“அப்புறம் என்ன ராசா, உனக்கு பொண்ணு புடிச்சுருக்கு தானே?” வடிவுக்கரசி பேரனிடம் கேட்டவர்,
“ஏத்தா ராஜி, அந்த காலண்டரை எடு. பொண்ணு வீட்டுக்கு, மெட்ராஸ் போக நல்ல நாள் பார்ப்போம்” என்று மருமகளுக்கு வேலைச் சொன்னார்.
ஆனால், அவரின் வேகம் எல்லாம் பேரனிடம் எடுபடவில்லை.
“அப்பத்தா நல்ல நாள் எல்லாம் பார்க்க வேணாம்” என்றான் புகழேந்தி எழுந்து நின்று.
“ஏய்யா? வேணாம்னு சொல்ற? நல்ல நாள் பார்க்காம எப்படி?”
“ஏ அப்பத்தா. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். படிக்கிற பிள்ளையை போய், ம்ஹூம். இது, சரி வராது” என்றான் மறுப்பை அழுத்தமாக.
“பொண்ணு படிப்பை முடிச்சதும் தான் கல்யாணம்ப்பே. என்ன, நாளைக்கேவா கல்யாணம் வைக்கப் போறோம்? உனக்கு பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு. மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்” அப்பத்தா சொல்ல, அவன் பார்வை மாறவேயில்லை.
மார்பின் குறுக்காக கையை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.
“என்னா அப்பத்தா, புகழேந்தி சாருக்கு கல்யாணமா? சொல்லவேயில்ல. அப்போ நம்ம ரூட்டு க்ளியர்னு சொல்லு” ஒற்றை விரலில் வண்டிச் சாவியை சுழற்றியபடி, நடுவீட்டில் வந்து நின்று கிண்டலாக சிரித்தபடி சொன்ன தம்பியை முறைத்தான் புகழேந்தி.
“வெட்டி பய” என்று புகழ் முணுமுணுக்க, “ரொம்ப புகழாதீங்க புகழ் சார்” என்று நக்கலடித்த தம்பியை அடிக்கக் கை ஓங்கினான் அவன்.
“என்ன ப்ரொபஷர் நீ? தம்பியை அடிக்க கை ஓங்குற? இதெல்லாம் தப்புனு உங்க சிலபஸ்ல இல்ல?” என்று கேட்டவனை பார்த்து நாக்கை மடித்தான் புகழ்.
“இந்தா பேசாம இருங்க டா.” என்று பேரன்களை பார்த்துக் கத்தினார் வடிவுக்கரசி.
சின்ன பேரன் கார்த்திக்கை பார்த்து, “பேசாதே” என்று கண் ஜாடை காட்டினார். ஆனால், அப்போது தான் அவனுக்கு சுவாரசியம் கூடியது. பொதுவாக அண்ணன் இந்த கல்யாண பேச்சென்றாலே தவிர்த்து விடுவதை அவன் அறிவான்.
கல்லூரி படிப்பு முடித்ததும் வேலை, பின்னர் அந்த வேலையில் உயர் பதவியை அடைய பரிட்சைக்கு படிப்பு, தேர்வின் பின் கிடைத்த உதவிப் பேராசிரியர் எனும் உயர்பதவி என புகழேந்தியின் கவனம் எல்லாம் அதன் மேலேயே குவிந்திருந்தது.
சமீபமாக தான் கல்யாணத்திற்கு சரியென்று சொல்லியிருந்தான் அவன். அப்போதும் பல்வேறு விதிகளை விதித்தான்.
அவனுக்கு எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியும், ஒழுங்கும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனுக்கு பிடித்த பெண்ணை காணும் ஆவலில் கார்த்திக் அம்மாவை பார்த்து கண்ணால் கேள்வி கேட்க, அவரோ மூத்த மகனை கண் காட்டினர்.
இடையில், “நீ சொல்லுய்யா புகழு.” என்று வடிவுக்கரசி மீண்டும் கேட்க, புகழேந்தி மறுப்பாக தலையசைத்தான்.
“அப்பத்தாவ்வ் அண்ணனுக்கு பொண்ணை புடிக்கல போல. பொண்ணு ஃபோட்டோவை கொண்டா, நமக்கு சரி வருமான்னு பார்ப்போம்” என்றான் கார்த்திக்.
