“புகழ் சார், அது என்ன கதை? பிளீஸ் முழுசா சொல்லி முடிங்க. இல்லனா என்னன்னு யோசிச்சே எனக்கு தலைவலி வந்திடும்” அடமாக கேட்டாள் அபிநயா.
அவளை மென்மையாக அணைத்து விடுவித்தான் புகழேந்தி.
“முதல்ல எழுந்து போய் முகம் கழுவிட்டு வா” என்றான். மறுக்காமல் அதைச் செய்தாள் அபிநயா.
முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்து, தலைமுடியை சீராக்கி அவனுக்கு பக்கத்தில் வந்து நின்றாள். அவளின் கைப் பிடித்து இழுத்து போய் அறையின் ஒரு பக்க சுவரை பார்த்தபடி நிற்க வைத்தான் அவன்.
அங்கே அவர்களின் திருமண புகைப்படங்களும், தேனிலவில் எடுத்த புகைப்படங்களும், வேறு சில படங்களும் சட்டமிடப்பட்டு சுவரை அலங்கரித்திருந்தது.
அபிநயா அனுதினமும் பார்க்கும் அந்தப் புகைப்படங்களை அசட்டையாக பார்த்து விட்டு திரும்பி கணவனைப் பார்த்தாள்.
அவளைத் திருப்பி, பின்னிருந்து அணைத்து, அவள் தோளில் தாடையை பதித்து, “அங்க பாரு அபி” என்று கை நீட்டி அவள் காதில் கிசுகிசுத்தான் அவன்.
அந்தப் புகைப்படத்தை பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை.
இரண்டு பக்கமும் வரிசையாக நெடிய அகத்திக் கீரை மரங்கள் அணிவகுத்திருக்க, தரையெங்கும், வெள்ளையும், சிவப்புமாக அகத்திப் பூக்கள் சிதறிக் கிடக்க, காற்றின் வேகத்தில் பச்சை பட்டின் முந்தானை அலைபாய, நடந்து வந்து கொண்டிருந்தாள் அபிநயா. அவளுக்கு நெருக்கமாக அவளை பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்த புகழேந்தி என ஓவியம் போல அத்தனை அழகான புகைப்படம் அது.
அதனோடு கூடவே இருந்த இன்னொரு புகைப்படத்தில் மல்லிகை, பிச்சிப்பூ குத்துச் செடிகளுக்கு நடுவே இருவரும் முகத்தில் புன்னகையின் சாயலுடன் நடந்து வந்த புகைப்படம் கவிதையாய் காட்சி தந்தது.
அந்தப் புகைப்படத்தை கார்த்திக் எடுத்திருந்தான். அவர்களுக்கு சட்டமிட்டு பரிசாக அளித்திருந்தான்.
“ஒரு பொண்ணு ஃபோட்டோ பார்த்து அந்த நிமிஷமே அவளைப் பிடிச்சது அபி. ஒரு நாள் திடீர்னு எதிர்பார்க்காம திரும்பவும் ஒரு கல்யாண வீட்டில் பச்சை பட்டில் அவளைப் பார்த்த அந்த நொடி அவ மேல இனம் புரியா ஈர்ப்பு வந்தது. உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். இந்த நிமிஷம் அவளை அவ்வளவு நேசிக்கிறேன்” கரகரத்த அவன் குரலில் காதல் கொட்டிக் கிடந்தது. அபிநயா அந்த அன்பின் கனத்தில் மனம் தளும்ப பட்டென்று திரும்பி கணவனை அணைத்துக் கொண்டாள்.
“அழுமூஞ்சி அபிநயா” அவன் கிண்டலாக சொல்ல, அவன் தோளில் தலை சாய்த்து, “ஆமா, என்ன இப்போ? போங்க. என்னை நேசிக்கிற அளவு, நீங்க யாரையும் நேசிச்சுருக்க மாட்டீங்க. எனக்கு அது நிச்சயமா தெரியும். அப்படியே இருந்தாலும், அது உங்க கடந்த காலம்னு மனசை தேத்திக்கிட்டு மறக்க டிரை…” அவளை முடிக்க விடாமல் அவளின் உதட்டில் கை வைத்து பேச விடாமல் செய்து சிரிக்கத் தொடங்கினான்.
