முதலில் என்ன வாங்குவது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு அக்கா, தங்கை இருந்திருந்தாலாவது தெரிந்திருக்கும்.
எப்போதும் அம்மா, அப்பத்தா இருவருக்கும் பணம் கொடுத்து விடுவான். அவ்வப்போது இருவருக்கும் புதுப்புடவை வாங்கிக் கொடுப்பான். அவர்கள் கேட்கும் போதெல்லாம் கோவிலுக்கு அழைத்துச் செல்வான். அவ்வளவே.
அம்மாவை பொறுத்தவரை மகன் பூ வாங்கிக் கொடுத்தால் கூட மகிழ்ந்து போவார். அப்பத்தாவிற்கு அயிரை மீன் குழம்பு, சீரணி, பிரேமா விலாஸ் அல்வா என்று ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறான். அதையெல்லாம் விட அவருடன் அமர்ந்து ஐந்து நிமிடம் பேசினால் கூட போதும், பேரனை ஆசிர்வதித்து விடுவார் வடிவுக்கரசி.
மாணிக்கவேலன் தனி வகையறா. இன்னமும் மகனுக்கு செலவுக்கு பணம் கொடுப்பவர் அவர். மகன் எடுத்துக் கொடுக்கும் புது சட்டையை விட அவனது பழைய சட்டையை கூட பெருமையாக போட்டு கொண்டு வெளியில் செல்வார்.
அவன் தம்பி கார்த்திக். அப்பா, அண்ணன் சட்டைப் பையில் கூச்சமே இல்லாமல் காசு திருடும் பார்ட்டி. அண்ணனிடம் எதையும் கேட்டு வாங்க மாட்டான்.
“உங்ககிட்ட ஆட்டைய போட்ட காசு இருக்கு புகழ் சார். நீங்க கவலைபடாதீங்க. நானே வாங்கிக்கறேன்” என்று சொல்லிச் செல்வான் கார்த்திக்.
“என்ன? பதில் சொல்லாம ஸ்மைல் பண்ணிட்டு இருக்கீங்க?” அபிநயா கேட்கவும் நிகழ்வுக்கு வந்தவன்,
“போகலாம் அபி” என்று உள்ளே நுழைந்தான்.
அவனே சென்று விசாரித்து அவளை மூன்றாம் தளத்துக்கு அழைத்துச் சென்றான்.
அபிநயா கண்களை சுழற்றியபடி நடந்து வர, புகழேந்தி ஒரு பகுதிக்குள் நுழைய அவளும் இணைந்தாள்.
அங்கிருந்த அடுக்குகளில் வரிசையாக பேனா, பென்சில், நோட்டு, புத்தகங்கள் என முழுக்க முழுக்க படிப்பு தொடர்பான பொருட்கள் அடுக்கப்பட்டிருக்க, உதவி பேராசிரியர் கல்லூரிக்கு ஏதோ வாங்க வந்திருக்கிறார் போலும் என்று ஓரமாக ஒதுங்கி நின்றாள் அபிநயா.
அவனோ, அங்கிருந்ததில் சில விலையுயர்ந்த தரமான பேனாக்களை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.
சில நிமிடங்களில் ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு பேனாக்களை கையில் எடுத்துக் கொண்டான்.
“உனக்கு எதுவும் வாங்கணுமா அபி?” அவன் கேட்க, இல்லையென்று தலையசைத்தாள்.
அந்த தளத்தில் பில் செய்து அந்த பேனாக்களை, “இந்தா அபி” என்று புகழேந்தி கொடுக்க, “தேங்க்யூ புரோபஸர் சார்” என்று விடாமல் இருக்க, அவள் மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
“பிடிக்கலையா?” என்று கேட்டவனிடம், “பென் ரொம்ப நல்லாருக்கு சார். எக்ஸாம் நல்லா எழுதுவேன்” என்று தீவிரமாக அவள் சொல்ல, அதில் மறைந்திருந்த கேலியும், ஏமாற்றமும் அவனுக்கு அப்போது தான் புரிந்தது.
“ஹேய் அபி” என்று அவன் அழைக்க, அவளோ அவனுக்கு முன்பாக இரண்டாம் தளம் நோக்கி நடந்தாள். புகழேந்தி வேறு வழியின்றி அவளைப் பின் தொடர்ந்தான்.
