மதுரையின் மையப் பகுதியில் கம்பீரமாக அமைந்திருந்த ஒரு நூற்றாண்டு பழமையும், தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளை உருவாக்கிய பெருமையும், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்று எனப் பெயரும் பெற்றிருந்த அந்த கல்லூரி, அன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது.
அந்த கல்லூரியில் விழாக் கொண்டாட்டத்திற்கென்றே பரந்து விரிந்திருந்தது வெட்டவெளி மைதானம்.
அந்த பின்காலைப் பொழுதிலும் மார்கழி மாதச் சூரியன் அத்தனைக் கடுமை காட்டவில்லை. மேகமூட்டம் போல சூழ்ந்திருந்த பனி மூட்டத்தை மெல்ல களைய முயன்று கொண்டிருந்தான் சூரியன். ஆனாலும், காற்றில் இன்னமும் குளிர் மிச்சமிருந்தது.
அங்கிருந்த இளம் கல்லூரி பறவைகளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவேப்படவில்லை.
ஆண்கள் அனைவரும் வேட்டி, சட்டையில் இருக்க, பெண்கள் பட்டாம்பூச்சிகள் போல பட்டுப் புடவையில் பல வண்ணங்களில் கண்ணைப் பறித்தார்கள்.
அன்று அவர்கள் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்.
கரும்பு கட்டுக்களுக்கு முட்டுக் கொடுத்தபடி நின்றிருந்த மாணவர்களின் பார்வை, மஞ்சள் கொத்தை பொங்கல் பானையில் சுற்றி பொங்கலிட்டு கொண்டிருந்த மாணவிகளின் மேல் ரசனையாய் படிந்திருந்தது.
மாணவிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து நின்று சமத்துவ பொங்கல் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
பானையில் வளைக் கரம் ஒன்று அரிசியிட்ட சிறிது நேரத்தில் வெண்மேகமாய் பொங்கி வர, “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என்ற மகிழ்ச்சி குரல்கள் திசையெங்கும் பரவியது.
அந்நேரம் மெல்லிய பட்டுக் கரை வைத்த வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டியது முரட்டுக் கரம் ஒன்று. முதல் மாடியின் அறையில் இருந்து வெளிவந்து, படிகளில் தடதடத்து இறங்கி கீழே வந்தான்.
அந்தக் கூட்டத்துடன் இணைந்து, “பொங்கலோ பொங்கல்” என்று அவன் கூவிய நேரம்,
“இருக்கட்டும், இருக்கட்டும். அதை இங்கேயே நின்னு சொல்லு” என்று சிரிப்புடன் அவனை மேலே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினான் சாமுவேல்.
“ஏன்டா?”
“இன்னைக்கு பொங்கல் மட்டும் பொங்கட்டும்டா. உன்னைப் பார்த்தா பிள்ளைங்க பொங்கிடுவாங்க” நண்பனின் வேட்டி சட்டையை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி சொன்னவனின் வார்த்தைகளில் இருந்த எரிச்சல், நிச்சயமாய் குரலில் இல்லை. சாமுவேல் கேலியாக சொல்ல, இவன் கோபித்து கேள்வியாக புருவங்களை நெரித்தான்.
“ச்சே, தப்பா பேசாத சாம். நம்மகிட்ட படிக்கிற பிள்ளைங்க. நாமளே இப்படி பேசலாமா?”
“ஐயோ, ஆரம்பிக்காதடா. ஆளை விடு. என்னால இன்னைக்கு உன் லெக்சர் கேட்க முடியாது. நான் பொங்கல் கொண்டாட வந்திருக்கேன்” அசட்டு தோள் குலுக்களுடன் சாமுவேல் சொல்ல, அவனை முறைத்து திரும்பினான்.
சரியாக அந்நேரம் பார்த்து, “புகழேந்தி சார். புகழ் சார், ஹாய்..” என்று மாணவிகள் கூட்டம் ஆர்ப்பரிக்க, சாமுவேல் சத்தமாக சிரித்தான்.
“போங்க புகழ் சார். உங்களைத்தான் கூப்பிடுறாங்க.” என்று அவன் கிண்டலாக சொல்ல, புகழேந்தி நண்பனின் கைப் பிடித்து இழுத்து முன்னேறினான்.