“புகழ் சார்”
“அபி.. என் அப்புராணி அபிநயா. ஆனாலும், இவ்வளவு அப்பாவியா இருக்காத அபி” என்று அவன் கேலியும், கரிசனமுமாக சொல்ல, “போங்க” என்று அவன் தோளில் அடித்தாள் அவள்.
“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்டேன் ஞாபகம் இருக்கா அபி?”
“என்ன கேட்டீங்க?”
“நீ படம் பார்க்க மாட்டியா?”
“பார்ப்பேனே. நிறைய பார்க்க மாட்டேன். ஆனா, ஓரளவு இப்போ வந்த எல்லா படமும் பார்த்திருக்கேன்.” என்று பொறுப்பாக பதில் சொன்னாள் அபிநயா.
புகழேந்தி சிரிப்புடன், “நீ மலையாள படம் பார்த்திருக்கியா?” என்று கேட்க, அவனை புருவங்கள் சுருக்கி புரியாமல் பார்த்தாள் அவள்.
“என் காதல் கதைன்னு நான் சொன்னது மலையாள படம் பிரேமம் கதை” என்று சொல்லவும், ஒரு கணம் பலமாக அதிர்ந்து பின்னர், “ஃப்ராடு ப்ரோபஸர்” என்று பாய்ந்து அவனை அடிக்க ஆரம்பித்தாள் அபிநயா.
அவள் மார்பில், கரங்களில், தோளில், முகத்தில் என்று சரமாரியாக அவள் அடிக்க, “அபி, வலிக்குது” என்று கத்தினான் அவன்.
“நான் கதையை கேளுன்னு தானே சொன்னேன்? நீ அதையே கவனிக்கல.” என்றவனுக்கு பலமாக ஒரு அடி விழுந்தது.
“முதல்ல வேற ஒரு அம்னீஷியா கதை சொல்லலாம்னு நினைச்சேன். நினைவே இல்லையா நித்யா, இந்துமதி அவங்க நாவல். ஒரு ஃப்ளைட் ஆக்சிடென்ட்ல ஹீரோயின் பழசை எல்லாம் மறந்து, இப்போ டிரீட்மெண்ட் கொடுக்கிற டாக்டரை விரும்புவா. ஆக்சிடென்ட் முன்னாடி அவ வாழ்க்கையில் ஒரு ஆண்…” அபிநயா அதிர்ச்சியுடன் விழிகளை விரிக்க, அந்தக் கதையை முடிக்காமல், “அந்தக் கதையை இன்னொரு நாள் சொல்றேன் அபி. அப்புறம் எனக்கு தெரிஞ்சு நீ புத்தகம் படிக்கிறது இல்ல. அதான் மூவி சொன்னா ஈசியா கண்டுபிடிப்பன்னு நினைச்சேன். அதுனால கொஞ்சம் அங்கங்க கதையை மாத்தி சொன்னேன். கொடுமையை பார். ஃபேமஸ் பிரேமம் படத்தை நீ பார்க்காம போனது, யார் தப்பு?” என்ற கேள்வியோடு சொல்லி முடித்தான்.
“பொய், பூராம் பொய் பொய்யா சொல்றீங்க, உங்களை” என்று அவன் கன்னத்தில் அடித்து, அவன் மீசையை பற்றி இழுத்தாள்.
“அபி, சாரி. பிளீஸ் சாரி” என்று அவன் கெஞ்ச, அவளோ மிஞ்சினாள்.
“ரொம்ப பண்ணாத அபி. சாரி. இனிமே நீயும் தேவையில்லாத கேள்வி கேட்காத. நானும் பொய் கதை சொல்ல மாட்டேன்” என்றவன் மீசையை அவள் வலிக்க இழுக்க, அந்த வலிக்கு முத்தத்தை மருந்தாக்கினான். அபிநயா, கணவனோடு ஒன்றினாள்.
எட்டு மணிக்கு குடும்பமாக அமர்ந்து இரவு உணவு உண்ணும் போது, கார்த்திக் அழைத்ததைப் பற்றி வீட்டில் தெரிவித்தாள் அபிநயா.
