புகழேந்தி மனைவியை கைத் தாங்கலாக பிடித்தபடி இறுகி நின்றான். ராஜலக்ஷ்மி அவசரமாக சென்று மருமகளுக்கு தண்ணீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தார்.
அத்தனையையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தார் சியாமளா.
மகள் கர்ப்பம் என்று அறிந்ததும் மகிழ்ந்தார்தான். அவளுக்கு பிடித்தது, வயிற்று பிள்ளைக்கு நல்லது என அவ்வப்போது எதையாவது செய்து கொடுப்பார்தான். ஆனாலும், மகன் என்றால் தனிப் பாசம். அதை அவரால் வார்த்தைகளில் விளக்கிட முடியாது. அவர் செயல்களே உலகிற்கு அவரின் ஆண் பிள்ளை மேலான கண் மூடித்தனமான பாசத்தை பறைசாற்றி விடும்.
அவ்வளவு நேரமும் தலைக் குனிந்து நின்றிருந்த சித்தார்த் மெல்ல நிமிர்ந்து, “சாரி க்கா, சாரி மாமா” என்றான் நடுங்கும் குரலில். அவன் குரலில் கொட்டிக் கிடந்த குற்ற உணர்ச்சி அபிநயாவை வெளிப்படையாக நடுங்க செய்தது.
“என்னடா நீ, அடி வாங்கிட்டு சாரி சொல்லிட்டு…” சியாமளாவை பேச விடாமல் முன்னே நடந்தான் சித்தார்த். அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, விறுவிறுவென்று மகனின் பின்னே சென்றார் அவர்.
அபிநயாவின் பழைய இரு சக்கர வாகனத்தை தான் சித்தார்த் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு புது வாகனம் வாங்கித் தரவில்லை என கணவரின் மேல் மிகுந்த மனத்தாங்கல் சியாமளாவிற்கு உண்டு.
அவருக்கிருந்த கோபத்தை அந்த வண்டியிடம் காட்டினார். அதில் எரிச்சலுடன் அமர்ந்து, “உட்காருடா” என்று மகனைப் பார்த்து கத்தினார்.
அம்மாவின் பின்னால் அமர்ந்த சித்தார்த், சற்று தூரம் சென்றதும், “அம்மா” என்றழைத்து, “ஏன் மா, இப்படி பண்ணீங்க. தப்பு பண்ணது நானு மா” என்றான்.
“அதுக்கு? அடிப்பாரா? வீட்டு மாப்பிள்ளைன்னா கொம்பா முளைச்சுருக்கு? அவர் உன்னை எப்படி அடிக்கலாம்?”
“ஐயோ அம்மா. நான்தான் மா தப்பு பண்ணேன்” என்று உரக்க கத்தினான் அவன். சியாமளா அப்போதும் ஏதோ முணுமுணுத்து கொண்டு வண்டியின் வேகத்தைக் கூட்டினார்.
அவர்கள் வீடு செல்ல, கேட்டை பிடித்தபடி அவர்களுக்காக காத்திருந்தார் காளியம்மாள்.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு முகத்தில் காயங்களுடன் வீடு வந்த பேரனை பார்த்தவர் அப்படியே பதறிப் போனார். அவருக்கு முன்பாக சென்று கதவைத் திறந்த சியாமளா, மகனைக் கேள்விக் கேட்டு, அவன் பதில் சொன்னதும் கையோடு அழைத்துக் கொண்டு அப்படியே வெளியில் சென்று விட, என்னவோ, ஏதோவென்று பயந்து புலம்பிக் கொண்டே அமர்ந்திருந்தார் அவர்.
அரை மணி நேரம் சென்றும் சியாமளா வரவில்லை என்றதும் மகனுக்கு அழைத்து சொல்லி விட்டார். அப்படியே பேத்திக்கும் அவர் அழைக்க அபிநயா அழைப்பை ஏற்கவில்லை. அவருக்கு இன்னுமே பதறிப் போனது.
