அடுத்த நாள் காலை எல்லாரும் கிளம்பும் தருணமும் வந்தது. நேற்றைய நிகழ்விற்குப் பின் நக்ஷத்ரா அவள் இருக்கும் இடத்தை விட்டு வரவில்லை. தீரஜூம் அவள் பக்கம் செல்லவில்லை.
தீரஜின் காரிலும், டிரைவருடன் ஒரு வாடகைக் காருடனும் அன்று அதிகாலை மூன்று மணிக்கே சென்னை புறப்படுவதாய் இருந்தது.
அச்சம்பவத்திலிருந்து சுரேகா மகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.ஓரிரு முறை தாயிடம் பேச்சுக்கொடுத்தும் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டுச் சென்ற பின், தீரஜும் என்ன தான் செய்யமுடியும்.
அம்பிகாவதி அறிவுறுத்திய பின் சுரேகாவின் பார்வை அவ்வப்போது புது மருமகள் மற்றும் பேத்தியிடம் அவ்வப்போது அக்கறையுடன் சென்றது. அங்கிருந்த அனைவருக்குமே நக்ஷத்ராவின் நிலையெண்ணி மிகவும் பாவமாக இருந்தது. அதே சமயம் அவளிடம் பேசவும் பயமாக இருந்தது. ஆனால் இச்சம்பவத்தின் நாயகனோ, எதுவுமே நடவாதது போல் கிளம்புமுன் நக்ஷத்ராவின் அறைக்குள் வந்து, “அம்மாயிக்கு எல்லாம் எடுத்தாச்சா நக்ஷத்ரா?” என்று கேட்டபடியே, “குட் மார்னிங் அம்மாயி… அப்பா கூட கார்ல வரீங்களா உங்களுக்கு சாப்பிட என்னவெல்லாம் வேணும்?” என்று அவன் புன்னகைத்துக் கொண்டே தலை சாய்த்துக் கேட்டான். அவன் திடீரென வரவும் மனதில் திடுக்கிட்டு பயந்த நக்ஷத்ரா, அவன் பேசுவதைக் கேட்டு கோபமடைந்தாள்.
நக்ஷத்ராவிற்கு தீரஜின் மீது முதலிலிருந்தே ஒரு பயம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இத்தனை நாட்கள் அவனைப் பார்க்கும் போதும், பேசும் போதும் அவளுளிருந்த பயம் கோபமாகத் தான் அதிகமாக பிரதிபலித்தது. அதிலும் அவன் அவளின் கழுத்தில் தாலி கட்டிய நொடியிலிருந்து அவனிடம் கோப பேச்சுக்கள் மட்டுமே தான் பேசிக்கொண்டிருக்கிறாள்.
“என்னது அப்பாவா? முதல்ல நான் இருக்குற ரூம்க்குள்ள” என்று நக்ஷத்ரா கத்த ஆரம்பிக்கும் போதே, அவள் புறம் வேகமாக வந்து அவளின் இதழை தன் கரம் கொண்டு மூடியவன், “நம்ம பொண்ணு முன்னாடி எந்தவொரு பிரச்சனையைப் பத்தியும் பேசாத அது அவளுடைய மனசுல பதிஞ்சு பாதிச்சிடும்… இப்போ மட்டும் இல்லை எப்போவுமே பேசக்கூடாது!” என்று அவளின் கண்களைப் பார்த்து ஆழம் கலந்த அழுத்தத்துடன் கூறிய தீரஜ், அவளின் விழிகளுடன் தன் விழிகளைக் ஊடுருவியபடி காதலுடன் நோக்கினான். பின் என்ன நினைத்தானோ அவளிடமிருந்து வேகமாக விலகி, “நம்ம தனியா இருக்கும் போது பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் சென்றுவிட்டான்.
‘ஓ இவன் கூட நான் தனியா வேற பேசணுமோ! முந்தா நாள் வரைக்கும் யாரோ ஒருத்தன், நேத்து என் விருப்பமில்லாமல் தாலியைக் கட்டி, நான் இருக்குற ரூமுக்குள்ள பெர்மிஷன் கேட்காமல் உள்ளே வந்து, இன்னிக்கு என் பொண்ணுடைய அப்பான்னு என்கிட்ட தைரியமா உரிமையா சொல்றான்! எவ்வளவு திமிர் இவனுக்கு? ஏதோ பெரிய பிளானோட தான் என் கழுத்துல தாலி கட்டியிருக்கான்… இவனை’ என்று மனதில் கத்தியவள், தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள்.
