ஒரு விபத்தினால் தன் பொம்மாயியை இழந்து இவ்வளவு வருடங்கள் அவளின் மீதுள்ள காதலால் பைத்தியம் போல் தேடியவன்…
இன்னொரு விபத்தினால் அவளை அவளின் அம்மாயியுடன் கண்டு, அவள் மணமானவளென அறிந்து உயிருடன் இறந்துவிட்டவன், இன்று ஒரு விபத்தான சம்பவத்தின் விபரீதத்தால் அவனின் பொம்மாயியின் தன்மானத்திற்கும், அவளின் பெயர் களங்கப்பட்டதை போக்குவதற்கும் தன் பெயரை பணையம் வைத்து அவளை இந்த அவப்பெயரிலிருந்து மீட்க, அவளின் குடும்பத்தின் கதறலுக்கும், ரூபா மற்றும் மனோஜின் திருமணத்தை நடத்தி வைப்பதற்கும் விரும்பாத சூழ்நிலையில், விருப்பமுள்ள தன் காதலை மணந்து மீண்டும் உயிர் ஜணித்து விட்டான் தீரஜ் நரசிம்ம ரெட்டி…
இத்தகைய சூழ்நிலையிலா தன்னவளை கரம் பிடிக்க நினைத்தான் தீரஜ்? கண்டிப்பாக கிடையாது… அன்று கையில் குழந்தையுடன் நக்ஷத்ராவைக் கண்ட அந்நொடி நடைப்பிணமானவன், திருமணம் என்னும் வார்த்தையை அவன் அகராதியிலிருந்து அழித்து, இனி வாழ்நாள் முழுதும் நக்ஷத்ராவை மனதில் சுமந்தபடி குடும்பத்திற்காக வாழவேண்டும் என்று தான் முடிவெடுத்தான்.
அவள் விவாகரத்தான விஷயத்தை உணர்ந்த அந்நொடியே அவனின் பொம்மாயியிற்கும், அவளி(னி)ன் அம்மாயியிற்கும் வாழ்க்கை முழுதும் காவலனாய் இருந்துவிடலாம் என்று தான் நினைத்தான்.
ஒருவேளை இரண்டாம் வாழ்க்கைக்கு நக்ஷத்ரா ஒத்துக்கொள்ளும் தருணம் நேர்ந்தால், இந்த பிரபஞ்சமே தன்னை எதிர்த்தாலும்… இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஆண்களும் நக்ஷத்ராவைத் திருமணம் செய்ய எண்ணினால் கூட… அவர்களைத் தகர்த்தெறிந்து, சண்டையிட்டு, வென்று அவளின் கரம் பிடிப்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தான் தீரஜ்… காரணம், அவளின் மீதுள்ள அவனுக்கான அந்த அளவில்லாத காதல், வரையறுக்கமுடியாத காதல், ஆத்மார்த்தமான காதல், உண்மையான காதல், வெறித்தனமான காதல் என்று கூட சொல்லலாம்.
***
அன்று இரவு நக்ஷத்ரா கண் விழிக்கும் போது, அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த ரூபாவைக் கண்டு மெதுவாக எழுந்தவளுக்கு தலை பாரமாக இருந்தது. நக்ஷத்ரா மற்றும் பாட்டி இருவருமே மயங்கி விழுந்த பின், உடனடியாக தனக்கு தெரிந்த மருத்துவரை வரவழைத்து பார்க்க வைத்தான் தீரஜ். அந்த பரபரப்பில் கல்யாணத்தைப் பற்றி யாருமே பேசவில்லை.
அன்று என்ன நடந்தது என்று ஒவ்வொன்றாக யோசிக்கும் முன்னரே, “சாலா, உன் கல்யாணம் என்னால” என்று தலையைப் பிடித்தபடி அழ ஆரம்பித்த நக்ஷத்ராவின் கையைப் பிடித்த ரூபா, “என் கல்யாணம் மனோஜூடன் நடந்திருச்சு உமி” என்று தடுமாற்றத்துடன் கூறி முடிக்க, அப்போது தான் நிமிர்ந்து தங்கையின் கழுத்தில் தொங்கும் அந்தப் பொன் தாலியைப் பார்த்த நக்ஷத்ரா பெருமூச்சுவிட்டு எதேர்ச்சையாக தன் நெஞ்சில் கைவைக்க, தீரஜ் அவளுக்கு கட்டிய தாலி அவளின் கரத்தில் பட்டு நடந்த எல்லாமே ஞாபகத்தில் வந்து இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“தீரஜ் அத்தான், எங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் நடத்தி வைச்சிட்டாரு… உன்னை தப்பா பேசுன எல்லாரும் உன் மேல தப்பில்லனு என்கிட்ட மன்னிப்பு கேட்டு கிளம்பிட்டாங்க உமி” என்று தடுமாறினாள் ரூபா.