வயதின் காரணமாக இரத்த அழுத்தம் கூடி சற்று நேரம் ஓய்ந்து வாசலில் அமர்ந்து விட்டார்.
அவரை மேலும் அரை மணி நேரம் காத்திருக்க வைத்து பேரன் வரவும், “ஏய்யா சித்தார்த்தே, யாருய்யா உன்னைப் போட்டு இப்படி அடிச்சது?” என்று அவன் முகத்தை வருடிக் கேட்டார் காளியம்மாள்.
அவரோடு வீட்டிற்குள் நுழைந்த பேரனின் கண்கள் கலங்க, அவர் கண்களும் கலங்கி விட்டது.
“என் ராசா, வளர்ந்த புள்ள நீ அழக் கூடாதுயா. எவன் என்ன பண்ணான்னு சொல்லு. அவனை உண்டு இல்லைனு நான்..”
“ஆங். வேற யாரு, உங்க பேத்தி புருஷன் பண்ண வேலைதான். மச்சினன்னு கொஞ்சமாவது நெஞ்சுல பாசம் இருக்கா அந்த மனுஷனுக்கு..” சியாமளா கத்தவும், காளியம்மாளின் பார்வை கூர்மையானது.
“நீ என்னய்யா பண்ண?” என்று அவர் திரும்பி பேரனிடம் கேட்க, மகளும் அதையே கேட்ட நினைவில் சியாமளாவின் ஆத்திரம் தலைக்கேறியது.
“என்ன நினைச்சிட்டு எல்லோரும்…” என்று அவர் ஆரம்பிக்க, சித்தார்த் அவரை சட்டை செய்யாமல், தான் செய்ததை சொல்லி முடித்தான்.
“என்னடா சொல்ற? எந்த பையனை சொல்ற நீ?” காளியம்மாள் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார். பேரன் சிறு குரலில் பதில் சொல்ல,
“பாவி மகனே.. என்ன காரியம்டா பண்ணிட்டு வந்திருக்க.. உனக்கு எங்கிருந்து இப்படியொரு புத்தி வந்தது. நான் வளர்த்த புள்ளை தானா நீயி. நெஞ்சுல கொஞ்சமாவது ஈரமிருந்தா இப்படி பண்ணியிருப்பியா? எல்லாம் காலுக்கு நடுவுல கொம்பு முளைச்ச ஆம்பிளை திமிரு.” ஆத்திரத்தில் மூச்சு வாங்க, சரமாரியாக பேரனை தாக்கத் தொடங்கினார்.
“உனக்கு என்னவொரு நெஞ்சழுத்தம் இருந்தா, அப்படியொரு ஈனத்தனத்தை பண்ணிட்டு இந்த வீட்டு வாசலை மிதிப்ப… போடா வெளில.. என் கண்ணு முன்னாடி நிக்காத.. சோத்தில வெஷம் வச்சு கொன்றுவேன். உனக்கு சோறூட்டி வளர்த்த பாவத்தை எங்க முங்கி எழுந்தாலும் கரைக்க முடியாது போலவே.. போய் தொலையேன் டா” பேரனை பிடித்து பலங்கொண்டு வெளியில் தள்ளினார் காளியம்மாள்.
“உங்க மாமா உன்கிட்ட உதவி கேட்டு இப்படி பண்ணிட்டியேடா?” அங்களாய்த்து மீண்டும் அடிக்க பாய்ந்தார்.
சியாமளா மகன் சொன்னதைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் சுவரோடு ஒட்டி நின்றார்.
மகனை காயத்துடன் பார்த்ததும் பாசம் பொங்க, அவரின் மற்ற புலன்கள் அனைத்தும் வேலை நிறுத்தம் செய்திருந்தது. அவனும், “மாமா அடித்தார்” என்று ஒரு வேகத்தில் சொல்லி விட்டு மேலே எதுவும் சொல்லவில்லை. அதற்குள் அவனை இழுத்துக் கொண்டு மருமகனை தேடி சென்று விட்டார் அவர்.
