அரும்பாடுபட்டு அழகாக அடுக்கி வைத்திருந்ததை ஒரே இழுவையில் கலைத்துப் போட்டது போல அபிநயாவின் மனநிம்மதியை தன் வருகையால் மீண்டும் குலைத்துப் போட்டான் மோகன் குமார்.
அவளுக்கு முதன்முறையாக தன் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம் மனதில் அதிகமாக எழுந்தது. கல்லூரி தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் கல்யாண பேச்சுகள் நடந்துக் கொண்டிருக்க, அதற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் அவன் குடும்பமே தன் வீட்டில் வந்து அமர்ந்திருப்பது கோபத்தை ஏற்படுத்தியது.
காலை கல்லூரி போகும் வழியில் நடந்ததை அப்பா வந்ததும் ஒப்பித்து விட்டாள் அபிநயா. அதற்கு மகேஷ்வரன் ஆத்திரப்பட பெண்கள் இருவரும் அவரை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்கள். அபிநயா தன் அறைக்குள் வந்து அமைதியாக அமர்ந்து விட்டாள்.
அந்நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, சியாமளா தான் சென்று கதவைத் திறந்தார். அவர் கத்தவும் என்னவென்று பதறி வெளியில் சென்று பார்த்த மகேஷ்வரன், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மிக மரியாதையாக தங்கள் வீடு தேடி வந்த குடும்பத்தை உள்ளே அழைத்து வந்து அமரச் செய்தார்.
அபிநயா அவன் குரலைக் கேட்டதும் அறையிலேயே முடங்கிக் கொண்டாள். அவன் முகத்தைப் பார்த்ததும், உடலில் வரும் பதட்டமும், உதறலும் அவளால் கட்டுப்படுத்தவே முடியாது. இவன், என்னை என்ன செய்து விடுவான்? என்று ஆரம்பத்தில் எத்தனையோ நாள்கள் தைரியமாக நினைத்திருக்கிறாள். ஆனால், அன்றாட நாட்டு நடப்பை பார்க்கையில் அவளையும் பயம் பிடித்துக் கொண்டது.
இது போல பெண்களை பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் எத்தனையோ பேர், பெண்கள் சம்மதிக்கவில்லை என்றதும் வன்முறையை அடுத்த ஆயுதமாக கையில் எடுப்பதை செய்திகளில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.
சமீபமாக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், ஓடும் ரயிலின் முன் தள்ளி விடப்பட்ட பெண் என எத்தனை செய்திகள். இவர்களின் மனநோய்க்கு எப்போதும் பலியாவது அப்பாவி பெண்கள் தானே?
அவளையும் அந்த பயம்தான் தடுத்தது. அவனை எதிர்த்து நிற்க எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள். ஆனால், தன்னை ஏதாவது செய்து விடுவானோ எனும் பயம் அவள் துணிவை கட்டிப் போட்டு விடும்.
அதற்காக அவள் ரொம்பவும் பணிந்து போனதும் கிடையாது. அவளின் நிமிர்வும், தெளிவும்தான் அவனைக் குழப்பியது. எப்படியேனும் காரியம் சாதித்து விடலாம், பெண்ணை பெற்றவர்கள் மிரண்டு சம்மதித்து விடுவார்கள் என்று பெற்றோரையும் சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தான் மோகன்குமார்.
அவர்கள் மூவரும் சோஃபாவில் அமர்ந்திருக்க, “சொல்லுங்க. குடும்பமா வீடு தேடி வந்திருக்கீங்க. என்ன காரியமா வந்தீங்கன்னு நீங்களே சொல்லிட்டா நல்லது” என்று அவர்களிடம் கேட்டார் காளியம்மாள். மகேஷ்வரன் அவர்களையே கைக் கட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
“இல்ல, பொண்ணுக்கு வெளில வரன் பார்த்துட்டீங்கன்னு கேள்விப்பட்டோம்” என்று இழுத்தார் மோகனின் தாயார்.
“ஏன்மா, உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு கிடையாதா? உன் பையன் என்ன பண்ணாலும் நியாயம் பேச வந்துடுவியா?” என்று கத்தினார் காளியம்மாள்.