ஒரு பக்கம் தன் வாழ்க்கை நிலை மனதளவில் தலைசுற்றிக்கொண்டிருக்க, அடுத்து தான் என்ன செய்யப்போகிறோம் என்று கூட நக்ஷத்ராவிற்குத் தெரியவில்லை.
எங்கே தன் காதலை காமம், கவர்ச்சியென நக்ஷத்ரா தவறாக வரையறுத்து விடுவாளோ என்று தன்னவள் மேலுள்ள காதலை, பாசத்தை, அக்கறையை, ஆசையைக் கூட அவளிடம் காட்ட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தான் தீரஜ். காதல் கொண்டவனின் மனதிற்கு அவள் தன் அருகில் மனைவியாய் இருப்பதே வானை விட உயர்ந்த ஆனந்தமாயிருக்க காலம் முழுதும் அவளுக்கு காவலனாக, ஆதிராவிற்கு அப்பாவாக மட்டுமே இருக்க நினைத்தான்.
அன்று விபத்தில் ஆதிராவைப் பார்த்த அந்நொடியே, அக்குழந்தை மீது இவனுக்கு ஏனோ இனம் புரியாத பாசம் பிறந்தேவிட்டது. ஆதிராவிற்கு தந்தையென்னும் உறவின் வாசமே கிடைக்கவில்லை என்றறிந்த அந்நொடி, அவளுக்கு தந்தையாகும் பாக்கியம் தனக்கில்லாமல் போனதே என்று அவன் தவித்த தவிப்புகளுக்கு அவனின் இதயமே சாட்சி. அதன் பின் ஆதிராவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் இயற்கையாகவே பூத்த அந்த தந்தை உணர்வு அவ்வளவு புனிதமானது. தாய்மையின் மகத்துவம், மகிமை, உணர்விற்கு எவ்வளவு மதிப்புகள் இருக்கிறதோ அதே அளவு தந்தைக்கான உணர்வுகளுக்கும் இருக்கிறது.
நக்ஷத்ராவை தன் மனைவியாக்கிய பின்பு, ஆதிராவை உரிமையுடன் தூக்கி தன்னை அப்பாவென்று அறிமுகப்படுத்தி நெகிழ்ந்த அவனின் இதயத்தைப் பெண்ணவள் புரிந்துக்கொள்வாளா?
அவன் முதல் முதலாக நக்ஷத்ராவைப் பார்த்த போது, அவளின் உடல்மொழியிலிருந்த அந்த துறுதுறு நடவடிக்கை, முகத்தில் மின்னிய அவளின் சந்தோஷ அலைகள், மாசற்ற புன்னகை இதெல்லாம் மறைந்து இப்போது இருளடைந்து, சிரிப்பைத் துறந்து மகளுக்காக மட்டும் வாழ்ந்துக்கொண்டிருப்பவளை அவனின் கண்களில் முதல் நாள் விழுந்த தீரஜின் பொம்மாயியைப் போல் ஆக்கவேண்டும் என்று தான் அவனின் உடம்பில் ஒவ்வொரு நாடி நரம்பும் துடித்துக்கொண்டிருக்கிறது.
தீரஜூடன் வினோத், சீனிவாசலு மற்றும் ரோகிணி காரில் வர, இன்னொரு காரில் மற்றவர்கள் வந்தனர். நக்ஷத்ரா மற்றும் ஆதிராவை வேறு காரில் அனுப்ப உடன்பாடு இல்லாமல் தான் இருந்தான் தீரஜ். அவளை தன்னுடன் வரவைத்திருக்க அவனால் முடியும். ஆனாலும் அவளுக்கான நேரத்தை தனிமையை கொடுக்க நினைத்தான். அவனின் மனம், எண்ணம் முழுதும் தன் மனைவியிடமும், மகளிடமும் தான் இருந்தது.