மகன் போக விடாமல் தடுத்தது, போகும் வழியெல்லாம் எதையோ சொல்ல முயன்றது எதுவுமே அவர் சிந்தையில் பதியவில்லை. அவன் மேல் அப்படியொரு குருட்டு நம்பிக்கை. அவன் சொன்ன காரணத்தில் அது சுக்கு நூறாக உடைந்து போக, “என்னடா சொல்ற?” என்று சந்தேகமாக கேள்வி கேட்டார்.
“ஆமாடி. உன் புள்ள ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்டு வந்திருக்கான். நிக்க வச்சு ஆரத்தி எடு” என்று மருமகளை பார்த்துக் கத்திய காளியம்மாள், “எங்க அவன்?” என்று திரும்ப, அவர் ஏற்கனவே தள்ளி விட்டதில் விழப் போனவன் அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்த அப்பாவின் மேல் மோதி நின்றான்.
மகனை இரும்பு பிடி பிடித்து அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார் மகேஷ்வரன். அவன் சொன்ன அனைத்தையும் கேட்டிருந்தார். அவர் கண்களில் கொலை வெறி. அப்பாவை இதற்கு முன் இப்படி பார்த்ததேயில்லை சித்தார்த்.
“அப்பா..” என்று நடுக்கத்துடன் அவன் அழைக்க, இடுப்பில் இருந்த பெல்ட்டை உருவி, மகனை விளாசத் தொடங்கினார் அவர்.
காளியம்மாள் கண்ணீருடன் அதைப் பார்த்து நிற்க, சியாமளாவால் அதைக் காண முடியவில்லை.
“வேண்டாங்க. அடிக்காதீங்க. ஏற்கனவே மாப்பிள்ளை ரத்தம் வர்ற அளவுக்கு போட்டு அடிச்சுருக்கார்.” என்று அவர் குறுக்கே சென்று தடுக்க, அவருக்கும் ஓர் அடி விழுந்தது.
“அப்போ இவனை கூட்டிட்டு நீ அபி வீட்டுக்கு தான் போனியா? அங்க போய் உன் மாப்பிள்ளையை கத்திட்டு வந்திருக்க, இல்ல? நீயெல்லாம் என்ன பொம்பளை.. அறிவிருக்க எவளாவது பொண்ணு கொடுத்த வீட்ல போய் கத்துவாளா? அதுவும் இப்படி அடங்காத பிள்ளையை பெத்துட்டு.. முதல்ல உன்னை நான் ஒழிச்சு கட்டியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன். அதான் இன்னைக்கு இவென் ஒழுக்கமில்லாம வளர்ந்து நிக்கிறான். எல்லாம் நீ கொடுக்கிற இடம்.. செல்லமா கொஞ்சுற இவனை.. பதிலுக்கு நமக்கு என்ன பேர் வாங்கிக் கொடுத்திருக்கான் பார்த்தியா” காளியம்மாள் ஆவேசமாக கேள்வி கேட்க, சியாமளா எந்த பக்கமும் பேச முடியாமல் தடுமாறினார்.
அவருக்கு மகனின் தவறு புரிந்தாலும், அவன் அடிவாங்குவதை பார்க்க முடியவில்லை.
“அங்க போய் உன் பிள்ளை நியாயத்தை கேட்க, மாப்பிள்ளையை கேள்வி கேட்டியா நீ? நம்ம பிள்ளை அபி வாழ்க்கையை ஒத்த நிமிஷம் யோசிச்சு பார்த்தியா நீ?” மகனை உதறி தள்ளி விட்டு மனைவியின் முன் வந்து நின்றார் மகேஷ்வரன். சியாமளா மிரண்டு போய் சேலை தலைப்பால் வாய் பொத்தியபடி கணவரைப் பார்த்தார்.