“ஓ… உன் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் கிளம்பிட்டாங்க. அப்போ நானும் நம்ம குடும்பமும் கூட கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு. ஆதிரா எங்கே?” என்று இறுக்கம் கலந்த நக்கலுடன் கேட்டாள் நக்ஷத்ரா.
“அது… அப்பா இதை உன்கிட்ட தரச் சொன்னாங்க உமி” என்று திக்கித் திணறி ஒரு லெட்டரை காட்டிய ரூபாவை, அழுத்தத்துடன் பார்த்த நக்ஷத்ரா அதை பதற்றத்துடன் வாங்கி படித்தாள்.
“உமையா… என்னால இந்த சூழ்நிலைய கையாள முடியலை, சமாளிக்கவும் தெரியலை! என் முதல் பொண்ணு கல்யாண வாழ்க்கை மூழ்கி போச்சு… ரெண்டாவது பொண்ணு வாழ்க்கை அவள் நினைச்சது போல இருக்கட்டும்னு இருந்த என்னால, என்னைப் பெத்த அம்மாவை சமாளிக்க முடியலை… இன்னிக்கு இப்படியெல்லாம் பிரச்சனை நடந்து, உன் கழுத்துல தாலி ஏறும்னு நாங்க யாருமே எதிர்ப்பார்க்கலை… மனசை திடம் ஆக்கிக்கோ உமையா… இனி உன் வாழ்க்கை தீரஜ் நரசிம்ம ரெட்டியுடன் தான்! தாலின்றது விளையாட்டு விசயம் இல்லை. அந்த வீட்டு பாட்டியம்மா, நீ இனி தீரஜின் மனைவினு என்கிட்ட நம்பிக்கை கொடுத்து சொல்லும் போது… எனக்குமே ஒரு புது நம்பிக்கை வருது, உனக்கு ரெண்டாவது வாழ்க்கை நிரந்தரமான வாழ்க்கையா அமைஞ்சிடுச்சுனு. என் அம்மானால நீயும், சாலாவும் பட்ட கஷ்டமெல்லாம் போதும்! அவங்க சின்ன குழந்தையா இருந்திருந்தால் அடிச்சு திருத்திருக்கலாம். எல்லாரையும் விட பெரியவங்களா இருந்து சில்லறைத்தனமா அவங்க பேசும் போது பெத்த மகனான எனக்கு தான் செருப்பால அடிச்சது போல இருக்கு. ஆனாலும் அவங்க என் அம்மா அவங்களை விடமுடியாது, ஆனால் நீயும் சாலாவும் அதை விட எனக்கு முக்கியம், அவங்க கண் விழிக்கும் போது அங்க இருந்தால் ரகளை பண்ணிடுவாங்க, அதனால அவங்க சாதாரண அதிர்ச்சி மயக்கத்துல இருக்கும் போதே கிளம்புறோம் உமையா… உன்னால இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதுனு எனக்குத் தெரியும்… சம்மந்தி வீட்டுல கோபமா தான் இருக்காங்க, அவங்க கோபத்துல நியாயம் இருக்கு. நீ இந்த வாழ்க்கையை ஃபேஸ் பண்ணித் தான் ஆகணும் உமையாம்மா. உன் கூட சாலா இருக்கா. அந்த தைரியத்துல உன் புகுந்த வீட்டுல விட்டுட்டு கிளம்பியிருக்கேன்” என்று அவர் எழுதி முடித்ததைப் படிக்கும் போதே, கண்களில் கண்ணீர் ஆறாய் கொட்டியது.