“அன்னைக்கு போலீஸ் முன்னாடி எங்க பொண்ணை இனிமேல் தொல்லை பண்ண மாட்டான் உங்க புள்ளைன்னு எழுதி கொடுத்துட்டு, இப்போ ஒரு வாரத்துல மாப்பிள்ளை வீடு அவளுக்கு பூ வைக்க வரப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, குடும்பமா வீட்டுக்கு பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா? எங்க புள்ள நிம்மதியா வாழவே கூடாதுனு கங்கணம் கட்டிட்டு திரியறீங்களா? ஏப்பா மகேஷு, இவகளுக்கு மரியாதை கொடுத்து பேசுறது எல்லாம் சரிப்பட்டு வராது. நீ போலீஸை கூப்பிடு சொல்றேன்” காளியம்மாள் கோபத்தில் குரல் உயர்த்தி கத்தினார்.
“இல்லம்மா, நாங்க பிரச்சினை பண்ண வரல. பொண்ணு கேட்டு தான் வந்திருக்கோம்”
“அடி செருப்பால. பொண்ணு கேட்டு வந்திருக்காங்களாம் இல்ல, பொண்ணு கேட்டு… இன்னொரு வார்த்தை பேசினா உனக்கு மரியாதை கெட்டு போகும், பார்த்துக்கோ”
“மோகன் எங்களுக்கு ஒரே பையன். அவனுக்கு அபிநயாவை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லும் போது…”
“ஏம்மா உனக்கு அறிவே கிடையாதா? உன் பையன் சந்தோஷத்துக்கு எங்க புள்ளை வாழ்கையை பலியாக்கணுமா நாங்க. ரொம்ப நல்லவ மாதிரி அன்னைக்கு மன்னிப்பு கேட்ட, என் பிள்ளை இவ்வளவு தொல்லை கொடுத்தான்னு எனக்குத் தெரியாது. இல்லன்னா கிழிச்சு தொங்க விட்டு இருப்பேன்னு கதையளந்த. இப்போ பேசேன் அந்த வெட்டி நியாயத்தை… நீயெல்லாம் என்ன பொம்பளை..” மேலே காளியம்மாள் எதுவும் பேசும் முன் அவருக்கு பக்கத்தில் சென்று, “அம்மா, போதும். பேசாம இருங்க” என்று கத்தினார் மகேஷ்வரன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிடையே, “அம்மா, அம்மா” என்று அவரும் பல தடவை தடையிட பார்த்தார். காளியம்மாளுக்கு இருந்த ஆத்திரத்தில் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவர்.
மோகன், மோகனின் அப்பா என்று அவர்களும் இடையே பேச முயன்றதையும் சட்டை செய்யவில்லை அவர். ஒரு பெண்ணாக உனக்கல்லவா அதிகப் பொறுப்பிருக்க வேண்டும் என்று மோகனின் அம்மாவை காய்ந்து விட்டார் அவர்.
மகேஷ்வரன் அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து, “எங்க பொண்ணுக்கு அவ விருப்பப்படி கல்யாணம் பேசி முடிச்சாச்சு. இந்த நேரத்துல நீங்க வீட்டுக்கு வந்து எங்க நேரத்தை வீணாக்காம இங்கருந்து கிளம்புறது எல்லோருக்கும் நல்லது” என்றார் முடிவாக.
“இல்லைங்க, பையன் உண்மையா உங்க பொண்ணை விரும்பறான்” மோகனின் அப்பா சொல்ல, “ஏப்பா, உனக்கெல்லாம் மூளைக்கு பதிலா..” என்று காளியம்மாள் காளி அவதாரம் எடுக்க, “ஆத்தா, பேசாம இரு” என்று மீண்டும் அவரை அடக்கினார் மகேஷ்வரன்.
“இங்க பாருங்க. இன்னையோட இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும். இதுக்கு மேல இதைப் பத்தி நான் ஒரு வார்த்தைக் கூட பேச விரும்பல” என்ற மகேஷ்வரன், பட்டென்று எழுந்து நின்றார்.