“நம்ம அபிக்கு நடந்தது எல்லாம் உனக்கு மறந்து போச்சா சியாமளா? நம்ம புள்ளை வீட்டை விட்டே வெளில போக பயந்தாளே, எதுனால? காலேஜ் படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பேசினோம், ஏன்னு சொல்லு? சொந்த வீட்ல கூட நிம்மதியா தூங்க முடியாம நம்ம பிள்ளை அவ துணைக்கு நாய்க்குட்டி வாங்கினா.. நமக்கு நல்லா தெரிஞ்ச ஊரை, இத்தனை வருஷம் வாழ்ந்த இடத்தை, என் வேலையை, ஒவ்வொரு செங்கல்லா பார்த்து பார்த்து வச்சு கட்டின வீட்டை.. எல்லாத்தையும் விட்டுட்டு எதுக்காக இங்க வந்தோம். சொல்லு..”
“இல்லங்க…”
“எனக்கு காரணம் சொல்லு சியாமளா.. உன்ன மாதிரி ஒரு அம்மாவால.. பிள்ளையை சரியா வளர்க்க துப்பில்லாத ஒரு அம்மாவால.. நான் உன்னை ஏன் குறை சொல்லணும். என் தப்பு. நான்தான் சரியா வளர்க்கல. என் பொண்ணுக்காக பார்த்து பார்த்து.. இவனை கவனிக்காம விட்டுட்டேன். நம்ம அக்காவுக்கு இப்படி நடக்குதேன்னு இவன் மண்டையில் கொஞ்சமாவது உரைச்சிருந்தா இப்படி இன்னொரு பொண்ணுக்கு அதையே செஞ்சிருப்பானா?”
“தெரியாம பண்ணிட்டான்ங்க..” அவ்வளவுதான். காளியம்மாள் காளி அவதாரம் எடுத்து விட்டார்.
“என்னது தெரியாம பண்ணானா? ஏன்டி அறிவு கெட்டவளே, இது தெரியாம பண்றதா? எத்தனை நாள் அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருப்பான். மாப்பிள்ளை இங்க இருக்கும் போதே அவரை விட்டுட்டு அவனுங்களுக்கு சாப்பாடு போட்ட தானே நீ? ஒரு வருஷம் இருக்குமா? அப்போலருந்து ரெண்டு பேரும் கூட்டாளிங்க போல. இவனுக்கு இம்புட்டு நாளா எல்லாம் தெரிஞ்சிருக்கு. ஆனாலும் கமுக்கமா இருந்திருக்கான்.” பேரனை நெருங்கி இழுத்து அவன் முதுகில் அடித்தார்.
“உனக்கு மகளை, உன் அண்ணன் மகனுக்கு கொடுக்க முடியாத ஆத்திரம். நாம இக்கட்டுல நிக்கும் போது நம்ம பிள்ளையை வேணாம்னு சொன்னாங்கன்னு அறிவு கூட இல்லாம, இன்னமும் அண்ணன் வீட்ல பொண்ணை கொடுக்க முடியலைன்னு, அதையே மனசுல வச்சுட்டு அவளை நீ நடத்துறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? அபி புருஷன் கால் தூசு மதிப்பு பெறுவானா உன் அண்ணன் மவன்? நாம ஊரெல்லாம் தேடினாலும் இப்படி ஒரு தங்கமான பிள்ளையை தேடி பிடிச்சிருக்க முடியுமா? நம்ம பிள்ளை நிம்மதியா இருக்க அவர்தான் காரணம். அவளை ஒரு வார்த்தை சந்தேகப்பட்டு ஏதாவது கேட்டுருப்பாரா? இல்ல வெளிலதான் விசாரிச்சுருப்பாரா?” படபடவென்று பொரிந்தவர் மருமகளின் முன் வந்து நின்று,
“நீ கிளம்பு. உங்க அண்ணன் வீட்டுக்கு போ. உன் தறுதலை பிள்ளையையும் கையோட கூட்டிட்டு போய்டு. மாப்பிள்ளை கால்ல விழுந்து நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தினார்.