மாணவர்களின் நடுவே அவர்களும் சென்று நின்றனர்.
“மார்னிங் சார், ஹாய் சார்” சந்தோஷ குரல்கள் சரமாரியாக வந்து விழ, பதில் சொல்லியபடி புன்னகைத்தார்கள்.
அவர்களும் சேர்ந்து கரண்டிப் பிடிக்க அது வரலாற்றில் இடம் பெற உடனடியாக புகைப்படமாகியது. சிறிது நேரத்தில் பொங்கல் தயாராகி, அனைவருக்கும் விநியோகிக்கப்பட, குழுக்களாக நின்று உண்ணத் தொடங்கினார்கள்.
அத்தனையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது கல்லூரி நிர்வாகம்.
“நான் பொங்கலுக்கு ஊருக்கு போகலன்னா என் பொண்டாட்டி பொங்கிடுவா புகழ் சார். கரும்புக்கு பதிலா என்னை மென்னு சக்கையா துப்பிடுவா. அவளுக்கு வளைகாப்பு முடிஞ்சு அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பினது. இன்னும் நான் ஒரு தடவைக் கூட போய் எட்டிப் பார்க்கல. இந்த லீவுக்கும் போகலைன்னா, அவ்வளவுதான். உன்னை விட மோசமா லெக்சர் அடிச்சு, என் காதில் இரத்தம் வர வைப்பா.” தலையை உலுக்கி கொண்டு அவன் சொல்ல,
“உனக்கு என் லெக்சர் மோசமா இருக்கா சாம்?” என்றவன், ஒற்றை விரல் நுனியில் வேட்டியை உயர்த்திப் பிடிக்க, “டேய் மச்சான். வேட்டியை கீழ விடுடா. சுத்தி ஸ்டூடண்ட்ஸ் நிக்குறாங்க” சாமுவேல் நமுட்டு சிரிப்புடன் சொல்ல, புகழேந்தி அசரவில்லை.
உதட்டில் நெளிந்த புன்னகையுடன் அப்படியே நின்றான்.
“புகழ் அங்கப் பாரு” சாம் கண் காட்ட, திரும்பியவர்களின் கண்களில் விழுந்தது அந்தக் காட்சி.
மாணவ, மாணவிகள் சிலர் கூட்டமாய் நின்றிருக்க, மாணவி ஒருத்தியின் இடையில் இடக்கரம் பதித்து, வலக்கரத்தில் பொங்கலை எடுத்து அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் மாணவன் ஒருவன்.
மாணவி முகத்தில் சற்றே அசௌகரியம் தெரிய, புகழேந்தி அவர்களை நோக்கி நடந்தான்.
“ப்ச், புகழ். நமக்கு எதுக்கு வம்பு? கண்டுக்காம விடு” அவன் கைப் பிடித்து தடுத்தான் சாமுவேல்.
“நாம சொன்னா அப்படியே கேட்டு கிழிச்சுடுவாங்க. நீ வேற, சும்மா இருடா புகழ்.”
“அவங்க கேட்கிறாங்க, கேட்கலை. அதெல்லாம் முக்கியமில்லை. அவங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நம்ம கடமை சாம். எல்லாம் சின்னப் பசங்க. இது படிக்கிற வயசு.”
“போடா, படிக்கிற வயசா? அவங்ககிட்ட கேளு. லவ் பண்ற வயசுன்னு சொல்லுவாங்க. எங்களுக்கு பிடிச்சுருக்கு. நாங்க லவ் பண்றோம். உங்களுக்கு என்ன வந்ததுன்னு கேட்பாங்க? காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ணிப்போம். உங்க வேலையை பார்த்திட்டு போங்கன்னு சொல்வானுங்க. ஏற்கனவே பட்டது போதாதா? பேசாம இருடா புகழ்”
சாமுவேலையும், அவனது எச்சரிக்கையையும் இடக்கரத்தில் தள்ளி விட்டு முன்னேறினான் புகழேந்தி.
சாமுவேல் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. கல்லூரி நிர்வாகம் எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதை தங்கள் காதலால் உடைத்தெறிந்தார்கள் சில மாணவர்கள்.