“உங்கள் எல்லார் வாழ்க்கையும் முக்கியம்… ஆனால் என் உணர்வுகள், என் வாழ்க்கை அதைப் பத்தி யாருக்குமே ஒரு துளி அக்கறை இல்லைல” என்று ரூபாவைப் பார்த்து கதறிய நக்ஷத்ரா தன் கைகள் கொண்டு முகத்தை மூடியபடி குலுங்கி அழ, ரூபாவுமே அழுது விட்டாள் தான்.என்ன பேசினாலும் இப்போது தப்பாகிவிடும் என்று நினைத்து அமைதி காத்தாள்.
தன் கண்களை அழுந்த துடைத்த நக்ஷத்ரா, “ஆதிரா எங்கே?” என்று கேட்க, “தீரஜ் அத்தான் கூட… அந்த ரூம்ல” என்று கை காட்டிய ரூபாவை தீயென முறைத்த நக்ஷத்ரா, “அவன்கிட்ட ஏன் தனியா என் பொண்ணை விட்ட?” என்று கோபத்துடன் பதறியவளின் மனதில், ‘பயம், பயம், பயம் மட்டுமே!’
அவள் இரண்டாம் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருப்பதிற்கு ஆண்கள், வாழ்க்கை மீது வெறுப்பு இருந்தாலும் அதனுடனான இன்னொரு முக்கியமான காரணம் இப்போதைய சமுதாய நிலவரம்!!! உதாரணத்திற்கு, ஒரு பெண் ஒரு பெண் குழந்தையுடன் இரண்டாவதாக ஒருவனை மணந்தால், அவன் தன் மகளை அவனின் மகளாக ஏற்பானா? அதையும் தாண்டி அந்த அவன் தன் பெண் பிள்ளையிடம் தவறான முறையில் நடந்துக் கொள்வானோ? என்கிற பயம் நக்ஷத்ராவிற்கு மட்டுமில்லை அவள் நிலையில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கிருக்கும் பயம் தான்.
ஏற்கனவே தீரஜ் தன் மகளிடம் பேசுவது கொஞ்சுவது நக்ஷத்ராவிற்குப் பிடிக்கவில்லை அதற்கு முக்கியமான காரணமும் இது தான். எவனோ ஒரு ஆண் தன் மகளை கொஞ்சுவது ஒரு அம்மாவாக அவளுக்கு பயத்தைத் தான் கொடுக்கிறது. ரூபாவின் கல்யாணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். இந்த கல்யாணத்திற்கு பிறகு இவன் முகத்தில் முழிக்கக் கூடாது என்று மனதளவில் தீர்மானமாக இருந்தவளுக்கு இந்நொடி அவனுடனே நிரந்தரமான வாழ்வு என்று சொல்லும் போது முள்ளின் மீது படுத்து நிம்மதியாக உறங்கு என்று சொல்வது போன்ற உணர்வு தான்.
குட் டச், பேட் டச் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். தீரஜ் தன் மகளிடம் இருப்பது முழுக்க முழுக்க குட் டச் என்று நக்ஷத்ரா அவள் கண்களால் பரிசோதித்து நிம்மதி அடைந்திருந்தாலும், அவளைப் பொறுத்த வரை தன் பிள்ளைக்கு ஆண்கள் வாசமே வேண்டாம்… குட் டச் எதற்கு? டச்சே வேண்டாம்! என்று நக்ஷத்ராவின் மனநிலை இருக்க அங்கே தீரஜ் அவனின் அம்மாயி மேல் வைத்திருக்கும் உன்னதமான தந்தைப் பாசம் இவளின் கண்களுக்கு தெரியவா போகிறது?
நக்ஷத்ராவைச் சொல்லியும் தப்பில்லை. சொந்த அண்ணனே தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, பெற்ற தந்தையே மகளை வன்புணர்வு செய்யும் இத்தகைய சமுதாயத்தில் நக்ஷத்ரா நிலையில் இருக்கும் பெண்கள் இப்படித் தானே சிந்திப்பார்கள்! அதற்கு ஏற்றாற் போல் அவளுடைய கடந்த காலமும் இருட்டாக, கசப்பாக அமைய, தீரஜின் மீது துளியளவும் நம்பிக்கை இருக்காது தான்.