“உத்தியோகம் புருஷ லட்சணம். முதல்ல ஒரு வேலைக்கு போற வழியை பாருடா. அப்புறம் கல்யாணம் பண்ணுவ” பல்லைக் கடித்துக்கொண்டு புகழேந்தி சொல்ல,
“எங்க புகழ் சார் வேலை கொடுக்கிறானுங்க. படிச்சவனை ஒரு பய மதிக்க மாட்டேங்குறான்” புலம்பியபடி, எட்டி அண்ணன் கையில் இருந்த புகைப்படத்தை கைப்பற்ற முயன்றான் கார்த்திக்.
“ஒரு பொண்ணுக்காக என்னை அடிச்சுட்டீங்க இல்ல புகழ் சார். உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு அவன் சொல்ல, புகழேந்தி பொங்கிய சிரிப்போடு அங்கிருந்து நழுவினான்.
“இவன் கெடக்கான் வேலை இல்லாத பய. எனக்கு நீயொரு பதிலை சொல்லிட்டு போய்யா ராசா” என்று கத்திய அப்பத்தாவை கண்டுக் கொள்ளாமல் அறைக்குள் சென்று மறைந்தான் புகழேந்தி.
“இந்தாடா கார்த்தி. நீ வந்து காரியத்தை கெடுத்து விட்டுட்ட. அவனே இன்னிக்கு தான் அதிசயமா பொண்ணு பேரு என்னனு கேட்டான். ஃபோட்டோ பார்த்து சிரிக்கவெல்லா செஞ்சான். அவன் சரின்னு சொல்லுறதுக்குள்ள ஊடால வந்து காரியத்தை கெடுத்து விட்டுட்ட நீ” வடிவுக்கரசி சின்ன பேரனின் கையைப் பிடித்து இழுத்து, அருகில் அமர்த்தி அவன் முதுகில் அடித்தார்.
“இதெல்லாம் அநியாயம் அப்பத்தா” என்று கத்தினான் கார்த்திக்.
“இப்போ என்ன? அண்ணனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும். அம்புட்டு தானே?” என்று அவன் கேட்க, அம்மாவும், அப்பத்தாவும் அவனை முறைத்தார்கள். மெதுவாக அவர்களை சமாதானம் செய்து, செய்தி மொத்தத்தையும் போட்டு வாங்கினான் அவன்.
“உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை அப்பத்தா. இப்போ பொண்ணு காலேஜ் படிச்சுட்டு இருக்கு. புகழ் சாருக்கு அதான் முக்கிய பிரச்சனை” என்றான் முடிவாக.
“ஆமா. புதுசா கண்டுபிடிச்சுட்டான். பேச வந்துட்டான் பாரு கூறு இல்லாம. அந்த புள்ளை படிப்பை முடிச்சதும் தான்டா கல்யாணம். அதைத் தானே இம்புட்டு தரம் சொல்லிட்டு இருக்கேன்”
“சரிதான். ஆனா, இப்போ பொண்ணு பார்த்து, பூ வச்சு, பரிசம் போடுவீங்க இல்ல? அப்போ புகழ் சார் காலேஜ்ல போய் என்னனு சொல்லி லீவ் போடுவார்? விஷயத்தை சொல்லணும் இல்ல? அவங்க பொண்ணை பத்திக் கேட்பாங்க இல்ல? அப்போ படிக்கிற பிள்ளைன்னு சொல்ல அவருக்கு பிடிக்காது. அதான், அண்ணன் வேணாம்னு சொல்லிட்டு போகுது” அவன் விளக்கமாக சொல்ல, பெரியவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“அது சும்மாவே ரூல்ஸ் பேசும். இப்போ அதோட கல்யாணம்னு வரும் போது சும்மா இருக்குமா?” என்றவன்,
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல ஸ்கூல் படிக்கிற பிள்ளையை கட்டிக் கொடுக்க பார்த்ததுக்கு உங்க பெரியப்பா மகனை போலீஸில அண்ணே போட்டு கொடுத்தது மறந்து போச்சா?” என்று அம்மாவை பார்த்துக் கேட்க,
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியும் இதைச் சொல்லி தான்டா மிரட்டினான். நீ வேற சும்மா இல்லாம. அந்தப் பிள்ளை கடைசி வருஷம் படிக்குதுடா. நாலு மாசத்துல படிப்பு முடியுது. அதைச் சொன்னா, எங்க கேட்கறான்” அப்பத்தா புலம்பலாக பதில் சொன்னார்.