படிப்பு, வேலை, லட்சியம், சாதனைகள் அதன் பின் வாழ்க்கை என கனவுகளோடு படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் சிலர் காதலில் சிக்குண்டு சீரழிந்து போவதை வருடா வருடம் அவர்களும் பார்த்துக் கொண்டே தானிருக்கிறார்கள். அதிசயமாக வெகு சிலர் அந்த காதலை தூண்டுக் கோலாக கொண்டு வேலையில், வாழ்க்கையில் சாதித்து, காதலை கைப் பிடித்ததும் உண்டு.
ஆனாலும், மாணவர்கள் மத்தியில் நிகழும் இந்த ஈர்ப்பு, எதிர்ப்பாலின கவர்ச்சி இதெல்லாம் மிக இயல்பான விஷயம். இதை சரியாக கடந்து வர வேண்டும் என ஓவ்வொரு ஆண்டும் தவறாமல் பாடத்தோடு பாடமாக எடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதைக் கேட்டு நடப்பதும், குழியில் விழுவதும் அவரவர் விருப்பம். அவ்வளவுதான்.
“கிஷோர்” என்று புகழேந்தி அழைக்க, கையை விலக்கி பதறி திரும்பினான் அந்த மாணவன். அந்த மாணவியின் முகத்தில் லேசான பதட்டமும், படபடப்பும், ஆசுவாசமும் சேர்ந்து வெளிப்பட, கிஷோரை அமைதியாக பார்த்தான் புகழேந்தி.
“சார். இல்ல சார். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நான் ப்ரெண்ட்லியா தான் லயாகிட்ட பேசிட்டு இருந்தேன்” கிஷோர் அவனை நேராக பார்த்துச் சொன்னான்.
புகழேந்தி கண்களைச் சுழற்றினான். வேட்டி சட்டையில், சேலையில் அவர்களின் வயதை மீறிய முதிர்ச்சி தெரிந்தது. ஆனால், அவர்களின் பயந்த பார்வையில் இன்னமும் இவர்கள் மாணவர்கள் தான் என்பதை தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் புகழேந்தி.
“ப்ரெண்ட்ஸ். இல்லையா? ம்ம், ரைட்” என்று விட்டு அவன் நகர, அதுவரை நடப்பதை பார்த்து கொண்டிருந்த அவனோடு பணிபுரியும் சக ஆசிரியர் பார்கவி அவனை நோக்கி வந்தார்.
“புகழ் சார். நான் கிஷோரை ஆல்ரெடி ரெண்டு டைம் வார்ன் பண்ணிட்டேன். அதுக்கு மேல என்ன பண்ணனு தெரியல. அந்தப் பொண்ணு லயா, என்ன கேட்டாலும் வாயை திறக்க மாட்டேங்கறா. அப்புறம் நாம எப்படி ஹெல்ப் பண்றது. நாம நம்ம வேலையை மட்டும் பார்த்திட்டு, கண்டுக்காம போய்டணும் போல. இதைப் பத்தி மேனேஜ்மென்ட் கிட்டயும் கொண்டு போக முடியாது. இவங்க பேரன்ட்ஸ்கிட்டயும் சொல்ல முடியாது. பெரிய பிரச்சனையில் போய் முடியும். சரியான எரிச்சல் பிடிச்ச வேலை நம்மது”
“அதையும் மீறி ஏதாவது பண்ணா நம்ம தலையை தான் முதல்ல உருட்டுவாங்க. கண்டுக்காம விடுடா புகழ். எல்லாம் பட்டுத் திருந்தட்டும்” சாமுவேல் மீண்டும் எச்சரிக்க, ஏதோ யோசனையுடன் தலையசைத்தான் புகழேந்தி.
மாலை அவனை சந்திக்க வந்து நின்றான் கிஷோர்.
எம். புகழேந்தி, உதவிப் பேராசிரியர்.
சற்றே எரிச்சலுடன் அதைப் படித்து நின்றான் கிஷோர்.
அவனது எரிச்சலுக்கு நெருப்பு மூட்டாமல், மிதமான எச்சரிக்கையுடன் அவனை அனுப்பி வைத்தான் புகழேந்தி.
மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு மனதில் முணுமுணுவென்று கோபம் புகைந்துக் கொண்டேயிருந்தது.
பொதுவாய் ஒரு கோபப் புகைச்சல்.
