட்டேனு சொல்லிட்டாரு… நீங்க எல்லாரும் சாப்பிடுங்க! சீக்கிரம் கிளம்பணும்” என்று பொதுப்படையாகக் கூறினார் அருணாச்சலம்.
இவர்கள் சாப்பிட்டு முடித்து பில் கேட்கும் போது, “சார் குடுத்துட்டாரு” என்று வெயிட்டர் கூற, அனைவரும் கிளம்பினார்கள்.
அப்போது ஏறியது போலவே இப்போதும் அதே போல் அமர, கார் அரக்கு வேலியை நோக்கி பயணம் செய்தது.
நேரம் கடந்தாலும், எல்லாரின் மனதிலும் ஒரு சோர்வு நிலை. நக்ஷத்ராவின் மனதிலோ சோர்வைத் தாண்டி பயம் தான் அதிகமாக இருந்தது. ஆனால் இவள் என்ன தான் மனதில் பயந்தாலும் தீரஜிடம் இவளுக்கே தெரியாமல் இவளின் கோப உணர்வு தான் வெளிப்படுகிறது.
‘ஆச்சி பேசினது ரொம்பவே தப்பு… அதுக்கே இப்படி திருப்பி பதிலடி கொடுத்திருக்கார். அப்போ நான் அடிச்ச அடிக்கு… இன்னிக்கு வேற நான் அவர் முகம் பார்த்து ஒரு ஹலோ கூட சொல்லலையே… நம்மளே தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்குறோமா?’ என்று மனதில் படபடத்துக்கொண்டாள் நக்ஷத்ரா.
ஆனால் எதை பற்றியும் சிந்தியாது ராஜாவின் இசையோடு இசையாக மனதிற்குள் பாடலை அசைபோட்டபடி தீரஜ் ஓட்டிக்கொண்டிருக்க, வண்டி பௌடராவைத் தாண்டி அரக்கு வேலிக்குள் நுழையும் போதே சில்லென்ற காற்று இனிமையாக வீசத் தொடங்கியது. இயற்கை காற்று முகத்தில் படும் போது அதுவரை அனைவருக்கும் இருந்த சோர்வெல்லாம் மறைந்து முகத்தில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
***
“ரோகிணி, மனோஜ் கல்யாணம் அன்னிக்கு தான் திவ்யா மாப்பிள்ளையோட பெரியம்மா பொண்ணு கல்யாணம். அதனால வர முடியாதாம். சென்னை வரும் போது பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாள். சொன்னவ அத்தோட விடாமல், முறைப்படியான கல்யாணம்னாலும் எப்படியாவது வந்திருப்பேன். சொல்ல சொல்ல கேட்காமல் தமிழ் பொண்ணை எடுத்திருக்கீங்க. அதுக்காக எல்லாம் ஹைதராபாத்ல இருந்து பதினெட்டு மணி நேரம் டிராவல் பண்ணி அரக்கு வேலி வர முடியாதுனு மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசிட்டாள். இத்தனைக்கும் அவள் மாமனார் மாமியாரே நான் பத்திரிக்கை வைக்கும் போது நான் நினைச்ச அளவுக்கு முகத்தைக் காட்டலை. இவள் ஏன் இப்படி இருக்காளோ! அந்தப் பொண்ணு ரூபா வையும் அவள் அக்காவையும் பாரு… அவ்வளவு செல்வச் செழிப்பு இருந்தும் தலைக்கணம் இல்லாமல் பந்தா இல்லாமல் பண்பா இருக்குங்க. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு கல்யாணம் அன்னிக்கு மேடையிலேயே வரலட்சுமி அம்பாளை பூஜை பண்ணனும்னு வேண்டியிருக்கேன்” என்று தனியாக இருக்கும் பொழுது தன் தங்கையிடம் மகளைப் பற்றி புலம்பி தீர்க்கும் போது தான் கார் வரும் அரவம் கேட்க, “சிம்மா வந்துட்டான் போல” என்று வராண்டாவில் நின்றுக் கொண்டு இருந்தவர் தங்கையுடன் வேகமாக வெளியேச் சென்றார்.