சியாமளா அவமானத்தை அழுகையில் கரைத்தபடி நின்றார்.
“சாரி ப்பா. சாரி அப்பத்தா” அப்பாவின் கையைப் பிடிக்கப் போனான் சித்தார்த், அவனை ஓங்கி அறைந்தார் மகேஸ்வரன். புகழேந்தி அறைந்த அதே பக்கம், மீண்டும் உதட்டில் இருந்து இரத்தம் வர, வலி தாளாமல் கன்னத்தை பிடித்துக் கொண்டு தரையில் மடங்கி அமர்ந்தான் அவன்.
“என் கண் முன்னாடி வராத, கொன்றுவேன் உன்ன” விரல் நீட்டி எச்சரித்து விட்டு அவர் வெளியேற, அவர் பின்னால் ஓடினார் காளியம்மாள்.
அபிநயாவை அறைக்குள் அழைத்து வந்தான் புகழேந்தி.
அவளுக்கு கணவனை நன்றாகத் தெரியும். அத்தனை எளிதில் வன்முறையை கையில் எடுக்க மாட்டான். அவனே கை நீட்டி, அதுவும் அவள் தம்பியை அடித்திருக்கிறான் என்றால் நிச்சயமாக சித்தார்த் பக்கம் தவறிருக்கும் என்று உணர்ந்து, “சாரி” என்றாள் கணவனிடம். அதே நேரம் அவனும், மனைவியின் தோளில் கை வைத்து, “சாரி அபி” என்றான்.
“உங்கம்மா மாதிரி உனக்கு என் மேல கோபம் வரலையா?”
“கோபமா? இல்லையே. உங்களுக்கு கோபம் வர்ற அளவுக்கு சித்து என்ன பண்ணான்னு தான் பயமா இருக்கு. நீங்க அடிச்சுருக்கீங்கன்னா ஏதோ பெரிய தப்பு பண்ணியிருக்கான்” மனைவி தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, அவனை நெகிழ்த்தியது.
“என் மேல உனக்கு இவ்வளவு நம்பிக்கையா அபி?” அவன் கேட்க, “எனக்கு உங்களைத் தெரியாதா?” என்றாள் அபிநயா.
“நீ என் மேல வச்சிருக்க இதே நம்பிக்கையை நான் சித்து மேல வச்சுருந்தேன் அபி. அந்த நம்பிக்கையை அவன் காப்பாத்தல. அந்த நிமிஷ ஆத்திரத்துல அடிச்சுட்டேன். தப்புதான்”
“சித்து என்னங்க பண்ணான்?”
“என் ப்ரெண்ட், என் கூட வேலை பார்க்கிற சாமுவேல் இருக்கான் இல்ல?”
“ம்ம்..”
“ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவனோட தங்கச்சி ரொம்ப டல்லா இருக்கா. காலேஜ்ல தான் ஏதோ பிரச்சனை போலன்னு சொன்னான். நம்ம சித்து மதுரைக்கு புதுசுன்னு, அந்த பொண்ணு ஜோசபின் கிட்ட தான் இவனைப் பார்த்துக்க சொல்லியிருந்தான் சாம். அப்போ அவளுக்கு ஒரு பிரச்சனைன்னு டவுட் வரும் போது நான் சித்துவை கவனிச்சுக்க சொன்னேன்”
“ஓ…”
“எங்க வச்சு தெரியுமா? உங்க வீட்ல வச்சு சொன்னேன். அன்னைக்கு.. அந்த நிமிஷம், நம்ம கண்ணு முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தவங்கள்ல ஒருத்தன்தான் ஜோசபினை லவ் பண்றேன்னு காலேஜ்ல ப்ரோபோஸ் பண்ணியிருக்கான். அவ விருப்பம் இல்லைனு சொல்லியும், அவ போகும் போதும், வரும் போதும் இவன் பேரை சொல்லி கத்தியிருக்கானுங்க. அவ டெஸ்க்ல ரெண்டு பேர் பேரையும் எழுதி வச்சுனு.. எல்லாமே இப்போதான் தெரிய வருது. ப்ச், சித்தார்த் அன்னைக்கு நான் சொன்ன போதே இவன்தான் அது மாமானு என்கிட்ட சொல்லியிருந்தா, அப்பவே சரி பண்ணியிருக்கலாம். சித்துவை அவ்ளோ நம்பினேன் அபி. சாமுக்கு அவனை நம்பி நம்பிக்கை கொடுத்தேன். எல்லாத்தையும் உடைச்சுட்டான்”
“அந்த பொண்ணு.. சாம் அண்ணா, தங்கச்சிக்கு என்னாச்சு” அபிநயா குரலில் நடுக்கத்துடன் கேட்க, புகழேந்தி மனைவியை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.
