மனைவியின் எதிர்வினையை பார்த்து புகழேந்தி அதிர்ந்து சிரிக்க, பெரியவர்களின் பார்வை மீண்டும் அவன் மேல் விழுந்து கனிந்து, நிறைந்தது.
“நிஜமாவா புகழ் சார்? ச்சே, ச்சே இருக்காது. நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க” அவளே கேள்வியும், பதிலும் சொல்லிக் கொள்ள, அவன் உதடுகளில் உறைந்தது புன்னகை.
“என்ன சிரிக்கறீங்க? அப்போ ஆமான்னு சொல்றீங்களா? அதாவது லவ் பண்ணியிருக்கீங்க?” அபிநயா கேட்க, “நான் ஒன்னும் சொல்லல போ” என்று சலித்தபடி எழுந்து அறைக்குச் சென்றான் புகழேந்தி.
சிற்றுண்டி தட்டுகள், தேநீர் கோப்பைகள் இரண்டையும் ஓடிப் போய் அடுப்படியில் போட்டு விட்டு தங்களின் அறைக்குள் நுழைந்தாள் அபிநயா.
புகழேந்தி மேஜை முன் அமர்ந்திருக்க, மூச்சு வாங்க அவன் முன்னே சென்று நின்றாள். லேசாக மேஜையில் சாய்ந்து கைக் கட்டிக் கொண்டு கணவனைப் பார்த்தாள்.
“காலேஜ்ல பயங்கர ஸ்ட்ரிக்ட் நீங்க. வீட்லயும் ரூல்ஸ் ரத்தினம். இதுல நீங்க லவ் பண்ணேன் சொன்னா, உலகம் நம்புதோ இல்லையோ நான் நம்ப மாட்டேன்” சத்தியமாய் அவள் குரலில் இளக்காரம் இல்லை. ஆனால், அந்த வார்த்தைகள் அவனை நிமிர்ந்து அமரச் செய்தது.
“காலேஜ்ல ஏன் இவ்வளவு கண்டிப்புன்னு காரணம் கேட்டா, ஒரு மாணவன் தான் ஒரு வீட்டின், நாட்டின் எதிர்காலம். ஒரு நல்ல மாணவனால நாளைக்கு சிறந்த சமுதாயம் உருவாகும். அப்படி அவனை உருவாக்க வேண்டியது ஒரு ஆசிரியனின் கடமை” என்றவன், “அப்போ நான் எல்லாம் அன்புக்கு தகுதி இல்லாதவன் சொல்றியா?” என்று தீவிரமாக கேட்க,
“அச்சோ, நான் எப்போ அப்படி சொன்னேன் புகழ் சார்? நீங்க லவ் பண்ணியிருந்தா நிச்சயம் அவங்களை கல்யாணம் பண்ணியிருப்பீங்க. அவ்வளவு ஈசியா அவங்களை பிரிந்திருக்க மாட்டீங்க. அந்த அர்த்தத்தில் சொன்னேன். இப்போ உங்கது லவ் மேரேஜ் இல்ல. அப்போ நீங்க இதுவரை லவ் பண்ணல. சரியா?” என்று அவள் உறுதியாக சொல்ல, அவன் கண்ணடித்து சிரித்தான்.
“ஐயோ, புகழ் சார். என்ன கண்ணடிக்கறீங்க? லவ் பண்ணீங்களா? யார் அவங்க? எப்படி ப்ரேக்அப் ஆச்சு?” படபடவென்று அவள் கேட்க, “சொல்ல முடியாது போ” என்றான் அவன்.
அவன் மேஜையில் இருந்த புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பிக்க, “எப்பப் பாரு இதை கையில் எடுத்துப்பார்” என்று சலித்தாள் அபிநயா. சிரிப்பில் கண்கள் பளபளக்க அவளைப் பார்த்தான் புகழேந்தி.
“எனக்கு மண்டை காயுது. பிளீஸ் ஒழுங்கா பதில் சொல்லுங்க”
“முடியாது போ”
“புகழ் சார், பிளீஸ்”
“எனக்கு வேலையிருக்கு அபி”
“ப்ரோபஸர் பிளீஸ்” அவள் கெஞ்ச சிரிப்பை சிரமப்பட்டு அடக்கினான் அவன்.