சோஃபாவில் அமர்ந்திருந்தவர்களை கீழாக பார்த்து, “இன்னைக்கு நேத்து இல்ல, காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும் போதுலருந்து எங்க புள்ளை பின்னாடி சுத்தியிருக்கான் உங்க புள்ளை. படிக்கிற பிள்ளை மனசுல பயத்தை விதைச்சு, அவ போகும் போதும், வரும் போதும், அவளை லவ் பண்ண சொல்லி மிரட்டி, கல்யாணம் பத்தி பேசி டார்ச்சர் பண்ணியிருக்கான். அதுக்கு பேர் தான் உங்க ஊர்ல விரும்பறதாங்க? புள்ளையை படிக்க விடாம பொறுக்கித்தனம் பண்ண பிள்ளைக்கு.. ச்சே..” படபடவென பேசிக் கொண்டே போனவர்,
“என்னை போலீஸ் கம்பிளைண்ட் கொடுக்க ஃபோர்ஸ் பண்ணாதீங்க.” என்றார் கோபத்துடன்.
“உங்க பையனை மரியாதையா கூட எனக்கு பேச வரல. நாளைக்கு இவனை எப்படி நான் மருமகன்னு சொல்லி பாசமா இருக்க முடியும்? என் ஒரே பொண்ணை எந்த நம்பிக்கையில் இவனுக்கு கட்டிக் கொடுக்க முடியும்? இந்த நிமிஷம் என் வீட்லயும், என் கண்ணு முன்னாடியும் இவன் இருக்கக் கூடாதுன்னு நானும், என் பொண்ணும்.. ஏன் எங்க குடும்பமே நினைக்கும் போது.. அவளை வாழ்நாள் முழுக்க இவனுக்கு கட்டி வச்சு தண்டனை கொடுக்க சொல்றீங்களா?” உட்சபட்ச ஆத்திரத்தில் அறை அதிர கத்தினார் மகேஷ்வரன்.
“இதுக்கு மேல நாங்க எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நீங்களே..” என்று வாசலை நோக்கி கைக் காட்டினார் காளியம்மாள்.
அவர்கள் மூவரின் முகங்களும் அவமானத்தில் சிறுத்துப் போக, சட்டென எழுந்து நின்றார்கள்.
“நீங்க நல்லா இருப்பீங்க. தயவுசெஞ்சு என் பொண்ணை விட்ருங்க.” மகேஷ்வரன் இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டு கேட்க, “மன்னிச்சிடுங்க” என்று முகம் பார்க்காமல் தலை குனிந்து சொல்லி விட்டு வெளியேறினார்கள்.
“இப்படி புள்ளைய பெத்தா தலைக் குனியத்தான் செய்யணும்” என்று சத்தமாக சொன்னார் காளியம்மாள்.
அவர்கள் சென்றதும் வெளியில் வந்த அபிநயா நேராக அப்பாவின் முன் சென்று நின்று, “தேங்க்ஸ்ப்பா” என்றாள்.
“என்னது போலீஸ் கம்பிளைண்ட்டா? அதெல்லாம் ஒன்னும் வேணாம். திரும்பவும் ஒரு தடவை திருத்தமா எழுதி வாங்கிடுவோம். ஆள்களை வச்சு மிரட்டி விடுவோம். போலீஸ் எல்லாம் போனா அபி பேர் தான் அடிபடும்” என்று தடுத்தார் சியாமளா.
“இந்த கூறு கெட்டவள எப்படித்தான் உனக்கு கட்டி வச்சேன்னு எனக்குத் தெரியல” என்று காளியம்மாள் கத்த, அவரிடம் சென்றாள் அபிநயா.
“ஆமா, என்னைய சொல்லுங்க உடனே. உங்க பேத்தியை மதுரைக்கு போய் படிக்க சொன்னேன் நான். அவ கேட்டாளா?” என்று பதிலுக்கு கத்தினார் சியாமளா.
“இவ ஒழுங்காருந்தா அவன் ஏன் பின்னாடி வரப் போறான். இவ அடக்க ஒடுக்கமா இருந்திருந்தா…”
“இந்தா சியாமளா.. என்னா பேசுற.. எம் பேத்தி படிப்பை முடிச்சு வேலைக்கு போகணும்னு கொள்ள ஆசையா சுத்திட்டு இருந்தா. அதை கெடுத்துவுட்ட அந்த பயலை வையுறதை விட்டுட்டு நம்ம பிள்ளையை பேசுற நீ. மொத உன்னைய அடக்க ஒடுக்கமா ஒரு மூலைல உட்கார வச்சிருக்கணும் நானு. தப்பு பண்ணிப்புட்டேன்” என்று சேலை தலைப்பை உதறியபடி அவர் சொல்ல, பெண்கள் இருவருக்கும் முட்டிக் கொண்டது.
