அன்றைய தினம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக கல்லூரி வளாகமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
மாணவ, மாணவிகள் பட்டுவேட்டி சட்டை, பட்டுச் சேலை என பாரம்பரிய உடையில் அழகாக வலம் வந்தார்கள்.
அதற்காகவே ஒதுக்கியிருந்த வெட்டவெளி மைதானத்தில், அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து, அவர்களுக்குள் பகிர்ந்து உண்டார்கள்.
“புகழ் சார், இந்தாங்க கரும்பு”
“புகழ் சார், நீங்க பொங்கல் சாப்பிடலையா? இந்தாங்க சார்” என்று புகழேந்திக்கு கவனிப்பு பலமாக இருக்க, “ஏன் மச்சான், உன் பக்கத்தில தானே நானும் நிக்கறேன். என்னை யாருக்கும் கண்ணு தெரியலை பாரேன்.” என்று சாமுவேல் புலம்ப, “சாம் சார்” என்று மாணவன் ஒருவன் வந்து அவனுக்கு பொங்கல் கொடுத்தான்.
“தேங்க்ஸ் அன்பு” என்று புன்னகையுடன் அவன் வாங்கிக் கொள்ள, புகழேந்தி உதட்டில் நமுட்டு சிரிப்பு.
“நீங்க காலேஜ் க்ரஷ் புகழ் சார். நான் அப்படியா?”
“என் பொண்டாட்டி இதைக் கேட்டா, என்னை மிதிக்க போறா” என்று முணுமுணுத்தவன், “க்ரஷ்லாம் இல்ல சாம். இது மரியாதை, அன்பு, அப்படி வச்சுக்கலாம்” என்றான்.
“நீ சொன்னா சரிதான்” என்று சாமுவேல் அப்போதும் கிண்டலாக சொல்ல, “சும்மா இருடா” என்றான் புகழேந்தி.
அப்போது பார்கவி அங்கு வர, “ஆத்தி..” என்று அலறினான் சாமுவேல்.
பார்கவிக்கு பின்னால் வந்த மாணவியை கண்ணை சுருக்கி புகழேந்தி யோசனையாக பார்க்க, “சாம் சார்” என்று தயக்கத்துடன் அழைத்தார் அவர்.
“சொல்லுங்க மேம்”
“இந்த பொண்ணுக்கு..” என்று ஆரம்பித்து அவர் சொல்லி முடிக்க, “ரைட் மேம். நாங்க என்னன்னு பார்க்கறோம்.” என்று உத்திரவாதம் அளித்தான் புகழேந்தி.
அவர் மாணவியுடன் அங்கிருந்து நகர, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட நண்பர்கள் இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது.
“புது வருஷம், புது ஸ்டூடண்ட்ஸ், புது பஞ்சாயத்து. ஆனா, எப்பவும் ஹெல்ப் பண்ண பழைய புகழேந்தி சார் தான்” என்று சாமுவேல் கேலி செய்ய, “புகழேந்தி சார் மட்டுமில்ல. சாமுவேல் சாரும் கூட” என்று நண்பனின் தோளில் தட்டினான் புகழேந்தி. அவனது மற்றொரு கரம் வேட்டியை ஒற்றை விரலில் உயர்த்தி பிடித்திருக்க, “டேய், வேட்டியை முதல்ல கீழ விடுடா” என்று கிண்டலாக சொன்னான் சாமுவேல்.
இருவரும் வெடித்து சிரித்தார்கள்.
***
காலை பதினொரு மணி போல அபிநயா, கண்மணி இருவரும் கடைத் தெருவுக்கு கிளம்பினார்கள்.
“குட்டி பயலுக்கு பசியாத்திட்ட இல்லத்தா அபி. அப்புறம் என்ன யோசிக்கிற? அவென் அழுதா நான் பருப்பு சோறு பிசைஞ்சு கொடுக்கறேன். நீ கவலைப்படாம போய்ட்டு வா த்தா” என்று வடிவுக்கரசி சொல்ல, மகனுக்கு தேவையான பொருட்களை எடுத்து அவருக்கு பக்கத்தில் வைத்தாள் அபிநயா. ஆதவன் அதை சட்டென கை நீட்டி எடுக்கப் போக, “ஆதவா..” என்று அதட்டினாள் அபிநயா.
“உன் புருஷனை போல நீயும் நல்லா அதட்ட கத்துக்கிட்டத்தா அபி. பிள்ளை மூஞ்சி என்னென்டோ போச்சு பாரு. உதட்டை பிதுக்கறான் பாவம்” மருமகளை கடிந்து கொண்டு, குனிந்து பேரனை தன் கையில் அள்ளிக் கொண்டார் ராஜலக்ஷ்மி.