அந்த தளத்தில் ஆண்களின் உடைப் பகுதி நோக்கி நடந்தாள் அபிநயா. புகழேந்தியை அங்கிருந்த விற்பனையாளரிடம் கண் காட்டி அவனுக்கு இரண்டு சட்டையும், ஒரு டிசர்ட்டும் அவள் வாங்க, புகழேந்தியின் இதழ்கள் அனிச்சையாய் பிரிந்து புன்னகையில் விரிந்தது.
பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவள் தேர்ந்தெடுத்த உடையை கையில் எடுத்து, அங்கிருந்த டிரையல் அறை சென்று அதை அவளுக்கு அணிந்துக் காட்டினான்.
மேலும் மூன்று சட்டைகளை எடுத்து வந்தாள். இறுதியில் இருவருக்கும் பிடித்ததாக இரண்டு சட்டை, ஒரு டிசர்ட் வாங்கினாள் அபிநயா. அதற்கு அவளே பணமும் செலுத்தி அவனிடம் கொடுக்க, “தேங்க்ஸ் அபி” என்றவன் முகத்தில் எதிர்பாராத நிறைவு.
இப்பொழுது அவனது பரிசு அர்த்தமில்லாததாக தெரிய, “அபி” என்று அழைத்தவன் முகத்தை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது. அதை மறைக்க சட்டென அவள் மறுபக்கம் திரும்ப, “பிளீஸ். சாரி” என்றான்.
“எதுக்கு சாரி?”
“பென் வாங்கிக் கொடுத்ததுக்கு” அவன் சொல்லவும் சிரித்து விட்டாள்.
“புரோபஸர் கிட்ட இருந்து பேனா தானே வரும்? சோ, இட்ஸ் ஓகே” கிண்டலாக அவள் சொல்ல, முறைத்தான் அவன்.
மீண்டும் மூன்றாம் தளத்திற்கு அழைத்துச் சென்று, கைப்பை ஒன்றும், சின்னதும், பெரியதுமாக இரண்டு ஜிமிக்கியும் வாங்கித் தந்தான். அதற்கு பணம் செலுத்தியதும், அங்கேயே அதைக் காதில் அணிந்து அவனிடம் காண்பித்தாள் அபிநயா.
அவள் காதையும், கன்னத்தையும் உரசி ஊஞ்சலாடிய ஜிமிக்கியை காண்கையில் அவனுக்கு பெருமூச்சு வந்தது. மெல்ல அவன் கை அவள் முகத்தை நோக்கி உயர, சட்டென கையை பின்னுக்கு இழுத்தான். அவனது விதிகளை எல்லாம் தாறுமாறாக உடைத்ததில் சற்றே தடுமாறினான் அவன்.
“நல்லாருக்கு” என்று அவன் சொன்னதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
புகழேந்திக்கு உடனே அவளை பிரிவதில் மனமில்லை. ஆனால், அதே நேரம் அதற்கு மேலும் வெளியில் சுற்றவும் அவன் மனம் அனுமதிக்கவில்லை.
ஆகையால், அதன் பிறகு நேராக அபிநயாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
அங்கு காளியம்மாள் மதிய உணவு உண்ணச் சொல்லி அவனை வற்புறுத்த, அதை இன்முகத்துடன் மறுத்து விட்டு கிளம்பி விட்டான் அவன்.
அவளின் அம்மா, அப்பத்தாவிடம் பேசியவன், அப்பாவிடம் அலைபேசியில் தகவல் தெரிவித்தான்.
“சித்தார்த் எங்க?” அவன் கேட்க,
“அவன் எங்க வீடு தங்குறான்? காலைல எந்திருச்சு கூட்டாளிங்க கூட வெளில போனா சாயந்திரம் அவங்கப்பா வரும் போது தான் வீடு வருவான்” என்று புலம்பினார் காளியம்மாள்.
“அப்போ அவன்கிட்ட நீங்களே சொல்லிடுங்க அம்மாச்சி” என்றவன் திரும்பி அபிநயாவை பார்க்க,
“எத்தா அபி, மாப்பிள்ளையை உள்ள கூட்டிட்டு போ” என்றார் காளியம்மாள்.
அதை புகழேந்தி எதிர்பார்க்கவில்லை. சட்டென அதிர்ந்த சியாமளாவின் முகமும் அதையே சொன்னது.
