காளியம்மாள் குனிந்து பேத்தியின் முகம் பார்க்க, கையால் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாள் அவள்.
எந்தவித தவறும் செய்யாமல் தன்னை, தன் ஒழுக்கத்தை, பெயரை அனைவரும் கூறு போட்டு கூவி விற்பதை பார்க்கையில் அபிநயாவின் மனதில் எரிச்சல் மண்டியது.
“நீங்க போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு எல்லாம் நான் என்னைக்கும் ஒத்துக்க மாட்டேன்” சியாமளா தன் பிடியில் நிற்க,
“நமக்கு தெரிஞ்ச நாலு பேரை வச்சு கேஸ் ஃபைல் ஆகாம, நல்லா மிரட்டி மட்டும் விடச் சொல்லுவோம்” என்றார் மகேஷ்வரன், மனைவியின் சொல்லுக்கு சற்றே இறங்கி.
“அது..” என்று தடுமாறிய மருமகளை பார்வையால் எரித்தார் காளியம்மாள்.
“நீங்க ஏற்கனவே அவனை கூப்பிட்டு மிரட்டி விட்டாச்சு. அவன் வீட்லயும் சொல்லியாச்சு. அப்பவும் திருந்தாதவன் போலீஸுக்கு போனா மட்டும்..”
“போலீஸுக்கு போனா பயப்பட தான் செய்வான். ஏன் போலீஸ் ஸ்டேஷன் போனாலே பொண்ணு பேர் கெட்டுப் போகும்னு நீ பயப்படல? அது போல தப்பு பண்ற பயலுக்கும் பயம் இருக்கும் இல்ல? இதென்ன நம்ம காலமா? இப்போ சட்டம் எல்லாம் எவ்வளவு மாறியிருக்கு? பொம்பளை பிள்ளைகிட்ட வாலாட்டுற நாய் வாலை நறுக்கி விடுறதை விட்டுட்டு வியாக்கியானம் பேசிட்டு இருக்க நீ” மருமகளை அடித்து விடுவது போல பேசியவர், மகனைப் பார்த்து,
“இதுக்கு மேல அவனை விட்டு வச்சா சரி வராதுப்பா. ஏதாவது செஞ்சு விடு. அவங்க வீட்டுக்கு போய் பேசுவோம். இல்லனா இதுக்கு ஒரு முடிவு வராது” திட்டவட்டமாக சொன்னார் காளியம்மாள்.
மகேஷ்வரன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அவனை நேரடியாக சந்தித்து கண்டித்து, மிரட்டியது மட்டுமின்றி, இதற்கு முன்பு இரு முறை அவன் அப்பாவிடம் சென்று மகனைக் குறித்து புகார் செய்திருக்கிறார் அவர். ஒருமுறை மோசமாக மிரட்டி விட்டும் வந்திருந்தார்.
“தன் மகன் அப்படிப்பட்டவன் அல்ல. வயது கோளாறு. விளையாட்டுக்கு செய்திருப்பான்” என சாக்கு போக்குகளை சொல்லி அனுப்பியிருந்தார் அவனின் தந்தை.
இரண்டாம் முறை கடுமையான எச்சரிக்கை விடுத்த பின்னர் அபிநயாவை பின் தொடர்வதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தான். அவன் தொல்லை ஒழிந்தது என்று அவர்கள் நிம்மதியாக இருக்கையில் சமீபமாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறான். அதிலும் இம்முறை திருமணம் பற்றியெல்லாம் பேசுகிறான் என்று மகள் சொன்னதை கேட்கும் போது ஒரு தகப்பனாக அவரின் கோபத்தின் அளவு கூடிக் கொண்டே போனது.
மகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை தர முடியாத தன்னையே நொந்து கொண்டார் அவர்.
அன்று மதிய உணவுக்கு பிறகு சில நண்பர்களுக்கு அழைத்துப் பேசினார். அதன் பிறகு தன் குடும்பத்தினருடன் அமர்ந்து அடுத்து செய்ய இருப்பதை அவர் சொல்ல, அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிய பிறகு, அரை மனதுடன் சம்மதித்தார் சியாமளா.
காலையில் நண்பர்களுடன் சேர்ந்து படிக்க வெளியில் சென்ற சித்தார்த் வீடு வராததினால் அபிநயாவை, ஷபானாவின் வீட்டில் விட்டுவிட்டு பெரியவர்கள் மூவரும் அவர்களின் முடிவை செயல்படுத்தச் சென்றார்கள்.
“அக்கா பின்னாடி ஒருத்தன் வர்றான். அவனை தடுக்கணும், அடிக்கணும். வீட்ல இத்தனை நடக்குதே, என்னனு பார்ப்போம், விசாரிப்போம். இந்த கவலை எதுவும் உன் தம்பிக்கு இல்லையில்ல அபி?” என்று ஷபானா கோபத்துடன் கேட்க, “விடு ஷபா. அவன் பாவம் பப்ளிக் எக்ஸாம் படிக்கிற டென்ஷனில் இருக்கான். சின்ன பையன் வேற” என்று தம்பிக்காக பரிந்து பேசினாள் அபிநயா.