“பொண்டாட்டி கேள்விக்கு பதில் சொல்றதை விட உங்களுக்கு என்ன பெரிய வேலை?”
“என்ன தெரியணும் உனக்கு?”
“உங்க லவ் ஸ்டோரி” அவன் கண்களை கூர்ந்து அவள் கேட்க, “சரி, சொல்றேன். கதையை கேளு அபி” என்று அவன் சொன்னதுதான் தாமதம் ஒருவித பதட்டத்துடன் கூடிய ஆவலுடன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தாள் அபிநயா.
“அந்த பொண்ணு எங்க பக்கத்து தெரு தான். நாங்க எல்லோரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். ஒன்னா தான் ஸ்கூல் போவோம்.”
“ஸ்கூல் படிக்கும் போதேவா புகழ் சார்?” அதிர்ச்சியுடன் அவள் கேட்க, உதட்டில் ஒற்றை விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி அவளை மிரட்டினான் அவன்.
“கதை கேட்கணும்னா ஊடால பேசக் கூடாது. அப்புறம் சொல்ல மாட்டேன்”
“அவங்கப்பா பயங்கர டெரர், பசங்க யாரும் அவர் பொண்ணு பின்னாலே சுத்தினா அவருக்குப் பிடிக்காது. அதனாலேயே அவகிட்ட பேச எனக்கு ரொம்ப பயம்”
“அப்புறம் எப்படி பேசினீங்க?”
“ஒரு நாள் அவளே வந்து என்கிட்ட பேசினா..”
“வாவ். என்ன சொன்னாங்க?” அபி சுவாரசியத்துடன் கேட்க முறைத்து பதில் சொன்னான்.
“அவ லவ்வுக்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டா. கடைசியில் அவ லவ்வர் பேரும் புகழேந்தியா இருந்தது தான் காலக்கொடுமை.” அதைக் கேட்டதும் வயிறை பிடித்துக் கொண்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கியிருந்தாள் அபிநயா.
“இதை இதை.. இதை.. நான் எதிர்பார்த்தேன்” சிரிப்பில் சிதறியபடி அவள் சொன்னாள்.
அவனோ சின்சியர் சிகாமணியாக கதையைத் தொடர்ந்தான்.
“அப்புறம் நான் காலேஜ் படிக்கும் போது நிறைய பேர் மேல ஈர்ப்பு, ரசிப்புன்னு லைஃப் விளையாட்டா போச்சு. தென் ஒரு நாள், ஒரு எதிர்பார்க்காத பொழுது, அவ வந்தா.. தென்றலை போல நடந்து எங்க கிளாஸ் ரூம் வந்தா. ஆக்சுவலி வந்தாங்க சொல்லணும்”
“ஏன்?”
“ஏன்னா அவங்க என் லெக்சரர்.” அபியின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, “வாய்ப்பேயில்லை” என்று கத்தினாள்.
“என்ன நம்ப மாட்டேங்கற? சரி, நான் சொல்லல போ”
“அச்சோ புகழ் சார். கோவிக்காதீங்க. மேல சொல்லுங்க, கேட்போம்” கண்களை சுருக்கி அவள் கெஞ்ச, அவளையே கூர்ந்துப் பார்த்தான் அவன்.
“பிளீஸ்” என்றாள்.
“நாங்க ஒரு ஸ்டூடண்ட்டை ராகிங் பண்ணும் போது அவங்ககிட்ட மாட்டிக்கிட்டோம்..”
“ராகிங்? நீங்களா?” மீண்டும் நம்பவியலா அதிர்ச்சியுடன் கேட்டவள், அவன் பார்வையை கவனித்து வாய் மூடினாள்.