இங்கு காரிலோ, சுரேகா பேசாது அமர்ந்திருக்க, நக்ஷத்ராவிற்கும் அதே நிலை தான். அம்பிகாவதி மற்றும் மனோஜின் சத்தம் அவ்வப்போது கேட்க, ஆதிராவிற்கு சுற்றி புது மனிதர்கள் இருப்பது சற்று வித்தியாசமாய் இருந்தது என்றால் நக்ஷத்ராவிற்கோ மூச்சே முட்டிக் கொண்டு வந்தது.
‘கண் இமைக்குற நொடியில என் வாழ்க்கையையே மாத்திட்டான்… படுபாவி! ஏன் என் வாழ்க்கையில வந்தான்? ஏன் எனக்கு தாலி கட்டுனான்? திடீர்னு காதலிக்குறேன்னு சொல்றான்? இதுல அப்பா இதை ஏத்துக்க சொல்றாரு! நான் எல்லாருக்கும் அவ்வளவு ஈஸியா… டேக் இட் ஃபார் கிராண்ட்டடா போயிட்டேனா… முதல்ல ஒரு பொம்பளை பொறுக்கியை கட்டி வைச்சாங்க. அடுத்து இந்தப் பொ…பொறுக்கியா தான் இருப்பான் இவன், இவன் கூட என் வாழ்க்கையாம்! என் இதயத்துக்கு உணர்விழந்து இருக்குன்றதுக்காக எல்லாரும் அதை வெட்டி கூறு போடுறாங்க’ என்று மனதில் ஆதங்கத்துடன் கத்தியவளுக்கு, ஓவென்று சத்தமிட்டு கத்தி கதறி அழ வேண்டுமென மனது அடித்தது. சுற்றி நிறைய பேர் இருந்தும் தான் அனாதை போல் ஆகியது போன்ற உணர்வு பெண்ணவளுக்கு மேலோங்கி நின்றது.
***
“ஏங்க உமையாக்கு ஒரு ஃபோனாவது பண்ணுவோமே?” என்று கணவனின் கால்மாட்டில் சுருண்டு அமர்ந்திருந்த மீனாட்சி அழுதபடி கெஞ்ச,
“நம்ம மாப்பிள்ளை வீட்டுக்கே போய் பேசுவோம் மீனாட்சி. அதுவரைக்கும் பொறுத்துக்கோ… உமையா கூட சாலா இருக்கா இல்லையா அவள் பாத்துப்பாள்” என்று கரகரத்த குரலுடன் முன் நெற்றியின் மீது கைவைத்திருந்தார் அருணாச்சலம்.
“எடுபட்ட பைய… ஆளு பார்க்க முரடன் கணக்கா இருக்கும் போதே நினைச்சேன். இன்னொருத்தன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்டு தாலி கட்டினவன் கையை உடைச்சு கண்டம் துண்டமா போட்டால் தான் என் ஆத்திரம் அடங்கும். ஆனால் இங்கன குடும்பமா இது! அவனை அடிச்சி பொண்ணை கூட்டிட்டு வராமல், அப்பனும் ஆத்தாளும் வெக்கமே இல்லாமல் புருஷன் கூட சேர்த்து வைக்குறதை விட்டுட்டு தெரு நாய்க்கு பொண்ணை கூட்டிக்கொடுத்துட்டு வந்திருக்காங்க… முதுகெலும்பு இல்லாத கோழைப் பையன்! எனக்கு பயந்து நான் மயக்கத்துல இருக்கும் போது அனுப்பிட்டான். உமையாவை அவ புருஷன் கார்த்திகேயன் கூட சேர்த்து வைச்ச அப்புறம் தான் என் கட்டை வேகும்” என்று கண்ட மேனிக்கு கத்திக்கொண்டிருந்தார்.
இந்நேரம் தீரஜ் இருந்திருந்தால் சொர்ணவள்ளி பாட்டி இப்படி வாய் கூசாமல் அசிங்கமாக பேசியிருப்பாரா? கண்டிப்பாக மாட்டார், அவன் கொடுக்கும் சுருக்கென்று தைத்த நெத்தியடி பதில்களில் வாயடைத்து போனவர் தானே!
தற்போது இந்த வீட்டிலிருக்கும் அனைவரும் செத்த பாம்புகளென்று நன்கு அறிந்தே மேலும் மேலும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்குகிறார் பாட்டி.