“அந்த பொண்ணு நல்லாருக்கா. அவளுக்கு ஒன்னுமில்ல. நீ ரிலாக்ஸாகு” அவன் வார்த்தைகள் அவள் மனதில் ஏறவேயில்லை.
“என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?”
“இப்போ அவங்களுக்கு செமஸ்டர் லீவ் இல்லையா. சோ, ஜோசபின் அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அதிசயம் தீம் பார்க் போக பிளான் பண்ணியிருக்காங்க. எப்படியோ இந்த பசங்களுக்கு அது தெரிஞ்சு சரியா இன்னைக்கு இவனுங்களும் அங்க போய் இருக்கானுங்க. ஜோசபின் இவங்களைப் பார்த்து ஷாக்கானாலும், சரி பொது இடத்தில் வச்சு நம்மள என்ன பண்ண போறாங்கன்னு அவ ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடிட்டு இருந்திருக்கா. நம்ம சித்தார்த் அவகிட்ட போய் பசிக்குது. கையில காசில்லன்னு சொல்லி, ஏதாவது வாங்கித் தான்னு கேட்டிருக்கான். அவனுக்கு பாவப்பட்டு கேன்டீன் போகலாம் வாடான்னு வந்த பொண்ணை கூட்டிட்டு போய் அவன் பொறுக்கி ப்ரெண்ட் கிட்ட தனியா விட்டிருக்கான் சித்தார்த்”
“ஐயோ..”
“தீம் பார்க் எப்படி இருக்கும்னு உனக்கு தெரியும் இல்ல அபி. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில அவ கைய பிடிச்சு, பிளீஸ் எனக்கொரு பதிலை சொல்லுன்னு அவன் கெஞ்ச, ஜோசபின் மிரண்டு கையை உதற, அவளை போக விடாம தடுக்க எட்டி பிடிச்சவன் கையில் அவ ட்ரெஸ் சிக்கி, அவ கத்தி..”
“பாவம்ங்க, பயந்து போய் இருக்க போறா.. யாரும் ஹெல்ப்க்கு வந்தாங்களா இல்லையா?” அபிநயா கேட்க,
“அவ்ளோ நேரம் ப்ரெண்ட் லவ்வுக்கு தூரமா நின்னு காவல் காத்த நம்ம பையன் அவ கத்தவும் ஓடிப் போய் காப்பாத்தி இருக்கார். அதுனால ஒரு அறையோட விட்டேன். இல்லனா… ப்ச், ஜோசபின் அதுக்கு மேல இவனை நம்புவாளா? கூட்டம் கூடவும் போடானு அந்தப் பையனை தள்ளி விட்டுட்டு அவ ஃப்ரெண்ட்ஸ் தேடி போய்ட்டா. அவளை ஈவ்னிங் சாம் போய் தான் பிக் அப் பண்றதா இருந்தது. அங்கருந்து அப்பவே அவனுக்கு கால் பண்ணி கூப்பிட வான்னு சொல்லவும், சாம் அதுக்குள்ளவான்னு கேட்க, அவ ஒழுங்கா பதில் சொல்லல. என்னாச்சு, ஒழுங்கா என்ஜாய் பண்ணிட்டு வான்னு அவன் சொல்லவும், நீ இப்போ வாண்ணா அப்படினு அழுற குரலில் கத்தியிருக்கா, என்னாச்சுன்னு சந்தேகம் வந்து கேட்டா.. தயங்கிகிட்டே நடந்ததை சொன்னா. யார் அவன்னு சொல்லுன்னு சாம் கேட்டதும் அந்த பையன் பேரை கூட சொல்லாம நம்ம சித்து பேரைதான் சொன்னா. ஒரு ப்ரெண்டா அவளோட நம்பிக்கையையும் காப்பாத்தல நம்ம சித்தார்த்.” வருத்தத்துடன் சொன்னான் புகழேந்தி.