“எங்களை கூப்பிட்டு கண்டிச்சு அனுப்பினாங்க. எனக்கு அவங்க மேல ஒரு க்ரஷ். அது அப்படியே லவ்வா வளர்ந்துடுச்சு. அவ ஒரு டான்சர். அவ்வளவு அழகா ஆடுவா” அவ்வளவு நேரம் இருந்த விளையாட்டும், கேலியும் மறைந்து போக, கணவனை கண் எடுக்காமல் பார்த்திருந்தாள் அபிநயா.
அவனும் தன் காதல் கதையில் ஆழ்ந்திருந்தான். அவன் பார்வை இலக்கில்லாமல் எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தது.
“எனக்கும் ஃப்ரீ டைம்ல ஆட சொல்லித் தந்தா. அதுல கொஞ்சம் நெருங்கி வந்தோம். அந்த பழக்கமும், நெருக்கமும் காதலா மாறுச்சு. நான்தான் அவகிட்ட என் காதலை முதல்ல சொன்னேன். கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்” அவன் தீவிரமாக சொல்லிக் கொண்டிருக்க, அபிநயா கண்கள் கலங்க, உதடு கடித்து அழுகையை அடக்கியப்படி அவனைப் பார்த்திருந்தாள்.
“அவளுக்கும் சம்மதம்தான். அவ வீட்ல சம்மதம் வாங்க ஊருக்கு போற வரை எல்லாம் நல்லாதான் போய்ட்டு இருந்தது. ஆனா, ஊருக்கு போனவ திரும்பி வரவேயில்ல. காலேஜ்ல வேலையை விட்டுட்டா சொன்னாங்க. விசாரிச்சா அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சொன்னாங்க. நான் அவளைத் தேடி அவங்க ஊருக்குப் போனேன். கேரளாதான் அவங்க ஊர். இடுக்கில மாங்குளம்னு ஒரு சின்ன கிராமம். அவ்வளவு கஷ்டப்பட்டு தேடி அந்த டீ எஸ்டேட்டுக்கு நடுவுல இருந்த அவங்க வீட்டுக்குப் போனா அவளுக்கு என்னை யாருன்னே தெரியலை அபி. ஆக்சிடென்ட்ல தலையில் அடிப்பட்டு மூளை பாதிப்பால பழசை எல்லாம் மறந்துட்டா. அம்னீஷியா அபி. அவளுக்கு என்னை சுத்தமா தெரியல. மனசு உடைஞ்சு போய் திரும்பி காலேஜ் வந்தேன். அவளை மறக்க முடியாம பல மாசம் கஷ்டப்பட்டு, சில வருஷங்கள் கழிச்சு நார்மல் ஆனேன்.”
“அப்புறம் ஒரு நாள், ஒரு கல்யாண வீட்டு மொட்டை மாடியில் நான் நின்னுட்டு இருக்கும் போது பச்சை பட்டுப் புடவை கட்டி ஒரு பொண்ணு நடந்து வந்தா, பின்னணியில் இவள் யாரோ, வான் விட்டு மண் வந்த நிலவோன்னு கல்யாண வீட்டு மைக் செட்ல அருண் மொழி எல்லாம் பாடினார்.”
கண்கள் கனவில் மூழ்கியிருக்க கதைச் சொல்லிக் கொண்டே போனவன், மெல்லிய சிணுங்கல் சத்தத்தைத் தொடர்ந்து விசும்பல் ஒலியும் கேட்க திரும்பி மனைவியைப் பார்த்தான்.
“அபி, என்னடி அழறியா?” அவன் அதிர்ச்சியுடன் கேட்க, கன்னத்தில் கண்ணீர் கோடாக இறங்கியிருக்க, மூக்கை உறிஞ்சி, உதட்டை பிதுக்கி, கண்ணீரால் தளும்பிய கண்களுடன் அவனைப் பார்த்த அபிநயா, “பொய் கோழி ப்ரோபஸர்” என்று கத்தி கோபத்துடன் அவன் மேல் பாய்ந்தாள்.
“அபி, இங்க பாரு. ஹேய் அபி” அவளைக் கையில் தாங்கியவன் இருக்கையில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருக்க, காலைத் தரையில் அழுத்தமாக ஊன்றினான்.