“ரெண்டு பேரும் வெயில்ல சுத்திட்டு வந்திருக்கீங்க. மாப்பிள்ளைக்கு சித்த நேரம் ஏசியை போட்டு விடுத்தா.” கிளம்பத் தயாராக நின்றவன், இரு மனதாக ஒரு கணம் அப்படியே நின்று, பின்னர் அபிநயாவின் அறைக்குள் சென்றான்.
ஏதேதோ பேச நினைத்தான். ஆனால், அந்த கணம் அவள் முகம் பார்க்கையில் எதுவுமே மனதில் தோன்றவில்லை.
“உட்காருங்க” அங்கிருந்த படுக்கையை அபிநயா கைக் காட்ட, மெல்ல நெருங்கி அவளின் கைப் பிடித்தான்.
“அபி, ஸ்டாக்கிங் வெளில இருந்து பார்க்கிறவங்களுக்கு ரொம்ப சாதாரண விஷயம். ஆனா, அதை அனுபவிக்கிறவங்களுக்கு எவ்வளவு பெரிய டார்ச்சர்னு எனக்குத் தெரியும். காலேஜ்ல சில கேஸ் பார்த்திருக்கேன். பொண்ணுங்ககிட்ட பேசியிருக்கேன். அந்த டிரோமால இருந்து வெளில வர்றது ரொம்ப கஷ்டம்தான். பட், உன் கூடவே நான் இருப்பேன். ரைட்?” அவன் கேட்க, கண்களை மட்டுமே சிமிட்டினாள் அபிநயா.
“அவனை உதய் சார் பார்த்துப்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதையும் மீறி ஏதாவது பண்ணனும்னு நீ நினைச்சா நான் கண்டிப்பா உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். ரைட்?”
“ம்ம்”
“இன்னையில் இருந்து இதைப் பத்தி மறந்துட்டு படிப்புல கவனம் பண்ணு. எக்ஸாம்ஸ் நல்லா எழுது. என்ன?”
“ம்ம்”
“அப்போ நான் கிளம்பவா?” அதற்கு மேலும் அவளுக்கு நெருக்கமாக நிற்க முடியாத நிலையில் அவன் கேட்க, அவளுக்கு அந்த தயக்கங்கள் எல்லாம் இல்லை. சட்டென அவன் மேல் சாய்ந்து, அதே வேகத்தில் விலகினாள் அபிநயா.
புகழேந்தி அதை விட வேகமாக வெளியேறினான்.
மதுரை திரும்பிய பின்னரும் அவன் தேர்வுகளை பற்றியே பேச, பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்தாள் அபிநயா.
“சார்” என்று அழைத்து சந்தேகம் கேட்க சீண்டிய மனதை அடக்கி வைப்பதற்குள் அவள் பட்டப்பாடு. ஆனால், அவனது இயல்பை மீறி அவளிடம் தினமும் பேசியதற்கு பட்ட சிரமத்தை புகழேந்தி மட்டுமே அறிவான்.
மகேஷ்வரன் அவரின் சென்னை வேலையை விட்டுவிட்டு மதுரை செல்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தார். இரு முறை மதுரை சென்று அங்கிருந்த வீட்டில் தேவையான மாற்றங்களை செய்ய ஆட்களை நியமித்து விட்டு வந்தார்.
இதற்கிடையில் அபிநயா இறுதித் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடித்திருந்தாள்.
மறுநாள் இரவு பெண்கள் மூவரையும் மதுரை அனுப்ப திட்டமிட்டிருந்தார் மகேஸ்வரன். சென்னையை மட்டுமல்ல அந்த வீட்டையும் நிரந்தரமாக பிரிவதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அபிநயா. அந்தக் காலை பொழுதில் காளியம்மாள் பேத்தியை வேலை வாங்கிக் கொண்டிருக்க, அந்நேரம் அழைப்பு மணியோசை கேட்டது.
ஹாலில் அமர்ந்திருந்த சித்தார்த் பார்த்துக் கொள்வான் என்று அபிநயா அமர்ந்திருக்க, “ஹாய் மாமா” என்ற அவனின் உற்சாக குரல் அவளை பட்டென்று திரும்பிப் பார்க்க வைத்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.