“என்ன சின்னப் பையன்? அடுத்த வருஷம் அவனும் காலேஜ் வந்துடுவான். அவனும் பொறுப்பா..”
“ஷபா பிளீஸ், விடு” என்று முடித்து விட்டாள் அபிநயா.
மகேஷ்வரன் அவரின் நண்பரின் நண்பரான அந்த பகுதி காவல்துறை அதிகாரி ஒருவரை பேசி, நிலைமையை எடுத்துச் சொல்லி, உதவி கேட்டு அவரை வீட்டிற்கு வர வைத்திருந்தார். அத்தோடு கூட அவர்கள் பகுதி கவுன்சிலர் வீடு அடுத்த தெருவில் இருக்க, அவர்களுக்குள் முன்னே அறிமுகம் இருந்தது இப்போது கைக் கொடுத்தது.
காவல் துறை அதிகாரி, அரசியல்வாதி சகிதம் அவர்கள் சென்று இறங்க, திடீரென்று வந்து நின்றவர்களை எதிர்பார்த்திராதவர்கள் குழம்பிப் போனார்கள். அவனின் அப்பா மட்டும் அதிர்ந்து நின்றார்.
அதே பகுதியில் சிறிய சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறான் அவன். ஓரளவு பெயரும், வசதியும் கொண்ட குடும்பம் என்பதால் சட்டென சுதாரித்து விட்டார்கள்.
ஆனால், மகேஷ்வரன் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. முதலில் அவனிடம் கை நீட்டி விட்டே பேச்சு வார்த்தையை தொடங்கினார். காவல் துறை அதிகாரியின் முன் அவர்களால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் அடங்கிப் போனார்கள்.
அபிநயா இருக்கும் திசை பக்கமே அவன் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று கடுமையான மிரட்டல் விடுத்து, அங்கு வைத்தே ஒரு கடிதம் எழுதி அதில் அவனின் கையொப்பமும் வாங்கி விட்டார்கள். அதை அவன் மீறும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித தயவு தாட்சண்யமும் பார்க்கப்படாது என்று அறிவித்து விட்டார் மகேஷ்வரன்.
“காதல், கல்யாணம்” என்றெல்லாம் பேசத் தொடங்கியவன், “அது எங்க பொண்ணுக்கு மென்டல் டார்ச்சர் கொடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் தம்பி நீங்க” என்ற மகேஸ்வரனின் பதிலில் தலை குனிந்தான்.
“என்ன தம்பி இந்தா இருக்கு எங்க வீடு. கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற நீங்க உங்க வீட்டு ஆளுங்களை கூட்டிட்டு நேரா எங்க வீட்டுக்கு இல்ல வந்திருக்கணும். பொண்ணுங்களை தொல்லை பண்ற உங்களை எல்லாம்.. காலம் எவ்வளவு மாறினாலும் பொம்பளை பிள்ளைங்க வாழ்க்கை மட்டும் உங்களை மாதிரி ஆட்களால மாறவே மாறாது போல” என்று வருத்தமும் கோபமுமாக அங்கலாய்த்து கடிந்து கொண்டார் காளியம்மாள்.
“எங்க பையன் செய்றது அரசல் புரசலா தெரிஞ்சும், இதை கண்டிக்காம இருந்த என் மேல தான் ரொம்ப தப்பிருக்கு. என்னை நீங்க எல்லோரும் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்.” கையெடுத்து கும்பிட்டார் அவன் அம்மா.
“இவ்வளவு தொல்லை கொடுத்தான்னு எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்சுருந்தா இவ்வளவு தூரம் போக விட்டிருக்க மாட்டேன்” காலம் கடந்து வந்த அவரின் மன்னிப்பை கண்டுக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்.
இதை தான் முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார் மகேஷ்வரன். எப்படியோ இப்போதாவது ஒரு தீர்வு கண்டார்களே என்று அவர் பெருமூச்சு விட, அவர் குடும்பம் மகிழ்வும், நிம்மதியும் கொண்டது.
இந்த களேபரத்தில் மதுரையில் மகளின் திருமணம் குறித்த பேச்சு எழுந்ததை சொல்லவே மறந்து போனார் மகேஷ்வரன். அவருக்கு நினைவு வந்தப் போது காளியம்மாள் தடுத்து விட்டார்.
“முதல்ல மாப்பிள்ளை வீட்ல இருந்து செய்தி வரட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்ற அம்மாவின் பேச்சு அவருக்கும் சரியாகப்பட்டது.
மூன்று நாட்களில் மாப்பிள்ளை புகைப்படத்தை அனுப்பி அதனுடன் கூடவே, அபிநயா படிப்பை முடிக்கும் வரை தாங்கள் காத்திருக்க விரும்புவதாக அவர்கள் சொல்ல, அதையே விரும்பிய அவராலும் மறுக்க முடியவில்லை.