“எனக்கும் கூப்பிட்டியான். அவென் முகம் கண்ணுக்குள்ளயே இருக்குத்தா. வெரசா வரட்டும் புள்ளை” என்று வடிவுக்கரசியும் ஆவலாக சொன்னார்.
இரவு உறங்கச் செல்லும் முன் கணவனிடம், “புகழ் சார், என் தம்பியை பார்த்தே ரொம்ப நாளாச்சு இல்ல? எனக்கும் சித்தார்த்தை பார்க்கணும் போல இருக்கு.” என்று அவள் சொல்ல,
“நாளைக்கு ஈவ்னிங் போய் பார்க்கலாம் அபி. நான் சீக்கிரம் வந்து உன்னைக் கூட்டிட்டு போறேன்” என்றான் அவன்.
“அவனுக்கு பர்த்டே வருதுன்னு சொன்ன இல்ல? கார்த்திகிட்ட பாஸ்ட்டிராக் லேட்டஸ்ட் எடிசன் வாட்ச் வாங்கிட்டு வரச் சொல்லி பணம் அனுப்பியிருக்கேன் அபி.”
“சொல்லவேயில்ல புகழ் சார்” என்றாள் சிரிப்புடன்.
“அதான் இப்ப சொல்லிட்டேன் இல்ல. தூங்கு” என்று அதட்டினான்.
“நீங்க தூங்குங்க முதல்ல” என்று உதடு சுளித்து ஒழுங்கு காட்டி அவன் விலாவில் இடித்தாள் அபிநயா. “அபி..” என்ற புகழேந்தியின் சிரிப்பு அறையை நிறைத்தது.
மறுநாள் மதியம், வெயில் தாழ்ந்த வேளையில் அந்த வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் சிரிப்பில் குலுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த புகழேந்தி, “ஓகே. போதும். இப்போ பாடத்தை கவனிங்க” என்று மேஜையில் தட்டிச் சொல்ல, சட்டென்று நிசப்தமாகியது அறை.
மாணவர்கள் நிமிர்ந்து அமர்ந்து பாடத்தை கவனிக்க, அறை முழுவதும் கண்களை சுழற்றிய புகழேந்தி, லயா வகுப்பறையில் இல்லாததை கவனித்தான்.
மனதில் அதைக் குறித்துக் கொண்டு பாடத்தைத் தொடர்ந்தான்.
அன்று மாலை வேலை முடிந்ததும் வீடு திரும்பி மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீடு சென்றான். ஆனால், அவர்கள் எதிர்பார்த்து சென்ற சித்தார்த் இன்னமும் வீடு வந்திருக்கவில்லை.
“என்னம்மா மணி ஏழாகப் போகுது. தம்பி இன்னும் வீட்டுக்கு வரல.”
அம்மா கொடுத்த சிற்றுண்டியை உண்டு விட்டு, அவருடன் அமர்ந்திருந்த அபிநயா கேட்க, “பொறுமையா வருவான் அபி. இப்போ அவனுக்கு என்ன அவசரம்?” என்று எதிர்கேள்வி கேட்டார் சியாமளா.
“நாங்க, அவனைப் பார்க்கத்தான் வந்தோம் மா”
“அப்ப கொஞ்ச நேரம் உட்காரு அபி. அவன் வந்ததும் பார்த்திட்டு போ”
“காலேஜ் முடிஞ்சு இவ்வளவு நேரமாச்சு. எங்க போறேன்னு எதுவும் சொன்னானா மா?” என்று கேட்டாள் அபிநயா. மகளை அசட்டையாக பார்த்து, “சும்மா அவனை எங்க போறே, என்ன பண்றன்னு கேட்டு நொச்சு பண்ண சொல்றியா அபி? ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்துட்டு வருவான். வீட்டுக்கு வராம எங்க போக போறான்” என்று பதில் சொன்ன அம்மாவை அதிருப்தியுடன் பார்த்தாள் அவள்.