“என்னவாம் என் தங்கப் புள்ளைக்கு? யாரு அதட்டுனது?” என்று அவர் கேட்க, “அம்மா..” என்று விரல் நீட்டி அபிநயாவை கைக் காட்டினான் ஆதவன்.
“செல்லக் குட்டி சாரி” என்று அபிநயா மகனை முத்தமிட, “செல்லக் குட்டி. ஐ லவ் யூ” ஆதவன் கன்னத்தில் பல் பதிக்காமல் கடித்து முத்தமிட்டு சொன்னாள் கண்மணி.
“அடியேய்..” என்று அவளை முறைத்தான் கார்த்திக். அவனைப் பார்த்து உதடு சுளித்தாள் கண்மணி.
“இப்ப இவன் ஆரம்பிக்கப் போறான்” என்று வடிவுக்கரசி கார்த்திக்கை பார்த்து சொல்ல, “இந்தா கிளம்பிட்டோம் அம்மாச்சி” என்று சிரித்துக் கொண்டே சொன்ன அபிநயா, கண்மணி கையை பிடித்து வெளியேற, கார்த்திக் அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்து, தன் நண்பர்களை காணச் சென்றான்.
“ஆதவன் வீட்ல இருக்கான். நானும், கண்மணியும் ஷாப்பிங் போறோம். ரெண்டு மணி நேரத்துல வீட்ல இருப்போம்” என்று கணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் அபிநயா.
“ரைட். ட்ரெஸ் மாத்த வேண்டியது மாத்திட்டு புதுசா எதுவும் பிடிச்சாலும் வாங்கிக்கோ. ஓகே?” என்று அவன் அனுப்ப, “டபுள் ஓகே” என்று அவனுக்கு பதில் அனுப்பினாள் அபிநயா.
பொங்கலுக்கு குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்திருந்தார்கள் அவர்கள். கண்மணிக்கு எடுத்த உடைகளில் சேலை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அவர்கள் இருவருக்கும் ஒன்று போல அபிநயா எடுத்திருந்த டாப்ஸ் கன்மணிக்கு தற்போது பொருந்தவில்லை. கர்ப்பத்தின் காரணமாக எடை கூடியிருந்தாள் அவள். அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்த அபியும் ஓரளவு அவளின் அளவு கணித்து எடுத்திருந்த உடை கண்மணிக்கு இறுக்கமாக இருந்தது.
அதனால், அதற்கு அடுத்த அளவு உடையை மாற்றி வாங்கிக் கொண்டு மீண்டும் கடையை சுற்றி வந்தார்கள்.
கணவன் பிடித்ததை வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்க, பெண்கள் இருவரும் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு வாங்கினார்கள்.
அபிநயா கணவனுக்கு கல்லூரி அணிந்து செல்லும் வகையில் பார்மல் சட்டைகளும், மகனுக்கு உடை மற்றும் விளையாட்டு பொருட்களும் வாங்க, மத்திய அரசு பணியில் இருக்கும் கார்த்திக்கிற்கு சீருடை என்பதால் அவன் வீட்டில், வெளியில் அணியும் உடைகள் வாங்கினாள் கண்மணி. அத்தோடு வீட்டு பெரியவர்களுக்கும் ஏதேதோ வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரத்தை கொஞ்சமே கொஞ்சம் நீட்டித்து வீடு திரும்பினார்கள் பெண்கள்.
அங்கே அவர்களுக்காக அபிநயா குடும்பமே காத்திருந்தது. அவர்களோடு பேசிக் கொண்டே வாங்கி வந்ததை அவர்களிடம் கொடுத்து, மாலை சிற்றுண்டி உண்டு, சித்தப்பா, சித்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த மகனை தூக்கிக் கொண்டு அறைக்கு போனாள் அபிநயா.
கல்லூரி முடிந்து வீடு வந்த புகழேந்தி நேராக அறைக்குள் வந்து மனைவி, மகனை பார்த்துக் கொண்டே குளிக்கச் சென்றான். அபிநயா மகனுக்கு பாலூட்டி பசியாற்றி முடிக்க, குளித்து வந்த புகழேந்தி மகனைத் தூக்கிக் கொண்டான்.
“ப்பா” முன்னிரு பற்களை காட்டி ஆதவன் சிரிக்க, புகழேந்திக்கு மட்டும் மாலையில் ஆதவன் பிரகாசமாக உதித்தான். மகனை தன்னோடு இறுக்கி முத்தமிட்டான் அவன்.