சியாமளா சடைத்தாலும் சட்டை செய்யவில்லை அவர்.
அதன் பின் அபிநயாவிற்கு பல மாதங்கள் கழித்து இயல்பான கல்லூரி வாழ்க்கை அமைந்தது.
முதலில் தயக்கமும், சந்தேகமுமாக அவள் கண்கள் சுற்றுப்புறத்தை சுற்றத்தான் செய்தது. அவன் பின் தொடரவில்லை என்பதை உணரவே அவளுக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் பிடித்தது.
“ஷபா சத்தியமா அவன் ஃபாலோ பண்ணலபா” ஆச்சரியத்துடன் கத்தினாள்.
ஒரே பகுதியில் இருந்ததால் அவ்வப்போது அவனை பார்க்க நேரிட்டது. ஆனால், முன்னரைப் போல அல்லாமல் அவளிடம் பேச முனையாமல் கடந்தவனை பார்க்கையில் அவளுக்கு சிறகுகள் மீண்ட உணர்வு.
“அப்பாடா, தப்பிச்சேன்” என்று விடுதலை கிடைத்த மகிழ்வில் கத்தினாள்.
சித்தார்த் பள்ளி இறுதி தேர்வுகளுக்காக தீவிரமாக தயாராக, அபிநயாவும் கல்லூரி இறுதி நாட்களில் மூழ்கினாள்.
நாட்கள் வாரங்களை துரத்தி, மாதங்களை அடைந்திருந்தது. கிட்டத்தட்ட முழுமையாக மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.
சித்தார்த்திற்கு பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்திருக்க, கல்லூரி படிப்பு குறித்து ஆலோசிக்கத் தொடங்கியிருந்தான்.
அபிநயாவிற்கு தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்த அதிகாலை பொழுதில் மதுரை செக்கானூரணிக்குள் கார் நுழைய, “மதுரைக்குள்ள இருந்துட்டு, ஊருக்கு வந்தே எவ்வளவு நாளாச்சு இல்ல அப்பத்தா?” என்று கேட்டான் கார்த்திக்.
“நல்லா கதை சொல்ல வந்துட்டான். நான் கூப்பிட்டா நீங்க வந்தா தானே? ஒரு நல்லது, கெட்டதுக்கும் நீங்க யாரும் வர்றது கிடையாது. நான் மட்டும் ஒத்தயா வந்து எல்லாத்துக்கும் தலையை காட்டிட்டு இருக்கேன். இப்பவாச்சும் வந்தீங்களே நீங்க” என்று பேரன்கள் இருவரையும் பார்த்து புலம்பினார் வடிவுக்கரசி.
புகழேந்தி திரும்பி அப்பாத்தாவை பார்த்து விட்டு, மீண்டும் ஊரை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.
வடிவுக்கரசியின் அக்கா பேரனுக்கு திருமணம் என்று ஊருக்கு வந்திருந்தார்கள் அவர்கள்.
இருள் விலகாத அந்த அதிகாலை வேளையில் அவர்களின் கார் நேராக சென்று திருமண வீட்டு வாயிலில் நிற்க, வீட்டினர் விரைந்து வந்து அவர்களை வரவேற்றனர். அங்கே வீட்டை ஓட்டியிருந்த தோட்டத்தில் பெரிதாக பந்தல் போட்டு திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
பொழுது புலரத் தொடங்க, விருந்தினர்கள் வருகை அதிகரித்தது. அங்கிருந்த இருக்கைகளை அவர்கள் நிறைத்திருக்க குடும்பத்தினர் நாலெட்டில் நெருங்கி விடும் தூரம் என்பதால், அலட்டாமல் நிதானமாக தயாராகி கொண்டிருந்தார்கள்.
வீடு முழுக்க ஆட்கள் நடமாட்டம் இருக்க, அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காஃபியை நாசூக்காக மறுத்து விட்டு மாடியேறினான் புகழேந்தி.
அங்கே வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த மைக் செட் மொத்த ஊருக்கும் இசையை இரைச்சலாக அதிர விட்டது.
மாடியில் நின்று ஒட்டு மொத்த ஊரையும் அவனால் பார்க்க முடிந்தது.
கட்டைச் சுவரில் சாய்ந்து நின்று, கீழே நடப்பதை கைக் கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அப்போது பின்னால் திரும்பி திரும்பிப் பார்த்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்.
“இவள் யாரோ, வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ” என்று அருண் மொழி பாட புகழேந்தியின் கண்கள் அவள் மேல் அதிர்ச்சியாக படிந்தது.
பட்டுச் சேலையில் பதட்டமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
“என்ன பேரோ..” என்று அடுத்த வரியை பின்னணி பாடகர் அருண்மொழி பாட, “அபிநயா” என்று அவள் பெயரை அனிச்சையாக உச்சரித்தான் புகழேந்தி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.