“அப்பத்தா…” என்று அபிநயா அவர்கள் இருவருக்கும் நடுவராக மாற, மகேஷ்வரன் யோசனையாக அமர்ந்திருந்தவர் அலைபேசியோடு எழுந்து போனார்.
இத்தனை நாள்கள் இல்லாத அளவில் மகளின் வாழ்வை குறித்த பயம் அவரை அழுத்தியது. தீவிர சிந்தனை தீர்வுகளை தராமல் குழப்பங்களை மட்டுமே தந்தது.
அந்தக் குழப்பங்களுக்கு தீர்வாக வந்தது மாணிக்கவேலனின் அழைப்பு. மகேஷ்வரன் அவரே மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துப் பேச வேண்டுமென்று நினைத்திருக்க, அலைபேசி அழைப்பை ஒரு பெருமூச்சுடன் எடுத்தார்.
“எல்லாரும் நல்லாருக்கோம்.” என்றவர், அவர்கள் வீட்டினரின் நலத்தையும் விசாரித்து அறிந்தார்.
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பூ வைக்கும் நிகழ்வு இருக்க, அது தொடர்பாக தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்தார் மகேஷ்வரன். அந்நேரம் சற்று முன்னர் வீட்டில் நடந்த நிகழ்வுகள் நினைவு வர, அவர்களிடம் இருந்து எதையும் மறைக்கும் எண்ணமில்லாததால் மற்றதை மறந்து உடனடியாக அதைப் பற்றி அவரிடம் தெரிவித்து விட்டார்.
“அவங்க திடீர்னு வந்து நிக்கவும், எங்களுக்கு கொஞ்சம் சங்கடமா போச்சு. எங்கம்மா அவங்களை நல்லா பேசிவிட்டு அனுப்பிட்டாங்க. நானும் இப்பத்தான் நமக்கு தெரிஞ்ச போலீஸ்காரர்கிட்ட பேசினேன். ஆனாலும், வீட்ல போலீஸ் கம்பிளைண்ட் கொடுக்க வேணாம்னு சொல்றாங்க. அவங்களை மீறி செய்ய வேண்டாம்னு பார்க்கறேன். ஆனா, அதுக்காக அப்படியேவும் விட்டுட முடியாது இல்லைங்களா?”
“நீங்க சொல்றது வாஸ்தவம் தான். அப்படியே விட்டா, நாள பின்ன பிரச்சனை பண்ண வாய்ப்பிருக்கு. உங்க மனசுக்கு சரின்னு படுறதை செய்ங்க. நாங்கருக்கோம்” என்று மாணிக்கவேலனும் ஆதரவாக பேச, மகேஷ்வரன் மனதில் இருந்த பாரமே இறங்கிப் போனது.
“நீங்க ஏதோ முக்கியமா பேசணும்னு கூப்பிட்டீங்க. என்னனு சொல்லுங்க சம்பந்தி”
“அது அடுத்த வெள்ளிக்கிழமை பூ வைக்க வர்றதா இருந்தோம் இல்லையா?”
“ஆமா. நாங்க எங்க பக்கம் எல்லாம் ரெடி பண்ணிட்டோம்.” என்று பதட்டத்துடன் சொன்னார் மகேஷ்வரன்.
“அடடே பதறாதீங்க. வேற ஒன்னுமில்ல, வெள்ளிக்கிழமை பையனுக்கு காலேஜ்ல ஏதோ முக்கியமான வேலை இருக்காம். அதான், தள்ளிப் போடாம இந்த ஞாயித்து கிழமையே நாள் நல்லாருக்கு. அப்பவே போய் பூ வச்சுட்டு வந்துடுவோம்னு எங்கம்மா சொல்றாங்க. உங்களுக்கு தோதுபடுமா? இல்லனா, வெள்ளிக்கிழமையே..” மாணிக்கவேலன் சொல்லி முடிக்கும் முன் இடையிட்டு, “ஞாயித்து கிழமைன்னா ஊடால நாளைக்கு ஒரு நாள் தானேங்க இருக்கு. நான் வீட்ல ஒரு வார்த்தை கேட்டுட்டு என்னன்னு சொல்லவா? வீட்லயும் சரின்னு தான் சொல்வாங்க. ஆனா, ஒரு பேச்சுக்கு கேட்டுக்கிறேன்” என்றார் மகேஷ்வரன்.