அவர்கள் வெளியே வர, அப்பாவின் கையில் இருந்து நழுவி கீழிறங்கி காளியம்மாள், வடிவுக்கரசி இருவரையும் மாறி மாறிப் பார்த்து, இருவருக்கும் இடையில் சென்று அமர்ந்துக் கொண்டான் ஆதவன்.
“குட்டி பயலே, நீ பொழச்சுக்குவடா” என்று மாணிக்கவேலன் சொல்ல, ஆதவனை திரும்பிப் பார்த்த அனைவரும் வெடித்து சிரித்தார்கள்.
அவர்கள் சிரித்து முடித்து மற்ற விஷயங்கள் பேசத் தொடங்கினார்கள்.
சியாமளா, மகளிடம் பேசிக் கொண்டிருக்க, கண்மணியின் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை. அவர்களின் பேச்சு சத்தத்தை மீறி அவளின் சிரிப்புச் சத்தம் கேட்க, என்னவென்று திரும்பிப் பார்த்தார்கள்.
“கண்மணி..” கார்த்திக் மனைவியின் கைப் பிடித்து அழுத்த, அவளோ அப்போதும் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ச்சே, நீங்க மிஸ் பண்ணிட்டீங்க கார்த்தி மாமா. விட்டா அபிக்கா அவனை அடிச்சுருப்பாங்க தெரியுமா?” என்று கண்மணி சொல்ல, “எவனை?” என்று கேட்டார் வடிவுக்கரசி. கண்மணி படக்கென்று திரும்பிப் பார்க்க மொத்த குடும்பமும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
“என்ன நடந்ததுன்னு சொல்லு கண்மணி” என்று கார்த்திக் சொல்ல, “அது, நானும், அக்காவும் இப்போ கடைக்கு போய்ட்டு வந்தோம் இல்ல? அங்க எங்களை ஒருத்தன் ஃபாலோ பண்ண மாதிரி இருந்தது. முதல்ல அவனும் கடைக்கு வந்திருக்கலாம்னு கண்டுக்காம விட்டேன். ஆனா, நாங்க வெளில வந்தும் கூட அவன் எங்க பின்னாடியே வந்த மாதிரி இருந்தது.” கண்மணி விவரிக்க,
“அப்புறம் அவனை சும்மாவா விட்டீங்க? மாப்பிள்ளைக்கு போன் போட்டு இருக்கலாம் இல்ல?” என்று படபடத்தார் காளியம்மாள்.
“இல்ல அப்பத்தா, நாங்க அவனை சும்மா எல்லாம் விடல. நீங்க முழுசா கேளுங்க” என்ற கண்மணி தொடர்ந்து சொன்னாள்.
“நான் பயந்து அக்கா கையை பிடிச்சுட்டு வேகமா நடந்தேன். அவங்க என்னன்னா என்கிட்ட என்னனு கேட்டு, அவனை திரும்பி பார்த்து முறைச்சாங்க. அந்த லூசு பய அப்பவும் இளிச்சுட்டு எங்க பக்கத்துல வரவும், அக்கா அவனை நிக்க வச்சு கேள்வி கேட்டு, அடிக்க போய்ட்டாங்க. ரோட்ல நடந்துட்டு இருந்தவங்க, பக்கத்துல இதைப் பார்த்தவங்கன்னு எல்லாம் எங்க ஹெல்ப்க்கு வந்து, அவனை திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு அடி கூட விழுந்தது. “இனிமே எந்த பொண்ணையாவது ஃபாலோ பண்ணா இதான் உன் கதின்னு” அக்கா மிரட்டவும், அவன் தலையே தொங்கி போச்சு. தெரியுமா?” கண்மணி பெருமையாக சொல்லி முடிக்க, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் கலவையான உணர்வுகள்.
காளியம்மாள், சியாமளா இருவரும் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்கள்.
கண்மணிக்கு எதுவும் தெரியாது. அதனால், அவளுக்கு அபிநயாவின் இந்த நடவடிக்கை ஆச்சரியம் அளிக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு அது ஆசுவாசத்தை தந்தது.
அபிநயாவிற்கு இந்த மாற்றம் வர வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதில் அனைவருக்கும் அப்படியொரு நிம்மதி.
“தேங்க்ஸ் ப்ரோபஸர்” கணவனின் பக்கம் சாய்ந்து சொன்ன அபியின் குரலில் காதலே அதிகம் இருந்தது.