“அபி, அழ கூடாது. இதுக்கெல்லாமா அழுவாங்க?” அவள் முகத்தில் இருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டு, கண், கன்னம் எல்லாம் துடைத்து விட்டு அவன் அக்கறையாக கேட்க, “அவங்க எப்படி உங்களை மறக்கலாம்? ச்சே ரொம்ப மோசம்.” என்று அழுகையினூடே புலம்பியவள், “நீங்க லவ் பண்ணதை என்கிட்ட மறைச்சுட்டீங்க. உங்களுக்கு என்னை மட்டும்தான் ரொம்ப பிடிக்கும்னு நான் இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தேன். என்னைத் தவிர யாரையும் உங்களால இப்படி.. இப்படி நேசிக்க முடியாதுன்னு நம்புனேன் தெரியுமா?” குழந்தை போல உதடு பிதுக்கி கேள்வி கேட்டாள்.
“அபி..” அவன் அதட்ட,
“என்னை ஏமாத்திட்டீங்க” என்று கத்தி, சத்தம் கூட்டி அழத் தொடங்கினாள்.
“நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன். என்னை லவ் பண்ணியிருக்கீங்களான்னு கேட்டு, உசுப்பேத்தி கதை சொல்ல சொல்லிட்டு இப்படி நீ அழுதா நல்லாவா இருக்கு அபி?” அவன் கேட்க,
“என்ன அதட்டுறீங்க? நியாயமா பார்த்தா, நான் தான் கோபப்படணும்.”
“அப்படியே நான் லவ் பண்ணியிருந்தாலும், அதெல்லாம் பாஸ்ட் இல்லையா அபி?”
“அஹான், பழைய கதையாம் இல்ல? ம்ஹூம், அதெல்லாம் செல்லாது. லவ் பண்ணவங்களை எப்படி மறக்க முடியும். காலத்துக்கும் அவங்க ஞாபகம் இருக்கும் இல்ல?” புதிதாக கண்ணீர் பிறக்க கேட்டாள்.
“அழுமூஞ்சி அபிநயா” என்று அவன் கேலி செய்ய,
“அத்தோட போச்சா? அதுவும் இல்ல. அதுக்கு அப்புறமும் ஒரு பொண்ணை பார்த்து தொபுக்கடீர்னு திரும்பவும் காதல்ல விழுந்திருக்கீங்க? பச்சை பட்டு சேலை, அருண் மொழி பாட்டு இந்த டீட்டெயில் எல்லாம் ரொம்ப முக்கியம் பாருங்க. நான் உங்களை கேட்டேனா?”
“அடி அரட்டை. நீ தானே கேட்ட? இப்போ என்னை குத்தம் சொல்ற?”
“நான் கேட்டேன்தான். அதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கணும்? க்ரஷ், லவ் எல்லாம் இருந்தது அபி. ஆனா, இப்போ உன்னை மட்டும்தான் பிடிக்கும்னு சொல்லாம..” அவள் சொன்ன தினுசில் அவனுக்கு சிரிப்பு வந்து விட, கலகலவென்று நகைத்தான். அதுவரை நிறுத்தியிருந்த அவளின் கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்துக் கொண்டது.
“போங்க, என்கிட்ட பேசாதீங்க. என்னை விடுங்க” அவன் இறுக்கி அணைக்க, அவனை உதறி விட்டு போய் பொத்தென்று படுக்கையில் விழுந்தாள் அபிநயா.
“அபி, சின்ன பிள்ளை மாதிரி பண்ணாத. முதல்ல அழுகையை நிறுத்து” புகழேந்தி படுக்கையில் விழுந்து, மனைவியை அணைத்து சமாதானம் செய்ய, அவனது அணைப்பில் இருந்தபடி திரும்பி அவனை முறைத்தாள் அவள்.
“சரி, இதை மட்டும் சொல்லுங்க. அந்தப் பச்சை சேலை என்ன ஆனாங்க? அவங்களும் உங்களை பிரிஞ்சு போய்ட்டாங்களா?”
“இல்ல.”
“அப்புறம்.. என்னாச்சுன்னு கேட்க கூட பயமா இருக்கு” நன்றாக புரண்டு படுத்து அவன் மார்பில் அடித்தாள்.