“உனக்கு இந்த லவ் பஞ்சாயத்து எல்லாம் போதும். முதல்ல நீ கல்யாணம் பண்ணி செட்டிலாகு புகழ்.” மாலை சாமுவேல் அவனுக்கு அறிவுரை தந்து அனுப்பியிருந்தான்.
சமீபமாக வீட்டிலும் அதே நச்சரிப்பு தான்.
வண்டியின் வேகத்தைக் குறைத்து, வீட்டின் முன் நிறுத்தி, இறங்கி உள்ளே சென்றான் அவன்.
அம்மா, அப்பத்தா இருவரும் ஹாலில் அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“வாய்யா ராசா. காலேஜ்ல பொங்கல் நல்லா பொங்குச்சா?” பேரனை பார்த்ததும் விசாரித்தார் வடிவுக்கரசி.
“நல்லா பொங்க வச்சுட்டாங்க அப்பத்தா” கடுப்புடன் சொல்லியபடி அவரின் காலடியில் சென்று அமர்ந்தான்.
“அதையேன் இம்புட்டு கடுப்பா சொல்றவன்?” என்று அவர் ராகம் இழுத்துக் கேட்க, அவரின் தொடையில் தலை வைத்து கண்களை மூடினான் புகழேந்தி.
“இன்னைக்கு என்ன நடந்துச்சு காலேஜ்ல? உன்கிட்ட எவன் ஒரண்டை இழுத்தது?” அப்பத்தா கேட்க, அவனிடம் இருந்து பதிலே வரவில்லை.
“உங்க அப்புச்சி மாதியே வந்திருக்க. சும்மாவே இருக்கறதில்ல.” அவரின் புலம்பலில் பெருமை தானிருந்தது.
சட்டென நிமிர்ந்து அமர்ந்து சிரித்தான் புகழேந்தி.
பேரனை கண்ணெடுக்காமல் தலை முதல் கால் வரை பார்வையால் வருடினார் பெரியவர்.
தமிழக ஆண்களின் சராசரி உயரம், அதற்கேற்ப உடற்கட்டு, நெற்றியில் புரண்ட தலை முடியும், சீராக திருத்தப்பட்ட அடர்ந்த மீசையுமாக மிக கவர்ச்சியான முகத்துடன் இருந்த பேரனை வாஞ்சையுடன் பார்த்தார்.
பேரன் என்றால் அவருக்கு கொள்ளைப் பாசம்.
அவர் கண் மூடும் முன் பேரனின் கல்யாணத்தை பார்த்து விட வேண்டும் என்பது மட்டுமே அவரது தற்போதைய ஆசையாக இருந்தது.
“ராசா” என்று பேரனின் தலைக்கோதி அழைத்தார்.
“இன்னைக்கு நானும், உங்கம்மாவும் மீனாட்சி மிஷன் போயிருந்தோம். உங்க திருமங்கலத்துக்கார சித்தப்பனுக்கு நெஞ்சு வலினு சேர்த்திருக்காங்க அங்க. அதான் ஒரு எட்டு போய் என்னனு பார்த்திட்டு வந்தோம்”
“ம்ம், என்கிட்ட காலைல சொல்லிட்டு தானே போனீங்க. கேட்க மறந்துட்டேன். இப்போ எப்படி இருக்கார்?”
“இருக்கான். பெரிய ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க போல. ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டு வந்தோம் ராசா” அவர் சோகமாக சொல்ல, இருவரும் சட்டென அமைதியானார்கள்.
ராஜலட்சுமி மூவருக்கும் தேநீர் எடுத்து வந்து அமர, அமைதியாய் பருகினார்கள்.
“ஆஸ்பத்திரியில ஒரே கூட்டம் ராசா. திண்டுக்கல், மெட்ராஸ்னு நம்ம சொந்தம் எல்லாம் வந்து எட்டிப் பார்த்துட்டு போனாங்க” அப்பத்தா சொல்ல, புகழேந்தி அவரை கூர்ந்து பார்த்தான். இந்த தூண்டிலுக்கு சிக்கி விடக் கூடாது என்ற கவனம் அவனது பார்வையில் இருக்க, பெரியவர் அவனுக்கும் மேலாக இருந்தார்.