பெண் வீட்டாரை சந்தோஷத்துடன் வரவேற்ற மனோஜின் குடும்பம், அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவர்களின் சொந்தபந்தத்திற்கு அறிமுகப்படுத்த, தீரஜின் மீது கடும் கோபத்தில் இருந்த சொர்ணவள்ளி பாட்டியோ மகனின் கூற்றையெல்லாம் ஓரங்கட்டி, ‘வடகறியாவது, தொடைகறியாவது போடா’ என்னும் ரேன்ஜிற்கு உதறி தள்ளினார்.
‘இதுங்க குடும்பத்தை தவிர யாருக்கும் தமிழ் தெரியாது தானே!’ என்று அசட்டு தைரியத்தில், “ஓ… இந்த வீட்டுக்கு தான் இவ்வளவு அலப்பறையா! பூர்வீக வீடுனு சொன்னீங்க. பூசணிக்காய் மாதிரி பெருசா இருக்கும்னு பார்த்தால் புடலங்காய் மாதிரி சிறுத்து கிடக்குதே” என்று எளக்காரமாக பேச, தீரஜ் வீட்டினர் அனைவருக்குமே முகம் சுருங்கியது. தீரஜின் சொந்தக்காரர்கள் சிலருக்கு தமிழ் ஓரளவுக்கு தெரியும். சிலருக்கு நன்றாகவே தெரியும். இதைக் கேட்ட பின் அவர்கள் தங்களுக்குள் பேசியபடி கிசுகிசுத்தனர்.
“அம்மா” என்று அருணாச்சலம் பதற்றம் அடையும் போதே, “பூர்விக வீடுனு தானே சொன்னோம்… பெரிய பூர்வீக வீடுனு நாங்க சொல்லலையே… இந்த வீடு உங்களுக்கு பெருசா தெரியலைனு சொன்னாலும் கூட சின்னதா தெரியுதுனா… அதைப் பார்க்குற உங்கள் கண்ணுல தான் ஏதோ பிரச்சனை… ஐ மீன் பார்வை குறைபாடு பாட்டி” என்று அழுத்தத்துடன் தீரஜ் கூறிவிட்டு நகர, மனோஜோ பாட்டியின் காதில், “அம்மம்மா, எப்படியாவது கல்யாணம் முடியவரை இந்த பாட்டி எடக்கு மடக்கா ஏதாவது பேசாமல் இருக்கணும்… அம்மா, பெத்தம்மா முகமே மாறிடுச்சு பாருங்க… உங்கள் மகள்கள் ரெண்டு பேரும் ஒரளவு தான் பொறுமையா இருப்பாங்க… ஏதாவது பண்ணுங்க” என்று பேரன் கெஞ்ச,
“ரோகிணி… எல்லாருக்கும் அறிமுகப் படுத்திட்டு அவங்களை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போம்மா. அது கல்யாணம் முடியுற வரைக்கும் பொண்ணு வீட்டுக்காரங்க மாப்பிள்ளை வீட்டுக்குள்ள வரக் கூடாது” என்று கூற, அங்கிருந்த அனைவரும், புரியாமல் பார்த்தனர்.
“பெரியவங்க சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி” என்று அசடு வழிந்தான் மனோஜ்.
ரோகிணி மற்றும் சுரேகாவின் முகத்தில் அதிருப்தியைக் கண்ட சீனிவாசலு நிலைமையை சரி செய்யும் பொருட்டு அனைவருக்கும் பெண் வீட்டாரை அறிமுகப்படுத்தினார். சொர்ணவள்ளி பாட்டி தங்கள் சொந்தத்தை மட்டம் தட்டி பேசியதால் ஏனோ முதல் சந்திப்பிலேயே மாப்பிள்ளை சொந்த பந்தங்களுக்கு பெண் வீட்டைப் பிடிக்காமல் போனது.
“அது என்ன” என்று சொர்ணவள்ளி வாயைத் திறக்க முற்படும் போதே, “அப்போ நம்ம வீட்டுக்குப் போயிடலாமா சம்மந்தி?” என்று அருணாச்சலம் பதற்றத்துடன் கேட்க, அவரின் பதற்றத்திற்கான காரணத்தை உணர்ந்த சீனாவாசலு,
“போலாம் வாங்க” என்று வேகமாக சாவியை எடுத்துக் கொண்டு விரைந்தார்.