வேகமாகக் கதவைத் திறந்த நக்ஷத்ரா ரூபா கூறிய அறைக்குள் செல்ல, அங்கு கட்டிலில் பெட்ஷீட்களால் ஆதிராவின் காது முதல் கால் வரை பாதுகாப்பாக மூடப்பட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அதே அறையிலுள்ள மேஜையில் தன் லேப்டாப்பில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தான் தீரஜ். அவனைக் கோபமாகப் பார்த்த நக்ஷத்ரா, “நீ எதுக்கு என் பொண்ணைத் தூக்குற” என்று மரியாதையில்லாமல் கத்த அவளின் உள்நோக்கத்தை உணராத தீரஜ், “அவள் இனி எனக்கும் பொண்ணு” என்று அழுத்தமாகக் கூறியவனின் கண்களில் வேகமாக வந்த ரூபா தென்பட, “அவளை சாப்பிட வை ரூபா” என்று தன் லேப்டாப்பை மூடிவிட்டு வெளியில் சென்றான்.
***
தற்போதைய நிலைமையில் சென்னை கிளம்புவது தான் சரி என்று அடுத்த நாள் காலையில் கிளம்பவேண்டுமென தீரஜ் தீர்மானமாக கூறிவிட்டதால், மனோஜ் மற்றும் வினோத்தை பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வர தீரஜ் அனுப்பியிருந்தான்.
தன் பொம்மாயியை அசிங்கமாகப்பேசிய நாகைய்யாவை கொலை செய்யும் அளவிற்கு வெறியுடன் நோக்கிய தீரஜ் அவரிடம் சீற, வினோத்தும் மனோஜூம் தான் அவனை கஷ்டப்பட்டு தடுத்து நாகைய்யாவை கையோடு வெளியே அனுப்பினார்கள். அவனின் இந்த ஆக்ரோஷம் எல்லாமே சொந்தங்களுக்கு புதிராய் இருந்தது. அந்தப் புதிருக்கும் அவர்களே ஒரு கேவலமான விடையைக் கண்டுபிடித்திருந்தனர்.
“அவளை கேள்வி கேட்ட இன்னும் சிலர் யாரு?” என்று வினோத்திடம் ஆவேசமாகக் கேட்டான் தீரஜ். “அவங்க எல்லாரும் உனக்கு பயந்து அப்போவே ஊரப்பாக்க ஜருகண்டி ஆயிட்டாங்க டா விடு” என்று நண்பனை அமைதிப்படுத்தினான் வினோத்.
சொந்தங்களும் இந்த அசௌகரியமான சூழ்நிலையில் மேலுமிருந்து பெரிதுபடுத்தாமல், தீரஜின் முரட்டுத்தனமான, அதிரடியான மற்றும் வலுக்கட்டாயமான நடவடிக்கை எல்லாத்தையும் கண்ட அதிருப்தியை சுரேகாவிடம் சொல்லி, “அந்தப் பொண்ணு ரொம்ப பாவம்… பணக்கார பொண்ணா அப்பாவியா இருக்குனு பிளான் பண்ணி நரசிம்மா இப்படி பண்ணிட்டான் போல! இனி அவன் கையில நாங்க ஒத்த பைசா வாங்க மாட்டோம்” என்று திடீர் தன்மான சிங்கங்களாக இஷ்டத்துக்கு பேசிவிட்டுச் சென்றனர்.
இதே நரசிம்மாவிடம் இத்தனை நாட்கள் பணஉதவி வாங்கியவர்கள் இப்போது வாய் கூசாமல் அவன் செய்த நடவடிக்கையை வைத்து கோட்டின் மேல் ரோட்டை போட்டு விட்டு பணத்துக்காக வலுக்கட்டாயமாக ஒரு அப்பாவிப் பெண்ணை மணந்துவிட்டான் என்று முத்திரை குத்திவிட்டுச் சென்றனர்.
தீரஜ் நக்ஷத்ராவை காதலிக்கிறான் என்று இந்த கூட்டத்திற்கு தெரியாது தான். அதற்காக இவர்களாக அவனை இவ்வாறு பேசலாமா? அப்போது ஆராயாமல் நக்ஷத்ராவை தப்பாக நினைத்தனர். இப்போது யோசிக்காமல் தீரஜைப் பற்றி அவனின் தாயிடம் மட்டும் தப்பாக பேசிவிட்டுச் சென்றுவிட்டனர். ஏனெனில் தீரஜின் முன் இப்படியெல்லாம் பேச அவர்களுக்குத் தான் தைரியம் இல்லையே!