“எதுக்கு தேங்க்ஸ்? அதை நீயே வச்சுக்கோ” என்று முணுமுணுத்தான் புகழேந்தி. அவனை கண்களால் கட்டிக் கொண்டாள் அபிநயா.
“கண்ணுல காதல் கவிதை படிக்காத அபி” என்றவன் முகத்தை நிறைத்தது காதல்.
இரண்டு குடும்பங்களும் பேச்சும் சிரிப்புமாக இருக்க, ராஜலக்ஷ்மி சமைக்கச் சென்றார். அபிநயா அத்தைக்கு உதவ செல்ல, கார்த்திக் ஆதவனை தூக்கிக் கொண்டான்.
“புகழ் சார் பிள்ளையை வச்சு நாம டிரெய்னிங் எடுப்போம்” என்று அவன் வம்புக்கு சொல்ல, “கொன்னே புடுவேன் உன்ன..” என்று தம்பியை மிரட்டியபடி மனைவியிடம் சென்றான் புகழேந்தி.
“போண்ணே..” என்று கார்த்திக் அசட்டையாக சொல்ல, கண்மணிக்கு அந்த அண்ணன், தம்பி உறவு எப்போதும் பிடிக்கும் என்பதால், அவர்களை ரசித்து சிரித்தாள்.
ஆதவன் சொத்தென்று சித்தப்பா முகத்தில் அடிக்க, “டேய், உங்கப்பா போல நீயும் ரூல்ஸ் பேசக் கூடாதுடா குட்டி பயலே” என்று குழந்தையை மிரட்டி கொண்டிருந்தான் கார்த்திக்.
புகழேந்தி அம்மா, மனைவிக்கு உதவ, சமையல் வேலை சீக்கிரமாக முடிந்தது. அபிநயா குடும்பம் உணவை முடித்து அவர்கள் வீடு செல்ல, சித்தார்த் மட்டும் பொங்கல் விடுமுறைக்கு அக்கா வீட்டிலேயே இருந்து விட்டான்.
தைத் திங்கள் முதல் நாள், அதிகாலையிலேயே மொத்த குடும்பமும் புத்தாடையுடன் தயாராகி நின்றிருந்தார்கள்.
ஒன்றே கால் வயது ஆதவன், தாய் மாமா, சித்தப்பா இருவரிடமும் மாறி மாறி தாவிக் கொண்டிருந்தான்.
வீட்டு ஆண்கள் அனைவரையும் போல அவனும் பட்டு வேட்டி சட்டையில் தோள் நிமிர்த்தி கொண்டு தளிர் நடை போட, வடிவுக்கரசி பேரனை பார்க்கும் போதெல்லாம் கையால் திருஷ்டி வழித்து நெட்டி முறித்தார்.
அப்பாவை போலவே அவனும் இளநீல சட்டையில் இருக்க, அதை வேறு அவ்வப்போது தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டான் ஆதவன். அவன் கண்களில் தெரிந்த அந்த கள்ளம் கபடமற்ற மகிழ்ச்சியை பார்க்கையில் தானும் மகிழ்ச்சியில் நிறைந்தான் புகழேந்தி.
வீட்டு வாசலில் அடுப்பு மூட்டி பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க, கையில் கிடைத்ததை எல்லாம் எடுக்கப் போன ஆதவனை தடுத்துப் பிடித்து, “ஆதவா, அதை எடுக்க கூடாது. இது செய்ய கூடாது. நோ, தப்பு” என்று மகனுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருந்த சித்தார்த்தை, கார்த்திக்கை காண்கையில் புகழேந்தி கண்களில் பெருமகிழ்ச்சி படர்ந்தது.
இருவரையும் பார்த்து, “பொங்கல் பொங்கப் போகுது த்தா” என்று ராஜலக்ஷ்மி சொல்ல, குலவையிட்டார் வடிவுக்கரசி.
மொத்த குடும்பமும் ஒன்று கூடி, “பொங்கலோ பொங்கல்” என்றார்கள்.
ஆதவன் மழலையில் அதையே திருப்பிச் சொல்ல, புகழேந்தி மகனை கையில் அள்ளிக் கொண்டு மனைவியை தோளோடு சேர்த்தணைத்தான். குழந்தையின் மழலை பேச்சு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவைத்தது.
இன்று மட்டுமல்ல. அவர்கள் வாழ்வில் அன்பும், பாசமும், நேசமும், காதலும், நிம்மதியும், புரிதலும், மகிழ்ச்சியும், எப்போதும் நிறைந்து பொங்கியிருக்கும்.