“மெட்ராஸ்காரங்க சொந்தத்தில் பொண்ணு ஒன்னு இருக்காம். எல்லாம் நமக்கு அங்காளி, பங்காளி தான். நம்ம ஊர்க்காரங்க தான். அவங்கப்பனுக்கு அங்க வேலைன்னு அப்படியே தங்கிட்டாங்க போல.”
புகழேந்தி அவரை கைக் கட்டிப் பார்க்க,
“நல்ல குடும்பமா தெரியுது தம்பி. நாங்க அங்கருக்கும் போது பொதுவா எங்ககிட்டயும் பேசினாங்க. ரொம்ப தன்மையா பேசுறாங்க. நல்ல குணமான ஆளுகளா தெரியறாங்க. பொண்ணும் அவங்களை போல தானே இருப்பா” இப்போது ராஜலக்ஷ்மி சொல்ல,
“பொண்ணு..” என்று அவன் முடிக்கும் முன்பே முந்திக் கொண்டு பதில் சொன்னார் ராஜலக்ஷ்மி.
“ஒரே பொண்ணாம் தம்பி. காலேஜ் நாலாவது வருஷம் படிக்குதாம்” அவ்வளவு தான், பட்டென அவன் எழுந்து கொள்ள, “அதென்ன படிப்பு ராஜி?” என்று மருகளை விசாரித்தார் வடிவுக்கரசி.
“படிக்கிற பொண்ணை கட்டிக்க சொல்றீங்களா என்னை?” அம்மாவை பார்த்து முணுமுணுத்தவன், அப்பத்தாவை முறைத்து விட்டு படக்கென்று எழுந்து தனதறைக்கு சென்றான்.
“ஏய்யா ராசா. பொறுமையா கேட்டுட்டு போ. பிள்ளை படிப்பு முடிச்சதும் தான் கல்யாணம்” அடைத்த கதவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார் அப்பத்தா.
“சும்மாவே ஆயிரம் நொட்டை சொல்லுவான். இப்போ படிக்கிற பிள்ளைனு உன்னை யாரு வாய் விட சொன்னது?” மருமகளை முறைத்துக் கொண்டிருந்தார் அவர்.
அறைக்குள் நுழைந்ததும் நேராக குளிக்க சென்றான் புகழேந்தி. குளித்து உடை மாற்றி அவன் வெளியில் வர, முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு பேரனை பார்த்தார் வடிவுக்கரசி.
“ஏன் ராசா இப்படி கல்யாணத்தை தட்டிக் கழிச்சுட்டே இருக்க? உனக்கு 28 வயசாச்சு. உன் வயசுல உங்கப்பனுக்கு..” என்று நீட்டி முழக்கியவரை கை நீட்டி தடுத்தவன்,
“படிச்சு வேலைக்கு போற பொண்ணா பார்க்கச் சொன்னா, பச்ச பிள்ளையா தேடி பிடிச்சு கொண்டு வாங்க. என்ன? அப்படியே நம்மளை கூண்டோட தூக்கி உள்ள வைக்கட்டும்” அவன் சொல்லவும் வாயில் அடித்துக் கொண்டார் வடிவுக்கரசி.
“பேச்சை பாரு.” என்று நொடித்து கொண்டார்.
“அப்புறம் உன் வயசுக்கு தகுந்தாப்ல பொண்ணு பார்க்க வேணாமா? உன்னை விட நாலு வயசு சின்ன பொண்ணா இருந்தா தான் சரியா வரும். அவக வீட்ல கல்யாணத்துக்கு பார்த்தா நாம என்ன பண்ண? நீ ஃபோட்டோ பார்க்காமயே இப்படி ஏதாவது சொல்லி கழிச்சு விட்டுட்டே இரு. ஆமா…” என்று இழுத்தவர்,
“உன் கல்யாணத்தை கண் குளிர பார்க்காமயே நான் போய் சேர போறேன். அப்புறம் என் கட்டை எப்படி வேக..” அவர் புலம்ப,
“இந்தா, அப்பத்தா நிறுத்து” புகழேந்தி கடுப்புடன் கத்த, ராஜலக்ஷ்மி கையில் இருந்த புகைப்படம் வடிவுக்கரசி கைக்கு மாறியிருந்தது. அவர் அதை பேரனின் கையில் திணித்து சிரித்தார்.