“அக்கா, சாப்பிடு” என்று ரோகிணி தமக்கையிடம் ரொம்ப நேரமாக போராடிக்கொண்டு இருந்தார்.
“முடியலை ரோகிணி. இத்தனை வருஷம் சிம்மா பொறுப்பானவன், சிம்மா அப்படி இப்படினு எல்லாரும் சொல்லி கேட்டு எத்தனை அருமையா புள்ளைய வளர்த்தேனு சந்தோஷமா இருந்தேன். இன்னிக்கு ஏற்கனவே கல்யாணமான பொண்ணை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி, எல்லாரும் என்கிட்ட என்ன சொல்லிட்டு போறாங்க பாரு” என்று குலுங்கி குலுங்கி அழுதார்.
“ஏமிரா சுரேகா! சாப்பிடு பங்காரம். நடந்தது நடந்து போச்சு… இது தான் விதினு கடவுள் எழுதி வைச்சிருக்காரு போல” என்று அழுதுக்கொண்டிருந்த மகளின் தோள்களை ஆதரவாக வருடினார் அன்னை.
“அதுக்காக கல்யாணம் ஆன பொண்ணை” என்று சுரேகா ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கும் போதே,
“அப்போ அது தான் உன் பெரிய பிரச்சனை போல… இங்கப்பாரு சுரேகா, நா மணவாடு பண்ணினது சரி தப்பு அதெல்லாம் நான் இப்போ பேசலை… ஆனால் அவன் ஒன்னும் இன்னொருத்தன் பொண்டாட்டியைக் கல்யாணம் பண்ணலை, முறையா விவாகரத்து வாங்கி தனியா வாழுற பொண்ணைத் தான் திருமணம் பண்ணிருக்கான். காதல் தோல்வினு கல்யாணமே வேண்டாம்னு தீர்மானமா இருந்த பையன் இப்போ கல்யாணம் பண்ணிருக்கான்னு சந்தோஷப்படு. சிம்மா ஒரு முடிவெடுத்தால் அதுல எவ்வளவு தீர்மானமா இருப்பான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். கல்யாணமே வேண்டாம்னு இருந்தவன் இந்தப் புள்ளையைக் கல்யாணம் பண்ணிருக்கான்னா ஏதோ தகுந்த காரணம் இருக்கு… இன்னிக்கு தான் இந்த கழிசடைங்களோட (அவர்களின் சொந்தம்) சுயரூபம் தெரிஞ்சுது. இனி ஒருத்தர் கிட்டயும் நம்ம பேசக்கூடாது ஆமாம்” என்று முடித்தவர், மகளின் குழப்பமான முகத்தைப் பார்த்து…
“உன் மகனுக்கு இருபது வயசு இருக்கும் போது உன் புருஷன் தவறிட்டார். அப்போவே நீ எவ்வளவு கஷ்டப்பட்ட! இதுவே சிம்மாக்கு சின்ன வயசா இருக்கும் போது அவர் தவறியிருந்தால் கண்டிப்பா உனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுத்திருப்பேன்… ஒரு பொண்ணுக்கு ஆண் துணை தேவை சுரேகா, அது இருபது வயசானாலும் சரி அறுபது வயசானாலும் சரி… உடல் தேவைக்கு சொல்லலை மன தேவைக்கு சொல்றேன். இப்போ கூட உனக்கு ஓகேனா சொல்லு ஒரு மாப்பிள்ளை பார்த்திடுவோம்” என்று சிரித்தபடி கூறிய அம்பிகாவதியை அதிர்ச்சியுடன் பார்த்தனர் மகள்கள்.
“அம்மா… என்ன வார்த்தை பேசுறீங்க?” என்று சுரேகா கத்த, “அடிப்போடி… உன்னை யாரும் வலுக்கட்டாயப்படுத்தி இப்போ கல்யாணம் பண்ண சொல்லலை. நீ பண்ணினாலும் தப்பு இல்லைனு தான் நான் சொல்றேன். நிதர்சனத்தை புரிஞ்சிக்கிட்டு அந்த அழகுப் பொண்ணையும், அந்த குட்டிமாவையும் சந்தோஷமா உன் மருமகளா, பேத்தியா ஏத்துக்கோ” என்று உறுதியுடன் முடித்தார்.