ரூபா மற்றும் மீனாட்சிக்கு சொர்ணவள்ளி மீது எவ்வளவு கோபமோ அதே அளவு அருணாச்சலத்தின் மீதும் இருந்தது. அவருக்குமே அன்னையின் வாயை கட்டுப்படுத்த முடியவில்லையே என்கிற கோபம் கலந்த எரிச்சல் மேலோங்கி இருந்தது தான். பொண்ணு வீட்டார் இடத்தை காலி செய்த பின்,
“என்ன பணத்திமிரை காட்டுறாங்களா?”
“மாப்பிள்ளை வீட்டை இப்படி தான் மட்டம் தட்டுவாங்களா?”
“அந்த பாட்டியை பேச விட்டுட்டு உன் சம்மந்தி வீட்டுல வேடிக்கை பார்க்குறாங்களா?
“ஒருவேளை உங்க கிட்ட அந்த பொண்ணுடைய அம்மா அப்பா நல்லவங்க வேசம் போட்டு பாட்டியை பேசவிட்டு நம்ம ஏழ்மைனு மட்டம் தட்டுறாங்களா?” இப்படி சொந்த பந்தங்கள் தெலுங்கில் சலசலக்க, தீரஜின் குடும்பத்திற்கு சற்று அவமானமாக இருந்தது.
“ஒரு பாட்டி… ஒரே ஒரு டயலாக்! இப்போ மொத்த குடும்பத்தையும் கலவரம் ஆக்கிடுச்சு… ஏதாவது பேசி இதுங்க வாயை மூடவைடா!” என்று மனோஜிடம் மெதுவாக முணுமுணுத்தான் வினோத். உண்மையாக மனோஜிற்கு இதை எப்படி கையாள்வது என்றுத் தெரியவில்லை.
அப்போது வேக நடையுடன் வந்த தீரஜ், “மிரண்ட்டா மௌனன்கா உன்டாரா? (எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?)”
“உண்மையா கல்யாணத்துக்கு வாழ்த்த வந்தவங்கனா புரளி பேசக்கூடாது… குழப்பக்கூடாது! இனி இந்த மாதிரி பேசுறவங்களுக்கு நரசிம்ம விலாஸ்ல இடம் இல்லை” என்று தெலுங்கில் தீர்மானமாகக் கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர் சொந்தங்கள் மற்றும் குடும்பத்தினர்.
“ஆமா… நாளையிலிருந்து திருமண சடங்குகள் ஆரம்பம் ஆகுது. தேவையில்லாததை பேசாமல் கல்யாண வேலையையும், பொண்ணு வீட்டையும் கவனிக்குற வேலையைப் பாருங்க” என்று முடித்தார் அம்பிகாவதி பாட்டி.
தீரஜின் சொந்தங்கள் பெரும்பாலும் அவர்களைப் போல் ஏழ்மையுள்ள குடும்பம் தான். அவர்களின் இளைய வாரிசுகளின் படிப்பு செலவிற்காக தீரஜ் அடிக்கடி உதவி செய்துக்கொண்டிருக்கிறான்.அதனால் அவனின் தீர்மான பேச்சின் பின் மறு சத்தம் இல்லை.
ஆனாலும் அவர்களுக்கு தீரஜின் மீது அதிருப்தி தான். அதிலும் தீரஜூடைய மாமா அதாவது அம்பிகாவதியின் அக்கா மகன், நாகைய்யாவிற்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை மனோஜிற்கு கொடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. அவரைப் பொறுத்தவரை, தீரஜ் எட்டாத கனி, அதையும் தாண்டி அவனுடைய ஆளுமையான பேச்சை அவரால் சமாளிக்கமுடியாது. அவர்களின் ஏழ்மையை ஒப்பிட்டு பார்த்தால் மனோஜின் குடும்பம் வசதியுடன் இருந்ததினால் இவ்வாறு நினைத்திருக்க, இப்போது அவரின் ஆசையில் காதல் என்கிற பெயரில் மண்ணை அல்லவா கொட்டி விட்டான் மனோஜ். ‘சமயம் வரும் போது நான் யாருன்னு காட்டுறேன்’ என்று மனதில் வன்மமாக நினைத்தார் நாகைய்யா.