“இந்த கேள்வியை எல்லாம் என்னை கேட்டிருக்கமா நீ. அப்போ சித்துவையும் கேட்கணும், இல்ல?”
“நீ பொம்பளை புள்ளை, உன்னை கண்டிச்சு, கவனமா வளர்த்தோம். அவனுக்கு என்ன..” என்ற அம்மாவை மெய்யான அதிர்ச்சியுடன் பார்த்தாள் அவள். அம்மா அப்படித்தான் என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், மனது ஏற்க முடியாமல் முரண்டியது.
“இப்படி பேசாத மா. எப்போ வீட்டுக்கு வந்தாலும் அவனை பார்க்கவே முடியல. அவன்கிட்ட என்னனு கேளு. சீக்கிரம் வீட்டுக்கு வர்றது முக்கியமில்ல. எங்க போறான், யார் கூட இருக்கான்னு நமக்கு தெரிஞ்சுருக்கணும். வீட்ல சொல்லிட்டு போகணும்னு சித்துவுக்கும் தெரியணும்” அவள் சொல்லியதை கேட்டுக் கொண்டே வந்த காளியம்மாள்,
“ஏத்தா அபி. அவென் ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்துட்டு லேட்டா வருவேன்னு என்கிட்ட சொல்லிட்டு தான் போனான். இப்ப வந்துடுவான் த்தா. நான் அவன்கிட்ட சொல்லி வைக்கிறேன். நீ நாளைக்கு வந்து பாரு. என்ன?” என்று பேத்தியின் கன்னம் வருடி கேட்டார்.
“ம்ம், சரி அப்பத்தா”
“உன் புருஷன் தனியா உட்கார்ந்துட்டு இருக்கார் பார்” என்று அவர் சொல்ல, எழுந்து கணவனிடம் சென்றாள் அவள். அவர்கள் உள்ளூரில் தான் இருந்தார்கள். ஆனாலும், அவளுக்கு இருந்த வருத்தத்தில் அபியின் பிறந்த வீட்டினர் இரவு உணவு உண்ண சொல்லி வற்புறுத்தியும், கணவன் சொல்லியும் தங்காமல் வீடு திரும்பி விட்டாள் அபிநயா.
“விடு அபி. பெரும்பாலும் பசங்களுக்கு ஸ்கூல் லைஃப்ல கை, காலை கட்டி போட்டது போல இருக்கும். ஆனா, காலேஜ் அப்படியில்ல. சட்டுனு ஒரு சுதந்திரம் கிடைச்ச மாதிரி ஃபீல் ஆகும். திடீர்னு வளர்ந்துட்ட ஃபீல் வரும். வீட்ல வண்டி வாங்கித் தருவாங்க, செலவுக்கு காசு கொடுப்பாங்க. சில நேரம் வீட்டு முடிவுகள்ல அவங்களுக்கு மதிப்பு கொடுத்து கருத்துலாம் கேட்பாங்க. இப்படி நிறைய விஷயம் அவங்களை பெரியவங்களா உணர வைக்கும். இந்த வயசில் தான் எதிர்காலம் பத்தி நிறைய யோசிப்பாங்க. ஊர், உலகம் சுத்த, புது விஷயங்கள் தெரிஞ்சுக்க, கத்துக்க ஆசை வரும்.” என்று அவன் நீண்டதொரு விளக்கம் சொல்ல, அவனையே பார்த்திருந்தாள் அபிநயா.
“சித்துக்கு மதுரை புது ஊர் இல்லதான். ஆனாலும், இங்க அவன் நிறைய நாள் இருந்தது இல்லையில்ல அபி. இப்போ எல்லா இடத்துக்கும் போக ஆசைப்படுவான். காலேஜ் முடிச்சா வேலை, வாழ்க்கைன்னு நிக்காம ஓடனும். சோ இப்போ கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும், விடு” என்று அவன் சொன்னது சரியென்று பட, மெலிதாக புன்னகைத்து தலையசைத்தாள் அபிநயா.