சிரிப்புடன் மனைவியின் கையை மடக்கிப் பிடித்து, “அபி” என்று அதட்டினான் புகழேந்தி.
அபிநயா விளையாட்டாக தான் அந்தக் கேள்வியை கேட்டிருந்தாள், அது அவளுக்கு இப்படி வினையாகும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கணவனின் நியதிகளை பற்றி அதிகம் அறியாதவள், அவனது கல்லூரி விரிவுரையாளரையே காதலித்திருப்பான் என்று அந்த கணம் நம்பவே செய்தாள்.
ஒருவித மதில் மேல் பூனை மனநிலையுடன் கணவனின் கடந்த காலத்தை இயல்பாக ஏற்கவும் முடியாமல், கடந்த காலம் தானே என்று ஒதுக்கி தள்ளவும் முடியாமல் தவித்தபடி அவள் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவளை உணர்ந்தவனாக புகழேந்தி மனைவியை இழுத்தணைத்து, “ஏன் அபி இந்த சினிமா பார்க்கிற பழக்கம், கதை படிக்கிற பழக்கம் எல்லாம் உனக்கு இல்லையா?” என்று தீவிரமாக கேட்க, அவன் வசமிருந்த தன் கையை விடுவிக்க முழு மூச்சாய் முயற்சித்து,
“பேசாதீங்க நீங்க” என்று முறைத்தாள் அவள்.
“சரி, அதைப் பத்தி பேசல அபி. நம்மளோடது அரேஞ்ச்டு மேரேஜ் இல்லயா?. வீட்ல கட்டாயப்படுத்தினதினால என்னை, நீ கல்யாணம் பண்ணியோன்னு ஒரு சின்ன உறுத்தல் இருந்தது அபி. ஆனா, இன்னைக்கு அது காணாம போச்சு”
“என்ன காணாம போச்சு? அதெல்லாம் இல்ல. கனவு காணாதீங்க. நான் கோபமா இருக்கேன். என்கிட்ட பேசாதீங்க” கடுப்பாக சொல்லியபடி, அவனை கடிக்க முடியாமல் பல்லைக் கடித்தாள் அபிநயா.
குறுஞ்சிரிப்பில் புகழேந்தி முகம் ஒளிர, மனைவியின் முகம் நோக்கி குனிய, அந்நேரம் பார்த்து அவளின் அலைபேசி இடையூறு செய்தது.
“என்னை விடுங்க” என்று அவனை தள்ளி விட்டு, திரும்பவும் அவனை நெருங்கி அவன் அணிந்திருந்த வெள்ளை பனியனில் முகம் துடைத்துக் கொண்டாள் அபிநயா. அவனது முறைப்பை எல்லாம் அவள் பொருட்படுத்துவதாகவே இல்லை.
அபிநயா அலைபேசியை எடுக்க கார்த்திக் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்று, “ஹாய் கார்த்தி, எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தாள்.
“நான் நல்லாருக்கேன் அண்ணி. நீங்க எப்படியிருக்கீங்க?, புகழ் சார் எப்படியிருக்கார்?” என்று கேட்டவன், “உங்களுக்கு என்ன உடம்பு முடியலையா?” என்று சேர்த்து கேட்க, “இல்லையே. நான் நல்லா தான் இருக்கேன்” என்று சமாளித்தாள் அபிநயா.
“உங்க குரல்ல ஏதோ குறையுது அண்ணி. அதான் கேட்டேன். சரி, இந்த வாரம் நான் வீட்டுக்கு வர்றேன். உங்களுக்கு சென்னையில் இருந்து என்ன வாங்கிட்டு வரட்டும்? என்ன வேணும்னு சொல்லுங்க. அப்படியே அண்ணாகிட்டயும் கேட்டு சொல்லுங்க” என்று கேட்டான்.