“நாங்க அங்க போகும் போது ஜோசபின் அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட பதட்டமா நின்னுட்டு இருந்தா. காலையில எவ்வளவு சந்தோஷமா கிளம்பி போய் இருப்பாங்க. ஆனா, அங்க அவ்ளோ பயந்துட்டு புலம்பிட்டு நின்னுட்டு இருந்தாங்க. அவ ஃப்ரெண்ட்ஸ் சிலர் ஒன்னுமே இல்லாத விஷயத்தை ஏன் பெருசு பண்றன்னு அவளை திட்டியிருப்பாங்க போல…”
“அவங்களுக்கு நடந்தா தான் அந்த கஷ்டம் புரியும். இல்லனா எல்லாமே ஒன்னுமே இல்லாத விஷயம் தான்” கசப்புடன் சொன்னாள் அபிநயா.
“ஜோசபின் அழுதிட்டு இருந்தவ, எங்களை பார்த்ததும் தான் அழுகையை நிறுத்தினா. நீங்களும் இதெல்லாம் ஒரு விஷயம்னு பெரிசு பண்றியான்னு கேட்காதீங்க அண்ணான்னு அவ சொல்லும் போது அவ்வளவு கஷ்டமா இருந்தது அபி. அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பத்திரமா அனுப்பிட்டு, அவளை விசாரிச்சா நடந்ததை சொல்லிட்டு இருக்கும் போதே சித்தார்த் அங்க வந்துட்டான். இவன் பசிக்குதுன்னு சொல்லவும் தான் இவன் கூட கேன்டீன் போனேன் ண்ணா. ஆனா, இவன் என்னை கூட்டிட்டுப் போய் அவன்கிட்ட விட்டுட்டான்னு அவ அழுதுட்டே சொல்லவும், கோபத்துல அடிச்சுட்டேன். ரெண்டு அறை விட்டதுக்கு அப்புறம் தான் ஐயோ அடிச்சுட்டோம்னு…”
“நானா இருந்தா இன்னும் ரெண்டு அறை சேர்த்து கொடுத்து இருப்பேன். அந்த பொண்ணை அடிக்க சொல்லியிருப்பேன்” உணர்ச்சி வேகத்தில் கத்தினாள் அபிநயா.
“அவன் ட்ரெஸ் பிடிச்சு இழுத்ததுக்கே ரொம்ப பயந்துட்டா. அந்த பையன் இன்னும் மோசமா ஏதாவது பண்ணியிருந்தா சின்ன பொண்ணுக்கு எவ்ளோ பெரிய ட்ரோமா இருந்திருக்கும் இல்ல?” புகழேந்தி சொல்ல, அபிநயா மௌனமாக அவன் சொன்னதை ஆமோதித்தாள்.
சித்தார்த்தை அங்கேயே விட்டுவிட்டு ஜோசபினை அழைத்துக் கொண்டு சாமுவேலுடன் அவனது வீடு சென்றது, அதன் பின்னர் நடந்தது என அனைத்தையும் சொன்னான் புகழேந்தி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.