மறுநாளும் லயா கல்லூரி வராதது பார்கவிக்கு வருத்தத்தை அளித்தது. அவர் நேராக சாமுவேலிடம் வந்தார். அவனோடு அமர்ந்திருந்த புகழேந்தி, “அவங்க வீட்டுக்கு போன் பண்ணி பார்த்தீங்களா மேம்?” என்று கேட்க, “நான் பேசல சார். ஆனா, அவ ப்ரெண்ட்கிட்ட கேட்டேன். உடம்பு சரியில்லன்னு மார்னிங் அட்டெனெண்ஸ் எடுக்கும் போதே சொன்னா” என்றார் அவர்.
“அப்புறமும் தனியா கூப்பிட்டு விசாரிச்சேன். ஜஸ்ட் ஃபீவர் தான் மேம். நாளைக்கு வந்துடுவா, அப்படினு சொன்னா. இருந்தாலும் எனக்கு மனசு கேட்கல. அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்” என்றவருக்கு, “ரொம்ப வொர்ரி பண்ணாதீங்க மேம். லயா நல்லபடியா, நல்ல முடிவெடுத்து காலேஜ் வருவா பாருங்க” என்று வார்த்தைகளால் திடமூட்டினான் புகழேந்தி.
“நானும் அப்படி நடக்கணும்னு தான் ஆசைப்படுறேன் சார்” என்றவர், சிறிது நேரம் அவர்களிடம் கல்லூரி குறித்த வேறு விஷயங்கள் பேசி விட்டு சென்றார்.
ஆண்கள் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
சாமுவேல் ஏதோ சிந்தனை வயப்படவனாக நடக்க, “என்ன சாம்? என்ன யோசனை?” என்று கேட்டான் புகழேந்தி.
“ப்ச், ஒன்னுமில்ல புகழ்” என்று தோளை குலுக்கினான் சாமுவேல்.
“என்னனு சொல்லுடா.” புகழேந்தி வற்புறுத்த, “டீச்சிங் ப்ரோபஷன் நம்மளை எல்லாத்தையும் ஆராய்ச்சி பார்வையோட பார்க்க வைக்குதோன்னு எனக்கு ஒரு சந்தேகம்” என்றான் சாமுவேல்.
அதற்கு சத்தமாக சிரித்த புகழேந்தி, “ஆமா, அது உண்மைதான். அதுல உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்க, சாமுவேலையும் தொற்றியது அந்தச் சிரிப்பு.
“நேத்து எங்க வீட்டுக்கு சித்தி ஃபேமிலி வந்திருந்தாங்க புகழ். என் தங்கச்சி ஜோசபின் இருக்கால்ல, அவளை உனக்கு தெரியுமே?.”
“ம்ம், சித்தார்த் கூட படிக்கிற பொண்ணு தானே?”
“அவளே தான்டா. அவதான் எங்க வீட்ல எல்லோருக்கும் கடைசி. என்னமோ நேத்து அவ முகமே சரியில்ல. என்ன பிரச்சனைன்னு கேட்டா, சாதாரண தலைவலி ண்ணா. நீ ப்ரோபஸர் மோடுல இருந்து வெளில வந்து என்னை கேள்வி கேட்டு கொடுமைபடுத்தாம இருன்னு.. என்னை லந்து பண்றா டா” என்று அவன் கவலையுடன் சொல்ல, சிரித்தான் புகழேந்தி.
நண்பனின் தோளில் தட்டி, “நீ கவலையை விடு. நான் சித்தார்த்கிட்ட சொல்லி அவங்க காலேஜ்ல எதுவும் பிரச்சனையான்னு விசாரிக்கறேன். அவளை பார்த்துக்கச் சொல்றேன்” என்றான்.
சாமுவேல் சிரித்து, “உன் மச்சான் மதுரைக்கு புதுசுன்னு அவளைப் பார்த்துக்க சொன்னோம். இப்போ அவன்கிட்ட அவளை பார்த்துக்கச் சொல்லப் போறோம். இந்த விஷயம் அவங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சா, என்னாகும்?” என்று கேட்க, “நம்மளை கேலி பண்ணி உருண்டு புரண்டு சிரிப்பாங்க” என்று புகழேந்தி சொல்ல, அந்தக் கற்பனை நண்பர்கள் இருவருக்கும் சிரிப்பை தந்தது.