“ஊருக்கு வர்றீங்களா சூப்பர்” என்று அபிநயா சொல்ல,
“வெட்டி பய, அவனை ஒழுங்கா வேலைக்கு போக சொல்லு அபி. அது போதும். இப்ப உடனே அவன் ஊருக்கு வரலைன்னு யார் கம்பிளைண்ட் பண்ணா?” அவனுக்கு கேட்க வேண்டும் என்றே கத்திச் சொன்னான் புகழேந்தி. அவன் முகத்தைப் பார்த்தே, தம்பியை வம்பிழுக்கச் சொல்கிறான் என்பது புரிந்தும் அவனை முறைத்தாள் அபிநயா.
“போனை ஸ்பீக்கரில் போடுங்க அண்ணி.” என்று அந்தப் பக்கம் இருந்து கத்திய கார்த்திக், “ஹலோ புகழ் சார். தம்பி மேல உங்களுக்கு தான் பாசம் இல்ல. ஆனா, நம்ம வீட்டின் தாய்க்குலங்கள் எல்லாம் என்னை தேடுறாங்க, தெரியுமா? ஐயா மேல அவ்வளவு அன்பு” என்று பெருமை பீற்றினான் கார்த்திக்.
“போடா டேய்” என்று பதிலுக்கு கத்தினான் புகழேந்தி.
“நீங்க சொல்லுங்க அண்ணி. உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்? புகழ் சார் சார்பா எதுவும் சொல்லாதீங்க. அவருக்கு நான் எதுவும் வாங்கிட்டு வர மாட்டேன்” என்றான் போலி கோபத்துடன்.
“ஓகே அண்ணி. இந்த வீக் எண்ட் வர்றேன். அப்பத்தாகிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன். ஆனாலும், உங்ககிட்டயும் சொல்லி வைக்கிறேன். அயிரை மீன் குழம்பு, நாட்டுக் கோழி ரசம், மட்டன் உப்பு கறி, கோலா உருண்டை இதெல்லாம் மதிய சமையலில் இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க.” என்று அவன் அடுக்கிக் கொண்டே போக, “அது வயிறா இல்ல வேற என்னமுமா டா சோத்து மூட்டை” என்று கேலி செய்தான் புகழேந்தி.
“புகழாதீங்க புகழ் சார்” என்று கிண்டலாக கார்த்திக் சொல்ல, அபிநயா முதல் ஆளாக சிரித்து விட்டாள்.
“ஏன் கார்த்திக், எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்களேன்”
“என்ன அண்ணி?” என்று கார்த்திக் கேட்க, “ஹேய் அபி. அவன் கிட்ட போய் இதையெல்லாம் கேட்குற?” என்று அதட்டி அடக்க முயன்றான் புகழேந்தி.
“உங்க அண்ணா முதல்ல விரும்பின பொண்ணு..” என்று ஆரம்பித்து கணவனின் கண்டிக்கும் கண்களை பார்த்து அமைதியானாள் அபிநயா. ஆனால், கார்த்திக்கிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
அண்ணனை பற்றி பேச அவனுக்கு கசக்குமா என்ன?
“முதல்ல விரும்பின பொண்ணா? ம்ம், எங்கம்மா கொடுத்த போட்டோ பார்த்தே தலை குப்புற விழுந்துட்டார் ப்ரோபஸர். நீங்க அவர் முகத்தை பார்த்திருக்கணுமே. அன்னைக்கு பல்லெல்லாம் தெரியற அளவு சிரிச்சார். அதே பொண்ணை திரும்ப பச்சை பட்டில் நம்ம சொந்தக்கார வீட்டு கல்யாணத்துல பார்த்து…”
“பார்த்து…”
“பார்த்து, வேற என்ன.. கல்யாணம்..” கார்த்திக் சொல்லி முடிக்கும் முன் எட்டி அலைபேசியை மனைவியின் கையில் இருந்து பிடுங்கி, “உன்கிட்ட யாரும் கதை கேட்கல. சென்னையில் இருந்து கிளம்பும் போது சொல்லு, காலையில மாட்டுத்தாவணியில வந்து வெயிட் பண்றேன். உடம்பை பார்த்துக்கோ. பை” என்று படபடவென்று பேசி, மேல கார்த்திக்கை பேச விடாமல் அழைப்பை துண்டித்தான்.