“புகழ் சார் பொறுமையா யோசிச்சு பதில் சொல்வார். வெயிட் பண்ணு அப்பத்தாவ்வ்” என்றவன் திரும்பி அம்மாவிடம், “பொண்ணு.. இல்ல, அண்ணி ரொம்ப அழகா?” என்று கேட்க, மகனை செல்லமாக ஒரு அடி போட்டார் அவர்.
“ம்ம், இந்த வீட்ல என்னை எவனும் மதிக்க மாட்டேங்கறீங்க. இருக்கட்டும், இருக்கட்டும். எவ்வளவு நாளைக்கு? இப்போதான் என் ரூட்டு க்ளியராகிடுச்சு இல்ல. நாளைக்கு எனக்கு ஒருத்தி வருவா, அவளுக்கு நீங்க எல்லாம் பதில் சொல்லணும். ஆமா” சாவியை சுழற்றியபடி சத்தமாக சொல்லிக் கொண்டே அண்ணன் இருந்த அறையை நோக்கி நடந்தான் அவன்.
அறையின் ஓரமாக போடப்பட்டிருந்த மேஜையின் முன் அமர்ந்து தடிமனான புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த புகழேந்தி, தம்பியை முறைத்து விட்டு தன் வேலையில் மூழ்கினான்.
“பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா?” கார்த்திக் சத்தமாக பாடிக் கொண்டே உடை மாற்ற, “வெளில போடா” என்று கத்தினான் புகழேந்தி.
“நீங்க கெட் அவுட் சொன்னதும், வெளில போக நான் உங்க ஸ்டூடண்ட் இல்ல புகழ் சார். உங்க தங்கத் தம்பி” என்று நாடக பாணியில் கை வீசி குனிந்து கார்த்திக் சொல்ல, அவன் மீது பேனாவை தூக்கி எறிந்தான் புகழேந்தி.
“ஆ, ராசியான பேனா. நன்றி புகழேந்தி சார்” நமுட்டு சிரிப்புடன் நக்கலாக சொல்லி விட்டு, அண்ணன் கையில் சிக்காமல் அறையை விட்டு வெளியில் ஓடினான் கார்த்திக்.
புகழேந்தி சிரித்துக் கொண்டே கவனத்தை படித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்கு திருப்பினான். ம்ஹூம், அவன் கண்கள் அதில் பதிந்ததே ஒழிய, கவனம் அதில் பதிய மறுத்து சண்டித்தனம் செய்தது.
இரவு உணவின் போது மொத்த குடும்பமும் அங்கிருக்க, அப்பா மாணிக்கவேலன் மீண்டும் அந்தப் பேச்சை ஆரம்பித்தார்.
“பொண்ணு வீட்டுக்கு என்ன பதில் சொல்லட்டும் தம்பி?” என்று கேட்டவரை நிமிர்ந்து பார்த்து விட்டு அவன் அமைதியாக உண்ண,
“அதான் பொண்ணு படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்றோம் இல்ல ராசா. நீ ஒரு வார்த்தை சரின்னு சொல்லு”
“முதல்ல பொண்ணு படிப்பை முடிக்கட்டும் அப்பத்தா” என்றான் தீர்க்கமாக.
“அதுவரைக்கும் நமக்காக காத்துட்டு இருக்க மாட்டாங்க தம்பி.” ராஜலக்ஷ்மி பதட்டமாக சொல்ல,
“அப்போ விடுங்க மா” என்றான் பட்டென்று.
“இடையில யாரும் பொண்ணு கேட்டு வந்தா கொடுத்திட போறாங்க. புரியாம பேசுற புகழு” என்று ராஜலக்ஷ்மி சொல்லிக் கொண்டிருக்க, மொத்த குடும்பமும் புகழேந்தியை பார்க்கவும் தான் மகன் சொன்னதே அவர் மனதில் பதிந்தது.
“என்ன ண்ணா..” கார்த்திக் தனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அண்ணனின் கைப் பிடித்தான்.
“கைய விடுறா.” என்று உதறிக் கொண்டு எழுந்துப் போனான் புகழ்.
வடிவுக்கரசி புலம்ப, ராஜலக்ஷ்மி அவரை சமாதானம் செய்ய, மாணிக்கவேலனின் ஒற்றைப் பார்வையில் இருவரும் கப்சிப்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.