மொத்தம் நான்கு அறைகளைக் கொண்ட அந்த அழகான செந்நிற வீட்டில், ஒரு அறையில் சொர்ணவள்ளி பாட்டி, இன்னொரு அறையில் அருணாச்சலம் மற்றும் மீனாட்சி.
ஒரு அறையில் ரூபா மற்றும் கண்ணம்மா. இன்னொரு அறையில் பிரியாவுடன் நக்ஷத்ரா மற்றும் ஆதிரா.
“உங்க அம்மாவுக்கு ஏன் இப்படி ஒரு கேவலமான புத்தி? அன்னிக்கு தான் நீங்க படிச்சு படிச்சு சொல்லிருக்கீங்க! ஆனால் இன்னிக்கு இப்படி பண்ணிருக்காங்க… உங்க அம்மாவை முன்னாடியே கட்டுப்படுத்தியிருந்தால் இவ்வளவு மிதப்பா இருப்பாங்களா? சாலா கல்யாணத்துல மட்டும் ஏதாவது பிரச்சனை வந்துது நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்று கணவனிடம் ஒரு பக்கம் அலறினார் மீனாட்சி.
இங்கே ரூபாவின் அறையிலோ, “சாலாம்மா இன்னிக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா… நம்மையெல்லாம் கடுப்பேத்துற சொர்ணவள்ளியின் மூக்கையே உடைச்சு அவங்களே அதிரும் அளவுக்கு ஒருத்தர் பதிலடி கொடுத்துட்டாரு” என்று குதித்தாள் கண்ணம்மா.
மனோஜிற்கு மெசேஜ் செய்துக்கொண்டிருந்த ரூபாவின் முகத்திலோ லேசான கலவரம். ஆனாலும் கண்ணம்மா கூறியதை கவனிக்கத் தான் செய்தாள்.
நக்ஷத்ராவின் அறையிலோ, “உன் ஆச்சிக்கு வாயா இல்லை காவாயாடி! நான்லாம் இன்னிக்கு உன் தங்கச்சி கல்யாணத்துல பெரிய பிரச்சனை வந்திடுமோன்னு பயந்துட்டேன்… உன் ஆச்சி வாய்க்கு ஒரு பூட்டு போட்டுடலாமானு தோணுது டி. சப்பா முடியலை… ஆனாலும் உன் ஆச்சிக்கு ஆப்பு வைக்க ஒருத்தன் பிறந்து வந்துட்டான்ல… ஆளு வேற செம ஸ்மார்ட்டா இருக்காரு” என்று பிரியா கூறிக்கொண்டிருக்கும் போதே, “என்ன பெரிய இவரு… அவரால தான் இன்னிக்கு ஆச்சி இப்படி பேசுனாங்க டி… அப்பா அன்னிக்கு சாலா கல்யாணத்துல அவங்களால பிரச்சனை வரக்கூடாதுனு சொன்ன அப்புறம் ஆச்சி அமைதியா தான் இருந்தாங்க இன்னிக்கு காலைல வரைக்கும்… ஆச்சி பேசினதை மனோஜூடைய அண்ணன் ஏர்ப்போர்ட்ல சாதாரணமா விட்டிருக்கலாம்… அவர் அவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டே இருக்கப்போய் தான் ஆச்சி இந்த மாதிரி பண்ணாங்க” என்று கூறியவளுக்கு ஆச்சி பேசிய அனைத்தும் அதிகப்படி என்று தெரியும் தான். ஆனாலும் அவளால் மற்றவர்களைப் போல் தீரஜிற்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை.
“உன் ஆச்சி பேசுறதைப் பார்த்து நீங்க எல்லாரும் வாயில மண் அள்ளிப்போட்டு உட்கார்ந்திருக்கலாம்… அவங்க அராஜகத்தை மரியாதையா ஊசி குத்துற போல தட்டி கேட்க ஒரு ஆம்பிளை வந்துட்டாரு… பிரியா ஹாப்பி அண்ணாச்சி” என்று ஃப்ரெஷ் அப் ஆகச் சென்றாள் பிரியா.