“சரிங்க. பேசிட்டு கூப்பிடுங்க” என்று அவர் அழைப்பை துண்டிக்க, மகேஷ்வரன் புன்னகைத்தார்.
அவர் முகத்தில் அனிச்சையாய் நிம்மதி பரவியது. அவரின் சொந்தங்கள் அனைவரும் மதுரையில் இருக்க, மிகச் சில நெருங்கிய சொந்தங்களை மட்டுமே பூ வைக்கும் நிகழ்விற்கு அழைத்திருந்தார் அவர். இப்போது அவர்களை உடனடியாக வரச் சொல்ல வேண்டும். மற்றபடி மிச்ச சொச்ச ஏற்பாடுகளை எல்லாம் அவரால் பார்த்துக் கொள்ள முடியும். மகளின் வாழ்வு முன்பு அவருக்கு எதுவுமே பெரிதல்ல.
சியாமளா, காளியம்மாள் இருவரும் வாய் போரிட்டு கொண்டிருக்க, இருவருக்கும் இடையில் நின்று இரு கைகளாலும் இருவரையும் ஆளுக்கொரு பக்கமாக தடுத்துப் பிடித்திருந்த மகளை பார்க்கையில் அவருக்கு சிரிப்பு வந்தது.
“ஏ.. அப்பத்தா.. எனக்கு காது வலிக்குது. கத்தாத..” பல்லைக் கடித்துக்கொண்டு பேசும் மகள் இன்னமும் அவர் கண்களுக்கு ஐந்து வயது குழந்தை போலவே தெரிந்தாள்.
“அம்மா…” என்று அவர் அழைக்க, அந்தச் சத்தத்தில் சட்டென அமைதியாகி அவரைப் பார்த்தார் காளியம்மாள்.
அவரிடம் மாணிக்கவேலன் அழைத்ததை தெரியப்படுத்தி, என்ன செய்வதென்று கேட்க, “இதுல யோசிக்க என்னருக்கு? அன்னைக்கு நல்ல நாள்தான். நீ சரின்னு சொல்லிடுப்பா, நாம பார்த்துப்போம்” என்றார் காளியம்மாள்.
“என்னங்க, நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு?” என்று சியாமளா பதற, “என்னா, அதுக்கு இப்போ? 30, 40 பேருக்கு சாப்பாடு தானே? அதை நான் ஒருத்தியே நின்னு செஞ்சுடுவேன். அதைத் தவிர வேறென்ன பெரிய வெட்டி முறிக்கிற வேலருக்கு எனக்கு? நம்ம பிள்ளைக்கு பூ, புடவை எல்லாம் அவங்களே வாங்கிட்டு வரப் போறாங்க. நாம சாப்பாடு ஏற்பாடு பார்த்தா போதும். பந்தல் எல்லாம் காலைல சொன்னா சாயங்காலம் வந்து போட்டுடுவான். என்னமோ எல்லாத்தையும் நீயே தாங்கிப் பிடிக்க போற போல இல்ல அலுத்துக்கற” என்று மருமகளை காய்ச்சினார் அவர்.
சியாமளா அமைதியாக, அவர்கள் இருவரிடமும் பொறுமையாக பேசி, அதன் பின்னர் சமையல், பந்தல் என அந்தந்த ஆள்களிடமும் பேசி விட்டு மாணிக்கவேலனுக்கு அழைத்து தங்களின் ஒப்புதலை தெரிவித்தார் மகேஷ்வரன்.
காளியம்மாள் பேத்தியின் கன்னம் வருடி விட்டு சாமியறை நோக்கி நடந்தார். பத்ரகாளியம்மனிடம் கண் மூடி, பேத்தியின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தார் அவர்.
அபிநயா அத்தனையும் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“அப்பாக்கு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொடுடா.” அப்பா கேட்கவும், எழுந்து சமையலறை சென்றாள் அவள்.