அவர் பேசி முடித்ததைக் கேட்ட அடுத்த நொடி தன் காதுகளை வேகமாக மூடிய அருணாச்சலம் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த, மீனாட்சியோ வேகமாக எழுந்து, தன் சேலையை இடுப்பில் சொருகி தன் கண்களைத் துடைத்தபடி, “உங்க அம்மாவுக்கு எவ்வளவு எகத்தாளம் இருந்தால் இவ்வளவு கீழ்த்தரமா பேசுவாங்க. இவங்களும் ஒரு பொம்பளை தானே! ச்ச… இனியும் நான் கூனிக் குருகி இருக்கமாட்டேன்” என்று சினத்துடன் கத்தியவரின் கையைப் பற்றிய கணவர், “இப்போ நம்ம பதில் பேசுனா, அவங்க அதிகமா தான் பேசுவாங்க. அவங்க திருந்தவே மாட்டாங்க மீனாட்சி… அவங்க புலம்பலை கண்டுக்காமல் விட்டால் தான் நம்ம மன நிம்மதிக்கு நல்லது விடு” என்று கண்களில் கண்ணீருடன் கணிவாகக் கூறிய கணவரைப் பார்க்க மனைவிக்கே பாவமாகத் தான் இருந்தது. முதல் முறையாக அன்னையின் தவறுக்கு பூசி மொழுகாமல் கண் கலங்கி தன் முன்னே துவண்டிருக்கும் கணவனின் பேச்சில் தளர்ந்து அமைதியாகி விட்டார் மீனாட்சி.
ஈன்றெடுத்த தாய் நாக்கில் விஷ நஞ்சுடன் ஏசி, ஏறி மிதிக்கும் போது அந்த மகனின் மனநிலை எப்படி இருக்கும்? அருணாச்சலத்தின் நிலை மிகவும் பரிதாபம் தான்.
கிச்சனில் பாத்திரங்களை விலக்கிக் கொண்டிருந்த கண்ணம்மாவோ, ரூபாவிற்கு நிலவரத்தைச் சொல்ல பஞ்சில்லாமல் விஷயத்தைக் கேட்க, சொர்ணவள்ளி பேசி முடித்ததைக் கேட்டு கோபமேறி பாத்திரத்தைச் சிங்க்கில் வேகமாக போட்டு, “இதுக்கு வாயா இல்லை காவாயா! பைத்தியக்கார கிழவி! கூமுட்டை கிழவி… வாய்ல பச்சை பச்சையா வருது… உமையாம்மா வாழ்க்கையை சிதைச்ச அந்த பொறுக்கி நாய் கிட்ட சேர்த்து வைக்கணும்னு சொல்லுது… இதெல்லாம் ஒரு ஆச்சியா? தூதூதூ…” என்று திரும்பியபடி கோபமாக முணுமுணுத்துவிட்டு பாத்திரத்தை வேகமாகக் கழுவியவள், “தீரஜ் தம்பி கண் பார்வைக்கே கப்பு ஜிப்புனு பயந்து வாயை மூடிட்டு, இங்கே என்ன மாதிரி அலப்பறையைக் கூட்டுது… புத்தி கெட்ட கிழவி, உம் மவர் தான் உன் ரகளையை பார்க்க பயந்து உன்னை மயக்கத்துல தூக்கிட்டு வந்தாரு… அப்போ கூட எங்க உமையாம்மாவுடைய மாப்பிள்ளை… அவங்க முழிக்கட்டும் நான் பேசிக்குறேன்னு நெஞ்சை நிமிர்த்தி தான் சொன்னாரு… ஐயா தான் பாவம் பயந்தே வந்துட்டாரு… பேத்தி வாழ்க்கையை நினைச்சு சந்தோஷப்படாமல் பேசுற பேச்சைப் பாரு… ஐய்யோ எனக்கு வர ஆத்திரத்துக்கு” என்று பக்கத்தில் கண்களைத் துழாவியபடி கத்தியை எடுத்த கண்ணம்மா, “அசிங்கமா பேசுற நாக்கை அறுத்து கூறு போடணும்” என்று முணுமுணுத்தபடியே வசைப்பாடிவிட்டு, கத்தியை வைத்தவள், “இதை திட்டி திட்டி எனக்கே பிபி, ஹார்ட் அட்டாக் வந்து மேலே போயிடுவேன் போல… முடியலை” என்று சலிப்புடன் வேலையைத் தொடர்ந்தாள்.